இந்திய நிலப்பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலை -இலக்கியக் கொள்கைகள் உருவாக்கம் கொண்டன. உரையாசிரியர்கள் இக்கொள்கைகள் மீதான விவாதங்களை பதினோழாம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக நிகழ்த்தினர். பதினோழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் அதிகாரமைய மாற்றம் கல்விப்புலத்திலும் கால்கொண்டது. இதனால் இந்தியாவின் தொன்மையான கலை - இலக்கிய சிந்தனை மரபில் உருத்திரண்டிருந்த இலக்கிய அணுகுமுறை புடைமாற்றமடைந்து மேற்கத்திய ஆய்வு மரபில் இணைந்துவிட்டது. இதன் நீட்சியால் சமசுகிருதம் - திராவிடம் உருவாக்கிய கலை - இலக்கியக் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்த உரையாடல் மேலெடுக்கப்படவில்லை. இதனால் இலக்கிய வாசிப்பிலும் ஆய்விலும் மேற்கத்திய மனநிலை இடம்பெற்ற தொடு இந்திய பாரம்பரிய சிந்தனை மரபுகள் மீதான இடையறாத மறுவாசிப்பில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

அறுபட்டுப்போன சமசுகிருத அழகியலையும் திராவிட சூழிடவியல் / திணையியல் கோட்பாட்டையும் மலையாள சிந்தனையாளரான கெ.அய்யப்ப பணிக்கர் சமசுகிருதம் X திராவிடம் எனும் எதிர்வாகக் கருதாமல் இரண்டையும் ‘இந்திய’ நிலப்பரப்பின் தொன்மையான பாரம்பரியம் மிக்க சிந்தனை மரபுகளாக அணுகுவதன் மூலம் இந்திய நிலப்பரப்பிற்கான இலக்கியக் கோட்பாட்டினை “இந்திய இலக்கியக் கோட்பாடுகள் சூழல் - பொருத்தம்” எனும் நூலின் மூலம் கட்டமைக்க முயற்சித்துள்ளார்.

இந்த நூலாக்க செயல்முறை சமசுகிருதத்தின் கலை - இலக்கிய கொள்கைகளான ரசம், தொனி, அனுமானம், வக்ரோத்தி, ரீதி, அணி, ஒளசித்யத்தோடு திராவிட திணைக் கோட்பாட்டையும் புதிய முறையியலில் அறிமுகம் செய்வதாகவுள்ளது.

இந்த அறிமுகம் சமசுகிருத அழகியல் கொள்கைகளையும் திராவிட திணையியலையும் மிக நுட்பமாக அவற்றின் சாரத்தை முன்வைப்பதாக மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியங்களின் மீது பொருத்துகிறார். இதனால் அவற்றின் தற்கால ஏற்பமைவை உறுதிபடுத்தியிருக்கிறார்.

கலை - இலக்கியங்களின் மீதான வாசிப்பும் ஆய்வும் மேற்கத்திய / ஐரோப்பிய அறிவு மரபுகளின் அடிப்படையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மாறியிருந்தது. இதற்கு எதிராக அய்யப்ப பணிக்கர் செய்திருக்கும் இவ்வாய்வு தமிழியல் ஆய்வை மற்றொரு முற்றிலும் மாற்றான கருத்து நிலைகளை அறிமுகம் செய்வதாகவுள்ளது.

இந்த நூலை அறிமுகம் செய்யும் தொழிற்பாட்டிற்கு கீழ்வருமாரு தொகுத்து புரிந்துக்கொள்வது  வசதியாக இருக்கும்.

  • அச்சு ஊடகவருகையால் பதினெட்டாம் நூற்றாண்டின் இருதியில் சமசுகிருத இலக்கிய, இலக்கணங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இதனை ஆதாரமாகக் கொண்டு மார்க்ஸ்முல்லர் போன்றவர்கள் கீழைத்தேய / இந்தியவியல் ஆய்வு சமசுகிருதத்தினை அடிப்படை யாகக் கொண்டே நிகழ்த்தப்படுதல் வேண்டும் என உறுதிப்படுத் தினர். 19ஆம் நூற்றாண்டின் இற்தியில் கால்டுவெல் சமசுகிருதத்திற்கு மாற்றான திராவிட கருத்து நிலையை முன்வைத்தார். இவ்விரு போக்குகளும் ஆய்வுப்பரப்பில் மோதல் மன நிலையை ஏற்படுத்தியது.

