உலகம் பற்றிய அகவுலகக் காட்சிகளாய் மலர்கிறது சிறார் உலகம். புற்பூண்டு முதலான மரஞ்செடி கொடிகளோடு பறவைகள், விலங்குகள், மீன்கள் மற்றும் மனிதர்கள் வாழும் இந்நிலவுலகில், சிறார்கள் தங்கள் கற்பனைகளால் கட்டி யெழுப்பும் அவ்வுலகில் நுழைவது அலாதியா னது. ஒவ்வொரு துளிப்பொழுதின் நிகழ்வையும் காட்சியையும் வேட்கையோடு நுகரும் சிறார்களின் இளமனநிலையே அறிவுலகின் அரிச் சுவடி. அந்த அரிச்சுவடியின் பக்கங்களாகவே சிறார்களுக் கான கலை இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.

இளஞ்சிறார்களின் நுண்ணறிவுப் போக்கையும் கற்பனை களையும் உள்வாங்கிக்கொண்டு அவர்களின் மனவேகத்தோடு செயற்படுபவர் களே சிறார்களுக்கான கலை இலக்கியங்களைப் படைக்கிறார்கள்.

ஒரு சிறுவனின் உயரத்திற்கு இணையாக மண்டியிட்டு அவன் இதயத்தோடு பேசத்தெரிந்த மனிதனே சிறார்களுக் கான படைப்பாளி.

கதைகூறல், கதையாடல், கதைப்பாட்டு, விளையாட்டுகள், கைவினைக் கலைகள் என மரபுவழி அமைந்த கலைப் படைப்பு கள் தவிர்த்து சிறுவர்களுக்கேயான தனித்துவமான படைப்பு களோ படைப்பாளிகளோ தமிழில் மிகமிகக் குறைவு.

ஒளவையார், பாரதியார், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளி யப்பா போன்ற ஒரு சிலரே குழந்தை இலக்கி யத்தில் கவனம் செலுத்தியுள்ளனர். சிறார் கலை இலக்கியப் படைப்புகளில் ஓர் அம்சமான படக்கதை வடிவத்தின் சிறப்பை உணர்ந்த சில பொது ஊடகங்கள் சிறார்களுக்கான படக்கதைகளை ஒரு பகுதியாகத் தொடந்து வெளியிட்டு வருகின்றன.  தினத்தந்தி, தினமணி, தினமலர் போன்ற தினசரிப் பத்திரிகைகள் முறையே தங்கமலர், சிறுவர்மணி, சிறுவர்மலர் என்ற சிறார் இணைப்பு இதழ் களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

கடந்த அரை நூற்றாண்டுளாக இளஞ்சிறார்கள் பார்த்தும் படித்தும் மகிழும் வண்ணம் படக்கதைகளை அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறார் இதழ்கள் வழங்கிவருகின்றன.

பிரபல வார இதழான ஆனந்தவிகடன் 1999 ஆம் ஆண்டு குழந்தைகள் தினம் முதல் சுட்டிவிகடன் என்னும் சிறார் பத்திரிகையை நடத்தி வருகிறது. மாத இதழாக ஆரம்பிக்கப் பட்ட சுட்டிவிகடன் 2005ஆம் ஆண்டு முதல் மாதம் இரு இதழ்களாக வெளியிட்டு வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் கதை, அறிவியல் கதை, தொடர்கதை, பாட்டு, நேர் காணல், குறுஞ்செய்தி, நகைச்சுவை, கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், பயணக்கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஓவியப் பயிற்சிப் பக்கங்கள், செய்முறை விளக்கத்துடன் கைவினைப் பயிற்சி இணைப்புகள் எனப் பல தளங்களில் மலரும் சுட்டிவிகடனில் சிறார்களின் மனங்கவர்ந்த படக்கதைகள் (நீஷீனீவீநீs) ஒருபகுதியாக இடம்பெறுகின்றன.

சேர்த்துக் கோர்க்கப்பட்ட படங்களின்மூலம் கதை சொல் லும் படக்கதை வடிவம் தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் கலைவடிவம். ஆரம்பக் கல்விப் பாடந்தொட்டு மனித இனம் கண்டறிந்த அனைத்துத் துறைகளிலும் படக்கதைகளின் செயல்முறை முக்கிய அங்கம் வகிக்கிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சான்றாக வெளிவரும் அதிநவீன அனிமேஷன் திரைப்படங்களும் படக்கதைகளின் உன்னதத்தைத் தெளி வாக்குகின்றன.

