இஸ்லாமிய  சமூகத்தின்  இரண்டு கருத்தியல் பிரிவுகளுள்  ‘ஷியா’வின் உட்பிரிவான  ‘தாவூதி போரா’வைச் சார்ந்த  அஸ்கர் அலி என்ஜினியர், சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி மற்றும் ஆய்வாளர். இஸ்லாமிய மதக் கருத்தியல் திரிபுகளின் எதிர்வினைக்கு இவரது ஆய்வுகள் மிகச் சிறந்த ஆவணம். கட்டிடப் பொறியியலில் பட்டம் பயின்ற அஸ்கர்அலிக்கும் தமிழ் ஆய்வுலகிற்குமான  இடைவெளி மிகவும் குறைவு. மார்க்சியம் மற்றும் இருத்தலியல்வாதம் தொடர்பான வாசிப்பினைத் தீவிரமாக நிகழ்த்திய அஸ்கர்அலி, தன்னுடைய ஆய்வுகளில் அவற்றைப் புகுத்திப் பார்க்கத் தவறவில்லை. மதங்களிடையே நிலவும் வெறுப்புணர்வுகள் மற்றும் வன்முறைகளை எதிர்ப்பதற்கு, தான் பிறந்த சமூகமான போரா சமூகத்தில் பல்வேறு அடக்குமுறைகளைச் செயல்படுத்திய  தலைமைகுரு சயீத்னாவை எதிர்ப்பதற்கு, இஸ்லாமிய மதத்தில் காணப்பெறும் மானுடம், அமைதி, சகிப்புத்தன்மை, பாலினசமத்துவம்தொடர்பான கருத்தாக்கங்களை மீள்வாசிப்பு செய்வதற்கு என்ற மூன்று காரணங்களுக்காகவே தன்னுடைய வாழ்நாளை செலவிட்ட அஸ்கர் அலி கடந்த மே மாதம் 14 ஆம் நாள் மறைந்தார்.

மதகுருமார்களின் பிரிவான தாவூதி போராவில் பிறந்ததால் அஸ்கர் அலி, இளம் வயதிலேயே  இஸ்லாமிய மதக்கல்வியை முழுமையாகக் கற்றிருந்தார். திருக்குரான், ஹதீதுகளில் ஆழ்ந்த புலமைப் பெற்றவரான இவர், மதக்கருத்தியல்களைச் சமூக, பொருளாதார அணுகுமுறையில் ஆராய்ந்தார். கொள்கை வெறிகொண்ட மதங்களில் ஒன்றாக, பாலின சமத்துவத்திற்கு எதிரானதாக கருதப்பெறும்  இஸ்லாமிய மதத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்த கருத்தியல்களுக்கு, அதற்குரிய விளக்கங்களைச் சான்றுகாட்டி நிறுவியுள்ளார். கருத்தியல்களுக்கு விளக்கங்களை அளித்ததுடன் அவற்றின் தோற்றம், தோற்றத் திற்கான சமூகக் காரணங்களைத் தர்க்க அடிப்படையில் விளக்கி, சில கருத் தியல்கள் சமகாலத் தன்மையுடன் பொருந்தாததை குறிப்பிட்டு, காலச் சூழலுக்கேற்ப மாற்றங்களை உட்செரிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்கர்அலியின் பெரும்பாலான எழுத்துக்கள் மதங்களிடையே நிலவும் வெறுப்புணர்வுகள் மற்றும்  வன்முறைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதற்கு அவர் வாழ்நாளில் சந்தித்த  ஜபல்பூர் கலவரம் (1961), அஹமதாபாத் கலவரம் (1969) போன்ற சம்பவங்களே காரணமாக அமைந்திருக்கலாம். உண்மையான மதம் என்பது வன்முறை, வெறுப் புணர்வு, குறுகிய மனப்பான்மை போன்றவற்றை வலியுறுத்துவதில்லை என்பதே அஸ்கர் அலியின் கருத்தாக இருந்தது. அடையாளம் பதிப்பகத்தின்  வெளியீடாக சு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிங்கராயரால் தமிழில் மொழிப்பெயர்த்து வெளிவந்துள்ள ‘இஸ்லாத்தின் பிரச்சனைகள் ஒரு மறுபார்வை’ (2010) என்னும்  நூலில் உள்ள இஸ்லாமும் முஸ்லிமல்லாத சிறுபான்மையினரும், இஸ்லாமும் அறமதிப்பீடுகளும், இஸ்லாம் - முஸ்லீம்கள் - சமகால இந்தியா  போன்ற கட்டுரைகள் வெறுப்புணர்வு மற்றும் வன்முறை கருத்தாக்கங்களை  மிக விரிவாக பேசியுள்ளது.

