அனுபவங்கள் 4

ஒரு பழைய புத்தகக் கடையினுள் நுழைகிறேன். எதிரே அடுக்கியிருக்கும் புத்தகக் கட்டுகளின் மீது என் பார்வை செல்கிறது. அடுக்கடுக்காகத் தமிழ்க் காமிக்ஸ் புத்தகங்கள். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், திகில் காமிக்ஸ் மற்றும் பல்வேறு தமிழ் காமிக்ஸ்கள் . . . அனைத்தும் மிகத் துல்லியமா கப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. முத்து காமிக்ஸின் வண்ண இதழ்களான கொரில்லா சாம்ராஜ்யம், கொள்ளைக்காரப் பிசாசு போன்றவை நான்கைந்து பிரதிகளாக, அதுவும் புத்தம் புதிதாக இருந்தன. மகிழ்ச்சி+படபடப்புடன் சட்டைப்பையில் பணத்தைத் தேடோ தேடென்று தேடுகிறேன். முழுதாகப் பத்து ரூபாய்கூடத் தேறவில்லை. இது நெடுநாளாக என்னைத் தொடரும் கொடுமையான கனவு.

கனவிலும் காமிக்ஸ் புத்தகங்களைத் தேடுமளவுக்கு அப்படி என்ன புத்தக ஆர்வம்?

சிறுவயதில் தினமலர் நாளிதழின் இணைப்பான சிறுவர் மலர் மூலமே காமிக்ஸ்  என்ற சித்திரக் கதைகள் அறிமுகமா யின. “பலமுக மன்னன் ஜோ”, “பிராம்போ”, “எக்ஸ்ரே-கண்”, “பேய்ப் பள்ளி”, “சோனிப் பையன்”, “உயிரைத் தேடி” என்று பல சித்திரக்கதைகள். ஒரு யானையை மையமாகக் கொண்ட “நம்ம ஊரு கஜா” என்ற சித்திரத் தொடர் போன்றவை இன்னும் நினைவில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளன.

முதன்முதலாக முழுநீள காமிக்ஸ் படித்தது, ராணி காமிக்ஸின் மாயாவி (வேதாள மாயாத்மா) சாகசக்கதைதான். அவ்வயதில் வேதாளரின் கதைகள், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தன. வேதாளர் கதைகளின் தளங்களான ஈடன்தீவு, தங்கக் கடற்கரை, மண்டை ஓட்டு மாளிகை, பொக்கிஷங்கள் போன்றவை வேதாளரின் கதைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத் தின. 25 பைசாவுக்கு ராணிகாமிக்ஸ் வாடகைக்குக் கிடைத்த பொற்காலம் அது.

ராணிகாமிக்ஸ் வாங்கச் சென்ற கடைகளில் லயன், முத்து காமிக்ஸ்கள் கண்டதும் அவற்றையும் வாங்கிப் படிக்க வாய்ப்பு கிடைத்தபோதுதான் லயன், முத்து காமிக்ஸ்களின் தரம் புரிந்தது. வெறும் சண்டைக் காட்சிகளுடன் முன் பின் இரு பக்கங்களை இணைத்து வெளியான காமிக்ஸ்கள் மத்தியில் சிறந்த மொழிபெயர்ப்பு, கதையைக் கெடுக்காத தொகுப்பாக வந்த லயன், முத்து காமிக்ஸ்கள் ஆர்வத்தைத் தூண்டியதில் வியப்பேதும் இல்லை.

பள்ளி செல்லும் நாட்களில் பாடப்புத்தகங்களுக்கு இடையே காமிக்ஸ் புத்தகங்களும் இடம் பெறலாயின. அன்றைய  பள்ளி நண்பர்களில் பலர் காமிக்ஸ் விசிறிகள்தாம்.  மேலும் அன்றைய நாட்களில் எங்களைப் போன்ற சிற்றூர்களில் இருந்தவர்களுக்கு வேறு உபயோகமான பொழுதுபோக்கும் இல்லை. அப்போது லயன் காமிக்ஸ் கையடக்கப் பதிப்பாக வெளிவந்துகொண்டிருந்தது. அந்த வடிவமும் பிடித்துப் போனது. படித்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்து, படிக்காத காமிக்ஸ் புத்தகங்களைப் பரிமாற்றத் தொடங் கினோம்.

johni_370சில பணக்கார நண்பர்கள் வீட்டிற்குச் செல்கையில் அவர்களின் காமிக்ஸ் சேகரிப்பைக் கண்டதும் நாமும் இதேபோல் காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. ஆவல் போட்டியானது. காமிக்ஸ் பரிமாற்றம் அதிகரித்தது.

