நான் முதன்முதல் வீணாமஜூம்தார் அவர்களைப் பார்த்தது ‘அன்லிமிடெட் கேர்ல்ஸ் (http:/www.cultureunplugged.com/documentry/watch-onlineplay/ 452/unlimited-girls)’  என்னும் ஆவணப் படத்தில்தான். புகைமூட்டத்தின் ஊடே, சிகரெட் துண்டு விரல்களிடுக்கில் இருக்க, தனக்கும் பெண்ணியத்திற்குமான உறவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.சமூக மாற்றச் செயல்பாடுகள் சார்ந்த ஆய்வு வேலைகள் (actionresearch),வங்காளத்தின் பங்கூரா மாவட்டத்தில் வாழும் பெண்களிடமிருந்து அவர் கற்றப் பெண்ணியம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினார்.

பல ஆண்டுகள் இலண்டனில் படித்துவிட்டு,இந்தியாவிற்கு திரும்பிய அவர்,பாட்னா மற்றும் பிற இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.சமத்துவத்தை நோக்கி:இந்தியப் பெண்கள் குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கை (Towards Equality: A report of the committee on the status of woman in India) என்னும் பெரும்பணியை வீணா மஜூம்தார்; லோதிகா சர்க்கார் போன்ற பெண்கள் அடங்கிய குழு உதவியோடு 1975இல் செய்து முடித்தார்.இவ்வறிக்கை உருவாக்குவதற்கான ஆய்வுக்காக,அவரது குழுவினரோடு நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார்.இவ்வறிக்கை அவரது மிக முக்கியமான சாதனையாக இன்றும் கருதப்படுகிறது.

2010ஆம் ஆண்டில் அவரது சுயசரிதை வெளிவந்தது. அதில் இவ்வாய்வுக்குழு அறிக்கை பற்றிப் பேசுவது, நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’வை ஒரு பக்கம் நினைவூட்டினாலும் இன்னொரு பக்கம்,தம் அரசியல் பயணத்தின் மூலவர்களாகக்கருதும்,தாம் சந்தித்தக் கிராமத்தின் பெண்களைப் பற்றிப் பேசுகிறார்.கிராமத்துப் பெண்களிடம் அவர் கண்டறிந்த உண்மைகள்;சுதந்திரம் அடைந்த இந்தியாவின் முதல் தலைமுறைப் பெண்கள் கொண்டிருந்த நம்பிக்கையை குலைத்ததாகக் கூறுகிறார். அதுமட்டுமன்று, நேரு விட்டுச் சென்ற பாசிச வாரிசான இந்திராகாந்தி, அவசர நிலைச் சட்டம் கொண்டுவந்த காலத்தில், வீணாவுக்கு உதவி அளித்துவந்த அரசாங்க அலுவலர்கள், குறிப்பாக நூருல் ஹாசன் போன்றவர்கள், இந்திரா காந்திக்கு தெரியாமல் மேற்குறித்த அறிக்கை வெளிக்கொண்டு வந்த கதையையும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வீணா இடம்பெறும் மேற்குறித்த ஆவணப் படத்தில் நானும் இருக்கிறேன். அவர் இந்தியப் பெண்ணிய இயக்கத்தின் முதல் தலைமுறையாகக் காண்பிக்கப்படுகிறார்.கல்லூரியில் பட்ட வகுப்பு இரண்டாம் ஆண்டு, வரலாறு படித்துக் கொண்டு, அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நான்,வரும் கால தலைமுறையாக இன்னொரு தோழியுடன் காண்பிக்கப்பட்டேன்.அப்பொழுது வீணாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் இயக்கம் சார்ந்த, ஒரு வரலாற்று நோக்கில், நான் எனது அரசியலை, அவரது அரசியல் மற்றும் வேலைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவே உணர்கிறேன்.

