உமா மகேஸ்வரி 1971ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985இல் கவிதை எழுதத் தொடங்கி, சிறுகதை, நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே(1990), வெறும்பொழுது(2002), கற்பாவை(2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி(2002), தொலைகடல் (2004), அரளிவனம்(2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை(2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி, கணையாழி, இலக்கியச் சிந்தனை, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார்.

மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் அரளிவனம் முதற்கொண்டு கனகாம்பரத் திரைகள் வரை 14 கதைகள் அரளிவனம் தொகுதியிலு மாக 42 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவரது சிறுகதை கள், ஆணுலகம் சார்ந்த கருத்தியல்கள் பெண்ணுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன? பெண்ணை எவ்வாறு செயல்படுத்து கின்றன? என்பதைக் கட்டவிழ்த்து வெளிப்படுத்துகின்றன. பெண்களின் தொலைந்துபோன வாழ்க்கையை இக்கதைகள் பேசுகின்றன. ஆணாதிக்கச் சமூகத்தின் ஒருதலைப்பட்சமான செயற்பாடுகள் கட்டவிழ்க்கப்படுகின்றன.

பெண் அசுத்தமானவள், கீழ்மையானவள், அடிமை எனக் கருதப்படும் சமூகத்தில் பெண் மட்டுமின்றி பெண்ணைப் பெற் றெடுத்த ஆணும் தாழ்ந்தவனாகவே பார்க்கப்படுகின்றான். எனவே தான், பெண்குழந்தை பிறப்பதே தன் ஆண்மைக்கு இழுக்கு என நினைக்கும் நிலை உள்ளது. தன் மனைவி, மகள், மருமகள் என அடக்கியாளும் ஆண், தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டில் பணிந்து போகவேண்டியுள்ளது. ‘என்ன இருந்தாலும் நீ பெண்ணை பெற்றெடுத்தவன்தானே’ என்ற எண்ணம் கூர்மையாகத் தலைகாட்டுவதால் அடங்கிப் போகிற பாவனையில் வாழவேண்டி யுள்ளது. இதனை ‘வருகை’யில் உணரமுடிகின்றது.

ஓரப்பார்வை யின் ஆணைகளோடும் கடுமையற்ற மௌனத்தின் கட்டளைகளோ டும் தன் இல்லத்தில் அரசாட்சி நடத்திய ஆண், தன் மகளின் புகுந்த வீட்டிற்குச் செல்லும்பொழுது அவன் நிலையே முற்றிலுமாகத் தலைகீழாகிவிடுகிறது. தலைதீபாவளிக்கு ஒருவாரம் முன்கூட்டியே மகளையும் மாப்பிள்ளையையும் அனுப்பி வைக்கும்படி தனது சம்மந்தியம்மாளிடம் அனுமதி கேட்டு நிற்கிறார். ‘எப்படியோ அந்த நாற்காலி இப்போது அப்பாவை விட உயரமாகிவிட்டிருக்கிறது’ என்ற சொற்கள் கூனிக் குறுகி நிற்கும் அவலத்தை, ஆண் - பெண் நிலை முரண்படுவதை அங்கதத்தோடு எடுத்துக்காட்டுகிறது. இங்கு பெண்ணுக்கு அதிகாரம் என்பது ஆணைப் பெற்றெடுத்தவள் என்பதாலும் ஆணின் பணிவு என்பது பெண்ணைப் பெற்றெடுத்த தாலும் உருவாக்கப்பட்டவையாகும்.

