கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்  ஐம்பதாண்டு விழாவைக் கொண் டாடும் இவ்வேளையில் அதன் கொள்கைகள் மற்றும் செயற்பணிகள் கேரளச் சமூகத்திலும், வெளிச் சமூகத்திலும் செலுத்திய/ செலுத்தி வருகிற   பாதிப்புகள் பற்றி நண்பர்கள் பலர் விசாரிப்பதுண்டு. 1975 முதல்1990 வரை நான் அவ்வியக்கப் பணியாளனாகச் செயல் பட்டேன். இன்றும் தோழமையுடன் அதன் வளர்ச்சிகாக இடை யிடையே உதவிவருகிறேன். அவ்வாறு செய்யும்போது அதன் பணிகளை விமர்சித்து அடிக்கடி கருத்துப் பரிமாற்றம் நடத்து வதுண்டு. அந்த உரிமையை வைத்துக்கொண்டு சிலவற்றைச் சுட்டிக் காட்ட நினைக்கிறேன்.

மலையாளத்தில் அறிவியல் இலக்கியம் தோன்றிப் பரவிவளர வேண்டும் என்ற நோக்கத்துடன் சில அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்கள்,அரசியல்,சமூகப்பணியாளர்கள் இணைந்து 1962இல் உருவாக்கிய கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் 1978ற்குள் வெகுசன அறிவியல் இயக்கத்தால் நடத்தப்படுகிற ஒரு கழகமாக வளர்ச்சி பெற்றது.  சைலண்டுவாலி திட்டங்களுக்கெதிராக முடிவுகளுடன் கேரள மின்னாற்றல் துறைக்குப் புதிய திட்டங்களை வகுத்தளித்து  மக்கள் கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் சூழலியல் குறித்த ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டது. வளர்ச்சி சுற்றுச்சூழலுடன் தொடர் புடையது. அழிவுடன் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்களைக் கைவிட்டுப் புதிய  அணுகுமுறையை நாடவேண்டும் என வாதிட்டது.

பரிஷத் தொண்டர்களான ஆசிரியர்களின் உதவியுடன்  பள்ளிகளில் மாணாக்கரிடையே அறிவியல் உணர்வை உருவாக்க முடிந்தது. உடல்நலத் துறையில் மருத்துவர்கள், சமூக அறிவிய லாளர்கள் உதவியுடன் உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான மாற்றுவழிகள் பற்றியும் ஆராய்ந்து பிரச்சாரம் செய்தது. அதனடிப்படையில் இதர மாநிலத்து இயக்கங்களுடன் இணைந்து ‘மக்கள் உடல்நல இயக்க’த்தை  அமைத்தது. இந்திய அளவில் நடுவணரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட ‘ஞான விஞ்ஞான சமிதி’ (B.V.G.S)  இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்திற்கு உருக்கொடுத்தது. 1970 களின் பிற்பாதியில் மின்னாற்றல் குறித்துக் கேரளச்சூழலில் நிகழ்த்தபட்ட விவாதங்கள் மாற்றுவழிகளைப் பரிந்துரைத்தது. இதுமட்டுமன்றி, மையம் கலைக்கப்பட்ட அடிப்படையில் அமையும் ஒருவளர்ச்சித் திட்டத்தைத் தீட்ட முயன்றதுடன் கிராம சாஸ்திர பரிஷ்த்துகளை உருவாக்கியது.