விடுமுறை தினங்களில் ஊரில் இருக்கின்ற பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்லத்தொடங்கினோம். அப்போதெல்லாம் ஓரளவு நிறையவே காமிக்ஸ்கள் கிடைத்தன.  வாங்குவதற்குப் பணம்தான் இருக்காது. அந்தமாதிரி சமயங்களில் படிக்காத புத்தகங்களை மட்டுமே வாங்குவோம். மேலும் அவ்வயதில் கதாநாயகர்களை வைத்தே காமிக்ஸை வாங்குவோம். 

பதின் வயதுகளில் நண்பர்களில் பலர் காமிக்ஸ் புத்தகங் களைவிட்டு விலகினர். நான் உட்பட ஒரு சிலரே இன்றுவரை காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தும் சேகரித்தும் வருகின்றோம். அவர்களைப் போல் எங்களால் ஏன் காமிக்ஸ் புத்தகங்களை விட்டு விலக முடியவில்லை? என்ற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை. நண்பர் ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் “ஒரு வேளை காமிக்ஸ் புத்தக ஆர்வம் நம் மரபணுக்களிலேயே கலந்திருக்கலாம்” என்பது தான். உண்மை தான். மிகக் குறைந்த, ஆனால் மிகத் தீவிரமான வாசகர்களைக் கொண்ட பெருமை நம் தமிழ்க் காமிக்ஸ் புத்தகங்களுக்கு மட்டுமே உரியது. இந்த ஆர்வம்தான் ரூபாய் இருநூறுக்கு காமிக்ஸ் (எப்போது வெளிவரும் என்று உறுதி யாகத் தெரியாத போதும்) முன்பதிவு செய்யத் தூண்டுகிறது.

மேலும், காமிக்ஸ் புத்தகங்களின் மீதுள்ள ஆர்வம் உளவியல் சம்பந்தப்பட்டது என்றே தோன்றுகிறது. எல்லா காமிக்ஸ் ஆர்வலர்களாலும் தாங்கள் முதன்முதலாய்ப் படித்த காமிக்ஸ், அதன் கதாநாயகன் படித்த சூழ்நிலை போன்றவற்றை நினைவு கூற இயலும். வயதுகளைக் கடந்தாலும் நம் சிறுவயது நினைவு களை அசைபோட உதவுவதாலேயேகூட காமிக்ஸ் மீது தீராத பற்று ஏற்பட்டிருக்கலாம். இதனால்தான் அன்று ஒரு ரூபாய்க்கு வெளியான புத்தகங்களை இன்று பலமடங்கு விலைகொடுத்து வாங்கத் தூண்டுகிறது.

ஒருசிலருக்கு எப்படி தபால்தலைகள், பழைய நாணயங்கள் சேகரிக்கின்ற ஆர்வம் ஏற்படுகிறதோ அதைப் போலவேதான் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்து அதன் கதாநாயகர்களுடன் வாழ்ந்துவரும் காமிக்ஸ் விசிறிகளுக்கும் அவற்றைச் சேகரிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது. என்ன ஒன்று காமிக்ஸ் விசிறிகளின் எண்ணிக்கை குறைவு.

வேதாளர் இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், மாடஸ்டி, லக்கிலூக், கேப்டன் டைகர், மாண்ட்ரேக் போன்ற அனைத்து கதாநாயகர்களையும் வெறும் சித்திரங்களாக மட்டும் நினைக் காமல் உயிருடன் உலவும் நண்பர்களாக நினைக்கின்றோம். தீவிர காமிக்ஸ்  ப்ரியர்களால் டெக்ஸ்வில்லர், வேதாளர், கேப்டன் ப்ரின்ஸ், மாடஸ்டி பிளைஸி, கேப்டன் டைகர், லக்கிலூக், ரிப் கிர்பி போன்ற கதைகளைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான குரலோசைகள் மனதில் எழுவதைக் கூட உணரமுடியும்.