2011ஆம் ஆண்டு இந்தியப் பெண்களுக்கான ஆய்வுக்குழு (Indian Association of Women’s Studies) மூலம், 1970களில் இந்தியப் பெண்ணிய இயக்கங்கள் குறித்த ஆய்வுத்திட்டம் எனக்கு வழங்கப்பட்டது. முப்பது பெண்களை நான் பேட்டி காண்பதென முடிவெடுக்கப்பட்டது. நான் எனது முதல் நேர்காணலை வீணா மஜூம்தார் அவர்களிடம் தொடங்குவது என முடிவெடுத்தேன். அவர் உருவாக்கிய தில்லியில் உள்ள பெண்கள் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவன (Centre for Women’s development studies) சிறிய அறையில் அவர் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவருக்கு வயது எண்பத்து நான்கு. தன் கதையை எங்கிருந்து தொடங்குவது என்று அவர் கேட்க, முதலிலிருந்து சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். சிறு குழந்தை ஒன்றிடம் பாட்டி சொல்வது போல் அவர் சொல்லத் தொடங்கினார்.

ஏற்கனவே தன்னுடைய சுயசரிதையை எழுதிவிட்டதால் அக்கதையை அதன் வரையறைக்குள் வைத்துக் கூறினார்.வரலாற்று மாணவியான எனக்கு,அவரது சுயசரிதையில் பல பரிமாணங்கள் அடங்கிய வாழ்க்கை ஒரு நேர்க்கோட்டில் சொல்லப்பட்டதாகவே தோன்றியது.அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற நான் அவரது சுயசரிதை நூலைக் கூர்ந்து படித்து ஒவ்வொரு வரிக்கும் இடையில் மறைந்துள்ள  கதைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடன் தான் அவரைச் சந்தித்தேன்.ஓரளவு அதனைச் செய்யவும் முடிந்தது.

வீணா மஜூம்தார் முன்னோடியாக பல வேலைகளை தம் வாழ்க்கையில் செய்துள்ளார். நிறுவனம் ஒன்றை உருவாக்கி,அதன் சமூக நோக்கம் பிறழாமல்,உண்மையான அர்ப்பணிப்புடன்செயல்பட்டார்.இந்தியப் பெண்கள் குறித்த ஆய்விற்கான முன்னோடி நிறுவனமாக அது செயல்படுகிறது.சமூக எதார்த்தத்திற்கும் ஆய்வுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் செயல்படும் இன்றைய சூழலோடு ஒப்பிடும்போது,வீணா  உருவாக்கிய நிறுவனம்,பல ஆண்டுகளுக்கு முன்பே உண்மையான சமூக மாற்றத்திற்காகச் செயல்படும் திட்டத்தோடு அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

ஆய்வின் முக்கியத்துவம்,அதனை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து அவர் அடிக்கடிப் பேசினார்.தம்மைச் சுற்றி இளம் வயது ஆய்வாளர்களை வைத்துக் கொண்டு, அவர்கள் ஆய்வு செய்ய பெரிதும் உதவினார். இளம் ஆய்வாளர்களைப் பாராட்டிப் போற்றினார்.இதனை தில்லியில் அவருக்கு நடத்திய இரங்கல் கூட்டத்தில் அனைவரும் நினைவு கூர்ந்தனர்.

அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.முதலாவதாக அவர் நிறுவனம் உருவாக்கிய முறைமை. தில்லியில் இருந்த அரசுசார் நிறுவனங்களுடன் உறவை வளர்த்து,அந்தச் சூழலில் தம் நிறுவனத்தை நடத்தினார்.முற்போக்கான சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க முனைந்தார். இன்று இம்மாதிரியான நிறுவனங்களில் செயல்படுவோரை, வர்க்கம், சாதி என்று ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காக செயல்படும் பாங்கில் உரையாடல் நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை.

வீணா தம் வாழ்நாள் முழுவதும், ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக் கற்றல், அதற்குள் செயல்படல் என்பதை முதன்மையான செயல்பாடாகக் கூறினார்.இதனை மாணவர்கள் மத்தியில் பேசும்போதும் தமது பேட்டிகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.சமூகத்தின் மேல்மட்டத்தில் பிறந்து ஆய்வு செய்வோருக்கு மேற்குறித்த தன்மை மிகமிக அவசியம் என்றும் கூறினார். தில்லியில் இருக்கும் ஆய்வாளர்களுக்கு இது ஒரு முக்கியமான பாடம் ஆகும்.

