ஆவணம் 2

1933       - ஆனந்த விகடனில் சித்திரக்கதை வடிவம் நகைச் சுவைத் துணுக்குகளுக்காகவும் விளம்பரங்களுக்காகவும்  பயன்படுத்தப்பட்டுள்ளது.        

1948       - டமாரம் என்னும் சிறுவர் இதழ் சித்திரக்கதை வடிவிலான நகைச்சுவைத் துணுக்குகளை இதழின் அட்டைப்படங்களாக வெளியிட்டுள்ளது.               

1949       - 1932ல் தொடங்கப்பட்ட சித்திரக்குள்ளன் சிறுவர் இதழில் 1949களில் சித்திரக்கதைகள் இடம்பெற்றுள்ளன.  இதுவரை தமிழில் கிடைத்துள்ள சித்திரக்கதைகளில் இதுவே முதலாவதாகக் கருதப்படுகிறது.          

கண்ணன் சிறுவர் இதழில் 1950ல் வெளியான தீபாவளி மலரில் முதன்முறையாக ஒரு முழுநீளச் சித்திரக்கதை (இரு சகோதரர்கள்) இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, தொடர்களாகச் சித்திரக்கதைகள் இவ்விதழில் வெளிவந்தன.

1956       - ஆனந்த விகடனில் "ஜமீன்தார் மகன்'' என்னும் சித்திரக்கதை வெளியானது. இதுவே இவ்விதழின் முதல் சித்திரக்கதை.  இதே காலகட்டத்தில் குமுதம், கல்கி ஆகிய இதழ்களிலும் சித்திரக்கதைகள் வரத்தொடங்கிவிட்டன.

1965       - டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் மேலைநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து "இந்திரஜால் காமிக்ஸ்'' என்னும் பெயரில் வெளியிட்டது. இதில் சில இந்தியக்கதைகளும் இடம்பெற்றன.        

1967       - இந்தியன் புக் ஹவுஸ் நிறுவனத்தாரால் "அமர சித்ர கதா'' என்ற பெயரில்  சித்திரக்கதைகள் வெளியிடப்பட்டன.  பெரும்பான்மை புராண இதிகாசக்கதைகளும், நீதிக்கதை களும் இவ்விதழில் இடம்பெற்றன. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த இவ்விதழ் தற்போது தமிழில் வெளிவரவில்லை.                 

avarai-kodi_370கண்ணன் (கண்ணன் வெளியீடு), குமுதம் (மாலைமதி வெளியீடு) ஆகிய இதழ்களில் தொடர்களாக வெளியிடப்பட்ட சித்திரக்கதைகள் தொகுக்கப்பட்டு முழுநீளச்சித்திரக் கதை நூல்களாக வெளியிடப்பட்டன.

1968       - இங்கிலாந்தைச் சேர்ந்த ஈகிள் காமிக்ஸின் தமிழ்ப்பதிப்பாக "பால்கன்'' என்ற பெயரில் சிறுவர் இதழ் வெளியானது.  இதில் வெளியான சித்திரக்கதைகளின் தாக்கம் இவ்விதழை பால்கன் காமிக்ஸ் என்று சொல்லும் அளவிற்கு உயர்த்தியது 22 இதழ்களோடு இவ்விதழ் நின்றுவிட்டது.

1972       - பிரகாஷ் பப்ளிகேஷன் நிறுவனத்திலிருந்து "முத்துகாமிக்ஸ்'' என்ற பெயரில் மொழிமாற்றச் சித்திரக் கதைகள் வெளிவரத்தொடங்கின. இந்நிறுவனம் 1974ல் "முத்துமினி காமிக்ஸ்'' என்றும், "முத்துகாமிக்ஸ் வாரமலர்'' என்ற பெயரிலும் சில இதழ்களை வெளியிட்டது. முத்து காமிக்ஸ் மட்டுமே தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது.

