உரையாடல் 6

உங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.

என்னோட பேர் கலீல், நான் புதுச்சேரியில் வசிக்கிறேன்.  நான் 8 ஆம் வகுப்புவரை தான் படித்திருக்கிறேன். தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறேன். 

சித்திரக்கதை குறித்த ஆர்வம் எப்படி வந்தது?

சிறுவயதிலிருந்தே எனக்கு இந்த ஆர்வம் இருந்தது.  இப்போ இருக்குற மாதிரி பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் கிடையாது. அப்போ கலர்டிவி கூட கெடையாது கருப்பு வெள்ளை தான். அப்போ காமிக்ஸ் தான் பொழுதுபோக்கு.  ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ்தான் ஆரம்பத்தில் படிச்சேன். அதுக்கப்பறம் லயன்காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சதும் மத்த காமிக்ஸ் மேல இருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமா கொறைஞ்சி லயன் காமிக்ஸ்தான் அதிகம் படிச்சேன்.  அதோட ஒரு பொழுதுபோக்காதான் அதையும் சேகரிச்சி வெச்சேன். 

danger_370அப்போ பழைய புத்தகக்கடையில் தான் புத்தகங்களை வாங்கிச் சேகரித்தேன். ஆனால் வீட்டின் சூழல் காரணமாக அவற்றை ஒருநாள் எடைக்குப் போட்டுவிட்டேன்.  அப்பறம் 1992 ல் சண்டே மார்க்கெட் பக்கம் போயிருந்தபோது ஒரு நண்பர் பழைய காமிக்ஸ் புத்தகங்களை அதே விலைக்கே விற்க ஆரம்பித்திருந்தார். அதைப்பார்த்தவுடன் பழைய நியாபகங் கள் வந்தது. சரி அவற்றை வாங்கலாம் என்றால் எல்லாவற்றை யும் வாங்க பணம் இல்லை. அதோடு அவரும் கொஞ்சம் கொஞ்சம் புத்தகங்களாகவே விற்றார். நான் முதலில் லயன் காமிக்ஸ் தான் சேகரிச்சேன். அதற்குப்பிறகுதான் தெரிந்தது.  லயன்காமிக்ஸ் மட்டுமில்லை திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று நீண்ட பட்டியலாகப் போய்க் கொண்டே இருக்கிறது. இன்னும் சேகரிக்க வேண்டும் என்ற என்னத்தோடு என்னுடைய பயணமும் தொடர்கிறது.

இப்போ பிரெஞ்சு, இத்தாலியன் முதலிய மொழிகளில் இருந்து வெளியான கதைகள்தான் ஆங்கிலம் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன். இப்போது தமிழில் வெளியான மொழிபெயர்ப்புக்கதைகளின் மூலத்தைத் தேடிச் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். அதுவும் சில முக்கிய கதாப் பாத்திரங்களின் கதைகளைத்தான். ஙீமிமிமி, ப்ளுபெர்ரி, ரிப் கெர்பி, பிரின்ஸ், காரிகன், லக்கி லூக், சிஸ்கோ கிட், ப்ரூனோ பிரேசில், ரோஜர், டெக்ஸ் வில்லர், மாண்ட்ரெக் போன்றோ ரின் ஒரிஜினல் கதைகளையும் சேகரித்து வைத்துள்ளேன்.

நீங்கள் படித்த முதல் கதை?

