‘மாற்றுவெளி’ இன்னொரு சிறுபத்திரிகையா என்கிற கேள்விக்கு ‘ஆம்’ என்றோ, ‘இல்லை’ என்றோ எளிதில் பதிலளித்துவிட முடியாது.சிறுபத்திரிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்ற ஆளுமை களின் குரல்களைத் தாங்கியவாறு,விளம்பரங்களைத் தவிர்த்து பின்அட்டை வரை சீரிய கருத்துகளுக்கு மட்டும் இடமளித்து,ஓர் இதழுக்கென்ற,கருத்தியலை முன்னிருத்துவதாக உள்ள ‘மாற்றுவெளி’ இன்னொரு சிறுபத்திரிக்கையெனவே தோன்றும். ஆனால், கீழ்க்கண்ட வேறுபல அம்சங்கள் சிறுபத்திரிகை என்கிற சட்டகத்திலிருந்து அதனை விலக்கி வைப்பதாக உள்ளது.

இந்த ‘மாற்றுக் கருத்தியல்’எதற்கு மாற்றாக முன்வைக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு முதல் இதழில் தெளிவாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூகத்தின்... இருநூறு ஆண்டு கால மொழிசார்ந்த செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, மாற்றாகச் செயல்பட்ட ஆளுமைகளை அடையாளம் காண்பதும் அவசியம்... சமயம் சார்ந்த உரையாடல்களுக்குள் (அது எவ்வகையில் இருந்தாலும்) இருந்து விடுதலை அடைவதே மனிதனின் சுய மரியாதை. மாற்றுவெளி அதை நோக்கிய பயணம்(பக். 5-6)இக்கருத்து வெறுமனே ஒரு திராவிடக் கருத்தியலை தாங்கி இருப்பதாக தோன்றும். குறிப்பாக, ‘அது எவ்வகையில் இருந்தாலும்’ என அழுத்தம் கொடுத்திருப்பது பார்ப்பனீய எதிர்ப்பை மட்டுமே குறிப்பதாக தோன்றும். ஒரு விதத்தில் இந்த வாசிப்பு சாத்தியம் என்றாலும். எந்த விதமாக மட்டுமே ‘மாற்றுவெளி’ முன்வைக்கிற கருத்தியலை சுருக்கிப் பார்க்க முடியாது.

ஏனென்றால், இந்த இதழ்களை ஒருசேர வாசிக்கும் போது இக்கருத்தியலின் நீட்சி நமக்கு விளங்கும். அதாவது, சமயம் சார்ந்த உரையாடல்களுக்குள் இருந்து விடுதலைங என்பது.

ஆய்வுலகில் இத்தகையதோர் ‘மாற்றுவெளியை’அடையாளம் கண்டு, அதனூடாகப் பயணிக்கத் தேவையான தரவுகள் பலத்தரப் பட்டதாக உள்ளதை நமக்கு விளக்குவதாக ரோஜா முத்தையா நூலகம் குறித்த இதழ் அமைந்துள்ளது. சூடாமணி மறைவை ஒட்டி வந்த நாவலுக்கான சிறப்பிதழும், ஹெப்சிபா ஜேசுதாசன் மறைவை ஒட்டி வந்த சிறுகதைக்கான சிறப்பிதழும், நவீனத்துவம் என்பதைத் தேட முயலும், விமர்சகர்கள் மற்றும் அறிவுஜீவிகள் எவ்வாறு ‘நவீன இலக்கியம்’ என்ற ஒன்றை நிறுவனப்படுத்த முயல்கிறார்கள் என்பதனை உணர்த்துவதாக உள்ளன. மாறாக, நிறுவனமயப்படாத பல புதிய எழுத்துகள்,  எழுத்தாளர்கள் பற்றிய விவாதங்கள் ஊடாக விளம்புநிலை இலக்கியம் பெரிதளவில் வெளிவருகிற இன்றையச் சூழலில் ‘நவீனத்துவம்’ என்பது என்னவாக இருக்கிறது. அது எப்படி சமூகம், இனம் சார்ந்த சிந்தனையாக உள்ளது என்பதனைச் சுட்டுவதாக உள்ளது.

