ஐரோப்பியர்களுடைய வருகைக்குப் பிறகு இந்தியச் சூழலில் உருப்பெற்ற புலமைத்துவ செயல்பாடுகள் பலவற்றுள் மொழி, இனம், வரலாறு குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் இந்தியா குறித்த பல்முனைபட்ட புரிதலுக்கு இடம் கொடுத்தன. ஐரோப்பா வில் மொழி - இனம் குறித்த ஆய்வுகள் 18ஆம் நூற்றாண்டு அளவில் முகிழத் தொடங்கி அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்ற கருத்தாக்கம் வலுப்பெறத் தொடங்கியது. இச்சூழலில் ஐரோப்பிய ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவலான பொழுது உலக மொழிகள் குறித்த அறிவைப் பெற்றனர். பல்வேறு மொழிகளுக் கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்து மொழிக் குடும்பங்களை வரையறை செய்தனர். இந்தியாவில் ஆசியக் கழகத்தை உருவாக்கிய வில்லியம் ஜோன்ஸால் ஐரோப்பிய-ஈரானிய மொழிகளுக்கும், சமஸ்கிருதத்துக்கும் இடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் முன்வைக்கப்பட்டது. மேலும், சமஸ்கிருத மொழியை அடிப்படை யாகக் கொண்ட ஒற்றைப் பண்பாட்டுத் தளத்தில் இந்தியா இயங்கிக் கொண்டிருக்கிறது. சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையில் கல்கத்தா வின் ஆசியக் கழகக் கீழைத் தேயவியலார் செயல்பட்டனர்.

அமராவதி சிற்பம், 1798இந்நிலையில், ஆசியக் கழகத்தில் உறுப்பினர்களாகத் திகழ்ந்த காலின் மெக்கன்சி, எல்லிஸ் ஆகியோர் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை பண்பாட்டுத் தளத்தில் இந்தியா இயங்கவில்லை, தென்னிந்திய மொழி வரலாறு உள்ளிட்டக் கூறுகள் ஆசியக் கழகம் முன்வைக்கும் கருத்தாக்கத்திற்கு வேறுபட்டதாய் இருக்கிறது என்ற சிந்தனையைப் பெறுகின்றனர். வட இந்திய - ஆரிய மரபுக்கு மாற்றான தென்னிந்திய திராவிட மரபு முன்வைக்கப் பட்டு இதனை நிறுவும் வகையிலான செயல்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. தென்னிந்தியாவை மையப்படுத்தி முகிழ்ந்து புதிய சிந்தனைக்கு வழிவகுத்த இவ்வறிவுச் செயல் பாட்டைச் சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி (The Madras School of Orientalism) என தாமஸ் டிரவுட்மன் குறிப்பிடுகிறார்.

சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி என்னும் கருத்தாக்கம் உருப்பெறுவதற்கு 19ம் நூற்றாண்டின் தொடக் கத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு அறிவார்ந்த திட்டங்களே காரணமாய் அமைந்தன. முதலாவது திட்டம் காலின் மெக்கன்சி மற்றும் அவரின் இந்திய உதவியாளர் களால் தென்னிந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்காக வணத் தொகுப்புகளை உருவாக்கும் திட்டம். இரண்டாவது எல்லிஸால் உருவாக் கப்பட்ட ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் மூலமாக தென்னிந்திய மொழிகள் குறித்த அறிவுச் செழுமையை உருவாக்கும் திட்டம் (2009,1) இந்த இரண்டு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டதன் விளைவாக தென்னிந்தியா குறித்த புதிய அறிவு உருவாக்கம் பெற்றது. இவ்வறிவு இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வினைபுரிந்து கொண்டிருக்கின்றன.

காலின் மெக்கன்சி மற்றும் எல்லிஸால் முன்னெடுக் கப்பட்ட இவ்விரு திட்டங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய அதே வேளையில் தனித்தனி நிலையில் செயல்படுகிற திட்டங்களாக அமைந்துள்ளன. மெக்கன்சியின் திட்டம் தென்னிந்திய வரலாறு குறித்ததாகவும், எல்லிஸின் திட்டம் தென்னிந்திய மொழிகள் குறித்ததாகவும் அமைந்துள்ளன. மேலும், சமகாலத்தில் வாழ்ந்த இவ்விருவரும் நெருங்கிய தொடர்பு கொண்டு தங்களுடைய அறிவுச் செயல்பாட்டிற்காக கருத்துக் களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு செயல்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. தற்கால தமிழ்ச் சூழலில் எல்லீஸ் குறித்து பரவலாக அறியப்பட்ட அளவிற்கு காலின் மெக்கன்சி குறித்து அறியப்படவில்லை.

