சமூகத்தில் தான் பெற்ற பல்வேறு விதமான அனுபவங்களை வாசகர்களிடம் தன் படைப்பின் வழியாகப் பகிர்ந்து கொள்ள விரும்பும் தோப்பில் முகம்மது மீரான் 1970களில் எழுதத் தொடங்கியவர். எந்தத் தர்ம உபதேசமும் செய்வதை நோக்கமாகக் கொண்டிராதவை தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள். 1968இல் வெளியான நரகம் பூமியில் என்னும் சிறுகதையிலிருந்து தொடங்கி இன்று வரை 75க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதி யுள்ளார். இதுவரை அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித்தீவின் வரைபடம், தோப்பில் முகம்மது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும், வேர்களின் பேச்சு ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. வேர்களின் பேச்சு என்னும் தொகுப்பு 1968 முதல் 2009 வரை எழுதப்பட்ட முதல் 75 கதைகளின் தொகுப்பு ஆகும். முந்தைய தொகுப்புகளின் கதைகள் அனைத்தும் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இவருடைய கதைகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி முதலான பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாள மொழியில் இவருடைய கதைகளின் தொகுப்பு அனந்த சயனம் காலனி என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டினம் என்னும் ஊரைச் சேர்ந்த தோப்பில் முகம்மது மீரானின் பெரும்பாலான கதைகள் இந்த ஊரையே கதைக்களமாகக் கொண்டவை. இக்கதை களில் உலவி வரும் கதைமாந்தர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்பக் கால இஸ்லாமியச் சிறுகதைகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கும் அல்லது பிரசங்கிக்கும் தொனியிலானவை. தோப்பிலின் கதைகள் இந்த வகையான தொனியிலிருந்து சற்று மாறுபட்டவை. ஆரம்பத்தில் எழுதிய பெரும்பாலான கதைகள் இஸ்லாமிய இதழ்களில் வெளியானவை என்பதால் அதற்குரிய வரைமுறைகளோடு எழுதப்பட்டுள்ளதாக (2009;7) அவர் குறிப்பிடு கின்றார். 1980களுக்குப் பிற்பட்ட கதைகள் பல்வேறு பொருண்மை களில் எழுதப்பட்டவை.

தோப்பில் முகம்மது மீரான் கதைகள் இஸ்லாமிர்களின் சிக்கல்களை மையமிட்டவை என்று சுருக்கமாகக் கூறிவிடமுடியாது. அவை முதலாளித்துவ சிந்தனைக்கான எதிர்ப்புக்குரலாகவும் உலகமயமாக்கத்தினால் ஏற்படும் சீர்கேடுகளுக்கான கண்டனமாக வும் தலைமுறை இடைவெளியினால் உருவாகும் மனச்சிக்கல்களின் பதிவுகளாகவும் மனித உறவுகளுக்கிடையிலான பல்வேறு அனுபவ முரண்களாகவும் உள்ளன. இஸ்லாம் சமூகம் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பொதுவாக மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று இரண்டு நிலையில் இவர்தம் கதைகளைக் காணலாம்.

இஸ்லாமியச் சமூகத்தில் பல்வேறு படிநிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தோப்பில் முகம்மது மீரான் இம்மக்களை அதிகார வர்க்கத்தினர் என்றும் சாதாரண மக்கள் என்றும் இரு பெரும் எதிர்மைகளுக்குள் நிறுத்துகின்றார். இவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் சில கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவ்வேறுபாட்டினைச் சாதிசார்ந்த மனநிலையில் இவர் சித்திரிக்க வில்லை. ஊர் வழக்குகளில் எந்த ஒரு தீர்மானத்தையும் ஜமாத் என்னும் அமைப்பே விவாதித்து முடிவெடுக்கின்றது. அதற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள், அது வழங்கும் தீர்ப்பே இறுதி யானது. இந்த ஜமாத் அமைப்பில் உறுப்பினர்கள் யார்? அவர்கள் எத்தகைய தகுதிப்பாடு உடையவர்கள் என்பது குறித்து வானவர்கள் செல்லும் இடங்கள் என்னும் கதையில் பேசியுள்ளார். இந்தச் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளும் இந்த அமைப்பினால் கண்காணிக்கப்பட்டு வரும். மீறல்கள் நிகழும் போது அதற்குரிய தண்டனை வழங்கப்படும். இதனை நேர்மையாக செய்கின்றனரா? என்று பார்க்கும்போது பழிவாங்கலுக்கான தருணமாக அல்லது தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான தருணமாக அதைப் பயன்படுத்திக் கொள்வதைத்தான் காணமுடிகின்றது. மேலும் அதிகார வர்க்கம் எவ்வாறு தன் கோர முகங்களை வெளிப்படுத்துகின்றது என்பதைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

