மெக்கன்சி குறித்த இன்றைய புரிதல் குறித்த உரையாடல்

இந்தியாவின் நில அளவைத் துறையின் முதல் தலைவ ரான மெக்கன்சி தாம் கண்ட கட்டடக் கலை சார்ந்த முக்கிய மான கட்டங்கள் அனைத்தையும் வரைந்தார். அது நாள்வரை இந்தியா அறிந்திராத ஓவியங்களையும் ஓலைச் சுவடிகளை யும் சேகரிப்பதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆனால் அவர் எழுத முயன்ற வெகுசில கட்டுரை களும் அரைகுறையாகவே இருந்தன. அவரிடம் இருந்த அறிவுக் களஞ்சியத்தில் பத்தில் ஒன்பது பங்கு அவருடனேயே மரித்துவிட்டது.

-ஜேம்ஸ்ஃபெர்குசன்,1876

1799இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். 1858இல் இந்தியா என்ற நிலத்தின் பெரும்பகுதி பிரித்தானிய அரசியின் ஆதிக்கத்திற்குட் பட்டது என அறிவிக்கப்பட்டது. 1947இல் ஆட்சி அதிகாரம் கைமாறியது. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர்களின் ஊடாட்டம் இந்நிலப்பகுதியில் இருந்தாலும், சுமார் 150 ஆண்டு களில் ஐரோப்பியர்கள் உருவாக்கிய கல்வி ஆய்வு மற்றும் நிர்வாகம் தொடர்பான நிறுவனங்கள், இந்த மண்ணில் இருந்த அறியப்படாத பலவற்றை அறியும் வாய்ப்பை உருவாக்கியது. ஐரோப்பிய மண்ணில் உருவான புத்தொளி மரபின் வளங்களை இந்த மண்ணிற் கும் மடைமாற்றம் செய்தனர். ஆட்சி அதிகாரம் மற்றும் சமயப் பரப்பல் நோக்கில் நிகழ்ந்த இச்செயல்களால், ‘இந்தியா’ என்ற பகுதியின் பல்வகைப் பரிமாணங்கள் புரிந்து கொள்ளப்பட்டன.

ஐரோப்பியப் புத்தொளி மரபால் உந்துதல் பெற்ற அந்த நிலப் பகுதியின் இளைஞர்கள் பலர் கீழைத்தேயத்தைக் கண்டுபிடிப் பதில் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தனர். அவ்வகை ஆர்வம், சமயப் பரப்பல் அனைத்து தரப்பு வரலாறுகளையும் மீள்கட்டமைப்பு செய்தல் எனும் செயல்களின் வழியாக வெளிப்பட்டது. அவர்கள் பாதிரியார்களாகவும் ஆட்சி செய்யும் அதிகாரிகளாகவும் ஆராய்ச்சி யாளர்களாகவும் இம்மண்ணில் செயல்புரிந்தனர். இவை ஒருவகை யான அதிகாரச் செயல்பாடுகளே. அறிதல் எனும் செயல் அதிகாரத் தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிகாரத்தின்வழி உருவான அறிவுசார், புலமைசார் செயல்களை, விளைவுகளை இன்று நமது கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளும் தேவை உருவாகி யுள்ளது. இந்தப் பின்புலத்தில் கர்னல் காலின் மெக்கன்சி குறித்தப் புரிதலுக்கு முயற்சி செய்வோம்.

-           மெக்கன்சி எனும் நில அளவையாளர் - இராணுவவீரர் - ஆட்சி யாளர் குறித்து உரையாடல் நிகழ்த்தவேண்டிய தேவை உருவாகியுள்ளதா? ஆம் எனில் அதற்கான தர்க்கங்கள் எவையெவை?

-           மெக்கன்சியின் தொகுப்புகள் மறுஆய்வுக்கு உட்படும் சூழலில் தமிழியல் ஆய்வில் அதற்கான இடத்தை எப்படி வரையறை செய்து கொள்வது?

-           மெக்கன்சி குறித்து அண்மைக்காலங்களில் நிகழ்த்தப்படும் ஆய்வுகளின் வளங்களை எவ்வகையில் உள்வாங்குவது?

-           மெக்கென்சியை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியச் சமூகம் எவ்வகையில் எதிர்கொண்டது? தமிழ்ச்சமூக எதிர்கொள்ளல் எவ்வகையில் நிகழ்த்தப்பட்டது?

