காலின் மெக்கன்சி 1782இல் தன் 29ஆவது வயதில் கிழக்கிந்திய கம்பெனியில் நில அளவைப் பொறியாளர் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் 1821இல் கல்கத்தாவில் காலஞ்சென்ற நாள் வரை ஏறக்குறைய 39ஆண்டுகள் இந்தியாவில் கழித்தார். இதில் பெரும்பகுதி தென்னிந்தியாவில் பழைய மைசூர் மாநிலம், ஆந்திராவில் ராயல சீமை (பழைய ஹைதராபாத் நிஜாம் பகுதி), தமிழ்நாடு (சென்னை மாகாணம்) ஆகிய பகுதிகளில் நில அளவைத் துறை சார்பான பணிக்காகப் பரவலாகப் பல இடங்களுக்குச் சென்று வந்தார். இவர் கண்காணிப்பில் செய்த நில அளவையும் நிலப்படங்களும் (maps) மிகச் சிறப்பாக மதிப்பிடப்பட்டதன் காரணமாக 1810இல் சென்னை மாகாணத்தில் தலைமை நில அளவையாளராகவும் (Surveyor General) 1815இல் கல்கத்தாவில் இந்தியத் தலைமை நில அளவையாள ராகவும் அமர்த்தப்பட்டார்.

பணித் தொடக்க முதல் இந்த நாட்டின் பழமையை அறிந்து கொள்ளப் பேரார்வம் கொண்டிருந்தார். முதலில் இந்தியப் பராம்பரிய கணித அறிவைப் பற்றி செய்திகள் திரட்ட முனைந்த அவர் விரைவில் பல்வேறுபட்ட செய்திகளையும் அறிய முற்பட்டார். அவருக்கு முன்பும் சமகாலத்திலும் பலர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருந் தனர். இந்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் நன்கு புரிந்து கொண்டாலே தங்கள் அரசியல் ஆதிக்கத்தைத் திறம்படச் செய்ய முடியும் என்ற நோக்கம் எல்லா ஆங்கிலேயர் மனத்திலும் இருந்தது. மெக்கென்சியின் கருத்தும் அதுவே. ஆனால் போகப்போகப் பண்டைச் செய்திகளையும் பொருள்களையும் திரட்டுவதில் இவர் காட்டிய ஆர்வம் அளவு கடந்ததாக இருந்தது. அதை ஒரு வெறியென்று கூடச் சொல்லலாம். தன் சொந்த முயற்சியால் சொந்தச் செலவில் பல உள்நாட்டு உதவியாளர்கள் உதவியுடன் இவர் செய்த தொகுப்பு மிகப் பெரியது என்று கருதப்படுகிறது.

அதைப்பற்றிய ஒரு குறிப்பு வருமாறு: இலக்கியச் சுவடிகள் 1568, வட்டார ஆவணங்கள் 2070, கல்வெட்டுகள் 8076, மொழி பெயர்ப்புகள் 2159, பழங்கட்டட நிலவரை படங்கள் 79, பல்வேறு வரைபடங்களும், ஓவியங்களும் 2630, காசுகள் 6000, சிலைகள் 145. இத்தொகுப்பை இவர் இறப்புக்குப்பின் கம்பெனி அரசு ஒருவிலை கொடுத்து வாங்கி ஒருபகுதியை இலண்டன் இந்திய அலுவலக நூலகத்திலும் ஒரு பகுதியைக் கல்கத்தாவிலும் இன்னொரு பகுதியைச் சென்னையிலும் வைத்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தது. இத் தொகுப்பைப் பயன்படுத்தி ‘Ancient Hindu Manners, Geography and History‚ (பழம் இந்தியப் பண்பாடு, நிலவியல் மற்றும் வரலாறு) என்ற நூலை எழுதவேண்டுமென்று மெக்கென்சி கொண்டிருந்த எண்ணம் கடைசிவரை ஈடேறவில்லை. ஓரிரு கட்டுரைகள் மட்டும் எழுதினார். இறுதிவரை தேடுவது, சேர்ப்பது என்றே இருந்து விட்டார். அவற்றை வகைபடுத்தி முறைபடுத்தி அட்டவணை செய்யக் கூட நேரம் இல்லை. இத்தொகுப்புக்கு எச்.எச்.வில்சன் மற்றும் வில்லியம் டெய்லர் ஆகியோர் செய்த அட்டவணைகள் முழுமையானவை யென்று சொல்லமுடியாது.

