இந்தியா சமயச்சார்பற்றநாடு என்று பீற்றிக்கொள்பவர்கள், அந்நிய மண்ணில் ஹூசைன் உயிரை விட்டதற்கான காரணத்தைச் சொல்லவேண்டும். ஹூசைன் அடிப்படையில் தீவிரமான அரசியல் பார்வை எதனையும் கொண்டவரல்ல. கலைஞர்களுக்கேயுரிய மரபில், தான் கண்டுணர்ந்தவற்றைத் தமது கோடுகளிலும் வண்ணங்களிலும் வெளிப்படுத்தினார். கடவுள் உருவங்கள் என்பவை அனைத்தும் கற்பனையாக உருவாக்கப்பட்டவைதானே, இன்றைய ஆதிக்கக் கடவுளர்கள் உருவம் அனைத்தும் ரவிவர்மா தானே உருவாக்கினார். அதற்கு ஏதேனும் முன்மாதிரி உண்டா? கதைகளை உருவங்களாக்கி அதற்குள் வண்ணத்தை ஏற்றிவிட்டார் ரவிவர்மா. அவை பெரும்பகுதி பார்சி தியேட்டர் ஒப்பனைகள் மற்றும் மராட்டிய நாயக்கர் கால உருவங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. நாட்டார் சாமிகளுக்குரிய உருவங்களை மக்களே மண்சுதைகள் வழி உருவாக்கிவிட்டனர். ரவிவர்மா அவர்களுக்குத் தேவைப்படவில்லை.

ரவிவர்மா உருவாக்கிய கோடுகளைத் தமது கற்பனையில் வேறுமாதிரியாகப் படைத்தார் ஹூசைன். தாங்கள் வழிபடும் கோயில்களில் நிர்வாணக்காட்சிகளை மனம் குளிர, உடலில் சூடேறக் கண்டுகளிக்கும் சமயவெறியர்களுக்கு, ஹூசைன் வரைந்த நிர்வாணச்சாமிகள் குறித்து மட்டும் ஏன் கோபம் வரவேண்டும். ஹூசைன் பிறப்பால் ஓர் இஸ்லாமியர் என்பதும் இந்துத்துவ வெறியர்களுக்கு வெறி ஏற்படக் காரணமாகும். இதனைச் சமயக்காழ்ப்பாகக் கட்டியமைத்தார்கள். மநுநீதியை நடைமுறைப் படுத்தும் நீதிமன்றங்கள் இவரது சொத்தைப் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பித்தன. கைது ஆணைகளைப் பிறப்பித்தன. 1992இல் பாபர் மசூதியை இடித்து, 2011இல் இடித்ததைச் சட்டப்பூர்வமாக்கினார்கள்; இந்தச் செயல்பாட்டின் இன்னொரு வடிவம்தான் 2006இல் ஹூசைன் அவர்களை நாட்டைவிட்டுத் துரத்தியது; மதவெறியர்களுக்கு எதிராக இந்திய அரசு கைகட்டி நின்றது.

அரசியல் வயப்பட்ட பேச்சுக்கு ஆளான இக்கலைஞனின் ஆக்கங்கள் உலக அளவில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டவை. இவரது கோடுகள் அழிந்து வண்ணக் கலவைகளே ஓவியங்களாக வடிவம்பெற்றன. எந்த ஒரு குறிப்பிட்ட கோணத்திற்குள்ளும் அடக்கிவிடமுடியாத தன்மையை இவரது ஆக்கங்கள் கொண்டிருந்தன. ஹூசைன் ஆக்கங்கள் மனதில் படியும் போது ஒரு வகையான உருவகமாக அமைவதில்லை. உருவகநிலை கடந்த பதிவுகள் அவை.

