(உலகத்தில் உருவான அறிவொளி மரபின் வரலாறு இக்கட்டுரையின் பொருண்மையாக அமைகிறது. அவ்வரலாற்றில் தமிழகத்தின் பங்கை இக்கட்டுரை அடையாளப்படுத்து கிறது. ‘சென்னை இலௌகிக சங்கம்’ என்னும் அமைப்பின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவும். கடந்த அரை நூற்றாண்டாக (1960-2013) தமிழ்ச் சமூகத்திற்குப் புதிய புதிய அறிவு வளங்களை வழங்கும் அரிதினும் அரிதானப் பணியை எஸ்.வி.ஆர். ஆற்றி வருகிறார். அரிய தரவுகள் மூலம் உலகப் பகுத்தறிவு வரலாற்றை எஸ்.வி.ஆர். உரையாடலுக்குப்படுத்தியுள்ளார்.)

அறிவொளி (Enlightenment) என்பது மானுடச் சிந்தனையில் ஏற்பட்ட முன்னுவமை இல்லாத கொந்தளிப்பின் விளைவு. பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படத் தொடங் கிய அந்தக் கொந்தளிப்பு, அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களுடன், ஜெர்மனியைச் சேர்ந்த கெப்ளர் (1571-1630), இத்தாலியைச் சேர்ந்த ஜியார்டினோ ப்ரூனோ (1548-1600), கலிலியோ (1564-1642) ஆகியோரின் அறிவியல் கோட்பாடுகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது.

இந்த நால்வருக்கும் முன்னோடியாக இருந்தவர் போலந்து நாட்டைச் சேர்ந்த கோபர்னிகஸ் (1473-1543). இந்த நால்வரும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தைச் சேர்ந்த வர்கள்.மேற்சொன்ன நான்கு அறிவியலாளார்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள்,பேரண்டத்தின் மையம் நமது பூவுலகம் என்றும் அது அசையாமல் ஓரிடத்திலேயே இருப்பதாகவும் கருதிய மத்தியகால ஐரோப்பியக் கண்ணோட்டத்தை தகர்த்தெறிந்த துடன் ஆற்றல் மிக்க புதிய தத்துவ அமைப்புகளையும் தோற்று வித்தன. அதன் காரணமாக மனிதன், கடவுள்,பேரண்டம் ஆகியன குறித்த மரபான, இறையியல் சார்ந்த விளக்கங்களுக்கும் அவை பற்றிய மதச்சார்பற்ற, உலகியல் சார்ந்த, இயந்திரவியல் விளக்கங் களுக்குமிடையே பெரும் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது.

மேற்சொன்ன அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் ஐரோப் பியத் தத்துவாதிகளின் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. அந்தத் தத்துவவாதிகளில் முதன்மையானவராக, செல்வாக்கு மிக்கவராக இருந்தவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ரெனெ தெகார்தெ (Rene Descartes [1596-1650]). ஆனால், தெகார்தெவும் அவரது சீடர்களும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதிக்கத்தையும் இறையியலின் செல்வாக்கையும் தகர்ப்பதையோ குறைப்பதையோ விரும்பவில்லை, அதற்கான துணிச்சல் அவர்களிடம் இல்லை.

அதற்கு அன்று பிரான்ஸில் இருந்த அரசியல், பொருளாதார நிலைமைகளும் காரணமாக இருந்தன. அதாவது நிலப்பிரபுத்துவ வரம்பிலா முடியாட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் சமூகச் சக்திகள் அன்று வளர்ச்சியடைந்திருக்கவில்லை. ஆயினும், சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மரபான கருத்துகளுக்குப் புதிய தத்துவப் போக்குகள் சவாலாக விளங்கின.

ஐரோப்பாவில் எழுச்சி பெற்று வந்த பூர்ஷ்வா வர்க்கமும் பரந்துபட்ட வெகுமக்களும் நிலப்பிரபுத்துவத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் எதிராக நடத்தி வந்த போராட்டத்துடன் இணைந்து முதலாளியம் வளர்ச்சியடைந்தபோது சிந்தனை உலகில் ஏற்பட்ட முற்போக்கான சிந்தனைப் போக்கே அறிவொளி.

அறிவொளி இயக்கம் சர்வதேசத்தன்மை கொண்டதாக இருந் தது. அதைத் தனித்தனி நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றிய சிந்தனையாளர்களின் கருத்துகளின் தொகுப்பாகக் காணக்கூடாது.

1598இல் பிரெஞ்சு அரசன் நான்காம் ஹென்றி புரொடெஸ்டெண்ட் கிறிஸ்துவர்களுக்கு வழங்கிய உரிமைகளை 1685ஆம் ஆண்டில் 16ஆம் லூயி மன்னன் இரத்து செய்ததன் காரணமாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றில் புகலிடம் தேடிய பிரெஞ்சு புரொடெஸ்டெண்டுகள் (அவர்கள் ஹ்யூகோனாட்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர்) பிரான்சில் தோன்றிய முற்போக்கான கருத்துகளைத் தங்களுடன் கொண்டு சென்றனர்.

அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் அறிவு, நிரந்தர நீதி, சமத்துவம் என்பன போன்ற நெறிகளின் அடிப்படையில் சமூக உறவுகள் அனைத்தையும் புதிதாகக் கட்டமைப்பதில் பேரார்வம் கொண்டிருந்தனர். இந்த நெறிகள் யாவும் மனிதர் களுக்கு இயற்கையாவே அமைந்ததும் அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாதவையுமான உரிமைகளிலிருந்து தோன்றுபவை எனக் கூறினர். முற்போக்கான கருத்துகளையும் அறிவையும் பரப் புதல், அறவியல் அளவுகோல்களை மேம்படுத்துதல் ஆகியவை தான் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கான அடிப்படையான சாதனங்கள் எனக் கருதியவர்கள்.

இது ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவொளிச் சிந்தனை மரபுக்குப் பொதுவான அம்சமாக இருந்தபோதிலும், அந்தந்த நாட்டின் திட்டவட்டமான வரலாற்று வளர்ச்சிகளே சம்பந்தப்பட்ட சிந்தனையாளர்களிடையே இருந்த திட்டவட்ட மான வேறுபாடுகளை வடிவமைத்தன. இங்கிலாந்தில் அறிவொளிச் சிந்தனை, அந்த நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் பூர்ஷ்வாப் புரட்சி நடந்து முடிந்த பிறகு தோன்றியது. அங்கு பூர்ஷ்வா வர்க்கம், நிலவுடைமை மேற்குடியினருடன் (landed arsictocracy) சமரசம் செய்துகொண்டிருந்தது.

அந்தச் சூழலில் இங்கிலாந்து அறிவொளி இயக்கம் மிதவாதத்தன்மை கொண்ட தாகவும் அதன் குறிக்கோள்கள் மிகவும் வரம்புக்குட்பட்டவை யாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக,இங்கிலாந்து அறிவொளி இயக்கத்தின் தலையாய பிரதிநிதியான ஜான் லாக் ஒருபுறம் நீதியற்ற அரசைத் தூக்கியெறிவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்றார்; மறுபுறம் டச்சு மன்னன் ஆரஞ்சு வில்லியம் இங்கிலாந் தின் முடிமன்னனாக அரியணை ஏறுவதை ஒரு சமரச ஏற்பாடு என ஆதரித்தார்.

புலன் உணர்வுகள் மனத்தில் ஏற்படுத்தும் பதிவுகளே அறிவு என்றார். ஆனால், இறை நம்பிக்கையாளராகவும் இருந்தார். எனினும் அவரது கருத்துகளில் இருந்த முற்போக்கான அம்சங்கள் பிரெஞ்சு, அமெரிக்க அறிவொளிச் சிந்தனையாளர்கள் மீது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தின.

அந்தப் புதிய அறிவியல், தத்துவச் சிந்தனைகளைப் போலவே அவற்றுடன் இணைந்திருந்த அரசியல் கருத்துகளுக்கும் ஒரு சர்வதேசச் சூழல் இருந்தது. ஐரோப்பிய மக்களின் அரசியல் உணர்வில் இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போர் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியதோ அதே அளவுக்கு பிரான்ஸில் ஃப்ராண்டெவிலும் நேபிள்ஸில் (இன்றைய இத்தாலியின் ஒரு பகுதி) மாஸானியெல்லோவிலும் ஏற்பட்ட அரசியல் எழுச்சி களும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் தணிந்துபோயிருந்த புரட்சி அலை, மீண்டும் தலைதூக்கப் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆனால், பிரிட்டனில் நில வுடைமை மேற்குடியினர் வகித்த அரசியல் பாத்திரத்தை அடிப் படையாகக் கொண்டு எழுந்த அரசியல் எழுச்சிக்கு மாறாக, ஐரோப்பாவின் இதர பகுதிகளில் நகர்ப்புற, வர்த்தகக் கண்ணோட்டம் கொண்ட குடியரசுவாத அரசியல் எழுச்சி பெறத் தொடங்கியது. இந்தப் போக்குதான் பிரெஞ்சுப் புரட்சியில் வெளிப்பாடு கண்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,முற்போக்கான கருத்துகளடங்கிய நூல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி பிரான்சுக்குள் ஸ்பினோசாவின் நூல்கள் கடத்தி வரப்பட்டன.

 பிரான்சில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலப்பிரபுத்துவ முடிமன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்த பூர்ஷ்வாப் புரட்சி நடப்பதற்கு முன்பே அறிவொளி இயக்கம் தோன்றியிருந்தது. அந்தப் புரட்சிக்காக மக்களை சிந்தனாரீதியில் ஆயத்தப்படுத்து வதில் அறிவொளிச் சிந்தனையாளர்கள் தீர்மானகரமான பாத்திரம் வகித்தனர்.

வோல்தேர் (Francois Marie Arouet Voltaire [1694-1778]), மொந்தெஸ்க்யூ (Charles Louis de Secondat Montesquieu [1689-1755]) ஆகியோரை பிரெஞ்சு அறிவொளி இயக்கத்தின் தந்தையர் எனக் கூறலாம். பிரெஞ்சு நிலப்பிரபுத்துவம், முடியாட்சி ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஆன்மீகக் கோட்டையாக விளங்கிய கத்தோலிக்கத் திருச்சபைக்கும் பாதிரிகளுக்கும் அது காட்டிய போர்க்குணமிக்க எதிர்ப்புதான் அதன் சிறப்பம்சமாகும். பிரெஞ்சு அறிவொளி இயக்கத்தில் மதத்தை உறுதியாக எதிர்த்தவர்களில், வெளிப்படையான நாத்திக நிலைப்பாட்டை மேற்கொண்ட பொருள்முதல்வாதத் தத்துவவாதிகளான ல மெத்ரி(Julien Offroy de La Mettrie [1709-51]), திதரோ (Denis Diderot [1713-84]), ஹெல்விஷியஸ்(Claude-Adrian Helvetius [1715-71]), டி ஹால்பாஃக் (Paul-Henri Thiry d'Holbach [1723-1789]) ஆகியோர் முதன்மையானவர்கள்.

பிரெஞ்சு அறிவொளிச் சிந்தனை மரபைச் சேர்ந்த மற்றொரு மாபெரும் சிந்தனையாளர் கொண்டெர்செ (Marquis de 1743 -1794) கணிதவியலாளரும் அரசியல் அறிவியலாளரும் தத்துவ வாதியுமாவார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதாடியவர். அடிமை முறை ஒழிப்பையும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதையும் ஆதரித்தவர். கறுப்பின மக்களின் நண்பராக இருந்தவர்.

இயற்கை அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சி, மனித உரிமைகள் பெருகுவதற்கும் நீதியான சமுதாயம் அமைவதற்கும் வழிவகுக்கும் என்று கருதியவர். மனித விவகாரங்களில் கடவுளோ, மதமோ தலையிடுவதாக அவர் ஒருபோதும் கருதவில்லை.

ரூஸ்ஸோ(Jean-Jaques Rousseau [1712-78]) போன்ற இறை நம்பிக்கையாளர்களும் ரோமன் கத்தோலிக்கத்திற்கு விசுவாசமாக இருந்த எடியென் கொண்டில்லாக் (Etienne Bonnot de Condillac [1715-80]) போன்றவர்களும் அறிவொளி இயக்கத்தில் இருந்தனர்.

அமெரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான சுதந்திரப் போரில் (1773-1783) முன்னணிப் பாத்திரம் வகித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (Benjamin Franklin [1737-1809]), தாமஸ் பெய்ன் (Thomas Paine [ 1737-1809]), எல்லென் அல்லென் (Ellen Allen), தாமஸ் ஜெஃபர்ஸன்(Thomas Jeeferson [1743-1826]) முதலியோர் அறிவொளிச் சிந்தனை மரபைச் சேர்ந்தவர்களாவர். ‘அமெரிக்க விடுதலை அறிக்கை’ (American Declaration of Independence), ‘கடவுள்’ பற்றிப் பேசினாலும், அது மதவாதிகள் கூறிவந்த ‘கடவுள்’ அல்ல; அந்த அறிக்கையை எழுதியவர்கள் பொருள்முதல்வாதத் தத்துவத்தை ‘கடவுள்’ என்னும் கருத்தாக்கத்துடன் இணைத்துப் பேசினார்கள்.

ஜெர்மனி பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருந்ததை ஜெர்மானிய அறிவொளி இயக்கத்திலிருந்த ஒன்றுக்கொன்று முரண்பட்ட போக்குகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கருத்து முதல்வாதச் சாய்வு கொண்ட மிதவாதப் போக்கு ஒருபுறமும், பொருள்முதல்வாத சாய்வு கொண்டதும் ஜனநாயகத்தன்மை மிக்கதுமான போக்கு மறுபுறமும் இருந்தன. இரண்டாவது போக்கு, நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கும் முடியாட்சிக்கும் திருச் சபைக்கும் எதிரான பரந்துபட்ட வெகுமக்களின் போராட்டத் துடன் இணைந்திருந்தது.

அந்தப் போக்கின் முக்கியப் பிரதிநிதி களாக இருந்த லெஸ்ஸிங் (Gotthold Ephraim Lessing [1729-81]), ஹெர்டர் (Johann Gottfried Herder [1744-1803])போன்றோர் அனைத்து மனிதர்களும்-அவர்கள் சமுதாயத்தில் என்ன அந்தஸ்தைக் கொண்டிருந்தபோதிலும் - சரிசமமானவர்களே என்று கூறினர்; மதப் பகைமைகளையும் மத வெறியையும் கடுமை யாகக் கண்டனம் செய்தனர்.

ஐரோப்பிய இயற்கைத் தத்துவவாதிகள் (natural philosophers) ஐரோப்பியச் சிந்தனை மரபில் அறிவியலும் தத்துவமும் இரு நூற்றாண்டுகளுக்கு முன் வரை தனித்தனித் துறைகளாகக் கருதப் படவில்லை. அறிவியலாளர்களே தத்துவவாதிகளாகவும் இருந்தனர். (அரிஸ்டாட்டில், பிளேட்டோ காலம் தொட்டு கோபர்னிகஸ், கலிலியோ, தெகார்தே, ஸ்பினோஸா, லீப்னிஸ், பேக்கன், நியூட்டன், காண்ட் முதலானோர் வரை இதைக் காணலாம்) உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொண்டு, பல்வேறு சிந்தனையாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்ததுடன் தங்களை உலகளாவிய சிந்தனை மரபின் பகுதியாகவும் கருதினர்.

புதிய அறிவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை முறைப்படுத்திய ஆங்கிலேயச் சிந்தனையாளர் ஃபிரான்ஸிஸ் பேக்கன் (Francis Bacon::1561-1626) கூறினார்: “மனிதன் இயற்கைக்குத் துணைபுரிவனும் அதன் உட்பொருளை வெளிப் படுத்துபவனும் ஆவான். இயற்கையின் நியதிகளை அவன் புலன் களால் அறிந்து அதைக் கூர்ந்து கவனித்து அதன் மீது செயல்படுகிற அளவுக்குத்தான் அவனால் செயல்படவும் புரிந்துகொள்ள முடியும். அதற்கு மேல் அவனுக்கு அறிவோ, ஆற்றலோ எதும் இல்லை” (Novum Orgnaum 1.1., மேற்கோளிடப்பட்ட நூல்: ஜார்ஜ்  தாம்ஸன், மனித சாரம்), விடியல் பதிப்பகம், கோவை, ப.128-129). பேக்கன் வளர்த்தெடுத்த பொருள்முதல்வாதச் சிந்தனையின் தத்துவ, அறிவியல் முக்கியத்துவத்தை மார்க்ஸ் எங்கெல்ஸ் தங்களது ‘புனிதக் குடும்பம்’ (Marx Engels, The Holy Family, the Critiqaue of Critical Criticism Against Bruno Bauer, and Company, என்னும் நூலில் வெகுவாகப் பாராட்டினர் (ஜார்ஜ்  தாம்ஸன், மேலது, ப.129-130).

தத்துவத்திற்கான முன்னேற்றப் பாதையை பேக்கன் சுட்டிக் காட்டிய போதிலும் அவரைப் பின்பற்றுவோர் யாருமில்லாது போய்விட்டது. கத்தோலிக்க, புரொடெஸ்டெண்ட் சமய நிறுவனங்களின் செல்வாக்கின் காரணமாக,மத்திய காலத்திற்குப் பிறகும்கூட தத்துவ, அறிவியல் சிந்தனைகளில் இயங்காவியலே (metaphysical outlook) மேலாதிக்கம் செலுத்திவந்தது.