இஸ்லாமியத் திருமணங்களில் பெண்ணுக்கு மஹர் (பரிசம்) கொடுத்து மணமுடித்தல் என்பது இயல்பான ஒன்று. மணமகனுக்கு வரதட்சனை கொடுப்பது என்பது சட்டத்தில் இல்லாத ஒன்று. ஆனால் எதார்த்த வாழ்வில் இதற்கு நேர் முரணானதே நிகழ்ந்து வருகின்றது. பெண்ணின் வரதட்சனைக்காகத் தகப்பனார் படும் இன்னல்களைக் குறித்து சில கதைகள் உள்ளன. குடும்ப உறவுகளில் ‘தாய்’ குறித்து பல கதைகளை எழுதியுள்ளார். பெற்ற தாய், வளர்ப்புத் தாய் என்னும் இரண்டு உறவுகளையும் மகன் எதிர்கொள்ளும் விதத்தைத தன் சுய அனுபவப் பகிர்தலாகச் செய்துள்ளார். இஸ்லாம் சமூகத்தில் பலதார மணம் என்பது மிகச் சாதாரணம் என்பது போன்ற தொனி இவர்தம் கதைகளில் உள்ளன. குழந்தைப் பேறின்மை, பெண்ணின் உடல்நிலை பாதிப்பு போன்றவை இத்தகைய மணத்திற்குக் காரணங்களாகக் காட்டப்படுகின்றன. அரபு நாடுகளில் செய்யும் பலதார மணம் வேறு, இங்கு இவர்கள் செய்யும் மணமும் அதற்கான பின்புலமும் வேறு. இதற்கு இஸ்லாமிய மதம் வழிவகுக் கின்றதா அல்லது தங்களது வசதிக்கு இவர்கள் மதத்தைப் பயன் படுத்திக் கொள்கின்றனரா என்பது குறித்து குட்டி ஆடு என்னும் கதை பேசுகின்றது. தன்னுடைய இன்பத்திற்காகப் பல பெண்களை மண முடித்து அவர்களுக்கிடையில் சம உரிமை பாராட்டாமலும் அவர் களின் கருவிற்கு உரிய அங்கீகாரம் வழங்காமலும் மேய்கின்ற ஆண் களைப் பற்றியும் வெளியில் கற்பைப் பற்றிப் பேசிக் கொண்டு உள்ளுக்குள் சபலத்தோடு திரியும் ஆண்களைப் பற்றியும் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

இஸ்லாமியக் குடும்பம் என்றாலே வீட்டிற்கு ஒருவன் வெளி நாட்டில் வேலை பார்ப்பவனாக இருப்பான் என்பது பொதுப்புத்தி யாக உள்ளது. ஒருவகையில் இது எதார்த்தமாக இருந்தாலும் அதுதான் வாழ்க்கையின் நோக்கமாகக் கருதும் அளவிற்கு மோகத்திற்குரிய ஒன்றாக இன்று மாறிவிட்டிருப்பதைத் தன் கதைகளில் குறிப்பிட் டுள்ளார். வெளிநாட்டு சோப்பில் ஒருமுறையாவது குளித்துவிட வேண்டும் என்பது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளும் அளவிற்கு அது ஒரு சொர்க்க பூமியாகக் கனவு காணப்படுவதைக் காட்டியுள்ளார்.

இஸ்லாம் சமூகத்திற்குள் உள்ள சிக்கல்களைப் பேசும் முகம்மது மீரான் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய பல்வேறு சிக்கல்களைப் பற்றி யும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று உலகமயமாக்கம். பிற்காலத்து எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இக்கருத்தினை மையமிட்ட வையாக இருந்தன. தன்னுடைய அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்கும் விஷக்கிருமியாக உலகமயமாக்கச் சிந்தனை உருப்பெற்று வருவதைச் சித்திரிக்கின்றார். கிராம வளங்கள் அழிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முளைப்பதையும் தொழில்நுட்பங்களால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் மிஸ்டர் மார்டின் என்னும் கதை விவரிக்கின்றது. கிராமங்கள் நகரமயமாக்கப்படுவது வெளிப்புறப் பாதிப்பினை மட்டும் ஏற்படுத்துவதில்லை. அது உள்ளார்ந்த மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. நகரங்களுக்குச் சென்று வேலை பார்த்து அலுத்து தன்னுடைய சொந்த கிராமத்திற்கு ஓடி வரும்போது தன்னுடைய கிராமம் உலகமயமாக் கத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதைக் காணும் மக்களின் மனநிலை யினை மிக எதார்த்தமாகப் பல கதைகளில் பதிவு செய்துள்ளார். கிராமங்களில் கூட்டு வாழ்க்கையினில் பழக்கப்பட்டு நகரங்களுக்கு வேலை செய்யப் போகும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. அந்தவகையில் நகரம் என்பது உண்மையில் நரகமாக ஏமாளிகளை எதிர்நோக்கி வாய்பிளந்து கிடக்கும் பெரு முதலைகள் உள்ள பகுதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தோப்பில் கதைகளில் உள்ள நகரவாசிகள் மனித உறவுகளை மதிக்கத் தெரியாத சுயநலக்காரர் களாகவே ஊருக்குள் உலவி வருகின்றனர்.

தோப்பில் கதைகளில் தலைமுறை இடைவெளி மிகப் பெரிய சிக்கலாகக் காட்டப்படுகின்றது. அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம் ஆகியவை இத்தகைய இடைவெளிகளைக் கூட்டுவதில் முனைப்புடன் செயல்படுகின்றன.

