வடகிழக்கு மாநில மக்கள் போராட்டமும் அரங்கமும்

       அர்ஜென்டினாவின் ‘மாயோ சதுக்கத்தில்’ ஒவ்வொரு வியாழனன்றும் மாலை 3.30 மணிக்குக் கூடும் தாய்மார்கள், காணாமற்போன தம் மக்களின் புகைப்படங்களைக் கழுத்தில் தொங்கவிட்டபடி நடந்தனர். 1977 ஏப்ரல் 30 இல் தொடங்கிய இந்த அறப்போர் தாய்மையை அரங்கேற்றியது; மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகத் தம் கண்டனத்தை வெளிப்படுத்தியது.இதைக் குறித்த விரிவான கட்டுரையை மொழிபெயர்த்து `கட்டியம்' இதழில் வெளியிட்டேன். ( இதழ் 2:2002)

       சமீப காலங்களில் பெல்கிரேட் நகரில் செயல்படும் DAH அரங்கக்குழு செர்பிய - பாஸ்னிய நிலைமைகளை உலகுக்கு அறவிக்கவும் நடைப் பிணங்களாய் உலவும் மக்கள் மத்தியில் உரையாடலைக் கிளப்பவும் இயங்கி வருகிறது.

இடிபாடுகளுக்கிடையே முகாம் வாழ்வே நிரந்தரமாகி வரும் ஜெனின் முகாமில் விடுதலை அரங்கக்குழு (Freedom Theatre Group) இயங்கி வருகிறது. இன்னும் உலகெங்கிலும் உயிர்ப்புடன் இருப்பதைத் தமக்குத் தாமே உணரவும் உலகுக்கு உணர்த்தவும் அரங்கச் செயல்பாடுகள் தொழிற்பட்டு வருகின்றன. கற்பனைக்கு எட்டாத வேகத்தில் கணினி செயல்படும் காலத்தில், இரத்தமும் சதையுமாக மனிதர்களை நேரில் காண வைக்கும் ஓரே சாதனமாக இன்று அரங்கம் மட்டுமே உள்ளது. எனவேதான் வன்முறை மலிந்த சூழலில் சிவில் சமூக இருப்பின் சாட்சியமாக அரங்கம் செயல்பட வேண்டிய கடமை உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில், அரங்கம் அரசியல் ஊடகமாகச் செயல்பட்ட - செயல்பட்டுவரும் - விதத்தைச் சுருக்கமாக அறிந்து கொள்வது ஓஜஸ் அளிக்கை செய்யும் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் குறித்த ‘லே மஷாலே’ (தீப்பந்தம் ஏந்திய பெண்கள்) நாடகம் குறித்த விவாதத்திற்கு அவசியமாகும்.

உலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழும் சாவித்திரி கண்ணைலால் தனக்கு மேடை தரும் வெளி குறித்து இவ்வாறு குறிப்படுகிறார்.

“எத்தனையோ சோகங்களுக்கு இடையிலும் நான் நடிப்பில் தஞ்சமடைந்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பூட்டுகிறது. எனது மூத்த மகன் அவனது 18 வயதில் இறந்தான். என்னால் வாய்விட்டு அழமுடியவில்லை. எனது துயரம், வலி, வேதனை எல்லாம் என் நடிப்பில் சேர்ந்தது. நடிப்புதான் எனது முழு வாழ்வாக இருந்துள்ளது. அதுதான் எனக்கு வலிமை தந்துள்ளது. எங்கள் அண்டைப்பகுதியில் சிக்கல் எழுந்தால், நான் முன் நிற்பேன். மகிழ்ச்சியான தருணங்களில் போகிறேனோ இல்லையோ, சிக்கலான சமயங்களில் பின் வாங்கமாட்டேன்; மெய்ரா பெய்பீக்கள் (தீப்பந்தம் ஏந்திய மணிப்பூர் பெண்கள்) அழைக்கும்போது உடன் செல்வேன்.” (STQ 14/15, 1997, 60-61)

1978இல் மணிப்பூரின் பெண்கள் சந்தையில் பங்கேற்கும் பெண்களைக் கொண்டு ‘நுபிலா’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடகத்தைக் கண்ணைலால் மேடையேற்றினார். அசாம் ராணுவ முகாமிற்கு அருகில் இருந்த பள்ளி வளாகத்தில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது.

