கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் புத்தளம் - சிலாபம் பகுதிகளிலும் கொழும்பு நகரிலும் வாழ்ந்த / வாழும் தமிழர்கள், சாதாரண மனிதர்களுக்குக் கிடைத்த குடிமை (civil) வாழ்வை இழந்தனர். தாங்கள் எப்போதும் கண்காணிக்கப்படுகிறோம் என்ற மனநிலையில் வாழ்ந்தனர் / வாழுகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ நடவடிக்கைகளால் சீர்குலைக்கப்பட்ட பிறகு, இந்தத் தீவின் அரசு ‘வடக்கின் வசந்தம்’ எனும் பெயரில் வடக்குப்பகுதி முன்னேற்றத் திட்டங்களை அழைக்கிறது. இப்போது வசந்தம் வந்து விட்டதாகவும் கோடையில் தவித்தவர்கள் இப்போது குடிமை உணர்வுடன் வாழ்வதாகவும் கூறுகின்றது இலங்கை அரசு. திரும்பும் இடமெல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ மற்றும் ‘ஒரே தேசம் ஒரே குரல்’ எனும் முழக்கங்கள் எழுதப்பட்ட விளம்பரப் பலகைகள் காட்சியளிக்கின்றன. 2009-மே முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப் பின் இலங்கைத் தீவின் வடகிழக்கு வாழ் மக்கள் மனநிலை விடுதலையுணர்வோடு உள்ளதா? குடிமை வாழ்முறை சாதா ரணமாக நடைபெறுகிறதா? போரால் அழிந்துபோன வாழ்வாதார வளங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவிட்டனவா? இப்படியான கேள்விகளை நாம் கேட்கவேண்டும். இதனைத்தான் ‘போருக்குப் பிந்தைய ஈழம்’ எனும் தொடர் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம். இதனை பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

-சிங்களப் பேரினவாதம், சிறுபான்மையினரான தமிழ் மக்களை ஆதிக்கம் செலுத்தும் செயலுக்கு எதிரான போர் என்று நடந்து முடிந்த நிகழ்வை ஒருதரப்பினர் அடையாளப்படுத்துகின்றனர்.

-தேசம் - தேசியம் - தேசிய இனம் எனும் சொல்லாட்சிகளை ஏற்றுக் கொள்ளாது தவறான முறையில் ‘தேசிய இனம்’ எனும் உணர்வுத் தளம் சார்ந்து அணி சேர்க்கப்பட்ட குழுக்களின் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டுவிட்டன. வரலாற்றில் நிகழ்ந் திருக்கக் கூடாத துரதிஷ்டவசமான நிகழ்வு இது. பேரின வாதம் ஒரு பக்கமும் சிறுபான்மை அடிப்படைவாதம் இன்னொரு பக்கமும் செயல்பட்டு அப்பாவி மக்களைத் துயரத்திற்கு ஆட் படுத்தி விட்டனர் என்று மதிப்பிடும் இன்னொரு தரப்பினர்.

-கொரில்லா போர் முறையைக் கையில் எடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம், அடிப்படையில் சமூகப் பொருளாதார அரசியல் புரிதலற்ற இயக்கம். இவர்கள் போர் நிகழ்த்திய முறை தவறானது. வெகுமக்களை அரசியல்ரீதியாக அணி சேர்க்காது நடத்திய போர் இது. மக்கள் பங்கேற்பு இல்லாத விடுதலைப் போர் இவ்வகையில் தான் ஒடுக்கப்படும் என்று மதிப்பிடுவோர் இன்னொரு பக்கம்.

இவ்வாறு பல்வேறு மதிப்பீடுகள் ‘போர் முடிந்த’ சூழலில் முன்வைக்கப்படுகின்றன. மூன்றாம் மனிதராக இருந்து, இருப் போரின் அவரவர் சார்ந்த புரிதலில் இவ்வகையான உரையாடல்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த உரையாடல் வெகுமக்களின் நடைமுறை வாழ்வுக்கான உடனடித் தீர்வுகளை முன்வைக்காதவை. இம்மதிப்பீடுகள் இப்போது எந்த அளவிற்கு முக்கியத்துவம் மிக்கவை என்ற உரையாடலை முன்வைத்தால்; நடந்துமுடிந்த நிகழ்வுகளின் மதிப்பீடுகள் இவை. ஆனால் இப்போது வாழும் மக்கள் குறித்த உரையாடல்களை எப்படி முன்வைப்பது என்பதே முதன்மையாகிறது. இதனை நமது புரிதல் சார்ந்து பின்வருமாறு தொகுப்போம்.