மேலும், எல்லீஸால் மொழியப்பட்டு கால்டு வெல்லால் விரிவாக முன்னெடுக்கப்பட்ட திராவிட மொழிக் குடும்பம் என்னும் சிந்தனை தொடர்ச்சியாக வலுப்பெற்று உறுதியடைந்திருக்கிறது. ஆனால், காலின் மெக்கன்சி கவனம் செலுத்திய தென்னிந்திய வரலாற்று முன்னெடுப்பு தொடர்ச்சியாக வளர்த் தெடுக்கப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. இந்தியத் தளத்தில் வட இந்திய வரலாறு பெறுகிற முக்கியத்துவத்தை தென்னிந்திய வரலாறு இன்றைக்கு பெறுவதில்லை. இச்சூழலில் தென்னிந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களைத் தொகுத்த காலின் மெக்கன்சி குறித்து உரையாடுவது அவசியத் தேவை யாகவே அமையும். இக்கட்டுரை மெக்கன்சி மற்றும் எல்லீஸூக்கு இடையேயான உறவு, திராவிடச் சான்று மற்றும் தென்னிந்திய வரலாறு குறித்த மெக்கன்சியின் கருத்தாக்கம் மற்றும் மெக்கன்சியின் இந்திய உதவி யாளர்கள் குறித்த உரையாடலுக்கு உட்படுத்துகிறது.

காலின் மெக்கன்சி - எல்லீஸ் தொடர்பு

தென்னிந்தியவியலை முதன்மைப்படுத்திய சென்னை கீழைத் தேயவியல் பள்ளிக்கான திட்டங்களை செயல்படுத்திய காலின் மெக்கன்சி மற்றும் எல்லீஸ் கி.பி.1802க்கு முன்பாகவே அறிந்திருக் கிறார்கள். எல்லீஸூக்கு சங்கர சாஸ்திரியை (சங்கரய்யா) மெக்கன்சி தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். (2009, 13) இந்நிகழ்வு தொடக்கம் இருவரும் கடைசி வரை தொடர்பில் இருந்திருக்கிறார்கள். எல்லீஸூக்கு மெக்கன்சி அறிமுகப்படுத்திய சங்கரய்யா சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்திருக்கிறார். தெலுங்கு பிராமணரான இவர், காலனிய நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். எல்லீஸ் கும்பகோணம் மற்றும் சென்னை யில் இருந்தபோது அவரின் தலைமைப் பணியாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் முதல் பட்டதாரியான இவர், சிறிதுகாலம் ஆங்கிலத் தலைமை யாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், எல்லீஸின் திராவிடச் சான்று கருத்துருவாக்கத்திற்கு மிக முக்கியப் பங்காற்றிய வராகவும், அது தொடர்பாக எல்லீஸூடன் விரிவாக உரையாடல் நிகழ்த்தியவதாகவும் சங்கரய்யா அறியப்படுகிறார். (2006, 104).

எல்லீஸை அடையாளப்படுத்தும் திராவிட சான்று கருத்தாக்கம் உருப்பெறுவதற்கு உறுதுணையாய் விளங்கிய சங்கரய்யாவை மெக்கன்சிதான் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மெக்கன்சி மற்றும் எல்லீஸூக்கு இடையேயான அறிவுப்பகிர்வு குறித்து தாமஸ் டிரவுட்மன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். பெரிதும் மதிக்கவேண்டிய மெக்கன்சி மற்றும் அவரின் இந்திய உதவி யாளர்கள் செய்த பணியின்மீது எனக்கிருந்த தவறான அணுகுமுறை மற்றும் மதிப்பீட்டிலிருந்து தற்போது நான் விலகியிருக்கிறேன். எல்லீஸ் மற்றும் கல்லூரியின் தலைமை ஆசிரியர்கள் குறித்து நான் ஆராய்ந்தபோது அந்த ஆராய்ச்சியின் பல்வேறு இழைகள் மெக்கன்சி யின் ஆவணத் தொகுப்புகளை நோக்கி சென்றடைவதை அறிந்தேன். எனவே, மெக்கன்சி தொகுப்பின் மீதான என்னுடைய மனமாற்றம் படிப்படியாக நிகழ்ந்தது. மேலும், எல்லீஸ் எழுதிய பல கடிதங்களை நான் மீட்டெடுத்து வாசித்தபோது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அது, எல்லீஸூம் மெக்கன்சியும் தொடர்பிலிருந்து தங்களுடைய ஆய்வுகளுக்கான சிந்தனைகளையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லீஸின் கடிதங்கள் தெளிவு படுத்துகின்றன. மேலும், இருவருடைய திட்டங்கள் இணைந்து தென்னிந்தியாவுக்கான புதிய அறிவுச் சூழலை உருவாக்கியிருக்கும் போக்கைக் கண்டு நான் பாராட்டும் நிலையை அடைந்திருக்கிறேன். (2009, 14) என்று பதிவு செய்திருப்பது இருவருக்குமான அறிவு உறவினை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. எல்லீஸின் கடிதங்கள் அனைத்தும் வெளிப்படும்போது இருவருக்குமான உறவு நிலை குறித்த விரிவான புரிதலைப் பெற முடியும்.