இவரால் உருவாக்கப்பட்ட பெண்உடல் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்வாங்கியது. அவை பெண்ணைச் சதைப்பிண்டமாகப் பார்க்கும் தன்மையை உடைத்தது. சுமார் பத்தாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்தவர் ஹூசைன். இவை அனைத்திலும் இந்திய மண்ணின் பல்வேறு தன்மைகளை மூலமாகக் கொண்டவை. கிரேக்கத்தொன்மங்கள், உலகம் முழுவதும் உள்ள ஆக்கங்களுக்கு மூலமாக அமைவதைப் போல், இந்தியத்தொன்மங்கள் இவரது படைப்பின் மூலம் தொன்மங்களையும் நாட்டார் மரபுகளையும் தமது வண்ணங்களில் கொண்டு வந்தார். இந்துத்துவாவைக் கட்டிக்காக்கும் இந்தியக் காவியங்களாக மகாபாரதம், இராமாயணம் ஆகியவை இவரது கோடுகளுக்கும் வண்ணங்களுக்கும் மூலமாக அமைந்தவை. வெளிநாடுகளில் இருந்துகொண்டு 100 இராமாயண ஓவியங்களை இவர் வரைந்தார்.

பலகோடிகள் இவரது ஓவியங்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் இவரது நிர்வாண ஆக்கங்களுக்காக இவரது தலைக்கு 51 கோடி, வெட்டப்பட்ட கைகளுக்கு 11 இலட்சம், தோண்டப்பட்ட கண்களுக்கு 1கிலோ தங்கம் என இந்து வெறியர்கள் அறிவித்தனர். கோடிக்கணக்கில் அவரது ஓவியங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை அவர் சேமிக்கவில்லை. தனது பெயரில் எந்த ஒரு நிறுவனத்தையும் (trust) அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. சொத்தின் மீது பிடிப்பற்ற கலைஞனாக வாழ்ந்தார். நீண்டநெடுங்காலம் (97 ஆண்டுகள்) வாழும் வாய்ப்பைப் பெற்ற ஹூசைன், அடிப்படையில் காட்சி வடிவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கலைஞர். உணர்வுத் தளங்கள் வெளிப்படும் வண்ணங்களிலும் கோணங்களிலும் அக்கறை செலுத்தியவர். இதனால் பிற்காலத்தில் திரைப்படத்துறையிலும் ஈடுபட்டார். தமது ஓவியங்கள் சார்ந்து அவர் உருவாக்கிய திரைப்படங்கள் இந்தியத் திரைப்பட வரலாற்றில் தனித்தவை. தொடக்ககாலத்தில் திரைப்படத்திற்கான ‘விளம்பரப் பலகைகள்’ எழுதுபவராகவே ஹூசைன் உருவானார். அதனால் இறுதிக்காலங்களில் தமது ஓவிய மொழியைத் திரைப்பட வடிவத்தில் தந்தார். இந்த வகையான மாற்றம் இவரது தனித்தன்மையைப் புரிந்துகொள்ள உதவும். ஹூசைன் பற்றிய நினைவு என்பது கீழ்க்காணும் நினைவுகளை நம் உள்ளங்களில் என்றும் பசுமையாகக் கொண்டு வரும்.

-      சமயச் சார்பற்ற நாடு எனும் பொய்யைப் பாரதமாதாவை நிர்வாணமாக்கியதன் மூலம் உறுதிப்படுத்தியவன்.

-      ரவிவர்மா உருவங்களை உடைத்து நவீன ரவிவர்மாவாக உருவான கலைஞன்.

-      அதிகாரத்துக்கு எதிரான போரை, சத்தமின்றி தனது தூரிகையால் நடைமுறைப்படுத்தியவன்.

-      நாடுகடத்தப்பட்டு பிக்காஸோ எனும் கலைஞன் இறந்ததைப் போல், அந்நிய மண்ணில் உயிர்துறக்கும் துர்பாக்கியம் பெற்றவன்.

-      இந்தியாவில் படைப்புச் சுதந்திரம் உண்டு எனும் பொய்மையைத் தோலுரிக்க வழிகாட்டியவன்.