இதற்கு மாற்றாக இரு மொழிகளின் கலை - இலக்கிய கொள்கைகளை இந்திய நிலப்பரப்பின் இரு பாரம்பரிய சிந்தனை மரபுகளாக்கக் கட்டமைத்தல்.

  • அவ்வாறு கட்டமைக்கப்பட்ட கோட்படுகளை மேற்கத்திய இலக்கியக் கொள்கைகளுக்கு நிகரான - எதிர் நிலையில் முன்வைத்தல்.
  • இந்திய - மேற்கத்திய கோட்பாடுகளின் பொருத்தப்பாடு சாத்தியப் படும் பட்சத்தில் இரண்டையும் இணைத்தல். அதன் மூலம் புதுமையான வாசிப்பு, ஆய்வு அணுகுமுறையை உருவாக்குதல்.
  • மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகளால் பல மாற்றங்களை உள்வாங்கியிருக்கும் இலக்கியங்களின் இன்றைய போக்குகளின் ஏற்பமைவிற்குள் பாரம்பரிய இந்திய கோட்பாடுகளைப் பொருத்துதல். 
  • இந்திய நிலப்பரப்பிற்கு தொடர்பில்லாத பிறமொழி இலக்கியங்களில்   இந்திய கோட்பாடுகளைப் பொருத்துவதன் மூலம் உலகிலேயே மிகத் தொன்மையானதும் முக்கியமனதுமாக திராவிட சமசுகிருத கோட்பாடுகள் உள்ளதை உறுதிப்படுத்துதல். (பக். 117, 129)
  • சமசுகிருத கொள்கைகளை விட திராவிட திணையியல் கோட்பாடு ஆற்றல் மிக்கதும் வளமானதுமாக இருப்பதை சார்பின்றி கோட்பாட்டின் சாரத்தின் அடிப்படைகளை முன்வைத்து நிறுவுதல். இதனை பின்வரும் பகுதிகள் உறுதிபடுத்துகின்றன. “சொல்லிற்கு வெளியே நிற்பதும் அதனின்றும் மாறுபட்டதுமே தொனி என்றால் உள்ளுரை எனும் கொள்கையின் ஆற்றல் தொனிக்கு இல்லை யென்றுதான் கூற வேண்டும்” (ப. 39)
  • “சமஸ்கிருத இலக்கியச் சிந்தனையில் மிகவிரிவாக விவாதிக்கப் பட்டுள்ள தொனிக் கோட்பாட்டை விட மேலைத் திறனாய்வாளர்கள் கவனம் செலுத்திய படிமக் கோட்பாட்டை விட ஆற்றல் மிக்க, வள்மான ஒரு உணர்ச்சியும் பொருளும் இணைந்த நிறைவே பொருளதிகாரத்தில் உள்ளுரை உவமையால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.’’ (ப. 126) 
  • இவ் அணுகுமுறைகளில் இந்திய இலக்கியக் கோட்பாடுகளை அவற்றின் நுண்மையான வடிவத்தை கண்டடைந்து விளக்குதல்; விரிவாக்கம் செய்தல்; அறுபட்டுப்போன விவாதத்தை மீட்டெடுத்தல்.

மேலே தொகுக்கப்பட்ட பணிக்கரின் அவதானிப்புகள் தமிழியல் ஆய்வில் இதுவரை இல்லாத எதிர்வினையை ஏற்படுத்துவதாக இருக்கும். தமிழியல் ஆய்வை பல புதிய கருத்து நிலைகளை கொண்டுசேர்த்து செழுமையடையச்செய்யும் இந்தக் கடினமான ஆக்கத்தை மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்தது என்று அறியமுடியாதளவு மொழியாக்கம் செய்திருப்பவர்  ந.மனோகரன்.

Pin It