1975 - கேரளாவிலிருந்து வித்யார்த்தி மித்ரம் வெளியீடாக மாயாவி, டார்சன் கதைகள் "வித்யார்த்தி மித்ரம்'' என்ற பெயரில் வெளியிடப்பட்டன.            

1976       - குமுதம் இதழ் சார்பாக மாலைமதி காமிக்ஸ், கிதிமி என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து அதில் வெளியான சித்திரக்கதைகளைத் தமிழில் மொழிமாற்றம் செய்து "மாலைமதி காமிக்ஸ் கிதிமி'' என்ற பெயரில் வெளியிட்டது.

கலைப்பொன்னி நிறுவனத்திலிருந்து "பொன்னி காமிக்ஸ்'' என்னும் சித்திரக்கதை இதழ் வெளிவரத்தொடங்கியது. பின்னாளில் "மலர் காமிக்ஸ்'', "மலர்மணி காமிக்ஸ்'' ஆகிய இதழ்களையும் இந்நிறுவனம் வெளியிட்டது. இவற்றில் வெளியான கதைகள் யாவும் தழுவல் கதைகளாக உள்ளூர் ஓவியர்களைக்கொண்டு வரையப்பட்ட சித்திரக்கதைகள். 

ஓரியண்ட் லித்தோ பிரஸ் பப்ளிகேஷன் டிவிஷன் சார்பில் முல்லை தங்கராசன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு "ரத்னா காமிக்ஸ்'' வெளியிடப்பட்டது. இதே நிறுவனம் 1979ல் "ரத்னபாலா'' என்ற சிறுவர் இதழையும் வெளியிட்டது.  இதிலும் சித்திரக்கதைகள் அங்கம் வகித்தன.

1984       - ராணி சிண்டிகேட் நிறுவனத்திலிருந்து "ராணி காமிக்ஸ்'' என்னும் இதழ் வெளிவரத்தொடங்கியது.  இது முழுக்க முழுக்க மேலைநாட்டுக்கதைகளின் மொழிமாற்றச் சித்திரக்கதைத் தாங்கி வெளிவந்தது. 500 இதழ்களோடு இந்த காமிக்ஸ் நின்றுவிட்டது.

பிரகாஷ் பப்ளிகேஷன் நிறுவனத்திலிருந்து முத்துகாமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் அவர்களின் மகன் விஜயன் அவர்களால் "லயன் காமிக்ஸ்'' தொடங்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து அவரே "ஜூனியர் லயன்'', "மினி லயன்'', "திகில் காமிக்ஸ்'' என்னும் சித்திரக்கதை இதழ்களையும் தொடங்கினார். தற்போது லயன் காமிக்ஸ் மட்டுமே வெளிவந்துகொண்டிருக்கின்றது.

மேத்தா பப்ளிஷர்ஸ் சார்பில் சிவகாசியிலிருந்து மேத்தா காமிக்ஸ் வெளியானது. பின்னர் இது அஷோக் காமிக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இதில் மொழிமாற்றக் கதைகளே இடம்பெற்றன.    

1987       - கேரளா பூம்பட்டா பப்ளிகேஷனிலிருந்து வெளிவந்த சித்திரக்கதை இதழ் "பைக்கோ கிளாசிக்ஸ்''.  இவ்விதழ் உலக இலக்கியங்களைத் தமிழுக்குச் சித்திரக்கதை வடிவில் அறிமுகப்படுத்தியது.  தினேஷ் வி. பை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பூந்தளிர் என்ற சிறுவர் இதழும், பூந்தளிர் அமர்சித்திரக்கதை என்ற சித்திரக்கதை இதழும் வெளிவந்தன.          

1988 - ராணிகாமிக்ஸில் தொடக்கத்தில் வேலைசெய்த எஸ். ராமஜெயம் அவர்களால் சீக்ரெட் ஏஜெண்ட் ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் என்ற பெயரில் ஒரு சித்திரக்கதை இதழ் வெளியிடப்பட்டது.                  

