2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  84 பக்கங்களுடன் மாற்றுவெளியின் முதல் இதழ் வெளியாயிற்று. 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 176 பக்கங்களுடன் மாற்றுவெளியின் பத்தாவது இதழ் வெளியாகியுள்ளது. 

நான்கு ஆண்டுகளில் ஆய்விதழின் பக்கங்கள் இரட்டிப்பாகி விட்டன. மாற்றுவெளியின்  வெளியீட்டில் இது ஒரு நல்ல அறிகுறி.  முதல் இதழ் மெலிந்து காணப்பட்டது.  ஆனால் பத்தாவது இதழோ நல்ல பருமனாக, வண்ணமாக வெளியாகியுள்ளது. 2008ஆம்  ஆண்டில் ஓர் இதழும் 2009ஆம் ஆண்டில் ஓர் இதழும்  2010ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும் 2011ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும்  வெளிவந்துள்ளன. 2012இல் இதுவரை இரு இதழ்கள் வெளியாகி யுள்ளன. மேலும் ஓரிரு இதழ்கள் வெளியாகலாம் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது. ஓராண்டில் குறைந்தது மூன்று இதழ்களாவது வெளிவர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன்

ஆனால் மாற்றுவெளி தன்னை எந்தக் காலவரையறைக்கும் உட்படுத்திக்கொள்ளவில்லை.  காலாண்டிதழ்  என்றோ அரை யாண்டிதழ் என்றோ ஒரு சட்டகத்திற்குள் மாற்றுவெளி  தன்னை அடக்கிக்கொள்ளவில்லை.  இவ்வாறு அடக்கிக்கொள்ளாதது அதற்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம்.

மாற்றுவெளி ஆய்விதழ் தன்னைக் காலவரையறைக்குள் அடக்கிக்கொள்ளாவிட்டாலும் வேறொரு சட்டத்திற்குள் தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு பொருண்மை அடிப்படையில்தான் ஆய்விதழ் வெளிவரும் என்று மாற்றுவெளி  தனக்கு ஒரு வரையறையை  விதித்துக்கொண்டது.

பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட ஆய்விதழ் என்பது மாற்றுவெளியின் தனித்தன்மை, அதன் வேறுபட்ட அடையாளம். இதுவரை வந்துள்ள பத்து இதழ்களும்  பத்துப் பொருண்மைகளில் வெளியாகியுள்ளன.எல்லாப் பொருண்மைகளும் எல்லோர்க்கும் உகந்ததாகவோ எல்லோரையும் கவர்வதாகவோ இருக்க முடியாது.

கால்டுவெல் சிறப்பிதழும், தமிழ்ச் சித்திரக்கதைச் சிறப்பிதழும் என்னைக் கவர்ந்தன.  அந்த இரு இதழ்களையும் நான் முழுமையாக, முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை, படித்தேன். கால்டுவெல் சிறப்பிதழ் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் சொல்லத் தேவை யில்லை. நான் மொழியில் ஆய்வு செய்பவன்.

சித்திரக்கதைச் சிறப்பிதழ் என்னைக் கவரக் காரணம்,21 அது என் இளவயது வாசிப்பு நினைவுகளையும், என்  மகனின் இளவயது வாசிப்புப் பழக்கத்தையும் கிளறிவிட்டதாக இருந்ததுதான். அந்தச் சிறப்பிதழின் அழைப்பாசிரியர் கண்ணனைத் தொலைபேசியில் அழைத்து என் கிளர்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.  மேலும், சித்திரக்கதைகளைச் சேகரித்து வைத்திருக்கும் சிலரின் அனுபவங்கள் அந்த இதழில் வெளியாகியிருந்தன. அவற்றைச் சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்கள் பட்ட தொல்லைகளை, என் மகனின் மிக்கி மௌஸ் தொகுப்புகளை அண்மையில் பழைய பத்திரிகைகார ரிடம் எடைக்குப் போட்ட செயலுடன் ஒப்பிட்டபோது ஒரு நெருடல் உணர்வு தோன்றியது. நண்பர் கண்ணன் சித்திரக்கதை தொகுப்பாளர் கலீல் என்பவரிடம் என் நெருடல் உணர்வைத் தெரிவித்தார். அவர் என்னைத்  தொலைபேசியில் அழைத்துப் பேசியது மனதிற்கு மகிழ்ச்சி தந்தது.

