பேராசிரியர் கெ.ஏ.ஜயசீலன் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வி,மொழியியல்,இலக்கியத் துறைகளில் பங்காற்றி வருகின்றார். சாம்ஸ்கீய மொழியியலில் இந்திய அளவில் பெரிதும் அறியப் படுபவர். நவீன மொழியியலில் சாம்ஸ்கீ அலைஎழுந்த காலத்தில் ஐதராபாத் Central Institute of Foreign Languages -இன்று English and Foreign Languages University இல் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவில் ஆங்கிலக்கல்வியின் நெறியியல், கற்பித்தல், பாடத்திட்ட உருவாக்கத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக நடந்த வளர்ச்சி மாற்றங்களுக்கு மேலான பங்களிப்புகளைச் செய்தவர். தொடரமைப்பு பற்றி, குறிப்பாக மலையாளத் தொடர் அமைப்புத் தன்மைகள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளும் Parametric Studies in Malayalam Syntax என்ற நூலும் எழுதியுள்ளார். தனித்துவமான படைப்புவழிகளும் உலகப்பார்வையும் கொண்டவர் கவிஞர் கெ.ஏ.ஜயசீலன். மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. 

உரையாடியவர்கள் : கெ.எம்.ஷெரீப், ஸஜய்.கெ.வி

நாற்பது ஆண்டுகளாக ஆங்கிலக் கல்வி, நவீன மொழியியல் துறையில் செயல்பட்டு வரும் உங்களுக்கு அத்துறைகளில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிக் குறிப் பிட்ட புரிதல்களும், கருத்துக்களும் இருக்கும். NCERT, SCERT பாடத்திட்ட சீர்திருத்தத்திலும், பாட புத்தக உருவாக்கத்திலும் ஆளுமை செலுத்தியவர் என்ற முறையில் இந்தியாவில் குறிப்பாகக் கேரளத்தில் ஆங்கிலக் கல்வித் துறையில் வந்தடைந்துள்ள மாற்றங்களை ஒட்டுமொத்தமாக எங்ஙனம் மதிப்பிடுகிறீர்கள்? 

ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஆங்கிலக் கல்வியின் முகமே மாறிவிட்டது. கொள்கை ரீதியான நமது பார்வைகள் இன்று மிகவும் அறிவியல்பூர்வமாகிவிட்டது. ஐம்பது ஆண்டுகள் முன்பு இலக்கணம்-மொழிபெயர்ப்பு என்ற முறையே இருந்தது. மொழியை வார்த்தைகளின், கட்டமைப்புகளின் இணைப்பாகவே அன்று கண்டிருந்தனர். வார்த்தைகளையோ, கட்டமைப்புகளையோ ஒவ்வொன்றாக எடுத்து கற்பித்தனர். மொழிக்கல்வி வீடுகட்டுவது போல அமைந்தது - ஒவ்வொரு செங்கற்களாக வைத்து கட்டி யெழுப்புதல். ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கட்டமைப்பு. 

எல்லாக் கட்டமைப்புகளையும் கற்று முடித்தால்,வீட்டின் உருவாக்கம் முடிந்தது-மொழி கற்றாகிவிட்டது !கற்பித்தலின் உயிர்நாடி (ஆசிரியனின்) நடிப்பு/சைகைவாதமாக இருந்தது. செங்கற்களை அடுக்குவதற்குப் பதிலாக இன்று மொழிக்கல்வி ஒரு செடி முளைத்து வளர்வதோடு ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் மொழியின் வளர்ச்சி உயிரியல் தன்மையானது. மொழிக்கு உயிரும் வாழ்வும் உண்டு. ஓரளவு பொருத்தமான சூழலும், ஆர்வமும் தேவையும் இருக்கும் போதுதான் மொழி பேசுவோனிடம் வளர்ச்சியடைகிறது என்று சாம்ஸ்கி கூறினார். குழந்தை பிறந்த பிறகு தான் மொழியைக் கற்கிறது என்பதால் குழந்தையிடம் அதற்கு முன்பு மொழி இருக்கவில்லை என்று பொருளல்ல. மொழி, அதைப் பேசும் சமூகத்தில்தான் வாழ்கிறது. அப் பேச்சுச்சமூகம் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. குழந்தை மொழி பயில அதன் சூழலிலிருந்து பெறும் ஊட்டம் அவசியம். எப்படியோ, அறிவு என்பது புத்தகத்தில் காணப்படும் அதே பொருளென்ற காலம் மலையேறிவிட்டது. ஆனால், இது நேர்கூற்று, இது அயற்கூற்று என்று தரம் பிரித்துக் காட்டிய பழைய ரென் மற்றும் மார்ட்டின் இலக்கணம் அக்கருத்தையே பரப்பியது. 

