அடிப்படையில் அரசின் கொள்கைகள் சார்ந்ததல்ல - அதனை எதிர்த்த பாவனைப் போராட்டங்கள் பலனெதையும் தரப்போவதில்லை. 

முன்னெப்போதும் கண்டிராத உணவுப் பொருள் விலையேற்றம் தற்போது நடுத்தர, பாடுபடும் மக்களை வாட்டிவதைத்துக் கொண்டுள்ளது. அதை மையமாக வைத்து சாதாரண மக்களிடையே தோன்றியுள்ள கொந்தளிப்பு மனநிலைக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கும் விதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல இயக்கங்களை அறிவித்துக் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை பெரிதாக எழுப்பப்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அது பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பிரதம மந்திரி இதனையயாட்டி முதலமைச்சர்கள் மாநாடு ஒன்றை கூட்டி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். ஆலோசனைகள் வருவதற்குப் பதிலாக அக்கூட்டத்தில் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மத்திய அரசும் அதன் கொள்கைகளுமே விலை உயர்விற்குக் காரணம் என்ற கருத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. 

அரசு முன்வைக்கும் காரணங்கள் 

அக்கூட்டத்தில் விலை உயர்வுக்கான காரணங்களாக அரசின் சார்பில் சில காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதாவது அரசு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் நோக்குடன் அறிவித்துள்ள கூடுதலான ஆதரவு விலை  விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார வளர்ச்சி கூடுதலாக இருப்பதால் மக்களின் வாங்கும் சக்தி பெருகியுள்ளது; எனவே உணவுப் பொருட்களை அவர்கள் கூடுதலாகப் பயன் படுத்துகின்றனர்; அத்தகைய கூடுதல் பயன்பாட்டிற்கு உகந்த விதத்தில் உணவுப்பொருள் உற்பத்தி இல்லாததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. அதோடு பணப்புழக்கத்தின் அதிகரிப்பும் விலை உயர்விற்கு மற்றொரு காரணம் என்றும் அது கூறுகிறது.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் அதை உபயோகிப்பவர்களுக்கும் இடையில் இருக்கும் இடைத்தரகர்கள் இந்த விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இறுதியாக இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலுமே உணவுப்பொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பங்கும் பகுதியுமாகத்தான் இங்கும் உணவுப் பொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற வாதம் முன் வைக்கப் பட்டுள்ளது. மொத்தத்தில் பசப்பல் தொனியில் இருக்கும் அந்த அறிக்கை உணவுப் பொருள் விலையேற்றம் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளது. 

கட்டுபடியான கொள்முதல் இல்லையயனில் சாகுபடி நடைபெறாது 

இக்காரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்ந்து பார்த்தோமேயானால் உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசால் எதையுமே செய்ய முடியாது என்பதே தெளிவாகத் தெரியவரும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவு விலை தான் உணவுப்பொருள் விலையேற்றத்திற்கு காரணமென்றால் கூடுதல் ஆதரவு விலையை எப்போதாவது தானாகவே யாருடைய நிர்ப்பந்தமும் இன்றி அரசு வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் அது தானாகவே அதனைக் குறைக்கவும் முடியும். அவ்வாறு ஆதரவு விலையை அரசு தானாகவே ஒருபோதும் அறிவிப்பதில்லை.

விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாக ஆகிவருவதால் விவசாயிகள் அதனை ஓரளவேனும் ஈடுகட்ட கூடுதல் விலை தரவேண்டும் என்று போராடி எப்போதெல்லாம் கூடுதல் விலை தராமல் இருக்க முடியாது என்ற நிர்ப்பந்த சூழ்நிலை அப்போராட்டத்தின் விளைவாக ஏற்படுத்துகிறார்களோ அப்போது மட்டுமே அது தரப்படுகிறது. இன்னொரு வகையில் அவ்விலை கொடுக்கப் படாவிட்டால் கையைக் கடிக்கும் கட்டுபடியாகாத விவசாயத் தொழிலில் விவசாயிகள் ஈடுபடுவதைத் தவிர்த்து நிலங்களை விவசாயம் செய்யாமல் தரிசாகப் போட்டு விடுவதற்கும் வழி உள்ளது.

நெல்லுக்கு பலகாலம் கட்டுபடியான விலை கிடைக்காததால் தமிழகத்தின் பல பகுதிகளில் நெல் விளையும் நிலங்கள் உழவடை செய்யப்படாமல் விடப்பட்டதே இதற்குச் சான்று. அவ்வாறு விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாக ஆவதற்குக் காரணம் விவசாயத்திற்குப் பயன்படும் உரம் , பூச்சி மருந்து போன்றவற்றின் விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதுதான். அது தவிர நீர்ப்பாசன வசதி இல்லாத இடங்களில் தொடர்ச்சியாக மின் வினியோகமும் வழங்கப்படாத சூழ்நிலையில் டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தி நீர் இரைத்தே அவர்கள் பயிர் விளைவிக்க வேண்டியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் விவசாயம் கட்டுபடியான தொழிலாக நடத்தப்பட வேண்டுமானால் இடு பொருட்களின் விலை உயர்வு கட்டுப் படுத்தப்பட வேண்டும். நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்பட வேண்டும். எரிபொருட்களின் விலை உயர்வு தவிர்க்கப்பட வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே ஆதரவு விலைக் குறைப்பை எண்ணிப் பார்க்கவே முடியும். இதை இந்த அரசு செய்ய முடியுமா? உரம் , பூச்சி மருந்து உற்பத்தி செய்யும் முதலாளிகளை இந்த விலைக்குமேல் நீங்கள் இப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யக் கூடாது என்று இந்த அரசால் மட்டுமல்ல எந்த அரசாலும் அறிவிக்க முடியுமா? 

வாங்கும் சக்தி மிகப்பெரும்பான்மை மக்களிடம் கூடவில்லை 

அடுத்ததாக மக்களின் வாங்கும் சக்தி கூடியுள்ளது அதனால் விலை உயர்வு ஏற்படுகிறது என்ற கருத்தில் உண்மையிருந்தால் அதனைக் கட்டுப்படுத்த அரசால் என்ன செய்ய முடியும்? முதற்கண் இவர்கள் கூறும் வாங்கும் சக்தி என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ள ஒன்றா என்று பார்த்தால் அதற்கான விடை மிகவும் அழுத்தமான இல்லை என்பதே. உலகமயத்தின் விளைவான தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்பும் இங்கு கிடைக்கும் மலிவான உழைப்புத் திறனை பயன்படுத்தி லாபம் ஈட்ட வரும் அந்நிய மூலதனத்தின் வரவுமே இந்த இவர்கள் பெரிதாகத் தம்பட்டம் அடிக்கும் தற்போதைய வளர்ச்சியின் மூலகாரணமாகும்.