முதலில் நான் இரவல் வாங்கிப் படித்தது “கடத்தல் குமிழிகள்” (லயன் காமிக்ஸ்). நானே வாங்கிப்படித்த புத்தகம் என்றால், ராணி காமிக்ஸில் வந்த “புரட்சி வீரன்” என்ற கௌபாய்கதை புத்தகம்தான். அதோடு மேத்தா காமிக்ஸில் வந்த ஜான் சில்வர் கதைப் புத்தகங்களையும் படித் தேன்.  அப்போது, பாட்டி வீட்டுக்குச் செங்கல்பட்டு வழியாகப் போகும்போது பேருந்து நிற்கும் இடங்களில் உள்ள புத்தகக் கடைகளில் காமிக்ஸ் புத்தகங்கள் தொங்கிக்கொண்டிருக்கும்.  1.50 காசு தான் அந்த புத்தகத்தின் விலை. அந்தச் சமயத்தில் தாத்தா, பாட்டி கொடுத்த காசு கையிலிருக்கும் என்பதால் அதை வாங்கிப் படிப்பேன். ஆனால் அதற்குப்பிறகு அந்த புத்தகம் எங்கு போகும் என்பது எனக்குத் தெரியாது.

இப்போ எவ்வளவோ பொழுதுபோக்கு அம்சங்கள் வந்ததற்குப் பிறகும் இன்னும் நீங்கள் காமிக்ஸை ஏன் படிக்கிறீர்கள்?

அதன் மேல் இருக்கின்ற ஒரு வெறி. புலிவாலைப் பிடித்தது போல் சின்ன வயசுலையே பிடிச்சிட்டேன். இனி அது போகிற போக்கில் போய்க்கொண்டிருக்க வேண்டியது தான். ஆனா 1984ஐ எல்லோ ரும் காமிக்ஸின் பொற்காலம் என்று சொல்லுவார்கள். அக்காலத்தில் நூற்றுக் கணக்கான காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந் தன. அப்போது எதைப்படிப்பது, எதை விடுவது என்பதே தெரியாது. அப்போது நிறைய பேர் காமிக்ஸ் படிக்கவும், சேகரிக்க வும் ஆரம்பித் தார்கள். ஆனால் இப்போது லயன், முத்து மட்டும் தான் அதுவும் வருடத்திற்கு 4 அல்லது 5 புத்தகங்கள் வருவதே அரிதாக உள்ளது. இதனால் வாசகர் களுக்கும் இதன்மேல் இருந்த ஆர்வம் தற்போது குறைந்துவிட்டது. மேலும், பதிப்பாளர்களுக்கும் காமிக்ஸ் மேல் ஆர்வம் கிடையாது. ஒருசிலருக்கு மட்டுமே காமிக்ஸ் குறித்து தெரிகி றது. நிறைய பதிப்பாளர்களுக்கு இது குறித்த சரியான புரிதல் இல்லை. பெரிய நிறுவன மான ராணி காமிக்ஸால் கூட இதில் நிலைக்க முடிய வில்லை.  இப்போ நல்ல கதையைத் தரமாகக் கொண்டுவந்தால் இத்துறையில் வெற்றிபெறலாம்.

எனக்குப் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் வரும்போதெல்லாம், என்கிட்ட இருக்கிற புத்தகங்களைப் படிக்கிறேனோ இல்லையோ அதையெல்லாம் எடுத்து பாத்துக்கிட்டிருந்தாலே நேரம்போறதும் தெரியாது. அந்த கவலைகளும் இருக்குற இடம் தெரியாமல் போயிடும். அதுமாதிரி என் மனதுக்கு ஆறுதல் தரக்கூடியது காமிக்ஸ்.

தமிழில் வெளிவந்துள்ள கதைகள் பற்றி உங்கள் கருத்து?

சமூகத்தைப் பற்றிய கதைகள் வந்து இருக்கு. அவ்வளவு தான். அதெல்லாம் பரவலாகவில்லை. தமிழ் ஓவியர்களுக்கான அங்கீகாரமும் இங்கில்லை. அதுபோல் வெளிநாட்டுச் சித்திரக்கதைகளின் தரத்திற்கு இங்கு முயற்சிகள் இல்லை.

ஏன் நீங்கள் மொழிபெயர்ப்புக்கதைகளை மட்டுமே விரும்பி படிக்கிறீர்கள்?

