இரு நூறாமாண்டு நிறைவாக

தமிழகத்து மண்ணில் காலனியம் ஏற்படுத்திய நிறுவனங்களில் மிக முக்கியமானது செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியாகும். (College of Fort st.George - 1812) இதனையும் இதன் இணை அமைப்பான சென்னைக் கல்விச் சங்கத்தையும் Madras Literary Society - 1812) தோற்றுவித்தவர் அன்றைய சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வொய்ட் எல்லீஸ் (F.W.Ellis) என்பவர். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இது இயங்கியதால் “கோட்டைக் கல்லூரி” என்றே அழைக்கப்பட்டது. இவ்விரு அமைப்புகளும் தொடங்கப்பட்டதன் 200ஆம் ஆண்டு நிறைவில் இவற்றின் தோற்றம் பற்றியும் தமிழகத்தில் அது ஏற்படுத்திய கல்விப்புலம்சார் அசைவியக்கத்தைப் பற்றியும் நினைவு கூர்வது அவசியமான ஒன்றாகும்.

வணிகம் நோக்கி வந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் 1639 இல் தங்களுக்கென கோட்டை ஒன்றை கட்ட ஆரம்பித்தனர். இதன் ஒரு பகுதி “செயின்ட் ஜார்ஜ்” திருநாளில் முடிக்கப்பட்டதால் இப்பெயரிலேயே அழைக்கப்பட்டது. கம்பெனியாரின் வணிக நடவடிக்கை அதிகார அரசியல் நடவடிக்கை யாக மாற்றம் கொண்டது. 1799இல் திப்பு சுல்தானை வென்று பெற்ற தென்னிந்தியப் பகுதிகளில் நிலவரி வசூல், நீதிமன்ற நடவடிக்கை கள் முதலியவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பை கம்பெனியார் ஏற்றதால், அங்கு பணியாற்றவிருந்த ஆட்சியர், நீதிபதிகள் ஆகியோ ருக்குத் தேவையான மொழிப்பயிற்சி அளிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தலானது. கோட்டைக் கல்லூரியின் உருவாக்கமும் இக் காரணத்திற்காகத்தான் தோற்றம் கண்டது. ‘காலின் மெக்கன்சி’ இப்பரந்த நிலப்பரப்பை சர்வே செய்ய நியமிக்கப்பட்டார். 1796இல் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த எல்லீஸ் வருவாய்த்துறைச் செயலரின் உதவியாளராக சேர்ந்து 1810இல் சென்னை மாவட்டக் கலெக்டர் ஆனார். இவ்விரு துறை அதிகாரிகளும் தென்னிந்தியா தொடர்பான கீழைத்தேய ஆவணச் சேகரிப்புக்கு மூல கருத்தாக்கள் ஆனார்கள். இவ்விரு அறிஞர்களுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து, கீழ்த்திசை தொடர்பான வரலாற்றுச் சிக்கல்களில் கருத்துப்பரிமாற் முதலியவை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத் தகுந்தது.

