முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஊடகங்கள் நான்காவது தூணாக வர்ணிக்கப்படுகின்றன. அதாவது அரசின்மீதும் அரசாங்கங்களின் மீதும் எவ்வித தங்குதடையுமின்றி விமர்சனக் கணைகளை தொடுத்து அவை தவறாகச் செயல்படும் போக்கை தடுக்கும் தன்மை வாய்ந்தவையாக ஊடகங்கள் கருதப்படுகின்றன.

ஆனால் இக்கால கட்டத்தில் அவ்வாறு உயர்வாகக் கருதப்படும் ஊடகங்கள், அமைப்பிற்குள் உள்ள மிகவும் மேலோட்டமான விசயங்களை எழுதுகின்றனவே தவிர சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவையும் அதன் அனைத்துக் கோளாறுகளுக்கும் காரணமாக இருப்பவையுமான மையமான கோளாறுகள் குறித்து இப்போதெல்லாம் அவை வாய்திறப்பதே இல்லை. அது மட்டுமல்ல கூடுமானவரை அந்த மையமான கோளாறுகளை மூடிமறைக்கவே முயல்கின்றன.

ஏனெனில் அக்கோளாறுகளுக்கான தீர்வு இந்த அல்லது அந்த சீர்திருத்தத்தின் மூலம் ஏற்பட்டுவிடாது; அவை போக்கப்பட வேண்டுமென்றால் சமூகத்தின் அடிப்படையான மாற்றம் தேவை. அதை நோக்கி ஊடகங்கள் செல்லாதது மட்டுமின்றி மக்கள் மனங்கள் செல்வதையும் தடுப்பதும் தவிர்ப்பதுமே தற்கால ஊடகங்களின் தலையாய பணியாகிவிட்டது. அந்த மையமான விசயங்களை மூடிமறைப்பதற்காக தற்போதுள்ள எழுத்து மற்றும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் காட்சி ஊடகங்கள் அனைத்துவகை அதீத முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. நடந்து முடிந்த தேர்தல் கால ஊடகப் படப்பிடிப்புகள் அதற்கு தெளிவான சான்று பகர்வனவாக உள்ளன.

கட்சிகளின் அமைப்பு ரீதியான ஆளும்வர்க்க ஆதரவுச் செயல்பாடு

ஊடகங்கள் மட்டுமின்றி நாட்டில் செயல்படும் கட்சிகளும் அமைப்பு ரீதியில் இதையே செய்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டியதில்லை. ஏனெனில் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் செயல்படும் நாடாளுமன்றவாதக் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் பல பிரிவுகளுக்கு அவை தங்களுக்கு அளிக்கும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு சேவைபுரியவே இருக்கின்றன; செயல்படுகின்றன.

கடந்த தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் முன்வைத்த முழக்கங்களைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியவரும். முக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி. கட்சியைப் பொறுத்தவரை அது முன் வைத்த முக்கிய முழக்கம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் என்பதாகும்.

இறுதியாக சுவிஸ் வங்கியில் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொகைகளை தோண்டி எடுத்துக் கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம் என்ற முழக்கத்தையும் அது வைத்தது. அது அதன் பிரச்சாரத்திற்கு வலு சேர்ப்பதற்காக மட்டும் முன் வைக்கப்பட்ட முழக்கம்.

அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் மோடி மீண்டும் மீண்டும் கூறியது அப்சல்குரு ஏன் தூக்கிலிடப்படவில்லை என்பதும் பாகிஸ்தானில் தாலிபான் தாக்குதல்களால் ஸ்வாப் பகுதியிலிருந்து இடம்பெயர நேர்ந்துள்ள சீக்கியர்களின் அவல நிலை குறித்து இந்தியா எதுவுமே செய்யவில்லை என்பதுமாகும்.

மேலே கூறிய அக்கட்சியின் கருத்துக்களில் சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணத்தைக் கொணர்வது என்ற கருத்தைத் தவிர வேறு அனைத்துக் கருத்துக்களும் அபத்தமானவையும் வெறிவாத உணர்வை தூண்டவல்லவையுமே.