எந்திரகதியோடும். காட்சிக்கலாச்சாரத்தோடும் வைத்து புரிந்துகொள்ளப்படும் நவீனத்துவ சூழலில் நாம் பொருண்மையான சமூக வரலாறு குறித்துச் சிந்திக்கவேண்டியவர்களாய் உள்ளோம் என்பதனை உணர்த்தும் விதமாகக் கார்த்திகேசு சிவத்தம்பி நினைவாக வந்துள்ள இதழ் உள்ளது. நமது வாசிப்பின் தன்மை, அதன் வரலாறு குறித்துச் சிந்திக்கும் அதேவேளையில், காட்சி சார் (Visual)  நூல்களையும் கருத்தியல் ரீதியாக வாசிக்க வேண்டிய தேவையை சித்திரக்கதை சிறப்பிதழ் வலியுறுத்துகிறது.

மாற்றுவெளி முன்வைக்கும் இத்தகைய மாற்றுப்பார்வை ஒருபுறம் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை முன்னெடுத்த சிவதம்பி போன்றோரின் ஆய்வுநெறிமுறைகளை வளர்த்தெடுப்ப தாகவும், மற்றொரு புறம் தமிழகத்தின் சாதி குறித்த தனித்தன்மையை உள்வாங்கி மார்க்சீய - திராவிட கருத்தியல்களை நீட்டிக்க முயல்வதாக உள்ளது எனலாம்.

கீழைத்தேய ஆய்வுகள் மூலமாகவும், தமிழ் சமூக - பண்பாட்டு வரலாறு குறித்த ஆய்வுகள் மூலமாகவும், தலித்  வரலாறு குறித்த ஆய்வுகள் மூலமாகவும் தமிழகத்தின் சாதி குறித்த தனித்தன்மை அணுகப்படுகிறது.

சபார்டர்ன் ஆய்வுகள் ‘விவசாயி’ என்கிற தட்டையான கருத்தாக்கம் மூலம் எப்படி ஒரு Objective ஆன பண்பாட்டு வரலாற்று அணுகுமுறையை முன்வைத்தார்களோ, அதேபோல இங்கும் தமிழக சாதி சமூகத்தின் தனித்தன்மையை Objective ஆக வாங்கிக்கொள்ள முடியும் என்கிற கருத்து ‘மாற்றுவெளி’யின் ஊடாக முன்வைக்கப் படுகிறது. இப்போக்கு தலித் இலக்கியம் - வரலாறு என்பதனை எதிர்கொள்ளும் விதத்தில் வெளிப்படுகிறது. கிழைத்தேய ஆய்வுகளின் பண்புப் பற்றி(Oriental)  பேசும்போது ஆய்வாள்களிடையே காணப்படுகிற முரணைப்பற்றி எட்வர்ட்  சையத் இவ்வாறு கூறுவார். அதாவது, தமது ஆய்வுக்கு, ஆதரவளித்து, தமது ஆதிக்கத்தை ‘கேள்விக்குள்ளாக்காதவர்’ நல்ல கீழைத்தேய பண்பாடு எனவும், தம்மை கேள்விக்குள்ளாக்குவோரை ‘தீய கீழைத்தேய பண்பாடு’ எனவும், அவர்கள் கருதுவதை சையத் சுட்டிக்காட்டுவார்.