நமக்கு ஆங்கில மொழி குறித்த அறிவு மிகவும் குறைவுதானே? John is easy to please என்ற வாக்கியம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் John is easy to kill என்ற வாக்கியம் ஒத்துக்கொள்ள முடியவதில்லை. எதனால் அது ஏற்புடையதல்ல என்று இன்றும் நமக்கு தெரியாதே? 

ஆம், மொழி குறித்தான நமது அறிவு Tip of the Iceberg என்று கூறும் அளவுதான். முழுமையானதல்ல. ஒரு நாள் ஒரு புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் இலக்கணம் கற்றுத் தர வேண்டுமா? என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு, அந்தக் கேள்வியே அர்த்தமில்லாதது என்று நான் கூறினேன். காரணம் அதற்கு நமக்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா! மேலும்மேலும் ஆழந்து செல்லுந்தோறும் மொழி பற்றிய நமது இருண்மை அதிகமாக வெளிப்படும். 

இந்த மாற்றங்கள் அடிப்படையான ஒரு கருத்தியல் மாற்றத்திற்கு (Paradigm Shift) வழிகோலியது என்று கருதுகிறீர்களா? 

ஆமாம், கண்டிப்பாக. ஒரு கருத்தியல் மாற்றம் தான். 

கோட்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் பொது சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள், இடையே சரியான முறை யில் சென்றடைந்துள்ளதா? ஆசிரியர்கள் புதிய திட்டங்களின் தத்துவ அடிப்படையைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாம லும், நடைமுறைப்படுத்தலில் சரியான பயிற்சி அடையாம லும் இருக்கும் வரை புதிய சோதனைகள் தோல்வியடையத் தானே செய்யும்? 

ஒருவேளை, செயல்தளத்திற்குப் போதுமான அளவு கொண்டு வர இயலாது போனாலும், புதிய அணுகுமுறைகளின் வழி உருப்பெற்ற வாய்ப்புகள் பற்றியும், கல்வியில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் பற்றியும் ஆசிரியர்கள் பலரும் அறிந்துள்ளனர் என்றே நான் கருதுகிறேன். அன்று போல் இலக்கணம் கற்பிப்பது மட்டுமல்ல மொழிக்கல்வி என்பதைப் பெருவாரியான ஆசிரியர் களும் அறிந்துள்ளனர். 

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பகர்ந்தளிப்பதல்ல அறிவு. தன் சுற்றுப்புறத்திலிருந்து, முன் அனுபவத்திலிருந்து, ஆசிரியர்கள், தங்களைவிட அறிவுபெற்றவர்களின் உதவி வழி மாணவர்கள் சுயமாக அறிவை உருவாக்கிக் கொள்கி றார்கள் என்ற கருத்து அடிப்படை கொண்ட கட்டமைப்பு வாதம் (Constructivism), கல்வியியலில் உலகளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அறிவு சம்பாதித்தலை சமூக உறவுகளோடும், சமூக நிகழ்வுகளோடும் இணைக் கின்ற சமூக கட்டமைப்புவாதம் (Social Constructivism) பல நாடுகளின் கல்வித் திட்டங்களில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. சம்பிரதாயமான குருபடிமம் உடைந்து போனது தான் இதன் பரிணாம பலன். மேலோட்டமான முற்போக்குச் சிந்தனையும் மிகமிகக் குறுகிய மனப்பான்மையும் கொண்டது மலையாளி சமூகம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் மலையாளிகளிடையே இன்றும் குருப்படிமம் சேதாரமின்றி நிலைபெற்றிருக்கிறது! குருப்படிமத்தின் சமயத்தன்மையை எதிர்ப்பவர்கூட, ஓர் அதிகாரவடிவம் என்ற நிலையில் அதைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. குருப் படிமத்தை உடைக்காமல் இங்குப் புதிய திட்டங்கள் நிறைவேற்ற இயலுமா? 