தமிழ் நாவல் சிறப்பிதழ், தமிழ்ச் சிறுகதைச் சிறப்பிதழ், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ் ஆகிய மூன்றையும் அவற்றுள் அடங்கியிருக்கும் தரவுகளுக்காக அவற்றைக் கருவி நூல்களாக (Reference works) வைத்திருக்கிறேன்.ஏனைய ஐந்து சிறப்பிதழ்களுள் ஓரிரு கட்டுரைகளைப் படித் திருக்கிறேன்; பக்கங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன்.

ஒரு கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஓர் ஆய்விதழை எப்படி மதிப்பீடு செய்வது? அந்த ஆய்வேட்டின் தாக்கத்தை அறிந்துகொள்ள வழிமுறை உண்டா?

எத்தனை பிரதிகள் விற்பனை ஆகின்றன என்பதைக் கொண்டு ஒரு நாளேடு, தன்  இடத்தை அளவிடலாம். ஆய்வேடு circulation என்பதை அடிப்படையாகக் கொள்ளவே முடியாது. சில நூறு பிரதிகளே ஆய்வாளர்களைச் சென்றடைகிற ஆய்விதழின் இடத்தை அல்லது தாக்கத்தை வேறு வழியில்தான் அறிய வேண்டும்.

ஆய்விதழின் செல்வாக்கு என்பது Impact Factor வழியாகக் கணிக்கப்படுகிறது. இந்த Impact factor எப்படி தீர்மானிக்கப் படுகிறது என்று பார்ப்போம்.அறிவியல், சமூகவியல் ஆகியவற்றில் பொதுவாகவும் அவற்றின் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பாகவும் பல ஆய்விதழ்கள் உலக நாடுகளில் வெளியாகின்றன. Science என்ற ஆய்விதழும்,  Nature என்னும் ஆய்விதழும் ஆய்வாளர்களால் மிகவும் மதிக்கப்படுகிற ஆய்விதழ்கள். அவற்றில் வெளியாகும் கட்டுரைகள் தீவிரமான ஆய்வுகளின் வெளிப்பாடுகள். இவ்விரு ஆய்விதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் உலக அளவில் அந்தந்தத் துறை சார்ந்தவர்களால் கவனிக்கப்படுகின்றன. ScienceWatch.com என்னும் இணையதளத்தில் ஜனவரி 1999இலிருந்து மார்ச்சு 2009 வரையான 10 ஆண்டுகளில் 

“அதிக அளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட முதல் பத்து ஆய்விதழ்கள்” (Top Ten Most-cited Journals) பட்டியலில் Nature மூன்றாவது இடத்திலும் Science நான்காவது இடத்திலும் உள்ளன.

1999-2009 இந்தப் பத்தாண்டுகளில் Nature ஆய்விதழில் வெளியான  ஆய்வுக்கட்டுரைகள்  10,549. இவை உலகெங்குமிருந்து வெளிவரும் ஆய்விதழ்களில் 12,42,392 முறை மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. Science ஆய்விதழில் 1999-2009 பத்தாண்டுகளில் வெளியான ஆய்வுக்கட்டுரைகள் 9,369. இவை 11,25,022 முறை மேற்கோளாகக் காட்டப்பட்டதாகப் புள்ளிவிவரம் ScienceWatch.com இல் தரப்பட்டுள்ளது. 

ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் எந்தெந்த ஆய்விதழ் களில் மேற்கோளாக  ஆளப்பட்டன என்பதை Thompson Reuters கணக்கெடுத்துப் புள்ளிவிவரங்களைத் தருகிறது. நூலகவியலில், தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள்  Impact Factor பற்றி அறிவார்கள். அதன் நுணுக்கங்கள், அதன் போதாமை, போதாமையை நிறைவுசெய்வது என்பன குறித்து ஆய்வுகள் நிரம்ப உண்டு.

தமிழகத்தில் வெளியாகும் ஆய்விதழ்களில் Impact Factor என்பது அறியமுடியாத ஒன்று. இது தேவைதானா, தேவையற்றதா என்பது ஒரு கேள்வி. தேவை என்றால் அதனை நிறைவேற்று வதற்கான சாத்தியக்கூறுகள் நம்மிடையே உண்டா என்பது மற்றொரு கேள்வி.  Impact Factor என்பதை  இதோடு நிறுத்திவிட்டு மாற்றுவெளியின்  புதுமைக்கு வருகிறேன்.

பொருண்மை அடிப்படையில் ஆய்விதழ் என்பது மாற்று வெளிக்குத் தனித்தன்மையும் அடையாளமும் தந்திருப்பது உண்மைதான், என்றாலும் நான் கவனித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொருண்மை அடிப்படையில் ஆய்விதழ் வெளியாகும்போது பொருண்மை முதன்மைபடுத்தப்படுகிறது; ஒரு பொருண்மையின் விவரிப்புகள் முக்கியமாகின்றன. ஒரு பொருண்மையைப்பற்றி எழுதுகிறவர்கள் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள். ஆனால் அவர்கள் - கட்டுரையாளர்கள் - தனிக் கவனம் பெறுவதில்லை.

இதை வேறு வகையில் சொல்கிறேன்:

கல்விச் சிறப்பிதழில், மாற்றுப் பாலியல் சிறப்பிதழில்யாருடைய கட்டுரை நினைவில் நிற்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்புவது வீண் என்று தோன்றுகிறது. ஒவ்வொருவரும் அந்தந்தப் பொருண்மைக்குத் தங்கள் பங்களிப்பைத் தந்துவிட்டு அந்தப் பொருண்மையில் கரைந்துபோய்விடுகிறார்கள். கட்டுரையாளர் முக்கியத்துவம் பெறுவதில்லை; அந்தப் பொருண்மையின் எடுத்துரைப்பில் அவர்கள் கர்ப்பூரம் கரைவது போல் தங்களை இழக்கிறார்கள்.

இதற்கு மாறாக, பொருண்மையை அடிப்படையாகக் கொள்ளாத ஆய்விதழ்களில் கட்டுரையாளர்  முதன்மை பெறுகிறார், அவரின் கட்டுரை ஆய்வுச்செறிவுடன் இருக்குமேயானால், ஆய்விதழில் வெளியாகி அவரையும் அவரின் ஆய்வையும் பலரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது.

பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட மாற்றுவெளி ஓர் அரங்கம் போன்றது; அந்த அரங்கத்தில் கட்டுரையாளர்கள் குழுவாக நின்று தங்கள் பங்கை நிகழ்த்துகிறார்கள். ஆனால், அந்தக் குழுவில் நாயகனோ நாயகியோ கிடையாது. பொருண்மைக்கு முதன்மை அளித்துவிட்டுத் தங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளாத பங்களிப் பாளர்களின் அடக்கம் மிகப் பண்பட்ட ஒன்று.இந்தப் பண்பை வளர்த்தெடுக்கிற சிறப்பாசிரியரையும் அழைப்பாசிரியர்களையும் பாராட்டுகிறேன்.

இன்னும் ஐந்தாண்டுகளில் மாற்றுவெளி தன் இருபத்தைந்தாவது இதழைக் கொண்டுவந்து விழா எடுக்கும் என்று நம்புகிறேன்.

Pin It