தத்துவத் தில் மனம் (சிந்தனை) வேறு, பொருள் வேறு என்று பார்க்கப்பட்ட தால் ஒருபுறம் அகநிலைக் கருத்துமுதல்வாதமும் மறுபுறம் இயக்க வியல் அல்லது எந்திரவியல் பொருள்முதல்வாதமும் தோன்றின. அகநிலைக் கருத்துமுதல்வாதம் பொருளை மனமாக, கருத்தாகக் குறுக்கியது. இயக்கவியல் அல்லது எந்திரவியல் பொருள்முதல் வாதமோ சிந்தனையையுமே பொருளாகக் கருதியது. டெமொக்ரிடஸ், எபிகூரஸ் ஆகியோரை அடியற்றி ஐஸக் நியூட்டன்(Isac Newton [1642-1727]), எந்திரவியல் விதிகளின் ஆளுகைக்குட்பட்ட பொருண்மைப் பேரண்டம் பற்றிய கோட் பாட்டை உருவாக்கியபோதிலும் அப்பேரண்டத்தையும் உள்ளடக் கக்கூடியதும் அதைவிடப் பெரியதுமான யதார்த்தம் ஒன்று இருக்கிறது என்றும் அங்கு கடவுள் ஆட்சி செய்கிறார் என்றும் கூறினார்.

உயிரியலில் அரிஸ்டாட்டிலை அடியற்றிச் சென்ற ஸ்வீடிஷ் அறிவியலாளர் கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus [1707-78]) விலங்குகளையும் தாவரங்களையும் வகைப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். எனினும் தாவரங்களும் விலங்குகளும் அவை தோன்றிய காலத்திலிருந்தே மாறாத, நிலை யான தன்மையிலேயே உள்ளன என்னும் அனுமானத்தின் அடிப் படையில்தான் அவரது வகைப்பாடு அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்திய அறிவியல் அறிஞர்கள், உலகத்தைத் தோன்றி, வளர்ந்து, மறைகிற உயிரோட்டமுள்ள இயக்கமாகக் காணாமல், வளர்ச்சியடையும் ஆற்றலற்ற ஒரு மூடிய எந்திரவியல் அமைப் பாகக் கருதினர். இவ்வகையில் அவர்கள் பண்டைக் கிரேக்கத் தத்துவவாதிகளிடமிருந்து வேறுபட்டிருந்தனர் என்பதை மார்க்ஸ் எங்கெல்ஸ் சுட்டிக் காட்டினர்.

ஆனால், டச்சுத் தத்துவவாதியும் அறிவியலாளருமான பெனெடிக்ட் ஸ்பினோஸாவின்(Benedict de Spinoza [1632-1677]) கருத்துகளோ மிகவும் புரட்சிகரமானவையாக இருந்தன. அறிவொளிச் சிந்தனை மரபில் டச்சுத் தத்துவவாதியான ஸ்பினோஸா மிக முக்கிய பாத்திரம் வகித்ததை அறிவொளி மரபு பற்றிய விரிவான நூலொன்றில் (A Revolution of the Mind) ஜொனதன் இஸ்ரேல் (Jonathan Israel) சுட்டிக் காட்டுகிறார். பிரெஞ்சுத் தத்துவவாதியான பியெர் பெய்ல் (Pierre Bayle [1647-1706]), ஸ்பினோஸாவின் எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார்.

ஸ்பினோஸாவின் கருத்துகளை இங்கிலாந்தின் அறிவொளிச் சிந்தனையாளர்களான ஜான் லாக், ஜான் டோலாண்ட் ஆகியோர் கற்றறிந்திருந்தனர். அதேபோல, இத்தாலியத் தத்துவாதி ஜியாம்பாடிஸ்டா விகோ (Giambatista Vico [1668-1744]) வரலாற்று வளர்ச்சி, மொழிகளின் வளர்ச்சி ஆகியன பற்றி முற்றிலும் அசலான கோட்பாடுகளை உருவாக்கி னார். அவர் ஸ்பினோஸா பற்றிய விமர்சனங்களை முன்வைத்த போதிலும் ஸ்பினோஸாவைப் போலவே, மனித வரலாறு என்பது கடவுளைச் சார்ந்திருக்கவில்லை என்னும் உலகியல் பார்வையை வளர்த்தெடுத்தார். எனவே, அவரை எதிர்-அறிவொளிச் சிந்தனையாளர் (Counter-Enlightenment Thinker) என்று சில ஆய்வாளர்கள் வகைப்படுத்துவது சரியாகத் தோன்றவில்லை என்பது ஜொனாதன் இஸ்ரேலின் கருத்து. ஸ்பினோஸாவின் தத்துவம் ஜெர்மானியச் சிந்தனையாளர்கள் சிலர் மீதும் தாக்கம் ஏற்படுத்தியது.

ஸ்பினோஸா பிறப்பால் யூதர். மனிதன், பேரண்டம், அரசியல், சமூகப் படிநிலை அமைப்பு, பாலுறவுகள், அறவியல் ஆகியன தொடர்பான மிக முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தார் ஸ்பினோஸா. யூதர்களின் புனித நூல்களெல்லாம் பாலஸ்தீன இடையர்களால் எழுதப்பட்டவை என்று கூறியதன் காரணமாக, யூதர்களால் அவர்களது மதத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அவர், கிறிஸ்துவ மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது கருத்துகளில் சில: “அன்பு,மகிழ்ச்சி,அமைதி, கட்டுப்பாடு, புலனடக்கம், உண்மை ஆகியவற்றைக் கூறுவதாகக் கருதப்படும் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் அன்றாட வாழ்வில் ஒருவரை யருவர் வெறுப்பவர்களாகவும் ஒருவருக்கொருவர் சண்டை யிட்டுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். கிறிஸ்துவரும், துருக்கி யரும், யூதரும் உடையாலும் வழிபடும் இடங்களாலும் தான் வேறுபடுகின்றனரேயன்றி, மற்ற அம்சங்களில் ஒன்றாகவே இருக்கின்றனர்...

மத ஆலயங்கள் பெருமைக்குரிய இடங்களாக வும் பண வருவாயுள்ள இடங்களாகவும் மாறிவிட்டன.ஒவ்வொருவரும் அவர் என்ன தகுதியுடையவராயினும் மதகுரு மாராக வர விரும்புகிறார். மதத்தைப் பரப்புவது பிழைப்பாக மாறிவிட்டது... பகுத்தறிவையும் மனித அறிவையும் மறுப்பவர் கள் தெய்வீக ஒளி கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில் அவர்கள் கடுகளவேனும் தெய்வீக ஒளி பெற்றிருப்பார்களேயானால் இந்த அளவுக்குத் தன்னகங்காரம் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் கடவுளை ஞானவடிவமாக வழிபடுபவர்களாகவும் சகமனிதர்களிடம் அன்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.”

பேரண்டமும் அதிலுள்ள இந்தப் புவிக்கோளமும் அதே போல மனிதனின் மனமும் கடவுளால் படைக்கப்பட்டவை என்னும் கருத்தை முற்றாக மறுத்த ஸ்பினோஸா, ஒரே ஒரு மூலப்பொருள் தான் (substance) உள்ளது, அது நிபந்தனையற்றது, எல்லையற்றது, எதனாலும் மட்டுப்படாதது, தானே தனக்கான காரணியாக இருப்பது, எதனையும் சார்ந்து இருக்காதது, குறுக்கவோ மறுக்கவோ முடியாதது எனக் கூறினார். அந்த மூலப்பொருளின் இரு வேறு பண்புகள்தான் பொருளும் மனமும் என்றார்.

மனிதனின் சிந்தனையும், அவனது உடலும் ஒரே மூலப் பொருளின் இரு பண்புகள் என்றார். இயற்கை முழுவதும் இறைவனின் வடிவம் என அவர் கூறினாலும் அவர் இறை நம்பிக்கையாளரல்லர்; இயற்கையை இயக்குவிக்கும் ஆன்மீக சக்தி என்னும் வகையில் ஒரு இறைக் கோட்பாட்டை வகுத்தவரும் அல்லர். இயற்கையைத்தான் அவர் கடவுளாக அடையாளப்படுத்தினார்.

அவர் தனது தத்துவக் கோட்பாடுகளை தெகார்தெ பற்றிய விமர்சனத்திலிருந்தே உருவாக்கத் தொடங்கினார். “நான் சிந்திக் கிறேன். எனவே நான் இருக்கிறேன்” என சிந்தனையை, மனதைத் தொடக்கமாகக் கொண்டு தெகார்தெ தனது தத்துவ அமைப்பை உருவாக்கியதற்கு மாறாக, ஸ்பினோஸா மூலப்பொருளையே தனது தத்துவச் சிந்தனையின் தொடக்கப்புள்ளியாகக் கொண்டார். ‘இந்த உலகத்தை முதலில் இயக்கி வைத்த, அதற்கு வெளியே உள்ள கடவுள் என்பவர் ஒருவருமில்லை; மூலப்பொருளின் காரணி மூலப்பொருளே.’

புற உலகம் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டது, அவ்விதிகளால் நிர்ணயிக்கப்படுவது எனக் கூறிய ஸ்பினோஸா, மனிதர்கள் தங்கள் விருப்பப்படி எதனையும் செய்யலாம் என்று கருதுவது தவறு என்றார். அவர்கள் தாங்கள் சுதந்திரமானவர்கள் எனக் கருதுவதற்குக் காரணம் தங்களது விருப்பங்களைப் பற்றிய உணர்வை அவர்கள் கொண்டிருப்பதுதான்.

ஆனால், அவர்கள் தங்களது விருப்பத்தை நிர்ணயிக்ககூடிய காரணிகளை அறிந்து கொள்வதில்லை; சுதந்திரம் என்பது இயற்கை விதிகள் இருப்பதை ஒப்புக்கொள்வதேயாகும். தங்கள் தேவைகளுக்கு உகந்தபடி உலகத்தை இயக்குவதற்குக் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், பக்தியுள்ளவர்களுக்கு வெகுமதியும் தீயவர்களுக்குத் தண்டனையும் தரக்கூடியவர் இருக்கிறார் என்றும் மனிதர்கள் கருதுகிறார்கள். இயற்கைக்கு மீறிய சக்தியால் உருவாக்கப்பட்டவை என்று பெரும் பாலானோர் கருதுகின்றவற்றுக்கான இயற்கைக் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து, இயற்கை விஷயங்களைப் புரிந்துகொள்ள வும் அவற்றைக் கண்டு முட்டாளைப் போல் வாய்பிளக்காமல் இருக்கவும் முயல்கின்றவன் பொதுவாக ‘மத நிந்தனையாளன்’ எனக் கண்டனம் செய்யப்படுகிறான் என்று எழுதிய ஸ்பினோஸா அவரது காலத்தில் சிலரால் நாத்திகர் என்றும் வேறு சிலரால் இயற்கை வழிபாட்டாளர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

எனினும் இயற்கை, பொருள், மனம், கடவுள் முதலியன பற்றிய அவரது கருத்துகளைவிட அவரது அறவியல் கோட்பாடுகளே ஆளும் வர்க்கங்களுக்குக் கலக்கமூட்டின. அறிவும் தன்னுரிமையும் சரிசம மானவை என்று கூறிய ஸ்பினோஸா, மக்களின் பொது சம்மதத்தின் அடிப்படையிலேயே அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும், முடியாட்சிக்குப் பதிலாக குடியரசு ஆட்சி ஏற்பட வேண்டும் என்றும் விரும்பினார்.

ஸ்பினோஸாவின் அறிவியல்,அரசியல், அறவியல் கருத்துகள் பிரெஞ்சு அறிவொளி இயக்கத்தில் முரணற்ற நாத்திகர்களாகவும் பொருள்முதல்வாதிகளாகவும் இருந்த லா மெத்ரி, திதரோ, டி ஹால்பாஃக் ஆகியோரின் சிந்தனைகளுக்கான அடிப்படையை வழங்கியது. அவர்கள் பொருள்முதல்வாத நிலைப்பாட்டுக்கு வந்துசேர்வதற்கு ஆங்கிலேய அறிவொளிச் சிந்தனையாளரான ஜான் லாக்கின் பங்களிப்பும் இருந்தது எனக் கூறலாம். கருத்துகள் என்பன மனித மனத்தில் உள்ளார்ந்தவை (innate) அல்ல என்றும், கருத்தாக்கங்கள் என்பன புலன்களில் புற உலகம் ஏற்படுத்தும் பதிவுகளிலிருந்தே (புலனறிவிலிருந்தே) வகுக்கப்படுகின்றன என்றும் ஜான் லாக் கூறினார்.

பிரெஞ்சுச் சிந்தனையாளர் ரூஸ்ஸோ (Jean-Jacques Rousseau [1712-1778])ஐரோப்பிய அறிவொளி இயக்கத்தின் வாரிசாகவும் அதைக் கடுமையாக விமர்சித்தவராகவும் இருந்தவர். அறிவைப் போற்றுபவர்களுடன் அவர் சேர்ந்து கொள்ளவில்லை. ஸ்பினோஸாவின் அறிவியல் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வில்லை. பொருள்முதல்வாதத்தை நிராகரித்த அவர், பேரண்டத்தை இயக்குவதற்கு விவேகத்தையும் வலிமையையும் கொண்ட சக்தியன்று இருக்கும் எனக் கருதினார். எனினும், அவர் ஸ்பினோஸாவின் கருத்துகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண் டார். முக்கியமாக, அரசியல் அமைப்பு முறையை அளவிடுவதற்கான ஒரே அளவுகோல் அது சமுதாயத்தின் பொதுநலன்களைப் பாதுகாக்கக்கூடியதா என்பதும், சமுதாயம் முழுவதற்கும் நன்மை பயக்கக்கூடியது எதுவோ அதுதான் அரசியல் நடவடிக்கைகளை நிர்ணயிக்க வேண்டும் என்னும் கருத்துகளே அவை.

இசைக் கலையில் நாட்டமும் அது பற்றிய விசாலமான அறிவையும் கொண்டிருந்த ரூஸ்ஸோ, பெண்களின் உரிமை பற்றிய பிரச்சினையில் பழைமையைப் பேண கருத்துக்களைக் கொண் டிருந்தார். பெண்ணின் கடமை குடும்பத்தை நிர்வகிப்பதும் தாய்மையைப் பேணுவதுமாகும் என்றார். இறை நம்பிக்கை யாளராகவும் கிறிஸ்துவ நெறியை ஏற்றுக்கொள்பவராகவும் இருந்தபோதிலும், கிறிஸ்துவம் கூறும் ‘மூலத் தீவினை’ (Original Sin) என்னும் கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியல், கலை ஆகிய இரண்டையும் கேள்விக்குட்படுத்தும் அவர், அவை மானுட வாழ்வு கறைப்படுவதற்கும், ஒடுக்குமுறைக்கும் காரணமாக இருக்கின்றன எனக் கூறினார்.

‘நாகரிக சமுதாயம்’ எனக் கூறப்படுவது, மிகவும் மானுடத்தன்மையற்றதாகவும் மனிதனின் இயல்புணர்வுகளுக்கு பகையானதாகதாகவும் மனிதர்களின் துன்பதுயரத்துக்கான மூலகாரணமாகவும் இருக்கிறது என்று கருதினார். சொத்துடைமை என்பது மானுட வாழ்வின் இயல்பான பண்பு அல்ல என்றும், இயற்கை நிலையிலுள்ள மனிதனுக்கு சொத்து ஏதும் இருப்பதில்லை என்றும் கூறினார்.

மனிதனின் மானுடத்தன்மையை அழித்து அவனை அடிமையாக்கும் சொத்து, நாகரிகத்தின் வளர்ச்சியின் காரணமாகவே தோன்றியது; ஒரு காலத்தில் சொத்து என்பது ஏதும் இல்லாததால், சமத்துவ மின்மை என்பது இருக்கவில்லை. சமத்துவமின்மை என்பது சொத்துடைமையிலிருந்தே விளைகின்றது. சொத்தின் வலிமை தான் ஏழைகளை ஒடுக்குகிறது. சொத்து உடையவர்கள், அதைப் பெறுவதற்கும் பாதுகாப்பதற்கும் பெருக்குவதற்குமான போராட் டத்தில் அறவியல், அறிவுச் சீரழிவுக்குள்ளாகின்றனர் என்றார் ரூஸ்ஸோ.

1789ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியை நடத்தியவர் களில் மிகத் தீவிரவாதப் பிரிவினரான ஜேகோபின்கள் உருவாக்கிய சங்கங்களில் மிக முக்கியப் பங்காற்றினார் ரூஸ்ஸோ.

ஐரோப்பிய அறிவொளி மரபில் மிதவாத மரபு, தீவிரவாத மரபு ஆகிய இரண்டும் இருந்தன என்றும் ஜான் லாக், ஐஸக் நியூட்டன் (1642-1727), தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes: 1588-1679),மொந்தெஸ்கியூ(1689-1755), முதலியோர் முதல் மரபைப் பிரதிநிதிப்படுத்தினர் என ஜொனாதன் இஸ்ரேல் கூறுகிறார். அந்தப் போக்கு ஏற்கனவே உள்ள சமூக நிறுவனங்களுடன் சமரசம் செய்துகொள்வதையும் ஏற்கனவே நிறுவப்பட்ட மத நம்பிக்கை களைப் பாதுகாப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்றும், பழைமையையும் புதுமையையும் கூட்டிணைப்புக்குள் கொண்டு வர விரும்பிய அந்த மிதவாத மரபிலிருந்த பழமை பேண் போக்கு திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும் மிதவாத மரபை வென்றெடுத்துக் கொண்டது என்றும் கூறுகிறார் இஸ்ரேல்.

எங்கெல்ஸூம்கூட ஜான் லாக்கைப் பொருத்தவரை ஏறத்தாழ இந்த முடிவுக்குத்தான் வந்திருந்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அரசியல் நடவடிக்கைகளைப் பொருத்த வரை லாக் சில பழைமைப்பேண் நிலைப்பாடுகளை மேற் கொண்டார். எடுத்துக்காட்டாக, 1688இல் டச்சு முடிமன்னன் ஆரஞ்சு வில்லியம் (William of Orange) இங்கிலாந்தில் அரியணை ஏறுவதை ஒரு சமரச ஏற்பாடு எனக் கருதி வரவேற்றார். ஆனால், அவரது அரசியல் கோட்பாடுகள் புரட்சிகரமானவையாக இருந்தன.

எடுத்துக்காட்டாக, நீதியற்ற அரசாங்கம் எதனையும் எதிர்த்துப் போராடுவது மக்களின் உரிமை என்று கூறிய அவர், மனிதர்களின் சமத்துவத்தை வலியுறுத்தினார். அவர் புரட்சிகரக் கருத்துகளைக் கூறுவதுடன் மட்டும் நின்று கொள்ளவில்லை.

இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸின் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான சதித்திட்டம் தீட்டுவதில் பங்கேற்றார். அந்த சதித் திட்டம் வெளிப்பட்டவுடன், அரசியல் அகதியாக ஹாலந் தில் தஞ்சம் புகுந்த அவர் அங்கு ஆங்கிலேய அரசாங்கத்தின் ஒற்றர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். இங்கிலாந்தில் அவரது அரசியல் கூட்டாளிகளாக இருந்தவர்கள் கைவினைஞர்கள், லெவெல்லெரகள் (சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் என்றும் மத சகிப்புத் தன்மை வேண்டும் என்றும் கூறிவந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்), இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லஸைக் கொன்று நாடாளு மன்ற ஜனநாயகத்தைத் தொடங்கி வைத்த குரோம்வெல்லின் படைவீரர்கள், குடியரசுக் கொள்கையினர் ஆகியோராவர். எனினும் ஜான் லாக் உட்பட அவர்கள் அனைவருமே, இங்கிலாந்தில் புரட்சி அலை தணிந்த பிறகு, ஆரஞ்சு வில்லியமின் அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றார்கள்.

எனினும் பின்னாளில் நிகழ்ந்த சில புரட்சிகர நிகழ்வுகளுக்கு அவரது கருத்துகள் முக்கியப் பங்களிப்புச் செய்தன. இங்கிலாந்துப் புரட்சியின் நெறிகளை முறைப்படுத்தித் தொகுத்து வைத்த அவரது சிந்தனையின் தாக்கத்தை அமெரிக்காவின் விடுதலைக் காகப் பாடுபட்ட தாமஸ் பெய்ன் எழுதிய ‘மனிதனின் உரிமைகள்’ (Rights of Man) என்னும் புகழ்பெற்ற நூலில் காணலாம். ‘அமெரிக்க விடுதலை அறிக்கை’க்கு அடிப்படையாக அமைந்தது. ‘அமெரிக்க விடுதலை அறிக்கை’யை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸன் லாக்கின் சொற்றொடர்கள் சிலவற்றை அப்படியே எடுத்துப் பயன்படுத்தினார். எனினும், ஜான் லாக் போன்றவர்களின் கருத்துகள் பூர்ஷ்வா மிதவாத ஜனநாயக எல்லைகளைத் தாண்டிச் செல்லவில்லை. அதற்கான முக்கியக் காரணங்களிலொன்று சொத்துரிமையை மனிதனின் இயற்கை உரிமைகளிலொன்று என்று அவரது தத்துவம் வலியுறுத்தியதுதான்.

தாமஸ் ஹாப்ஸ் (1588-1679),அறிவியல் அறிஞராக இருந்த போதிலும், அறிவியலாளராகத் தனது வாழ்க்கையை நடத்த வில்லை. அறிவியல் தொடர்பான நூல்களுடன் (அவரும் வடிவ கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்), சட்டம், அரசியல், அறவியல் குறித்த நூல்களை எழுதினார். பிரான்சில் சில காலம் வாழ்ந்தபோது அங்கிருந்த அறிவியலாளர் கழகத்துடன் (அதில் தெகார்தெவும் உறுப்பினராக இருந்தார்) தொடர்புகொண் டிருந்தார். யாந்திரிகப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்டிருந்த அவர், ‘ஒப்பந்தக் கோட்பாட்’டை(Contract Theory) உருவாக்கியவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

அந்தக் கோட்பாட்டின் சாரம் இதுதான்: பலர் ஒன்று சேர்ந்து ஒரு சிலருக்கோ அல்லது ஒரு நபருக்கோ அதிகாரத்தை ஒப்படைப் பதன் மூலமும் அந்த ஒரு சிலரிடமோ, நபரிடமோ வரம்புக் குட்படாத அதிகாரம் வழங்கப்படுவதன் மூலமும் அரசாங்கம் உருவாகிறது என்றும், இந்த இறையாண்மை மிக்க அரசாங்கம் மக்களின் வாழ்வில் தலையிடுவதும், குறுக்கிடுவதும், மனிதரின் செயல்பாடுகளுக்கு வரம்பிடுவதுமாக இருப்பது தவிர்க்கமுடியாத தாக இருப்பதற்குக் காரணம், சுயநலம் என்பது ஒவ்வொரு மனித ரிடமும் உள்ளார்ந்து இருப்பதால் ஒவ்வொருவரும் அவரவரது சுயநலத்தைப் பாதுகாத்துக்கொள்ள மற்றவர்களிடம் இடை விடாது சண்டை நடத்தவும் மோதவும் வேண்டியிருக்கும் என்பது அவரது முதன்மையான அரசியல் கருத்தாக இருந்தது.

அதாவது ‘எல்லோரும் எல்லோருக்கும் எதிராகப் போரிடுவதுதான்’ சமுதாயத்தின் நெறியாக இருப்பதாக அவர் கருதினார். தடையற்ற போட்டியை அனுமதித்து வரும் கட்டத்தில் முதலாளியம் இருந்த போது உருவான கருத்தே இது.

ஆங்கிலேய அறிவொளி மரபைச் சேர்ந்த மற்றொரு முக்கிய சிந்தனையளர் டேவிட் ஹ்யூம் (David Hume[1771-1776). புற உலகைப் பற்றிய மனிதனின் அறிவு நம்பகத்தன்மை கொண்ட தல்ல என்று கூறிய அவர், ‘கடவுள் இருக்கிறார்’ என்பதை நிரூபிக்க முடியாது என்பதையும் ஒப்புக் கொண்டார். கிறிஸ்துவத் திருச்சபையின் மதக்கோட்பாடுகளையும் அது போதித்த ஒழுக்க நெறிகளையும் நிராகரித்த அவர் மத சகிப்பின்மையைக் கண்டனம் செய்தார். மதங்களின் வரலாற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற் கொண்ட அவர், மூட நம்பிக்கைகள் நிறைந்த மதங்களுக்குப் பதிலாக, மக்களுக்கு ஒரு இயற்கை மதத்தை உருவாக்க விரும்பினார்.

இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவுக்குச் சென்ற தாமஸ் பெயினின் எழுத்துகள் அமெரிக்கப் புரட்சிக்கான சிந்தனா ஆயுதங்களில் மிக முக்கியமானவையாக இருந்தன. அவர் எழுதிய ‘மனிதனின் உரிமைகள்’ ‘பகுத்தறிவு யுகம்’ ஆகியன பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கப் புரட்சியிலும் பிரெஞ்சுப் புரட்சியிலும் நேரடியாகப் பங்கேற்ற அவர், இரும்புப் பாலங்களை வடிவமைத்துக் கட்டும் தொழில்நுட்பத்தில் வல்லுநராக இருந்தார். பிரெஞ்சுப் புரட்சி யில் பங்கேற்பதற்காக பிரான்ஸூக்கு சென்ற அவர், ஜேகோபின் களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததால், அங்கு சிறை வைக்கப்பட்டார்.

அமெரிக்காவுக்குத் திரும்பிவந்ததும் அடிமை முறையை ஒழிப்பதற்கும் பெண்களின் உரிமைக்கும் வலுவான குரல் எழுப்பி வந்தார். அமெரிந்தியர்களான இரோக்கியர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த அவர், அவர்களிடையே இருந்த சமத்துவ மனப்பான்மையைப் பாராட்டினார். நிலம் தனியுடைமையாக இருக்கக்கூடாது என்றும் அது அனைவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தி வந்தார்.

தாமஸ் பெயினின் ‘மனிதனின் உரிமைகள்’ நூலை 1847ஆம் ஆண்டில் படித்து, அதிலுள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்ட மகாத்மா ஃபுலே ‘உண்மை நாடுவோர் சங்க’த்தை (சதய் ஷோதக் சமாஜ் ) நிறுவினார். அவர் எல்லோருக்கும் பொதுவான கடவுள் என்று பேசினாலும்கூட மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கொள்கைகளைத்தான் பரப்பி வந்தார். சாதி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு ஆகியவற்றின் பொருட்டு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு அமெரிக்கச் சிந்தனையாளரான இராபர்ட் ஜி.இங்கர்சால் (Robert G.Ingersoll [1833-1899]) புரொடெஸ்டெண்ட் பாதிரியாரொருவரின் மகன். சட்டக் கல்வி பயின்று வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட அவர் ஆப்ரகாம் லிங்கனின் குடியரசுக் கட்சியில் பணியாற்றினார்.

அமெரிக்க விடுதலைப் போரில் பங்கேற்ற அவர்,அடிமை முறை ஒழிப்பையும் பெண் விடுதலையையும் வலியுறுத்தி வந்ததாலும், கிறிஸ்துவத் திருச்சபைகளைக் கடுமையாக விமர்சித்து வந்ததாலும், கடவுளின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தியதாலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களுக்கு அவரை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அனைத்தையும் படித்தவர்.

குறிப்புகளை வைத்துக் கொள்ளாமல் இரண்டு, மூன்று மணி நேரம் மிகக் கவர்ச்சிகரமான சொற்பொழிவாற்றக் கூடியவர். பணம் கொடுத்து அவரது சொற்பொழிவுகளைக் கேட்கப் பலர் வருவர் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் மாபெரும் கவிஞர்களிலொருவரான வால்ட் விட்மனின் நண்பர். விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய உரை இலக்கியச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவ்வுலகிலுள்ள உயிர்களெல்லாம் ஒரு சக்தியால், கடவுளால் அவரது சிதத்தின்படி தோற்றுவிக்கப்பட்டு அவரது சித்தத்தின்படி இயங்குபவை என்றும் கடவுளின் சிறப்புப் படைப்பான மனிதனுமே அவரது சித்தத்தின்படியே இயங்குகிறான் என்றும் கூறப்பட்டு வந்ததை டார்வினின் (1809-1892) பரிணாமக் கோட்பாடு தகர்த்தெறிந்தது. டார்வினின் பரிணாமக் கோட் பாட்டை வலுப்படுத்தியது. தாமஸ் ஹக்ஸ்லி, எர்னெஸ்ட் ஹேக்கல், மெண்டெல் ஆகியோரின் கோட்பாடுகள்.

‘சூழலியல்’ என்னும் தனி அறிவியல் பிரிவுக்கு வித்திட்டவர் ஹேக்கல் என்றால், மரபணுவியலைத் தோற்றுவித்தவர் மெண்டெல். மைக்கேல் ஃபாரடே, கெல்வின் ஆகியோர் அறிவியல் கோட் பாடுகளை நடைமுறைப் பயன்பட்டுக்குப் பிரயோகித்தவர்கள். இவர்களோடு சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய பல பிரிட்டிஷ் அறிவியலாளர்களில் ஒரு சிலரை மட்டும் இங்கு நாம் பார்ப்போம்: சர் ஜோசப் பேங்க்ஸ் (Sir Joeseph Banks [1743-1820]). இளம் வயதிலிருந்தே தாவரங்கள், பூச்சி வகைகள் முதலிய வற்றில் ஆர்வம் காட்டிவந்த அவர், பசிபிக் மாக்கடலிலுள்ள தஹிதி தீவு வரை சென்று எண்ணற்ற தாவர வகைகள், உயிரினங்கள் முதலியவற்றை சேகரித்துக் கொண்டு வந்து அவற்றை வகைப்படுத்தி அவை அனைத்துக்கும் பொதுவான கூறுகளைக் கண்டறிய முயன்றவர்.

இவ்வகையில் அவர் டார்வினின் முன்னோடியாகத் திகழ்ந்தார்: ஜான் ஹண்டர் (John Hunder [1728-1793]): நவீன அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர்; ஹென்றி காவெண்டிஷ் (Henry Cavendish [1731-1816]) : ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தவர். அவரது ஆராய்ச்சிகளின் விளைவாகத் தான் பேரண்டத்திலுள்ள அணுக்களில் மூன்றிலிரு பகுதி ஹைட்ரஜன் அணுக்கள் என்பது கண்டறியப்பட்டது. வானில் பறந்து செல்லும் பலூன்களை இயக்க ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்த முடியுமென்பதைக் கண்டறிந்தவர்;ஜேம்ஸ் வாட் (1736-1819): நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்து இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர், எட்வர்ட் ஜென்னெர் (EdwardJenner [1749-1833]): பெரியம்மையை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்.

தடுப்பு நோய் மருந்து களைக் கண்டுபிடிப்பதில் அவர் முன்னோடி;ஜோசப் ப்ரீஸ்ட்லி (1733-1804): கிறிஸ்துவப் பாதிரியாக இருந்த அவர், அதிகாரபூர்வமான திருச்சபையின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்ததன் காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்த அவர், காற்றின் தன்மையை ஆராய்ந்து பத்து வகையான வாயுக்களைக் கண்டு பிடித்தார். கரியமில வாயுவால் ஏற்படும் நன்மை, தீமைகளை முதமுதலாகக் கண்டறிந்தவர் அவர்தான்.

தாமஸ் ஹக்ஸ்லி, ஹேக்கல் போன்ற அறிவியலாளர்களும் சார்லஸ் பிராட்லா, அன்னிபெசண்ட் போன்ற அரசியல், சமூக ஆர்வலர்களும் தங்களை ‘அறியணாவாதிகள்’ (agnostics) என்று அழைத்துக் கொண்டனர். அவர்களுக்குப் பின் வந்த பெட்ரண்ட் ரஸ்ஸல், ஜகவர்லால் நேரு ஆகியோரும்கூட அப்படித்தான் தங்களை அழைத்துக் கொண்டனர்.அதாவது ‘கடவுள் இருக்கிறார்’ என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் இல்லை என்று கூறினர்.

மதச்சார்பற்ற, உலகியல் சார்ந்த அறிவியலை மேம்படுத்துவன் மூலம், மானுட வாழ்க்கை நிலைமைகளை பொருளாதார வகையில் மட்டுமின்றி அறிவியல் வகையிலும் பண்பாட்டு வகை யிலும் மேம்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையை அடிப்படை யாகக் கொண்டிருந்த அறிவொளிச் சிந்தனை முதன்மையாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பெரும் செல்வாக்குச் செலுத்திய போதிலும் இந்தியா, சீனா, ஜப்பான், இலத்தீன் அமெரிக்கா, எகிப்து மற்றும் மேற்கு ஆசியாவின்

இதர பகுதிகள் ஆகியவற்றில் தோன்றிய பல்வேறு சிந்தனைப் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தியது. ஆனால் இந்த நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் காலனியாதிக்கம், கலாசார தேசியம் ஆகிய இரு பெரும் சுமைகளால் அறிவொளி, பகுத் தறிவுச் சிந்தனை மரபுகளின் வளர்ச்சி குலைக்கப்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், தயானந்த சரசுவதி போன்றோர் வேதாந்தக் கருத்துகளின் அடிப்படையில் இந்து மதத்திற்குப் புதிய விளக்கங்கள் கொடுக்கத் தலைப்பட் டனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்திய தேசியப் போராட் டத்திலும் திலகர், லாலா லஜபதிராய், மாளவியா, காந்தி ஆகியோரின் இந்துமதக் கருத்துகள் பெரும் செல்வாக்குச் செலுத் தின. காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளின் போது தொடக்கத்தில் ‘சமூக சீர்திருத்த மாநாடுகளும் சேர்ந்து நடத்தப்பட்டு வந்தன. ஆனால், வெகுவிரைவில், அக் கட்சியின் மாநாடுகள் ‘அரசியல் மாநாடுகளாவே’ நடத்தப்படத் தொடங்கின. ஆக, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், சாதி ஒழிப்பு இயக்கம் ஆகியன அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருந்தவர் களாலோ, அதிலிருந்து வெளியேறியவர்களாலோதான் நடத்தப் பட்டன.

மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து முறைசார் கல்வியேதும் பயிலாத சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh:1833-1891), இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குப் பல முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர். பதவி ஏற்புக்காகக் கடவுளின் பெயரால் உறுதி மொழி எடுத்துக்கொள்ள மறுத்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதி மறுக்கப்பட்டு, இடைவிடாத சட்டரீதியான போராட்டத் திற்குப் பிறகே நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அமரும் வாய்ப்பைப் பெற்றவர். தனது பகுத்தறிவு கொள்கைக்காக சிறைக் கும் சென்றவர்.

கிறிஸ்துவ மதத்தையும் மத நிறுவனங்களையும் கடுமையாகத் தாக்கியவர். தொழிற்சங்கவாதி, பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் அயர்லாந்துக்கு ‘சுயாட்சி’ தரப்பட வேண்டும் என வழக்காடியவர். அவரும், அன்று பிரிட்டிஷ் காலனியாக இருந்த அயர்லாந்துக்கு சுயாட்சி தர வேண்டும் எனப் போராடிய வர்களிலொருவருமான அன்னி பெசண்டும் (Anne Besant:1847-1933), 1866ஆம் ஆண்டு இலண்டனில் ‘தேசிய உலகியல் சங்கத்தை’ (National Secular Socioety) உருவாக்கினர். பிராட்லா சோசலிசத்தைக் கடுமையாக எதிர்த்ததால், அந்த சங்கத்திலிருந்த சோசலிசவாதிகள் அதிலிருந்து விலகினர். மால்தஸியச் சிந்தனையை ஏற்றுக் கொண்ட அவர்கள் உருவாக்கியதுதான் ‘மாலதஸியக் கழகம்’ (Malthusian League).