அறிவு கட்டமைக்கப்படுகிறது என்பது புதிய புரிதல். அறிவு உருவாக்கத்தில் வழி, இலட்சியத்தை வசப்படுத்தவோ, உருவாக் கவோ கூடச் செய்யும். கல்வி என்பது பகிர்ந்தளிப்பதல்ல - வளர்த்தெடுத்தல். தானாகவே வளர்ந்து வருவதை, மேலும் நன்றாக வளர்த்தெடுத்தல். ஆசிரிய மாணவ உறவை ஒருவேளை, ஒரு கோழி வளர்ப்பவன் - பொறிக்க வைத்த முட்டை இடையேயான உறவோடு உவமிக்கலாம். முட்டைக்குள் நடக்கும் செயல்களுக்குக் கோழி வளர்ப்பவனுக்கு நேரடித் தொடர்பு இல்லை. முட்டை பொறிப்பதற்கான சூழலை மட்டுமே அவரால் உருவாக்க இயலும் - குறிப்பிட்ட வெப்ப நிலை என்பதுபோல. ஆசிரியன் குருவல்ல. ஆனால் வெறும் பார்வையாளனுமல்ல. ஊக்கமளிப்பவர் (Facilitator) என்ற வார்த்தை ஆசிரியருக்கு பொருத்தமானது. கேரளச் சமூகத்தில் குருப்படிமம் பற்றிய உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். 

நீங்கள் கேரளத்தில் SCERT யின் பாடத்திட்ட சீர்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். அதன் கொள்கை வரைவில் முன்னிறுத்தவில்லை என்றாலும் வரலாற்று ரீதியாகச் சமூக கட்டமைப்புவாதத்திலிருந்து ஒரு படி முன்னேறிச் செல்கின்ற Critical Pedagogy யின் புதிய கருதுகோள்களுக்குப் பொருந்தும் விதத்தில் தானே பாடப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன. அறிவு அடைவதுடன், அடைந்த அறிவை விமர்சனத்திற் குள்ளாக்கும் பணியையும் கற்பவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் எவ்வித மாற்றங்களுக்கு வழியமைக்கும்? 

எனது புரிதல் சரியென்றால், இப்பாடத்திட்டத்திற்கு ஒரு புதிய தலைமுறை கேரள இளைஞர்களை உருவாக்கும் திறனுண்டு. எதையும் விமர்சன அடிப்படையுடன் அணுகும், எதிர்வினை யாற்றும், விடைகாணும் ஒரு புதியதலைமுறை. வாசிக்கும் வேளையிலேயே, வாசித்த பகுதிகளைப் பற்றிய கேள்விகளைக் கற்பவர் எதிர்கொள்கிறார். “இப்பாடப் பகுதியில் சொல்லப் பட்டிருப்பவை சரியானவையே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ”, “ இது போன்றதொரு சூழலில் உங்கள் எதிர்வினை என்ன? ” - என்பது போன்ற வினாக்கள். இங்குப் பாடம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அனுபவத்திற்கு இணையாகின்றது. 

பிரெக்கெட்ன் எபிக் தியேட்டரில் நடப்பதும் இதுதானே. நாடகம் காணுகின்ற போதே நாடகத்தை விமர்சித்தல். ஆனால் பாடத்தோடு வாழ்க்கையும் மாறும் போதுதானே விமர்சனம் பலன் தருகின்றது? அப்படியரு வேகமும் அசைவும் கேரளச் சமூகத்திற்கு உண்டா? 