1984 இல் டெல்லியில் அரங்கேற இருந்த ரதன் தீயம் அவர்களின் ‘சக்கர வியூகம்’ இந்திராகாந்தி படுகொலை, அதைத் தொடர்ந்த மதக் கலவரங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது ஒரு வரலாற்று விபத்துதான்! கண்ணைலால் மஹாஸ்வதாதேவியின் திரௌபதி கதையை அடிப்படையாக வைத்து எழுபதுகளின் நக்ஸல் பாரி இயக்கம் இராணுவ வேட்டையை எதிர்கொண்ட தன்மையையும், மனோரமா என்ற மணிப்புரிப் பெண் இராணுவத்தால் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக மெய்ரா பெய்பீக்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் இணை நிகழ்வுகளாகச் சித்திரித்தார். சாவித்திரி இக்காட்சியில் தோன்றிய தன்மை குறித்து லோகேந்திர ஆரம்பம் போன்ற முன்னணி அரங்க விமரிசகர்கள் ஆற்றிய எதிர்வினை, பெண் உடலின் அரசியல் குறித்து ஆண் மனதில் நீங்காது நிறைந்துள்ள மனத் தயக்கத்தைக் காட்டியது.

சொயெம் லோnந்திரஜித் என்ற அரங்கவியலாளர் கூறுவது போல் வடகிழக்கு மாநிலங்களில் “கடந்த காலம் - ஒரு கனம்; எதிர்காலம் - ஒரு தொடுவானம்; நிகழ்காலம் - ஒரு சவம். அச்சத்திலிருந்து மீள்வது ஒரு கனவுதான்; நம்பிக்கை ஒரு துளியும் இல்லை” (அபர்ணா தார்வாட்கர், 2006). இந்த அரசியலைப் பூடகமாக அரூபமாக விளக்க முனையும்போது அது காட்சிப் பெட்டகங்களாகி விடுகின்றன. ரதன் தீயம் போன்றோரின் நாடக அளிக்கைகள் உலகப் பொதுமையான உணர்வுகளை ஊட்டக்கூடிய காட்சிகளைப் பிரம்மிக்கும் வகையில் காட்டும் அதே நேரத்தில், அரசியலை மழுங்கடிக்கும் அபாயம் இருப்பதை விமரிசகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். சமீபத்திய தேசீய நாடகப் பள்ளியின் விழாவில் ஹெயிஸ்னம் தோம்பாகன்னைலால் இயக்கத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகம் அலங்காரப் புனைவுகளை மறுதலித்த மேடையாக்கமாக, வலுவான அரசியல் அரங்கமாக மேடையேறியது.

இந்திய அரங்கச் சூழலில் பெரும் இடத்தை வகிக்கும் மணிப்புரி அரங்கத்தில் பெண் இருப்பு தொடர்பாக விவாதத்தை எழுப்புவது அவசியம் ஆகிறது. இதைக் குறித்து அஞ்சும் கத்யால் குறிப்பிட்டது போல, “மணிப்பூர் வரலாற்றில் பெண்களின் இடையீடுகள் வலுவானவை. அவற்றைப் புனைவாக்கம் செய்தால், அதீதமாகிவிடக் கூடிய ஆபத்து உண்டு. அப்பெண்களின் அன்றாட வாழ்வின் துயரங்கள் அதில் இடம் பெறாது........ பல்வேறு குழுக்களின் அரங்க முயற்சிகளில், பெண் ஒரு தொன்மமாக, கதாநாயகத்தன்மையோடு, குறியீடாக இடம்பெறுவது காணப்படுகிறது. ஆனால் முப்பரிமாணம் கொண்ட பெண்ணின் வாழ் நிலை மேலெழும்புவதில்லை” (STQ, 1997,:12)

மேல் விவரித்த பின்னணியில் ஓஜஸ் நிகழ்த்தும் ‘லெ மஷாலே’ நாடகத்தைக் குறித்த பதிவை முன்வைக்க விரும்புகிறேன். கேரளத்தைச் சேர்த்த சிவிக் சந்திரன், சாரா ஜோஸஃப் ஆகிய படைப்பாளிகள் முன் முயற்சியில் உருவாக்கப்பட்டது இந்நாடகம். அசாம் சிறப்பு இராணுவச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் பத்தாண்டுகளாக உண்ணா நோன்பு இருந்து வரும் இரோம் ஷர்மிலா சானுவின் போராட்டத்தைக் குறித்து நாடெங்கும் எடுத்துச் சொல்லும் நாடகம் இது. முதலில் மலையாளத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகம் கேரள எல்லையைக் கடந்த பின், பிற மாநிலங் களில் நிகழ்த்தப்படுவதற்கு ஏதுவாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. அதற்கு முகம் கொடுத்து, இப்பயணத்தில் ஈடுபட முன்வந்தார் ஓஜஸ்.