தனிக்கதைகளாகவும் தொடர்கதைகளாகவும் இடம்பெறும் படக்கதை கள் சிறார்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகின் றன. அதனால் சுட்டிவிகடனில் படக்கதைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டேயிருக்கிறது என்கிறார் சுட்டிவிகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் ஏ.உபைதூர் ரஹ்மான்.

வரலாற்றுக்கு எப்போதும் மனிதன் குழந்தையாகவே இருக்கிறான். அக்குழந்தை மனிதனே வரலாற்றையும் படைக் கிறான். ஆதி முதல் இன்றுவரை பல்வேறு வடிவங்களைப் பெற்று நிகழ்ந்து வரும் படக்கதைகள் சிறார் உலகைப் பொருத்தவரை நுண்ணறிவுக் கேள்விகளாலும் படைப் பெனும் ஆச்சர்யமான பதில்களாலும் கொண்டாடப்படு கின்றன. அந்தவகையில் சுட்டிவிகடன் சிறார்களின் இள மனநிலையைத் தொட்டுப் பார்க்கும் பல்வேறு கதைகளைத் தனிப் படக்கதைகளாகவும்,தொடர் படக்கதைகளாகவும் வெளியிட்டு வருகிறது.  இளஞ்சிறார்களின் கண்ணோட்டத் துடன் கொள்கை, கோட்பாடுகள், உயிரினங்கள் உடனான மனிதனின் நட்பு, வீரதீரக் கதைகள், உன்னத அறிவியல் படைப்புகள், உலகம் போற்றும் மேதைகளின் வரலாற்றுக் கதைகள் போன்றவற்றைக் கதைப்பொருளாகக்கொண்டு சுட்டி விகட னில் படக்கதைகள் படைக்கப்படுகின்றன. இதழில் மொழிமாற்றப் படக் கதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அப்படக்கதைகள் எதற்காகப் படைக்கப்படுகின்றன, அவை எவ்வாறு சிறார் உலகைச் சென்றடைகின்றன என்பதைச் சுட்டிவிகடனில் வெளி வந்த குறிப்பிட்ட சில கதைகளின் ஊடாகக் காணலாம்.

நிகழ்வுகளின் எழிலான காட்சிகளும் கற்பனைமிகு பாத்திரப்படைப்பு களும் படக்கதைகளின் சிறப்பு. மேலும் படங்களை முன்வைத்து நாடக மொழி நடையில் வெளிப்படும் ஓரிரு சொற்றொடர்கள் கொண்ட எளிமையான உரையாடல்களும் படக்கதைகளில் நுட்பமாகப் பயன் படுத்தப்படுகின்றன. படங்களே நேரிடையாகக் கதையின் போக்கை உணர்த்தினா லும் இனிய உரையாடல்கள் வாசிக்கும் சிறார்களின் உள்ளத் தில் கதையின் நோக்கத்தை ஆழமாகப் பதியச் செய்கின்றன. கைதேர்ந்த கலைஞர்களின் வண்ணமிகு படைப்புகள் சுட்டி விகடனில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்று டாக்டர் சுதா சேஷய்யனால் எழுதப்பட்ட “உண்மை+ உழைப்பு=உயர்வு” என்னும் படக்கதை.  நேர்மையும் பகட்டில்லாத கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரலாம் என்ற வாழ்க்கை நெறியை சத்யகாமன் எனும் சிறுவன் கற்கும் குருகுலப் பாடத்திலிருந்து விவரிக்கிறது.

குருகுலப் படிப்பில் சேர்வதற்குப் பிறப்பு ஒரு தகுதியாகக் கருதப்பட்ட அந்நாளில் இக்கதை நாயகன் சத்யகாமனின் தூய உள்ளம் தகுதியாக்கப்படுகிறது. மாபெரும் ஆசிரியரான கௌதம ரிஷியின் ஆசிரமத்தில் சேருகிறான் சத்யகாமன். கௌதம ரிஷி இறைவனைப் பற்றிய பாடத்தைக் கற்பிக்க சத்யகாமனிடம் எலும்பும் தோலுமான 400 மாடுகளை மேய்த்து வரும்படி கூறுகிறார். குருவின் சொற்படி சத்யகாமன் காடுமலைகளில் மாடுகளை மேய்த்துப் பராமரித்து வருகிறான். மாடுகள் செழிப்படைந்து சிறுதும் பெரிதுமாக 1000 மாடுகளா கின்றன.