இவ் அடிப்படை அளித்த புரிதல்கள் சார்ந்து பஞ்சாயத்ராஜினை வலிமைப்படுத்துவதற்கான  பல தளங்களில் ஈடுபட்டு அதற்கான மாதிரிகளைத் தயாரித்தது. இப் பணிகளின் நிறைவேற்றத்திற்காக இவ்வியக்கம் கேரளத்தில் ஒரு புத்தகப்புரட்சியை  நடத்தியது.அணிவகுப்புகள், ஊர்வலங்களுடன் வீடுவீடாகச் சென்று அறிவியல் சிறு வெளியீடுகள் விற்பனை செய்யப்பட்டன.  பள்ளி,கல்லூரித் தளங்களில் சிறுசிறு அமைப்புகள் நிறுவி அவர்களிடையே அறிவியல் பிரக்ஞையை உருவாக்கு வதுடன்  அவ்வமைப்புக்களின் சமூக ஊடாட்டத்தால் வெகுசனங் களிடையே அறிவியலை, அறிவியல் பார்வையைக் கொண்டு செல்லவியன்றது. வீதி நாடகங்கள், பாடல்கள்,முச்சந்திச் சொற் பொழிவுகளால் பரிஷத் அறிவியல் பார்வையைச் சமூகத்தில் உருவாக்கியது.

பரிஷத்தை ஒரு மக்கள் இயக்கமாக்கி அறிவியல் புத்தறிவினை வெகுசனப்படுத்தி  அதன்வழியாக  சிந்தனைத்துறையில் முழுமை யான கருத்தியல்மாற்றத்தை (Paradigm shift) உருவாக்கப் பங்காற்றிய ஆளுமைகளை இங்கு நினைகூர வேண்டும். பி.டி.பாஸ்கரப் பணிக்கர்,டாக்டர்.எம்.பி.பரமேஸ்வரன், பேராசிரியர் எம்.கெ.பிரசாத் போன்றோரை இங்குக் குறிப்பிட வேண்டும். ஒரு வெகுசன இயக்கமாக வளர்ப்பதற்கும் ஏராளமான ஆசிரியர்களை இவ்வியக்கம் நோக்கி அழைத்து வரவும் பாஸ்கரப்பணிக்கர் ஆற்றிய பங்கு அளப்பரியது. இவ் அடித்தளத்திற்கு வலுவூட்டி அறிவியல் அறிவினை மிகமிக வெகுசனப்படுத்தி  புத்தக வெளியீடு தொடர்பாக ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தி பரமேஸ்வரன் ஆற்றிய  பங்களிப்பு சிறப்பானது. எதிர்வரவிருக்கின்ற  மின்னாற்றல் நெருக்கடி பற்றி  எழுபதுகளிலேயே எச்சரிக்கை செய்ததோடு அதற்கான மாற்றுவழிகளையும் அவர் பரிந்துரைத்தார். எம்.கெ.பிரசாத் ஒரு சூழலியல்வாதி.

தனது நம்பிக்கைக்குரிய கொள்கைகளைக் கைவிடாமல்  காந்தீய தரிசன வழிகளில் புது உலகைக் கனவுகண்டவர். அதற்கொரு சித்தாந்த வடிமைப்பையும் அளித்தார். சூழலியல் குறித்த தனது அறிவனுபவங்களை இயக்கத் திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆற்றலுடன் வெளியிட்டு சூழலி யற்கு ஒரு வெகுசன இருப்பை உருவாக்கினார்.  வளர்ச்சிப்பணித் திட்டமிடல்கள்  சூழலியல் சார்ந்தமைய வேண்டும் என வாதாடியவர் எம்.கெ.பிரசாத். கேரளச்சூழலில் பின்னர் எழுப்பப்பட்ட, எழுப்பப்பட்டு வருகிற சூழலியல் உரையாடல்களுக்கெல்லாம் அடித்தளப் பணிகளாகப் பிரசாத்தின் பங்களிப்புகளை மதிப்பிட வேண்டும். இவர் மூவர் மட்டுமல்ல மேலும் பலரின் அயராத, தன்னலமற்ற தொண்டுகளும், பங்களிப்புகளும் இவ்வியக்கத்தின் ஐம்பது ஆண்டுகாலத் தொடர் வரலாற்றில் உண்டு. இல்லையெனில் இப்படியரு மாபெரும் சமூக இயக்கமாகக் கேரள மக்கள் வாழ்வில் கலந்து நிலைபெற இயலாதுதான்.