சென்னை கோட்டைக கல்லூரி தோன்றுவதற்கு முன்மாதிரியாக இருந்த கொல்கத்தா கோட்டைக் கல்லூரி பற்றி அறிவதும் முக்கிய மாகும். கொல்கத்தாவின் ஆளுநராக இருந்த வெல்லஸ்லியின் தனிப்பட்ட முயற்சியால் தொடங்கப்பட்ட வில்லியம் கோட்டைக் கல்லூரி (College of Fort.William) அன்று இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த இளநிலை எழுத்தர்களுக்கு மூன்றாண்டு பயிற்சி வழங்கியது. அரபு, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று செம்மொழி களும் இந்துஸ்தானி, வங்காளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய ஆறு நவீன மொழிகளும் பயிற்றுவிக்கப்பட்டன. அரசு அதிகாரிகளாக பணியேற்க வரும் இளம் பணியாளர்கள் கட்டாயம் தாம் பணியாற்றவிருக்கும் பகுதியின் மொழியை அறிய வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இதனை முன்மாதிரியாகக் கொண்டே எல்லீஸ் 1812இல் சென்னையில் கோட்டைக் கல்லூரியையும் கல்விச் சங்கத்தையும் தோற்றுவித்தார். இதற்கு முன்னமே 1804இல் பம்பாய் இலக்கியக் கழகம் (Literary Society of Bombay) தோன்றியிருந்தது. 1808 இல் எல்லீஸ் இதன் உறுப்பினர் ஆனார். இதுவே எல்லீஸ் 1812இல் Madras Literary Society தொடங்குவதற்கு காரணமாக இருந்தது என்பார் தாமஸ் டிரவுட்மன். இதேபோல் 1787இல் கொல்கத்தா ஆசியக் கழகம்(Asiatic Societyof Bombay வில்லியம் ஜோன்ஸால் தொடங்கப்பட்டிருந்தது. இதில் சென்னை கீழ்த்திசை திட்டத்தின் முன்னோடிகளான எல்லீசும், காலின் மெக்கன்சியும் உறுப்பினர் களாக இருந்தனர். கம்பெனி ஆட்சியை இயக்கும் ‘இலண்டன் இயக்குநர் குழு’ கிழக்கிந்திய கல்லூரியை ஹெட்ஃபோர்டு கோட்டையில் தொடங்கியது. இதனால் இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் இளம் பணியாளர்கள் ஆங்கிலேய நாட்டுப் பற்றும் மதப்பற்றும் பெறுவார்கள் என நம்பியது. பின்பு இது ஹெய்லிபரிக்கு மாற்றப்பட்டது. அங்கு பாரசீகம், இந்துஸ்தானி, வங்காளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இரண்டு ஆண்டுகள் பயிற்றுவிக்கப் படும். பின்பு இவர்கள் தாம் அதிகாரிகளாகச் செல்லவிரும்பும் பகுதியின் மொழியை அறிய வில்லியம் கோட்டைக் கல்லூரியும் செயின்ட் ஜார்ஜ் போர்ட் கல்லூரியும் நிறைவேற்றும்.

இத்தகையப் பின்புலத்தில் எல்லீசும் அவரின் புலமைக்குழாமும் கல்லூரியின் வாயிலாக நிகழ்த்திய செயல்பாடுகளை பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

-           எல்லீஸ் மற்றும் அவரின் புலமைக்குழாம்கள் கல்லூரியில் செயல்படுத்திய கற்பித்தல் செயல்பாடுகள்.

-           ஆசியக் கழகத்தில் கொல்கத்தா கீழ்த்திசையியலாளர்கள் முன்னெடுத்த இந்தோ - அய்ரோப்பிய மொழிக்குடும்பத்திற்கு எதிர்வினையாக சென்னை கீழ்த்திசையியலாளர் முன் னெடுத்த திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தாக்கம்.

-           கல்லூரி அச்சகம் மற்றும் சுவடி சேகரிப்புகள்

-           கல்லூரி தலைமையாசிரியர்களின் புலமைச் செயல்பாடுகள் ஆகியன.

கல்லூரிச் செயல்பாடுகள்

தொடக்கத்தில் கல்லூரிக்கென தனி பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் தங்கிக் கொண்டனர். பின்பு கல்லூரி அவர்களுக்கான இடங்களை உருவாக்கித் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டது. கல்லூரி செயல்பாடுகள் தொடர்பாக 1812இல் இலண்டன் இயக்குநர் குழுவிற்கு கோட்டைக் கல்லூரியின் கண்காணிப்புக் குழு (இதன் தலைவராக எல்லீஸ் தாம் இறக்கும் வரை செயல்பட்டார்) நீண்ட அறிக்கை அளித்தது. அவை,

-           கல்லூரியைக் கண்காணிப்புக் குழு ஒன்று நிர்வகிக்கும்.

-           அக்குழுவில் அரசு மொழிபெயர்ப்பாளரும் ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களும் இடம்பெறுவர்.

-           கல்லூரியின் அன்றாடப் பணிகளைக் கண்காணிப்பதை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்கொள்வர்.

-           இளநிலைப் பணியாளர் தேர்வு ஆண்டிற்கு இருமுறை ஜுன், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

மேலும் இளநிலைப் பணியாளர்களுக்கு தென்னிந்திய மொழிகளில் முன்னுரிமை அளித்ததோடு, சமஸ்கிருதத் துக்கும் முதலிடம் தந்தது. சென்னையில் பாரசீகம், இந்துஸ்தானி மொழிகளுக்கு பின்னடைவு காணப் பட்டது. கல்லூரி இளநிலைப் பணியாளர் களுக்கு மொழி யறிவிக்கும் ஆசிரியர்களாக இந்திய மாணவர்களை யும் உருவாக்கியது. இத்துடன் இந்து, மற்றும் இசுலாமியச் சட்டங்களை இந்தியர்கள் கற்று நீதிமன்றங்களில் பண்டிதர்களாகவும் முன்சீபுகளாகவும் பணியாற்றவும் இக்கல்லூரி வாய்ப்பாக அமைந்தது.

திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தாக்கம்

1816இல் காம்பெல்லின் தெலுங்கு இலக்கண நூலில் (A Grammar of Teloogoo Language) அவரது முன்னுரையை அடுத்து 'முன்னுரைக்கு ஒரு குறிப்பு' என்ற தலைப்பில் எல்லீஸின் தெலுங்கு ஆய்வுரை அமைந்திருந்தது. இதில்தான் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழியி லிருந்து வேறான தனித்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று குறிப்பிட்டிருந்தார். கால்டுவெல்லிற்கு (1856) 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே திராவிட மொழிக்குடும்பம் என்கிற இந்தக் கருத்தாக் கத்தைத்தான் (திராவிடம் என்று எல்லீஸ் பயன்படுத்தவில்லை ஆயினும்) தான் தாமஸ் டிரவுட்மன் தன் நூலில் திராவிடச் சான்று (Dravidian proof)) என்று சுட்டுகிறார். எல்லீஸ் திராவிட மொழிக் குடும்பத்தை அடையாளப்படுத்த காரணமாக இருந்தவற்றைத் தொகுத்துக் கொள்வோம்.

-           1814 இல் சொம்பூர் அச்சகத்தின் வழி வெளியான தெலுங்கு இலக்கண நூலின் ஆசிரியர் காரே Òஇந்திய மொழிகள் எல்லாம் முக்கியமாகச் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த வையேÓ என்றார்.

-           தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகியவற்றில் சமஸ்கிருதம் மண்டிக்கிடப்பதால் அதன் இந்திய மொழிகளுக்கெல்லாம் மூலம் சமஸ்கிருதமே என்ற கருத்தை முன்வைத்தார்.

மேற்கண்ட இத்தகைய கொல்கத்தா கீழ்த்திசைப் பள்ளியைச் சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கு மாற்றாக சென்னை கீழ்த்திசைப் பள்ளியைச் சேர்ந்த (இப்பெயர் தாமஸ் டிரவுட்மன் வைத்தது) எல்லீஸ், காம்பெல் போன்றவர்கள் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக திராவிட மொழிக்குடும்பத்தை முன்னெடுத்தனர்.

கல்லூரி அச்சகமும் சுவடி சேகரிப்பும்

1813இல் கல்லூரி அச்சகம் தொடங்கப்பட்டது. தாமஸ் டிரவுட்மன் கல்லூரி அச்சகத்தின் இரண்டு நூற்பட்டியல்களைத் தருகிறார். அதில் அச்சிடப்பட்டவை, அச்சில் இருப்பவை, அச்சாக உள்ளவை என்ற குறிப்புகளுடன் சில நூல்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 1815இல் வெளியான முதல் பட்டியலில்

-           பெஸ்கியின் கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம் தமிழ் - இலத்தீன் அகராதி, சதுரகராதி ஆகியவை யும், கல்லூரித் தலைமையாசிரியரான சிதம்பரம் வாத்தியாரின் இராமாயண உத்தரகாண்டம், தமிழ்ச்சுருக்க விளக்கம், மிதாக்ஷர விவகார காண்டம் (மொழிபெயர்ப்பு) ஆகியவை தமிழ் தொடர்பான நூல்கள்.

-           ஏ.டி.காம்பெல் எழுதிய தெலுங்குமொழி இலக்கணம் (இதில் தான் எல்லீஸின் திராவிடச் சான்று குறிப்புரை உள்ளது) மசூலிப்பட்டினம் மாயடி வெங்கய்யாவின் ஆந்திர தீபிகா, ஜே.எம்.கெரெலின் ஆங்கில - தெலுங்கு அகராதி ஆகிய நூல்கள் தெலுங்கிற்குரியன.