ulavali_370அப்போது ஒருநாள் சத்யகாமனின் அன்பைப் போற்றிய ஒரு காளைமாடு; இறைவன் என்பவன் ஒளியானவன் என்று சொல்கிறது. மற்றொரு நாள் இருட்டில் பயணிக்கும் சத்யகாமன் இறைவன் ஒளிதருபவன் என்ற பாடத்தை தீப்பந்தத்திடமிருந்து கற்கிறான்.  ஒரு குளக்கரையில் இறைவன் எல்லையில்லாதவன் என்பதை ஓர் அன்னப்பறவையிட மிருந்து கற்றுக்கொள்கிறான். அதேபோல ஓர் மரத்திடமிருந்து இறைவன் முழுமையானவன் என்று தெரிந்து கொள்கிறான். இறுதியாகக் குருவைச் சந்தித்து தான் கற்ற பாடத்தை மலர்ந்த முகத்தோடு விளக்குகிறான். உண்மை பேசுபவனும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் கடமை ஆற்றுபவனும் இயற்கை யிடமிருந்து தானாகவே பாடம் கற்கின்றான் என்பதை உணர்த்தவே இந்த சோதனைவழிப் பாடத்தை நடத்தினேன் என்று குரு கூறியபோது மெய்சிலிர்த்து நிற்கிறான் சத்யகாமன்.

தன் அனுபவக் கல்வி பற்றிய இக்கதை சுட்டிவிகடனில் வந்த மிகச்சிறந்த படக்கதைகளில் ஒன்று.  புகழ்பெற்ற ஓவியர் மணியம் செல்வம் இக்கதைக்காக வரைந்த நீர்வண்ணப் படங்கள் சிறார்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

·     குரு சத்யகாமன் சந்திப்பு
·     சத்யகாமன் தன்னைப்பற்றித் தாயிடம் அறிதல்
·     நேர்மையான சத்யகாமனை குரு மாணவனாக ஏற்றுக்கொள்ளுதல்
·     குரு சத்யகாமனிடம் மெலிந்த மாடுகளை மேய்க்கச் சொல்லும் போதனைப் பாடம்
·     புல்வெளி மிகுந்த காடுகளில் சத்யகாமன் மாடுகளை மேய்த்தல்
·     அன்பான சத்யகாமனிடம் காளையன்று பாடம் சொல்லுதல்
·     சத்யகாமனோடு பேசும் தீப்பந்தம்
·     சத்யகாமனோடு பேசும் அன்னப்பறவை
·     சத்யகாமனுக்குப் பாடம் சொல்லும் மரம்
·     சோதனை முடிவில் சத்யகாமன் குருவைச் சந்தித்தல்
·     சத்யகாமன் அவனாகவே கற்ற பாடத்தைக் குரு விளக்கித் தெளிவாக்குதல்.

ஆகிய தேர்வு செய்யப்பட்ட படக்காட்சிகள் கதையின் செய்தியை நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன. சமூகப் பொருளாதார மதிப்பீடுகளுக்கிடையே இந்திய கல்விமுறை எவ்வாறெல்லாம் பயணிக்கிறது என்பதற்கு இக்கதை ஓர் உதாரணமாக அமைகிறது.

2003ஆம் ஆண்டு வெளிவந்த எலிஃப்ரெண்ட்ஸ் என்ற பாடக்கதைத் தொடர் ஏராளமான சிறார்களால் வாசிக்கப் பட்டது. படக்கதைகளின் நாயகன் வால்ட் டிஸ்னியின் பிரமாண்ட படைப்புகளின் தாக்கத்தில் இடம்பெறும் விலங்கினங்களின் வடிவில் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டி ருந்தன.

ஓவியர் முத்து இத்தொடரை எழுதி, படங்களையும் வரைந் திருக்கிறார். விலங்கினங்கள் மீது சிறார்கள் கொண்டிருக்கும் அலாதியான அன்பின் பின்னணியில் எந்த ஒரு செய்தியையும் கொண்டுசெல்லலாம் என்ற நோக்கில் இத்தொடர் படைக்கப் பட்டிருக்கிறது.