சமூகம் மாறும். பாடத்திட்டத்தின் வழிக் கண்ணோட்டம் மாறுகின்ற போது கண்டிப்பாக அம்மாற்றம் சமூகப் பரிமாற்றங் களுக்கு வழியமைக்கும். வகுப்பில் விமர்சனமுறையில் முடிவெடுக் கின்ற மாணவன் வாழ்விலும் அதே அணுகுமுறையைக் கைக்கொள் வான். இந்த விமர்சன முறையியல் தான் கற்பவரைப் பிற பண்பாடுகளைக் கூடக் கண்டறிவதற்கான ஊக்கமளிக்கிறது. கேரளப் பாடத் திட்டத்தில் ஆங்கிலம் முதல் மொழியாகப் பேசுகின்ற எழுத்தாளர் களை மட்டுமல்ல, ஆங்கிலத்தில் எழுதுகின்ற பிற மொழி பேசுகின்ற வர்களையும், மொழிபெயர்ப்பின் வழிப் பிற மொழிகளில் எழுது கின்றவர்களையும் உட்படுத்தியது இதற்கு உதவி செய்வதற்குத்தான். 

ஆம், மாதவிக் குட்டியும், மார்க்கோஸம், குந்தர் கிராஸம், அக்டோவியாபாஸம் ஆங்கிலப் பாடநூற்களில் இடம் பெற்றுள்ளனரே?

கற்றலில் விமர்சனத்தன்மையை வளர்க்க மேலும் சிலவற்றைச் செய்யலாம். பொருண்மைகள்,வரலாற்றுநிகழ்வுகளை சமகாலத்தின் பல்வேறு முரண் பார்வைகளை அறிமுகம் செய்து, விவாதத்திற்கு வழித் திறப்பது ஒரு வாய்ப்பு . உதாரணமாக 1857 கலகம் முதலாம் சுதந்திரப் போராட்டமாகவும், சிப்பாய் கலகமாகவும், மத அடிப்படைவாத எழுச்சியாகவும் பலவிதமாக விவாதிக்கப்பட் டுள்ளது. இம்மூன்று பார்வைகளையும் விமர்சனப்பூர்வமாகச் சோதித்துப் பார்க்க மாணவர்களால் இயல வேண்டும்.

மொழி மனிதனின் உயிர்மைப் பண்பு - மரபுச் சொத்து என்றே சாம்ஸ்கி கூறினாலும் உயிரியல், பிற அறிவியல் துறைகளோடு மொழியியலுக்கு அவ்வளவாக நெருக்கமில்லை. இது மொழி யியலுக்கு மட்டுமல்ல பல சமூகஅறிவியல் துறைகளிலும் நிலவும் பிரச்சனைதான். மரபணு ஆராய்ச்சிகள் தொடர்பாகச் சமீப காலத்தில் ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் மொழியியலுக்குப் புதிய ஆற்றலை ஏற்படுத்தியுள்ளது. லூக்கா ஸ்பார்ஸ, ஸ்பென்ஸர் வெல்ஸ் முதலிய மரபியல் அறிஞர்கள் மரபணு மற்றும் மொழியியல் தரவுகளின் அடிப்படையில், இன்றுள்ள மனித சமூகம் அறுபது, எழுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து பரவிய மக்களினத்தின் சந்ததியினர் என்றும், இன்றுள்ள மொழிகள் அனைத்தும் ஒரே மூல மொழியில் இருந்து உருவாயின என்றும் வாதிடுகின்றனர். இது சரியென்றால் நமது மொழி குறித்த அறிதலுக்குப் புதிய ஒரு அடையாளம் ஏற்படும். அனைத்து உலக மொழிகளுக்குமாக ஓரிலக்கணம் (Universal Grammar) என்ற கருத்தாக்கத்தினைத் தோற்றுவித்த சாம்ஸ்கிக்கு உண்மையில் இந்த அறிதல் இருந்ததா?