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மக்களின் பிரச்னையைக் கையிலெடுத்தது பஞ்சாபில் சீக்கிய மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மலிவான முயற்சியே தவிர வேறெதுவுமில்லை. அப்பிரச்னைக்கான தீர்வு சர்வதேச சமூகத்தின் கருத்தைத் திருப்பி பாகிஸ்தான் அரசைக் கூடுதல் உத்வேகத்துடன் அப்பிரச்னையை அணுகுவதற்கு ஏற்பாடு செய்வதில் உள்ளதே தவிர வேறெதிலும் இல்லை. அதைத் தவிர வேறு சட்டபூர்வமான எதையும் இந்தியா போன்ற வேறொரு நாட்டின் அரசு செய்ய முடியாது. பி.ஜே.பி-கட்சியின் எண்ணம் ஒரு பெரிய நாடு என்ற ரீதியில் அந்நாட்டை நாம் மிரட்டிப் பணிய வைக்க வேண்டும் என்பதே. ஆனால் அந்த ஆதிக்க வாதப் போக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வ போக்கல்ல.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை குறிப்பாக வருண்காந்தியின் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறித்தனமான சில கருத்துக்களை எதிர்ப்பதிலேயே அதன் பெரும்பகுதி பிரச்சாரம் இருந்தது. பயங்கரவாதம் குறித்த பி.ஜே.பி-யின் கருத்துக்களை எதிர்கொண்டு வெளிநாட்டில் இருந்து வரும் பயங்கரவாத ஆபத்தைக் காட்டிலும் உள்நாட்டில் வெறிவாத அமைப்புகளால் உருவாக்கி வளர்க்கப்படும் வெறிவாதப் போக்குகள் மிகவும் அபாயகரமானவை என்ற திருமதி. சோனியா காந்தியின் கூற்றும் மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் என்பதை எதிர்கொள்ளும் வகையில் அவர் முன் வைத்த பி.ஜே.பி. தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிமைகள் என்ற கருத்தும் சற்றே பொருள் பொதிந்தவையாகவும் நயமானவையாகவும் இருந்த போதிலும், நாட்டு மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து அக்கட்சி ஆக்கபூர்வமாக எந்தக் கருத்தையும் முன் வைக்கவில்லை. இதை தவிர ஏழை எளியவர் நலனை மேம்படுத்துவதே தங்களது குறிக்கோள் என்ற வழக்கமான முதலைக் கண்ணீர் வடிக்கும் போக்கு காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தில் பஞ்சமின்றி இருந்தது.

சி.பி.ஐ (எம்) கட்சியோ மேற்குவங்கத்தை சி.பி.ஐ(எம்) ஆட்சி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வைத்துள்ளது என்று ராகுல் காந்தி முன் வைத்த கருத்திற்கு எதிராக, வங்காளி தேசிய உணர்வினை திரட்டுவதிலேயே மும்முரமாக இருந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி முஸ்லீம் மக்களின் வாக்குகளை முழுமையாகப் பெறுவதற்காக வருண்காந்தியை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார். அது சரியா? தவறா? என்பது போன்ற வாதங்களே அனைத்துக் கட்சிகளாலும் பெரிதாக பேசவும் எழுதவும் பட்டன.

முக்கியமற்ற விசயங்களை ஊதிப் பெரிதாக்கி முக்கியமானவை போல் ஆக்க முயற்சி

இவ்வாறு அரசியல் கட்சிகள் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை புறக்கணித்து முக்கியமற்ற விசயங்களை முன்னுக்கு நிறுத்திய வேளையில் நமது நாட்டின் ஊடகங்கள் அதே முக்கியமற்ற விசயங்களை பலரிடம் கருத்துக் கேட்பது போன்ற வகைகளில் இன்னும் ஊதிப் பெரிதாக்கி அவைதான் இன்று நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளின் ஒட்டுமொத்தம் என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தினை மிகத் தெளிவாகவும் திறமையுடனும் செய்தன.