-           ஜே.எம்.கெரெலின் அச்சிடத் தயாரிக்கப்பட்டுவரும் நிலை யில் உள்ள கர்நாடக மொழி இலக்கணம், அதே ஆசிரியரின் ஆங்கில கர்நாடக அகராதி ஆகியவை கன்னட மொழித் தொடர்பானவை.

-           இவை தவிர ஆங்கிலத்தில் ஜே .வாரென் எழுதிய இந்திய தீபகற்ப மக்களின் காலக்கணிப்பு குறித்தஆய்வுரை நூலும், ஹெச்.ஹாரிஸ் எழுதிய இந்துஸ்தானி கிளைமொழி அகராதியும் ஆகும்.

இதில் மலையாளமொழி குறித்த எந்த நூலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. துருமோண்ட் எழுதிய மலையாள இலக்கணத்தை வெளியிட எர்ஸ்கின் உதவியுடன் எல்லீஸ் முயன்றும் அச்செழுத் துருக்கள் இல்லாமையால் இது கைவிடப்பட்டது. மேற்சுட்டிய எல்லாமும் தொடக்கநிலை மொழிக்கற்பித்தலுக்குத் தேவையான நூல்கள் என்பதை மனத்திற் கொண்டால் இவை இங்கிலாந்திலிருந்து தென்னிந்திய மொழி கற்கவரும் இளநிலைப் பணியாளர்களுக்கும் இவர்களுக்கு மொழி கற்பிக்கவிரும்பும் இந்திய மாணவர்களுக்கும் பாடநூல்களாகப் பயன்பட்டமை விளங்கும். எனினும் கல்லூரியின் லூரி அச்கம் தொடர்பான செய்தி ஒன்றை ஆய்வாளர் வெ.ராஜேஷ் தருகிறார். Ò அச்சகப் பிரிவு செலவுகள் 1812இல் ரூ 357 ஆக இருந்தது. இது 1825இல் ரூ.7200 ஆக இருந்தது. இச்செய்தி செயிண்ட் சார்ஜ் கோட்டைக் கல்லூரியின் 1827ஆம் ஆண்டு வருடாந்திர நிர்வாக அறிக்கையில் வெளியிடப்பட்டது.

காலின் மெக்கன்சி தென்னிந்தியா முழுவதும் தேடித் தொகுத்த சுவடிகள் கோட்டைக் கல்லூரியல் குறிப்பிட்ட காலம் வரை வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் எல்லீஸின் தனிப்பட்ட விருப்பத் தின்படி முத்துசாமிப்பிள்ளை தென்னகம் சென்று திரட்டிய சுவடிகளும் (வீரமாமுனிவர் சுவடிகள் முக்கியமானவை) கோட்டைக் கல்லூரி நூலகத்தில் இருந்ததை அறியமுடிகிறது. பின்பு பலஅறிஞர்கள் தனிப்பட்ட முறையிலும் கல்விச் சங்கத்தின் அச்சகம் மூலமாகவும் பல நூல்களாய் பதிப்பித்தனர். இவைகளின் பெரும் பகுதி அன்றுவரை அச்சுவாகனம் ஏறாத தமிழின் தொன்மையை நிலை நாட்டுகிற சங்கப் பிரதிகளும் பிற இலக்கண இலக்கியப் பிரதிகளுமாகும்.

கல்லூரித் தலைமையாசிரியர்களின் புலமைச் செயல்பாடுகள்

எல்லீஸ் வாழ்ந்த காலத்திலும் அவர் மறைவிற்குப் பிந்தைய காலங்களிலும் கல்லூரியின் தலைமை யாசிரியர்கள் திறம்படச் செயல்பட்டுள்ளனர். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற கல்லூரி தலைமையாசிரியர்கள் பழம் பிரதிகளை பதிப்பிப்பது, தொகுப்பது, பாடநூல்கள் எழுதுவது (உரைநடை வடிவில்), மொழிபெயர்ப்பது என பல்துறைச் செயல் பாடுகளை கல்லூரியில் நிகழ்த்தினர். அவர்களைப் பற்றியும் அவர்களின் பல்முனைச் செயல்பாடுகளையும் புரிந்து கொண்டால் கோட்டைக் கல்லூரியின் வரலாற்றுக்கு அவர்களின் பங்களிப்பு அடிப்படை என்பது விளங்கும்.