தமிழ்ச் சூழலிலும் இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறேன். தமிழில் ஆய்வு செய்தாலும், அதற்கான பிற உறவுகள் பற்றிச் சிந்திப்பது அவசியம். அது ஆங்கிலத்தில் மட்டுமல்ல;பிற இந்திய மொழிகள் சார்ந்தும் செயல்பட வேண்டும். தாய்மொழியான வங்காளத்தில் வேரூன்றி நின்ற வீணா மஜூம்தார்,ஒருவகையான உலகப் பார்வையை (Cosmopolitanism)  தம் ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். இன்று பல தருணங்களில் வெளிப்படும் வேரற்ற உலகப் பொதுமையான பார்வையிலிருந்து அவர் வேறுபட்டு இருந்தார்.தில்லியில் இருந்த சமூக செயல்பாடு சார்ந்த ஆய்வாளருக்குப் பெரும் துணையாகவும் முன்னோடியாகவும் வாழ்ந்தார்.

சமூக மாற்றம் சார்ந்த அரசியல் பார்வையுடன் செயல்படுவர்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் எவ்வகையான உறவைக் கட்டமைப்பது என்பதற்கு வீணா முன்னுதாரணமாக வாழ்ந்தார்.பல்வேறு அரசு நிறுவனங்களைத் தம் ஆய்விற்குப் பயன்படுத்திக் கொண்டார்.அவசர நிலை கொண்டு வரப்பட்ட காலத்தில் கூட இவர் கூட்டங்களை நடத்த முடிந்தது. அனைத்து தரப்பினரும் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, வீணா எவ்வாறு அச்சூழலில் செயல்பட முடிந்தது என்பது முக்கியமான பாடமாகும்.சமூக மாற்றத்திற்கான அரசியலுக்கும் அரசு நிறுவன அரசியலுக்கும் இடையில் செயல்படுவது குறித்த பாடத்தை வீணா கற்றுக்கொண்டு செயல்பட்டார். இது அவரது சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தம் வாழ்க்கை முழுவதும் பல்வேறு வகைப்பட்ட நண்பர்களை அவர் உறவாகப் பேணிவந்தார்.அவரது இரங்கல் கூட்டத்தில் இதனை பிரமிளா லும்பா மிக அழகாகச் சித்திரித்தார். வீணாவும் பிரமிளாவும் ஒரே அரசியல் குழுவில் இருந்தது கிடையாது. ஏழு சகோதரியர் என்னும் குழுவை முதன்முதலாக உருவாக்கி, பல்வேறு இடதுசாரி பெண்கள் அமைப்புகள் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்த போராட்டங்களை வீணா நடத்திக் காட்டினார்.அவரிடம் இருந்த பரந்துபட்டுப் பழகும் மனநிலையும் எதனையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தும் தன்மையும் பல்வேறு குழுவினயும் ஒருங்கிணைக்க வாய்ப்பாக அமைந்தது.மனந்திறந்து எதனையும் அவர் வெளிப்படுத்தினார்.அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி மனித உறவை பெரிதும் மதித்தார். வேறுபாடுகளுக்கிடையில் ஒருங்கிணைந்து செயல்படும் அரசியல் செயல்பாட்டை அவர் நடைமுறைப்படுத்தினார். வீணாவின் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

“நான் வேலை செய்தேன். என்னால் முடிந்தது இதுதான். இனி எல்லாம் உங்கள் கையில்” என்று சாதாரணமாக என்னிடம் கூறினார். அவர் வேலை செய்த முறைகள்; உருவாக்கிய நிறுவனங்கள் ஆகியவற்றை விமர்சனப் பார்வையோடு வரலாற்று ரீதியாகப் புரிந்து கொண்டு, அதற்குள் நமக்குள்ள ஒப்புதல்கள், வேறுபாடுகள் ஆகியவற்றை உணர்ந்து செயல்படும் தேவை நம்முன் உள்ளது. இந்தியப் பெண்ணிய வரலாறு, சமூக மாற்றம் சார்ந்த செயல்பாடுகளின் வரலாறு ஆகியவற்றில் வீணா அவர்களின் இடம் முதன்மையானது. அவரிடம் இருந்த இத்தன்மைகளை கற்றுக் கொள்வது, நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி. எம் போன்றோருக்கு அவர் முன்னோடியாக இருக்கிறார்.

Pin It