mahabalipuram_beach_temple_640

கடற்கரை கோவில், மாமல்லபுரம், 1784

டி.வி.மகாலிங்கம் வரலாற்று ஆவணங்கள் பற்றிச் செய்ய அட்டவணை இரு தொகுதி களாகச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இத் தொகுப்பைச் சேர்ந்த இலக்கியச் சுவடிகளை சி.பி.பிரவுன் பின்னால் நிறையப் பயன்படுத்தியுள்ளார். சில வரலாறு, சமூகம், தொடர்பான ஆவணங்களையும் தமிழ் கல்வெட்டுகளையும் சென்னைக் கீழ்த் திசைச் சுவடி நூலகம் வெளியிட்டுள்ளது. தெலுங்குக் கல்வெட்டு களில் சிலவற்றையும் வேறுசில வட்டார, ஊர் ஆவணங்களை ஆந்திர மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இவ் வெளியீடுகள் மூலமாகவும், வெளியிடப்படாத சில ஆவணங் களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களிலிருந்தும் மெக்கென்சி தொகுப்பை ஓரளவு அறிந்து மதிப்பிடலாம். முழுமை யாகப் புரிந்து கொள்ள இன்னும் பல ஆய்வுகளும் வெளியீடுகளும் தேவை.

காலனி ஆதிக்கச் சூழலை மறந்துவிட்டு நடுநிலையோடு பார்த்தால் மெக்கென்சி தொகுப்பு இந்தியப் பழம்மரபு வரலாற்றைப் பற்றிய பல செய்திகளை ஆவணப்படுத்திக் காப்பாற்றியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பொதுவாக நம் பழம் சமூகங் களில் எழுத்தறிவு குறைவு, அதுவும் சில குறுகலான வட்டங்களுக் குள் இருந்தது. ஆகவே பெரும்பாலான வரலாற்றுச் சமூகச் செய்திகளை செவிவழியாகவே அறிய முடியும். அவையும் காலப் போக்கில் திரிந்து மறைந்து விடும். ஆகவே 17-19ஆம் நூற்றாண்டு களில் ஐரோப்பியர் இங்கு தொகுத்து ஆவணப்படுத்திய செய்திகள் பெரிதும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் மெக்கன்சி தொகுப்பு விலை மதிப்பற்ற ஒன்றாகும்.

ஒரு வகையில் தென்னிந்தியத் தொல்லியல் ஆய்வில் மெக்கன்சி முன்னோடியாக இருந்தார். பல தொல்லியல் நிலைகளைக் கண்டறிந்து நிலப்படங்கள் வரைபடங்கள் மூலம் அவற்றை ஆவணப்படுத்தினார். காட்டாக, உலகப் புகழ்பெற்ற புத்தமத நிலையமான அமராவதி இன்று தொல்லியலாருக்கு மிகப் பழகிப்போன ஒன்று. பல முறை அங்கு அகழாய்வுகள் மேற்கொண் டதன் பயனை இன்று அனுபவிக்கிறோம். ஆனால் முதன்முதல் இதன் முக்கியத்துவத்தைத் தம் நேர்த்தியான நில அளவை மூலம் நிலவரைபடங்கள் செய்து வெளி உலகுக்கு உணர்த்தியவர் மெக்கென்சி.

அதே போலப் பல கோட்டைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றுள் பல இன்று மிக அழிந்த நிலையில் உள்ளன என்று குறிப்பிட வேண்டும். பெருங்கற்படை நிலைகளைக் கண்டறிந்து அவற்றைப் பற்றிய பல வட்டார மரபுகளைக் குறித்துள்ளார்.