காமிக்ஸ்களுக்கு மொழி இல்லை. அது எனக்குத் தெரிந்த தமிழில் வருகிறது அதனால் நான் அதைப் படிக்கிறேன்.  அவற்றின் ஓவியமும்,கதையும் என்னைக் கவர்வதால்தான் அவற்றின் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு.

தரமான காமிக்ஸ் என்றால் எப்படி இருக்கவேண்டும்?

பேப்பர், மொழிபெயர்ப்பு, விலை, படங்கள், கதைகள் எல்லாம் தரமாக இருந்ததென்றால் அதுதான் சிறந்த கதையாக வாசகர் மத்தியில் வெற்றிபெரும்.

சித்திரக்கதை வாசிப்பு பரவலாகாமல் போனதற்கான காரணம்?

இப்போ ஆங்கில மோகத்திற்கு மக்கள் தாவியது ஒரு காரணம். அதோடு குழந்தைகளுக்குப் பாடப்புத்தகம் படிக்கவே நேரம் போதவில்லை.  அவர்களிடம் நாம் காமிக்ஸ் புத்தகத்தைக் கொடுத்து படிக்க சொல்ல முடியவில்லை. அதோடு இண்டர்நெட், வீடியோ கேம், செல்ஃபோன், டிவி-னு நிறைய வந்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

சித்திரக்கதைகளைப் பரவலாக்கம் செய்ய என்ன முயற்சி செய்யலாம்?

சித்திரக்கதை பரவலாக வேண்டுமானால் அதற்கான அடிப்படைத்தேவை விளம்பரங்கள்தான். பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாததால்  தான் சித்திரக்கதைகள்  என்பது தனி ஒரு பிரிவாக வந்துள்ளதே பலருக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால் மக்களிடையே கொண்டு சேர்க்கும் அளவிற்கு விளம்பரங்கள் செய்யவேண்டும்.

சித்திரக்கதைகள் காட்டும் உலகம் எப்படிப்பட்டது?

இந்த புத்தகங்களைப் படிக்கும்போது அந்தக் கதை நடக்கும் இடத்திற்கும், சூழலுக்குமே அவை என்னைக் கொண்டு போவதாக உணர்கிறேன். அப்போது நான் காணும் உலகம் அலாதியானது. அதுபோல் சித்திரக்கதைகளில் உள்ள ஓவியங்கள் எனக்குள் ஓவியம் வரையவேண்டும் என்ற ஆர்வத் தைத் தூண்டியது. ஆனால், நான் ஓவிய வகுப்பு களுக்குப் போகவில்லை. எனக்குப் பிடித்த கதாப்பாத்திரங் களை மட்டும் கதையைப் பார்த்து அப்படியே வரைந்து வைத்துக் கொள்வேன். இப்போது அவையெல்லாம் எங்கிருக்கின்றன என்றே தெரியவில்லை.

உங்களுக்குப் பிறகு உங்களுடைய சேகரிப்புகளை யார் படிப்பார்கள்?

இப்போது தான் என்னோட மகள் படிக்க ஆரம்பித்திருக் கிறாள்.

சித்திரக்கதைகளால் உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத சில அனுபவங்கள்?

என்னோட அம்மாவோட அக்கா பொண்ணு இங்க வந்திருந்தப்போ அவங்க பையனுக்காக என்னோட காமிக்ஸ்ல 30 புத்தகத்துக்குகிட்ட வாரிக்கிட்டு போயிட்டாங்க. நான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்து கேட்டப்போ, இல்லடா அவுங்க இப்பதான் வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்கன்னாங்க. எங்க அம்மாவ திட்டிட்டு உடனே பஸ் ஏறிட்டேன்.  என்ன திடீர்னு அங்க பாத்த ஒடனே அவுங்களுக்கு அதிர்ச்சியாயிடுச்சி. இந்த புத்தகத்துக்கா இவ்வளவு தூரம் வந்தன்னு சொன்னாங்க. நான் அங்க அங்க எறஞ்சி கெடந்த புத்தகத்தையெல்லாம் பொறுக்கி எடுத்துக்கிட்டேன். ராத்திரி 9 மணிக்கு பஸ் ஏத்தி விட்டாங்க.  அன்னைக்கு பாத்து வந்தவாசியில பஸ் எல்லாம் ஸ்டிரைக்.  அப்போ வேன் புடிச்சி எப்படியோ கஷ்டப்பட்டு 3 மணிக்குப் பாண்டி வந்தேன்.  அப்போ வீட்டுக்கு வரதுக்குப் பஸ் இல்ல.  பஸ் வரவரைக்கும் அங்கையே உக்காந்திருந்துட்டு, அப்பறம் வீடுவந்து சேந்தேன்.