1.         பட்டாபிராம சாஸ்திரி - கல்லூரியின் சமஸ்கிருத, தெலுங்கு மொழிகளின் ஆசிரியர். இவர் தயாரித்த தெலுங்கு வேர்ச்சொல் பட்டியல் எல்லீசுக்கு திராவிடச் சான்று எழுதிட மிகவும் பயன் பட்டது.

2.         சங்கரய்யா - இவர் கல்லூரியின் ஆங்கிலத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். மிராசுதாரர் உரிமை (mirasy right) குறித்த ஆய்வுரையில் நிலவுரிமை தொடர்பான வினாக்களுக்கு எல்லீசுடன் சேர்ந்து விளக்கம் அளித்தவர்.

3.         மாமடி வெங்கையா - எல்லீஸ் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றப்பட்ட போது இவரின் தொடர்பு கிடைத்தது. தெலுங்கு - சமஸ்கிருத அகராதியைத் தொகுத்தவர். இதன் பதிப்புரிமைக்காக சென்னை அரசாங்கம் 1000 வராகன் கொடுக்க முன்வந்தமை றிப்பிடத்தக்கது.

4.         சிதம்பரம் பண்டாரம் - கல்லூரித் தமிழ்த் தலைமை யாசிரியர். யக்ஞவல்கியரின் Ôவீதாக்ஷரம்Õ மீதான விஞ்ஞானேசுரரின் உரைமைய மொழிபெயர்த்தார். இது போரூர் வாத்தியாரால் தொடங்கி முடிக்காமலிருந்தது. தமிழ்ச் சுருக்க விளக்கம் இராமாயண உத்தரகாண்டம் நூல்கள் முன்னரே சுட்டப்பட்டன.

5.         முத்துசாமிப் பிள்ளை - புதுச்சேரி சேசுசபை கிறித்தவர். 1816இல் தென்னகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தமிழ்ச் சுவடிகளை சேகரித்தார். இது கல்லூரிசுவடித் தொகுப்புக்கு உதவியது.

6.         தாண்டவராய முதலியார் - கல்லூரி மாணவராக இருந்து பின்பு அதன் தலைமையாசிரியரானார். பெஸ்கியின் சதுரகராதி (1824), இலக்கண வினாவிடை (1828) மராத்தி மொழிபெயர்ப்பான பஞ்சதந்திரம் (1826) கதாமஞ்சரி (1846) இலக்கணப் பஞ்சகம் (1835) ஆகியன மொழிகற்கும் மாணவர்களுக்கென செய்யப்பட்டது.

7.         பி.நாரணப்ப முதலியார் - தமிழ்நூல் ஆராய்ச்சிப் பதிப்பு களின் முன்னோடியான இவர் தஞ்சைவாணன் கோவை (1834), நேமிநாதம் (1836), நாலடியார் (1844) முதலியவற்றைப் பதிப்பித்துள்ளார்.

மேலே சுட்டிய அறிஞர்களின் செயல்பாடுகள் கல்லூரி தொடங்கிய முதல் (1812) அது மூடப்பட்டது வரை (21.7.1854)யிலான காலகட்டங்களில் புலமைத்துவத்துடன் செயல்பட்டதைப் பார்க்கிறோம். அதன் இருநூறாம் ஆண்டு நிறைவின் பயனாக நாம் இக்கல்லூரி தொடர்பான சில விடுபடல்களை இட்டுநிரப்பக் கடமைப்பட்டுள்ளோம்.

-           ஒன்று, சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள மெக்கன்சி சுவடிகளில் இருந்த சென்னைக் கல்விச்சங்கத்தின் சுவடிகளைப் பிரித்தறிவது.

-           இரண்டு, இன்றும் பலநாட்டு நூலகங்களில் புதைந்துள்ள இக்கல்லூரியின் பல அச்சுப் புத்தகங்களைச் சேகரித்து அதற்கான நூற்றொகைப் பட்டியலை வெளியிடுவது என்கிற இரண்டு செயல்பாடுகளாகும். இவை தாமஸ்டிரவுட்மன் அவர்களால் பின்வரும் ஆய்வாளர்களுக்கு விட்டுச் சென்ற மேலாய்வுக் களங்கள்.

பயன்படுத்திக் கொண்ட நூல்கள்

The Tamil plutarch, Simon casi chetty, 1859, Jaffna: Ripley & strongprinters.