சுமோ எனும் யானையும் ஸாம் என்ற சுண்டெலியும் காட்டினூடே பயணம் செய்யும்போது நிகழும் சம்பவங்கள் இப்படக்கதைத் தொடரில் இடம்பெறுகின்றன. இந்தியக் கதைகளில் வரும் சிங்கமும் நரியும் போல இக்கதையில் யானை யும் சுண்டெலியும் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நரியின் தந்திரங்களோ, சிங்கத்தின் இயலாமையோ அல்லா மல் அன்புகாட்டி நன்னெறி புகட்டுபவைகளாக யானையும் சுண்டெலியும் செயல்படுகின்றன.

உதாரணமாகக் காட்டு அரசனான சிங்கம் தறிகெட்டுப் போய் சிறு விலங்குகளுக்ககுத் தொல்லை தருகிறது. கணக்கில் லாமல் மான்களைக் கொன்றும் முயல்களைக்கூட உணவாக உண்டும் மகிழ்கிறது. அதைக்கண்டு சுமோவும் ஸாமும் ஆத்திர மடைகிறார்கள். ஸாம் கரடி வைத்தியரை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட மான்களுக்கும் முயல்களுக்கும் வைத்தியம் பார்க்கச் செய்கிறது.

சுமோ யானை சிங்கத்தின் வாலை துதிக்கையால் பிடித்து அந்தரத்தில் தொங்கவிடுகிறது.  சிங்கம் வலி பொறுக்காமல் அழுகிறது.  “சுமோ நீயே காட்டுக்கு அரசனாக இரு, என்னை விட்டுவிடு” என்று கெஞ்சுகிறது.  “உன்னை விடமாட்டேன் நீ இருபது நாட்கள் இப்படியே தொங்க வேண்டும்” என்கிறது சுமோ. அப்போது அங்கே வரும் ஸாம் “சுமோ 20 நாட்கள் எப்படி சிங்கத்தைத் தூக்கிக்கொண்டு நிற்பாய்” என்று கேட்க சுமோ யோசிக்கிறது. “சரிசரி நீ காட்டுக்கு அரசனாக இரு ஆனால் நல்ல அரசனாக நடந்துகொள்” என்று அறிவுறுத்தி சிங்கத்தை விடுவிக்கிறது சுமோ.

உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்ற கதாநாயகச் சிங்கம் (லயன் கிங்) யானையின் துதிக்கையில் தலைகீழாகத் தொங்குவது, முயல்களின் நீண்ட காதுகள், வைத்தியரான கரடியின் வயிறு, யானைமேல் சவாரி செய்யும் சுண்டெலி போன்ற நகைச்சுவைத் ததும்பும் படக்காட்சிகள் குறும்புக்கார சிறார்களின் கற்பனைகளுக்கு விருந்து படைத்ததாகச் சுட்டி விகடன் ஆசிரியர் குழு தெரிவிக்கிறது.

டிஸ்கவரி, அனிமல் பிளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் தரும் விலங்குலக அதிசயங்களைவிடக் கற்பனை யாகப் படைக்கப்படும் படக்கதை உலகம் இளஞ்சிறார்களின் கற்பனைக்கும் படைப்பாற்றலுக்கும் வழியமைக்கின்றன என்பதை இப்படக்கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது.

மனிதகுல வரலாற்றில் சாதனை படைத்த மேதைகளின் வரலாறுகள், கண்டுபிடிப்புகளைப் பற்றிய படக்கதைகள் சுட்டிவிகடனில் தொடர்ந்து இடம்பெறுகின்றன.  அந்த வரிசையில் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பற்றிய தொடரைச் சுட்டிவிகடன் வெளியிட்டது. கனவு காணச் சொல்லும் கலாம் சிறுவர்களின் கனவு நாயக னாகத் திகழ்பவர். அதனடிப்படையில் அவரைப் பற்றிய தொடர் ‘கனவு நாயகன்’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

paramasivam_370அப்துல் கலாம் எழுதிய அக்கினிச் சிறகுகள் (Wings of Fire) நூலிலிருந்து செய்திகள் பெறப்பட்டு ஓவியர் அரஸால் காட்சிப்படுத்தப்பட்டது. இத்தொடரில் கலாம் தானே ஒரு கதைசொல்லியாகத் தன் குழந்தைப் பருவ நினைவுச் சுவடு களுக்குச் சிறார்களை அழைத்துச் செல்கிறார்.