இந்த வளர்ச்சி உயர் தொழில்நுட்பம் கற்ற ஒரு சிறு மக்கட்பகுதியிடம் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே தவிர வேறெதுவுமில்லை. அதிகபட்சம் இந்த வளர்ச்சி நமது ஒட்டுமொத்த மக்கட்த் தொகையில் 20 சதவீதம் பேரிடம் வந்திருந்தால் கூட அது பெரிய விசயமாகும். எனவே இந்த கூற்றில் உண்மைக்குப் பதிலாக நிலமையை சமாளிப்பதற்காக ஒரு சால்சாப்பு வாதம் வாங்கும் சக்தி உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை முன்நிறுத்தி செய்யப் படுகிறதே தவிர வேறெந்தக் கருத்தும் இதன் மூலம் முன் வைக்கப்படவில்லை. மேலும் இவர்கள் கூறும் வாங்கும் சக்தியை செயற்கையாகக் குறைக்கவோ அதன்மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவோ முடியாது. 

பணப்புழக்கம் அரசின் கொள்கைகளாலேயே அதிகரிக்கிறது 

மூன்றாவதாக அரசு கூறும் வாதமான பணப்புழக்கம் என்பதையும் தீர்க்கமாக ஆராய்ந்து பார்த்தால் பொருளாதார நெருக்கடி முழுவீச்சில் இருந்த கடந்த ஓராண்டு காலத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வங்கியின் கடன் வழங்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து வங்கிக் கடன் மூலம் அதிகப் பணப்புழக்கம் ஏற்படவும் வங்கியில் சேமிப்பவர்களது வட்டி விகிதத்தைக் குறைத்து சேமிக்கும் மனநிலையை கட்டுப்படுத்தி பணப்புழக்கம் அதிகரிக்கவும் வழிவகுத்தது இந்த அரசே. இவ்வாறு பணப்புழக்க அதிகரிப்பிற்கு இவர்களே நேற்றைய தினம் வழிவகுத்துவிட்டு இன்று விலை உயர்வுக்கு அதனைக் காரணமாகக் கூறுவது எத்தனை கேலிக்கூத்து. 

உணவுதானிய வர்த்தகத்தை அரசே ஏற்று நடத்துவதே இடைத்தரகர் சுரண்டலைக் கட்டுப்படுத்தும் 

இறுதியாக இவர்கள் கூறும் உணவுதானிய வர்த்தகத்தில் இருக்கும் இடைத்தரகர் முறையின் கோளாறுகளும் இதற்கான காரணம் என்பதைச் சீர்தூக்கிப் பார்த்தால் இதனைச் சரிசெய்ய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டியிருக்கும். நிச்சயமாக இங்கு நிலவும் இடைத்தரகர் முறை விலையேற்றத்திற்கு ஒரு மிகமுக்கியக் காரணமாகும். எடுத்துக் காட்டாக ஒரு கிலோ சீனி சந்தையில் 27 ரூபாய்க்கு விற்ற நிலையில் அந்த சீனியை தயார் செய்யப் பயன்படும் கரும்பு உற்பத்தியாளருக்கு அந்த ஒரு கிலோ சீனியின் விலையில் சென்று சேர்ந்தது மிகவும் அதிக பட்சம் 14 ரூபாய்களே. மீதமுள்ள 13 ரூபாய் இடைத்தரகர்களுக்கே சென்றது. அதைப்போல் தேயிலை , காபி , ரப்பர் போன்ற அனைத்துப் பொருட்களை எடுத்துக் கொண்டாலும் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைத்ததைக் காட்டிலும் இடைத்தரகர்கள் அடைந்தது மிகவும் அதிகம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இதைப் போக்க வேண்டுமானால் அரசு செய்ய வேண்டியதென்ன? உணவுதானிய சில்லரை வர்த்தகத்தையும் அரசே எடுத்து நடத்த வேண்டும். அவ்வாறு நடத்த இன்று அரசாங்கத்தில் இருப்போர் முன்வருவார்களா? ஒரு போதும் முன் வரமாட்டார்கள்.

இதனால் தான் விலை உயர்விற்கு காரணம் கூடத் தெரியாதவர்களாக நாங்கள் இல்லை என்று காட்டுவதற்காக சில காரணங்களைக் கூறிவிட்டு அந்தக் காரணங்களை மனதிற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்று கூறத் திராணியில்லாமல் உணவுப்பொருள் விலை உயர்வின் மிகக் கடுமையான காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஆறுதல் வார்த்தைகளைக் கூறி பிரதம மந்திரி முதலமைச்சர்கள் மகாநாட்டில் தனது உரையை முடித்துக் கொண்டுள்ளார்.

அதைப்போல் காங்கிரஸ் கட்சியின் ஒரு செயலாளரான ராகுல் காந்தியும் இந்த விலையுயர்வு சுழற்சி முறையில் உலக அளவில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் ஒன்றே என்று கூறி அது சாதாரண மக்கள் வாழ்க்கையில் நடத்தும் கோரத் தாக்குதலை குறைத்து மதிப்பிட்டுள்ளார். 

இடதுசாரிக் கட்சிகள் ஏற்படுத்தும் இன்னொருவகை மாயை 

ஒருபுறம் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இவ்வாறு தற்போது தோன்றியுள்ள விலை உயர்வு அத்தனை பெரியதல்ல என்று கூறிவரும் வேளையில் இதனை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்துள்ள கட்சிகள் தங்களுடைய நாடாளுமன்றவாத அரசியல் லாபங்களுக்காக வேறொரு வகை மாயையை ஏற்படுத்த முயல்கின்றன. அதாவது மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறி ஏதோ இக்கட்சிகள் ஆட்சியிலிருந்தால் இவர்கள் தற்போது குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கும் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கடைப்பிடித்து விலை உயர்வே ஏற்படா வண்ணம் தடுத்திருக்க முடியும் என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் தற்போது சாதரண மக்கள் உணரும் கொடுமையான உணவுப் பொருள் விலையேற்றத்திற்குக் காரணம் என்ன என்பதைத் தர்க்க ரீதியாக அலசி ஆராய வேண்டியது நமது கடமையாகும். 