மகாராஷ்டிர மாநிலத்தில், புனா நகரைச் சேர்ந்த காந்தியவாதிகளான பெற்றோருக்கு மகளாகப் பிறந்த ஓஜஸ் அரங்கத்தில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்கிறார். நடனம் பயின்ற இவருக்கு அரங்கம் லாகவமாகக் கைவருகிறது. முழுமையான அரசியல் அரங்கத்தில், முழு மூச்சாக ஈடுபட்டது இதுவே முதல்முறை. முதுகலைக் கல்வி முடித்துப் பணிக்கான முனைப்பில் இருந்த சூழலில், ஓஜஸ் வாழ்வில் நேர்ந்த திருப்புமுனையாக இந்நாடகம் அமைந்தது. பத்தடிக்கு ஒரு சோதனைச் சாவடியும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும் சாலைகளும் நிரம்பிய பகுதியில் வசிக்கும் மக்களது வாழ்வை வெளியுலகில் எடுத்துச் சொல்வதற்கான வலுவானதொரு ஊடகமாக இவ்வரங்கம் மாறியது.

வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியப் பகுதிக்குமான முரண்பாடான உறவைக் காட்டும் வகையில் தொடங்கும் நாடகம், இரோம் ஷர்மிலாவின் சுயக் கூற்றாகத் தொடர்கிறது. மணிப்பூரின் தலைநகரான இம்ஃபால் செல்வதற்கான இருப்புப்பாதை வசதிகள் கிடையாது; சாலைகளோ குண்டும் குழியுமானவை. மின் உற்பத்திப் பெருக்கத்திற்காக அணைக்கட்டுகள் கட்டத் திட்டமிட்டுள்ள இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மணிப்பூருக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்தப் புரிதலோடு மணிப்பூரின் அன்றாட வாழ்முறை, பெண்களே நடத்தும் இமா சந்தை, ஒன்றாகப் பங்கேற்கும் படகுப் போட்டி, கலைவடிவங்களான ராஸ்லீலா, தாங்தா என இவ்வர்ணனை விரிகிறது. பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களில் சொல்லித் தரப்படும் வரலாற்றில் மணிப்பூருக்கு இடமில்லாது இருத்தலை உணரும் கணம்; இந்தியத் தேசிய கீதம் வரையறுக்கும் எல்லைப் பகுதிகளில் ஒப்புக்குக்கூட வடகிழக்கு இடம் பெறாமை குறித்த புரிதல் ஆகியவற்றை விளக்கும் பகுதிகள் எள்ளல் மிக்க நகைப்போடு வெளிப்படுகின்றன. பழகிப் போன வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், மாலோம் நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ஆகியவை மனதை அழுத்த அவற்றுக்கெதிராக இரோம் ஷர்மிலா எடுத்த முடிவுதான் உண்ணா நோன்பு.

பலர் பரிகசித்தனர்; பலனற்றது என்றனர். ஆனால் இரண்டே நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார். பெற்ற தாயைக் கண்டால் உறுதி தளரக்கூடும் என்ற அச்சம் காரணமாக இன்று வரை தாயைக் காணாமல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் இரோம் ஷர்மிலா. சிறையில் அவர் நினைவுகளை ஆக்கிரமிப்பது மணிப்பூரின் வாய்மொழிக் கதைகள். ஒன்பது சூரியன் தொடர்ந்து ஒளி வீசியபடி இருந்ததால் இரவே இல்லாமல் தவித்த மணிப்புரி மக்களுக்கு, “காதலுக்கான, அந்தரங்கத்துக்கான” இரவைத் தந்தது ஒரு பெண். அவள் வில்லெடுத்து எட்டு சூரியன்களை வீழ்த்தினாள். இறுதிச் சூரியன் தப்பி ஓடி விட்டார். ஆனால், இரவு, இருள் சூழ்ந்த கருப்புக் காலமாக அமையும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை.

நெல் சாகுபடி பற்றி அறியாது இருந்த மக்களுக்கு அதனைச் சொல்லித் தந்ததும் ஒரு பெண்தான். முதலில் ஒரு கிராமத்திற்குச் சென்று, ஒரு மாலையில் பயிரிட்டு, அறுவடை செய்தாள். பிறகு விடைபெற்று அடுத்த கிராமத்திற்குச் சென்றாள். அவ்வாறே அனைவருக்கும் நெல் சாகுபடியைக் கற்றுக் கொடுத்துவிட்டுக் காற்றில் கரைந்து ஒரு நெற் கதிரானாள்!