இது போன்றதோர் முரண் ‘மாற்றுவெளி’ முன்வைக்கும் மாற்றுப்பார்வையிலும் நமக்குக் காணக்கிடைப்பதாக உள்ளது. அதாவது, தலித் எழுத்துகளில் தமது இனத்தவரின் சோகங்களை மட்டும் பேசும் தலித் எழுத்துகள் அனுகரணையுடனும், திராவிட வரலாற்றை கேள்விக் குள்ளாக்க முனைவோரின் எழுத்துகள் தீவிரக் காட்டத்துடனும் அணுகப்பட்டுள்ளது. தலித் எழுத்துகளிலோ, வரலாறுகளிலோ பறையர் இனத்தவரின் பிரதிநிதித்துவம் தூக்கலாக இருப்பதைக் குறித்து அருந்ததியர் இயக்கம் சார்பாக முன்வைக்கப்படும் வாதத்துக்கும், அதனைக் குறிப்பிட்டு தலித் வரலாறு என்று முன்வைக்கப்டும் முயற்சிகளை ஆய்வுக் கண்ணோட்டம் என்கிற நிலையில் இருந்து மறுதலிப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டியவர்களாக உள்ளோம். இதை உணர மறுக்கும் போது ‘மாற்றுவெளி’ எதனைக் குறித்த (தமிழக சாதி சமூகம் குறித்த) மாற்றுப் பார்வையை முன்வைக்க முயல்கிறதோ அதனை மறுதலித்தாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்திலிருந்து மீள்வதற்கான ‘மாற்றுவழி’ குறித்து நாம் சிந்தித்தாக வேண்டியுள்ளது.

திரும்பத் திரும்ப புதுப்புது வடிவங்களில் நம்மை ஆட்கொள்ள முயலும் முரண் எதிர்வுகளைக் கடந்து செயல்படுவது எவ்வாறு என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியவர்களாய் உள்ளோம். பெண் எழுத்துகள், இஸ்லாமியர் மற்றும் தலித் எழுத்துகள் போன்றவை அடையாள  அரசியலினுள் இயங்கினாலும் அதனைக் கடந்தும் செயல்படுவதை நாம் பல சமயம் அங்கீகரிக்க மறுத்து வருகிறோம். இத்தகைய மனரீதியான தடையை கடந்து செல்லும்போது, ‘பறையர் பிரதிநிதித்துவம்’ என்பது தலித் இலக்கியம், வரலாறு குறித்த பிரச்சனையாக மட்டும் இருக்காது.

அதாவது, ‘‘Pariah’ என்கிற பெயர்ச்சொல் ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், இந்திய ஊடகங்களிலும் பொதுவான வகைச் சொல்லாக செயல்படும்போது அதனை எதிர்க்க வேண்டிய அழுத்தம் (பல்வேறு தலித் இனத்தவர்களுள்) யாருக்கு இருந்தது என்பதனை ஒட்டி சிந்திக்கும்  போது, நமது கவனம் இன்னும் பின்னோக்கி நகர்ந்து நமது பண்பாட்டு வரலாறு, கீழைத்தேய ஆய்வு வரலாறு, தேசிய கட்டுமானம் இவற்றில் சாதிய பார்வை என்பதை நோக்கித் திரும்பும். அதே போல இலக்கியத்தளத்தில் சோதனை முயற்சிகள் குறித்துப் பேசும்போது சிலரது இலக்கியங்களை மட்டும் விவாதித்து, பெண்கள், இஸ்லாமிய, தலித் எழுத்துகளை அடையாள அரசியலுக்குள் சுருக்குப்போடாமல் அவற்றினுள் காணப்படுகிற சோதனை முயற்சிகளை அடையாளப்படுத்துவது அவசியமாகிறது. இதற்கு உள்ளடக்கம் குறித்த அலசலோடு நின்றுவிடாமல், வடிவம் சார்ந்த சிந்தனைகளை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கு ரோஜா முத்தையா நூலகத்தில் ‘தலித் வரலாறு’ குறித்த ஆவணங்களைக் கவனப்படுத்துவதோடு,  இந்தியப் பொருளதாரம், சமூக - வரலாறு குறித்த நமது ஆய்வுகளில் ‘சாதி’ என்பதை ஒரு அலகாக கணக்கிலெடுத்து கொள்ளவேண்டும். இது ‘மாற்றுவெளி’ இதழுக்கான பொறுப்பு என்று கருதாமல், வாசகர்களான நமது பொறுப்பாக நான் பார்க்கிறேன். இத்தகைய கூட்டு முயற்சிகளே ‘மாற்றுவெளி’ என்பது, சாதி உட்பட்ட ஏற்கெனவே நிலவி வருகிற கட்டுமானங்களைக் கடந்து, மாற்றுவெளிகளை உருவாக்கிட உதவுவதாக இருக்கும்.