உணவுப்பொருள் விலையேற்றம் உலக அளவிலானது 

இந்த உணவுப் பொருள் விலையேற்றம் இந்தியாவில் மட்டும் ஏற்பட்டுள்ளதல்ல. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாகும். அதாவது உணவுப் பொருள் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் உலக அளவில் பல நாடுகளை ஆட்டிப் படைக்கப் போகிறது என்ற கருத்து பல மேலைநாட்டுப் பொருளாதார நிபுணர்களாலும் பத்திரிக்கைகளாலும் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே கூறப்பட்டு வந்தது. அதன் ஒரு முக்கியக் காரணம் மக்களின் உணவுப் பொருளாக விளங்கிய பல உணவு தானியங்கள் மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் Bio –Fuel என்று கூறப்படும் இயற்கை எரிபொருள் தயாரிக்கப் பயன்பட்டதாகும். 

இயற்கை எரிபொருளாகும் உணவு தானியம் 

அதாவது இந்த Bio-Fuel வளர்ந்து வரும் எரிபொருள் தேவையை மனதிற்கொண்டு தயாரிக்கப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் கார்களாலும் மற்றும் உலகமயத்தின் விளைவாக தூண்டப்பட்ட தொழில் மயமாதலாலும் சீனா , இந்தியா போன்ற நாடுகள் பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட எரிபொருட்களை ஏராளமாக உபயோகிக்கத் தொடங்கின.

அதன் விளைவாக ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை எப்போதும் இருந்திராத அளவு 150 டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக என்ற பெயரில் இந்த இயற்கை எண்ணெய் மூலமான மாற்று என்பது முன்வைக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள பலபகுதி மக்களின் சில உணவுப் பொருட்களின் சந்தைக்கான வரத்து பெருமளவு நின்று போய்விட்டது.

ஆடுகள் மற்றும் மாடுகளின் தீவனங்களாகும் உணவு தானியங்கள் 

அடுத்ததாக உலகமயத்தின் விளைவாக பலன் பெற்ற ஓரிரு நாடுகள் மற்றும் அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி கூடுதல் வருமானம் ஈட்டிய போக்கு வழக்கமான உணவுப் பொருட்கள் உபயோகத்திலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி ஆடு , மாடு போன்றவற்றின் இறைச்சியின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஆடு , மாடு இவற்றின் இறைச்சிகளுக்கு அதிகச் சந்தை இருப்பதை உணர்ந்து கொண்ட பெரிய நிறுவனங்கள் இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் மாடுகளின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டத் தொடங்கின. அதற்காக மக்கள் உபயோகிக்கும் பல உணவுப் பொருள்கள் மிருகத் தீவனங்களாக மாற்றப்பட்டன. இதன் விளைவாகவும் மனிதர்களுக்குக் கிடைக்கும் உணவுப் பொருள் விகிதம் பெருமளவு குறையத் தொடங்கியது.

இத்துடன் பங்குச் சந்தையைப் பிடித்து உலுக்கிய ஊக வணிகம் உணவுப் பொருள் வர்த்தகத்தையும் உலக அளவில் ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. மேலே கூறிய காரணங்களால் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட வர்த்தக சூதாடிகள் ஆன்லைன் ட்ரேடிங் மூலமாக உணவுப் பொருள் விலையேற்றத்திற்கு வழிவகுத்தனர்.

நாடுவிட்டு நாடு பகாசுர நிறுவனங்கள் நிலம் வாங்கும் போக்கு 

மேலும் உலகமயப் பின்னணியில் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் உலக அளவிலான பகாசுர தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. தங்கள் ஆயுத மற்றும் இராணுவ வலிமையினால் உலகின் பல நாடுகளைத் தங்களின் காலனிகளாக ஆக்கி ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டிய சூழ்நிலை மாறி உலகின் பல நாடுகளின் விளை நிலங்களை விலைகொடுத்து மேலை நாட்டு பகாசுர நிறுவனங்கள் வாங்கும் போக்கு வளரத் தொடங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக உகாண்டா தனது நாட்டின் 20 லட்சம் ஏக்கர் நிலங்களை எகிப்து நாட்டின் நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. அதைப்போல் சவுதி அரேபியா 10 லட்சம் ஏக்கர் பாகிஸ்தான் நிலங்களை வாங்கியுள்ளது. மேலும் உலகின் விவசாய உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் தற்போது விதை விற்பனையில் பேராதிக்கம் செலுத்துகின்றன. 

நிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் உணவுப்பொருள் விற்பனை 

தற்போது பயன்படுத்தப்படும் பல நவீன ரக விதைகள் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களில் இருந்தே தேர்ந்தெடுத்து , சேமித்து , பராமரித்து விதைகளாக பயன்படுத்த முடியாதவை. எனவே அவை பல பன்னாட்டு நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளன. உலகின் இந்த நவீனரக விதை வர்த்தகத்தின் 47 சதவீத விற்பனை மான்சான்டோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதுபோல் உலகின் பல நாடுகளில் விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கும் போக்கு தொடர்வதால் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் அதன் வினியோகம் படிப்படியாக இந்த நிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளிலும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் சிறு விவசாயிகளின் கைவசம் உள்ள விளை நிலங்கள் இந்நிறுவனங்களின் உடமைகளாக ஆகிவிடுகின்றன. இதன் காரணமாக இந்த உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள உலகச் சந்தையின் தேவைக்கு இந்நிலங்களில் உற்பத்தி செய்கின்றன. அந்நிலையில் அந்நிலங்கள் எந்த நாடுகளில் உள்ளனவோ அந்நாட்டு மக்களின் உணவுத் தேவை இந்நிறுவனங்களால் கருத்திற்கொள்ளப் படுவதில்லை.

பல நாடுகளின் அரசாங்கங்கள் அவை விடுதலை பெற்ற சூழ்நிலையில் தேசியவாத அடிப்படையில் நாட்டின் பல பகுதி மக்களின் நலன்களை பாதுகாத்து சமூக அமைதியைப் பேணுகிறோம் என்ற பெயரில் பல தேசிய அளவிலான திட்டங்களை வகுத்துச் செயல்பட்டன. அவை விவசாயிகளுக்கு இடு பொருட்களை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்வது , விவசாயிகளின் விளை பொருட்கள் , லேவாதேவிக் காரர்கள் , வர்த்தக சூதாடிகள் ஆகியோரால் பாதிக்கப்படாத விதத்தில் அவற்றிற்கு ஓரளவு விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன்களை ஓரளவு பாதுகாப்பது போன்ற வேலைகளைச் செய்தன.