மெக்கன்சி தொகுத்த ஓவியங்கள் மீதான ஆய்வினை தொடர்ச்சி யாக மேற்கொண்டுவரும் ஜெனிபர் ஓவ்ஸ் மெக்கன்சிக்கும் எல்லீஸூக்கும் இடையே நிகழ்ந்த புலமைத்துவ உறவு குறித்து பின்வருமாறு பதிவு செய்கிறார்.

மெக்கன்சி தொகுத்த ஓவியங்கள் மற்றும் பிற ஆவணங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்திய தொல் எழுத்துகளின் உண்மை உருவின் மாதிரிகள் அடங்கிய தொகுப்பு என்று தலைப்பிடப் பட்டுள்ள மெக்கன்சியின் ஓவியத் தொகுதிகளில் உள்ள ஒரு மாதிரி ஓவியம் எல்லீஸூக்கு சொந்தமான செப்பேட்டில் உள்ள ஓவிய மாகும். ஜான் நியூமென் என்கிற மெக்கன்சியின் உதவியாளர் 2.9.1809 அன்று அதனை பிரதி செய்திருக்கிறார். மேலும், மெக்கன்சியும் எல்லீஸூம் ஒரே மாதிரியான ஆவணங்களைச் சேகரித்து அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் விளக்கப்பட் டிருக்கிறது. மேலும், மெக்கன்சி கணிசமான அளவில் செப்பேடு களை சென்னையில் தொகுத்திருந்தார். அச்செப்பேடுகள் அனைத்தும் எல்லீஸிடமும் இருக்க வேண்டுமென்று மார்க் வில்க்ஸ் தனது தென்னிந்திய வரலாறு வரைவியல் நூலில் குறிப்பிடுவதாக ஓவ்ஸ் பதிவு செய்கிறார். மேலும், எல்லீஸிடமுள்ள செப்பேடுகளை நியூமன் என்கிற தனது உதவியாளர்தான் பிரதி செய்ய வேண்டு மென்று முடிவு செய்து மெக்கன்சி பிரதி செய்கிறார். இந்நிகழ்வே மெக்கன்சி மற்றும் எல்லீஸ் ஆகிய இரண்டு அறிஞர்களுக்கு இடையேயான உறவினை உண்டாக்கியது என்றும் ஜெனிபர் ஓவ்ஸ் பதிவு செய்கிறார்.

சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை மொழி பெயர்ப்பு செய்வதில் இந்தியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற தங்களின் பார்வையை இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி அவர்களுக்கு இடையே நிகழ்ந்த கடிதத் தொடர்புவழி அறிய முடிகிறது. கி.பி. 1806ல் எல்லீஸ் கும்பகோணத்தில் நீதிபதியாக இருந்தபொழுது மெக்கன்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத் தில் அறிவார்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்படும் மொழி பெயர்ப் புகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று தன்னுடைய கருத்தினை எல்லீஸ் தெரிவிக்கிறார். குறிப்பாக ஆங்கிலேய மற்றும் இந்திய அறிஞர்களை ஒன்றுசேர்க்க வேண்டும் என்கிற தன் ஆலோசனையை முன்வைக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலமாக சமஸ்கிருதம் மற்றும் தமிழில் உள்ள இலக்கிய வகைமைகளின் மொழிபெயர்ப்புகளை மிக எளிதாக மொழிபெயர்த்து சேகரிக்க முடியும் என குறிப்பிடு கிறார். மேலும், மொழிபெயர்ப்பாளர் களுக்கான பள்ளியை எவ்வாறு உருவாக்கி கட்டமைப்பது என்பது குறித்தும் அதற்கான நிதியாதாரங்களை பெருக்குவது, ஆசிரியர்களுக் கான மாத சம்பளத்தை வழங்குவது, மொழி பெயர்ப்புப் பணியினை மேற்பார்வையிடுவது உள்ளிட்ட விரிவான திட்டத்தை அக் கடிதத்தின்வழ மெக்கன்சிக்கு தெரிவிக்கிறார்.

