விவரணங்கள் - உரையாடல்

அண்மைக்கால (1980-2010) தமிழ்ச்சிறுகதைகளை மதிப்பீடு செய்வதன் தேவை என்ன? தமிழ்ப் புனைவுலகம் செயல்படும் போக்குகளைத் தமிழியல் வரலாற்றை அறியவிரும்புவோர் கவனத்தில் கொள்வது இயல்பு. புனைவுலகில் செயல்படும் ஆளுமைகளும் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது? யார்? யார்? எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள்? என்ற சிரத்தை கொள்வதும் அவசியம். இத்தேவைகளைக் குறைந்த அளவில்; ஒரு வகைமாதிரியாக வெளிப்படுத்துவதாக இவ்விதழை உருவாக்கியுள்ளோம். 1978ஆம் ஆண்டு முடிய சிட்டி - சிவபாதசுந்தரம் எழுதியுள்ள நூலைத் (1989) தவிர, நெட்டோட்டமாக அமையும் நூல் எதுவும் இல்லை.

தனிப்பட்ட சிலரின் அபிப்பிராயங்களாக அமைந்த பதிவுகளை வரலாறாகக் கொள்ள முடியாது. தனிப்பட்ட ஆளுமைகள் குறித்தப் பதிவுகள் வெளிவந்துள்ளன. பகுதி பகுதியாகப் பேசப்பட்ட நூல்களும் உண்டு. இவ்விதழ் கடந்த முப்பது ஆண்டுகளில் வெளிப்பட்ட போக்குகள் மற்றும் செயல்பட்ட ஆளுமைகள் குறித்த முழுமையான புரிதலை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய தேடுதலில் கிடைத்த விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விதழ் வகைமாதிரியாக உருவாக்கப்பட் டுள்ளது. இது நூறு விழுக்காடு துல்லியமானது அன்று. இருப்பினும் ஒட்டுமொத்தப் புரிதலுக்கு இவ்விதழ் உதவும்.

தமிழ்ச் சிறுகதைகளை அதன் உருவாக்கப் பின்புல நோக்கில் மூன்று கட்டங்களாகப் பாகுபடுத்திக் கொள்ள இயலும். (விரிவுக்குப் பார்க்க: இவ்விதழில் உள்ள முதல் கட்டுரை) 1930-2010 என்ற கால இடைவெளி மூன்று கட்டங்களாக அமைகிறது. முதல் கட்டத்தில் சுமார் இருபது ஆளுமைகளை இனம் காணமுடிகிறது. இரண்டாம் கட்டத்தில் சுமார் முப்பது ஆளுமைகள். மூன்றாம் கட்டத்தில் சுமார் தொண்ணூறு ஆளுமைகள். ஏறக்குறைய தமிழ்ச் சிறுகதை உருவாக்கத்தில் 140 ஆளுமைகளை எண்பது ஆண்டுகளில் (1930 -2010) இனம் காணமுடிகிறது. அண்மைக் காலத்தில் (1980 -2010) 250 சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஏறக்குறைய சுமார் 3000 சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை எங்களது தேர்வு அடிப்படையில் அமைந் தது. அச்சில் வந்துள்ள அனைத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. சிறுகதைத் தொகுதிகள் குறித்த விவரணங்களைத் தேடியபொழுது கிடைத்த அநுபவத்தை யும் பதிவு செய்வது அவசியமாகிறது.

சென்னைக் கன்னிமரா பொதுநூலகப் பட்டியலை மதிப்பீடு செய்யும்போது அப்பட்டியல், கதை என்று பொதுப்பெயரில் பதிவாகியுள்ளது. மேலே குறித்துள்ள 140 பேரில் சுமார் இருபது படைப்பாளிகளின் தொகுதிகள் மட்டுமே அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பிற தொகுதிகள் அனைத்தும் பொதுச்சந்தைக்கு நூற்சரக்கு களை உற்பத்தி செய்யும் பிரபலமான வணிக வெளியீட்டகம் மூலம் வெளி வந்தவை. வெகுசன அச்சுச் சந்தைக்கு, குறிப்பாக நூலகச் சந்தை நோக்கி உருவாக் கப்பட்ட சிறுகதைகள் எனும் பெயரில் அமையும் சரக்குகளே அவை. அவை, வெறுமனே வாசித்து விட்டு, தூக்கி எடைக்குப் போடும் தன்மை கொண்டவை. ஆக்கங்களாக அமைந்து, காலகாலத்திற்கும் பாதுகாக்க வேண்டிய நூல்களாக இல்லை. (இப்படிப் பாதுகாக்கும் தேவை உண்டா? என்ற இன்னொரு கேள்வி குறித்த விவாதம் இங்கு நமது நோக்கம் இல்லை. அதை வேறு சந்தர்ப்பத்தில் நிகழ்த்த வேண்டும்.)