அதே மாதிரி, காஞ்சிபுரத்துல ஒருத்தர் என்கிட்ட சில புத்தகங்கள் இருக்கு, உங்க கிட்ட இருக்குற புத்தகத்த தரீங்க ளான்னு கேட்டாரு. நானும் ஒரு ஏழு புத்தகத்தை அனுப்பி னேன். அப்போல்லாம் போன் வசதியெல்லாம் கெடையாது லட்டர் மூலமாதான் பேசிப்போம். நான் அவருக்குப் பல தடவை லட்டர்  போட்டேன். அவரு பதில் ஒண்ணும் அனுப்பல. உடனே காஞ்சிபுரத்துக்குப் பஸ் ஏறிட் டேன்.  என்ன பாத்ததும் அவர் பேயறஞ்ச மாதிரி நின்னாரு. உடனே அவரோட பெட்டிய தெறந்து என்னோட புத்தகத்த எடுத்துக்கச் சொன் னாரு. நானும் என்னோட புத்தகத்த எடுத்துக்கிட்டு வந்துட் டேன். சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரும், இதேபோல் புத்தகங் களை வாங்கித் திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார். என்னால இந்த மாதிரி விஷயங்களை ஏத்துக்கவே முடியாது. 

உங்களுடைய சேகரிப்பு அனுபவம் குறித்து?

மொதல்ல 20 காசு 30 காசு கொடுத்து வாடகைக்கு வாங்கிப் படிச்சேன்.  அப்போ நெறைய வாடகை நூலகம் இருந்துச்சி.  அவுங்கக்கிட்ட  புத்தகத்த வெலைக்குக் கேட்டா கொடுக்க மாட்டாங்க. அப்போ அங்க இருந்து புத்தகத்த எடுத்துப் படிக்கணும்னா 100 ரூபாய் கட்டி உறுப்பினராகணும் அதுக்கப்பறம்தான்  புத்தகத்த படிக்கத் தருவாங்க. அதுவும் ஒருத்தருக்கு 3 புத்தகம் தான் தருவாங்க. நான் ஒரு ஒரு நூலகத்திலேயும் உறுப்பினராகிட்டு 3 புத்தகத்த எடுத்துக்கிட்டு வந்துடுவேன். அதுக்கப்பறம் அந்தப் பக்கமே போகமாட்டேன்,  அப்படியெல்லாம் சில புத்தகங்களைச் சேகரித்தேன். அப்பறம் பழைய புத்தகக்கடைகளிலும், காமிக்ஸ் சேகரிப்பாளர் களிடமிருந்தும் பல புத்தகங்களைச் சேகரித்தேன்.  அப்போ புத்தக பரிமாற்றம் எல்லாம் இல்லை. பணம் கொடுத்துத்தான் புத்தகங்களை வாங்கினேன். என்கிட்ட சில புத்தகங்கள் 2,3 பிரதிகள் இருந்துச்சி. அப்போ என்னிடம் கைவசம் உள்ள பிரதிகள்னு விளம்பரம் கொடுத்தேன். அப்போ ஏகப்பட்டபேர் 20, 30 ரூபாய்னு அனுப்பினாங்க.