தன் மனைவியினுடைய நோயின் தீவிரத்தை அறிந்தும், ‘ஒரு லட்சம் செலவாயாச்சு உன் வைத்தியத்துக்கு எப்படித்தரப்போற’ என்று கேட்பதும் ‘இந்த உடம்ப வித்தாவது குடுத்திடறேன்’ என்று அவள் கூறியதற்கு, ‘போடி போ இந்த உடம்புக்கு எவன் வருவான். கால்வலி, கைவலி, அந்த வலி, இந்த வலின்னு எந்நேரமும் நோக்காடு. ஒரு வருஷமா என்னோட படுத்திருக்கியாடி’ எனக்கேட்டு சொற்களாலேயே அவளைக் கொல்கிறான். கணவன் நோய்வாய்ப் பட்டால் பவுடர்போடக் கூடாது, நல்ல ஆடை அணியக் கூடாது, சீவி சிங்காரிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கும் சமூகம், அவள் தன்னைப் பற்றி தன் நலனைப் பற்றி அக்கறை கொள்ளாமல் முழுமையாக அவனையே கவனித்துக்கொண்டு அவளது உணர்வுகளை அழித்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கும் சமூகம், மனைவி நோய் வாய்ப்படும்பொழுது மட்டும் அவளைச் சொற்களால் பொசுக்கித் துடிக்கவைப்பதும். அந்நிலையிலும் ஆணின் காமத்திற்குத் தீனி போட வேண்டுமென்று நினைப்பதும் அவனை முழுமையாகத் திருப்திப் படுத்துபவளாக இருக்கவேண்டுமென்று ஏசுவதும் ஆதிக்க வெளிப் பாடுகளாக, ஒருதலைப்பட்ச செயற்பாடுகளாக உள்ளன. ’பெண்டாட்டி செத்தவன் புதுமாப்பிள்ளை’ என்ற பழமொழி இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது.

ஆண்களின் அதிகார முகமூடி பிய்த்தெறியப்பட்டு அவர்களின் கயமைத்தனங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. குடும்பத்தில், செய்யாத குற்றத்திற்காக, திருடி என்ற நிலையை அடைவதும் தண்டனை அனுபவிப்பதும் மனைவி என்ற நிலையில் பெண்ணுக்கு ஏற்படுகிறது. கணவன் என்ற அதிகாரத்தில் அடக்குமுறையும் வெறித் தனமும் தனது தவறை ஒப்புக்கொள்ள முடியாத தன்முனைப்பும் தன்னுடைய தவறை மறைக்கும் கயமையும் பெற்றவனாக ஆண் இருக்கிறான். இந்த யதார்த்தத்தை ‘ஆண்’ என்ற கதை நுட்பப்படுத்து கிறது.

மனைவி, வீட்டில் இல்லாதபொழுது பணிப்பெண்ணுடன் உறவு கொள்பவன்; தன் வீட்டிற்கு வந்திருக்கும் உறவுச்சிறுமியிடம் பாலியியல் குற்றம் செய்ய முனைபவன்; மனைவியின் நகைகளை யெல்லாம் களவாடிச்சென்று, பிற பெண்களோடு உறவு வைத்துக் கொள்பவன்; மருமகளை காமத்தோடு பார்ப்பவன்; திருமணத்தன்றே தன் புதுமனைவியின் பரிசுத்தத் தன்மையினை பரிசோதித்து அறிந்து கொள்பவன்; தோஷம் கழித்தல் என்ற பெயரில் சிறுமியை பலாத்காரம் செய்பவன்; தனது பதவி உயர்வுக்காகத் தன் மனைவியை தனது உயரதிகாரியோடு படுக்கவைப்பவன்; மனைவியின் தங்கை யோடு உறவு வைத்துக்கொண்டு மனைவியை ஏமாற்றுபவன்; மனைவியை நண்பனுக்காகக் கூறுபோடுபவன்; நோய்வாய்ப்பட்ட நிலையில், தன் இயலாமையை ஆத்திரமாக மாற்றி மனைவியின்மீது கற்பு, நடத்தை மீதான பெருங்குற்றங்களாகப் பாய்ச்சுபவன்; மனநலம் பாதிக்கப்பட்டு நிர்வாணமாக வீதிகளில் திரிந்துகொண்டிருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை புரிந்தவன், என்று பெண்களைப் பிணங்களாகவும் நடைபிணங்க ளாகவும் மாற்றுகின்ற, ஏமாற்றுகின்ற ஆணாதிக்க நெறிகளை இவரது கதைகள் பல்வேறு பரிமாணங்களில் இருந்து வெளிப்படுத்து கின்றன.