மேற்சொன்ன இரு அமைப்புகளும் உருவாக்கப்பட்ட பிறகு பன்னிரண்டாண்டுகளுக்குள் சென்னை இலௌகிக சங்கம் அமைக்கப்பட்டது. சென்னையிலிருந்த ஐரோப்பியர்களும் ‘சுதேசிகளும்’ சேர்ந்து இந்த அமைப்பைத் தோற்றுவித்ததை அறிகின்றோம். அந்த ஐரோப்பிய, இந்திய உறுப்பினர்களின் பின்புலம் என்ன, அவர்களிடையே எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பன பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

மேலும், இந்த சென்னை இலௌகிக சங்கம் தொடங்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஃபுலேவின் சத்திய சோதக் சங்கம் தொடங்கப்பட்டது. அதில் ஐரோப்பிய உறுப்பினர்கள் இருக்கவில்லை. பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றைப் பொருத்தவரை இரண்டுமே ஏறத்தாழ ஒரே பார்வையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

சென்னை இலௌகிக சங்கத்தினர் மீதும் தாமஸ் பெயினின் கருத்துகள் செல்வாக்குச் செலுத்தியிருந்ததையும் காண்கிறோம். இரண்டு அமைப்புகளுமே இடைவிடாமல் பிரம சமாஜத்தினரை விமர்சித்து வந்திருக்கின்றன. அப்படியிருக்க, இந்தியாவில் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றிய, ஏறத்தாழ ஒரே குறிக்கோளைக் கொண்டிருந்த இரு அமைப்புகளுக்கிடையே ஏன் தொடர்பு இருக்கவில்லை என்பது ஆராயத்தக்கது. அதே வேளை, ஃபுலேவின் இயக்கம் மக்கள் இயக்கமாக, அடித்தட்டு மக்களை ஈர்க்கக்கூடியதாக இருந்தது என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஃபுலேவும் சாவித்ரிபாய் அம்மையாரும் வெறும் கருத்துப் பரப்புரையாளர்களாக மட்டுமின்றி பெண் களுக்கான கல்வி நிலையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆலைத் தொழிலாளர்களின் மேம்பாடுகள் ஆகியவற்றுக்காகவும் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியன பொருட்டும் மேற் கொண்ட திட்டவட்டமான நடைமுறைச் செயல்கள்தான் அந்த இயக்கம் இன்னும் மராத்திய மண்ணில் வேரூன்றி நிற்கிறது.

சென்னை இலௌகிக சங்கத்திலிருந்த ஐரோப்பிய உறுப்பினர்கள், பிராட்லா, அன்னி பெசண்ட், பிரான்ஸைச் சேர்ந்த பேராசிரியர் அட்கின்சன் ஆகியோரின் எழுத்துகள் மூலம் ஐரோப்பிய அறிவொளி மரபும், அறிவியல் மரபும் மட்டுமின்றி பண்டைக் கிரேக்கச் சிந்தனையாளர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், எபிகூரஸ் போன்றவர்களின் கருத்துகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூகவியல் அறிஞர் மாக்ஸ் வெபரின் கருத்துகளும்கூட இந்த சங்கத்தார் நடத்தி வந்த ‘THE THINKER’ ஏட்டில் வெளிவந்த கட்டுரைகள் மூலம் அறிகின்றோம். அறிவொளி மரபைச் சேர்ந்த முக்கியச் சிந்தனையாளர்களில் பெரும்பாலானோர் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

பொருள்முதல்வாத அறிவியலாளரான பிரான்ஸிஸ் பேக்கனின் ‘Novum Organum’ என்னும் நூல் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட செய்தியைத் தெரிவிப்பதோடு,பேக்கனின் பொருள்முதல்வாதமும் விளக்கப்படுகின்றது.

பேராசிரியர் அட்கின்ஸன் ஐரோப்பியத் தத்துவங்களை ஆழ்ந்து கற்றவராக இருந்ததைக் காண்கின்றோம். இலண்டனில் இருந்த இலௌகிக சங்கத்தின் தாக்கத்தாலும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயப் பகுத்தறிவாளர்களின் ஆதரவுடனும் நிறுவப்பட்ட சென்னை இலௌகிக சங்கத்தின் ஏடுகளில், கிறிஸ்துவ மதத்தையும் விவிலியத்தையும் கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகள் மிகப் பெருமளவு காணப்படுகின்றன. சென்னை இராயப்பேட்டையி லிருந்த பகுத்தறிவாளரான எம்.வி.செல்லம் என்பாரின் விவிலிய அறிவும் பகுத்தறிவு சார்ந்த வாதங்களும் மலைப்பு ஏற்படுத்து கின்றன.

எல்லாவிதமான அடிமைத்தனத்துக்கும் எதிரான தாமஸ் பெயினின் கருத்துகள் சென்னை இலௌகிக சங்கத்தாரால் வரவேற்கப்பட்டிருகின்றன. கேதர்நாத் பாஸூ என்னும் வங்காளி ‘THE THINKER’ ஏட்டில் தாமஸ் பெயினின் வாழ்க்கை, பணிகள் பற்றிய நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். சென்னை இலௌகிக சங்கம் தொடங்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே பிராட்லா எழுதிய ‘கடவுள் இருக்கிறாரா?’ (Is there a God?) என்னும் கட்டுரையை ஏ.கே.பாஸூ வங்க மொழியில் மொழி யாக்கம் செய்து பரவலாக விநியோகிக்கப்பட்டதையும் கல்கத்தா வில் நடத்தப்பட்டு வந்த ‘Anti-Christian’ என்னும் ஏடு சுதந்திரச் சிந்தனையை, நாத்திகத்தை, உலகியல் அக்கறைகளைப் பரப்பி வந்த ஏடு என்பதையும் எம்.வி.செல்லம். ‘THE THINKER’ ஏட்டில் எழுதிய கட்டுரை வழியாக அறிகின்றோம் (p. 297,vol. 5)

சென்னை இலௌகிக சங்கத்தினருக்கும் பிரம சமாஜிகளுக்கு மிடையே நடந்து வந்த கருத்துப் போர்களை ஒதுக்கிவைத்துவிட்டு அந்த சமாஜத்தை நிறுவிய ராஜா ராம்மோகன் ராயைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்தோமேயானால், வோல்டேர், ஜான் லாக் போன்ற அறிவொளிச் சிந்தனையாளர்களைப் போல இறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவராக இருந்தபோதிலும், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்ப்பதற்காக அவர் சாஸ்திரங் களில் உள்ள சில கருத்துகளைப் பயன்படுத்திக்கொண்ட போதி லும், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறினால் விதவைக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பகுத்தறிவுக்கு எதிரானது என்று அவர் வாதிட்டதைப் பார்க்கலாம்.

அவரது பகுத்தறிவுக்கும் தர்க்க அறிவுக்கும் அடிப்படையாக இருந்தவை பாரசீக, இஸ்லாமிய சிந்தனையாளர்கள், சூஃபிக்கள் ஆகியோரே. எனினும் பின்னாளில் ஆங்கிலம் கற்றுக் கொண்ட பிறகு வோல்தேர், ஜான் லாக், ஹ்யூம், தாமஸ்பெயின் ஆகியோரின் எழுத்துகளையும் படித்திருக்கிறார்.

சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் கல்வி சென்றடைய வேண்டும், குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட வேண்டும் என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஈஸ்வர் ஷங்கர வித்யாசாகர், சாஸ்திரங்களை எதிர்த்தவர், பகுத்தறிவை முன்வைத்தவர்.

‘இளம் வங்காளம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்த டெரோஸியோ வும் அவரது ஆதரவாளர்களும் பகுத்தறிவாளர்களாக இருந்திருக் கின்றனர். ஒகஸ்ட் கொம்தெ போன்றோரின் பாசிடிவிச அறிவியல் கருத்துகள் வங்காள அறிவாளிகளால் விரிவாக விவாதிக் கப்பட்டுள்ளது. ஆக, வங்காளத்திலும் நவீன பகுத்தறிவு இயக்க மும் நாத்திக சங்கங்களும் காலனியாட்சிக் காலத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் வங்காளத்தில் தோன்றிய இந்துமத மீட்புவாதத்திற்கும் இந்துமதச் செல்வாக்கின் கீழிருந்த தேசிய இயக்கத்திற்கும் முன் தோல்வியடைந்துவிட்டன.

ஐரோப்பிய அறிவொளி, பகுத்தறிவு மரபிலிருந்து ஊட்டம் பெற்றவர்களாக சென்னை இலௌகிக சங்கத்தினர் இருந்தபோதி லும், இந்தியாவிலிருந்த நாத்திக, பகுத்தறிவு மரபைப் போற்று வதில் அக்கறை செலுத்தினர். சார்வாகம், உலகாயதம், சாங்கியம் ஆகிய தத்துவப் போக்குகளை அவர்கள் எடுத்துரைக்கின்றனர். ஒரு கட்டுரை, சாங்கியம்தான் இந்தியாவின் தேசியத் தத்துவம் என்றுகூடக் கூறுகிறது. இறைக் கொள்கையை மறுத்த புத்தரைப் பற்றியும் பேசுகிறார்கள்.

மனிதர்களையும் பிற உயிர்களையும் படைத்தது கடவுளே என்னும் கருத்தை தகர்த்தெறிந்த பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய டார்வினே இறை நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதற்காக அவரும் விமர்சிக்கப்படுகிறார் (ப. 45, தொகுதி 45)

வோல்தோர், ஸ்பினோஸா, தாமஸ் பெயின், இங்கர்சால் ஆகியோரும், பிராட்லா, அன்னி பெசண்ட் போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மேற்கத்தியப் பகுத்தறிவாளர்களும் கிறிஸ்துவ மதத்திற்கும் கிறிஸ்துவப் பாதிரிகளுக்கும் விவிலியத்துக் கும் எதிராகக் கருத்துப் போர்களைத் தொடுக்கப் பயன்படுத்திய பகுத்தறிவு தர்க்கத்தை சென்னை இலௌகிக சங்கத்தினர் தமக்கே உரிய மேதாவிலாசத்துடன் இந்தியாவிலுள்ள சாதியம், பார்ப்பனியம், சாத்திரங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்யப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். டார்வினின் கோட்பாடு, வருணபேதத்திற்கு எவ்வாறு சாவு மணி அடிக்கிறது என்பதை சென்னை இலௌகிக சங்கத்திலிருந்த மிக முக்கியமான சிந்தனையாளரும் அயோத்திதாசரின் நெருக்க மான நண்பருமான மாசிலாமணியார் விளக்குகிறார்.

காலனிய ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே ஏற்றம் பெற்றிருந்த பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் இன்னும் வலுப்படுத்து வதற்காக சென்னை பிரமஞான சபையும் அதைத் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றியவர்களுமான கர்னல் ஓல்காட், பிளாவிட்ஸ்கி அம்மையார் ஆகியோரும் செய்த முயற்சிகளையும் அவர்களது மந்திரதந்திர வேலைகளையும் மிகக் கூர்மையாக விமர்சித்து அம்பலப்படுத்தினர் இலௌகிக சங்கத்தினர். பிரமஞான சபையின் செயல்பாடுகளும் அவற்றைப் பற்றிய இலௌகிக சங்கத்தினரின் விமர்சனங்களும் விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட வேண்டியவை.

அவர்களது காலத்தில் அன்னி பெசண்ட், ஒரு பகுத்தறிவுவாதி; கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளுக்கு எதிராக அவர் எழுதிய இரு கட்டுரைகளும் பிரமஞானக் கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து, அவர் எழுதிய ஒரு கட்டுரையும் ‘THE THINKER' ஏட்டில் காணப்படுகின்றன (ப.405-406, தொகுதி 5).ஆனால், நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் எதிர்கொண்ட அன்னி பெஸண்ட் முற்றிலும் வேறு பெண்மணி; டாக்டர் டி.எம். நாயரால் ஐரிஸ் பிராமணி என்றழைக்கப்பட்ட அன்னி பெசண்ட் ஓர் அதீதப் பார்ப்பனராகத் திகழ்ந்தது வரலாறு.

சென்னை இலௌகிக சங்கத்தினர் பார்ப்பன, பார்ப்பனியக் கொடுமையை விட காலனியாட்சியே மேலானது என்றும் அது கல்வி, சமூக சீர்திருத்தம், சட்டம், நீதி முதலியவற்றில் ஓரளவுக் கேனும் ஜனநாயகத் தன்மையைக் கொண்டு வந்தது என்றும் கருதினர். அதேவேளை ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளையும் அவர்களது சுரண்டலையும் அவ்வப்போது எடுத்துரைக்கவும் செய்தனர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சி இந்தியத் தொழில்களை அழித்ததையும், ஆங்கிலேயர்கள் இந்திய செல்வத்தை அள்ளிக் கொண்டு செல்வதையும், தங்களது சொகுசு வாழ்க்கைக்காக இந்திய மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்வதையும் பற்றிய கட்டுரைகளும்கூட ‘தத்துவ விவேசினி’யில் வெளிவந்திருக்கின்றன (நான்காம் தொகுதி).

மார்க்ஸியக் கருத்துகள் ஐரோப்பாவுக்கு வெளியே வெகுவாகப் பரவாதிருந்த காலகட்டம் அது. எனினும் அக் காலகட்டத் திலும்கூட சோசலிசக் கருத்துகள்-குறிப்பாக கற்பனாவாத சோசலிச வாதிகளின் கருத்துகள் இங்கிலாந்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன, மார்க்ஸியக் கருத்துகளும் பரவலாக அறியப்பட்டிருந்தன. கற்பனா சோசலிசவாதிகளிலொருவரான இராபர்ட் ஓவெனைப் பற்றிய குறிப்பொன்று ‘THE THINKER’ ஏட்டில் காணப்படுகின்றது (ப. 117, தொகுதி 5). அதாவது, பரோபகார சிந்தனையுள்ள இறை மறுப்பாளர்களிலொருவராகவே அவர் அடையாளப்படுத்தப்படு கிறார் - சோசலிசவாதியாக அல்ல. பிராட்லா சோசலிசத்தை எதிர்த்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சியங்களான தன்னுரிமை, சகோதரத்துவம், சமத்துவம் என்பன பல்வேறு கட்டுரைகளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. ஆனால், பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சியங்களை முழுமையாக எதிர்த்த மால்தஸ் பாதிரியாரின் ‘மக்கள் தொகைக் கோட்பாடு’ சென்னை இலௌகிக சங்கத்தாரால் வரவேற்கப்பட்டதுடன், ‘இந்து மால்தூசிய சங்கம்’ என்னும் அமைப்பும் நிறுவப்பட்டிருக்கிறது. குடிசை வாழ் மக்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்று குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் பற்றி இந்த சங்கத்தினர் அவர்களிடம் பிரசாரம் செய்துவந்ததையும் அறிகின்றோம்.

மனிதனுமே ஓர் மிகச் சிறிய உயிரினத்திலிருந்து படிநிலை வளர்ச்சியடைந்து உருவாகியவன், உலகிலுள்ள நிகழ்வுகள் மாற்றமடையக் கூடியவை என்னுக் கருத்துகள் இப்போது நிலவுகின்ற சமுதாயம் நிலையானதல்ல, மாற்றப்படக்கூடியதே என்னும் கருத்தை வலியுறுத்திவந்த மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரால் வரவேற்கப்பட்டன. டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ நூலைப் படித்து முடித்த மார்க்ஸ் 1860இல் எங்கெல்ஸூக்கு எழுதிய கடிதத்தில், டார்வினின் கருத்துகள் சமுதாயம் பற்றிய ‘நமது கருத்துக்கு இயற்கை வரலாற்றிலிருந்து ஆதாரங்கள் தருவதாக’ குறிப்பிட்டார். ஆனால், இரண்டாண்டு களுக்குப் பின் டார்வினைப் பற்றிய மார்க்ஸின் பார்வை மிகுந்த விமர்சனத்தன்மை கொண்டிருந்தது. தனது பரிணாமக் கோட்பாட் டில், இயற்கையில் உயிர்பிழைப்பதற்காக உயிரினங்களுக் கிடையே நடக்கும் போராட்டத்தில் வலியதே எஞ்சும் (survival of the fittest) என்று டார்வின் விளக்கமளித்திருந்தார்.

“விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுக்கிடையில் உழைப்புப் பிரிவினை, போட்டி, புதிய சந்தைகளை உருவாக்குதல், ‘கண்டுபிடிப்புகள்’ மால்தசிய ‘உயிர் பிழைப்புக்கான போராட்டம்’ ஆகியவற்றைக் கொண்ட ஆங்கிலேய சமுதாயத்தை டார்வின் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது ‘எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் புரிதலே நெறி’' என்னும் ஹாப்ஸியக் கோட்பாடுதான்” என்று 1862இல் எங்கெல்ஸூக்கு எழுதிய கடிதத் தில் மார்க்ஸ் கூறினார்.

1866இல் எழுதிய கடிதத்திலும்கூட டார்வினின் தத்துவத்தில் “வளர்ச்சி என்பது ஏதோ ‘தற்செயலாக’ நேர்வதாகக் கருதப்படுகின்றது என்றும், வரலாறு, அரசியல் ஆகியவற்றைப் பொருத்தவரை டார்வினின் முதல் நூலிலிருந்து கிடைப்பது மிக சொற்பமே” என்றும் மார்க்ஸ் கூறுகிறார். பின்னர் குகல்மான் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘உயிர் பிழைப்புக்கான போராட்டம்’ என்னும் டார்வினியக் கோட்பாட்டுக்குள் வரலாறு முழுவதையும் கொண்டுவருகிற எவரும் தனது ‘சிந்தனை பலகீனத்தையே’ நிரூபிக்கிறார் என்று மார்க்ஸ் கூறினார்.