ஆனால் தற்போதைய தாராளவாதப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் செயல்பாடு உலக அளவில் அமலுக்கு வந்ததற்குப் பின்பு இந்த கொள்கைகள் படிப்படியாகக் கைவிடப்பட்டு ஏறக்குறைய முழுமையாக உலக வர்த்தக அமைப்பின் மானிய ஒழிப்பு போன்றவை அமல் செய்யப் படுகின்றன. இதன் விளைவாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளைப் பொறுத்தவரையில் இடுபொருள் விலை உயர்வு , அவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் இல்லாத நிலை போன்றவற்றால் விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாகி அதனால் விளை நிலங்கள் விற்பனைப் பொருள்களாக ஆகும் போக்கு பெரிதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒரு கேள்வி எழுப்பப்படலாம். தற்போது உருவாகியுள்ள உணவுப் பொருள் விலை உயர்வு அத்தகைய கட்டுபடியான விலை விவசாயிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்யுமே; அதனால் லாபகரமாக விவசாயத் தொழிலை நடத்தும் சூழ்நிலை அவர்களுக்கு உருவாகுமே என்ற கேள்வி எழலாம். உண்மை. ஆனால் இந்த விலை உயர்வினால் மிகப்பெரும் பலன் அடைவது இடைத்தரகர் அமைப்புகளும் , ஆன்லைன் வர்த்தகர்களுமே. அதாவது தொழில் துறையில் மட்டும் ஆதிக்கம் செலுத்திவந்த நிதி மூலதனம் தற்போது விவசாய விளை பொருள் வர்த்தகத்தையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு நிலம் விற்பனைப் பொருளாவது என்ற போக்கு பழைய கருத்தோட்டத்தின் படி விவசாயிகள் என்ற ஒரு மக்கட்பகுதி இருந்ததையே அழித்தொழிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. முதலாளித்துவம் தோன்றி வளர்ந்த அந்த ஆரம்ப காலத்தில் அழிந்தொழியும் நிலையில் இருந்த கைவினைஞர்களின் நிலையை ஒத்ததாக தற்போது விவசாயிகளின் நிலை உள்ளது. 

சிறு விவசாயிகளின் நிலங்கள் பண்ணைகளாகும் சூழல் 

மேலை நாடுகளில் நிலவும் முதலாளித்துவ நில உற்பத்தி முறையை ஒத்த பண்ணை உற்பத்தி முறை உலகம் முழுவதுமே ஏற்படுவதற்கு ஏதுவான ஒரு சூழல் பல வளர்முக மற்றும் பின்தங்கிய நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளன. சுரண்டும் வர்க்கங்கள் சமீப காலங்களில் எதையுமே தந்திரமாகவும் அவர்கள் நடவடிக்கைகளின் உற்பொதிந்திருக்கும் தீய நோக்கம் வெளியில் தெரியாத வகையிலும் நயமான சொல்லாடல்களைக் கொண்டும் செய்து கொண்டுள்ளன.

எடுத்துக் காட்டாக இயற்கை எரிபொருள் என்ற பெயரில் மக்களின் உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப்பொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் தங்களது பாதகச் செயலை மூடிமறைக்க இவர்கள் முன் வைக்கும் ஒரு கருத்து இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்த எரிபொருள்; எனவே தான் அதற்கு முன்னுரிமை தருகிறோம் என்பதாகும்.

அதைப் போலவே வளர்முக நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் நாட்டு சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கைவசமுள்ள நிலங்கள் பெரிய பண்ணைகள் ஆவதற்கு வழிவகுக்கும் விதத்தில் விற்பனைப் பொருளாவதை ஊக்குவிக்கும் செயலும் மிகவும் சாதுர்யமாக செய்யப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு அந்தந்த நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மானியம் வழங்குவதைத் தடை செய்கிறது. ஆனால் அதே சமயத்தில் அதே உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளான மேலை நாடுகள் அந்தந்த நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மானியங்கள் வழங்குகின்றன. 

விவசாய மானிய ஒழிப்பு 

ஏறக்குறைய பெரும் பண்ணைகள் மூலமே விவசாய உற்பத்தி நடைபெறுவது நிலை பெற்றுவிட்ட மேலை நாடுகளின் விவசாயிகளுக்கு பசுமையைப் பாதுகாக்கச் செய்யப்படும் பணப்பட்டுவாடா என்ற பெயரில் மானியமும் , அப்பண்ணைகளின் வருவாய்க் குறைவை அது எவ்வெப்போது ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈடுகட்ட வழிவகுக்கும் வருவாய்க் காப்பீடும் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் நெருக்கடி எதிலும் அவை சிக்காமல் பாதுகாக்க மேலை நாடுகள் ஏற்பாடுகள் செய்கின்றன.

அதே உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை உலக வர்த்தக ஒப்பந்தத்தின் மானியம் வழங்குவதைத் தடை செய்யும் ­ரத்தினை மீறி மேலை நாடுகள் மானியம் வழங்கும் சூழ்நிலையில் இவர்களும் தங்கள் நாடுகளின் விவசாயிகளுக்கு மானியம் வழங்க தார்மீக ரீதியான தடை எதுவுமே கிடையாது. இருந்தாலும் இந்நாடுகளின் அரசாங்கங்கள் மேலை நாட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதை உலக வர்த்தக ஒப்பந்தத்தின் சரத்துக்களைச் சுட்டிக் காட்டி நிறுத்த வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பின் கூட்டங்களில் உரத்து முழங்குகின்றனவே தவிர தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு மானியமோ , காப்பீடோ வழங்க முன்வருவதில்லை.

இவ்வாறு ஒப்பந்த மீறலை எதிர்த்துப் போராடுவது போல் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டே இந்தியா போன்ற நாடுகளின் சிறு விவசாயிகள் அவர்களின் விளை நிலங்களை இடுபொருள் , எரிபொருள் விலை உயர்வு இடைத்தரகர் கொள்ளை போன்றவற்றைத் தாக்குப் பிடிக்க முடியாமல்  விற்று மேலைநாட்டு பாணியில் பெரிய விவசாயப் பண்ணைகள் ஏற்பட வழிவகுக்கும் விதத்தில் பெரிய அளவில் நிலங்கள் விற்பனைப் பொருளாகும் போக்கை ஊக்குவிக்கின்றன.

இதுதவிர அரசு கல்விக்காக தான் செலவு செய்த தொகையை வெகுவாகக் குறைத்து கல்வியில் தனியார்மயம் தோன்ற வழிவகுத்துள்ள நிலையும் நில விற்பனையைத் துரிதப்படுத்துகிறது. விவசாயத்தை நம்பி நம்மைப்போல் நமது பிள்ளைகளும் வாழ முடியாது என்ற எண்ணத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளில் பலர் பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களது நிலங்களை விற்கின்றனர். இதனால் சிறு விவசாயிகளின் நிலங்கள் விற்பனைப் பொருளாவது தொடர்கிறது.