 சாவதற்கும் வழியற்று, சுதந்திரமற்றதாகப் பெண்ணின் நிலை உள்ளதையும் பெண்ணின் இந்த வாழாத வாழ்க்கை, காம்பறுந்த புதுமலர்போல் காற்றில் அலைந்து தொலைபடுவதையும் உமா வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். பெண் குடும்பச் சிறைக்குள் சிக்கிக் கொண்டு, சுதந்திரமாக, சுயமாக வாழவும் முடியாமல் வெளியேற வும் முடியாமல் சுயத்தை இழந்த தோல்வியை எண்ணிச் சாகலாம் என முடிவு செய்து சாகவும் முடியாமல் இருக்கவேண்டிய நிலை. பேதங்களும் வேதனைகளும் புழுக்கங்களும் பூசல்களும் குமுறுகிற அறையிலேயே மீண்டும் தாழ்ந்து, வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். தலைகீழாக நட்டாலும் வளருகின்ற; இன்மைகளிலிருந்து தன்னை ஏற்படுத்திக்கொள்கிற; ஓரமுட்களோடும் ஈரமையத்தோடும் வாழ் கின்ற ரணகள்ளியாகப் பெண்ணின் இருப்பை உமா எடுத்துக்காட்டி யிருக்கிறார்.

திருமண நேரத்தில் மழை பொழிந்தால், மணப்பெண் அரிசி நிறையத் தின்றிருக்கிறாள் எனக் காரணம் காட்டுவது. (ஐப்பசி மாத அடை மழைக்கும் பெண்ணே காரணமாகிப் போகவேண்டிய நிலை), பெண் வாழும்பொழுது அவளை ஒரு மனுஷியாகப் பார்க் காமல் அவளது உணர்வுகளைக் கொன்று இறந்தபிறகு தெய்வமாக மாற்றிப் பார்க்கும் தொன்ம நிலை, திருமணமான உடனே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம், ஆண் பாலியல் குற்றம் புரிந்தால் அதற்கும் பெண்ணையே குற்றம் சாட்டும்நிலை, குழந்தை இல்லாத பெண் எதிர்கொள்ளும் வினாத்துளைப்புகள், பெண்ணுக்கு சமையல், கணவன், குழந்தை தான் முக்கியமே தவிர, படிப்பது, எழுதுவது எதற்கு என்ற அறிவுரை கள், மிரட்டல்கள் எனச் சமூகத்தில் இருக்கும் ஆணதிகார யதார்த்த நிலைகள் இவரது எழுத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

பெற்றோர்களே தம் குழந்தைகளிடம் ஆண் பெண் வேறுபாட்டி னைக் காட்டுகிறார்கள்; கற்பிக்கிறார்கள். `ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு’ என்பதற்கேற்ப ஆண் குழந்தைக்கே அதிக சலுகையும் அக்கறையும் கிடைக்கும். தங்கம், செல்லம், ராசா, ஆம்பள சிங்கம், என்ற பட்டங்களோடு கூடிய கொஞ்சல்கள் அவனுக்கும் பிசாசு, சனியன், தரித்திரம், பொட்ட கழுத என்ற வசவுகள் அவளுக்கும் உரியவை. இந்த யதார்த்தத்தை உமா ‘தொலைந்துபோனவன்’ கதையில் காட்டுகிறார். முதல் டிகாஷன் காபி, முறுகலான தோசை, அப்பா அடிகுழாயில் மூச்சிரைக்க அடித்து, மகன் குளிக்க நிரப்பி வைக்கும் ஆற்றுத்தண்ணீர், தனிக்கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மகன் நுனிவிரலால் ஒதுக்கிவிடுகிற உடைகள் என மகனின் மதிப்பு நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொன்றிலும் அடிநாதமாகத் தவப்புதல்வனே, குலக்கொழுந்தே, வம்சவிளக்கே என்ற போற்றிகளும் நாமாவளி களும் அடங்கியுள்ளன.