-           மெக்கன்சி தொகுப்புக்களின் இன்றைய நிலை என்ன? மெக்கன்சி தொகுப்புகள்சார் அருங்காட்சியகம் ஒன்றை நமது சூழல் உருவாக்குமா?

நவீன வரலாற்று மானிடவியலில் நிலம் மிக முதன்மையான குறியீடு. நிலம் என்பது அறியப்படாது இருந்த காலத்திலிருந்து, அதற்கு ஓர் அடையாளம் கொடுக்கப்படும் காலம் வரையிலான வரலாறு நமக்குத் தேவைப்படுகிறது. பொது என்ற நிலைமாறி தனிப்பட்டவர் சொத்து எனும் அதிகாரச் செயல் நிலம் சார்ந்து நடைபெற்றது. இந்தச் செயல் நடைபெறும் காலத்தில் அதன் அளவு; எல்லை, பரப்பு எனும் கோணங்களில் மதிப்பீடு செய்யப்படுகிறது. தொடக்ககாலத் தமிழ் நிலப்பரப்பில் ‘நாடுகள்’ எனும் பண்பாட்டு அடையாளம், வட்டாரம் சார்ந்து அடையாளப்படுத்தப்பட்டது. கொங்குநாடு, நடுநாடு, தொண்டை மண்டலம் என்பவற்றை இதற்கான எடுத்துக்காட்டாகக் கூறலாம். வட்டார அடையாளம் என்பது அரச அதிகார ஆட்சியில், குறிப்பிட்ட அரசர்களின் எல்லை களாகக் கட்டமைக்கப்பட்டன. அந்த எல்லைகளைக் கடப்பது, அபகரிப்பது, அதிகாரம் செலுத்துவது என்பது நடைமுறையில் இருந்தது.

பிற்காலச் சோழர் காலத்திற்குச் சற்று முன்பு, நாடு, கோட்டம், மண்டலம், ஊர் எனும் அடையாளங்கள் உருவாக்கப் பட்டன. இக்காலத்திலும் நிலத்தை அளந்து பிரித்ததாக அறிய முடியாது. ஊக எல்லைகள் இருந்தன. பிரித்தானிய அரசு உருவாக் கத்தில் தான் நிலம் அளக்கப்பட்டது. எல்லைகளை வரைபடங்களாக வரைதல் தொடங்கியது. ஐரோப்பிய சமூகத்தில் நிகழ்ந்த நில அளவையை இங்கும் நடைமுறைப்படுத்தினர். இவ்வகையான நில அளவையின் முதன்மையான நபராக மெக்கன்சி செயல் படுகிறார். கீழைத்தேயக் கணக்கியலைப் படிக்க வந்தவர்; போர் வீரராக நின்று நாடுகளை வெற்றி கொண்டதால் (திப்புசுல்தான் முறியடிப்பில் முக்கியப் பங்காற்றியவர் மெக்கன்சி) நிலங்களை அளவு செய்து, பிரித்தானிய அரசுக்குக் கொடுக்கும் வேலை வழங்கப்பட்டது.

நிலத்தோடு அவருக்கு உருவான உறவு, நிலத்தில் இருப்பவைகள் எல்லாம் குறித்தப் பதிவாகவும் மாறிப்போனது. நிலத்தை வெறும் யாந்திரிகமாகப் பார்க்காமல், அதில் இருந்த/ இருக்கும் அனைத்துத் தன்மைகளையும் ஆவணப்படுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார். நிலத்தை ஓர் உயிர்ப்பொருளாகப் புரிந்து கொண்ட கணித ஆர்வமுள்ள இளைஞன் மெக்கன்சி. முப்பது வயதுள்ள கணித ஆர்வமுள்ள இளைஞன் நிலத்தை அளக்கும் கணித முறையை நடைமுறைப்படுத்தியதோடு, நிலத்தில் இருப்பதையும் பதிவு செய்யத் தொடங்கினார் என்று கருதமுடியும். இவர் காலத்தில், கீழைத்தேய மண்ணைப் பதிவு செய்ய முயன்றவர்கள் இங்கிருந்த உயிரினங்கள் குறித்து அக்கறை செலுத்தியபோது (எ-டு பல்வேறு பழங்குடிகள், இனங்கள் பற்றிய பதிவுகள்) உயிரற்ற நிலத்தில் இருக்கும் பொருள்களைப் பதிவு செய்யமுயன்ற மெக்கன்சியின் அணுகுமுறை வேறானது. நிலத்தை அதில் இருக்கும் பொருள்க ளோடு கணக்கிடும் அதிகாரச் செயல்பாட்டில் கைதேர்ந்த வல்லுநராக மெக்கன்சியைப் புரிந்து கொள்ளலாம். எனவே நில அளவை யாளனாக, நிலத்தை உயிர்ப்பொருளாகக் கட்டமைக்க மேற்கொண்ட செயலை அவரின் தனித்தன்மையாகக் கருதலாம்.

