அனுபவங்கள் 6

வருடம் 1984 என்று நினைவு. தமிழில் அ, ஆ, என்று ஆரம் பித்த பள்ளிப் பாடங்களில் இருந்து, எழுத்துகூட்டிப் படிக்கும் முறையை நான் கற்றுகொள்ள முயன்று கொண்டி ருந்த காலகட்டம். தொலைகாட்சி என்பது அப்போது ஒரு அசாதாரணமான பொருள் என்பதால், எங்கள் வீட்டில் இருந்த உருப்படிகள் அனைவரும், பொழுதுபோக்குக்கு மாத, வார இதழ்களில் மூழ்கிக் கிடப்பார்கள்.

பள்ளிக்கும், விளையாட்டுக்கும், இடையே கிடைக்கும் மீத நேரங்களைச் செலவிட ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந் தேன். சினிமா செய்திகளை மட்டும் நம்பி காலம் ஓட்டிக் கொண்டிருக்கும் தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற அறிவு(?!) பெட்டகங்களில் டாலடித்து கொண்டிருக்கும் அக்கால நாயக, நாயகிகளின் புகைபடங்களை ரசிக்கும் வயதும் வரவில்லை என்பதால், அவைகள் பக்கம் என் கவனம் திரும்பவில்லை.

மிகப்பெரிய கூட்டுக்குடும்பமாகத் திகழ்ந்த வீட்டில், என் வயதுக்கு மிக அருகில் இருந்தவர் என்ற அடிப்படையில், என் சின்ன அண்ணனிடம் கொஞ்சம் நெருக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக, அவரைத் தனித்து கவனிப்பதை என்னை அறியாமலே நான் செய்துகொண்டிருந்தேன்.

அப்படி ஒரு வேளையில்தான் அவர் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கித் தனியே அமர்ந்து புத்தகம் படிப்பதைக் கவனிக்கத்தொடங்கினேன். அவர் அந்த ரகசிய புத்தகங் களைப் படித்து முடித்ததும் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டுப் பூட்டியும் வைத்துக்கொள்வார். வெகு மாதங்களாக நடந்து கொண்டிருந்த விஷயம் என்பதால் அது என்னவென்று அறிந்துகொள்ள எண்ணம் வலுத்துக் கொண்டே போனது.

அந்த காலகட்டத்தில், எங்கள் தந்தை சென்னையில் பைக்ராப்ட்ஸ் என்ற பாரதி சாலையில் 2, 3 துணி கடைகள் நடத்தி வந்தார். எனவே, பள்ளி முடிந்தவுடன் அவரை நேரே சென்று சந்தித்தால், சாப்பிடுவதற்கு பல பலகாரங்களுடன், கை செலவிற்கு நாலணாவில் இருந்து 1 ரூபாய் வரை கிடைப் பது உறுதி.

இப்படி ஒரு சமயத்தில், ஒரு முறை என் தந்தை இல்லாத நேரத்தில் கடைவாசல் சென்றடைந்தேன். கல்லாவில் உட்கார்ந்து இருந்தது என் சின்ன அண்ணன் தான். என்னைப் பார்த்தவுடன், மேஜை மீது வைத்திருந்த சில புத்தகங்களை உடனே மறைத்து வைத்துக்கொண்டார். இம்முறை என் ஆவலை அடக்க முடியவில்லை. கேட்டே விட்டேன், அவை என்னவென்று.

வீட்டில் மற்றவர்களிடம் அவ்விஷயத்தை வெளியிட்டு விடக் கூடாது என்று உறுதி வாங்கிக்கொண்டு, அப்புத்தகங் களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாத போதும், என் கவனத்தை உடனே ஈர்த்தது, பளபள வென்று டாலடித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகங்க ளின் அட்டைப் படங்கள்தான்.