எல்லீஸ் தான் வகுத்த கொள்கையின் வழியாக இந்தியர்கள் செழுமையான ஆங்கில இலக்கண அறிவுடன் ஐரோப்பியர்களுடன் இணைந்து தென்னிந்திய பிரதிகள் மற்றும் கல்வெட்டுகளை மொழிபெயர்க்க முடியும் என்று பதிவு செய்கிறார். இது அவரால் 1812இல் உருவாக்கப்பட்ட ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் மொழி ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சியாகவும் முன்னோட்ட மாகவும் அமைந்தது என்று கருத இடமிருக்கிறது. கி.பி.1790களின் இடைக்காலம் தொடங்கி மெக்கன்சியிடம் வெங்கட்ட போரியா போன்ற ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த இந்தியர்கள் மொழி பெயர்ப்புப் பணியாற்றினர். போரியா தன்னுடைய 14 முதல் 18 வயது வரைக்குமான காலத்தில் மிகப்பரவலாக ஆங்கிலமொழியில் கற்றார். மேலும், அவர் குறைகாண முடியாத அளவுக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுதக்கூடியவராக இருந்தார். இத்தகைய ஈடுபாடு உள்ள கல்வி கற்ற அறிவார்ந்த மொழிபெயர்ப்பாளரை மெக்கன்சி பெற்றிருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மெக்கன்சி பணியாற்றியதைக் கண்ட எல்லீஸ் தனது பள்ளி உருவாக்க திட்டம் குறித்து மெக்கன்சியிடம் ஆலோசனை செய்ய நினைத்திருக் கிறார். அநேகமாய் 1806ல் எல்லீஸ் தனது திட்டம் குறித்து மெக்கன்சிக்கு கடிதம் எழுதுவதற்கு இதுவே உந்துதலாய் அமைந் திருக்க முடியும்.

மெக்கன்சியும் தனது ஆய்வு குறித்து சென்னைக் கீழைத்தேயப் பள்ளியுடன் தொடர்புடைய பிறருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு 1803ல் மெக்கன்சி, எல்லீஸ் மற்றும் தாமஸ் ஸ்டிரேஞ் ஆகியோருடன் மகாபலிபுரத்திற்கு மேற்கொண்ட பயணம் குறித்து ஜான் லெய்டன் செய்யும் பதிவு சான்றாகிறது. 1803 அளவில் மெக்கன்சி போரியா மற்றும் லட்சுமய்யாவுடன் மகாபலிபுரத்தில் மிக விரிவான அளவில் பரப்பாய்வை மேற்கொண்டிருந்த நிலையில் மேற்கண்ட ஆளுமைகளை மெக்கன்சி அழைத்துச் சென்று மகாபலிபுரம் குறித்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார். (2009, 82) மேலும், எல்லீஸை பொறுத்த அளவில் அவரும் மெக்கன்சியும் மகாபலிபுரத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது என்ற கருத்து நிலையை நிரூபிப்பதில் ஆர்வமாய் இருந்திருக்கின்றனர். ஆனால், கடலுக்கு அடியில் உள்ளவற்றை வெளிப்படுத்துவதில் மேற் கொண்ட முயற்சியில் இருவரும் தோல்வியுற்றனர் என்று பாபிங்டன் பதிவு செய்கிறார். (1869, 49) மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் மெக்கன்சிக்கும் எல்லீஸூக்கும் இடையேயான உறவு, சென்னைக் கீழைத்தேயவியல் பள்ளி உருவாக்கம் பெறுவ தற்கு இருவரும் தங்களுடைய திட்டங்களின் வழியாக அறிவுப் பகிர்வை நிகழ்த்தியிருப்பது அறிய முடிகிறது.