மால்தஸின் கருத்துகள் தம்மை மிகவும் கவர்ந்ததாக டார்வினே ஒப்புக்கொண்டிருக்கிறார். முதலாளிகளிடையே தடையற்ற போட்டி நிலவிய காலகட்டத்தில் இருந்தபோது (அதாவது ஏகபோக முதலாளியம் உருவாவதற்கு முன்) தோன்றியவைதான் மால்தஸ், ஹாப்ஸ் ஆகியோரின் கோட்பாடுகளாகும். மக்கள் தொகைப் பெருக்கம் கூட்டுவட்டி விகிதத்தில் (2, 4, 16,196) அதிகரிக்கிறது; ஆனால், உயிர்பிழைப்புக்கான பொருள்கள் சாதாரண வட்டி விகிதத்தில்தான் ( 1, 2, 4) அதிகரிக்கின்றன. எனவே உயிர் பிழைப்பதற்காக மக்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவர்; ஒருவரையருவர் அழிக்க முற்படுவர்; வலுவானவர்களே பிழைப்பார்கள்; பெரும்பான்மையினர் (வலுவற்றவர்கள்) வறுமையில் உழல்வது தவிர்க்க முடியாதது. எனவே மக்கள்தொகையைப் பலவந்தமாகவேனும் குறைக்க வேண்டும் - இதுதான் மால்தசியம். அன்று இங்கிலாந்தில் தான் கண்ட முதலாளியப் போட்டியை ஆதாரமாகக் கொண்டு, ‘எல்லோரும் எல்லோருக்கும் எதிராகப் போரிடுவதே நெறி’ என்று ஹாப்ஸ் என்னும் தத்துவவாதி கூறினார். மால்தஸ், ஹாப்ஸ் ஆகியோரின் கருத்துகளின் ஊடாக, இயற்கையின் உயிரினங்களை ஆராயப் புகுந்த டார்வின், விலங்குகளிலும் தாவரங்களிலும் அன்றிருந்த ஆங்கிலேய சமுதாயத்தையே கண்டது வியப்புக் குரியது அல்ல என்று மார்க்ஸூம் எங்கெல்ஸூம் கருதினர். (மால்தஸியம் பற்றிய இன்னும் கூடுதலான விளக்கங்கள் கீழ்வரும் பத்திகள் சிலவற்றில் கூறப்பட்டுள்ளன).

ஆனால், ‘மனிதனின் தோற்றம்’ (Descent of Man) என்னும் தனது இரண்டாவது நூலில், “உயிர்பிழைப்பதற்கான போராட்டத் தில் பிழைக்கத் தகுதி பெற்ற உயிரினங்கள், மிகப் பலசாலி களாகவோ சூழ்ச்சிக் குணம் மிக்கவையாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் தமக்குள் ஒருவருக் கொருவர் ஆதரவளித்து ஒன்றுகூடிச் செயல்படவல்ல ஜீவிகளாகவும் அவை இருக்கலாம்” என்னும் கருத்தை டார்வின் கூறுகிறார். இந்தக் கருத்து அரசு, படை,அதிகாரிவர்க்கம் போன்ற நிறுவனங்கள் ஏதும் இல்லாமல் அன்பு, பரஸ்பர உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மனித சமூகத் தால் வாழ முடியும் என்னும் கருத்தைக் கொண்டிருந்த குரோபோட்கின் என்னும் (அராஜக) சோசலிசச் சிந்தனையாளரால் வரவேற்கப்பட்டது.

உயிரினங்களிடையே ‘ஒத்துழைப்பு’ இருப்பதாக டார்வின் கூறுவதைத் தனது சொந்த ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்ததாக ‘பரஸ்பர உதவி’ (Mutual Aid) என்னும் நூலில் குரோபோட்கின் கூறுகிறார். மனிதனின் சமூக இயல்பூக்கங்கள் (social instincts) - அதாவது கூடிவாழ்தல், ஒத்துழைத்தல் முதலியன வெறும் உடல்ரீதியான இயல்பூக்கங்களைவிட (biological instincts), அதாவது உயிர்பிழைப்பதற்காகப் போட்டி போடுதல், தனது இனத்தையே சேர்ந்த உறுப்பினர்களை அழித்தல் முதலியனவற்றை விட நீடித்து நிற்கும் என்று டார்வினுமே தனது இரண்டாவது நூலில் கூறுகின்றார்.

டார்வினின் கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணான தத்துவ, சமூகவியல் போக்குகளைத் தோற்றுவித்தன. ஒன்று, குரோபோட்கினின் சோசலிசம் போன்ற சிந்தனைப் போக்குகள். மற்றொன்று, ‘சமூக டார்வினியம்’ (Social Darwinism) என்னும் சிந்தனைப் போக்கு. ‘உயிர்பிழைப்பதற்கான போராட்டம்’, ‘வலியதே எஞ்சும்’ ஆகிய கருத்துகளை மனித சமுதாய நெறி களுக்குப் பொருத்தி, ‘பலகீனமான நாடுகளும் மக்களும் பலமிக்க நாடுகளால் அடக்கியழிக்கப்பட வேண்டியவர்களே’ என்னும் கருத்தை சில அறிவியலாளர்களும் சமூகவியலாளர்களும் கூறினர். ஆங்கிலேய சமுதாய வாழ்விலிருந்து இயற்கைக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட மால்தசியமும் ஹாப்ஸியமும் பின்னர் மீண்டும் சமுதாய வாழ்விற்குக் கொண்டுவரப்பட்டு மனித சமுதாயத்தின் நிரந்தர விதிகளாகப் பறைசாற்றப்படும் வேடிக்கையை மார்க்ஸூம் எங்கெல்ஸூம் எள்ளி நகையாடினர்.

‘இயற்கையின் இயங்கியல்’ (Dialectics of Nature) என்னும் நூலில் உயிரினங்களுக்கிடையே போராட்டம், ஒத்துழைப்பு என்னும் விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவை ஒரு குறுகிய வரையறைக்குள் மட்டுமே செயல்படக்கூடியன என்றும் இவற்றில் ஏதேனும் ஒரு அம்சத்துக்கு மட்டும் அழுத்தம் தருவது ஒருதலைச் சார்பானதும் முட்டாள்தனமானதும் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

‘போராட்டம்’ என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும் கூட, இந்தப் ‘போராட்டம்’, மனித சமுதாயத்தில் வெறும் உயிர் பிழைப்புச் சாதனங்களுக்காக நடப்பதில்லை, மாறாக மனித வளர்ச்சிக்கான, மனித வாழ்வின் மேம்பாட்டுக்கான, மனிதர் களுக்குக் களிப்பும் இன்பமும் மனநிறைவும் தரும் சாதனங்களுக் காகவே நடைபெறுகிறது என்று கூறினார். விலங்குகளும் பிற உயிர்களும் (உணவுப் பொருள்கள், கூடுகள் கட்டுவதற்கான பொருள்கள்) சேகரிக்க மட்டுமே செய்கின்றன, மனிதனோ படைக்கவும் செய்கிறான் என்பதைச் சுட்டிக்காட்டும் எங்கெல்ஸ், மனிதனின் உற்பத்தி சமூகரீதியானது (பல்வேறு மனிதர்கள் சேர்ந்து செய்வது) என்பதையும், முதலாளிய சமுதாயத்தில் உள்ள சமூகரீதியான உற்பத்திக்கும் தனியுடைமைக்குமுள்ள முரண்பாடு, உற்பத்திச் சாதனங்களைச் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமே தீர்க்கப்படும் என்று கூறுகிறார்.

மேலும், ரஷிய அறிஞரொருவருக்கு எழுதிய கடிதத்தில், கூடிவாழ்ந்து ஒத்துழைப்பதே ஆதிகால மனிதர்களின் வாழ்க்கை நெறியாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். ஆக, ‘உயிர்பிழைப்புக்காக மனிதர்களிடையே நடக்கும் போராட்டம்’ , எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போரிடுதலே நெறி’ என்பனவற்றை மறுத்து, ‘வர்க்கப் போராட்டம்’ என்பதை மட்டுமே மார்க்ஸியம் ஏற்றுக் கொள்கிறது. எனினும், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் புதிய ஜெர்மன் பதிப்பொன்றுக்கான முன்னுரையில் இயற்கை அறிவியலில் டார்வின் நிகழ்த்திய புரட்சியை சமூக அறிவியலில் மார்க்ஸ் நிகழ்த்திய புரட்சிக்கு இணையானது என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

உயிர்களின் தோற்றம் பற்றிய பரிணாமக் கோட்பாட்டை நிறுவியதன் மூலம், அறிவியலில் மாபெரும் புரட்சியை நடத்திய சார்லஸ் டார்வின், இறைக்கோட்பாட்டை பகிரங்கமாக மறுக்காததற்குக் காரணம் கிறிஸ்துவ மத உணர்வு மிக்க அவரது மனைவி அவருக்குக் கொடுத்து வந்த நிர்பந்தமே என்றும் அதனை நினனத்து நினைத்து டார்வின் மிகவும் வேதனைபட்டார் என்றும் பிரிட்டிஷ் அறிவியலாளரும் பகுத்தறிவுச் சிந்தனையாளருமான ரிசார்ட் டாகின்ஸ் (Richard Dawkins) கூறுகிறார். டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஜூலியன் ஹக்ஸ்லி, எர்னெஸ்ட் ஹேக்கல் போன்றோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ‘சூழலியல்’ (ecology) என்னும் கருத்தாக்கத்தை உருவாக்கியதே ஹேக்கல்தான். இவர்களிருவரும் இங்கர்சால் போலவே ‘அறிய ணாவாதிகள்’ (Agnostics). அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை எந்தச் சான்றுகள் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது என்பதுதான் அவர்களது கோட்பாடு.

மால்தஸ் (Thomas Robert Malthus [1766-1834]) இங்கிலாந்தி லுள்ள ஆங்கிலிகன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரி (Reverend). அவரால் எழுதப்பட்டு 1798இல் வெளியிடப்பட்ட ‘மக்கள் தொகை கோட்பாடு பற்றிய கட்டுரை’ (An Essay on the Principle of Population) பற்றி மார்க்ஸ் எழுதுகிறார்: “அதன் முதல் வடிவம் டிஃபோ, சர் ஜேம்ஸ் ஸ்டூவர்ட், டவுன்செண்ட், பிராங்க்ளின், வாலஸ் முதலானோரின் எழுத்துகளைப் பள்ளிச் சிறுவனைப் போல் மேலோட்டமாகப் பார்த்தெழுதிய இலக்கியத் திருட்டே ஆகும். மதப் பிரசங்க பாணியில் சொற்ஜாலத்துடன் வழங்கப்பட்ட அதில் மால்தஸால் உருவாக்கப்பட்ட அசலான ஒரே ஒரு ஆய்வுக்கருத்துகூட இல்லை என்பதை வாசகருக்கு நினைவூட்டுகிறேன். இந்தச் சிறு பிரசுரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதற்கான ஒரே காரணம், அது ஒரு குறிப்பிட்ட கட்சியின் நலன்களுக்குப் பொருத்தமானதாக இருந்ததுதான். பிரெஞ்சுப் புரட்சிக்கு பிரிட்டனில் உத்வேகமிக்க ஆதரவாளர்கள் கிடைத்தனர்.

‘மக்கள் தொகைக் கோட்பாடு’ பதினெட்டாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டு, பின்னர், பெரும் சமூக நெருக்கடி மூண்டபோது, கொண்டார்செ (பிரெஞ்சு அறிவொளிச் சிந்தனையாளர் - எஸ்.வி.ஆர்.) முதலானோரின் போதனைகளை முறிப்பதில் பிழை செய்யாத மாற்று மருந்து என்று கொட்டு முழக்கத்துடன் பிரகடனம் செய்யப்பட்டது; மனிதகுலத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கான எல்லா வேட்கை களையும் அழிக்கவல்லது என இக்கோட்பாடு, நாட்டைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஆங்கிலேய ஆளும் குழுவால் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் வரவேற்கப்பட்டது.” (Karl Marx, Capital A Critique of Political Economy, Volume I, translated by Ben Fowkes, Penguin Books in association with New Left review, 1990, p. 766).

மால்தஸின் கருத்துகள் பின்வருமாறு: மக்கள் தொகையின் இயல்பான பெருக்கத்தின் காரணமாகவே வறுமை தவிர்க்க முடியாததாகின்றது. மக்கள் தொகை பெருகும் விகிதம் வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருள்களின் உற்பத்தி பெருகும் விகிதத்தைவிடக் கூடுதலாகவே இருக்கின்றது. எனவே ஏழைகளின் துயர் துடைக்கச் செய்யப்படும் முயற்சிகள் யாவும் தவறான கருத்துகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுபவை ஆகும். உயிர் வாழ்வதற்காக ஏழைகள் தமக்குள் நடத்தும் போராட்டத்தில் நாம் தலையிடாமல் இருந்தால் அது அவர்களில் வலியவர் எஞ்சுவதற்கு சாதகமாக அமையும்.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய மால்தஸின் கோட்பாடு, என்றும் மாறாத இயற்கை விதி போன்ற வரலாற்றுத் தன்மை யற்றதாகும். இக்கருத்துகளில் உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் கோட்பாட்டுக்கான மூலக் கரு இருப்பதை டார்வினே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதை மேலே கண்டோம். பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளியச் சமுதாயத்தில் இருந்த பொருளாதார நிலைமைகளை மால்தஸ் என்றும் மாறாத, உலகுதழுவிய விதிகளாக மாற்றினார். இதற்கு மாறாக, மக்கள் தொகையையும் சமுதாயத்திலுள்ள உற்பத்தி முறையும் தொடர்பு படுத்திப் பார்க்கும் கண்ணோட்டத்தை மார்க்ஸ் உருவாக்கினார்.

சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு உற்பத்தி முறையும் அதற்கே உரிய மக்கள் தொகைக் கோட்பாட்டை உருவாக்குகிறது என்றார் மார்க்ஸ். மக்கள்தொகையைச் சுருக்குவதால் மட்டுமே உயிர் பிழைப்புச் சாதனங்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் என்னும் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என்று கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக, அன்று பிரிட்டனின் காலனியாக இருந்த அயர்லாந்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டு கிறார்:

1864இல் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சம் 1,000,000க்கும் அதிகமானோரைப் பலி கொண்டது; ஆனால் பலியானவர்கள் பஞ்சைப் பராரிகளே. அதன் காரணமாக நாட்டின் செல்வத்துக்கு சிறு சேதம்கூட ஏற்படவில்லை. அடுத்து வந்த 20 ஆண்டுகளில் பிழைப்புக்கான வழி தேடி இலட்சக்கணக்கான அயர்லாந்தினர் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் தங்களோடு சேர்த்து நாட்டின் உற்பத்தி சாதனங்களை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லவில்லை; அவை அப்படியே அழியாமல் அயர்லாந்திலேயே இருந்தன.

அமெரிக்காவுக்குச் சென்றவர்கள் அனுப்பிய பணத்தைக் கொண்டு அவர்களது உற்றார் உறவினர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். இதனால் அயர்லாந்துக்கு செலவு ஏதும் இல்லை. மாறாக அந்த நாட்டின் இலாபகரமான ஏற்றுமதி வணிகத்தின் ஒரு பகுதியாக இந்தப் புலப் பெயர்வு அமைந்தது. இந்தக் காரணங்களால் அயர்லாந்தின் மக்கள் தொகை பெரிதும் சுருங்கியது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, மக்கள் தொகை சுருக்கத்திற்கு ஈடானதாக இருக்கவில்லை. ஆயினும் அயர்லாந்திலேயே இருந்துவிட்ட தொழிலாளிகளின் கூலி முன்பை விடக் குறைவாகவும் அவர்கள் மீதான ஒடுக்குமுறை முன்பை விட அதிகமானதாகவும் இருந்தது (Karl Marx, Capital Vol. I, Penguin,1990, pp 861-862)..

ஆக, வறுமைக்கான காரணத்தை மக்கள் தொகைப் பெருக் கத்தில் காண்பதற்குப் பதிலாக ஒரு நாட்டின் உற்பத்தி முறை, பொருள் செல்வங்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை ஆகியவற்றில் காண வேண்டும் என்றார் மார்க்ஸ்.

மால்தஸின் கோட்பாடு, முதலாளியப் பொருளுற்பத்தி முறை, விநியோக முறை ஆகியவற்றை நியாயப்படுத்துவதாக, அவற்றின் சுரண்டலை மூடி மறைப்பதாக இருந்தது. இக் காரணத்தால் மார்க்ஸியவாதிகள் மால்தஸின் மக்கள் தொகைக் கோட்பாட்டை நிராகரிக்கிறார்கள். ஆனால், அதேவேளை மார்க்ஸின் விமர்சனங் களிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் வேதவாக்காகக் கொள்வ தில்லை. குழந்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்குத் தரப்பட வேண்டும், அவர்களது உடல், மன நலம் காக்கப்பட வேண்டும், சமூக வாழ் வின் அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கும் ஆண்களுக்கு மிடையே சமத்துவம் வேண்டும் என்னும் அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாடு, கருக்கலைப்பு ஆகியன சோசலிச நாடுகளி லும்கூட ஊக்குவிக்கப்பட்டது.

மேலும், ஏழ்மையையும் பொருளாதாரக் குறை வளர்ச்சியையும் போக்குவதற்கான ஒரே தீர்வு குடும்பக் கட்டுப்பாடு என்பதை மார்க்ஸியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. பெண்களுக்கான (ஏன் ஆண்களினதும்) சமூக, பண்பாட்டு, பொருளாதார, அரசியல் மேம்பாட்டை உத்திரவாதம் செய்யாமல், குடும்பக் கட்டுப்பாடு என்பதை மட்டும் வலியுறுத்துவது, ஏழைகளையும், மத, இனச் சிறுபான்மையினரையும் ஒடுக்குவதற்கான வழிமுறைகளி லொன்றே.

எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவ - மால்தஸியக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள், அவற்றைப் பரப்பிய வர்கள் அனைவருமே முதலாளியச் சுரண்டலை உணர்வுபூர்வ மாகவே நியாயப்படுத்தியவர்கள் என்னும் முடிவுக்கு வந்துவிட முடியாது. பகுத்தறிவு, கருத்துச் சுதந்திரம், பெண்களின் உரிமை, அடிமை முறை ஒழிப்பு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட பலர் குடும்பக் கட்டுப்பாட்டையும் ஆதரித்தனர். அதிகக் குழந்தைகள் உள்ள ஏழை குடும்பங்கள் வருவாய்க் குறைவின் காரணமாக தம்மைப் பராமரித்துக் கொள்ள முடியாததைக் கண்டு மனம் வருந்திய மனிதநேயர்கள் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்துள் ளனர்.

பெரியார் ஈ.வெ.ரா., மால்தஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டதற்கான சான்றுகள் இல்லை. அவர், குடும்பக் கட்டுப்பாடு பற்றி எழுதியும் பேசியும் வந்தபோதிலும், அதை குழந்தைகள் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கே இருக்கவேண்டும் , அதாவது இனப்பெருக்கம் செய்யும் உரிமை முற்றிலும் பெண்களுக்கே இருக்க வேண்டும் என்பதோடே இணைத்துப் பார்த்தார். ஃபுலே, அம்பேத்கர் ஆகியோர் போல பெரியார் தனது கருத்துகளை நடை முறை சார்ந்த ஓர் இயக்கத்தோடு இணைத்து வளர்த்தெடுத்தார்.

பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள ஆறு தொகுதிகளில் அவர் எழுதியுள்ள பதிப்பாசிரியர் குறிப்புகள், சென்னை இலௌகிக சங்கத்தினருக்கு, சுயாக்கியானிகளுக்கு வந்த எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளார். அந்த எதிர்ப்புகளில் முதன்மையாக இருந்தது, ஆறுமுக நாவலரின் தலைமையில் இயங்கிய யாழ்ப்பாண சைவ வேளாளர்களின் எதிர்ப்பு. அந்த எதிர்ப்பு இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்குக் காரணம், நாவலரும் அவரது ஆதரவாளர்களும் சமூகக்களத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள். பள்ளிகள், கல்விக் கூடங்கள் முதலியன. மக்களின் உலகியல் வாழ்க்கையோடு தொடர்புடையனவாக இருந்த மாற்றங்கள்.

***

இருபதாம், இருபத்தியன்றாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பிரமிக்கத்தக்கவை. மனிதர்களைப் பேரண்ட வெளியில் சஞ்சரிக்க வைத்திருக்கிறது அறிவியல். பேரண்டத்தின் அமைப்பு பற்றிய புதிய புதிய வெளிச் சங்கள் ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற அறிவியலாளர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கின்றன. புதிய கோளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. நிலவில் மனிதன் கால் தடம் பதித்துள்ளான். மனிதர்கள் அனுப்பிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளத்தைத் துருவித் துருவி ஆராய்ந்து வருகின்றன. 500 ஆண்டுகளுக்கு முன்பு உலகைச் சூழ்ந் திருந்த இருளை அகற்றவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், மனிதர்களின் ஆயுள் காலம் நீடிக்கவும் அவர்கள் பல்வேறு வசதிகளையும் அறிவுச் செல்வங்களையும் அனுபவிக்கவும் அறிவியலும் அதனோடு இணைந்த அறிவொளி, பகுத்தறிவுச் சிந்தனையும் நமக்கு உதவியுள்ளன. பேரண்டம் ஒழுங்கான நியதி களில்படி இயங்கிவருவதற்கான அடிப்படையாக உள்ள ‘கடவு ளின் துகள்’ என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்று நாம் காண்பது என்ன? எந்த நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் உலகைச் சூழ்ந்திருந்த மூட நம்பிக்கை, அறியாமை என்னும் இருளை அகற்றினவோ அந்த அறிவியலின் தொழில்நுட்பத்தின் சாதனைகளை மதவாத வலதுசாரி சக்திகள் முமுமையாகத் துய்ப்பதுடன் மட்டுமல்லாது, அவற்றை மத, கடவுள் நம்பிக்கை களையும் மூட நம்பிக்கைகளையும் பரப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மதவாத வலதுசாரிகள் மிக

நாசூக்கான, சாதுரியம் மிக்க, கணினிப் பொறியியலையும் மின்னணுத் தகவல் தொழில்நுட்பத்தையும் திறமையாகக் கையாள்கின்றவர்களையும், பல்கலைக் கழகங்களில் உயர் கல்விப் பட்டம் பெற்றவர்களையும் தமது அணிகளுக்குள் வைத்திருக்கிறார்கள். கணினி அறிவும் மின்னணுத் தொழில்நுட்பமும் மின்னஞ்சல், இணையதளம், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களும் இலட்சக்கணக்கான மக்களுடன் இந்த மதவாத வலதுசாரிகள் தொடர்பு கொள்வதற்கு உதவி செய்கின்றன. அது மட்டுமின்றி பௌதீக அறிவியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். மரபணுவியல், அணுத்திரள் உயிரியல், ஒப்பீட்டு உடல்கூறியல், உடலமைப்பியல், புவியியல் போன்ற அறிவியல் துறைகளின் மொழியையும் கருத்தாக்கங்களையும் நன்கு அறிந்து கொண்டு, அவற்றைப் பயன்படுத்தியே பரிணாமக் கொள்கைக்கு எதிரான விளக்கங்களையும் கூறக் கூடிய ஏராளமான அறிவாளி களையும் மதவாத வலதுசாரிகளிடம் பார்க்கிறோம். கிரியேஷ னிசம், இஸ்லாமிய அறிவியல், இந்து அறிவியல் முதலியன இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். இவை இலட்சக்கணக்கான மக்களின் மனதில் உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்துகள் மீது சந்தேகங்களை உருவாக்குகின்றன.

அதனால்தான் இருபத்தியன்றாம் நூற்றாண்டிலும்கூட அமெரிக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களை டார்வினின் ‘உயிர்களின் தோற் றமோ’, தாமச் பெயினின் ‘பகுத்தறிவின் யுகமோ’ ஈர்ப்பதில்லை; மாறாக அவர்கள் நாடுவதும் நம்புவதும் விவிலியத்திலுள்ள ‘ஆதியாகமு’ம் ‘வெளிப்படுத்துதல்களு’ம்தான். டார்வினின் ‘பரிணாமக் கொள்கை’யை மாணவர்களுக்குக் கற்பிப்பதைத் தடை செய்யும் கல்வி நிறுவனங்களும் மாகாண அரசாங்கங்களும்கூட அமெரிக்காவில் இருக்கின்றன. இவையெல்லாம் போதாதென்று ‘ஒளி அனைத்தும் கிழக்கிலிருந்தே வருகின்றது’ என்று ஆன்மிகச் செல்வம் வழங்குவதற்கு கீழைத்தேய புதுயுகத் தத்துவவாதிகளான ரஜ் னீஷ், ஓஸோ, ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ஆகியோரும் அமெரிக்காவிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இயங்கி வருகின்றனர்.

இந்தியாவிலும்கூட முழுக்கமுழுக்க மதம், கடவுள் பற்றிய மூட நம்பிக்கைகளை மக்களிடம் மேன்மேலும் வலுப் பெறச் செய்வதற்காக 24 மணி நேர இடைவிடா நிகழ்ச்சிகளை நடத்தும் சேனல்கள் ஒருபுறமிருக்க ஒட்டுமொத்த சேனல்களில் நூற்றுக்கு தொன்னூறொன்பது விழுக்காடு சேனல்களில் கடவுள், மதம் பற்றிய நிகழ்ச்சிகள் கணிசமான அளவுக்கு இடம் பெறுகின்றன.

பெருங்கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு, கும்பமேளா, மகாமகம், சனிப்பெயர்ச்சி போன்றவை நேரலையாக ஒளிபரப்பப் படுகின்றன. மூட நம்பிக்கை சார்ந்த மத நிகழ்ச்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளாகத் தயாரிக்கப்படுகின்றன. மத விஷயங்களையும் சோதிடத்தையும் பரப்பாத அச்சு ஊடகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

 2007இல் ஐபிஎன்-சிஎன்என்-ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றின் சார்பின் டெல்லியிலுள்ள ‘வளரும் சமுதாயங்கள் பற்றிய ஆய்வு மையம்’ (Centre for the Study of Developing Societies) நடத்திய கருத்துக் கணிப்புகளை மீரா நந்தா ‘கடவுள் சந்தை: உலகமாயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துத் தன்மையாக்குகிறது’ (The God Market : How the Globalisation makes India more Hindu) என்னும் நூலில் மேற்கோள் காட்டுகிறார். அந்தக் கருத்துக் கணிப்பும் அதனுடன் இணைந்த புள்ளிவிவரங்களும் கீழ்க்காணும் உண்மைகளைச் சுட்டிக்காட்டு வதாகக் கூறுகிறார்: 1.கடந்த ஐந்தாண்டுகளில் (2002-2007) இந்தியர்களிடையே மத உணர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ளது. கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 30 விழுக்காட்டினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் முன்பைவிட மிகவும் மத உணர்வு கொண்டவர்களாகிவிட்டதாகக் கூறினர். இரண்டே இரண்டு விழுக்காட்டினர் இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறினர். (2) கல்வியும் நகர வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பும் இந்தியர்களை முன்பைவிடக் கூடுதலான மத உணர்வு கொண்டவர்களாக்கி யுள்ளனவேயன்றி அவர்களது மத உணர்வைக் குறைக்கவில்லை; (3) கிராமப்புற, படிப்பறிவற்ற மக்களைக் காட்டிலும் நகர்ப்புறப் படித்த இந்தியர்களிடத்தில்தான் மத உணர்வு அதிகமாக உள்ளது; (4) கிராமங்களைவிட சிறு நகரங்களிலும் பெரு நகரங்களிலும் தான் மத உணர்வு அதிகரித்துள்ளது.

தான் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மீரா நந்தா கூறுகிறார் : ஜனரஞ்சக இந்துயிசம் பெரும் புத்தெழுச்சி கண்டுள் ளது. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி எல்லோருமே கடவுள் களை நாடுகின்றனர். குருக்களுக்கும் புரோகிதர்களுக்கும், பூசாரிகளுக்கும், சோதிடர்களுக்கும், வாஸ்து நிபுணர்களுக்கும், ஆன்மிக ஆலோசகர்களுக்கும் நல்ல யோகம் அடித்துக் கொண் டிருக்கிறது. இந்த ஜனரஞ்சக இந்துயிசத்தின் புத்தெழுச்சி, இந்தியாவில் கடைபிடிக்கப்படுவதாகச் சொல்லப்படும் மதச்சார் பின்மைக்கு எதிரானதல்ல என்றும் இந்த மதச்சார்பின்மையின் காரணமாகத்தான் இந்தப் புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவது புதிராகத் தோன்றலாம்.

ஆனால், இதுதான் உண்மை. ஏனெனில் இந்திய வகை மதச்சார்பின்மை, பெரும்பான்மை மதத் துடன் நெருக்கமான, அதற்கு ஊட்டம் கொடுக்கக்கூடிய உறவை வளர்த்துக்கொள்ள அரசு யந்திரத்தை அனுமதிக்கின்றது. நவ - தாராளவாத அரசும் தனியார் துறையும் பங்குதாரர்களாக ஆகி விட்டதால் அரசு, கார்ப்பரேட் துறை, இந்து நிறுவனம் ஆகிய மூன்றுக்குமிடையே சொகுசான முக்கோண உறவு ஏற்பட்டு விட்டது... அரசு - கோவில் - கார்ப்பரேட் கூட்டணி புதிய நிறுவனரீதியான வெளியை உருவாக்குகிறது. இந்த வெளியில், உலக அரசியல் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்ட புதிய சமூகச் சூழலுக்குப் பொருத்தப்பாடு உடையதாக இருக்கும் வகையில் இந்துயிசம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு வருகின்றது.

இப்படித் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு வருகையில் அது மேன்மேலும் தேசியவாதத்தன்மையை மேற்கொள்கிறது. அதாவது மதச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் இந்து அடையாளத்தை உறுதிப்படுத்தும், வலுப் படுத்தும் அரசியல் நிகழ்ச்சிகளாக மாற்றுகின்றது. மத சடங்கு களும் வழிபாடுகளும் நடக்கும் வெளிகள் அரசியல்மயமாக்கப் பட்ட பொது வெளிகளாக மாற்றப்படுவது இன்று மிக இயல்பான தாகிவிட்டது. சடங்குகளுக்கும் வழிபாட்டுக்குமான வெளிகளை அரசியல் பொது வெளிகளாக மாற்றும் நிகழ்முறை நமது கூட்டுப் பொது புத்தியில் இரண்டறக் கலந்துவிட்டது. எனவே அப்படியன்று நிகழ்வதை நாம் கவனிக்கவோ, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ அதைத் தடுக்கவோ செய்யாமல் போய்விடுகின் றோம். எனவே அந்த நிகழ்முறை தடையில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...

மிகச் சாதாரணமான இந்து சடங்குகளும்கூட இன்று கடவுள் வழிபாட்டை தேச வழிபாட் டுடன் கச்சிதமாக இணைத்துவிடுகின்றன Hindutva Fascism: What It Is and How to Fight It by by Analytical Monthly Review,MRZine, 25.09.2013, 25.09.2013).

சங் பரிவாரப் பொது நிகழ்ச்சிகளின் போது காட்சிக்கு வைக்கப் படும் ‘பாரத மாதா’வின் ஓவியத்தில் ஒரு இந்துப் பெண் கடவுளைப் போலவே சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். தலையில் கிரிடமும் அருகில் ஒரு ஆண் சிங்கமும். ஆனால், பாரதா மாதா மடிசார் மாமிகளைப் போலவோ, மகாராஷ்டிரக் கொங்கண் பகுதியிலுள்ள சாமானியப் பெண்கள் போலவோ புடவை உடுத்தியிருப்பதில்லை. நவீன கால ஜாக்கெட்டும், முன் கொசுவம் வைத்த புடவையும் நகை நட்டுகளும் அணிந்திருக் கிறாள். கைக்கடிகாரம் மட்டும் பாக்கி!

இந்த நிலைமை ஏற்படுவதற்குக் கடந்த 66ஆண்டுக் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், பொருளாதாரக் காரணிகளே முக்கியப் பாத்திரம் வகித்திருக்கின்றன. மரபான சம்பிரதாயங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்கும் உரிமைகள் என்னும் பெயரால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26ஆம் பிரிவுகள் சாதியமைப்பைக் காப்பாற்றி வருகின்றன. சுதந்திர இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தல் முறையே சாதியையும் அதற்கு ஒப்புதலளிக்கும் மதம், மத சாஸ்திரங்கள், சடங்குகள் ஆகிவற்றைப் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவரே வெற்றி பெற்றவர் (one who runs past the post first) என்பது இங்கிலாந்திலுள்ள ‘வெஸ்ட்மின்ஸ்டர் முறை’.

அந்த முறையையே இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டது. இதன் விளைவு என்ன? எந்தவொரு நாடாளுமன்ற தொகுதியிலும் சட்டமன்றத் தொகுதி யிலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரே வெற்றியடைய இது வழிவகுத்துள்ளது. இதில் அரிதாக சில விதிவிலக்குகள் இருக்க லாம்.

ஒரு தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டு அதில் நான்கு வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 75 விழுக்காடு என்றால், மீதி 25 விழுக்காடு வாக்கு களைப் பெற்றவர் வெற்றி பெற்றவராகிவிடுகிறார். அதாவது, அந்தத் தொகுதியில் வெறும் 25 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றவரை அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளச் செய்வது என்ன ஜனநாயகம்? அந்த ஐந்து வேட்பாளர்கள் அனை வருமே ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்று வைத்துக்கொண் டாலும், வெற்றி பெற்றவர் எப்படிப் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருப்பார்?

அட்ட வணை சாதியினருக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது அங்கு பெரும்பான்மையாக அல்லது எண்ணிக்கை யில் மற்ற சாதியினரைவிட அதிகமாக உள்ள சாதியினரே. சிறு எண்ணிக்கையிலான சாதியினருக்கோ, மதச் சிறுபான்மையின ருக்கோ இந்த ஜனநாயக முறையின் மூலம் நாடாளுமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காது; அல்லது அறவே இருக்காது. அரசியல் கட்சிகளுக்கும்கூட இதே கதிதான். 30 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சிக்கு சட்ட மன்றத்தில் இருபது இடங்கள் மட்டுமே கிடைக்கலாம். அதே அளவு வாக்குகளைப் பெற்ற இன்னொரு கட்சிக்கு 150 இடங்கள் கிடைக்கலாம். ஆக, இந்தத் தேர்தல் முறையை ஜனநாயகம் என ஏற்றுக்கொள்வதும்கூட ஒரு மூட நம்பிக்கையே.

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே கடந்த முப்பதாண்டுகளாக மத உணர்வும், மூட நம்பிக்கைகளும், மத வெறியும் வளர்ந்துள்ளன. வாஸ்தும் ஜாதகமும் பார்ப்பது கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களின் குடும்பங்களிலும்கூட மிக இயல்பாகி விட்டது. யார் வேண்டுமானாலும் வாஸ்து வல்லுநராகி விட முடிகின்றது. வீட்டுக்கு வெளியில் சாதியில்லை என்று சொல் லக்கூடிய கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் ஆகியோரில் மிகப் பெரும்பான்மையினர் சாதி உறவுகளையும் சாதி சம்பிரதாயங்களையும் கைவிடுவதில்லை. அப்படியிருக்க பா.ம.க. தலைவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. உழைக்கும் மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய வருமானத்தை ஒருபுறம் டாஸ்மார்க்குக்கும் மறுபுறம் கோவில், சாமியார்கள், மூட நம்பிக்கைச் சடங்குகள் ஆகியவற்றுக்கும் கொட்டிக் குவிக்கிறார்கள்; தங்கள் பிள்ளை குட்டிகளுக்கான கல்வி வசதிக்கோ. மருத்துவ வசதிக்கோ ஒரு ரூபா கூடக் கொடுக்க இவர்களுக்கு மனம் வராது.

பெரியார் பிறந்த மண், சிங்காரவேலர் தோன்றிய நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரசாரத்தை சில பெரியாரிஸ்டுகள் செய்து வருகின்றனர். ஆனால், தபோல்கரைப் போன்ற ஒரு மனிதரோ, அவரும் அவரது இயக்கத்தினரும் தோற்றுவித்தது போன்ற ஒர் இயக்கமோ இன்னும் இங்கு வரவில்லை. பெரியார் - அண்ணா திராவிட இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் இரு கட்சிகள் 36 ஆண்டுகளாக தமிழகத் தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றன. பகுத்தறிவைப் பரப்புவதற்கான, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கான எந்த செயல் திட்டத்தையும் அவர்கள் உருவாக்கவில்லை. அவர்க ளோடு சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி கூட்டுச் சேர்ந்து கொள்ளும் இடதுசாரிகளுக்கும் தலித் இயக்கத்தினருக்கும்கூட இதில் அக்கறை கிடையாது. தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறை சங் பரிவாரம் போலச் செயல்பட்டுவருவதைப் பற்றி எந்த இடதுசாரியும் கேள்வி கேட்பதில்லை.