இவ்வாறு விளை நிலங்கள் விற்பனைப் பொருளாவதைத் தொடர்ந்து அந்நிலங்களை வாங்குபவர்கள் அவற்றில் உற்பத்தி செய்வது பெரும்பாலும் உணவுப் பொருட்களாக இருப்பதில்லை. விவசாய விளை பொருள்களுக்கான சந்தையும் உலகளாவியதாக இருப்பதால் உலகச் சந்தையில் எந்த விவசாய விளைபொருள் விலை போகுமோ அந்தப் பொருளையே உற்பத்தி செய்கின்றனர். எடுத்துக் காட்டாக தமிழ்நாட்டின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கூட நெல் உற்பத்தி குறைந்து வருகிறது. கருவேப்பிலை , புளி போன்றவை பரவலாக வளர்க்கப் படுகின்றன. அதைப்போல் பல உணவுப் பொருள் விளைவிக்கும் பகுதிகள் தென்னந் தோப்புகளாகவும் மாந்தோப்புகளாகவும் மாற்றப்படுகின்றன. 

உணவுப்பொருள் ஏற்றுமதி 

இந்நிலையில் உலக அளவில் குறிப்பாக மேலை நாடுகளில் 2007 , 2008 ஆண்டுகளில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையும் இந்திய உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வழிவகுத்தது. ஏற்கனவே இந்தியாவில் பல உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு விளைச்சலும் மழையின்மை காரணமாகக் குறைந்ததால் இந்தியாவிலும் உணவுப்பொருள் பற்றாக்குறை ஏற்படலாயிற்று. இத்தகைய உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட இங்குள்ள கள்ளச் சந்தை வர்த்தகர்களும் , ஆன்லைன் மூலம் உணவுப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரும் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத உணவுப்பொருள் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளனர்.

எனவே தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள் பற்றாக்குறைக்கும் , விலையேற்றத்திற்கும் காரணம் என்ன என்பதைப் பார்த்தால் ஒன்று உணவுப் பொருள் விளை நிலங்கள் பெரிய அளவில் விற்பனைப் பொருளாகி அவற்றில் நடைபெற்று வந்த சிறு விவசாயிகள் மூலம் நடைபெறும் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து போனதும் அந்த நிலங்களை வாங்கி பெரிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோர் உணவுப் பொருள் தவிர்த்த உலகச் சந்தையில் விலைபோகும் பிற விளைபொருள் உற்பத்தியில் ஈடுபடுவதுமாகும்.

மற்றொன்று நிதி மூலதனம் பங்குச் சந்தையில் ஆற்றியது போன்ற மோசமான விளைவுகளை விவசாய வர்த்தகத்திலும் ஏற்படுத்தி ஊக வணிகப் போக்குகளை ஊக்குவித்து அதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதாகும்.

விவசாய விளை பொருட்கள் வளர்ந்துவரும் விவசாய விளைபொருள் வர்த்தக பகாசுர நிறுவனங்களான வால்மார்ட் , கேசியோ , டெஸ்கோ , இந்தியாவின் ரிலையன்ஸ் போன்றவற்றின் கட்டுப்பட்டிற்குள் மென்மேலும் வந்து அவை உணவுப் பொருள் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஏகபோக நிறுவனங்கள் என்ன குளறுபடிகளையயல்லாம் செய்யுமோ அவற்றையயல்லாம் செய்து கொண்டிருப்பதுமாகும்.

அடுத்ததாக உலகின் அனைத்து நாடுகளிலும் மற்ற அனைத்து நாடுகளின்  விவசாய விளைபொருட்களும் விற்பனைப் பொருளாகிவரும் உலகமயச் சூழல் ஏற்றுமதிக்கான விளைபொருள் உற்பத்தி என்பதை ஊக்குவித்து உள்நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவையான அவர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்காத சூழ்நிலையை சந்தைப் பொருளாதாரம் ஏற்படுத்தியிருப்பதுமாகும். 

முழுமுதற் காரணம் முதலாளித்துவ லாப நோக்கமே 

இந்தப் போக்குகள் அனைத்துமே மிகத் தெளிவாக உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான். அதாவது லாப நோக்க உற்பத்தி முறையின் வட்டத்திற்குள் உணவு உற்பத்தியும் முழுமையாக வந்துவிட்டது என்பதைத் தான் அது அசலும் நகலும் உணர்த்துகிறது. மேலே கூறிய அனைத்து அம்சங்களுமே முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறையின் அடிப்படையான அம்சங்கள் என்பதை பொருளாதாரத்தின் அரிச்சுவடியை மட்டும் அறிந்தவர்கள் கூட மிகத்தெளிவாக உணரமுடியும்.

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது விலை உயர்வும் ஒரு அமைப்பு சார்ந்த பிரச்னையேயன்றி நிர்வாகம் சார்ந்த பிரச்னையல்ல என்பதே. ஒரு அமைப்பை எந்தவகை மாற்றமுமின்றி அப்படியே வைத்துக் கொண்டு நிர்வாக நடவடிக்கைகளைக் கொண்டு மட்டுமே ஆற்ற முடிந்த பணிகள் உண்டு. பிரதானமாக இந்த விலையேற்றத்திற்கான காரணம் அத்தகைய நிர்வாக நடவடிக்கைகள் சம்மந்தப்பட்டதல்ல. நிர்வாக நடவடிக்கைகள் மூலம் பதுக்கலைக் கண்டுபிடிக்க முடியும். பணத்திற்காக எதையும் செய்யும் ஊழல் மலிந்துள்ள இச்சமூக அமைப்பில் அந்த ஊழலில் ஊறித் திளைப்பவையாக உள்ள காவல் துறையைக் கொண்டு அரசு அதையும் கூடச் செய்ய முடியாது. பதுக்கலை வெளிக்கொணர்வதையும் ஒன்று திரண்ட மக்கள் இயக்கம் மட்டுமே செய்ய முடியும். 

அமைப்பு சார்ந்ததே அன்றி கொள்கை சார்ந்ததல்ல 

ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கைகளே இன்றைய விலை உயர்வுக்குக் காரணம் என்று எதிர்க் கட்சிகள் கூறுவதன் மூலம் இந்த அரசு குறித்தும் அதை இயக்கத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகள் குறித்தும் மிகவும் தவறானதொரு சித்திரத்தை மக்கள் முன் வைக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் அரசின் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கும். அரசின் நோக்கம் என்றுதான் அதைக் கூற முடியுமே தவிர அரசின் கொள்கை என்று அதனை ஒருபோதும் கூற முடியாது. வர்க்கப் பிரிவினை உள்ள எந்தவொரு நாட்டின் அரசும் அந்த நாட்டை அதாவது சமூகத்தை ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு அதாவது ஒட்டுமொத்த நலன்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடியவையே.