மற்ற வார, மாத இதழ்களில் நிழல் புகைப்படங்களை மட்டுமே கண்டு பழகிப்போன எனக்கு, முழுவதும் ஓவியங் களாகத் தீட்டபட்டிருந்த அந்த வித்தியாச கோணப் படங்கள் மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும் தெரிந்ததில் ஆச்சர்யம் இல்லை.  அத்துடன் நிற்காமல், ஆர்வத்துடன் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்த எனக்கு, பெரும்பாலான இதழ் களில் இருப்பது போல, முழுவதும் வழக்கமான எழுத்துகளுக் கும், உப்புக்குச் சப்பாணி போல ஆங்காங்கே சில புகைபடங் களுக்கும் பதிலாக, எங்கு பார்த்தாலும் ஓவியக் கட்டங்கள் இன்னும் பிரமிப்பாக இருந்தது. இவை தான் ராணி காமிக்ஸ், என்று என் அண்ணன் ஒருவித பெருமிதத்துடன் கூறினார். காமிக்ஸ் என்னும் அந்த அழகிய உலகத்திற்கு எனக்கு அறிமுகம் கிடைத்தது, அத்தருணம் முதல் தான்.

ராணியின் ஆட்சி

 முன்பெல்லாம், பள்ளி விட்டு வீடு திரும்பும்போது ஒருவித சோர்வுடன் நடையைக் கட்டும் நான்; இப்போது, எப்போது வீடு போய்ச்சேர்வோம் என்ற ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன். காரணம், என் அண்ணன்.  இனி, அவர் ரகசியப் பெட்டியை நானும் தேவைப்படும்போது திறந்து படித்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருந்தார். அதற்கு அவர் இட்ட இரண்டு கட்டளைகள், புத்தகங்களுக்கு எதுவும் நேரக்கூடாது. கூடவே, கண்டிப்பாக பெரியவர்கள் யார் முன்பேயும் இவற்றைப் படிக்கக்கூடாது என்பதுதான்.

மற்றவர்கள் படிப்பது போலதானே இவரும் காமிக்ஸ் என்று தனக்குப் பிடித்தவைகளைப் படிக்கிறார். இதில் பயப்பட என்ன இருக்கிறது, என்று கேள்விகள் எழுந்தாலும், அப்புத்தகங் களைப் பார்வையிட எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் நழுவ விடத் தயாராக இல்லை,.

pathala_370தினமும் வீடு வந்து சேர்ந்தவுடன், அடுப்பங்கரையில் இருந்து தேவையானவைகளை அள்ளிக்கொண்டு, உள்ளறையில் நான் தூங்கப்போகிறேன், என்று பெரியவர்களிடம் சொல்லிவிட்டு, நைச்சியமாக இப்புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். பக்கம் பக்கமாக அந்த காமிக்ஸ் புத்தகங்களின் படங்களை மேய்ந்து கொண்டே, நொறுக்கு தீனிகளைப் பதம் பார்ப்பது ஒரு தனி அனுபவமாக மாறிக்கொண்டிருந்தது. எழுத்துகளே புரியாதபோதும், படங்கள் எவ்விதம் ஒரு சிறுவனை கிரகிக்க வைக்கமுடியும் என்பதற்குச் சான்று.  காமிக்ஸ் என்பதன் தத்துவத்தை புரிந்து கொள்ளாமலே, அதை உணர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

பள்ளியில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துகளைக் கூட்டிப் படிக்கும் பழக்கம் கற்பிக்கப்பட ஆரம்பித்தது. பாடப் புத்தகங்க ளைக் கடமையே என்று படிக்க அங்கு முயன்றாலும், நான் ஆசைபட்டுப் படிக்க நினைத்தது, என் அண்ணன் வசம் இருந்த காமிக்ஸ் சேகரிப்பையே.

கொஞ்சம் கொஞ்சமாக முயன்று நான் தமிழ் படிக்கக் காரணமாக இருந்தது இந்த காமிக்ஸ் படையல்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆர்வத்துடன் செய்யும் காரியங் கள் பனைமரத்தில் அடிக்கும் ஆணி போல் ஆழமாக மனதில் பதிந்து போவது போல காமிக்ஸ§ம் என் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப்போனது.