குறிப்பாக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் வேறு அமைப்புகளின் ஆதரவையும் திரட்டுவதற்குத் தேர்தலுக்கு முன்பே அச்சாரம் இட வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதா, நித்தீஸ்குமார் போன்றவர்களைக் காங்கிரஸ் பக்கம் இழுக்க முயன்றதை அடிப்படையாக வைத்து பல செய்திகளை உருவாக்கி தங்களது செய்தித் தயாரிப்பு தொழிற்சாலையை அல்லும் பகலும் அயராது செயல்படச் செய்தன.

ராகுல் காந்தி ஜெயலலிதா குறித்து இவ்வாறு கூறியுள்ளாரே என்பதை தி.மு.க. தலைவர்களிடம் தெரிவித்து அவர்களின் கருத்துக்களை கேட்பது, அவற்றை காங்கிரஸ் தரப்பினரிடம் எடுத்துரைத்து அவர்கள் இதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்வது போன்ற மக்கள் நலனோடு சிறிதளவும் சம்பந்தப்படாத விசயங்களிலேயே கவனத்தை செலுத்தி ஒருவகை சிண்டு முடியும் வேலையையே இடைவிடாமல் செய்தன.

அதைப் போலவே நித்தீஷ்குமார் குறித்து ராகுல்காந்தி முன்வைத்த கருத்துக்களை பெரிதாக சித்தரித்து அதற்கான நித்திஸ்குமாரின் பிரதிபலிப்பையும் அடுத்தடுத்து வெளிப்படுத்தின. இறுதியாக அவர் தான் நிலைமாறவில்லை என்று காட்டுவதற்காக மோடியும் கலந்துகொண்ட பி.ஜே.பி., சிரோமணி அகாலிதளம் ஏற்பாடு செய்த அமிர்தசரஸ் கூட்டத்தில் வலியச் சென்று கலந்து கொள்ளும் சூழ்நிலையையும் ஏற்படுத்தின.

ராகுல்காந்தி மேலே கூறிய ஜெயலலிதா, நித்திஸ்குமார் ஆகியவர்கள் குறித்த கருத்துக்களை முன்வைத்த கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் என்ற அடிப்படையில் வீரப்ப மொய்லி காங்கிரஸ்-ன் ஊடகப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது போன்ற ஒரு சித்திரத்தையும் தீட்டி தங்களது செய்தி தயாரிப்புப் பணியை பலமணிநேரங்கள் தீவிரமாகச் செய்தன.

உண்மையான பிரச்னைகளை இருட்டடிப்பு செய்யும் போக்கு

இவையே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் கடந்த தேர்தலின் போது ஆற்றிய "ஆக்கப்பூர்வ" பணிகளாகும். இந்த கால கட்டத்தில் உலக முதலாளித்துவமே அது இதுவரை சந்தித்திராத ஒரு கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுள்ளது; அதன் விளைவாக இலட்சோபலட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளன; மக்களின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டும் பொது வினியோக முறையின் மூலம் சென்று சேரும் அத்தியாவசிய பண்டங்களைத் தவிர, மிகப் பெரும்பான்மையான மக்கள் அத்தியாவசிய பண்டங்களின் தாங்க முடியாத விலை உயர்வினை சந்தித்துக் கொண்டுள்ளனர்; ஜனநாயக முறையின் அடித்தளத்தையே அடித்து நொறுக்கும் விதத்தில் தமிழக தேர்தலில் தலைவிரித்தாடிய வாக்கிற்குப் பணம் கொடுப்பது என்ற கேவலமான போக்கு நடந்து கொண்டுள்ளது - இவை எதையும் ஊடகங்கள் வெளிக்கொணர்வதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.

தேர்தல் முடிவுகளை பணம் தீர்மானித்துக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்த தொகுதி நிலவரங்கள்

வாக்கிற்குப் பணம் கொடுப்பதே தமிழகத் தேர்தலில் தீர்மானகரமான போக்காக மாறியுள்ள கேவலமானதும் அபாயகர மானதுமான விசயத்தை மூடி மறைத்து ஹிந்து போன்ற பிரபல நாளிதழ்கள் கூட சராசரி மக்களும் கூடப் பரிகசிக்கும் விதத்தில் பணம் வழங்கல் குறித்து எதையும் எழுதாமல் தொகுதிவாரி வெற்றி வாய்ப்பு நிலவரங்களை எழுதி முறையாக தேர்தல் நடக்கிறது என்பது போன்ற பொய்த் தோற்றத்தினை ஏற்படுத்தின.