இக்கதைகளுக்கு இடையே காந்தி உலவுகிறார். சடங்கு பூர்வமாக அக்டோபர் 2 அன்று விடுதலை செய்யப்பட்டபோது டெல்லி சென்து தனது போராட்டத்திற்கு ஆதரவு தேட முயன்ற இரோம் ஷர்மிலா சிறைபடுத்தப்பட்டு AIIMS மருத்துவமனையில் வைக்கப்பட்டார். தன்னிடமிருக்கும் உடலைப் பணயம் வைத்துப் போரிடும் அவரைத் ‘தற்கொலை முயற்சி’ என்ற பெயரில் சிறைபடுத்துகிறது இந்திய அரசு. மனோரமாவுக்கு நிகழ்ந்த வன்கொடுமைக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு நிர்வாணமாய்ப் போரிட்ட மெய்ரா பெய்பீக்களின் ஆன்ம பலத்தைத் துணைகொண்டு, இரோம் ஷர்மிலா சானுவின் பதினோராம் ஆண்டு உண்ணாவிரதம் தொடர்கிறது. அவரது வாக்குமூலங்களாக அவரது கவிதைகள் திகழ்கின்றன. அவை இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலவுகின்றன.

சுயக்கூற்று, இசைத்துணுக்குகள், ஒளிப்படத் தொகுப்புகள் ஆகியவற்றோடு தனிநபர் நிகழ்வாக ‘லெ மஷாலே’ நிகழ்த்தப்படுகிறது. இராணுவ உடை ஆக்கிரமிப்பு சக்தியாக மேடையின் வலப்புறம்; மத்தியில் ஒரு பெஞ்ச்; இடப்புறம் மேடைப் பேச்சுக்கான ஒலிபெருக்கிக் கூடு வெளிப்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஒளிப்படங்களைக் காட்டும் திரை வீராவேசப் பேச்சுகளை உதிர்க்கும். ஒலிபெருக்கிக் கூடு சிறைச்சாலையாகிறது. இராணுவ உடைக்குப் பின் உள்ள காலணிகள் மற்றும் இராணுவ வன்முறைக் குறியீடு; மத்தியில் உள்ள பெஞ்ச் பாட்டியின் திண்ணை; மருத்துவமனைப் படுக்கை காலித் தண்ணீர் பாட்டில் நசுங்கும் ஒலி பாலியல் வன்முறையின் நாராசம்... என்று ஒவ்வொரு மேடைப் பொருளும் வேறொன்றாய்/ பிறிதொன்றாய் உருக் கொள்கிறது. தேசீய கீதத்தின் இசை மட்டும் முதலில் வர பிறகு சொற்களுக்கான நடன முத்திரைகள் வர பிறகு இதில் மணிப்புரி மற்றும் வடகிழக்கு எங்கே என்ற வினா முகத்தில் அறைகிறது.

உணர்வுத் தளத்தில் பல்வேறு ‘ரசங்’களைத் தூண்டும் அர்த்தமுள்ள இடைவெளிகள் நாற்பத்தைந்து நிமிட அளிக்கைக்கான பாடமாகின்றன. ஒரு இசையமைப்புக்கான வரைபடம் போல் ஏற்ற இறக்கங்களோடு அளிக்கை நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.

எண்பது அளிக்கைகளைக் கடந்த இந்நாடகம் இந்தியாவில் சுமார் 12 மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. எந்தவிதச் சரிகை வேலைப்பாடும் இல்லாமல், அம்மணமாய் மனிதத்தைக் கோருகிறது. எந்தவித மேடையிலும் சிறு மாற்றங்களோடு நிகழ்த்தக்கூடிய, நெகிழ்ந்த தன்மையோடு இந்நாடகம் பயணிக்கிறது. கல்கத்தாவில் சிறு வியாபாரிகள் சங்கக் கூட்டம் ஒன்றில், வட்டமேசை மீது இந்நாடகத்தை நிகழ்த்தி ஒவ்வொருவர் கரத்திலும் மெழுகுவர்த்தியைக் கொடுத்த அனுபவத்தை ஓஜஸ் குறிப்பிடுகிறார். மஹாஸ்வதாதேவி முன்னிலையில் நிகழ்த்திய போது, கண் பார்த்து `காத்திரமாக உள்ளது' என்றதைப் பெருமிதத்தோடு நினைவு கூர்கிறார்.

