நமது மாற்றுக்கருத்து இதழ் எந்த அமைப்பின் சார்பாக நடத்தப்படுகிறதோ அந்த உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி அமைப்பினை வழிநடத்தும் கண்ணோட்டத்தை வழங்கிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யு.பி) அதன் முதலாவது அமைப்பு மாநாட்டை நவம்பர் 19, 20, 21 தேதிகளில் மதுரையில் நடத்தவுள்ளது.சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியாவின் ஸ்தாபகத் தலைவர் தோழர் சிப்தாஷ் கோஷ் இணைந்து அந்த ஸ்தாபனத்தை நிறுவியவரும், அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகப் பலகாலம் விளங்கியவரும், என்று அக்கட்சி சிப்தாஷ் கோஷ் காட்டிய வழியிலிருந்து முற்றாக விலகிவிட்டது என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்தாரோ அன்று அதிலிருந்து விலகியதோடு, இந்தியாவில் உண்மையானதொரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் முயற்சி எஸ்.யு.சி.ஐயின்(SUCI) தோல்வியோடு முற்றுப் பெற்றுவிடவில்லை; அத்தகைய அமைப்பைத் தன்னோடு இணைந்து நிற்கும் தோழர்களைக் கொண்டு உருவாக்கிக் காட்டுவேன் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருபவருமான தோழர் சங்கர் சிங் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பிற்கு உருக்கொடுத்தார்.

எவ்வாறு சிப்தாஷ் கோஷ் இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைத் தவறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு அப்படிப்பினைகளின் அடிப்படையில் எஸ்.யு.சி.ஐ. கட்சியை உருவாக்கி அதன்மூலம் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாரோ அவ்வாறு அதே திசைவழியில் தோழர் சங்கர் சிங் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.பி.ஐ(எம்.எல்). மற்றும் எஸ்.யு.சி.ஐ. கட்சிகளின் அடிப்படைத் தவறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் முயற்சியில் தன் சக தோழர்களோடு இணைந்து ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் மாறுதல் என்பதே மாறாத விதியாக நிறைந்திருக்கிறது. அந்த விதி மனித சமூகத்திற்கும் பொருந்தக் கூடியதே. அத்தகைய மாற்றங்களை அங்கீகரிக்காத எந்த சித்தாந்தமும் நடைமுறை சாத்தியமான சித்தாந்தமாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில் மனித சமூகத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்ததன் விளைவாகவே மனித சமூகம் ஆதார கம்யூனிஸம், அடிமை சமூகம், நிலவுடமை சமூகம் ஆகிய கட்டங்களைக் கடந்து இன்று நிலவும் முதலாளித்துவ சமூகம் என்ற கட்டத்திற்கு வந்துள்ளது என்ற கண்ணோட்டம் உருவானது. இன்றைய முதலாளித்துவ சமூகமும் என்றென்றும் நின்று நிலவப் போலதல்ல; அதன் மாற்றமும் தவிர்க்க முடியாததே என்பதையும் அக்கண்ணோட்டம் முன்வைக்கிறது.

ஆனால் இதில் ஒரு சமூகக் கட்டத்திலிருந்து மற்றொரு சமூகக் கட்டத்திற்கு நிகழும் அடிப்படையான மாறுதல் குணாம்ச ரீதியிலான மாறுதலாக இருக்கும். அத்தகைய குணாம்ச ரீதியிலான பல மாறுதல்கள் உருவாகும் வரை ஒரு சமூக அமைப்பு எந்த வகையான மாற்றங்களும் இன்றி அதன் முந்தைய கட்டத்தில் அப்படியே இருக்கும் என்பதல்ல. அக்கட்டத்திலும் கூட அளவு ரீதியான மாறுதல்கள் அச்சமூகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். அளவு ரீதியான மாற்றத்திலும் கூடப் பல மாற்றங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகவும் இருக்கும்.