வர்ண ஜாலங்கள்

 பார்வையில் வண்ணக் குறைபாடு உள்ளவர்களுக்கு, கனவு கள்கூடக் கருப்பு வெள்ளை உலகமாகத்தான் தெரியும் என்று படித்திருக்கிறேன். அட்டைப்படங்களில் மட்டும் வண்ணக் கலவையுடன் ஜோராகத் தெரியும் காமிக்ஸ் புத்தகங்களில், உள்ளெங்கிலும் கருப்பு வெள்ளை சித்திரங்க ளுடன் தெரிவது அப்போது நெருடலாக இல்லை. சித்திரங் களில், லயித்துப் போன அச்சிறு மனது, குறைகளை நைச்சியமாக பூசி மொழு கிக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில், காமிக்ஸின் இன்னொரு பரிமாணத்தை அறிமுகம் செய்து வைத்ததும், என் அண்ணன் தான். புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை கண்ணைக் கவரும் ஓவியங்கள் தாங்கிய காமிக்ஸ் புத்தகமாக, மினி லயன் மற்றும் ஜுனியர் லயன் காமிக்ஸ் இதழ்களை முதன்முதலில் நான் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத் திக் கொடுத்தார்.

என் அண்ணன் ஏன் இந்தப் புத்தகங்களையும் முன்பே அறிமுகம் செய்து வைக்கவில்லை என்று அப்போது கோபித்துக் கொண்டேன். பின்பே, அதன் காரணம் புரிய ஆரம்பித்தது. தரத்தில் பல வகையில் மேம்பட்ட இந்த கலர் காமிக்ஸ்கள், என் அண்ணனின் கைசெலவுக்குக் கிடைக்கும் சில்லறையில் வாங்க முடியாத விலைகளில் அப்போது விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன என்று.

அவர் மிகுதியாக ராணி காமிக்ஸ்களை வாங்கிய காரண மும் புலபட்டது. அதிக விலையின் காரணமாக எல்லா செய்திதாள் கடைகளிலும் லயன் மினி, லயன் புத்தகங்கள் விற்பனைக்கு வராது. ஆனால் தினத்தந்தி என்ற பெரிய நிறுவனத்தின் படைப்பாக வெளிவந்து கொண்டிருந்த ராணி காமிக்ஸ், எல்லா கடைகளிலும் சகஜமாக கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே, 5,10 ரூபாய்க்களை வாங்கிக்கொண்டு பத்திரிக்கை வாங்க அனுப்பி வைக்கபடும் எனது அண்ண ணுக்கு, அதிக கவனத்தை ஏற்படுத்தாமல் அவ்வப்போது, ராணி காமிக்ஸையும் நைச்சியமாக வீட்டுக்கு வாங்கி வந்து விடும் வாயப்பு இருந்தது.

எப்போதாவது, கைவசம் சேரும் மற்ற காசுகளை வைத்துத் தான் அவர் மினி லயன், ஜுனியர் லயன் போன்றவைகளைக் கையகப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாமல், இப்படி காமிக்ஸ் படையல்கள் என் இல்லம் தேடி வந்துகொண்டிருக்கும் வரை, சரிதான் என்று கிடைப்பதை வைத்து மனதைத் தேற்றிக்கொள்ள ஆரம்பித் தேன்.

பாகப் பிரிவினை

 காமிக்ஸ்கள் வாங்க சிற்சமயங்களில், என் அண்ணனின் சேகரிப்பு மட்டும் பற்றாமல் போய்விடும். அச்சமயங்களில் எங்கள் இருவரின் கைகாசையும் போட்டுப் புத்தகங்கள் வாங்கி இருக்கிறோம். போகப்போக, என் அண்ணணுக்குப் போட்டி யாக நானும் சில புத்தகங்களைக் கடைவீதி செல்லும்போது வாங்கத் தொடங்கினேன். இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி வந்த புத்தகத்தை யார் முதலில் படிப்பது, என்று சண்டைகூடப் போடுவோம். அப்படி சமயங்களில், எங்கள் காமிக்ஸ் குட்டு வெளிவந்து வீட்டில் அடி உதைகள் கொசுறாகவும் கிடைத்துவிடும்.