மொழி மூளையில் நெருக்கமாக இருக்கும், தனிமையாக்கப்பட்ட வடிவம் என்றே சாம்ஸ்கி கூறினார். எல்லா மொழிகளும் மூல மொழியிலிருந்து தான் உருவானது என்ற கருத்துடன் சாம்ஸ்கி முரண்படவில்லை. சாம்ஸ்கி தனது ஓரிலக்கணக் கொள்கையை வெளியிட்ட போது அவரிடம் இப்படியரு அறிதல் இருக்க வில்லை. அனைத்து மொழிகளுக்கும் பொதுவான சில இலக்கணக் கூறுகள் உண்டென்று சாம்ஸ்கி கூறுவது, அவை மனித மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ, சில குறிப்பிட்ட பகுதிகளிலோ அவை உருக்கொண்டதால்தான். மூன்று விஷயங்களை சாம்ஸ்கி முதன்மைப்படுத்தினார்.முதலாவதாக, மொழி உயிரியலோடு தொடர்புடையது. இரண்டாவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஓர் இலக்கணம் ஒன்றுண்டு. மூன்றாவது, அறிவியல் துறையில் சமகாலக் கருத்துகளின் அடிப்படையில் சாம்ஸ்கி கூறியது - மனித மூளையின் அமைப்பு, அறைகளாகப் பிரிக்கப் பட்டது என்றும் அவ்வறைகள் ஒன்றோ அல்லது அதற்கதிகமோ ஆன மொழிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதாகும். மொழியின் இடம் (ங்கள்) சரியாக எங்கு இருக்கிறது என்பது பற்றிய விவாதங்கள் இருக்கின்ற போதும் கூட, எந்த உயிரியல் ஆய்வாளரும் இவ் விஷயத்தில் முரண்படுவதில்லை.

அறிவியல் - சமூகவியல் பாடங்களை தாய்மொழியில் கற்பதே மிகவும் பயனளிப்பது எனும் கருத்து இன்று கல்வியியலில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகளாவிய கருத்துப்பரிமாற்ற மொழி என்ற நிலையில், அனைத்து அறிவுத்துறைகளிலும் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் மொழி என்ற நிலையில் ஆங்கிலத்தை ஒதுக்கிவிடவும் முடியாது. இப்படியிருக்க நமக்கான சிறப்பான மொழிக்கொள்கை என்ன?

கற்றல் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நமக்கு ஆங்கிலமும் வேண்டும், ஆங்கிலவழிக் கல்வி வேண்டாம் என்ற நிலையிலும் கூட. ஆங்கிலத்தைப் பள்ளியில் துவக்கம் முதலே கற்பிக்க வேண்டும். உயர்ந்த வகுப்புகளில் வருகின்ற போது சோதனைநிலையில் சில பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதில் தவறில்லை.

புதிய ஒரு மொழியைக் கற்றலைக் கடினமான வேலை யாகவே பலரும் கருதுகின்றனர். குறிப்பாக ஆங்கிலம். ஆனால் ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியையும் கற்பது அவ்வளவொன்றும் கடினமல்ல என்று நிரூபிக்கப்பட் டுள்ளது. இந்த அறிவு மொழிக் கல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் தானே?

ஆம். அதற்கு நிறைய சாட்சியங்கள் உண்டு. முதல் வகுப்பில் ஆங்கிலம் கற்க ஆரம்பித்த மாணவனுக்கும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலம் கற்க ஆரம்பித்த மாணவனுக்கும் இடையே மொழி அறிவில் இருக்கும் வேறுபாடு, ஒன்றாகக் கற்கத் துவங்கியவுடன் ஏதேனும் மாதங்களுக்குள் மறைந்துவிட்டதாக சோதனைகள் நிரூபித்திருக்கின்றன.

ELT (English Language Teaching) என்ற பெயரே ஆங்கிலத்தை உச்சாணிக் கொம்பில் இருத்துவது போன்ற ஏற்பாடுதானே? ஒரு கற்றல் விஷயத்திற்கு அவ்வாறு பெயரிடலாமா? அப்படியென்றால் MLT( Malayalam Language

Teaching)யோ TLT (Tamil Language Teaching) யோ ஏன் இல்லை?