அது ஒரு பொருளானாலும் அல்லது சமூகமானாலும் அப்பொருளில் அல்லது சமூகத்தில் இருக்கும் முரண்பட்ட சக்திகளுக்கிடையிலான போராட்டமே இத்தகைய அளவு, மற்றும் குணமாறுபாடுகளுக்கான காரணமாக இருக்கும். அதில் வளரும் தன்மைகொண்ட சக்தி அளவு ரீதியாக வளர்ந்து ஒருகட்டத்தில் அப்பொருள் அல்லது சமூகத்தின் அடிப்படைத் தன்மையையே மாற்றும் வரை அம்முரண்பட்ட சக்திகளுக்கிடையில் ஒரு ஒற்றுமையும் இருக்கும்.

ஒரு சரியான மார்க்சிய சிந்தனையாளர் என்பவர் இந்த முரண்பாட்டைச் சரிவரக் கணித்து அதில் வளரும் சக்தியின் துரித வளர்ச்சிக்கேற்ற நடைமுறைகளைத் தனது சிந்தனைத் திறன் மூலம் வகுத்துக்கொடுத்து புதிய சமூகம் மலர வழி கோலுபவரே. இத்தகைய சமூக சோசலிச முகாம் இல்லாமற் போனதும், உலகமயமும் சிப்தாஷ் கோஷ் வகுத்துக் கொடுத்த பல நடைமுறைகளும் கணிப்புகளும் மேலும் செழுமைப்படுத்தப் படுவதை அவசியமாக்கின. ஆனால் அவருக்குப்பின் எஸ்.யு.சி.ஐ. கட்சியின் பொதுச் செயலாளராக வந்தவரும் அவரது கூட்டாளிகளும் அத்தகைய செழுமைப் படுத்துதலைச் செய்யத் திராணியற்றவர்களாக இருந்ததனால் சிந்தனையைச் செழுமைப்படுத்துவதை விடுத்து சிப்தாஷ் கோஷை தூக்கி வைத்துக் கொண்டாடி அவரது கருத்துக்கள் இன்னும் கூட எவ்வித மாற்றமுமின்றி முழுக்க முழுக்கப் பொருத்தமுடையவையாகவே உள்ளன என்று துதி பாடி அத்தகைய தலைவர் துதியின் அடிப்படையிலேயே கட்சியை நடத்தத் தொடங்கினர். அதன் விளைவாகக் கட்சியில் எந்திரகதியிலான சிந்தனைப் போக்கு, சம்பிரதாயவாதச் செயல்பாடு போன்ற மார்க்சிய விரோதப் போக்குகள் தலைதூக்கின.

காலகட்ட மாறுதலோடு ஒத்துப் போகாத கண்ணோட்டங்களால் கட்சி வாழ்க்கையை ஜீவனுள்ளதாக வைத்திருக்க முடியவில்லை. கருத்துக்கள் வறட்டுச் சூத்திரங்களாக்கப்பட்டு புதிய வளர்ச்சிப் போக்குகளை ஆக்கபூர்வமாகக் கணக்கிலெடுக்கும் நடைமுறை இல்லாமற் போனது. பீஹார் போன்ற மாநிலங்களைப் பிரித்துத் தங்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படும் தனி மாநிலம் வேண்டும் என்பது போன்ற ஆதிவாசி மக்களின் கோரிக்கை கூடப் பிரிவினை வாதமாகப் பார்க்கப்பட்டது. காஷ்மீரில் ஏற்பட்ட புதிய வளர்ச்சிப் போக்குகள் கணக்கில் கொள்ளப்படாமல் அங்கு போராடும் அனைத்து அமைப்புகளும் பிரிவினை வாத அமைப்புகளாகப் பார்க்கப்பட்டன. கணிப்பிற்காகக் கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தோழர் சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்நாளில் முன் வைத்த கணிப்பின்படியே இந்திய அரசு ஏகாதிபத்தியமாக ஆகிவிட்டதென்றால் இன்று உலகமயத்தின் விளைவாக ஒட்டுமொத்தத்தில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ வளர்ச்சி அதை இன்னும் பெரிய ஏகாதிபத்தியமாக ஆக்கியுள்ளது. இந்நிலையில் உலகமயப் பின்னணியில் ஏகாதிபத்தியச் சுரண்டல் நடைபெற்று அது இந்திய முதலாளிகளைப் பாதிப்பதாக ஆகியுள்ளது என்று கருத இடமளிக்கும் வகையில் ஏகாதியத்திய எதிர்ப்பு மாநாடு ஒன்றினையும் எஸ்.யு.சி.ஐ. நடத்தி சிப்தாஷ் கோஷ் காட்டிய அடிப்படை வழியிலிருந்து அப்பட்டமாகத் தடம் புரண்டது.