இயல்பாகவே முதலாளித்துவக் கட்சிகளும் இவை குறித்து மூச்சுவிடவில்லை. எனவே இதுபோன்ற அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் உரிய பங்கினை ஆற்றாத ஒன்றாகவே முதலாளித்துவ ஜனநாயகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் தேர்தல் நடந்து முடிந்தது. அரசியல் கட்சிகளும் அவற்றின் ஊதுகுழல்களான ஊடகங்களும் சேர்ந்து நடத்திய ஒரு மோசடித்தனமான கதம்பக் கச்சேரியாகவே கடந்த தேர்தல் இருந்தது.

சி.பி.ஐ (எம்) -ன் தோல்விக்கு சிங்கூரும் நந்திகிராமும் காரணமா? இல்லையா?

தேர்தலுக்கு பின்னரும்கூடக் குறிப்பாக மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ(எம்) கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணமாக நந்திகிராம், சிங்கூர் பிரச்னைகள் அக்கட்சியால் முன்வைக்கப்படவில்லை. அது குறித்த கேள்விகளை ஊடகங்களும் எழுப்பவில்லை. முதலாளித்துவ ஜனநாயகத்தின் முக்கிய அங்கங்கள் அனைத்தும் சீரழிந்து போய்க்கொண்டுள்ளன. அவற்றுடன் சேர்ந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களும் சீரழிந்தும் பாழ்பட்டும் போய்க் கொண்டிருப்பதையே இப்போக்குகள் வெளிப்படுத்தின.

முதலாளித்துவம் அத்தனை பிற்போக்கானதாக ஆகியிராத சூழ்நிலையில் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் ஆற்றிய ஆக்கபூர்வப் பங்கினை அதாவது அச்சமின்றி அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தும் பங்கினை இன்று சுத்தமாகவே ஆற்ற முடியாத நிலையில் அவை உள்ளன. மிகமிகச் சிறிய அளவில் விதிவிலக்காக ஓரிரு ஊடகங்கள் மட்டும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள 79 பேர் கொண்ட மிகப் பெரிய மந்திரி சபையினை விமர்சிக்கும் விதத்தில் செய்திகள் வெளியிட்டன.

அதாவது அமெரிக்காவில் 15-லிருந்து 20 பேருக்குள் இருக்கும் மந்திரி சபையையும், மக்கள் சீனத்தில் 25 பேருக்கு மிகாமல் இருக்கும் மந்திரி சபையையும் ஜப்பான் போன்ற நாடுகளில் 10 பேர் என்ற அளவிற்கே இருக்கும் மந்திரி சபைகளையும் மேற்கோள்காட்டி, அவற்றோடு ஒப்பிடுகையில் 79 பேர் கொண்ட மந்திரிசபை என்பது எத்தனை அநாவசியமானது என்பதையும் ஒவ்வொரு மந்திரியைப் பராமரிப்பதற்கும் அரசிற்கு ஏற்படும் செலவினங்கள் எவ்வளவு என்பதையும் அவை வெளியிட்டன.

அவ்விமர்சனத்தின் தீவிரத்தையும் மட்டுப்படுத்தும் விதத்தில் இந்தியா போன்ற பரந்த நாட்டில் பல்வேறு மொழிபேசும் பல இனங்களைக் கொண்டிருக்ககூடிய ஒரு நாட்டில், பல கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைக்கவேண்டிய கூட்டணி யுகத்தில் இதுவும் கூட நியாயப்படுத்த முடிந்ததே என்ற கூற்றை முன்வைத்து அந்த வாதத்தையும் நீர்த்துப் போகச் செய்தன.

அதாவது அரசியல் இலாபகரமான தொழில்போல் ஆகிவிட்ட சூழ்நிலையில் பெரிதும் சம்பாதிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வல்லவை என்ற அடிப்படையிலேயே ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அதிக அமைச்சரவைகளையும் குறிப்பிட்ட சில அமைச்சர் பொறுப்புகளையும் கோருகின்றன என்ற அப்பட்டமான உண்மையை முழுமையாக வெளியில் கொண்டுவர பிரச்சார சாதனங்கள் தயங்குகின்றன.

