சில ஆண்டுகளுக்கு முன் சுவடிப் பட்டயத் தேர்வுக்காக ஒரு சுவடியைப் பதிப்பிக்க வேண்டிய நிலையில் சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திற்குள் நுழைந்தேன். நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பரந்த அளவிலான சுவடிகள் பெரும் வியப்பை என்னுள் ஏற்படுத்தியது. அந்நூலகத்தின் வரலாறு குறித்து அறிய முற்பட்டபோது அது காலின் மெக்கன்சி என்ற ஐரோப்பியர் தொகுத்த ஆவணங்களை மூலாதா ரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்ற செய்தி அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான தூண்டுதலைக் கொடுத்தது.

இந்நிலையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள வெவ்வேறு ஆய்வுக்களங்களில் பயணித்த நிலையில் இறுதியாகக் காலின் மெக்கன்சியின் ஆவணங்களில் ஆய்வினை மேற்கொள்வது என்ற நிலைப்பாட்டை எடுத்தேன். இதற்கு எல்லா வகையிலும் என்னுடைய நெறியாளர் பேரா. வீ.அரசு அவர்கள் ஊக்கத்தினைக் கொடுத்தார்கள்.மேலும் அவர் 19ஆம் நூற்றாண்டின் தமிழியல் வரலாறு குறித்து நிகழ்த்தும் விரிவான உரையாடல் என்னுடைய ஆய்வுப் பொருண்மைக்கு மிகுவலிமை சேர்ப்பதாய் அமைந்தது.

காலின் மெக்கன்சி கிழக்கிந்தியப் படையின் பொறியாளராக, நில அளவையாளராகப் பணியாற்றித் தன்னார்வத்தின் அடிப்படையில் பல இந்திய உதவியாளர்களின் துணையுடன் தென்னிந்தியப் பகுதி முழுமைக்கும் பயணித்து கல்வெட்டுகள், சுவடிகள், செப்பேடுகள், ஓவியங்கள், தொல்பொருட்கள் உள்ளிட்ட பலவகைப்பட்ட ஆவணங்களைத் தொகுத்திருக்கிறார். இந்த ஆவணங்கள் தொடக்கத் தில் ஆர்வத்தின் அடிப்படையிலும் பிறகு தென்னிந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் நோக்கோடும் அவரால் தொகுக்கப்பட்டவை.

தென்னிந்திய மரபு வட இந்திய மரபிலிருந்து விலகித் தனித்த அடையாளத்தோடு செயல்படக்கூடியது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்கிய மெக்கன்சி அதனை நிறுவும் வகையிலான ஆவணங்களை முப்பதாண்டு காலம் தொகுத்திருக்கிறார். இவ் வாவணங்களைக் கொண்டு தென்னிந்திய வரலாற்றைக் கட்டமைக்க நினைத்த மெக்கன்சியின் எண்ணம் அவருடைய மரணம் காரணமாக ஈடேறவில்லை.

இவ்வாறு மெக்கன்சியால் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பிறகு எந்த அளவிற்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? அவை தென் னிந்திய வரலாறெழுதியலுக்கு வகித்த பங்கு எத்தகையவை? அவ் வாவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றனவா? பதிப்பிக்கப் பட்ட ஆவணங்கள் சரியாகத்தான் பதிப்பிக்கப்பட்டனவா? அதன் வரலாற்றுத் தேவையும் இன்றையத் தேவையும் உணரப்பட்டதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலையே சொல்லவேண்டியிருக்கும். இது தமிழ்ச்சூழலின் அவலம். ஆனால் மெக்கன்சி தொகுத்த ஆவணங்களின் ஒரு பகுதி பிரித்தானியர்களால் இலண்டனுக்கு அனுப்பப்பட்டு பிரிட்டிஷ் நூலகத்தில் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு அத்தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு தாமஸ் டிரவுட்மன், நிகோலஸ் பி டர்க்ஸ், ஜெனிபர் ஒவ்ஸ், ரமா மண்டேனா போன்ற ஐரோப்பிய ஆய்வாளர்களால் தென்னிந்தியவியலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு நூல்கள் வெளியிடப்படுகின்றன. தமிழில் தி.நா.சுப்பிர மணியன், தி.வை.மகாலிங்கம் ஆகியோர் கவனம் செலுத்தியதோடு சரி, அவர்களுக்குப் பின்னர் அம்முயற்சி தொடரவில்லை.

15-19ஆம் நூற்றாண்டு வரைக்குமான தென்னிந்திய மக்களின் பண்பாட்டுக் கூறுகளின் பதிவுகளை மெக்கன்சி ஆவணங்கள் கொண்டுள்ளன. அவற்றுள் சமணர்கள் மற்றும் பழங்குடிகள் குறித்த பதிவுகள் மிக முக்கியமானவை. தமிழில் பழங்குடிகள் குறித்து வெளியான ஆய்வொன்றில் மெக்கன்சி சுவடிகள் அதன் முக்கியத் துவம் அறியாமல் பயன்படுத்தப்பட்டு சுவடிகள் திரிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. காட்டாக, குறும்பர் வரலாறு என்னும் சுவடியில் “குறும்பர் யாதவ வமுசத்தைப் பத்தினவர்களென்று சொல்லி குறும்ப இடையரென்று அழைக்கப்படுகிறார்கள்.அவாள் சைவ மதத்திலாவது வைஷ்ணுவ மதத்திலாவது இன்னும் மத்தவளது தீய மதத்திலாவது சேர்ந்தவர்களல்ல. குறும்பருடைய மாற்கம் முழுதும் பிரத்தியேகமாக இருக்கப்பட்டது...” என உள்ளது.