90 ஆளுமைகள் குறித்த விரிவான சிறுகதைத் தொகுதிகள் குறித்தப் பதிவு, புதுவை பிரெஞ்சு இந்திய நிறுவனத்தின் நூற்பட்டியலிலிருந்துதான் உருவாக்க முடிந்தது. கன்னிமரா நூலகம் அதற்கு உதவவில்லை. நண்பர் கண்ணன் அவர்களின் உதவியால் அந்நூலகத்தின் நூலகர் நண்பர் ஆர்.நரேந்திரன் அனுப்பிய பட்டியலி லிருந்துதான் 90 ஆளுமைகளையும் 250 தொகுதிகள் குறித்த விவரணங் களையும் தெரிவு செய்ய முடிந்தது. நூலகச் சேகரிப்பு முறைமைகளுக்கும் விவரணங்கள் அறிதலுக்கும் உள்ள உறவை இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசாங்கம் நடத்தும் நிறுவனங்கள், அண்மைக்காலங் களில் எவ்வகையில் சீரழிந்துள்ளன? என்பதற்கு இந்நிகழ்வு பாடமாக அமைகிறது. தமிழ்ச் சிறுகதைப் போக்குகளைக் கன்னிமரா நூலகத் தரவுகளைக் கொண்டு கண்டறிய முடியாது. வாசிப்புப் பழக்கம் மற்றும் நூலகச் சந்தை சார்ந்து உருவாகும் நூற்சரக்குகளே பொதிகளாக அரசாங்க நூலகங்களில் கிடத்தப்பட்டுள்ளன. மாறாக, பிரெஞ்சு நூலகத்தில் தேடிப் பொறுக்கி சேகரிக்கப்பட் டிருப்பதைக் காண்கிறோம். இதற்காக நண்பர் கண்ணனுக்கு நன்றி சொல்லவேண்டும். சென்னைப் பல்கலைக்கழக மெரினா நூலகத்தில், தொண்ணூறுகளில் அவ்வித செயல் பாட்டை நடை முறைப்படுத்தும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது; ஆனால் அந்நூல்கள் எல்லாம் இரண்டாயிரத் தின் தொடக்கத்தில் காணாமல் போயின; இப்போது மீண்டும் அந்நூலகத்தில் சேகரிக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளில் நடை முறையில் உள்ளது.

தொண்ணூறு ஆளுமைகளில் மூன்றில் ஒருபங்கு ஆளுமைகளை மட்டும் மாதிரியாகக் கொண்டு மதிப்பீடு செய்துள்ளோம். குறிப்பிட்ட ஆளுமையின் அறிமுகம் சார்ந்த விவரணங்கள் முதன்மைப்பட்ட கட்டுரைகள் பெரிதும் இடம்பெற்றுள்ளன. விரிவான விமரிசனம் சார்ந்த பதிவுகள் குறைவே. அவ்விதம் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும் நடைமுறையில் அதற்கான கால அவகாசம், எழுதுவோர் ஒத்துழைப்பு ஆகியவை எளிதில் சாத்தியமில்லை. தொடர்ந்து இவ்வகைச் செயல்களில் ஈடுபடுவோரால் மட்டுமே அதனைச் செய்யமுடியும். அப்படியானால், ஏன் இவ்வகைச் செயலில் ஈடுபடுகிறீர்கள்? என்ற கேட்கலாம்; ஒன்றுமில்லாச் சூழலில் இலுப்பைப் பூ சர்க்கரையாக - வகைமாதிரிகளாக இப்பணிகள் அமையும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுள்ளோம்.

கூட்டு உழைப்பில் உருவானது இச்சிறப்பிதழ், பல தரப்பட்ட புரிதல் உடையவர்களின் பதிவுகள் இவை. இப்பதிவுகள் வருங்கால ஆவணங்களாக அமையும் என்று நம்புகிறோம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுது வோருக்கு ஏதோவொரு வகையில் இவ்விதழ் கையேடாக அமைய வாய்ப்புண்டு. இவ்விதழ் உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி.

Pin It