எழுத்தாவணங்களில் வம்சாவளிகள், ஊர்கள் பற்றிய தண்ட கவிலை, கைஃபீயத்து போன்றவை தொழில் பேட்டைகளைப் பற்றிய கணக்கு வழக்குகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. அக்காலக் குறுநில அரசுகளான பாளையக்காரர் குடும்பங்களைப் பற்றிய

வரலாற்றாவணங்கள் வம்சாவளிகளாகும். இவை பல செவிவழிச் செய்திகள் இன்று கிடைத்துள்ள கல்வெட்டறிவு மூலம் உண்மை யென்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த வம்சாவளிகள் 15ஆம் நூற்றாண்டு தொடங்கி வரும் நிலமானிய வரலாற்றுக்குப் பெரிதும் துணைசெய்யும். சில அரிய பொருளியல் தொடர்பான ஊர்க் கணக்குகள் இத்தொகுப்பில் அடங்கும். காட்டாக, கர்நூல் மாவட்டம் ஆலம்கொண்ட என்ற நகரம் 1563இல் எப்படி திகழ்ந்தது என்பது பற்றி ஒரு நீண்ட தொழில் புள்ளி விவரப்பட்டியலைக் குறிப்பிடலாம். அதைத் தம் விஜயநகர வரலாற்றில் பர்டன் ஸ்டெயின் மிக உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் வெளியிட்டுள்ள சில பாளையப்பட்டு வம்சாவளிகள், வட்டார வரலாறுகள், இடங்கை வலங்கை பற்றிய சமூக ஆவணம் ஆகியவற்றைப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். மற்ற வரலாற்று மூலங்கள் தராத பல செய்திகளை இவை தருகின்றன. சில செய்திகள் தெரிந்த சான்றுகளுக்குத் துணைசெய்யும் அல்லது வேறுகோணத்தைக் காட்டும். தி.நா.சுப்பிரமணியன் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட தென்னிந்தியக் கோயில் சாஸனங்கள் தொகுதி சுமார் ஆயிரம் தமிழ்க்கல்வெட்டுகளைக் கொண் டுள்ளது. ஆசிரியர் கருத்துப்படி இவற்றுள் 30 விழுக்காடு வேறு யாரும் கண்டறியாத புதிய கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகள் சார்ந்து ஒரு குறையுண்டு. மெக்கன்சி உதவியாளர்கள் மூலம் கல்வெட்டுகளைப் படித்து மூலபாடத்தை அப்படியே தராமல் தங்களுடைய பேச்சு வழக்கு மொழியில் கொடுத்துள்ளார்கள். ஆகவே பாடத்தில் பல குறை யுண்டு. இருப்பினும் செய்திகளை வேறு கல்வெட்டுகள் துணையுடன் பயன்படுத்த முடியும்.

மெக்கென்சி போன்றோர் பெருமுயற்சியுடன் தொகுத்துத் தந்துள்ள ஆவணங்களைப் பலவகையாகப் பயன்படுத்தலாம். ஆனால் முதலில் இவ்வாவணங்களை உரிய வகையில் காப்பாற்றுவது முக்கியக் கடமையாக அரசு நிறுவனங் களும் மற்றவர்களும் கருத வேண்டும். உண்மையில் இக்கடமையை நாம் உணர்கிறோமா என்பது ஒரு கேள்விக்குறி. உலகில் வளர்ந்த நாடுகளிலும் சரி, வளரும் நாடுகளிலும் சரி, ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியன நாட்டின் பண்பாட்டுக் கருவூலங் களாகப் போற்றப்படுகின்றன. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம். ஆகவே, மெக்கென்சி போன்ற பல பெருமக்கள் முயற்சி வெளிச்சத்துக்கு வரப் பல ஆண்டுகள் செல்லும் என்பது உறுதி.

துணைநூற் பட்டியல்

Stein, Burton, The New Cambridge History of India I.2: Vijayanagara, Cambridge University Press, New Delhi, 2000.

Paddayya, K., ‘Colonel Colin Mackenzie and the Discovery of the Amaravati Site’, Deccan Studies, vol. III, no. 1 (2005) pp. 28–32.

Dirks, Nicholas B., Castes of Mind: Colonialism and the Making of Modern India, Permanent Black, New Delhi, 2004.

Pin It