பெரியவர்களில் முதன்முறையாக எங்கள் காமிக்ஸ் ஆர்வத்தைத் தெரிந்தும் கண்டும்காணாமல் விட்டது, எங்கள் அன்னை. சில சமயங்களில், புத்தகம் வாங்க அவரும் தெரிந்தே காசு கொடுத்து உதவ ஆரம்பித்தார். அவர் விடும் ஒரே வேண்டுகோள், அளவாக செலவழியுங்கள், அண்ணன் தம்பி சண்டை இல்லாமல் இருங்கள் என்பதே.

அண்ணன் தம்பிகளுக்கிடையே சண்டை வராமல் இருப்பது, சேவல்கள் இரண்டும் கூடிக் கொள்ளுவது போல நடவாத காரியம் ஆயிற்றே. போகப்போக, எங்கள் இருவருக்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கணிசமான புத்தகங்கள் சேர ஆரம்பித்ததும், இருவருக்கும் சண்டை வெடித்துவிட்டால், இனி என் புத்தகத்தை நீ தொடாதே, உன்னதுகளை நானும் தொடமாட்டேன் என்று எங்களுக்குள் முடிவெடுத்துக் கொள்வோம். ஆனால், அது சில நாட்களே தொடரும்.  காமிக்ஸ் மீது எங்களுக்கு இருந்த அளவு கடந்த காதல், இருவரின் சேகரிப்பையும் நுகராமல் இருக்கவிடவில்லை.

ஒரு கட்டத்தில், பள்ளிப் பருவ நாட்கள் முடிந்து கடை வேலைகளைக் கவனிக்க அவர் கிளம்பிவிட்டபோது, அவரின் மொத்த சேகரிப்பும் என்னிடம் வந்துசேர்ந்தது. எப்போதாவது என்னிடம் சில புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை மட்டும், அவர் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். அது இன்று வரை தொடர்கிறது. என்ன, முன்பு அவர் என்னிடம் விடுத்த கட்டுப்பாடுகளை, நான் இப்போது அவரிடம் விடுக்கிறேன். என்ன ஆனாலும் புத்தகம், பக்கம் கழறாமல் திரும்ப வர வேண்டும் என்று.

திக்கெட்டும் அலைந்து காமிக்ஸ் தேடு

 எங்களிடம் இருந்த காமிக்ஸ் சேகரிப்பை, நாங்கள் தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்த கட்டத்தில்தான் தெரிந்தது, எங்கள் உறவினர்கள் வீட்டில் இருக்கும் சில பொடுசுகளும் சேகரிப்பை வைத்துக்கொண்டிருந்தார்கள் என்று. அவர்கள் வீட்டிற்குச் சென்று அவைகளைப் பார்வை யிடும்போது, ஆற்றாமை கூடவே தொற்றிக்கொண்டுவிட்டது.

எங்களைவிட அவர்கள் சற்றே வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள் என்றபடியால், ராணி, லயன் என்ற இரு கட்டுகோப்புகளுடன் காலம் தள்ளத் தேவை இருக்கவில்லை. அவர்கள் சேகரிப்பின் மூலம் எனக்கு அறிமுகமானவை தான் ரத்னபாலா, பூந்தளிர், இந்திரஜால் காமிக்ஸ் போன்ற ஏனைய தயாரிப்புகள்.

விலையில் சற்றே உயர்வாகவும், அதே சமயம் காமிக்ஸ் தவிர சித்திரத் தொடர் கதைகள், சர்வதேச கதாநாயகர்கள், என்று அப்புத்தகங்களில் இருந்த கதைகளின் ஊடே நான் தொலைந்தே போனேன். அவர்களே மாலைப் பொழுதாகி விட்டது, என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரை அங்கே டேரா போட ஆரம்பித்துவிட்டேன்.