‘திண்டுக்கல் தலையணைகள் சூழப் படுத்திருப்பான் பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணு போல். ‘பொட்டைக் கழுதைக்கென்னடி காலிடுக்கில் தலகாணி’ பிடுங்கிய தலையணைகள் ஆண் சிங்கமாகிய அவனது திருமஞ்சத்தை இதப்படுத்தி ஏறிக்கொள்ளும்.’ என்ற வாக்கியங்களில் ஆணுக்குத் தரப்படும் சிறப்பையும் பெண் அலட்சியப்படுத்தப்படும் இழிவை யும் கோடிட்டுக் காட்டுகிறார். இவ்வாறு வளர்க்கப்பட்ட ஆண், பொறுப்பின்றி தவறுகள் செய்தாலும் அவன் ஏற்றுக்கொள்ளப் படுகிறான். ஆண் செய்யும் குற்றங்கள் கூட அவனது ஆண்மையின், ஆளுமையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றன. இவ்வா றாகக் குடும்ப வன்முறையில் சிக்கிச் சீரழியும் பெண்ணின் நிலை களைப் பல்வேறு கோணங்களிலிருந்து இவரது கதைகள் அலசுகின் றன. குடும்ப வட்டத்தில் சமத்துவம் தேடும் பெண்விடுதலை எழுத்துக்களாக உமா மகேசுவரியின் உள்ளம் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை எந்தப் பெண்ணும் உணராமல் இருக்க முடியாது.

(தொ.க. - தொலைகடல்; அ.வ. - அரளிவனம்; மர-மரப்பாச்சி)

கதைகள்

1. அது (தொ.க)  22. தொலைகடல் (தொ.க.)

2. அம்ருதா (அ.வ)     23. நாற்பது பவுன் நகை (அ.வ.)

3. அரளிவனம் (அ.வ) 24. நிறைவின் உறைதளத்தில் (மர.)

4. அருவி (தொ.க)     25. நெடி (மர.)

5. ஆண் (மர)    26. பயம் (தொ.க.)

6. இறந்தவளின் கடிதம் (மர) 27. புதர்கள் (மர.)

7. இறகு (அ.வ.) 28. பொருள்வயின் உறவு (தொ.க.)

8. என்றைக்கு (தொ.க.)      29. மணற்கன்னி (அ.வ.)

9. ஏகாந்த மரம் (அ.வ.) 30. மணற்குமிழ் (தொ.க.)

10. கண்ணாடிச் சுவடுகள் (அ.வ.)   31. மந்திர மலர் (அ.வ.)

11. கதவு திறக்கும் கணம் (மர.)   32. மரணத்தடம் (மர.)

12. கரு (மர.)    33. மரப்பாச்சி (மர.)

13. கற்கிளிகள் (தொ.க.)     34. மலையேற்றம் (மர.)

14. கன்னிகா (அ.வ.)   35. மழை (தொ.க.)

15. கனகாம்பரத் திரைகள் (அ.வ.)  36. மூடாத ஜன்னல் (தொ.க.)

16. காட்டுச்செடி (அ.வ.) 37. வடு (தொ.க.)

17. காணாத சிமிழ் (தொ.க.)  38. வருகை (மர.)

18. காற்றுக் காலம் (அ.வ.)   39. வீடின்மை (அ.வ.)

19. கூறு (அ.வ.) 40. வேலி (தொ.க.)

20. தற்கொலை (மர.)  41. ரணகள்ளி (மர.)

21. தொலைந்தவன் (மர.)    42. ரோஸ் (தொ.க.)

(கட்டுரையாளர் எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெண்ணிய நோக்கில் தொன்மங்களை ஆய்வுசெய்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார்)

Pin It