அவ்வாறு உச்சாணிக் கொம்பில் இருத்த வேண்டிய அவசிய மில்லை. LT (Language Teaching) போதும். அதில் மற்ற மொழி களைப் போல் ஆங்கிலத்திற்கும் ஒரு துணைப்பிரிவாக இடம் அளிக்கலாம். மொழிக் கல்வி இரண்டாம் தரம் என்ற நோக்கு மாறவும் வேண்டும்.

பெருமுதலாளியக் குழுமங்களின் (Corporate companies) தேவைக்காகவே நமது குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற எண்ணம் தானா, ஆங்கிலத்திற்குக் கொடுக்கப்படும் இந்த அதிக கவனத்திற்குக் காரணம்?

ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும் என்று பிடிவாதம் செய்பவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, அறிவிற்கான ஒரு சாளரம் என்ற நிலையில்தான் நாம் ஆங்கிலம் கற்க வேண்டும். Communicative English என்ற கருத்து எனக்கு உடன்பாடில்லை. இந்திய ஆங்கிலக் கல்வியின் மூலகர்த்தாவான என்.எஸ்.பிரபுவின் கருத்தும் இதுதான். ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றம் நடத்தவல்ல, மாறாக ஆங்கிலத்தின் கட்டமைப்பைத் தெரிந்து கொள்ளத்தான் அடிப்படை யாக முயல வேண்டும். இதை Grammatical Competence என்று சொல்வார்கள். ஒருவேளை, இலக்கணம் கற்பதால் உண்டாவதல்ல, மொழியோடு ஈடுபடுவதால் நமது அறிவில் உருப்பெற்று வருவ தாகும் இது.

 

சிசெக்கின் போன்ற புலமையாளர் ஆங்கிலத்தை உச்சரிக்கக் கேட்கும் போது நமக்கு விருப்பம் ஏற்படாது. ஆனால் வார்த்தைகளை அவர் மிகவும் சரியாகவே பயன்படுத்துகிறார். உச்சரிப்பு போன்ற, ஒருவேளை ஒப்பீட்டுநிலையில் அவ்வளவு முக்கியமல்லாதவற் றுக்கு ஆங்கில ஆசிரியர்கள் முன்னுரிமை தருகின்றனர்.

ஆம். ஆங்கிலப்பள்ளிகள் பெரும்பாலும் அதைத்தான் செய் கின்றன. ஆங்கிலத்தின் கட்டமைப்பைக் கற்றுவிட்டால் உண்மை யில் ஆங்கிலத்தை எளிமையாக, தவறில்லாமல் பயன்படுத்தலாம். வாசிப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பேசுவது அடுத்த நிலையில் மட்டும் போதும். அதற்காக ஆங்கிலத்தில் பேசுவதையே கைவிட வேண்டும் என்பதல்ல. என் அனுபவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கின்ற பொழுது ஆங்கிலம் வாசிப்பது எனக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டி வந்தால் முதலில் அதை மலையாளத்தில் யோசித்து, ஒவ்வொரு வார்த்தையாகப் பொறுக்கி எடுத்து, ஆங்கிலத்தில் பேச வேண்டி வந்தது.

பாணினியையும், பர்த்ரூஹரியையும் நினைத்துக் கொண்டு கேட்கிறேன். இலக்கணக் கல்வி, மொழிக் கல்வி இவற்றிடையே யான வேறுபாட்டை எவ்வாறு விளக்கலாம்?

பாணினி இலக்கணக் கல்வியை உண்மையில் எவ்வாறு கற்பனை செய்திருந்தார் என்று நமக்குத் தெரியாது. கற்றலின் அறிவியல்பூர்வ மான முறையியல் பற்றி அவர் ஒன்றும் கூறுவதில்லை. மொழியை விளக்குவதற்கான மிக நல்ல வழி இலக்கணம் அல்ல என்று சாம்ஸ்கி புரிந்திருந்தார். மிகவும் குறைந்த விதிகளால் மொழியை விளக்கவே அவர் முயன்றார். அதுதான் மொழியைப் புரிந்துகொள்வதற்கான எளிய வழி. பாணினியின் இலக்கணத்திற்கும் நவீன மொழியியலுக் கும் இடையேயுள்ள அடிப்படையான வேறுபாடு, இலக்கணம் என்பது நாம் உருவாக்குவதல்ல, அது நமது மூளையில் முன்னரே நிலைபெற்றிருக்கிறது என்ற புரிதலாகும். பாணினியின் காலம் மொழியியலின் வரலாற்றுக்கு முந்திய காலமாகும். நம்முடையது அதன் வரலாற்றுக் காலம்.