அந்த புத்தகத்தையெல்லாம் அதேவிலைக்கே திருப்பி வித்தேன். இப்போ இந்த மாதிரி விக்கிறதெல்லாம் இல்லாம புத்தகப் பரிமாற்றம்தான் நடக்குது.   புதுசா சேகரிக்கிறேன்னு கேட்ட வங்களுக்கு என்கிட்ட இருக்குற சில புத்தகங்களைக் கொடுத்திருக்கேன்.  வேறுசிலர் கிட்ட இருந்தும் வாங்கிக்கொடுத்திருக்கேன். அதுமாதிரி சிலர் என்கிட்ட கம்மியான வெலைக்கு வாங்கிட்டு அதையே வெலை அதிகமா விக்கிறாங்க. இப்பெல்லாம் நான் புத்தகங்களை யாருக்கும் விலைக்கு வாங்கிக்கொடுப்பதில்லை.  பழைய புத்தகக் கடையில் இப்போ காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பது ரொம்ப அரிதாகிவிட்டது. காமிக்ஸ் சேகரிப் பாளர்கள் யாரா வது இறந்துவிட்டாலோ, இல்ல அவங்களால சரியா பராம ரிக்க முடியலனாலோ, இல்ல வேறு ஏதாவது காரணத்தாலோ  பழைய புத்தகக்கடையில போட்டாதான் நமக்குக் கெடைக் கும். பழைய புத்தகக் கடையிலையும் அதையெல்லாம் பிரிச்சி வைக்க கஷ்டப்பட்டுக்கிட்டு அரவைக்குப் போட்டுடறாங்க. அந்த மாதிரி பழைய புத்தகங்கள் கெடைப்பது இப்ப ரொம்ப கஷ்டம்.

நான் சிறுவனாக இருந்தபோது ஒருகடையில் 25 பைசாவுக்கு வேர்க்கடலை வாங்கினேன். அந்த கடைக்காரர்.  ஒரு புத்தகத்துல இருந்து 2 பேப்பர கிழிச்சி வேர்க்கடலைய மடிச்சி கொடுத்தாரு. அது திகில் காமிக்ஸோட கோடை மலர்.  உடனே அவர்கிட்டையே அந்த கடலைய கொடுத்துட்டு அந்த காசுக்கு அந்த புத்தகத்த கொடுங்கண்ணானு கேட்டு வாங் கிட்டு வந்தேன். ஒரு பாக்கெட் சைஸ் புத்தகத்தையே மடிச்சி கொடுக்குறாங்கன்னா,  பெரிய புத்தகங்களையெல் லாம் சொல்ல வேணுமா?

உங்களுடைய வலைப்பதிவு குறித்தும், முதலைப்பட்டாளம் என்று அதற்குப் பெயர்வைத்தது குறித்தும் சொல்லுங்கள்?

2008ல் வலைப்பதிவு ஆரம்பித்தேன்.  என்னோட நண்பர் ஜோசப் மணி தான் என்கிட்ட சொன்னார், எல்லாரும் காமிக்ஸ் பத்தி எழுதுறாங்க. நீ ஆரம்பத்தில் இருந்து படிக்கிற நீ எழுது மத்தத நான் பாத்துக்குறேன்னு சொல்லி, என்ன எழுத வெச்சார். இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் என்னோட நண்பர் தான். எழுதுறது மட்டும் தான் நான்.  மத்ததெல்லாம் என்னோட நண்பர்தான் செய்யுறார். 

முதலைப்பட்டாளம்- ப்ருனோ பிரேசில் குழுவினரோட பெயர் முதலைப்படை. நான் கட்டுரைகளை எழுதுவேன், கண்ணன், ரவி, ஜோசப் மணி மூவரும் அதனை இணைய தளத்தில் வெளியிடுவதற்கான உதவிகளைச் செய்வார்கள். அதனால் நான் தனித்து செயல்படாமல் ஒரு குழுவாக செயல் படுவதால்,  முதலைப்பட்டாளம் என்ற பெயரை வைத்தேன். ப்ருனோ பிரேசில் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Pin It