கைசெலவுக்கான காசு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகத் தொடங்கியதும், இன்னும் பல காமிக்ஸ்களைப் படித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமும் வலுக்கத் தொடங் கியது. அச்சமயங்களில் கடைகளில் ராணி காமிக்ஸ் தவிர மற்ற புத்தகங்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. எனவே, புத்தகக் கடைகளில் ஏதேச்சையாகப் பள்ளிப் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, பழைய காமிக்ஸ் பிரதிகளைக் கண்டதும், அவைகளைச் சரமாரியாக வாங்கிக் குவிக்க ஆரம்பித்தேன்.

வீட்டை விட்டு அதிகம் வெளியே சுற்றிப் பழக்கம் இல்லாத காரணத்தால், எங்கெல்லாம் பழைய புத்தகக் கடைகள் உள்ளன என்ற விவரங்கள் எனக்குச் சரிவரத் தெரியாது. புதிய காமிக்ஸ்களை மட்டுமே வாங்கிக்கொண்டிருந்த என் அண்ணன் மூலமும் அதற்கு வாய்ப்பின்றிப் போனது. எனவே என்னைப் போல காமிக்ஸ் மீது ஈடுபாடு கொண்ட, என் வயதிற்கு சற்றே பெரிய நட்பு வட்டாரத்தை உருவாக்கினேன்.

காமிக்ஸ் ரசிகர்கள் என்று பெருமிதம் கொண்ட, அவர்களைச் சேர்த்துக்கொண்டு சென்னையில் உள்ள பைக்ராப்ட்ஸ் ரோடு, பாரீஸ் கார்னர், மற்றும் ஆங்காங்கே உள்ள பழைய பேப்பர் கடைகள், என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம், சைக்கிளில் சென்று புத்தகங்களை வேட்டை யாடத் தொடங்கினோம்.

சில அரியவகை காமிக்ஸ் புத்தகங்களைப் பார்த்தவுடன் எனக்குத்தான் அது, என்று எங்களுக்குள் கடைக்காரர் முன்னிலையிலேயே சண்டை போடத் தொடங்கிவிடுவோம். ஒரு கட்டத்தில், பரீட்சை சமயங்களில், நண்பர்களிடம் பாடங் களை அனைத்தையும் படித்துவிட்டீர்களா? என்று கேட்டால், பொத்தாம் பொதுவாக நான் படிக்கவே இல்லை என்று புழுகுவதை அனைவரும் பார்த்திருப்போம். அது போல, பள்ளி முடிந்தவுடன் எனக்கு வேலை இருக்கிறது என்று கூறி வீட்டிற்குச் சென்றுவிடுவேன். பின்பு அவர்கள் அறியா நேரத்தில் நான் தனியாக காமிக்ஸ் வேட்டையாடத் தொடங்கி னேன்.

வீட்டில் புத்தகங்கள் பெருகத் தொடங்கின. கூடவே நண்பர்களின் பொறாமைப் பார்வையும், வீட்டுப் பெரியவர் களின் கோபப் பார்வையும் சேரத்தொடங்கின. ஒரு கட்டத் தில், மொத்த புத்தகங்களையும் பழைய பேப்பர் கடைக்குப் போடக்கூட துணிந்தார்கள் என் வீட்டில். அழுது அடம் பிடித்து, 80 சதவிகிதம் புத்தகங்களை என்னுடனே தக்க வைத்துக் கொண்டேன்.

ஆனாலும் அதில் சிலவற்றை எலிகளுக்கும், கரையான் களுக்கும் பலி கொடுத்தபோது, ஏற்பட்ட வலி மிகவும் பெரியது. மழைக்கால நாட்களில், ஓட்டு வீடு ஒழுகியதால் ஈரமான புத்தகங்களை, இஸ்திரி பெட்டி கொண்டும், வெயிலில் காய வைத்தும் பேணிக்காத்ததை நினைத்தால் இன்றும் ஆச்சர்ய மாக இருக்கிறது. அச்சமயத்தில் நான் அவைகள் மீது லயித்தி ருந்த விஷயம். எந்த ஒரு பழக்கமும், ஒரு சமயத்தில், நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் காலகட்டம் வரும் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

Pin It