கம்பீரமாய்த் தோன்றும் குடியரசுத் தலைவர் மாளிகை யிலிருந்தபடி குடியரசுத் தலைராவதற்கான தகுதிகளை எப்படியெல்லாம் பெற்றார் என்பதைத் தான் பிறந்த தீவான இராமேஸ்வர நினைவுகளிலிருந்து விவரிக்கிறார். ஆழ்மனப் பதிவுகளை உணர்ச்சிகரமாய் விவரிக்கும் ஷேக்ஸ்பியரின் உத்திமுறையில் இக்கதைத்தொடர் பயணப்படுகிறது.

ராமேஸ்வரம் கோவில், மசூதி, கடல்நீர் மேல் நீண்டு நெளி யும் தண்டவாளத்தில் உருண்டுவரும் இரயில், கலாமின் தந்தை ஜைனுல்லாபுதீன், கோவில் தலைமை குருக்கள் லட்சுமண சாஸ்திரியின் வீடு, கலாமோடு இதமாக உறவாடும் ஜலாலுதீன், இந்தியச் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், இரண்டாம் உலகப்போர் பற்றிய பத்திரிகைச் செய்திகள், அலைகள் கதைபேசும் படகுத்துறை, பறக்கும் கோட்டை என வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவின் அணுகுண்டு விமானம் டீ-24 போன்ற காட்சிகளின் கோர்வையில் மிக பிரமாண்டமான திரைப்படம் போல மகத்தான இந்தியக் குடியரசுத் தலைவ ரின் வரலாற்றைப் பதிவு செய்கிறது. கலாமைப்போன்ற ஒப்பற்ற மனிதனாக வேண்டும் என்ற தாகத்தையும் இளஞ் சிறார் களிடையே இக்கதை ஏற்படுத்துகிறது. 

வீரதீரச் செயல் புரிபவர்களைத் தங்கள் நாயகனாகக் கொள்வதும் அவர்களைப் போலத் தங்களைப் பாவித்துக் கொள்வதும் சிறார்களின் இயல்புகளில் ஒன்று. இந்தியாவில் பிரபலமாகத் திகழும் விளையாட்டான கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களும் இளஞ்சிறார்களின் நாயகர் களாகத் திகழ்கின்றனர். அவர்களில் ஒருவரான மகேந்திரசிங் டோனியை மையப்படுத்தி டோனி D.S.P. என்ற படக்கதைத் தொடரை 2008 ஆம் ஆண்டு சுட்டிவிகடன் வெளியிட்டது.

விளையாட்டு மைதானத்தில் வெற்றியைத் துரத்தும் வேளையில் தீயவர்களைத் துரத்திப் பிடிக்கும் துப்பறியும் காவல் அதிகாரியாகவும் செயல்படுகிறார். கிரிக்கெட் விளை யாட்டைக் களமாகக்கொண்டு நடக்கும் சூதாட்டம், போதைப் பொருள் கடத்தல் போன்ற சதிச்செயல்களை முறியடிக்கும் டோனியின் சாகசப் பயணமாகத் தொடர்கிறது இத்தொடர்.

கே.கணேசனால் எழுதப்பட்ட இந்தத் தொடருக்கு கௌபாய் திரைப்படக் காட்சிகளைப் போல் ஓவியர் அரஸ் படங்கள் வரைந்திருக்கிறார். தங்கள் மனங்கவர்ந்த விளையாட்டு வீரன் துப்பறியும் வீரனாகவும் வெற்றிபெறும் போது சிறார்கள் மகிழ்வது உண்மைதான் என்றாலும் மனங்கவர்ந்தவர்களால் எல்லாம் செய்ய முடியும் என்ற தவறான தாக்கத்தையும் இது போன்ற படைப்புகள் ஏற்படுத்திவிடுகின்றன.

சிறார்கள் உண்மையை நேசிப்பவர்கள். தங்கள் மனங் கவர்ந்தவர்கள் மீது உருவாக்கப்படும் போலியான சிறு சலனம் கூடச் சிறார்களிடம் தவறாகப் பதிவாகிவிடும். எனவே வீரதீர நாயகர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதுபோன்ற படக்கதைகளுக்குக் கற்பனையான நாயகர்களைத் தேர்வு செய்வது நல்லது என்று தோன்றுகிறது.

சுட்டிவிகடன் அறிவியல் கண்டுபிடிப்புகளின்மீது ஆர் வத்தைத் தூண்டும் மிகச்சிறந்த படக்கதைகளையும் வெளி யிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 2011 ஐடியா அகிலன் சிறந்த அறிவியல் படக்கதையாக  வெளிவந்துகொண் டிருக்கிறது.