1989       - கண்மணி காமிக்ஸ், முல்லை தங்கராசனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த சித்திரக்கதை இதழ்களில் இதுவும் ஒன்று.  எம்.ஜி.ஆர் அவர்களைக் கதாநாயகனாகக்கொண்டு இக்கதைகள் வெளிவந்தன.        

1992       - பார்வதி சித்திரக்கதைகள், கல்கி, கோகுலம் முதலான இதழ்களில் வெளியான தமிழ்ச் சித்திரக்கதை களைத் தொகுத்து வெளியிட்ட இதழ் இது.  இதன் ஆசிரியர் வாண்டுமாமா அவர்கள். தமிழில் சில உள்ளூர் கதைகளை வெளியிட்ட  இதழ்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு இதழ் இது.

1993       - அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை சித்திரக்கதை வடிவில் (அப்புசாமியின் கலர் டி.வி) மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது.        

1995       - மேகலா பத்திரிகைக் குழுவிலிருந்து வெளியிடப் பட்ட  இதழ் மேகலா காமிக்ஸ். இவ்விதழ் தமிழிலேயே சித்திரக்கதைகளை உருவாக்கி வெளியிட்டது.       

1996       - சித்திரக்கதை இதழ்களைப் பொருத்தவரை விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிவருபவையும் உண்டு. அவ்வகையில் பூவிழி பப்ளிகேஷன்ஸிலிருந்து  பூவிழி காமிக்ஸ் மற்றும் பிரைட்மூன் காமிக்ஸ் என்ற இரு சித்திரக்கதை இதழ்கள் வெளிவந்தன.                

2000       - "கண்மணி காமிக்ஸ்'' மாலைமலர்தேவி சார்பில் வெளிவந்த சிறுவர் இதழ்.  இதில் சித்திரக்கதை ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளியான சித்திரக்கதைகளைத் தொகுத்து "கதைமலர்'' என்ற பெயரில் சித்திரக்கதை வரிசையினை வெளியிட்டுவருகின்றது.

2002       - 1997ல் உலக காமிக்ஸ் அமைப்பும், விசிடிஎஸ§ம் இணைந்து நடத்திய காமிக்ஸ் பயிற்சிப்பட்டறையின் தொகுப்பாக காமிக்ஸ் குறித்த ஒரு பயிற்சி கையேடு ""காமிக்ஸ்: தன்னார்வக் குழுக்களின் தகவல் தொடர்பு சாதனம்'' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.        

2005       - பிரகாஷ் பப்ளிகேஷனிலிருந்து வெளிவந்த முத்து காமிக்ஸின் சில பழைய கதைகளை மறுபதிப்பு செய்து ""காமிக்ஸ் கிளாஸிக்ஸ்'' என்ற பெயரில் இந்நிறுவனம் வெளியிட்டுவருகின்றது.

விடியல் பதிப்பகத்திலிருந்து  ஈரான்: குழந்தைப்பருவம்,  ஈரான்: திரும்புதல் என்னும் வரைபடப் புனைவு (graphic novel) நூல் இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன.     

2008       - வாண்டுமாமாவினுடைய சித்திரக்கதைகள் சில திருவரசு புத்தகநிலையத்தாரால் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளியிடப்பட்டது. இவருடைய சித்திரக்கதைத் தொகுப்புகள் கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.     

2009       - நியூ ஹரிசான் மீடியா பிரைவேட் லிமிட் சார்பில் "பிராடிஜி காமிக்ஸ்'' என்னும் சித்திரக்கதை வரிசை வரத்தொடங்கியது.   

2011       - பயணி வெளியீடாக சேகுவாரா, அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு என்னும் இரண்டு வரைபடப் புனைவு நூல்கள் வெளிவந்துள்ளன.     

மாற்றுவெளி இதழ் தமிழ்ச் சித்திரக்கதைகள் என்னும் தலைப்பில் ஆய்விதழ் ஒன்றினை வெளியிடுகிறது.   

Pin It