மணிப்பூரில் அவரது அனுபவங்கள் தனித்து விவரிக்கப்பட வேண்டியவை. இம்ஃபால் நகரில் நாடகம் பார்க்க வந்த குழந்தை இராணுவ உடையைப் பார்த்து அஞ்சியது அவரது மனதில் பதிந்த படிமமாகும். இரோம் ஷர்மிலா சானுவின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கடந்த இரு ஆண்டுகளாகப் பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருப்பதை நேரில் கண்டு வியந்துள்ளார். ஷர்மிலாவின் உண்ணாவிரதம் பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எந்தவிதப் பதாகையோ, அறிவிப்போ இன்றிப் பெண்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டார். நவம்பர் 5, 2010 இல் அந்நாளன்று செய்யப்பட்டு இருந்த அத்தனை ஏற்பாடுகளையும் பதினைந்து நிமிடம் முன்பு இராணுவம் ரத்து செய்தது. இரோம் ஷர்மிலா சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு முன் உள்ள கிட்டத்தட்ட அரை கி.மீ தொலைவு சாலையின் இருமருங்கும் பத்து நிமிடங்களில் மெழுகுவர்த்திகளால் நிறைக்கப்பட்டது. சிறைச் சாலையில் அவரது அறை வரைக்குமான வராந்தாவில் மெழுகுவர்த்திகள். காவலர் மனங்கசிந்து அவரது அறைக்கதவைத் திறந்த சில நொடிகளில் பொங்கிய உணர்வுப் பெருக்கைக் கண்களில் தாங்கியபடி அவர் தனது கையால் வழங்கிய மெழுகுவர்த்தியை ஓஜஸ் உள்ளிட்ட கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர். அந்தக் கணம் தீப்பந்தமாய் இன்னும் தொடர்கிறது.

மெய்தீ இனப் பெண்பூசாரித் தம் தெய்வத்திற்குச் செய்யும் சடங்கில் பாடும் பாடலை விஜயலட்சுமி ப்ராரா தனது கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார். அப்பாடல் ஓஜஸ் என்ற அரங்கக் கலைஞரின் ஊடாக நம்முள் எதிரொலிக்கிறது:

“கையில் மணி ஏந்தி வட்டமிட்டு வருகிறேன்,

       உன் சேவகி நான்.

       நீ சொல்லும் குறியை ஆறாகப் பரப்புபவள் நான்.

       சொற்களாம் தீயில் குளித்தவள் நான்.

       தாய் தெய்வத்தின் வாரிசு நானே.

       வேறெவரும் அல்ல

       திறன் மிகப் பயின்றவள் நான்.

மெய்பீக்கு - எனக்கு - இன்னும் விரிச்சி கிடைக்கவில்லை. புத்தாடைபோல் குறி தருவாய். பழங்கத்தலும், வதங்கிய பூவும் வேண்டாம். உன் கூந்தல் மலர்கள் போல் புதுக்குறிகள் தருவாய். தாயின் சொற்கள் விண்ணுலகம் ஏகக் கூடாது

மண்ணில் விழ வேண்டும்.

       தாயின் மகளாகிய நான் - உனது

       விரிச்சியை விரித்துரைப்பேன்.”

இந்தியாவில், அரசியல் அரங்கத்தின் வழிகாட்டியாக இப்டாவைக் கூறுகிறோம். நெருக்கடிநிலைக் காலத்தில் சமுதாயக் குழு வழிகாட்டியாகத் திகழ்ந்தது. சனநாயக அரசியலை உரக்கப் பேசியதாலேயே வீதியில் மடிந்தான் சப்தர் ஹஷ்மி. கோலாகலமான தேர்தல் திருவிழாக்களும், இராணுவ வேட்டையும் ஒருங்கே நிலவும் இந்திய அரசியல் சூழலில் மக்களைச் சொரணையுள்ளவர்களாக உணர வைக்கும் மனசாட்சிகளாக அரங்கம் செயல்பட வேண்டும். அரங்கத்தின் புதுவீச்சைக் காட்டும் ஓஜஸ் இளந்தலை முறை காட்டும் நம்பிக்கையின் குறியீடாகத் திகழ்கிறார். அவரது பயணத்தின் அடியொற்றிப் பல தடங்கள் தொடரட்டும்.