மொழியியலாளர் என்பதைத் தாண்டி மலையாளத்தில் நிறையவே நல்ல கவிதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் கவிதைகள் சரியான விதத்தில் கவனிக்கப்பட வில்லை. என்று கருதுகிறேன். சஜய் போன்ற ஒரு சிலரே உங்கள் கவிதைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். உங்களின் கவிதைகளில் இடம்பெறுகின்ற வடிவரீதியான பன்முகத் தன்மை திடீரென்று பார்வையில் படுவதுண்டு. யாப்பிலும், யாப்பு இல்லாமலும் முன்காலத்தைப் போன்று இப்பொழு தும் நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள்.

எனக்கு சில வேளை யாப்பு தேவைப்படும். சிலவேளை அது இல்லாமலும் இருக்கலாம். சில கவிதைகளுக்குச் சில குறிப்பிட்ட உருவம் தேவைப்படுகிறது. அப்போது என் தேர்வுகள் சுய நினைவற்று இருக்கும். எனது நல்ல கவிதைகள் எல்லாம் யாப்போடு எழுதப்பட்டவை.

உங்களின் முதல் கவிதையான ‘சந்திரோதயம்’ கூட நிறைய விஷயங்களை அடக்கிவைத்து, குறுகச் சொன்னதல்லவா? ஒருவேளை அதை உரைநடையில் சொல்ல இயலாது. யாப்பு முற்றிலும் வேண்டாம் என்ற கருத்து இப்போது மலையாளக் கவிதையில் மேலோங்கியுள்ளது.

யாப்பு வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒரு மடத்தனமான கேள்வி. அதை முன்கூட்டியே நிச்சயிக்க முடியாதே? என்னக் கூற நினைக்கிறோமோ அதுதான் உருவத்தைத் தீர்மானிக்கிறது.

யாப்பில் எழுதிய கவிதையை யாப்போடு மொழிபெயர்க்க இயலாதது, மொழிபெயர்ப்பாளனின் தோல்விதான் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் இக்கூற்றை ஒத்துக் கொள்கிறீர்களா? யாப்பு கவிதையின் முக்கியப் பகுதியாகும் போது அது மொழி பெயர்ப்பிலும் இடம்பெற வேண்டுமே? ஷெல்லியின் Ode to a Skylarkற்கு ‘வேழாம்பிலொனோடு’ என்ற பெயரில் வைலோப்பிள்ளி எழுதிய அழகான மொழிபெயர்ப்பு நம்மிடம் உள்ளதே?

சந்தேகமில்லை. யாப்பில் மொழிபெயர்க்க இயலவில்லை என்றால் ‘மன்னிக்கவேண்டும்’, இது ஓரளவு மொழிபெயர்ப்பு மட்டுமே’ என்ற பணிவுரையுடன் மொழிபெயர்ப்பாளர் தன் மொழிபெயர்ப்பை வாசகனின் முன்பு வைக்க வேண்டும்.

மரண ரிப்போர்ட்’, ‘ஞண்டின்றெ தெய்வ சங்கல்பம்’, ‘ஹே, குபேரா’, முதலிய கவிதைகளெல்லாம் நீங்கள் யாப்பில்தான் எழுதினீர்கள். பிறகு வஞ்சிப்பாட்டின் (நதோன்னத) யாப்பை உடைத்து உரைநடை போல எழுதியமுறையும் சுவாரசியமானது.

ஆம். வஞ்சிப்பாட்டின்(நதோன்னத) முதல் அடி எடுத்து அதை நான்காக உடைப்பது எனக்கு மிக விருப்பம். ஒருவேளை அந்த யாப்புதான் உரைநடையுடன் மிக நெருங்கிய யாப்புவகை. நாம் கூற வேண்டியதன் வலிமை குறைந்தால் யாப்பு நம்மேல் ஏறிக் கொள்ளும். இருப்பினும் கொஞ்சம் போராடிப் பார்ப்பதில் தவறில்லை.