சாதி, மத சம்பிரதாயங்களைக் காக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் 25,26 ஆகியன ஒருபுறமிருக்க, மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளையும் மூட நம்பிக்கைகளையும் கண்டனம் செய்பவர்களை, ‘மத உணர்வுகளைப் புண்படுத்துபவர்களாகக்’ குற்றம் சாட்டி தண்டிப்பதற்கு வழிவகுக்கும் அரசியல் சட்டப் பிரிவு 295 (ஏ)வும் இருக்கின்றது. இந்தப் பிரிவுகளுள்ள அபாயங் களை உணர்ந்து அவற்றை ஒழிப்பதற்கு அம்பேத்கர் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அவரது இறப்புக்குப் பிறகு பெரியார் மட்டுமே சாகும் வரை இந்தச் சட்டப் பிரிவுகளை எதிர்த்துப் போராடி வந்தார்.

கருத்துச் சுதந்திரம் என்பது அறிவொளி, பகுத்தறிவு இயக்கத் தினரால் உலகம் முழுவதிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்ட நெறி. ஆனால் தமிழகத்திலோ பல்கலைக் கழகங்களிலும்கூட , அரசியல் நிர்பந்தங்களின் காரணமாக கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. 1980களில் சென்னைப் பல்கலைக்கழகம் இன்குலாபின் கவிதைத் தொகுப்புக்குத் தடை விதித்தது.

அண்மையில் சில இஸ்லாமிய இயக்கங்களின் நிர்பந்தங்களின் பேரில், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையக் காரணம் காட்டி காவல் துறை தலையிட்டு, அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இஸ்லாமியப் பெண்ணிலைவாத அறிஞர் கருத்துரையாற்றுவது தடை செய்யப்பட்டதும் இதே பல்கலைக்கழகத்தில்தான். திரைப்படங்கள், புத்தகங்கள் ஆகியன வற்றைக் கருத்துரீதியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக தடை செய்யும்படி கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அந்த வேண்டு கோள்கள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஒருவரை சுய சிந்தனையாளராவதற்கு, பகுத்தறிவாளரவதற்குப் பெரும் அறிவு முயற்சி தேவையில்லை. அண்மையில் நடந்த மூன்று நிகழ்ச்சிகளை ஒருவர் நினைவுகூர்ந்து தனது சாமானிய புத்தி கொண்டு அவற்றைப் பரிசீலித்தாலே போதும். உத்தர்காண் டில் உள்ள பத்ரிநாத் சிவன் கோவிலுக்கு இலட்சக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். அங்குள்ள சூழலியலமைப்பு மிகவும் பலகீனமானது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சிவபெருமானே அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத கடவுள் அவர்.

கேதர்நாத்தில் ஒவ்வோராண்டும் சில குறிப்பிட்ட மாதங்களில் ஒரு குகையில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் பனிக்கட்டி உருவாகும். அதை சிவலிங்கமாகக் கருதி இலட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று, குப்பைக்கூளங்களைக் கொட்டி நீராதாரங்களிலொன்றான அந்தப் பனிமலையை மாசுபடுத்துகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாம். காரணம், அந்த பனிக்கட்டி லிங்கம் சிறிது நாளிலேயே உருகிவிட்டதுதான்.

இதைப்பற்றி ஒரு தொலைக்காட்சி ஊடகம் - மூட நம்பிக்கை நிக்ழ்ச்சிகளை ஒளிபரப்புவதை பணம் பண்ணும் காரியங்களி லொன்றாகக் கருதும் ஊடகம் - வெட்கமேயில்லாமல் கூறியது: ‘பருவ நிலை மாற்றத்தினால்தான் லிங்கம் சீக்கிரமே உருகி விட்டது’. அதாவது, கேதர்நாத் கடவுளால் பருவ நிலை மாற்றத் தைத் தடுக்கவோ, பருவநிலை மாற்றத்துக்கும் தாக்குப்பிடித்து லிங்கமாக நிற்கவோ முடியவில்லை!

மூன்றாவது நிகழ்ச்சி, திருவள்ளூரில் நடந்த சோக நிகழ்ச்சி. அழகு நிலையமொன்றை ஒருவர் தொடங்குகிறார். தொடக்க நாள் பூஜையின்போது அவரது நண்பர் - வாஸ்து நிபுணர்களிலொருவர் - பெயர்ப் பலகை மாட்டப்பட்டுள்ள விதம் வாஸ்துவுக்கு ஏற்புடையதாக இல்லை என்று சொல்கிறார். உடனே அந்தக் கடைக்காரரும் அந்த நண்பரும் அவரது மகளும் இன்னொரு மனிதரும் சேர்ந்து பெயர்ப்பலகையை (அது உலோகத்தால் ஆனது) வாஸ்துவுக்கு உகந்தபடி திருப்பி வைக்க முயன்றனர். அப்போது அந்தப் பலகை உயர் அழுத்த மின்சாரம் ஓடும் கம்பிகளில் படுகின்றது. அந்த நால்வரும் உடல் கருகிச் சாகின்றனர்.

***

ஐரோப்பிய அறிவொளி மரபு ஈட்டிய முக்கியமான அரசியல் சாதனைகளிலொன்று அரசும், மத நிறுவனங்களும் ஒன்றோ டொன்று இணைந்திருந்த நிலையை மாற்றி அரசு விவகாரங்களில் மதமோ, மத நிறுவனங்களோ தலையிடக்கூடாது என்பதை நவீன அரசுகளின் நெறிகளிலொன்றாக ஆக்கியதுதான். இதைத்தான் ‘மதச்சார்பற்ற கொள்கை’ (secularism) என்று கூறுகிறோம். இது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலுமுள்ள அரசுகளால் ‘அங்கீகரிக்கப்பட்ட கொள்கையாக’ இருந்து வருகின்றது என்றா லும், அந்த நாடுகளின் பெரும்பாலானவற்றின் சமுதாயங்களில் மத உணர்வுக்கும் மதப் பற்றுக்குமுள்ள ஆதிக்கமோ செல்வாக்கோ இன்னும் மறையவில்லை. அமெரிக்க அரசமைப்புச் சட்டம் ‘மதச்சார்பின்மையை’ ஏற்றுக் காள்கிறது.

ஆனால் அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலானோர் மதப் பற்று கொண்டவர் களாகவும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் வர்க்கங்களும் மத உணர்வை வளர்ப்பவர்களாகவும், கிறிஸ்துவ, யூத அடிப்படைவாதங்களை ஊக்குவிப்பவர்களாகவும் இருக் கின்றனர். அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான புரொடொஸ் டெண்ட் பிரிவுகள் (denominations) உள்ளன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ‘கடவுளின்’ பெயராலேயே உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.

‘மதச்சார்பின்மை; விஷயத்தில் மிகக் ‘கறாராக’ இருப்பதாகவும் அதன் காரணமாக மதப் பண்பாடு சார்ந்த உடைகளையோ சின்னங்களையோ கல்வி நிறுவனங்களில் யாரும் அணிந்து வரக் கூடாது என்னும் நிபந்தனையைத் தான் விதிப்பதாகவும் கூறும் பிரெஞ்சு அரசாங்கம் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் நிதி உதவிகளில் பெரும்பாகத்தை கத்தோலிக்க நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்கின்றது. பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்பவர், ஆங்கிலிகன் திருச்சபையைச் சேர்ந்த கான்டர்பரி தலைமை ஆயரால் நடத்தப்படும் சடங்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. தொழிற்கட்சியைச் சேர்ந்த டோனி ப்ளேய்ர் பிரதம ராக இருந்த காலகட்டத்தில்தான் கல்வி, பண்பாட்டுத் துறை களில் மிகப் பிற்போக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பிரிட்டனின் முன்னாள் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கக் காலனி நாடுகளையும் யூகோஸ்லேவியாவின் உடைவுக்குப் பிறகு ஓரளவு கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்த பல இலட்சம் பேருக்கு இங்கிலாந்தில் குடியேற அனுமதி வழங்கப்பட்டது.

வேலையற்றோருக்கான உதவி தொகை, இலவசக் கல்வி போன்ற சலுகைகள் இவர்களுக்கும் வழங்கப்பட்டாலும், பெரும்பாலும் சேவைத் துறையிலேயே, மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். இவர்களில் மிகச் சிறு எண்ணிக்கையிலானவர்களே பொருளாதாரரீதியான ஏற்றம் பெற்றுள்ளனர். மிகப் பெரும் பாலானோர் உழைக்கும் மக்களே. இவர்களிடையே வர்க்க அடிப் படையிலான ஒற்றுமை உணர்வு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு ‘பன்மைப் பண்பாட்டுவாதம்’ என்னும் கோட்பாடு ஊக்குவிக்கப்பட்டு அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்துள்ள ஒவ்வொரு இனக் குழுவுக் கும் மத, மொழி சிறுபான்மையினருக்கும் அவரவரது பண்பாடு களைக் காப்பாற்ற உதவுதல் என்னும் பெயரால் அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது.

இங்கிலாந்தில் இத்தகைய நலன்புரிச் சங்கங்கள் ஏராளமாக உள்ளன. டோனி ப்ளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் கல்வித் துறையில் மிகப் பிற்போக்கான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதாவது இலவச, மதச்சார்பற்ற கல்வியை வழங்கும் அரசாங்கக் கல்வி நிறுவனங்களின் இடத்தை ‘மத நம்பிக்கைப் பள்ளிகள்’ (Faith Schools) எடுத்துக்கொள்ள அனுமதித்தது. அதாவது அந்தந்த மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தந்த நம்பிக்கையை வளர்க்கும் பள்ளிகளில் படிக்க வைக்கலாம் என்றும், இது எல்லா மதத்தினரையும் சரிசமமாகப் பார்க்கும் கொள்கை என்றும் டோனி ப்ளேயர் அரசாங்கம் கூறியது. அதாவது பின்நவீனத்துவாதிகள் கூறும் ‘பன்மைத்துவம்’, ‘அடையாள அரசியல்’ ஆகியவற்றை இங்கிலாந்தும் வேறு சில மேற்கு ஐரோப்பிய நாடுகளும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளன.

குழந்தைகள் புற உலகத்தைத் திறந்த மனத்துடன் பார்ப்பதற்கும் தமது உலகக் கண்ணோட்டத்தைத் தாமே சுதந்திரமாக வளர்த்துக்கொள்வதற்குமான வாய்ப்பையும் உரிமையையும் இந்த ஏற்பாடு பறித்துக் கொள் கிறது. மதச்சார்பற்ற, பகுத்தறிவுக் கண்ணோட்டம் வளர்வதைத் தடுக்கிறது. இங்கிலாந்திலுள்ள கிறிஸ்துவர்களில் தேவாலயங் களுக்குச் செல்பவர்கள் 7% மட்டுமே.ஆனால், அரசாங்க உதவி பெறும் கிறிஸ்துவ நம்பிக்கைப் பள்ளிக்கூடங்கள் 36%ஆக உள்ளன.

மேலும், ‘மத நம்பிக்கைப் பள்ளிகள்’ குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருக்க, மதச்சார்பற்ற கல்விப் பள்ளிகள் சிதறிக் கிடக்கின்றன. மீடியத்தின் மூலம் ஆவியுலகுடன் தொடர்பு கொள்ளுதல், சோதிடம் பார்த்தல், கைரேகை சாத்திரம் போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறவர்களும் யதார்த்த உலகிலிருந்து விலகி ‘தியானங்களில்’ ஈடுபடும்படி கூறும் புதுயுகத் தத்துவவாதிகளும் எல்லா மேற்கு நாடுகளிலும் பெருகி யுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலுமே அனைத்துவகையான மத அடிப்படைவாதங்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் உருவாகி யுள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் தத்தம் வசதிக்கேற்ப மத அடிப் படைவாதிகளையும் மத பயங்கரவாதிகளையும் உருவாக்குவதும், பின்னர் அவர்களை ஒடுக்குவதுமான நடைமுறை கடந்த நாற்பதாண்டுகளாக இருந்து வருகின்றது.

சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய ‘சோசலிச’ நாடுகளின் வீழ்ச்சிக்கும் யூகோஸ்லேவியாவின் உடைவுக்கும் பிறகு ஏற்பட்ட புதிய அரசுகளுக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ திருச்சபைகளுக்கு மிடையே மிக நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. போஸ்னியா வில் இஸ்லாமிய அடிப்படைவாதம் செல்வாக்குப் பெற்றுள்ளது. அரபு நாடுகள் பெரும்பாலானவற்றிலும் ஈரான், இந்தோனீஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஃபிலிப்பைன்ஸ் தீவுகள் சிலவற்றி லும், இஸ்லாமிய அடிப்படைவாதம் செல்வாக்குச் செலுத்து கிறது.

தென்னமெரிக்காவில் கத்தோலிக்க மதம் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறது. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒரு பகுதி தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் ஏற்படும் முற்போக்கான அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வருகின் றது. ஆப்பிரிக்காவில் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துவத் திருச் சபையும் கணிசமான நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் மக்களைக் கவ்வியுள்ளன. ஆசியாவிலும் ஒரு சில நாடுகளின் அரசுகள் மட்டுமே தங்களை ‘மதச்சார்பற்றவை’ என அறிவித் துள்ளன. சீனாவில் முதலாளியம் மீட்கப்படத் தொடங்கிய 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு வகையான மதக் கோட் பாடுகளும் வழிபாட்டு, நம்பிக்கை முறைகளும் நாளுக்கு நாள் பிரபல்யம் அடைந்து வருகின்றன.

இந்திய அரசு, ‘மதச்சார்பின்மை’ என்பதை ‘எல்லா மதங் களையும் சரிசமமாக மதித்தல்’ என்று விளக்குவதுட நில்லாது ‘ஒரு மதம் மற்றெல்லா மதத்தைவிடக் கூடுதாலாக சமமானது’ என்னும் அடிப்படையிலேயே செயல்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கப்படும் விருதுகளும் நவீனப் போர்க் கருவிகளுக்குச் சூட்டப்படும் பெயர்களும் பார்ப்பனிய இதிகாசங் களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் எடுத்துக் கொள்ளப்படு பவையாக இருக்கின்றன; சிறி சிறி ரவிஷங்கர், ஜக்கி வாசுதேவ், கல்கி பகவான், பங்காரு அடிகள், சாய்பாபா, ஆசாராம் பாபு, நிர்மல் பாபு, அமிர்ந்தானந்தமாயி, நித்யானந்தா, பாபா ராம்தேவ் போன்ற மோசடி ஆன்மீகவாதிகளின் நிறுவனங்களில் உள்ள செல்வமும் ரியல் எஸ்டேட்டும் பெரும் தொழில் நிறுவனங் களிலுள்ள செல்வத்தின் அளவை வெட்கித் தலை குனிய வைப்பவை. பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் முதலியோர் இந்த மோசடிக்காரர்களுக்கு உறு துணையாக நிற்கின்றார்கள். அவர்கள் இந்த மோசடிக்காரர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதும் பொதுவெளிகளில் இந்து சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதும் மிக இயல்பாகிவிட்டன. சோதிடம் பார்க்காத, சாமியார்களிடம் குறி கேட்காத அரசியல் வாதிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சங்கராச்சாரி, நித்யானந்தா ஆகியோரின் மோசடிகள் வெளி உலகத்திற்குத் தெரியவந்து அவர்கள் மீது வழக்குத் தொடரப் படுகின்றதென்றால் அதற்குக் காரணம் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களிடம் அவர்கள் ‘நேர்மையாக’ நடந்து கொள்வதில்லை என்பதுதான். ஆசாராம் பாபு கள்ளச் சாராயம் விற்பவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான ஆசிரமங்களை நிறுவி, பன்னூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக் குமளவு அவர் உயர்ந்ததற்கு பா.ஜ.க. துணை புரிந்திருக்கின்றது.

மறுபுறம் சிந்தனைத் துறையில் ‘இந்து அறிவியல்’ (Hindu Science), வேத அறிவியல் (Vedic Science) ஆகியன பிரபல்யப் படுத்தப்படுகின்றன. இக் கருத்தாக்கங்களைத் தோற்றுவித்தவர் விவேகானந்தர். உலகிலுள்ள எல்லா மதங்களின் முழு நிறைவாக இந்து மதம் இருப்பதுபோல, உலகைப் படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கும் ஆற்றலின் அறுதி மூலத்தைக் கண்டறிய முயலும் அறிவியல் அனைத்தினதும் முழு நிறைவாக வேத அறிவியல் இருக்கும் என்று 1893இல் சிக்காகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் அறிவித்தவர் அவர். தீவிரவாத தேசியவாதியாக இருந்து பின்னர் ‘ஆன்மிகவாதி’யாக மாறிய அரவிந்தர், உலக - ஆன்மாவின் ‘சாகச பயணங்களே’ பரிமாண வளர்ச்சியாகும் என்று கூறினார். அதாவது உணர்வற்ற வெறும் சடப் பொருளிலிருந்து உணர்வுள்ள மனித இனம் தோன்றியது என்றும், இது உலகிலுள்ள எல்லா மனிதர்களினதும் உணர்வுகளை ஒன்றிணைக்கும் மா உணர்வை (supermind) நோக்கிப் பரிணமித்து வருகின்றது என்றும் கூறினார். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ‘தலைகீழ் பரிணாமக் கொள்கை’யைப் பரப்பிவருகின்றனர். அதாவது மனிதர்கள், பிற உயிரினங்கள் எல்லாமே பிரமனுடன் முதலில் ஒன்றாக இருந்தனர். பின்னர்தான் அவை பிரமனின் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு வந்து சேர்ந்தனர். பிரமனுடன் மீண்டும் இணைவதுதான் நாம் செய்ய வேண்டிய ‘ஆன்மீக முயற்சி’ என்று இந்த இயக்கத் தினர் கூறுகின்றனர்.