நண்பர்கள் குறிப்பாக ஊடகத்துறையில் பணியாற்றுவோர் இவ்வியக்கத்தை ஒரு முக்கிய அரசியல்கட்சியின் கிளை அமைப் பாகக் கருதப்படுவதுண்டு. பரிஷத்தின் அடிப்படை பார்வைகளுள் ஒன்று பரவலான நிலையில் மக்களாட்சியின் மையக்குவிப்புக் களைக் களையும் இடதுசாரித் தளமாக இருப்பதால் இது போன்ற புகார்/வதந்தி அவ்வியக்கத்தின் மீது, செயல்பாடுகளின் மீது வைக்கப்படுவது இயல்புதான். ஆனால் இது முழுக்கமுழுக்க ஒரு மக்கள் இயக்கம்தான். கேரள அரசியல் சூழலில் ஒரு அரசியல் சார்பை அடையாளப்படுத்தாமல் இருக்கவும் முடியாதுதான். ஏனெனில் கேரளத்தில் வெளிப்படையாகவே அரசியல்சார்பு, கருத்தியல் உடன்பாடுகள் இல்லாதவர் மிகமிகக் குறைவு. ஆரம்பக்காலத்தில்  ஒரு பொது இடது தளம் என்று சொல்லமுடிகிற  அதேவேளை பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பிறரும் இவ்வியக்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் இன்றைய நிலவரங்கள் பற்றி எனக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இப்பொது இடது தளம் நிலைபெறச் செய்வதுடன் புத்துயிர்ப்பு அளிக்கவும் வேண்டுமென நான் விரும்புகிறேன்.

மேற்கத்திய பொருளாதார ஏகாதிபத்தியத்தின் விளைவான தாராளமயமாக்கத்தை அரவணைக்கின்ற இந்திய வலதுசாரிகளும் இன்றையத் தேசீய ஆட்சியமைப்பும் ஒரு இடைநிலைப் பாதையான  நேருவியப் பொதுவுடைமை அடிப்படைகளை, அரசியல் பொரு ளாதார அணுகுமுறைகளை முற்றிலும் அழித்துவிட்ட நிலையை இன்று காணமுடிகிறது. இச்சூழலில்  இடதுசாரி, மக்களாட்சியின் இடத்தை உறுதிசெய்து விரைந்து பரவலாக்கிட வேண்டியுள்ளது. அப்பணியின் போது  நாம் உடன்படுகிற,  மறுக்கிற பார்வைகள், எண்ணங்கள், மாற்றுவழிகளைக் கற்கவும் அதுபற்றி விவாதிக்கவும் பொருத்தமான வாய்ப்புக்களைப் பயன்கொள்ள வேண்டும்.  அதற்கான வாய்ப்புக்களைத் திறக்கவும் வேண்டும். விவாதங்களை ஒருங்கிணைக்கும்போது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்ட  குறுகலான கட்சி அரசியல் சிந்தனைகளைக் கடந்த  அமைப்புக்கள், அறிவால், தனித்துவமிக்க பார்வைகளால் அறியப்படுகின்ற பேராளுமைகளின்  பங்களிப்பைப் பெறவேண்டும். அமைப்புநிலையிலும் கொள்கைநிலையிலும் மக்களாட்சி வடிவங்களைக் கண்டடைய அறிவாற்றல்மிக்க சிந்தனைகளும் பார்வைகளும் விவாதிக்கப்பட வேண்டும். நிலையவித்வான்களை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தும் விவாதங்களால் இன்றைய அரசியல்,பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இயலாது.

