ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற நிலப்பகுதியில், தக்காணம் என அறியப் படும் பகுதி வட இந்தியப் பகுதிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது. இப்பகுதியின் வட்டார வரலாறு, பழங்குடிகள் வரலாறு, வம்சாவளிகள் வரலாறு, சமயங்களின் வரலாறு ஆகியவற்றைக் கண்டறி வதற்கான தரவுகளைக் களஆய்வின் மூலம் தொகுத்தவர் மெக்கன்சி.

இராணுவ அதிகாரி, நில அளவையாளர், ஆராய்ச்சியாளர் எனும் பல்பரிமாணங்களில் செயல்பட்ட இம் மனிதர் 1783-1821 ஆகிய காலப்பகுதியில் சேகரித்தத் தரவுகளின் முக்கியத்துவம் இவ்வளவு காலம் அறியப்படாமல் இருந்தது. இப்போது அவை குறித்தப் பல்பரிமாண ஆய்வுகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. தக்காணப் பீட பூமியின் இன வரைவியல், மற்றும் வட்டார வரலாறு, பழங் குடிகள் வரலாறு, கட்டடக்கலை வரலாறு, ஓவிய வரலாறு ஆகியவற்றுக்கு மெக்கன்சி தரவுகளே முதன்மை ஆதாரங்களாகக் கருதப் படும் சூழல் உருவாகியுள்ளது. இத்தருணத்தில் மாற்றுவெளி அவர் குறித்தச் சிறப்பிதழை வெளியிடுகிறது.

வரலாற்றுப் போக்கில் மெக்கன்சி தொகுப்பு களோடு தொடர்புடைய சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி (1812-1854) மற்றும் இராபர்ட் புரூஸ் ஃபுட் (1834-1912) ஆய்வுகளை யும் கவனப்படுத்தியுள்ளோம்.

மெக்கென்சி குழுவினரால் வரைந்து தொகுக் கப்பட்ட ஓவியங்கள் சில இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இவை தற்போது பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

இச்சிறப்பிதழின் அழைப்பாசிரியர் தே.சிவகணேஷ் அவர்களுக்கு மாற்றுவெளி நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறது. அவரின் அயராத உழைப்பில் இவ்விதழ் உருவாகியுள்ளது. அவருக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

Pin It