-போரினால் அழிந்துபோன வாழ்க்கையை மீண்டும் உருவாக் குவதற்காக உலகச் சமூகம் மேற்கொள்ளும் திட்டங்கள் எவை? இலங்கை அரசு இத்திட்டங்களை எவ்வகையில் செயல்படுத்து கிறது?

-போர் முடிந்த பின்னும் இராணுவ முகாம்களை நீக்குவது தானே முறை. ஆனால் எந்த இடத்திலிருந்தும் அவை நீக்கப் படவில்லை. மாறாக நிலையான இராணுவ முகாம்கள் கட்டப்படுகின்றன.

-வெகுமக்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் உளரீதியாக எதிர்கொண்ட துன்பங்களை அகற்றுவதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றனவா? மாறாக மக்களுக்கு புதுவகையான பயம்தரும் நிகழ்வுகளையும் துன்பங்களையும் கட்டமைப்பதா?

-தரிசாக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் விளைநிலம் ஆவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா? அல்லது அந்த நிலங்களை இராணுவ முகாம்களாக மாற்றும் செயல்பாடு நடைபெறுகிறதா?

மேற்குறித்த உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ‘போருக்குப் பிந்தைய ஈழம்’ குறித்து நாம் மதிப்பீடு செய்யலாம்.

இலங்கைத் தீவை தமது வணிக ரீதியான காலனியாக்கிக் கொள்ள சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை போட்டியிடுகின்றன. இதில் சிவப்புச் சீனாவின் கை ஓங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். அந்த நாட்டில் ‘முன்னேற்றப் பணிகளுக்கானத் திட்டங்கள்’ எனும் பெயரில் மேற்குறித்த மூன்று நாடுகளின் கம்பெனிகள், பங்கு போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதில் சீனா முன்னணியில் உள்ளது. சீனா வடக்குப் பகுதியில் மிகப்பெரும் இராணுவ முகாம்களை கட்டுவதில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப்பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் நீண்டகாலம் இருந்த பகுதிகளாகும். இப்பகுதிகளில் நிலையான இராணுவ முகாம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சியில் உள்ள ‘இரணைமடு’ எனும் பகுதி நீர்வளம் மிக்க பகுதி. இரணைமடு குளம் என்று அழைக்கப்படும் பெரிய நீர்நிலை அங்குள்ளது. வன்னிப்பகுதியில் உள்ள வளமான நீர் ஆதாரப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்நிலையைச் சுற்றி மிகப்பெரிய நிலையான இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் இனிமேல் மக்கள் நடமாட இயலாது. அங்குள்ள வளமான விளை நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு, முகாம் அமைக்கப் படுகிறது. காடுகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதி முகாம்கள் கட்ட ஏற்ற இடமாகக் கருதப்பட்டு, வேலை நடைபெறுகிறது. இதைப்போல் முல்லைத் தீவுப் பகுதியிலும் இன்னொரு நிலையான முகாம் அமைக்கப் படுவதின் மூலம் உருவாகும் பின்விளைவுகளைக் கீழ்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

-மிக வளமான விளைநிலப்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகள் அழிக்கப்படுகின்றன. மக்கள் இப்பகுதி சார்ந்து பெற்று வந்த நீர், நில வாழ்வாதாரங்களை இழக்கின்றனர்.

-தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அங்கு எவரும் இனி நடமாட இயலாது. அங்கிருக்கும் மக்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்படும்.