இத்தகைய எதிர்மறை வளர்ச்சிப் போக்குகள் எஸ்.யு.சி.ஐ. கட்சியை அடிப்படையிலேயே பாதித்தன. அக்கட்சி புரட்சிகரத் தன்மையையும், சரியான திசைவழியையும் இழந்துவிட்ட நிலையில் தோழர் சங்கர் சிங் அக்கட்சியிலிருந்து விலகி சி.டபிள்யு.பி.(Communist Workers Platform) அமைப்பினை நிறுவினார். நெருக்கடி முற்றிய நிலையிலிருக்கும் முதலாளித்துவத்தை எதிர்த்த வழக்கமான தொழிலாளர் போராட்டங்கள் உரிய பலனளிக்காதவையாக ஆகிவிட்ட நிலையில் அனைத்து உழைக்கும் மக்களின் போராட்டங்களும் சமூகப் போராட்டங்களாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை வகுத்துக் கொடுத்தார். அதன் விளைவாக உருவான கண்ணோட்டமே உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிக் கண்ணோட்டமாகும்.

உலகமயப் பின்னணியில் உலகின் அனைத்து நாடுகளின் உற்பத்திப் பொருட்களும் உலகச் சந்தையின் சரக்குகளாக ஆகியுள்ள சூழ்நிலையில் அனைத்து நாடுகளின் உற்பத்தி முறைகளுமே எப்பொருளை உற்பத்தி செய்தால் உலகச் சந்தையில் லாபம் கிடைக்குமோ அப்பொருளையே உற்பத்தி செய்வது என்றாகிவிட்டது. உலகின் அனைத்து நாடுகளின் அரசுகளும் அந்த லாபநோக்க உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய முதலாளித்துவ அரசுகளாக ஆகிவிட்டன. இந்நிலையில் உலகின் அனைத்து நாடுகளின் புரட்சிக் கட்டங்களும் அடிப்படையில் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக் கட்டங்களாக ஆகிவிட்டன என்ற கண்ணோட்டத்தையும் வழங்கினார்.

இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாகத் தவறாகக் கையாண்டதன் விளைவாக உண்மையாகவே காஷ்மீர் பிரச்னை ஒரு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்னையாக ஆகிவருகிறது என்பதை மார்க்சிய ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவினார்.

எந்திரகதியிலான சிந்தனைப் போக்கு, சம்பிரதாய வாதம், போன்ற எஸ்.யு.சி.ஐயைப் பீடித்திருந்த மனநிலையின் சுவடுகளோடு அக்கட்சியிலிருந்து பிரிந்து தன்னுடன் வந்த தோழர்களை அவற்றிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தை அவர் நடத்தினார். அத்துடன் உண்மையான சமூக மாற்ற ஆவலும், உணர்வும் கொண்ட பிற சி.டபிள்யு.பி. தோழர்களையும் எஸ்.யு.சி.ஐயிலிருந்து வந்த தோழர்களோடு ஒருங்கிணைத்து ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி உருவாக்கப்படுவதற்கு அத்தியாவசியமானதென சிப்தாஷ் கோஷ் வகுத்துக் கொடுத்த “ஒரே நோக்கம்”, “ ஒருமித்த அணுகுமுறை”, “ஒத்த சிந்தனை” ஆகியவற்றை அடைவதற்கானதொரு நீண்ட நெடிய போராட்டத்தினை ஏறக்குறைய பதினைந்து ஆண்டு காலமாக நடத்தினார். அதன் பின்னர் இப்போது தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் போதுமான அளவு அத்தகைய ஒருமைப்பாடுகள் உருவாகிவிட்டன என்பது உறுதியாகிவிட்ட நிலையில் சி.டபிள்யு.பி. அமைப்பு அதன் முதல் அமைப்பு மாநாட்டை நோக்கி நடை பயில்கிறது. அம்மாநாடு வெற்றி பெறவும், அது சிரமேற்கொண்டுள்ள வரலாற்றுப் பணி சிறப்புடன் தொடரவும் மாற்றுக்கருத்து தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.