திராவிடச் சான்று : மெக்கன்சியின் கருத்தாக்கம்

நடுகல், தும்கூர்தமிழ்ச்சூழலில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்தான் திராவிடக் கருத்தாக்கத்தை முன்மொழிந்தார் என்ற வாதம் மறுக்கப்பட்டு எல்லீஸின் திராவிடச் சான்றுதான் கால்டுவெல் லின் ஒப்பிலக்கணத்திற்கு முன்னோடியாய் அமைந்தது என்கிற வாதம் அறிஞர்கள் பலராலும் ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திராவிட கருத்தாக்கத்தினுடைய முகிழ்வை காலின் மெக்கன்ஸியிட மிருந்து தொடங்கவேண்டிய தேவை இருப்பதை அறிய முடிகிறது.

லெய்டனின் பழங் கன்னடம் குறித்த குறிப்பு பின்வரும் நினைப்புக்கான காரணத்தைக் கொடுக்கிறது. தொடக்க காலம் முதலே எல்லீஸூடன் லெய்டன் தொடர்பில் இருந்தபோதும் மொழிகள் குறித்து மெக்கன்சியின் உதவியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளே லெய்டனின் பார்வையை வடிவமைத்திருக்கிறது. லெய்டன் தனக்கான சிந்தனையை மெக்கன்சி மற்றும் எல்லீஸ் ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் பெற்றிருக்கிறார். 1816இல் கேம்பல் வெளியிட்ட தெலுங்கு மொழி இலக்கண நூலில்தான் எல்லீஸின் திராவிடச் சான்றுக்கான முன்னுரை வெளிவருகிறது. ஆனால், கி.பி.1807 அளவில் மெக்கன்சியால் எழுதப்பட்ட சுற்றுக்கை கடிதத்தை ரமா மண்டேனா என்பவர் கோதாவரி மாவட்ட ஆவணங்களிலிருந்து கண்டெடுத்திருக்கிறார். அக்கடிதம் சென்னை மாகாணம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையது. மேலும், அது தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து கிளைத்தவை அல்ல என்ற மெக்கன்சியின் தென்னிந்திய மொழிகள் குறித்த கருத்தாக்கத்தை பின்வரும் கேள்விகளுடன் வெளிப்படுத்த முற்படுகிறது.

-           தென்னிந்திய பகுதியில் உள்ள இந்து மொழிகள் சமஸ்கிருதத் திலிருந்து கிளைக்கவில்லை என்று உறுதியாகக் கூறமுடியும். பிராமணர்கள் தங்கள் மொழி, மரபு, சமயத்துடன் வடக்கி லிருந்து வந்தவர்கள் என்பது மரபு சார்ந்த சான்றுகளால் உறுதிப்படுகின்றன. வடமொழி யாகிய சமஸ்கிருதம் எந்த காலகட்டத்தில் இங்கு அறிமுகமானது என்ற கேள்வி பெரிதும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.

-           தென்னிந்திய மொழிகள் பலவற்றை ஒப்பாய்வு செய்வதும் சமஸ்கிருதத்திலிருந்து அம் மொழிகள் எத்தகையவற்றை பெற்றிருக் கின்றன என்பதை அறிவதும், அம்மொழிகள் வழங்கும் புவியியல் எல்லைகள் குறித்து மிக நுட்பமாக அறிவதும் தேவையாகிறது.

- தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மிகத் தொன்மையான எழுத்து வடிவம் எது?

- தற்சமயம் வழக்கிலுள்ள தென்னிந்திய மொழிகளின் மூலமொழி எது என்பதற்கான அடையாளம் உண்டா? அப்படி இருப்பின் அம்மொழியின் பெயர் என்ன? அது எங்கு வழக்கில் உள்ளது? பிற தென்னிந்திய மொழிகளின் உருவாக்கத்திற்கு அம்மொழி எவ்வளவு தூரம் தாக்கத்தை செலுத்தியது?

- பழங்கன்னடம் இந்த கேள்விக்கு ஏதேனும் ஒருவகையில் விடையளிக்குமா? கல்வெட்டுகளிலிருந்து பெறப்பட்ட இந்த மொழிக்கான எழுத்து வடிவம் கற்றறிந்த சமண பிராமணர்கள்வழி கிடைக்கும் எனத் தெரிகிறது. மெக்கன்சி யின் கீழ் பணிபுரிந்த ஒரு பிரிவினர் இதனை முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் இருப்பார்களா னால் அவர்கள் மூலம் இதற்கான தெளிவு பெறலாம்.