தமிழ் காமிக்ஸ்கள் என்றாலே அது லயன் முத்து காமிக்ஸ்கள் தான் என்றநிலை வந்து பலகால மாகிவிட்டது. ஆனால் ஆண்டிற்கு ஒன்றிரண்டு இதழ்கள் மட்டுமே வருவதால் மீண்டும் ராணி, மேகலா, மேத்தா, இந்திரஜால் போன்ற இதர காமிக்ஸ்களைத் தேடியலைகிறோம். இன்று ராணிகாமிக் ஸின் பழைய இதழ்களைத் தேடியலைகின்ற காமிக்ஸ் ஆர்வலர்கள், ராணி காமிக்ஸ் வெளியானபோது தொடர்ந்து வாங்கினோமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

சிறுவயதில் சித்திரங்கள்மூலம் கதைசொல்லிக் கற்பனை வளத்தை வளர்த்ததோடு, கால வரம்பு இல்லாமல் சேர்த்து வைத்துப் படிக்க வழிவகுத்த காமிக்ஸ்களின் இன்றைய நிலை பரிதாபமே. இன்று நிலவும் காமிக்ஸ் வறட்சியை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம்.  பிரபலமான பத்து புத்தக நிறுவ னங்களில் இருந்து மாதம் தவறாமல் பத்துப் புத்தகங்கள் வந்தால் எப்படியிருக்கும்?  ஒன்றுமாகாது. நமக்குப் பிடித்த ஹீரோ, நல்ல மொழிபெயர்ப்பு, தரமான வடிவமைப்புடன்  வரும் புத்தகங்களை மட்டுமே வாங்குவோம்.

பழைய காமிக்ஸ் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பழக்கம் காமிக்ஸ் சேகரிக்கின்ற அனைவருக் குமே உண்டு. ஆனால் கடைசி எட்டு ஆண்டுகளில் வெளியான காமிக்ஸ் புத்தகங்களில் எதையும் மறுமுறை படித்ததாக எனக்கு நினைவில்லை. வெளியீட்டு எண்ணைச் சொன்னாலே அந்தக் காமிக்ஸின் தலைப்பு, ஹீரோ போன்றவற்றைச் சொன்னகாலம் மலையேறிவிட்டது. சமீப காமிக்ஸ்களின் தலைப்பு மட்டும் அல்ல கதையே மனதில் தங்குவதில்லை. இது நமது ரசனை யின் மாற்றமா? அல்லது காமிக்ஸின் தரமே குறைந்துவிட்டதா என்றும் புரியவில்லை.

இருப்பினும் காமிக்ஸ் எனும் தங்க உலகினுள் வசிக்க ஆரம் பித்துவிட்டால் வெளியேற மனமிருப்பதில்லை. ஒருவரின் பொழுதுபோக்கே தொழிலாக அமைந்தால் அவரைப்போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை. அவ்வகையில் லயன்காமிக்ஸின் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களும் அதிர்ஷ் டசாலியே, ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் மூலம் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டுவரும் அவரும் ஒரு காமிக்ஸ் ஆர்வலர்தானே. அப்படியிருந்தும் காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்து வெளிவராமல் இருப்பதன் மர்மம்தான் புலனாகவில்லை.  ஒருவேளை விற்பனை நிலை சரியில்லாமல் இருக்கலாம். தொடர்ந்து புத்தகங்கள் வெளி யாகும் உத்தரவாதம் இல்லாமல் சந்தா பற்றியோ, விற்பனை நிலவரம் பற்றியோ பேசுவது சரியாகப் படவில்லை.

வெறும் காகிதங்கள் என்றில்லாமல், கேப்டன்  டைகருடன் பாலைவனத்திலும், கேப்டன் ப்ரின்ஸ் உடன் கப்பலிலும், டெக்ஸ்வில்லருடன் குதிரையிலும், வேதாளருடன் காடுகளிலும் பயணிக்க வைத்த காமிக்ஸ்கள், சேகரிப்பவர்களுக்கு ஒரு பொக்கிஷமே. வருகின்ற காலங்களிலாவது மாதமிரு காமிக்ஸ் கள் வெளிவந்து இந்தத் தமிழ்க்காமிக்ஸ் புத்தக வறட்சியைப் போக்கும் என்று நம்புவோமாக . . .!

ஒரு மாலை வேளையில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடையினுள் நுழைந்தேன். “காமிக்ஸ் புக் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டேன். கடைக்காரர்,  “காமெர்ஸ் புக்கா? எத்தனாம் வகுப்பு சார்” என்றார். நெடு நாளாக நடந்துவரும் நிகழ்ச்சி இது.

Pin It