அரசாங்கத்தின் கொள்கை என்பதையே அரசின் கொள்கை என்று அரசு , அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாட்டினை அறியாமல் எதிர்க் கட்சிகள் கூறுகின்றன என்றால் அரசாங்கத்தின் கொள்கை என்பது அரசு எந்திரத்தை இயக்கும் பொறுப்பில் தற்காலிகமாக அமர்த்தி வைக்கப்பட்டிருக்கும் ஆளும் கட்சியின் கொள்கைகளேயாகும். எந்தவொரு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூட அது ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக இருக்கும் அரசின் அடிப்படை நோக்கங்களுக்கு விரோதமாக எதையும் செய்ய முடியாது.

மற்றபடி ஒரு கட்சியின் கொள்கை என்ற அடிப்படையில் பார்த்தால் அது இந்த நாடாளுமன்றவாத அரசியலையே முழுமையாக நம்பியிருக்கும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது முன்வைக்கும் ஏமாற்று முழக்கங்களாக இருக்குமே தவிர வேறெதுவுமாகவும் இருக்காது. எனவே அக்கட்சிகள் எதிர்க் கட்சிகளாக இருக்கும் வரை மக்கள் ஆதரவுக் கொள்கைகள் பேசும்; ஆளும் கட்சியாக ஆனபின் அடக்கி வாசிக்கும்.

ஒரு வரியில் சொல்வதானால் இன்றுள்ள இந்த முதலாளித்துவ அமைப்பில் அது சீரழிந்துள்ள நிலையில் அதற்கு சேவை செய்வதற்காக இருக்கக் கூடிய நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அவை வெளிப்படையாக அறிவிக்காத ஆனால் மிகவும் உண்மையாக அவைகளால் கடைப்பிடிக்கப் படக்கூடிய கொள்கை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதாவது ஒருகட்சி  ஆளும் கட்சியாக இருக்கும் போது அது எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற ‘கொள்கை’யைக் கடைப்பிடிக்கும். எதிர்க் கட்சியாக இருக்கும் போது அதன் ‘கொள்கை’ எப்படியேனும் ஆளும் கட்சியாக வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இருக்கும்.

இந்நிலையில் உணவுப் பொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டங்கள் அறிவிக்கும் கட்சிகளில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படாத கட்சிகள் அரசின் கொள்கைகளே காரணம் என்று உரத்த குரலில் கூறுகையில் நமக்கு அது மிகவும் கேவலமாகவும் அசிங்கமாகவும் தெரிவதில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ளக் கூடிய கட்சிகளும் அரசின் கொள்கைகள் என்று கூறும் போதுதான் அவற்றையும் நாடாளுமன்ற வாதம் எத்தனை தூரம் ஆட்டிப் படைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அருவெறுப்படைய நேர்கிறது.

நாம் இந்த உணவுப்பொருள் விலையேற்றப் பிரச்னை அமைப்பு சார்ந்த ஒன்று என்று கூறும்போது அந்த அமைப்பை மாற்றாமல் உணவுப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதே நாம் முன்வைக்கும் கருத்து.

ஆனால் அமைப்பை மாற்றுவது என்பது ஒரு சாதாரணமான விசயம் அல்ல அதற்கான அறைகூவலையும் எடுத்த எடுப்பிலேயே வைத்துவிட முடியாது. அதற்கு மிகநீண்ட நெடியதும் ஆழமானதும் அழுத்தமானதுமான தயாரிப்புகள் தேவை. அதனைச் செயல்படுத்தவல்ல அமைப்பு சுரண்டல் வர்க்கத்தை அனைத்து வகைகளிலும் எதிர்கொள்ளக் கூடிய அளவிற்கு தன்னை அகரீதியில் தயார் செய்து கொண்ட பின்பு புற ரீதியிலும் சமூக மாற்றத்திற்கு உகந்த வகையில் மக்களின் மனம் கனிந்திருக்கும் வேளையில்தான் அதனை செய்ய முடியும்.

எனவே அத்தகைய மிகக் கடுமையான , சிக்கலான நீண்ட காலம் தேவைப்படக் கூடிய பணியை செய்து முடித்த பின்புதான் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? அதுவரை நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

நிச்சயமாக விலை உயர்வைக் கட்டுப்படுத்து என்ற முழக்கத்தை முன்வைத்து நடத்தக் கூடிய எந்தப் போராட்டமும் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் முடிந்ததாக வரலாறே இல்லை. இருந்தாலும் அந்த முழக்கத்தை முன்வைத்து போராட்டங்கள் நடத்தத்தான் வேண்டியிருக்கும். அதுவும் இந்தியா போன்ற கல்வியில் பின் தங்கியுள்ள , சமூகமாற்றக் கருத்துக்களை படிப்பறிவின் மூலமாகவே ஓரளவு கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களைக் கொண்டுள்ள நாட்டில் நிச்சயமாக , அக்கோரிக்கை உறுதியாக முழுவெற்றி அடையாது என்று தெரிந்திருக்கும் நிலையிலும் அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தவே வேண்டியிருக்கும்.

ஏனெனில் இங்கு போராட்டங்களே சரியான அரசியல் கல்வியை புகட்டும் வேலையைச் செய்து உழைக்கும் மக்களின் கண்களைத் திறக்க வல்லவையாக உள்ளன. ஆனால் அப் போராட்டங்கள் எந்த நிலையிலும் அரசின் கொள்கைகளே உணவுப்பொருள் விலையேற்றத்திற்குக் காரணம் என்ற பொய்யான முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது. ஒரு போராட்டத்தை வலுப்பெறச் செய்வதற்காக அவை குறித்த சில உண்மைகளை சிலகாலம் மறைத்து வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் ஒருபோதும் ஒரு பொய் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய முழக்கத்தை முன்வைத்து அதற்கு அறைகூவல் விடுக்கக் கூடாது. 

பொருத்தமுடைய கோரிக்கைகள்  சரியான தயாரிப்புகள் 

உண்மையிலேயே விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இயக்கம் அதனுடன் பொருத்தமுடைய சரியான கோரிக்கைகளை முன்வைத்து முறையான தயாரிப்புகளுடன் நடத்தப்பட வேண்டும்.