கடுகளவு விசயம் கடலளவு விளம்பரம்

பத்திரிக்கைகள் தங்களின் ஆக்கபூர்வப் பணியினை ஆற்றாதது மட்டுமின்றி குதிரை கீழே தள்ளியதுமின்றி குழியும் பறித்த கதையாக பல நாசகரமான போக்குகளையும் உருவாக்குகின்றன. வகுப்புவாத, பிளவுவாத சிந்தனைகளை விசிறிவிடும் போக்கில் ஈடுபடுகின்றன. அவற்றின் மூலம் பலரும் பார்க்கக்கூடிய ஜனரஞ்சகக் காட்சி ஊடகங்களாக பல ஊடகங்கள் உருவாகி அதற்குகந்த விதத்தில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்களை பெற்று முறைகேடாகப் பெருலாபம் ஈட்டுகின்றன.

கடுகளவு செய்திகளைத் தெரிந்து கொள்ள கடலளவு விளம்பரங்களை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாக்கப்படுகிறார்கள். அத்துடன் காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் நடுத்தர மக்களின் சுயசிந்தனையையே அப்பட்டமாக மழுங்கடித்துவிடுகிறது. இந்த சீரழிந்த பொது நீரோட்டத்திற்கு எதிரான சக்திவாய்ந்த உண்மைகளை எந்தவகையான தயக்கமும் இன்றி எடுத்துக் கூறும் எதிர் நீரோட்ட தன்மை வாய்ந்த ஊடகங்களை உருவாக்குவதில் சமூக மாற்ற சக்திகள் பெரும் அக்கறையினைக் காட்டுவதில்லை. அதன் விளைவாக பிரபல ஊடகங்கள் உண்மையில் உள்ள செய்திகளை தருவதைக் காட்டிலும் ஆளும் வர்க்கத்திற்கு தேவையான செய்திகளை உருவாக்கித்தரும் பணியினை ஜாம் ஜாம் என்று செய்கின்றன.

இது உழைக்கும் வர்க்க ஜனநாயக சக்திகள் மிகக் கவலையுடன் நோக்க வேண்டிய விசயமாகும். கம்யூனிஸ்டுகள் அல்ல ஆல்டஸ் ஹக்ஸ்லி போன்ற முதலாளித்துவ சிந்தனையாளர்களே முன்கூட்டி யோசித்து அறிவித்த அந்த அபாயகரமான சூழ்நிலை, அதாவது செய்தி நிறுவனங்களால் உண்மைகளின் குரல்வளை நெறிக்கப்படும் சூழ்நிலை இன்று தோன்றி நிலைபெற்றுவிட்டது.

உண்மைகளை வெளிக்கொணர நடைமுறை ரீதியான மக்கள் இயக்கங்களே சிறந்த வழி

மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகள் சார்ந்து பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்டி அவற்றின் மூலம் நடைமுறை ரீதியாகவே அரசும் அரசு நிறுவனங்களும் யாருக்காக இருக்கின்றன என்பன போன்ற உண்மைகளை மக்கள் உணருமாறு செய்வதன் மூலம் மட்டுமே இதற்கு எதிரான நீரோட்டத்தை உழைக்கும் வர்க்க ஜனநாயக சக்திகள் ஏற்படுத்த முடியும். ஊடகங்களின் அதி நவீனப் படாடோபங்களாலும், திட்டமிட்ட செயல்பாடுகளினாலும் அடைபட்டுப் போயுள்ள உழைக்கும் வர்க்க, நடுத்தர மக்களின் சிந்தனைக் கதவுகளைத் திறக்க வல்லவை அத்தகைய மக்கள் இயக்கங்களே. அவர்கள், தங்களது போராட்ட நடைமுறைகளின் மூலம் முதலாளித்துவ ஊடகங்களின் சித்து விளையாட்டுகளைச் சிறிதளவே புரிந்து கொண்டால் கூடப் போதும். பின்னர் அவை முன் வைக்கும் கருத்துக்கள் எதன் மீதும் மக்களுக்கு நம்பிக்கை பிறக்காது.