உருவாக்கப் பட்டவை அழிந்து போவது இயல்பு. உருவாக்கப்பட்டவற்றின் எச்சங்களையும் சமகால நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம், ஐரோப்பியப் புத்தொளி தந்த பயிற்சியால் மெக்கன்சிக்குச் சாத்தியமானது. மிக விரிந்து பரந்த இவ்வகையான நிகழ்வை, அந்த நபருக்குக் கிடைத்த அதிகாரம்/செல்வாக்கு/பணவளம் சார்ந்து நடைமுறைப்படுத்த முடிந்திருக்கின்றது. இது வேறு எவராலும் கைக்கொள்ளப்படாத அரிய செயலாகவும் வடிவம் பெற்றிருப்பதை, இன்றைய சூழலில் மதிப்பிடும்போது அதன் பிரம்மாண்டம் பெரும் வியப்பிற்குள் நம்மை ஆழ்த்துகிறது. ஆம்... மெக்கன்சியின் செயல்கள் மந்திர தந்திர தன்மைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டிய தன்மையைக் கொண்டிருப்பதாகக் கருதலாம். இவற்றின் தற்காலத் தர்க்கம் என்பது விளிம்புநிலைப் பதிவுகள், அடிநிலைப் பதிவுகள், வட்டாரப் பதிவுகள், அதிகாரப் பதிவுகள் எனும் பல்வேறு கூறுகளில் அமைகிறது. வட்டாரம் சார்ந்த இனவரைவியல் முதன்மைப்படும் இன்றைய சூழலில், மெக்கன்சி பதிவுகளுக்குப் புதிய பொருள் உருவாகியுள்ளது. இதனால் மெக்கன்சி உழைப்பு வீண்போகவில்லை எனும் நிகழ்வும் ஒருபுறம் உருவாகிறது. எனவே, மெக்கன்சி தொகுப்புகளை மேற்குறித்தத் தர்க்கப் போக்கில் புரிந்துகொள்ள, அதற்கான ஆவண உருவாக்கம் தேவைப்படுகிறது. அதற்கான சிறிய அளவிலான முயற்சியாக இவ்விதழைக் கருதலாம்.

*******

பேராசிரியர் சுப்பராயலு அவர்களுடன், மெக்கன்சி சிறப்பிதழ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, சுவையான தகவல் ஒன்றைப் பரிமாறிக் கொண்டார். அரசினர் கீழைத்தேய சுவடிகள் நூலகத்தில்(GOML) தற்போது இடம்பெற்றிருக்கும் மெக்கன்சி தொகுப்பு களைக் குறித்துச் சென்னைப் பல்கலைக்காக அன்றைய வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் (மிகவும் சிரத்தையாகத் தமிழ்ச்சூழலில் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டவர்கள்) எப்படிக் கருதினார்கள் என்பதை இச்செய்தி சொல்லுகிறது. “மெக்கன்சி சேகரிப்புகளை மேசைமீது கிடத்திவிட்டு மேலே இருக்கும் மின்விசிறியைப் போடுவது, காற்றில் அடித்துக் கொண்டு போனதை விட்டு விட்டு எஞ்சியவற்றை எடுத்துக் கொள்வோம்” என்று கூறியதாக அப்போது அங்கு ஆய்வாளராக இருந்த பேரா. சுப்பராயலு கூறினார்.