விலை உயர்வுடன் பொருத்தமுடையவை என்று நாம் பார்க்கும் போது அவற்றில் ஒரு முக்கிய சிறு விவசாயிகளின் விளைநிலம் விலை பொருளாவது மற்றும்  அவற்றைப் புதிதாக வாங்குவோரால் விளைவிக்கப் படுபவை நமது மக்களுக்குத் தேவைப்படும் உணவுப் பொருளாக இல்லாமல் இந்தியச் சந்தையையும் உள்ளடக்கிய உலகச் சந்தையில் விலைபோகும் பொருட்களாக இருப்பது முதலாளித்துவ அரசு எந்திரத்தை அவ்வர்க்கத்தின் நலன் கருதி இயக்குவதற்காகச் செய்யப்படும் செலவினங்கள் காரணமாக ஏற்படும் பணவீக்கம் போன்ற விசயங்களைச் சாதாரணப் போராட்டங்கள் மூலம் எதுவும் செய்ய முடியாது. அவை மிகவும் அடிப்படைத் தன்மை வாய்ந்தவை; ஒரு அடிப்படைத் தன்மை வாய்ந்த சமூகமாற்றம் போராட்டம் மூலமே முடிவுக்குக் கொண்டுவரப்பட முடிந்தவை.  

ஆனால் முதலாளித்துவ ஊக வணிகம் இடைத்தரகர் பங்கு , பதுக்கல் போன்ற விலை உயர்வுக்கான காரணங்களை முன்வைத்து அவற்றிற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படுவது பெரிதும் சாத்தியமே. அது மட்டுமல்ல ,  இக்காரணங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படாவிடில் விலை உயர்வு நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அதிகரித்து வசதியற்றவர் மத்தியில் பட்டினிச் சாவுகள் ஏற்படும் நிலையும் வெகு விரைவில் தோன்றிவிடும். விலை உயர்வுடன் மிகப் பொருத்தமுடைய விசயங்களான அதனைக் கட்டுப்படுத்தச் செய்ய வேண்டியது உணவு தானிய மொத்த வர்த்தகத்தையும்  சில்லரை வர்த்தகத்தையும் அரசே ஏற்று நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்கம் கட்டுவதே. 

பதுக்கலை வெளிக்கொணர நேரடி நடவடிக்கை 

மேலும் பதுக்கலை வெளியில் கொண்டுவர அரசின் கைவசம் உள்ள காவல்துறை போன்ற துறைகளைப் பயன்படுத்தக் கோருவது எந்த பயனையும் அளிக்காது; மக்கள் குழுக்கள் அமைத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை வெளியில் கொண்டுவர நேரடி நடவடிக்கையில் இறங்குவதே அதனைச் செய்வதற்கு உள்ள ஒரே வழியாகும். இவ்விசயத்தில் சட்டம் , ஒழுங்கு விசயத்தைக் காரணம் காட்டி காவல் துறை பதுக்கல் காரர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் நியாயமான மக்கள் இயக்கங்களில் காவல்துறையின் தலையீடு இருக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.

விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாக ஆவதால் விவசாயிகள் உணவுப் பொருள் உற்பத்தியைக் கைவிடுவதைத் தடுக்க விவசாய இடு பொருட்களான பூச்சி மருந்து , உரம் போன்றவற்றின் விலைகளைக் கட்டுக்குள் வைத்தாலே போதும். அதன் மூலம் உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரித்து அவற்றின் சந்தைக்கான வரவை அதிகப்படுத்தி விலை உயர்வைத் தடுக்க முடியும்.

அது மட்டுமல்ல இடு பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப் பட்டால் உணவுப் பொருட்களின் கொள்முதல் விலை உயர்வினையும் கட்டுப்படுத்த முடியும். இடைத்தரகரின் செயல் பாட்டால் ஏற்படும் விலை உயர்வைத் தடுக்க ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை சமூகத்தின் கீழ்நிலையிலுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் அவற்றின் நிர்வாகத்தில் உரிய எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்து முறையாகச் செயல்படச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். 

அடையாளபூர்வ போராட்டங்கள் ஒரு பலனையும் தராது 

மேலும் இப்போராட்டங்கள் இப்போது இடதுசாரி , கம்யூனிஸ்ட் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் ஏற்பாடு செய்வது போல் நடத்தப்பட்டால் அது எந்தவொரு ஆக்கபூர்வ விளைவையும் ஏற்படுத்தாது. அதிகபட்சம் அவை நடத்தும் போராட்டங்கள் ஒரு பாவனை அல்லது அடையாளபூர்வ போராட்டங்களாகவே இருக்கும். உண்மையில் இக்கட்சிகள் நடத்தும் இத்தகைய போராட்டங்களின் நோக்கம் மக்களின் எரியும் அடிப்படைப் பிரச்னைகளிலொன்றினைக் கையிலெடுத்து அதனைப் பயன்படுத்தி தங்களின் நாடாளுமன்றவாத அரசியல் நலனை மேம்படுத்திக் கொள்வதே.இக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரின் எண்ணமுமே இத்தகைய போராட்டங்களை எடுத்து அதன் மூலம் தங்களது செல்வாக்கின் கீழ் பரந்துபட்ட மக்கட்பகுதியைக் கொண்டுவந்து அவர்களைத் தங்களுக்கு வாக்களிக்கச் செய்து ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து , அல்லது ஆட்சியதிகாரத்தின் பங்காளிகளாக பிற கட்சிகளுடன் சேர்ந்து அமர்ந்து இப்பிரச்னைக்கான தீர்வினைக் கொண்டு வந்து விடலாம் என்பதே. உண்மையில் அத்தகைய தீர்வினை ஓரளவிற்காவது இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொண்டு வந்துள்ளார்களா என்று பார்த்தாலே இவர்களால் இந்த வழிமுறையின் மூலம் உணவுப் பொருள் விலையேற்ற விசயத்தில் எதையும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதனால் தான் இத்தகைய அடையாளபூர்வ , பாவனைப் போராட்டங்களைத் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் செய்து கொண்டுள்ளார்கள். தங்களது அப்பட்டமான நாடாளுமன்றவாத அரசியல் நிலைபாடு மக்கள் இயக்கங்களால் சாதாரணமாகவே சாதிக்க முடிந்த எளிய விசயங்களைக் கூடச் சாதிக்க முடியாதவர்களாக இவர்களை ஆக்கியுள்ளது. பதுக்கலை மக்களை அணிதிரட்டி வெளியே கொண்டுவருவது , ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் முறையான செயல்பாட்டை நடைமுறைப் படுத்தி இடைத்தரகர் சுரண்டலை ஒழிப்பது போன்றவற்றைக்  கூடச் செய்ய முடியாதவர்களாக இருக்கும் இவர்கள் , மத்திய அரசின் கொள்கைகளே உணவுப்பொருள் விலையேற்றத்திற்குக் காரணம் , அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை என்று உரத்து முழங்குகிறார்கள்.   