-ஆயிரக் கணக்கில் சிங்கள இராணுவத்தினர் நிலையாகக் குடியேறுகின்றனர். அவர்களுக்கான பள்ளிகள், சந்தைகள் உருவாக்கப்படும். தமிழர்கள் வாழ்ந்த பகுதி; சிங்கள இராணுவ முகாம் பகுதியாக - கன்டோன்மெண்டாக - மாற்றம் செய்யப்படுகின்றது. கிளிநொச்சி நகரம், இனிமேல் சிங்கள இராணுவ முகாம் பகுதியாகி விடும்.

-நேரடியாகச் சிங்களக் குடியேற்றம் என்பதற்கு மாற்றாக இராணுவ முகாம் சார்ந்த சிங்களக் குடியேற்றமாகக் கட்டமைக்கப்படும். இதன் மூலம் வருங்காலங்களில் சிங்கள - தமிழ் இணைவு சார்ந்த பகுதியாகப் படிப்படியாக மாறும். புத்தளம், சிலாபம், வவுனியா பகுதிகள் ஒருகாலத்தில் பெரும்பான்மை தமிழ்மக்கள் வாழ்ந்த பகுதி. இப்போது அந்நிலை மாறிவிட்டது. அதைப் போலவே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதி படிப்படியாக மாற்றப்படும். இதற்கான முதல்கட்ட வேலையே நிலையான இராணுவ முகாம்களைச் சீனாவிடம் கடன்பெற்று சிங்கள அரசு நிறைவேற்றி வருவது ஆகும்.

-தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுமையாக நிலையான இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக வடிவமைக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் சீர்குலைக்கப்பட்ட பின்பு, சிங்கள பேரின அரசு தமிழ்ப் பகுதிகளை இராணுவ முகாம்கள் நிரம்பிய பகுதிகளாக உருவாக்கத்தின் மூலம், தமிழ் மக்கள் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டில் வாழும் சூழல், இனி நிகழ வாய்ப்புண்டு. ஏனெனில் இராணுவ முகாம் பகுதிகளில் நிகழ்வது வெளி உலகிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை.

வடகிழக்குப் பகுதிகளில் இருவழிச் சாலைகள் (100 அடி) போடப்பட்டு வருகின்றன. ஜப்பானிய கம்பெனிகளும் இந்தியக் கம்பெனிகளும் இதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு போடத் தொடங்கிய நெடுஞ்சாலைகள் போன்று, அங்கும் சாலைகள் உருவாக்கப் படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இப்பணி நிறைவேறலாம். இனிமேல் இராணுவ வாகனங்கள் மிக வேகமாகச் செல்லலாம். 100 கி.மீ. வேகத்திற்குக் குறையாமல் வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் இச்சாலைகளைக் கண்டவுடன் ‘வடக்கின் வசந்தம்’ வந்து விட்டதைச் சட்டென உணரக்கூடும். போக்குவரத்து வசதிக்கும் இராணுவ அடக்குமுறைகளுக்குமான உறவை நாம் மறந்து விடக் கூடாது. இராணுவத்திற்காகப் போடப்படும் சாலைகள் மக்களுக்கும் உதவும். இனிமேல் A9 சாலையில் செல்லும் பயண நேரம் பாதியாகக் குறையலாம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான வீடுகள் கட்டுதல், வயல்களைச் சீர்செய்தல், மின்சாரம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் ஆகியவை மிக மெதுவாக நடைபெறும் பணிகளாக உள்ளன.

நெடுஞ்சாலைகள் போடுவது மட்டும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னுரிமை எதற்குத் தேவை? அடிப்படைத் தேவைகளுக்கா? முன்னேற்றப் பணிகளுக்கா?

யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பேசுவதற்குப் பயப்படுகின்றனர். தங்களைச் சுற்றி வாழும் தமிழர்களையே ‘கூலிப்படை’களாக மாற்றி இராணுவம் செயல்படுவதாகக் கருதுகின்றனர். சாதாரண உடையில் தங்களைச் சுற்றி இராணுவமும் காவல்துறையும் எந்நேரமும் இருப்பதான மனநிலையில் உள்ளனர். ஊடகத் துறையில் ‘ஆட்காட்டி’கள் அதிகமாக உள்ளனர் என்றும் கூறுகின்றனர். ‘கிரீஸ் டெவில்’ எனும் கருப்பெண்ணெய் பூசப்பட்ட பிசாசு இரவு வேளைகளில் திடீர்திடீரென வருவதாகக் கூறுகின்றனர். உடல் முழுவதும் கருப்பு வண்ண கிரீஸ் பூசிக்கொண்டு இரவுகளில் சிலர் நடக்கின்றனர். இவர்கள் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்களைப் பொதுமக்கள் துரத்தினால், அவர்கள் நேரடியாக இராணுவ முகாம்களுக்குள் ஒடி மறைகின்றனர். அவர்கள் மனநோயாளிகள் என்றும் அவர்களைத் தாங்கள் கட்டுப்படுத்துவதாகவும் இராணுவமுகாம் அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வகையில் மக்களை மனப்பிராந்தியில் தொடர்ந்து வைத்து இருப்பதற்கான வேலைகளை இராணுவம் செய்து வருகிறது.

போரின்போது இருதரப்பிலும் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படவில்லை. ஏன் அகற்றாமல் இருக்கிறார்கள் என்பது கேள்வி. மக்களைப் பயத்தில் ஆழ்த்த வேண்டிய கட்டாயம் இராணுவத்திற்கு இருக்கிறது. இதனால்தான் இரவு நேரப் பிசாசுகள் உலவுகின்றன. எங்கும் கண்ணி வெடிகள். எனவே, ‘உங்களைக் காப்பாற்ற இங்கு நாங்கள் இருக்கவேண்டும்’ என்னும் தர்க்கத்தைக் கொண்டே இராணுவம் தொடர்ந்து இருக்கலாம். போரில் பட்ட துன்பத்தைவிட தற்போது மனதளவில் கொள்ளும் பயம் கூடியிருப்பதாகவே சாதாரண மக்கள் கருதுகிறார்கள்.

போருக்குப் பிந்தைய ஈழச்சமூகம் எதிர் கொள்ளும் துன்பங்கள் உளவியல் சார்ந்துள்ளன. ஒருவர் பிறரை நம்புவது சாத்தியமா? என்றுகூட நினைக்கின்றனர். கூட்டு வாழ்க்கைமுறை கேள்விக்குள் ளாக்கப்படுகிறது. இத்தன்மைகளை மாற்றுவதற்கான செயல் பாடுகளில் அரசு அக்கறை கொள்வதாக இல்லை. தனது எடுபிடிகளைக் கொண்டு நிர்வாகத்தை நடத்துகிறது. மக்கள் நம்பும் நிர்வாகிகள் இல்லை. இடைத்தரகர்கள் மிகுதியாக உருவாகி யுள்ளனர். போரினால் ஏற்பட்ட இவ்வகையான உளவியல் சிக்கல்கள் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டும்.

குழப்பத்தில் இருக்கும் ஈழத் தமிழ்ச் சமூக மக்களிடம், சிங்கள பேரினவாத அரசு ‘ஒரே தேசம் ஒரே குரல்’ எனும் முழக்கத்தை முன்வைக்கிறது. ‘ஒரே குரல்’ என்ற முழக்கத்தின் மூலம் சிங்கள அரசு சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பதைக் காணமுடிகிறது. பல் குரல்களின் ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகம் அழிக்கப்பட்டு ஒரு குரல் நிர்வாகம்; இது சனநாயகத்திற்கு எதிரானது. ஈழத் தமிழ்மக்கள் சர்வதிகார ஆட்சி முறையில் உள்ளனர். தொடர்ந்து நிலைமைகள் என்னவாகும்? என்று கணிக்க இயலாது. காலம் தான் பதில் சொல்லும். ‘வடக்கில் வசந்தம்’ எனும் முழக்கம்; ‘ஒரே குரல்’ எனும் முழக்கம் ஆகியவை போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நவீன ஒடுக்குமுறையாக அமைகிறது. பொறுத்திருப்போம்..... காலம் மாறும்.

(2011 அக் 1-5 ஆகிய நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளில் செய்த பயணத்தின்போது உணர்ந்த அனுபவப் பதிவுகளாக இத்தலையங்கம் அமைகிறது. சி-ர்).