இந்தக் கூற்றை மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ள பொருட்களின் பௌதிகத் தன்மை மற்றும் அதன் தகுதிப்பாடு ஆகியவை சார்ந்து புரிந்து கொள்ளவேண்டும். கண்டதைப் படித்தால் பண்டிதனாவான் என்பதைப் போல கண்டதை எல்லாம் மெக்கன்சி தொகுத்திருக்கிறார். இது வரலாற்றுப் பேராசிரியர்களின் அன்றைய முறையியலில் கேளிக்கையாகப் பட்டதை நாம் தவறாகப் புரிந்து கொள்ள இயலாது. வரலாற்றுத் தரவுகள் குறித்து அன்றைய பேராசிரியர்கள்/ ஆய்வா ளர்கள் கொண்டிருந்த மனப்பதிவைப் புரிந்து கொள்ள இத்தகவல் உதவுகிறது. இருந்தாலும் மெக்கன்சி சேகரிப்புகளுக்கான அட்டவணைகள் தமிழ்ச்சூழலில் இந்தக் காலத்தில்தான் உருவானது. எச்.எச்.வில்சன் (1828), வில்லியம் டெய்லர் (1857-62) ஆகியோர் உருவாக்கிய அட்டவணைகளை அடிப்படையாகக் கொண்டு பேரா.தி.வை.மகாலிங்கம் அவர்களும் மெக்கன்சியின் வரலாறு சார்ந்த சுவடிகளுக்கான அட்டவணையை (1972) உருவாக்கினார். இப்போது அதன் மறு அச்சை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது (2011).

மெக்கன்சி தொகுத்த கல்வெட்டுகளைத் தென்னிந்திய கோயிற் சாசனங்கள் எனும் நூலில் திரு தி.நா.சுப்பிர மணியம் ஆவணப்படுத்தியுள்ளார். அவர்தரும் குறிப்பு பின்வருமாறு அமைகிறது. ‘மெக்கன்சியின் உதவியாளர்கள், அவர்கள் தொகுத்த கல்வெட்டுகள் அனைத்திற்கும் பட்டியல் உருவாக்கியுள்ளனர். எங்கு படி எடுக்கப்பட்டது? கல்வெட்டுகளில் காணப்படும் கொடை யாளிகள் யார்? கல்வெட்டின் மொழி, கல்வெட்டின் எழுத்து வடிவம், ஆண்டு, சுருக்கமான பொருட்குறிப்பு ஆகியவற்றையும் அவர்கள் தொகுத்துள்ளார்கள். மிகப்பெரிய தொகுதிகளாக அவை உள்ளன’ (1955:பாகம்:3:பகுதி:1) என்று குறிப்பிட்டு அப்பட்டியலையும் இந்நூலில் இணைத்துள்ளார். இவ்வகையில் பேராசிரியர் தி.வை. மகாலிங்கம் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் தி.நா.சுப்பிரமணியம் ஆகியோர் மெக்கன்சி தொகுப்புகளை ஆவணப்படுத்துவதைத் தமிழ்ச்சூழலில் மேற்கொண்டார்கள். வட்டாரம் சார்ந்த சுவடிகளைத் திரு.சு.சௌந்திரபாண்டியன் (1997-99) பின்னர் ஆவணப்படுத்தியுள் ளார்.

தமிழ்ச்சூழலில் ஆவணப்படுத்தல் நிகழ்ந்த அளவிற்கு அது குறித்த ஆய்வு நிகழவில்லை. விரிவான ஆய்வுகள் நிகழ்த்த வாய்ப்பிருந்தும் அது நிகழவில்லை. தமிழியல் ஆய்வில் பண்பாட்டு வரலாற்று அணுகுமுறைகள் பெரிதும் பின்தங்கிய சூழல் உருப் பெற்றுள்ளது. கல்வெட்டு, சுவடி ஆகிய பிற ஆவணங்கள் தமிழ் மாணவர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்தும் தமிழ்க்கல்விச் சூழலும் இல்லை; எனவே வரலாறும் தமிழும் இணைந்த ஆய்வு களை எதிர்பார்க்கும் மனநிலை பேராசையாகவே அமைந்து போகிறது. மெக்கன்சி பற்றிய ஆய்வில் தமிழ்ச்சூழல் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்பதைக் குறியீடாகக் காட்டும் வகையில் இவ்விதழைக் கருதலாம்.

*******

மெக்கன்சியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் அண்மை யில் ஆங்கிலத்தில் வளமாக வெளிவந்திருப்பதைக் காண்கிறோம். அவை இக்கட்டுரையின் இறுதியில் உள்ள ஆதார நூற்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மெக்கன்சி தொடர்பான இவ்வாய்வுகளைச் சுருக்கமாகத் தொகுத்துக்கொள்வோம்.