மத்திய அரசாலும் முடியாது; மாநில அரசாலும் முடியாது 

உணவுப் பொருள் விலையேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதை மத்திய அரசாலும் செய்ய முடியாது; மாநில அரசாலும் செய்ய முடியாது. ஏனெனில் உணவுப்பொருள் விலையுயர்வுக்கான அடிப்படைக் காரணம் நாம் ஏற்கனவே பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்தியுள்ள விதத்தில் அமைப்பு சார்ந்த ஒன்றே. எனவே முதலாளித்துவ அமைப்பு ரீதியான சமூகமாற்றத்தைக் கொண்டு வரும் திசை வழியிலேயே உணவுப் பொருள் விலையேற்றத்திற் கெதிரான இயக்கங்களும் வடிவமைக்கப்பட வேண்டும்.

அதாவது உணவுப் பொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்படும் மக்கட்பகுதியினரை பரந்த அளவில் அணுகி நாம் மேலே முன்வைத்த விதத்தில் தர்க்க ரீதியாக விலையேற்றத்திற்கான காரணங்களை முன்வைத்து அணிதிரட்டி , வட்டார அளவுகளில் கமிட்டிகள் அமைத்து பரந்த மக்கட் பகுதியினரை ஈடுபடுத்தும் வகையில் நீண்ட நெடிய தயாரிப்புகளுடன் அத்தகைய இயக்கங்கள் நடத்தப்பட்டால் தான் அவை ஒருபுறம் பதுக்கல் பேர்வழிகளுக்கு சிம்ம சொப்பனமாகி  விலையுயர்வினை ஓரளவிற்கு குறைக்க வழி ஏற்படும். மறுபுறம் விலை உயர்விற்கு மிகவும் அடிப்படைக் காரணகர்த்தாவாக இருக்கக் கூடிய முதலாளித்துவ சமூக அமைப்மையும் தோலுரித்துக் காட்டி அதனை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமையும்.

ஆனால் இத்தகைய தயாரிப்புகளில் ஈடுபடுவது இன்று இடதுசாரிகள் , கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக் கொண்டு சில மாநிலங்களில் பதவி சுகத்தையும் நுகர்ந்து கொண்டு இருப்பவர்களைப் பொருத்தவரையில் சாத்தியமானவையல்ல. 

உண்மையான இயக்கங்கள் இல்லாமலேயே செல்வாக்கு சரியாமல் பராமரிப்பதன் பின்னணி 

ஏனெனில் ஒரு உண்மையான இடதுசாரிக் கட்சியின் மக்கள் செல்வாக்கு அவர்கள் மக்களை அணிதிரட்டி நடத்தும் உண்மையான மக்கள் இயக்கங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பரவலைப் பொறுத்தே இருக்கும். ஆனால் இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவ்வப்போது நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளும் வகையிலான அடையாளபூர்வ பாவனைப் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கின்றனவே தவிர , உண்மையான மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட உரிய தயாரிப்புகளுடன் நடத்தப்படும் ,  மக்களின் சிந்தனையை அதன் பக்கம் ஈர்க்கும் தன்மை வாய்ந்த போராட்டங்கள் நடைபெறுவதேயில்லை. உண்மையான போராட்டங்களை ஊக்குவிக்கும் தன்மைவாய்ந்த போலீஸ் கொள்கை அதாவது உழைக்கும் மக்களின் நியாயமான போராட்டத்தில் போலீஸ் தலையீடு கூடாது என்ற கொள்கையும் இவர்களால் கைவிடப் பட்டுவிட்டது. இருந்தாலும் நாடாளுமன்ற அரசியலில் தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தில் இடது முன்னணியின் ஆட்சி 30 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு மாநிலத்தில் மாறிமாறி அதன் ஆட்சி வந்து கொண்டிருக்கிறது. இது எந்தப் பின்னணியில் நடக்கிறது என்பதை நாம் பார்க்கத் தவறக் கூடாது. 

அதாவது உண்மையான மக்கள் இயக்கங்களின் வலுவில் அது நடைபெறவில்லை. தொழில்நுட்ப ரீதியில் ஸ்தாபனத்தை தேர்தலை முழுமுயற்சியுடன் சந்திக்கும் விதத்தில் வைத்திருப்பதன் மூலமும், பணபலத்தைக் கொண்டுமே அது தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கிறது. அத்தகைய பணபலம் அதற்கு எங்கிருந்து  வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது உடைமை வர்க்க சக்திகளிடமிருந்தே வருகிறது என்ற பதிலே தவிர்க்க முடியாமல் கிடைக்கும்.

அந்த உடைமை வர்க்க சக்திகளின் பங்கும் பகுதியுமாகவே பதுக்கல் பேர்வழிகளும் , அரசால் நிர்வகிக்கப்படும் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்களை அதிக விலைக்கு விற்று வருவாய்க்கு மேல் சொத்துச் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதனை நாம் மேலோட்டமாக ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறவில்லை. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நியாய விலைக் கடை நடத்தி இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒன்று திரண்டு அம்பலப்படுத்தி அவர்களுக்குத் தண்டத்தொகை நிர்ணயித்த பின்னணியை மனதில் கொண்டு  ஆணித்தரமாகவே கூறுகிறோம்.

எனவே நாம் மேலே கூறிய விதத்தில் உண்மையான தயாரிப்புகளுடன் நடத்தப்பட்டால் விலைக் குறைவை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவல்ல இயக்கங்களாக இவர்கள் அறிவிக்கும் பாவனை இயக்கங்களை மாற்றும் விதத்தில் இக்கட்சிகளில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் சமூக மாற்ற சிந்தனையுள்ள தொண்டர்களும் , நாம் முன்வைத்த கருத்தினையயாத்த கருத்தினைக் கொண்டுள்ளோரும் அவற்றில் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் இக்கட்சிகளின் சமூக மாற்றக் கருத்தினைக் கைவிட்டு விட்ட போக்கினையும் அம்பலப்படுத்த முடியும். அத்துடன் உணவுப் பொருள் விலையேற்றத்தின் உண்மைக் காரணமான முதலாளித்துவ உற்பத்தி முறையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அதனை மாற்றும் திசை வழியிலானதாக இந்த இயக்கத்தையும் கொண்டு சென்று சமூகமாற்றப் போக்கின் ஒரு காட்சி ஒத்திகையாகவும் இதனை உருவாக்க முடியும்.