-           சால்செட் (இதன்றைய மகாராஷ்டிராவுக்கு அருகில்) தீவின் கெனரா குகையிலுள்ள கல்வெட்டுகளின் வரிவடிவப் பிரதியும் அதன் மொழிபெயர்ப்பும் மேற்கண்ட எழுத்து வகையில் அமைந்திருக்கிறது. இது இவ்வாய்வுக்கு உதவக் கூடிய வல்லமை கொண்டதாய் அமையும் (2012, 89). ((Source:

APSA : Godavari District Records, 1807) என ரமா சுந்தரி மண்டேனா பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

மெக்கன்சியின் அச்சேறாத இக்கடிதத்தின் மூலம் மேற்கண்ட தென்னிந்திய மொழிகள் குறித்தான அவரின் பார்வை திராவிட மொழிக் குடும்ப சிந்தனைக்கான தொடக்க புள்ளியாக அமைந் திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தென்னிந்திய மொழிகளில் மெக்கன்சிக்கு போதிய தேர்ச்சி இல்லாத காரணத்தால் தொடர்ச்சி யாக அவரின் சிந்தனை வளர்த்தெடுக்கப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. மேலும், அவர் செய்த பரப்பாய்வுப் பணியும் விரிவான அளவில் பலவகையிலான ஆவணங்களைச் சேகரிக்கும் நோக்கமும் கொண்ட மெக்கன்சிக்கு குறிப்பிட்ட ஒரு கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் இயல்பை அவர் பெற்றிருக்க வில்லை எனவும் அவரின் பணிகளின்வழியே அறிய முடிகிறது. எனினும், திராவிட கருத்தாக்கம் உருப்பெறுவதற்கான சிந்தனை முகிழ்வு அவரிடத்திலிருந்து தொடங்கியிருக்கிறது என்று கூற இடமிருக்கிறது.

கடந்தகால ஆய்வுச் சூழல் திராவிடக் கருத்தாக் கத்தை உருவாக்கியவர் கால்டுவெல் அல்ல அவருக்கும் முந்தைய எல்லீஸ் என்ற கருத்தினை உறுதியாக முன்வைத்தது. தற்போது எல்லீஸூக்கு முந்தைய மெக்கன்சியை அடையாளப்படுத்தும் வாய்ப்பிருப்பதை அறியமுடிகிறது. காரணம் தென்னிந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தமைவின் அடிப்படையில் மிக விரிவான பல தளங்களிலான ஆவணங்களைச் சேகரித்த மெக்கன்சிக்கு திராவிடச் சிந்தனைக்கான கருத்தாக்கம் தோன்றியதில் வியப்பேதும் இருக்க முடியாது. எனினும், அவருடைய பணியிட மாற்றம் மற்றும் எதிர்பாராத மரணம் ஆகியவை காரணமாக அவர் நினைத்தது போல அவரின் ஆவணங் களை அடிப்படையாகக் கொண்ட தென்னிந்திய வரலாற்றை அவர் உருவாக்கவில்லை.

40 வயது முடியும் வரை எதையும் வெளியிடு வதில்லை என்று கூறிய நிலையில் எதிர்பாராமல் 41 வயதில் எல்லீஸ் மரணமடைந்தார். அதைப் போலவே சேகரித்த ஆவணங்களை பயன்படுத்தாமல் மெக்கன்சி மரணமடைந்திருக்கிறார். சென்னை கீழைத்தேயவியல் பள்ளி உருவாக்கத்திற்கு மையமாய் விளங்கிய இருவரும் தென்னிந்தியா குறித்த ஒற்றைச் சிந்தனையில் பயணித் திருக்கிறார்கள். திராவிடச் சான்று கருத்துருவாக்கத்தில் இருவருக் குமான பங்கு குறித்து இணைத்தாற் போல ஆராய வேண்டியதன் தேவை இருப்பதை அறிய முடிகிறது. இவ்விரு ஆளுமைகள் குறித்த காலனிய ஆவணங்கள் முழுமையாய் வெளிப்படும்போது திராவிட கருத்தாக்கம் தொடர்பான புதிய தளமும் ஆய்வும் கிளர்ந்தெழும் சூழல் உருவாகும்.