அறிவுக்குச் சவால் விடுகின்ற ஏதேனும் ஒன்று எப்போதும் வேண்டுமென்றும், அதன் சுகத்தைத் தான் நீங்கள் அனுபவிக் கின்றீர்கள் என்றும் ஒரு நேர்காணலில் - கவிதையைப் பற்றியல்ல, மொழியியலைப் பற்றி நீங்கள் கூறியிருந்தீர்கள். கவிதையின் விஷயத்தில் இது சரிதானா?

ஆமாம். கவிதையும் சவால் விடுவதாக இருக்க வேண்டும்.

மொழியியலின் அரூபம் கவிதையில் கொண்டு வருவதன் இன்பம்தானா அது?

பலருக்கும் என் கவிதை பிடிக்காமல் போகக் காரணம் இதுவாக இருக்கலாம். என்னை அர்த்தப்படுத்திக் கொள்ள ஒரு குறிப்பிட்ட விவேகத்தன்மை வேண்டும். அவ்வளவுதான்.

மனிதனை மையமிடாத ஒரு உலகப் பார்வையை உங்களுடைய பல கவிதைகளிலும் காணமுடிகிறது. Deep Ecology என்றெல்லாம் இந்நிலையை அழைப்பதுண்டு. ‘பூமியுடெ அவகாசிகள்’ என்ற சொல்லாக்கத்தின் வழி, பஷீர் அதனை மலையாளத்தில் நிலைத் திருக்கச் செய்திருக்கிறார். மலையாளத்தில் இருப்பதால் என்னவோ உங்களுடைய கவிதைகள் கவனிக்கப்படாமல் போயிருக்கிறன. 1962ல் ரேச்சல் கார்ஸனின் ‘சைலண்ட் ஸ்பிரிங்க்’ வெளியான பிறகு மேற்குலகின் மொழி இலக்கியங்கள் பலவற்றிலும் Deep Ecology மிகுந்த செல்வாக்குச் செலுத்தியது. இந்தக் கவிதைகள் உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரற்றவைகளுக்காகவும் பேசுகிறது - புல்லினோடு, புழுவோடு மட்டுமல்ல, கற்களோடும்.

மலையாள வாசகனின் விவேகத்தன்மை இன்னும் வளர வேண்டி யிருக்கிறது. இளைய வாசகர்களைப் பொறுத்தவரை கடினமான மொழி, கஷ்டமான கவிதை என்று சில பிரச்சனைகளுண்டு. ரில்கே போன்றவைகள். ஆனால் சிலரெல்லாம் வாசிக்கின்றனர்.

ரில்கெயும் பிறவும், மலையாளத்தில் குறிப்பிடும்படி பேசப்படவே இல்லை.

வாசிப்புச் சமூகம் வளரும் போதுதான் அவ்வாறான கவிதை களுக்குப் பிரச்சாரம் கிடைக்கும்.

நீங்கள் மொழியியலாளன் என்ற நிலையிலா, அல்லது கவிஞன் என்ற நிலையிலா புகழ்பெற விரும்புகிறீர்கள்?

கவிஞனாகத் தான். கவிதைதான் என் முக்கியத் தொழில். அதற்காகத் தான் என் நேரங்களைச் செலவிடுகிறேன்.

பாணினியைக் கொன்ற சிங்கத்தைப் பற்றி உங்களுடைய கவிதையில் கூறப்படுகிறதே. அது மொத்தத்தில் உங்களுடைய கவிதையைப் பற்றியதா?

அல்ல. அது சாம்ஸ்கியன் மொழியியலைப் பற்றியது. சாம்ஸ்கியன் மொழியியல் தன்னளவில் முழுமையானதல்லை, முடிவானதுமில்லை. ஒரு கட்டத்தை அடைந்தபோது பாணினியைக் கொல்ல வேண்டியதாகிவிட்டது.

Pin It