இப்பதிவு ஆய்வு நூலில் “குறும்பர்கள் யாதவ வகுப்பைச் சேர்ந்த வர்களல்ல என்று கூறி குறும்ப இடையர் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சைவ மதத்திலோ வைணவ மதத்திலோ சேர்ந்தவர் களாவார்கள்” என்று ஒரு பழங்குடி இனத்துக்கான மிகமுக்கிய அடையாளத்தைச் சிதைக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே ஒரு சன்னியாசி குறும்பர் சரித்திரம் என்னும் சுவடியில் குறும்பர்கள் “....பிராமணாளையும் அவாள் மதத்துக்குள் பட்டிருந்த சூத்திராளையும் பிறகணித்து கொடுமைப்படுத்தினார்கள்” என்று உள்ளது.இப்பதிவு ஆய்வு நூலில் “...இவாள் பிறும் கைவிரல்..... அவாள் மதத்துக்குள்பட்டிருந்த சூத்திராளையும் பிறக்கணித்துக் கொடுமைப்படுத்தினார்கள்” என்று மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பழங்குடி இனம் பிராமணர்களைக் கொடுமைப்படுத்தி யிருக்கிறது என்ற பதிவு சமூக வரலாற்றில் மிகமுக்கியமானது”. “பிராமணாளை” என்று மிகத்தெளிவாக உள்ள வார்த்தை “பிறும் கைவிரல்” என்று திரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் குறித்து விரிவாகப் பதிவு செய்யமுடியும்.

எனினும் இன்றைய நிலையில் சில பழங்குடி இன மக்களுக்கும் பிறருக்கும் மெக்கன்சி ஆவணங்களே முதன்மை எழுத்து ஆவணங் களாக அமைய வாய்ப்பிருக்கிறது.சில பழங்குடியின மக்களுக்கு இனப்பெயர் பிரச்சனை காரணமாகப் பழங்குடியினர் என்னும் சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை.அதற்காகப் போராட்டங்கள் நடந்துவரும் சூழலில் மேற்காணும் வகையிலான ஆய்வுகள் அம்மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.இவ்வாறாகத் தமிழில் வெளிவந்துள்ள மெக்கன்சி தொடர்பான நூல்களில் ஏராளமான இடர்களைச் சுட்டிக்காட்ட முடியும். தமிழ்ச்சூழலில் பழைய ஆவணங்களைக் கையாள்வதில் உள்ள சிரத்தையற்ற தன்மையையே மேற்கண்ட போக்கு காட்டுகிறது.இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது.மெக்கன்சி ஆவணங்களைச் சமகாலத் தேவை குறித்த புரிதலோடு அணுக வேண்டியதன் அவசியம் மிகுதியாக இருப்பதையே இது உணர்த்துகிறது.

மெக்கன்சி மக்களிடையே நிலவிய வாய்மொழி மரபுகளின் மீதும் பண்பாட்டுக் கூறுகளின் மீதும் கவனம் செலுத்தி அவற்றைப் பதிவு செய்யும் முறையைக் கையாண்டிருக்கிறார். இத்தொகுப்பு முறை அவர் காலத்திலும் பிறகும் இனவரைவியல்சார் அற்ப விஷயங்கள் என்றும் எண்ணில் அடங்காத விசித்திரமான வரலாற்றுக் கதைகளின் தொகுப்பு என்றும் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டன.அதனால் அவரின் ஆவணங்கள் ஆய்வாளர்களால் பெரிதாகக் கண்டுகொள்ளப் படவில்லை. ஆனால் இன்றைய ஆய்வுச் சூழலில் குறிப்பாக இனவரைவியல் சார்ந்த வரலாற்று ஆய்வுகளில் மெக்கன்சி கவனம் செலுத்தித் தொகுத்த ஆவண வகைமாதிரிகளே பிரதானமாகக் கருதப்படுகின்றன.

இந்நிலையில் மெக்கன்சி குறித்தும் அவர் தொகுத்த ஆவணங்கள் குறித்தும் குறைந்தபட்ச அளவிலாவது அறிமுகப்படுத்தவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. மெக்கன்சியின் ஆவண வகைகள் ஒவ்வொன்றின் மீதும் விரிவான ஆய்வு நிகழ்த்தவேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் 15-19ஆம் நூற்றாண்டு வரைக்குமான வேறுபட்ட வரலாற்றை அறிவிக்கக்கூடியதாய் அந்த ஆவணங்கள் உள்ளன.

என்னுடைய தேவையற்ற நிதானத்தின் காரணமாகவே இச் சிறப்பிதழ் காலதாமதமாய் வெளிவருகிறது.இவ்விதழின் கட்டுரை யாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி. அவ்வப்போது இவ்விதழ் குறித்துப் பேசிய வ.கீதா, இரா.கமலக்கண்ணன், கு.கலைவாணன், மு.தேவராஜ், அ.மாலதி ஆகியோருக்கு நன்றி உரியது. குறிப்பாக ஐரோப்பியர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு 18,19ஆம் நூற்றாண்டு களில் வெளியான ஆகச்சிறந்த நூல்களையெல்லாம் மின்நூல்களாக வழங்கும் கூகுள் நிறுவனத்திற்கும் மெக்கன்சி தொகுத்த ஒரு பகுதி ஆவணங்களைச் சிறப்பாகப் பாதுகாத்து வரும் பிரிட்டிஷ் நூலகத் திற்கும் இவ்விதழ் உருவாக அனைத்து நிலைகளிலும் உழைத்த பேரா.வீ.அரசு அவர்களுக்கும் வெறும் நன்றியை மட்டும் சொல்லி முடிக்க முடியாது.                                                                       

- தே.சிவகணேஷ்

Pin It