மிகக் குறைந்த கூலிக்கு உழைத்துக் கொடுத்து ஓடாய்த் தேயும் அச்சகத் தொழிலாளர் பிரச்னைகளை முன்னிறுத்தி கருத்தரங்கம் ஒன்று கடந்த 29.04.2012 அன்று மாலை 4 மணி முதல் 8.30 மணிவரை மதுரை நகரில் அச்சகத் தொழிலாளர் நிறைந்து வாழும் பகுதியான செல்லூரில் மகாலெட்சுமி மஹாலில் நடைபெற்றது. அச்சகத் தொழிலாளத் தோழர்கள் குமரன், பெருமாள், பாலமுருகன், நாகராஜன், கதிரவன் மற்றும் பாலா ஆகியோரின் சிறப்பான முன்முயற்சியினால் நடைபெற்ற அக்கருத்தரங்கத்தைக் கவிதை நடையில் தொகுத்து வழங்கி தோழர் கதிரவன் அதற்கு அழகு சேர்த்தார்.

அதில் கலந்து கொண்டு தங்களது தொழிற்சங்க அனுபவங்களை விருதுநகர் மாவட்ட அச்சகத் தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள் வரதராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். உழைக்கும் வர்க்க இயக்க அனுபவம் கொண்ட தோழர் தங்கராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகியோரும் அக்கருத்தரங்கில் உரையாற்றினர். அவர்களோடு தனது சட்ட ரீதியான தொழிற்சங்க அனுபவங்களை ஆரம்ப முதற்கொண்டு அத்தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருபவரும், மாற்றுக்கருத்து ஆசிரியருமான தோழர்.த.சிவக்குமாரும் பகிர்ந்து கொண்டார். அச்சகத் தொழிலாளத் தோழர்கள் பாலமுருகன், குமரன், நாகராஜன், பாலா மற்றும் பலரும் அத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று எதிர் கொண்டிருக்கும் பிரச்னைகளை விளக்கிப் பேசினர்.

இறுதியில் சிறப்புரையாற்றிய சி.டபிள்யு.பியின் தென்னிந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தன் அச்சகத் தொழிலாளர் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். அந்த அமைப்பு இன்றுள்ள பல தொழிற்சங்க அமைப்புகளின் போதாமைகளிலிருந்து உரிய படிப்பினையினை எடுத்துக் கொண்டு சரியானதொரு தொழிற்சங்கமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். சட்ட ரீதியான செயல்பாடுகளை மட்டும் நம்பியதாக அத்தொழிற்சங்கம் இருக்கக் கூடாது அது இயக்க அடிப்படையினைக் கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய தோழர் ஆனந்தன் தொழிலாளி வர்க்க இயக்கப் பின்னணியில் தான் தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாயின; அது குறைந்து வரும் சூழ்நிலையில் அச்சட்டங்களின் பயன்பாடு குன்றி வருகிறது என்பதையும் பல நடைமுறை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.

திரளான எண்ணிக்கையில் அந்த அரங்கக் கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர்கள் வந்திருந்து மதுரை நகரின் கீர்த்திமிகு தொழிற்சங்க இயக்கப் பாரம்பர்யத்தையும் வரலாற்றையும் நிலை நாட்டினர்.