இக்கட்டுரைகளில் அஸ்கர்அலி, பெரும்பாலான இந்துத்துவ வாதிகள் மற்றும் ஊடகங்களால் கட்டமைக்கப்பெறும் கருத்தாக்கமான  “இஸ்லாமிய சமூகம் வன்முறைக்கானது”  என்பதை நிறுவும் கருத்தியல்களான  காபிர், ஜிகாத், ஜிஸ்யா போன்ற சொல்லாடல்களுக்கு உரிய பொருளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட பின்னணிகளையும் விளக்கியுள்ளார். சில கருத்தியல்கள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதற்குப் பிற சமூகத்தவர்கள் மட்டுமின்றி இஸ்லாமிய சமூக்தவர் களும் காரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் அஸ்கர்அலி.(2010 ; 154) 

அஸ்கர்அலி ஆய்வுகளின் மற்றொரு தன்மை தாவூதி போரா சமூகச் சீர்திருத்தம் தொடர்பானதாக இருந்தது. இஸ்லாமிய சமூகம் ஓரிறை கொள்கையை அடிப்படையாகக் கொண்டது; இதற்கு மாறாக தாவூதி போரா சமூகத்தவர்கள் தலைமைகுரு சயீத்னாவின் பாதத்தில் விழுந்து வணங்கும் வழமையைக் கொண்டிருந்தனர். இத்தன்மையை அஸ்கர்அலி, தன் இளமைக் காலத்திலேயே எதிர்த்துள்ளார். சுமார் இருபது ஆண்டுகள் மும்பை மாநகராட்சியில் பணியாற்றிய அஸ்கர்அலி, தன்  சமூகத்தைச் சீர்திருத்தும் பணிக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்காகவே 1983இல் விருப்ப ஓய்வுப் பெற்றார். ‘

The Bohras (1994) என்ற நூலை சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள தையும் அறியலாம். தாவூதி போரா சமூகத்திற்கு எதிரான, அஸ்கர்அலியின் பயணம் இறுதிவரை தொடர்ந்துள்ளது. தலைமைகுரு சயீத்னா, தன் சமூக மக்களிடம் வரிகள் வசூலித்த போது அதனை எதிர்த்ததோடு சயீத்னாவின் தேவையற்ற செயல்களையும் மக்களுக்கு உணரச் செய்தார். இதற்கான எதிர்வினைகளை அஸ்கர்அலி,  மிரட்டல், கொள்ளை, கொலைத் தாக்குதல், சமூகப் புறக்கணிப்பு எனப் பலவழிகளில் சந்தித்துள்ளார்; உயிரை இழந்த பிறகும் மையவாடி (அடக்க தலம்) மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில் சன்னி பிரிவினிரே உடலை  அடக்க இடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியமதக் கருத்தியல்களை மீள்வாசிப்பு செய்யும் நோக்கில் அஸ்கர்அலியின் ஆய்வுகள் மற்றொரு தளத்தில் இயங்கியுள்ளது. இவர் ஆய்வுகளுக்காக  ‘Institute of Islamic studies’ (1980)என்ற நிறுவனத்தை நிறுவி அதன் இயக்குநராகவும் ‘Centre for study of Society and secularism’ (1993)  என்ற மற்றொரு நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இஸ்லாத்தில் காணப்பெறும் அகிம்சை, குடும்பக் கட்டுப்பாடு, மனிதநேயம், பாலின சமத்துவம், குற்றங்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் போன்றவற்றிற்கு அதற்குரிய பொருளை தகுந்த விளக்கங்கள் அளித்து, அக்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய சமூக மக்களுக்கே பெரும்பாலான கருத்தியல்களின் சாரம், தோற்றச்சூழல் போன்றவை விளங்காமல் வறட்டுத்தனமாகப் பயன்படுத்து வதைத் தன்னுடைய ஆய்வுகளில் பல இடங்களில் கூறியுள்ளமையையும் காணலாம்.(2010; பக் -114,179) ஆய்வுலகில் பெரும்பாலான ஆய்வாளர்கள் தங்களுடைய கருத்துக்களை ஓரிரு சான்றுகளை முதன்மையாகக் கொண்டு மட்டுமே நிறுவுவர்; ஆனால் அஸ்கர்அலியின் ஆய்வுகளோ மத நூல்களின் விளக்கம், சமூகவியல் அறிஞர்களின் கூற்றுகள் , வரலாற்றறிஞர்களின் கூற்றுகள் எனப் பல ஆய்வாதாரங்களைக் கொண்டு விளங்கி, பல்வேறு வாசிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. இத்தகைய தன்மை அஸ்கர்அலியின் உறுதியான ஆய்வு முடிபுகளுக்குச் சான்று பகர்கிறது.

தமிழ்ச்சூழலில் அஸ்கர்அலியின் ஆய்வுகளுக்குத் தனித்த இடம் உண்டு. இஸ்லாமிய ஆய்வுகளைச் சமூக, பொருளாதார அணுகுமுறையில் ஆராய்ந்து  மற்றொரு தளத்திற்கு இட்டுச் சென்ற முயற்சியில் மறுக்கப்பட முடியாதவர் அஸ்கர்அலி.ஆய்வுலகில் அஸ்கர் அலியின் இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. எழுபத்து நான்கு ஆண்டுகள் வரை வாழ்ந்த அஸ்கர் அலி , 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள போதிலும் அவரின் சில நூல்களே பேசப்படுகின்றன; இதற்கான காரணத்தையும் ஆராய்ந்து பார்க்கலாம். அஸ்கர்அலியின் ஆய்வுகளை நாம் வாசிக்கும் போது அவை எந்த ஒற்றைப் புரிதல்களிலும் அடங்காமல் விரிவான  தளத்தில் செயல்பட்டுள்ளதை அறிய முடியும். அஸ்கர் அலியின் இழப்பினை ஈடுசெய்ய ஆய்வுலகில் அவரின் சிந்தனைகளை மீண்டும் மீண்டும் வாசித்து மீட்டெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்.

Pin It