ஏதேனும் அரசியல் கட்சியின் கிளைஅமைப்பு (வால்) எனக் கேலிசெய்வதுடன் மட்டும் நின்றுவிடுகிற  எதிர்நிலைப்பாடுகளால் சமூகத்தை முன்னேற்ற இயலாது. அறிவாற்றலுடன் மேற்கொள்ளப் படுகிற கருத்தியல் முடிவுகளே முதன்மையானது. ஒரு அறிவியல் இயக்கம் என்ற நிலையில் மக்களின் பக்கம்நின்று பரிஷத் செய்த பல நடவடிக்கைகள் அறிவாற்றலுடன் ஆராய்ந்து மேற்கொள்ளப் பட்டவை. சைலண்டுவாலி, நீர் மாசு,தனியார் கல்லூரிகள் எனும் வணிக நிறுவனங்கள்,அதிரப்பள்ளி, உடல்நலத்துறையின் தனியார் மயமாக்கம், நிலம் ஒரு பொதுச்சொத்து போன்ற கருத்தியல் முடிவுகள் எந்த அரசியல் கட்சியாலும் ஒத்துக்கொள்ள முடியாது தான். எனவேதான்  பரிஷத்  கேரளச் சமூகத்தில் மாற்று எதிர்ப்பாற்றலாக (Countervailing Power) இருக்கிறது. அதுவே இதுபோன்ற இயக்கங்கள், அமைப்புகளின் இயல்பான இடமும் பொறுப்புமாகும். கடவுளே வந்து ஆண்டாலும்  ஒரு மாற்று எதிர்பாற்றல் அமைப்பு வேண்டும்தான்.

பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களையும் பரிஷத் கலந்துரையாடி அவற்றை வெகுசனப்படுத்தியது. எனினும் ஒரு வெகுசன அறிவியல் இயக்கம் என்ற நிலையில் இன்னும் ஆற்றலோடு செயல்பட இயலாமல் போன பணிகளும் துறைகளும் உண்டு.  அவற்றில் ஒன்று அருகிவருகின்ற பொதுஇடங்கள். அதன்பகுதிதான் பொதுப் பொரு ளாதார அமைப்பு, பொது நிறுவனங்களின் தளர்வு வீழ்ச்சி போன்ற பிரச்சினைகள் பரிஷத்தால் விவாதிக்க இயலவில்லை. அது போலவே அயலக மலையாளிகள்.  கேரளத்தின் வளர்ச்சிபற்றி 1976 முதல் ஆராய்ந்து வருகின்ற பரிஷத்  அயலக மலையாளிகளின் பிரச் சினைகளை,  அயலக மலையாளிகள் ஈட்டும் பணத்தின் பின்விளைவு களை ஆராய்ந்து மக்களை அறிவூட்ட முயலவில்லை.  முயன்றும், கேரளச் சமூகத்தில் பெண்களின் இடம், இருப்பு, பங்கேற்பு பற்றிப் பொருட்படுத்தும் நிலையில் எதுவும் செய்ய இயலவில்லை.

இவையனைத்திற்கும் மேலாகப்  பரிஷத், பரிஷத் ஆர்வலர்களை அலட்டுகிற  அல்லது அலட்டவேண்டிய  ஒரு முக்கியப் பிரச்சினை  இளம்தலைமுறையினரைச்  சமூகப் பணிகளுடன் இணைப்பது எவ்வாறு என்ற கேள்வி. அறிவுப் பொருளாதார அமைப்புகளான  (ஐ.டி, ஐ.டி.சி. உயிர் தொழில்நுட்பம் போன்ற) எனும் புதுத்துறைப் பணியாளர்களான  இளைஞர்களைப் கவர இயன்றுள்ளதா?  தாராளமாக்கத்தின் சந்ததியினரான தனியார் கல்விநிறுவனங்களில் பயிலும்  இருபாலின இளைஞர்களை எவ்வாறு இந்த மக்கள் அறிவியல் இயக்கப்பணிகளுக்கு அழைத்துவருவது  என்பதை ஒரு சவாலாகவே  எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  மனிதனைப் போலவே இயக்கங்களுக்கும் மூப்புநரை நேர்வதுண்டு. இக்கட்டத் தில் வெகுசன அறிவியல் இயக்கம் தற்புத்தாக்கத்தை (Self Renewal) மேற்கொள்ளவேண்டும். அதற்கான  அறிவியல் திட்டத்தை இந்த  வெகுசன அறிவியல் இயக்கத்தால்  கண்டடைய இயலும் என்பதே என் நம்பிக்கை.