அகிலன் என்னும் சிறுவன் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவன். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கண்டு பிடிப்பை உருவாக்க முயல்கிறான். அதற்காக வீட்டிலும் வெளி யிலும் அவன் மேற்கொள்ளும் சோதனை முயற்சிகள் ஒவ்வொரு இதழாகத் தொடர்கின்றன.

உதாரணமாக, ஓய்வு நாளன்றில் தங்கையின் உதவி யோடு அகிலன் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதாகப் படக் கதை செல்கிறது. இதில் வீட்டில் இருக்கும் இரு சிறிய மோட் டார்களில் பிளாஸ்டிக் விசிறியைப் பொருத்தி வீட்டு மாடியில் வைக்கிறான். அங்கு வீசும் காற்றில் சேகரமாகும் மின்சாரத்தை தந்தையின் தொலைபேசி(செல்)க்குப் பயன்படுத்துகிறான். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கண்டுபிடிப்பு என விறுவிறுப்பாகச் செல்கிறது அகிலனின் கண்டுபிடிப்புகள்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் சிறுவயது முதலே ஒவ்வொரு துறை வல்லுநர்கள் உருவாகின் றனர். ஆலிஸின் அதிசய உலகம் (ஆலிஸ் அன்ட் வொண்டர் லாண்ட்) என்ற சிறுவர் படக்கதை தந்த தூண்டுதலே ஐன்ஸ்டின் சார்புக் கோட்பாட்டை (relativity theory) உருவாக்க  காரணமாயிருந்த தாம். உலகுக்கு வெளிச்சம் தந்த தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவயதிலேயே பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். ஐன்ஸ்டின், எடிசன் போன்ற அறிஞர் களை உருவாக்க ‘ஐடியா அகிலன்’ படக்கதையும் முயல்கிறது. ஜோ. கௌதமனால் எழுதப்பட்ட இத்தொடருக்கு ஓவியர் ராம்கி எளிமையான அழகிய படக்காட்சிகளைப் படைத்திருக்கிறார்.

சுட்டிவிகடனில் வெளிவந்த நம்பிக்கை, நொர்ணி நரிஜி, வேதாளம் புதிது, குதிரை முட்டை உடைஞ்சி போச்சே, ஜீபா, சயின்டிஸ்ட் சங்கர், ஜிங்கா புங்கா போன்ற படக்கதைகளும் இளஞ்சிறார்களிடம் புதுவித அனுபவங்களைத் தந்தன.

சிறார் கலை இலக்கியப் படைப்புகள் வெறும் கலைப் படைப்புகளாக மட்டுமின்றி கலையியல் கல்வி வடிவாகவும் திகழ்கின்றன. பல வளர்ந்த நாடுகளில் கற்பித்தல் முறைக்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு உத்திகளில் படக்கதை வடிவம் சிறப்பிடம் பெறுகிறது. அதனாலேயே அந்நாட்டு அறிஞர் களின் பார்வையும் படைப்புகளும் உலக அளவில் போற்றப் படுகின்றன.

மிக நீண்ட கலைமரபுகொண்ட இந்தியாவில் இதுபோன்ற துறைகள் இன்றுவரை வெறும் கேளிக்கையாகவே கருதப்படு கின்றன. அடிப்படைக் கல்வியைச் சிறப்பாக்கினால் மட்டுமே ஒரு நாடு ஒவ்வொரு துறையிலும் வளம்பெற முடியும். என்பது வல்லுநர்களின் கூற்று. ஆனால் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்விவரை ஒரு தொடர் படக்கதை போல் செல்ல வேண்டிய கல்வி, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துணுக்குகளாய் மாறிவிட்டது.  பல்கலைக்கழகங்கள் சிறார் இலக்கியத்தின் மீதான ஆய்வுகள் மீது ஆர்வங்காட்டாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை. சிறார் உலகில் பயணம் செய்வது அதிசயங்களைச் சேகரிப்பது என்பது ஒவ்வொரு அறிஞனின் கடமை என்பதை உணரவேண்டும். அதற்கான முயற்சிகளில் ஆய்வாளர்களும் படைப்பாளிகளும் ஈடுபட வேண்டும். இளஞ்சிறார்களுடன் பணியாற்றுவதைவிட மகிழ்ச்சியானது என்று உலகில் வேறு என்ன இருக்கிறது?

Pin It