இந்திய தேசியவாதச் சிந்தனை என்னும் நெருப்பை மூட்டு வதற்கான சிறு பொறி விவேகானந்தரும் அரவிந்தரும் என்றால், அதை இன்னும் பெரிதாக வளர்த்து இந்து மதம் என்பது அறிவியல்ரீதியான மதம் என்னும் கருத்தை வலுப்படுத்துவதற்கு தயானந்த சரசுவதி, எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்து களும் விவேகானந்தரின் சீடர்களின் எழுத்துகளும் பயன்பட்டன. மதச்சார்பற்ற நேருவும்கூட வேத கால இந்துச் சிந்தனை தொடக் கத்தில் நவீன அறிவியலுக்குப் பொருத்தமானதாக இருந்தது என்றும் ஆனால், பிற்காலத்தில்தான் மூட நம்பிக்கைகள் என்னும் மாசு அதன் மீது படிந்துவிட்டது என்றும் கூறினார். வேதங்கள் என்பன ‘அறிவியலின் இன்னொரு பெயரே தவிர வேறல்ல’ என்னும் கருத்தைப் பரப்பும் பணியை மமேஷ் யோகி போன்ற ‘குரு’க்களும் ‘சுவாமிகளும்’ உலகெங்கும் மேற்கொண்டு வருகின்ற னர். உலகெங்கும் எண்ணற்ற ஆசிரமங்களும் யோகா மையங் களும் அமைத்து இந்துமதத்திற்கான ‘அறிவியல்’ வியாக்கி யானத்தை வழங்கி வருகின்றனர். இன்று சங் பரிவாரத்தினர் ‘இந்து அறிவியல்’ என்னும் கருத்தாக்கதிற்கு பெரும் பலத்தை ஊட்டி வருகின்றனர். அவர்கள் நவீன அறிவியலையும் தொழில்நுட்பத் தையும் எதிர்ப்பவர்கள் அல்லர்; மாறாக, பிற்போக்கு சமூக, பண்பாட்டு, அரசியல் நோக்கங்களுக்காக இவற்றைப் பயன்படுத்து கின்றனர்.

***

நவீனகாலப் பகுத்தறிவு - நாத்திக மரபுக்கான அடிப்படைக் கருத்துகளை நினைவுகூர்வோம். இவை என்ன சொல்கின்றன? மதமும் இறை நம்பிக்கையும் அறியாமை, மூட நம்பிக்கை ஆகிய வற்றின் விளைவுகள். மதம் என்பது மானுட நிலைமையின் பகுதி யல்ல, மாறாக அதிலிருந்து விலகுதலே. இருக்கின்ற யதார்த்த உலகிலிருந்து இல்லாத மறுவுலகிற்குத் தப்பிச் செல்லும் முயற்சியே. இது பகுத்தறிவுக்கு எதிரான கலகம். எனவே கல்வி புகட்டுவதன் மூலம் மதத்தின் செல்வாக்கை, இறைநம்பிக்கையை அகற்ற முடியும். மதச்சார்பற்ற கல்வியை ஊக்குவிக்க வேண்டும்; அதைப் பரவலாக்க வேண்டும்; பகுத்தறிவோடும் தர்க்க முறை யோடும் சிந்திக்கும்படி இளைஞர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்; அறிவியல் அறிவை வளர்க்கவும் விரிவுபடுத்தவும் வேண்டும். மனிதர்கள் சகோரத்துவ உணர்வுடன் வாழும்படியும் ஒருவருக் கொருவர் அன்பு செலுத்தும்படியும் கற்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையாகக் கல்விபுகட்டப்பட்ட மனங்கள் தவிர்க்க முடியாதபடி கடவுளையும் மதத்தையும் அவற்றின் செல்வாக்கை யும் தாமாகவே நிராகரித்துவிடும். இவை சமூக வெளியில் இருப்ப தற்குக் காரணம் அறியாமையும் மூட நம்பிக்கையும் மேலோங்கி நிற்பதுதான். எனவே சமுதாயத்திலுள்ள எல்லோருக்கும் அறிவியல் அறிவைக் கொடுத்தோமேயானால், மதமும், கடவுள் நம்பிக்கையும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளும் தாமாகவே மறைந்துவிடும்.

‘இலௌகிகவாதி' (உலகியல்வாதி, லோகாயதவாதி)யின் குறிக் கோள்கள் யாவை என்பதை ‘THE THINKER’ ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறுகின்றது : “மறு உலக வாழ்க்கை பற்றிய கனவு களில் மிதப்பதற்கு அனைத்து மதங்களும் மனிதனை ஆயத்தப் படுத்த, உலகியலோ இவ்வுலக எதிர்காலத்தில் மேம்பாடடை வதற்காக மனிதனைத் தயார்படுத்துகிறது... கடவுள் இல்லை என்று அவன் சொல்வதில்லை. மாறாக, வெறும் கருதுகோளாக மட்டுமே உள்ள ஒரு கடவுளைப் பற்றிய ஊகங்களைக் கொண் டிருப்பது இரத்தக் களரிகளையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவன் கூறுகிறான். மானுடகுலத்தின் ஆவணங்களைக் கற்றறிந்த உலகியல்வாதி, வெறும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்துகளுக்காக மனிதர்கள் போர்களைப் புரிந்து வந்துள்ளனர், அந்தப் போர்கள் மனிதகுலத்திற்கு நாசம் ஏற்படுத்துவதில் முடிந் திருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளான். தனது சொந்த மகிழ்ச்சியால் மனிதகுலத்திற்கு ஏதும் பயனில்லை என்பதைக் காணும் அவன், சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற அளவுக்குப் பயனுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சியையும் செய்கிறான். அன்பெனும் உலகளாவிய சகோதரத் துவத்தில் அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைப்பதை, இந்த உலகை சொர்க்கமாக மாற்றுவதை, எங்கோ வெகுதொலைவி லுள்ள மேகங்களிடையே உள்ள சொர்க்கம் பற்றிய கருத்தை அனைவரது மனங்களிலிருந்தும் அகற்றுவதைத் தனது குறிக்கோ ளாகக் கொண்டிருக்கின்றான். ‘உலகம் எனது நாடு, நன்மை செய்வதே எனது மதம்’ என்று தனது குறிக்கோளை அறிவிக்கின் றானே உலகியல்வாதி; அவன் மற்றவர்களை விட மேலானவன் என்பதற்கு இதைவிடச் சிறந்ததாக எதைச் சொல்ல முடியும்?” (ப. 112, தொகுதி V).

1843இல் எழுதிய ‘உரிமைகள் பற்றிய ஹெகலின் தத்துவம் பற்றிய விமர்சனத்திற்கான பங்களிப்பு - முன்னுரை’ என்னும் கட்டுரையில் மார்க்ஸ் கீழ்க்காணும் கருத்துகளைக் கூறுகிறார்:

“மதம்சாரா விமர்சனத்தின் அடித்தளம் இதுதான்: மதத்தை மனிதன் உருவாக்குகிறான், மனிதனை மதம் உருவாக்குவதில்லை. தன்னைத்தானே இன்னும் மீட்டெடுத்துக் கொள்ளாத அல்லது தன்னை ஏற்கனவே இழந்துவிட்ட மனிதனின் சுய உணர்வும் சுய மதிப்பும்தான் மதம். ஆனால், மனிதன் என்பவன் இந்த உலகத் திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும் அருவமான ஜீவி அல்ல. மனிதன் என்பவன் சமுதாயம், அரசு என்னும் மனிதனின் உலகம்தான். இந்த அரசும் சமுதாயமும்தான் மதத்தை உருவாக்கு கின்றன. மதம் என்பது இந்த உலகம் பற்றிய தலைகீழான உணர்வு. ஏனெனில் இந்த உலகமுமே தலைகீழானதுதான். மதம் என்பது இந்த உலகத்தின் பொதுக் கொள்கை; அதன் அறிவுக் களஞ்சியம்; அதன் ஜனரஞ்கமான தர்க்கவியல். அதன் ஆன்மீகப் பெருமித உணர்வு; அதன் உணர்ச்சிக் களிப்பு; அந்த உலகத்திற்கான தார்மிக ஒப்புதல்; அதற்கு வழங்கப்படும் பயபக்தி நிறைந்த பாராட்டு; ஆறுதலையும் நியாயப்படுத்துதலையும் வழங்குவதற்கு அந்த உலகத்தின் கையில் உள்ள உலகளாவிய அடிப்படை. மனித சாரத்தை அதிகற்பனையில் ஈடேற்றுவதே மதம். ஏனெனில் மனித சாரம் யதார்த்த நிலை எதனையும் பெறவில்லை. எனவே மதத் திற்கு எதிரான போராட்டம் என்பது மறைமுகமாக அந்த மதம் என்னும் ஆன்மீக நறுமணத்தைக் கொண்டுள்ள உலகத்திற்கு எதிரான போராட்டமே. மதத்தில் வெளிப்படும் துயரம் என்பது உண்மையான துன்பத்தின் வெளிப்பாடாகவும் அதேவேளை அந்த உண்மையான துன்பத்திற்குக் காட்டப்படும் எதிர்ப்பாகவும் உள்ளது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜீவியின் பெருமூச்சு; இதய மற்ற உலகத்தின் இதயம்; ஆன்மாவற்ற நிலைமகளுக்கான ஆன்மா. அது மக்களுக்கு வாய்த்த அபின். அவர்களது அதி கற்பனை மகிழ்ச்சியாக உள்ள மதத்தை ஒழித்தல் என்பது அவர் களது உண்மையான மகிழ்ச்சியைக் கோருவதுதான். தங்களது நிலைமை பற்றிய மாயைகளைக் கைவிடுமாறு அவர்களை அழைக்க, அந்த மாயைகளைத் தேவையாக்கும் நிலைமையைக் கைவிடுமாறு அழைக்க வேண்டியுள்ளது. ஆகவே மதம் பற்றிய விமர்சனம், கருநிலையில் மதம் என்னும் ஒளிவட்டத்தைக் கொண்ட துயர உலகம் பற்றிய விமர்சனமாகும்.

பிணைச் சங்கிலியின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிறித்தெடுத்துவிட்டது - அதிகற்பனையும் ஆறுதலும் நீங்கிய அந்தச் சங்கிலியை அவன் தொடர்ந்து சுமந்து வரவேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, அந்தச் சங்கிலியை அவன் தூக்கி யெறிந்துவிட்டு உயிருள்ள மலர்களைப் பறிக்க வேண்டும் என் பதற்காக. மனிதன், தானே தனது சூரியன் எனத் தன்னைத்தானே சுற்றி வரும் பொருட்டு, சிந்திக்கவும் செயல்படவும் தனது சங்கிலியைத் தூக்கியெறிந்துவிட்டு உணர்வுகளை மீட்டெடுத்துத் தனது யதார்த்த உலகைத் தானே வடிவமைப்பதற்கும் மதத்தின் மீதான விமர்சனம் அவனிடமுள்ள மாயைகளைக் களைகின்றது. மனிதன் தன்னைத்தானே சுற்றிவராதபோது, அவனைச் சுற்றிவந்து கொண்டிருக்கும் மாயச் சூரியன்தான் மதம்.

எனவே, உண்மையின் மறு - உலகம் மறைந்தொழிந்த பிறகு, இந்த உலகத்தின் உண்மையை நிறுவுவதுதான் வரலாற்றின் கடமையாகிறது. மானுட சுய - அந்நியமாதலின் புனித வடிவம் அம்பலப்படுத்தபட்ட பிறகு, சுய - அந்நியமாதலின் புனிதமற்ற வடிவத்தை அம்பலப்படுத்துவது வரலாற்றுக்குச் சேவை புரியும் தத்துவத்தின் கடமையாகின்றது. ஆகவே, விண்ணுலகம் மீதான விமர்சனம் இவ்வுலகம் மீதான விமர்சனமாக, மதத்தின் மீதான விமர்சனம் உரிமை பற்றிய விமர்சனமாக, கருத்துநிலை மீதான விமர்சனம் அரசியல் மீதான விமர்சனமாக மாறுகிறது (Marx Early Writings, Penguin, 1974, p 244).

இறை மறுப்பாளர், நாத்திகர் என்னும் முறையில் மார்க்ஸ், மதம், கடவுள் கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கிறார். அதேவேளை, புரட்சிகரமான மனிதநேயர் என்னும் முறையில் மதத்தில் தஞ்சம் புகுந்துள்ள மனிதர்களை அன்புடனும் அக்கறை யுடனும் பார்க்கிறார். அவர்களது மத நம்பிக்கைகளுக்கு முக்கிய மான காரணமாக இருப்பன சமுதாயத்திலுள்ள அரசியல், பொரு ளாதார நிலைமைகளே என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த நிலைமைகள் பற்றிய உணர்வு, தாங்கள் அடிமைப்பட்டுக் கிடக் கிறோம் என்பதைப் பற்றிய உணர்வு, தங்களால் விடுதலையைச் சாதிக்க முடியும் என்னும் உணர்வு மக்களுக்கு வர வேண்டும். அந்த உணர்வுதான் (consciousness) அவர்களை விடுதலைக்காகப் போராடச் செய்யும்; பகுத்தறிவு ஒன்றினால் மட்டுமே அல்ல. எத்தனையோ பகுத்தறிவாளர்கள் முதலாளியத்துக்கும் ஏகாதி பத்தியத்துக்கும் சேவை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் புரட்சிகர வர்க்க உணர்வு இல்லை. எனவே நாத்திகர்கள் அறிவை முதன்மைப்படுத்த, மார்க்ஸியர்கள் உணர்வை முதன்மைப்படுத்துகிறார்கள். எனினும் காலங்காலமாக உழைக்கும் வர்க்கத்தின் உணர்வின் மீது படியச் செய்யப்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மத நம்பிக்கை என்னும் மாசுகளைத் துடைத் தெறிவதற்கு போர்க்குணமிக்க பொருள்முதல்வாதக் கருத்துகள் பரப்பப்பட வேண்டும் என்று லெனின் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும் (Necessity of Militant Materialism). அதனால் தான் அண்ணல் அம்பேத்கர் அடித்தளம்-மேலடுக்கு என்னும் மார்க்ஸிய உருவகத்தை எடுத்துக் கொண்டு, மேலடுக்குக்கே முதன்மை தந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

****

குறிப்பு

பேராசிரியர் வீ.அரசுவால் பதிப்பிக்கப்பட்டு, என்.சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு நாத்திகப் பகுத்தறிவு ஏடுகளான ‘THE THINKER’, ‘தத்துவ விவேசினி'ஆகியவற்றிலுள்ள கட்டுரைத் தொகுப்புகள் பற்றி சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையால் 29,30.10.2013ஆம் நாள்களில் நடைபெற்ற கருத்தரங்கில் வழங்கப்பட்ட உரையின் விரிவாக்கமே இக் கட்டுரை.

இந்தத் தொகுப்புகளைப் பதிப்பிப்பதில் பேராசிரியர் வீ.அரசு மேற்கொண்ட கடும் முயற்சியும் பெரும் உழைப்பும் பாராட்டத் தக்கவை. இந்தப் பணியில் மேலும் சில ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் ஈடுபடுத்தியிருந்தால், இத் தொகுப்பிலுள்ள ஏராளமான அச்சுப் பிழைகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்த் திருக்க முடியும். இன்னும் கூடுதலான கவனம் செலுத்தப்பட் டிருந்தால், நைந்துபோன ஏடுகளிலிருந்த பல சொற்களைக் கண்டுபிடித்திருக்கவும் முடியும். வே.ஆனைமுத்துவும் இதே கால கட்டத்தில் இந்த ஏடுகளைத் தொகுத்து, பதிப்பிக்கும் பணியைச் செய்திருக்கின்றார். இருவரும் ஒருமுகப்பட்டு இந்தப் பணியைக் கூட்டாக மேற்கொள்ளமுடியாமல் போனது தமிழ் அறிவுலகத் திற்கு ஏற்பட்ட அவலங்களிலொன்று. பதிப்பாசிரியர் குறிப்பு களை எழுதுகையில் பேராசிரியர் வீ.அரசு சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எடுத்துக்காட்டாக ‘இந்துயிசம்’ (Hindusim) என்பதற்கு ‘இந்துத்துவம்' என்னும் சொல்லை அவர் ஓரிரு இடங் களில் பயன்படுத்தியுள்ளார். இது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும். இந்தச் சொல் இந்து வலதுசாரி அரசியல்வாதிகளால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அரசியல்சார்ந்த சொல். அதேபோல கிறிஸ்துவத் திருச்சபை பற்றி அன்னி பெசண்ட் எழுதிய விமர்சனக் கட்டுரையன்று, அன்னி பெசண்டைப் பற்றிய விமர்சனக் கட்டுரை என்று கவனக் குறைவாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

பதிப்பாசிரியர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள குறிப்புகளில், அவர் சொல்ல வந்த கருத்துக்கு நேர்மாறான அல்லது அக் கருத்துக்குத் தொடர்பில்லாத பொருளை வழங்கக்கூடிய வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக “The movement (MadrasSecular Society-SVR) has pre-empted many of the arguments that were later undertaken by EVR Periyar's Self-respect movement formed in 1925”.

மேலும், சென்னை இலௌகிக சங்கத்தாரின் ‘THE THINKER’, ‘தத்துவவிவேசினி’ ஆகிய நாளேடுகளில் வெளிவந்த கட்டுரை களும் கருத்துகளும் வெளியுலகத்திற்குப் பரவலாகத் தெரிந் திருக்குமேயானால், பெரியார் ஈ.வெ.ரா. தமிழ்நாட்டில் மிகப் பெரும் சக்தியாக எழுச்சி பெற்றிருக்க மாட்டார் என்று கூறும் தொனியில் “It is not surprising to note that while the other movements and organizations are recorded in the history of India, the atheist movement (Madras Secular Society-SVR)  has not found even a mention. Partly it could be ascribed to the specificity of the context of Tamil Nadu; mostly it must have been due to the nature of its opposition to religious thought.That also explains why EVR Periyar emerged in Tamil Nadu as a major force” என்று பதிப்பாசிரியர் கூறுகிறார். பெரியார் வாழ்ந்த, வரலாற்று அரசியல் சூழலிணைவு முற்றிலும் வேறானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

(28, 30.10.2013இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் ‘சென்னை இலௌகிக சங்கம்’ என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் எஸ்.வி.ஆர். நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)