காவள்ளி சகோதரர்கள்: மெக்கன்சி தொகுப்பின் மையம்

ஐரோப்பிய அறிஞர்களை முன்னிறுத்தி இம்மண்ணில் உருவான புலமைத்துவக் கருத்தாக்கங்களை அறிகிற வேளையில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து செயல்பட்ட இந்திய அறிவாளர்களின் மீது கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. காலின் மெக்கன்சியை முன்னிலைப்படுத்தும் இவ்வேளையில் அவரின் ஆவணத் தொகுப்பு உருவாக காரணமாய் அமைந்த இந்திய உதவியாளர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவது அவசியமாகிறது. மெக்கன்சியின் மிக முக்கியமான உதவியாளர்களாக விளங்கிய வர்கள் காவள்ளி வெங்கட்ட போரியா மற்றும் காவள்ளி வெங்கட்ட லட்சுமய்யா ஆகிய இருவர். இவர்கள்தான் தென்னிந்திய பரப்பாய்வு பணியின் தொடக்காலம் முதலே அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களுள் முதன்மை மொழிபெயர்ப் பாளராக இருந்த போரியா கி.பி. 1803இல் இறந்துவிட, அவரின் இடத்திற்கு அவருடைய இளயை சகோதரரான லட்சுமய்யா பணியமர்கிறார்.

மெக்கன்சியின் ஆய்வுப் பயணத்தை திட்டமிட்டு உள்ளூர்வாசிகளைத் திரட்டி குழுவின் ஆய்வுப் பணியை போரியா ஒருங்கிணைத் ததுடன், மெக்கன்சியின் வரலாற்று ஆய்வுக்கான சட்டகத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. நியோகி பிராமணர்களான காவள்ளி சகோதர்கள் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எல்லூரைச் சேர்ந்தவர்கள். மெக்கன்சியிடம் ஐந்து காவள்ளி சகோதரர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களுள் போரியா, லட்சுமய்யா மற்றும் இராமசாமி ஆகியோர் மிக முக்கியமானவர்களாகத் திகழ்ந்திருக் கிறார்கள். நரசிம்மலு மற்றும் சீத்தையா ஆகிய இருவர் லட்சுமய்யாவின் குறிப்புப்படி அவருக்கு உதவியாளர் களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஐந்து சகோதரர்களுள் மூத்தவரான போரியா, மெக்கன்சியின் தலைமை மொழிபெயர்ப்பாளராக 1796 முதல் 1803வரை அவர் இறக்கும் வரை பணியாற்றி இருக்கிறார். போரியாவின் எதிர்பாராத மரணம், மெக்கன்சியைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அவரின் இழப்பு குறித்தும் அவர் மேற்கொண்ட பணிகள் குறித்தும் மெக்கன்சி பின்வருமாறு பதிவு செய்கிறார்: “இன்று நம்மிடையே இல்லாமல் போய் நமக்கு பெரும் துயரத்தைக் கொடுத்திருக்கிற காவள்ளி வெங்கட்ட போரியா என்னும் இளவயது பிராமணர் மிகவும் நுண்ணறிவு கொண்டவராக அறிவாளியாக விளங்கியவர். கூடவே பல்வேறு நற்குணங்களைக் கொண்டவர். பரப்பாய்வில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அவர் சந்தித்து பேசிய பல்வேறு பழங்குடிகள், குழுக்கள் ஆகியவற்றின் வேறுபட்ட தன்மைகளை திறந்த மனத்துடன் உள்வாங்கிக் கொண்டவர். ஏழு ஆண்டுகள் உழைத்த பிறகு அவர் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்னாள் அவருடைய இளைய சகோதரர்கள், பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள், பிராமணர்கள், சமணர்கள், மலபார் காரர்கள் என்று பலரை இந்தப் பணியில் ஈடுபடுத்திவிட்டுச் சென்றார். அதனால்தான் பணிகள் தொடர்ந்து மனநிறைவுடன் நடந்தன” (1809, 335) என்ற பதிவின்வழி போரியா எத்தகைய உதவியாளராக மெக்கன்சிக்கு திகழ்ந்திருக்கிறார் என்பது அறிய முடிகிறது.