-           நிக்கோலஸ் பி.டர்க்ஸ் (2001) தனது “சாதிய மனம்” (Castes of Mind) எனும் நூலில் மரபு - பிரதி - ஆவணம் - தன் வரலாறு எனும் போக்கில், மெக்கன்சியின் தொகுப்புகள் குறித்து ஒருகட்டுரை (Chapter) எழுதியுள்ளார். (அக்கட்டுரை இவ் விதழில் இரெ.மிதிலா அவர்களால் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது). ஆவணங்கள் மரபுகளைப் புரிந்து கொள்ளும் பிரதிகளாக எவ்வாறு அமைகின்றன? என்பதையும் அவ் வாவணங்கள் தம்மைபற்றிக் கூறிக்கொள்ளும் கதையை அல்லது ஆவணங்களுக்குள் உள்ள குரலை அல்லது மௌனத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்பது தொடர்பான உரையாடலைச் செய்துள்ளார்.

-           தாமஸ் ஆர்.டிரவுட்மன் (2009) தனது சென்னைக் கீழைத்தேயப் பள்ளி (Madras School of Orientalism) என்னும் நூலில் மெக்கன்சி குறித்த நிக்கோலஸ் பி. டர்க்ஸ் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிபர் ஒவ்ஸ் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இவ்விரு ஆய்வாளர்களும் இத்தொகுதியில் தமது கட்டுரைகளை இடம்பெறச் செய்வதன் மூலம், கீழைத்தேயம் சார்ந்த புலமைத்துவத்தை மெக்கன்சி வழியாக வெளிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். (இத்தன்மை குறித்து இவ்விதழின் அழைப்பாசிரியர் கட்டுரை இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.)

-           ஜெனிபர் ஒவ்ஸ் (2010) ‘மெக்கன்சியின் ஆய்வுகளும் தொடக்க கால இந்தியக் காலனியமும்’ எனும் பொருளில் விரிவான ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இந்நூல், மெக்கன்சியின் சேகரிப்புகள் வழி அறியப்படும் ஹைதராபாத் நிசாம் நிலப்பகுதியின் நிலஅளவை, கீழைத்தேய ஆய்வு மரபு, கோயில்கள், மகாபலிபுரம் மற்றும் மெக்கன்சியின் நில அளவைகள் குறித்த ஆய்வைப் பேசியுள்ளது.

-           இரமா சுந்தரி மண்டேனா(2012) “இந்தியாவின் நவீன வரலாற்று வரைவின் தொடக்கம்” (Modern Historiography) என்பதை மெக்கன்சி சேகரிப்புகளை அடிப்படைத் தரவாகக் கொண்டு ஆய்வுசெய்துள்ளார். பழமை இயல் மற்றும் மொழிநூல் ஆகிய பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மெக்கன்சி சேகரிப்பின் பல்பரிமாணங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். மெக்கன்சி தரவுகள் சார்ந்த இவ்வாய்வு, மெக்கன்சியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. நவீன வரலாற்று வரைவிற்கான தரவுகளை மெக்கன்சி மூலம் பெற்று, வரலாறு கட்டமைத்தல், வரலாற்றைத் தேடல், மெக்கன்சி செயல்பாடுகளில் காவளி சகோதர்கள் பங்களிப்பு, தெலுங்கு இயல் வரலாற்றுக்கு மெக்கன்சி பங்களிப்பு எனும் பொருண்மைகளில் வெளிவந்தள்ள நூல், மெக்கன்சியைப் புதிதாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

மேற்குறித்த ஆய்வுகள் அனைத்தும் இருபத்தோராம் நூற்றாண் டின் தொடக்கத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண் டின் தொடக்கத்தில் மறைந்துபோன மெக்கன்சி (1821) சுமார் இருநூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர்ப்புடன் கண்டெடுக்கப் படுகிறார். இந்நிகழ்வு, அவருடைய சேகரிப்புகளின் ‘நவீனத்துவ உயிர்ப்பை’க் காட்டுவதாகக் கருதலாம். எதுவும் எப்போதும் அழிந்து விடுவதில்லை; காலம் எதையும் எப்போதும் புதிதுபுதிதாக வெளிக் கொண்டுவரும் என்பதற்கு மெக்கன்சி சேகரிப்புகள் அரிய சான்றாக அமைகிறது. இந்தப் போக்கில் தமிழ்ச்சூழலும் இணைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையாக இச்சிறப்பிதழைக் கருதலாம்.