தோப்பில் கதைகளில் ஆண்-பெண் உறவுகள் பற்றிய கதைகள் சுவாரஸ்யமானவை. பால்ய காலத்தில் அல்லது வாலிப காலத்தில் ரசிக்கும் பெண்பற்றிய சிந்தனையோடு வாழும் ஆண்கள் பல கதைகளில் உள்ளனர். அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அப் பெண்ணின் மீதான ஈர்ப்புடன் தன் வாழ்நாள் முழுதும் அவளைத் தேடுவதும் அவள் நினைப்பில் கிடந்து உழல்வதுமான ஆண்களாக உள்ளனர்.

தோப்பில் கதைகளில் நாட்டார் மரபு சார்ந்த கூறுகள் மிகுந்து கிடக்கின்றன. இஸ்லாமியர்களுக்கான நாட்டார் மரபாக அவற்றை விளக்க முடியும். தர்கா கலாச்சாரம் குறித்தும் அதை ஒட்டிய மக்கள் பண்பாட்டினையும் கதைகளில் விளக்குகின்றார். நாட்டார் கதைகள் எவ்வாறு உருப்பெருகின்றன என்பதைக் கேள்வியின் விளிம்பில் என்னும் கதையில் தெளிவாகக் காட்டியுள்ளார். சமயப் பெரியவர் களின் அடக்கத்தலம் தர்காவாக வழிபாட்டிற்குரிய இடமாக மாற்றப்படுகிறது. அவர்கள் மீது அதீதப் புனைவுகள் கட்டப்படு கின்றன. அந்த இடம் சிறு வியாபாரத் தலமாக மாற்றப்படுகின்றது. தர்கா மீதுள்ள புனிதம் காக்கப்படும் வரை அந்த இடமும் அதைச் சுற்றியுள்ள வியாபாரமும் செழித்து வளருகின்றது. இவை நம்பகத் திற்கானவையா என்பதை விட எத்தகைய தன்மைத்தானவை என்பதைத் தன் கதை வழிச் சித்திரிக்கின்றார். இதைப் போல மாந்திரிகம் சார்ந்த நிகழ்வுகளையும் கதைகளாக்கியுள்ளார். முன்னோர்களின் இரண்டாவது நல்லடக்கம், பண்டமாற்று முதலிய கதைகள் இந்த அடிப்படையிலானவை. மரணம் பற்றிய பலகதைகள் உள்ளன. இவற்றில் வான தூதர்கள், மரணத்திற்குப் பின்பு அவர்கள் செய்யும் செயல்கள், மனிதன் இறந்த பின்பு என்ன ஆகிறான் முதலியவற்றைக் கதை நிகழ்வுகளாகக் காட்டியுள்ளார்.

தோப்பில் முகம்மது மீரான் கதைகளை ஒட்டு மொத்தமாக வாசிக்கும் போது அவற்றினுள் பல ஊடுருவல்கள் காணப்படு கின்றன. ஒரு கதை இன்னொரு கதையில் இழைந்துள்ளது. ஏணி, பிறப்பின் விசித்திரம், களியோடக்கா முதலிய கதைகள் ஒன்றன் தொடர்ச்சியாக ஒன்று அமைந்துள்ளது. தோப்பிலின் மொழி வட்டார வழக்குடையதாக உள்ளது. இதைக் குறித்து “மீரானுக்கு மொழினா அதை விட்டறனும். அதுல இலக்கணம் பார்க்காதீங்க. மரபு பார்க்கா தீங்க. சொல் பாக்காதீங்க. தமிழான்னு பாக்காதீங்க. இது மீரானோட மொழி. இது இப்படித்தான் இருக்கும் நெனச்சிட்டு படிங்க அதான் நல்லது” என்று தோப்பில் முகம்மது மீரான் தன்னுடைய படைப்புக்கான மொழி குறித்துக் குறிப்பிடுகின்றார். எனவே எதை எழுத வேண்டும் எந்த மொழியில் எழுத வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கைச் சூழலே தீர்மானிக்கின்றது. தன்னுடைய படைப்பிற்கான நோக்கம் பற்றிக் கூறும்போது “சமூகத்திலேர்ந்து எந்த விதமான அனுபவங்களைப் பெற்றேனோ அதே அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுத்து அவங்களும் அந்த அனுபவத்தைப் பெறச் செய்றேன். அதே நோக்கம்தான் என்னுடைய நாவல்கள் வழியாக நான் செய்றது. நாவல் வழியாக எந்த தர்ம உபதேசங்களும் செய்ய நான் வரலே. என்னுடைய நாவலை வாசித்து சமூகம் முன்னேறும்டு எதிர்பார்ப்பும் எனக்கு இல்லே” என்று தோப்பில் முகம்மது மீரான் குறிப்பிடுவதிலிருந்து அவர்தம் படைப்புக்களுக்கான தளத்தை நம்மால் விளங்கிக் கொள்ளமுடியும்.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.

“சங்க இலக்கியப் பிரதிகள்வழி அறியலாகும் பண்டைத் தமிழ்ச் சமூக அமைப்பு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It