போரியா நம்பகமான பல மொழிபெயர்ப்புகளைச் செய்ததுடன், தென்னிந்தியா குறித்த மிக விரிவான வரலாறு எழுதுகைக்கு எவ்வாறு ஆராய வேண்டும், எத்தகைய தரவுகளைச் சேரிக்க வேண்டும் என்பது போன்ற திட்ட வரைவினை உருவாக்கியிருக் கிறார். தென்னிந்திய சமயம், சமூக மற்றும் மானிடவியல் அறிவுடன் கூடிய வரலாற்று அறிவை போரியா பெற்றிருக்கிறார். மெக்கன்சியின் குறிப்புகளின்வழி அவர் ஒரு மானிடவியலாளராக அறியப்படு கிறார். குறிப்பாக, போரியா மெக்கன்சிக்காக மைசூர் மற்றும் முட்கரி பகுதிகளில் சமணர்களை மையமிட்ட மிக விரிவான நேர்காணல் களைச் செய்தது இதற்கு உதாரணமாக அமையும். இது சமணர்களின் பண்பாட்டுக் கூறுகளை விளக்கும் வகையில் Account of the Jains என்ற தலைப்பின்கீழ் 1809ஆம் ஆண்டின் Asiatic Researchesஇதழில் வெளிவந்திருக்கிறது. தென்னிந்திய சமணர்கள், பழங்குடிகள் குறித்த ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது (2012, 100). இவற்றுக்கு அடிப்படை யாக போரியாவின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்திருக்கிறது.

1802இல் போரியா, மெக்கன்சியிடம் வழங்கிய மிக முக்கிய ஆவணம், தென்னிந்திய வரலாற்றிற்கான விரிவான திட்ட வரை வினை வெளிப்படுத்துவதாய் அமைகிறது. இத்திட்டம் விரிவான அளவில் பண்டையக் காலம் முதல் சமகாலம் வரைக்குமான வரலாற்றினை உள்ளடக்கியதாய் அமைந்திருக்கிறது. தென்னிந்திய பகுதியின் சமயம், பழக்கவழக்கங்கள், கட்டடக்கலை, இலக்கியம், சமூகம்,அரசியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட கூறுகளை வெளிக் கொணரும் தன்மையில் பின்வருமாறு அத்திட்ட வரைவு அமைந்திருக்கிறது:

Source : OIOC, Mackenzie Collection, General. 

thirumalai_naicker_620

திருமலை நாயக்கர் ஓவியம், மதுரை, 1780

இத்தன்மையிலான தரவுகளைத் திரட்டுவதன் மூலமாக தென்னிந்தியா குறித்த விரிவான வரலாற்று அறிவினைப் பெற முடியும் என்கிற கருதுகோள் மெக்கன்சி குழுவினருக்கு இருந் திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே ஆவணத் தொகுப்பு பணியும் செய்திருக்கிறார்கள். இதற்கு போரியா சகோதரர்களின் பங்கு முதன்மையாய் விளங்கியிருக்கிறது. அச்சகோதரர்களின் திறனைக் கண்டு அவர்களின் பணியை கிழக்கிந்தியக் கம்பெனி அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சென்னை அரசாங்கத்திற்கு மெக்கன்சி கடிதம் எழுதுகிறார். மெக்கன்சியின் மறைவுக்கு பிறகு அவரின் நெருங்கிய நண்பர் அலெக்ஸாண்டர் ஜான்ஸ்டன் கம்பெனி அதிகாரிகளுக்கு மெக்கன்சியின் வரலாற்று ஆய்வுத் திட்டம் குறித்தும், அப்பணிக்கான இந்திய உதவியாளர்களின் பங்கு குறித்தும் விளக்க முயற்சி செய்திருப்பதைக் காண முடிகிறது (2012, 104).

இவ்வகையில் மெக்கன்சியின் உதவியாளர்கள் தென்னிந்திய வியலுக்கு புரிந்த பணிகளை அடையாளங் காணமுடிகிறது. எனினும், காலனிய ஆவணங்கள் முழுமையாய் வெளிப்படும் தருணத்தில் காலனிய ஆட்சிக்காலத்தில் இயங்கிய இந்திய அறிவாளர்கள் குறித்த புரிதலை விரிவாகப் பெறமுடியும். இந்தியா வில் பணிபுரிந்த ஒவ்வொரு ஐரோப்பிய அறிஞர்களுக்கும் உறுதுணையாய் இந்திய அறிவாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வினை விரிவுபடுத்தும்போது ஐரோப்பிய அறிவு மரபை இந்திய அறிவாளர்கள் எத்தகைய வகையில் உள்வாங்கி செயல்பட்டிருக்கிறார்கள், அது இந்திய அறிவு மரபில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த பல்வேறு புரிதல்களைப் பெறமுடியும். 

தொகுப்பாக...

பயன்பட்ட நூல்கள்

 Asiatic Researches, Vol.9, London, 1809.