அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் சித்திரக்கதைகள் வார இதழ்களில் தினசரிகளிலும் சிறுவர் இதழ்களிலும் பக்தி இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. 1960களிலிருந்து சித்திரக்கதைகளுக்கென்றே தனி இதழ்களும் வெளியிடப்பட்டுவருகின்றன. ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களில் கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் இச்சித்திரக்கதைகள் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. சித்திரக்கதைகள் ஒரு கலைஇலக்கியவடிவமாக அங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. முழுமையாகக் காட்சிமயப்பட்டதாக நம்முன் நிற்கும் இன்றைய உலகத்தை அறிந்து, புரிந்து கொள்வதற்கான முதல்படியாகச் சித்திரக்கதைகள் அங்கு கருதப்படுகின்றன. இலக்கியவடிவமாகவோ கலைவடிவமாகவோ சித்திரக்கதைகள் தமிழ்ச்சூழலில் கருதப்படுவதில்லை. ஆனால் இன்றுவரை இவ்வடிவம் சிறுவர்களுக்கானது, பொழுதுபோக்கிற்கானது என்று கருதும் ஒரு பார்வையே நிலவிவருகிறது. தமிழ்ச் சித்திரக்கதைகள் மீதான முறையான ஆய்வு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இச்சூழலில் ‘மாற்றுவெளி’  இத்தகைய ஆய்விற்கான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இவ்விதழில் வாசகர், மொழிபெயர்ப்பாளர்,  ஓவியர் ஆகியோரின் அனுபவங்களையும் சித்திரக்கதைத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் பதிப்பாளர்,  ஓவியர்கள், வாசகர்கள் ஆகியோருடனான உரையாடல்களையும் உள்ளடக்கியுள்ளது.

***

சு.பிரபாவதி

கண்ணன்.எம்

(அழைப்பாசிரியர்கள்)

Pin It