*********

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கால மற்றும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கால சேகரிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அட்டவணைப்படுத்தும் பணியை ஐரோப்பியச் சமூகம் செய்தது. ஆனால் அவை முழுநிறைவாக நடை பெற்றதாகக் கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தமிழ்ச்சூழலில் மெக்கன்சி சேகரிப்புகள் ஆவணப்படுத் தப்பட்டன. அவை குறித்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அளவில், தமிழ்ச்சூழலில் இல்லை என்பதை முன்னரே பதிவு செய்துள்ளேன். இப்போது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் மெக்கன்சி குறித்துப் புதிய புலமைத் தளத்தில் ஆய்வுகளை வெளிப்படுத்தும் போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ற உரையாடல் அவசியமாகும். நம் சூழலில் மெக்கன்சி எப்படி இருக்கிறார்? என்பதைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

-           மெக்கன்சியின் கல்வெட்டுக்களை ‘தென்னிந்திய கோயிற் சாசனங்கள்’ எனும் பெயரில் பதிப்பித்த ஆய்வாளர் தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் நூல் எந்த நூலகத்திலும் முழுமையாக இல்லை (சென்னை நகரில்). ஒவ்வொரு தொகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. அந்நூலின் மறுஅச்சும் சாத்தியப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

-           அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் கிடத்தப்பட்டுள்ள மெக்கன்சியின் தொகுப்புகள்; அந்நூலகமே வெளியிட்டுள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தேடுவோர்க்கு அரிதில் கிடைப்பதாக இல்லை. அதன் முக்கியத்துவம் தெரிந்த அலுவலர்கள் இல்லை. வயது முதிர்ச்சி எனும் அரசாங்க வழி சார்ந்து, ஆய்வு நிறுவனங்களுக்கு எவ்விதமான புலமைத்துவ பயிற்சி மற்றும் அறிவு அற்றவர்கள் தலைமைப் பொறுப்பில், நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்ச் சூழலின் அவலங்களில் ஒன்று இது. அவர்களால் மெக்கன்சி தொகுப்புகள் காப்பாற்றப்படுவதைவிட அழிக்கப்படும் அல்லது அழிந்துபோகச்செய்யும் செயல் சிறப்பாக நடை முறைப்படுத்தப்படுகிறது. இதனைக் கண்டு மனம்நொந்து, சோர்ந்து போவதை விட வேறு எந்த வழியும் தென்பட வில்லை; ஆரவார அரசியல் வாதிகளின் தலையீட்டால் இவ்வகையான அவலங்கள் தமிழ்ச்சூழலில் நிலையாக உருப்பெற்றுவிட்டது. புலமைத்தளம் என்பதை ‘வெகுசனத் தன்மை’யாகப் புரிந்து கொண்ட தமிழக அரசியல்வாதி ஒருவரால் உருப்பெற்ற இந்த அவலத்திற்கு மாற்று இருப்பதாகப் படவில்லை. வாழ்க தமிழ்ப் புலமைத்தளம்

இன்றைய சூழலில் மெக்கன்சி தொகுப்புக்களை அடிப்படை யாகக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. பேராசைதான் என்னசெய்வது? லண்டன், கல்கத்தா, சென்னை ஆகிய மூன்று இடங்களில் உள்ள மெக்கன்சி சேகரிப்புகள் ஓர் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு “தக்காண பீடபூமி மற்றும் இந்தியாவின் கிழக்குப்பகுதி – ஜாவா” சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றை எதிர்காலச் சமூகம் உருவாக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

ஆதார நூல்கள்

1. Nicholas B.Dirks Caste of Mind - Colonialisom and Making of Modern India, Princeton and Oxford 2001

2. Thomas. R. Trautmann - The Madras School of orientalism – Producing Knowledge in Colonial South India, Oxford University Press, 2011

3. Jennifer Howes - Illustrating India; The Early colonial investigations of Colin Mackenzie (1784-1821), Oxford, 2010

4. Rama Sundari Mantena - The orgins of Modern historicgraphy in India - Antiquarianism and philology 1780-1880, Palgrave, Mac Millan

5. Wilson.H.H. - Mackenzie collection, A Descriptive Catalogue of the oriental Manuscripts and other articles, Vol.I, II, Asiatic Society, 1828

6. Taylor. William - A Catalogue Raisonne of Oriental Manuscripts – I (1857), II (1860), III  (1861), Madras

7. Mahalingam.T.V. - Mackenzie Manuscripts Vol.I, University of Madras, 2011

8. தி.நா.சுப்பிரமணியன் - தென்னிந்திய கோயிற் சாசனங்கள் 3 தொகுதிகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, 1957.

Pin It