தமிழில் இன்றுவரை வெளிவந்திருக்கும் ஆய்விதழ்களில் மாற்றுவெளி தனி பரிமாணம் கொண்டது. இவ்விதழ் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருண்மைகளே இதற்குச் சான்று. இன்று வெளிவரும் புதிய ஆராய்ச்சி, மணற்கேணி, புதிய பனுவல், சமூகவிஞ்ஞானம் போன்ற மிகச்சில இதழ்களே தமிழில் ஆய்விதழ்கள் என்று சொல்லத்தக்கவையாக இருக்கின்றன. இவற்றிலிருந்து தனித்தும் இவற்றின் போக்குகளை மீறியும் மாற்றுவெளி செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விதழ் தனக்கான ஆய்வு வெளியாக மாற்று, மாற்றுச்சிந்தனை, மாற்றுச் சொல்லாடல் என்று அர்த்தப்படுத்துவதிலிருந்தே இதனை தனித்துவப்படுத்தலாம். மாற்றுவெளி எல்லாப் பொருண்மைகளையும் ஒருசேரத் தராமல் ஒரு குறிப்பிட்டப் பொருண்மையை எடுத்துக் கொண்டு, அப்பொருண்மை சார்ந்து ஆய்வுலகில் இயங்கக் கூடிய வள அறிஞர்களை அழைப்பாசிரியர்களாகக் கொண்டு இயங்கு கிறது. ஆய்வுலகில் இதனை நாகரிகமான போக்காகக் கொள்ளலாம். இப்பொதுவான அறிமுகத்துடன் அரங்கில் பலரும் பகிர்ந்துகொண்ட செய்திகளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம்.

             கூட்டத்தின் தொடக்கமாக பேராசிரியர் வீ. அரசு அவர்கள் மாற்றுவெளி ஏன்? என்றும் தமிழ் ஆய்வுச்சூழலில் ஆய்விதழுக்கான தேவை குறித்தும் அதன் சமகாலப் போக்கு குறித்தும் எடுத்துரைத்தார். இந்த அறிமுகவுரையை அடுத்து தலைமையுரையாற்றிய பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் மாற்றுவெளியின் முதல் ஆய்வுக்கூட்டத்தில் தாம் கலந்துகொண்டு ஆற்றிய நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். அடுத்த இதழிலேயே அதை மாற்றுவெளி பிரசுரித்ததையும் பதிவுசெய்தார்.

             மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இரா. சீனிவாசன் மாற்றுவெளி பற்றி குறிப்பிடும் போது ‘செயலில் தோல்வி யடைந்தால் மட்டுமே அதில் உள்ள தவறுகளை சொல்லமுடியும்’என்று தான் நடத்திவரும் பனுவல் இதழ் அனுபவத்திலிருந்தே தன் உரையைத் தொடங்கினார். மாற்றுவெளி முழுக்க முழுக்க மாணவர்களுக்கான இதழ் என்றும் பல ஆய்வுமாணவர்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தப் பெறுகிறது என்றும் பேசினார். கோட்பாடு சார்ந்தும் நிறுவனத் தொடர்பு சார்ந்தும் மேலைநாடுகளில் ஆய்விதழ்கள் வெளிவரும் செய்தியைப் பகிர்ந்து கொண்டதோடு மாற்றுவெளியில் சிந்தனை - தொடர்பு- ஒருங்கிணைவு- வெளியீடு என்ற தன்மையைப் பார்க்கமுடிகிறது என்றார். படைப்பாளி களின் முழுமையான ஆளுமையை நாவல், சிறுகதைச் சிறப்பிதழ்கள் காட்டுவதாகச் சுட்டிக்காட்டினார்.

             இதனையடுத்துப் பேசவந்த ஆங்கிலத்துறைப் பேராசிரியர் அழகரசன் வெளிநாட்டு இதழ்களை ஒப்பிட்டுப் பேசினார். மாற்றுவெளி முன்னெடுக்கும் ‘மாற்று’ திராவிட மற்றும் மார்க்சிய கருத்துகளுக்கு மாற்றா? என்ற கேள்வியை எழுப்பி, திராவிடக் கருத்துநிலை வெளிப் படையாகத் தெரிவாதாக முதல் இதழின் தலையங்கத்தைச் சுட்டிக் காட்டினார். சிறுபத்திரிகை அடையாளம் சிறிது இருப்பினும் மாற்றுவெளி முழுமையாக ஆய்விதழ்தான் என்று குறிப்பிட்டார். நாவல் சிறுகதைச் சிறப்பிதழ்கள் ஆய்வாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது என்றார். 1995க்குப் பிறகு எல்லாவற்றையும் தேடிப் படிப்பதற்கு உதவியாக இருக்கிறது என்றும், ‘நவீனம்’ என்பது இன்று சாதியைப் புறக்கணித்துப் பேசப்படுவதை இமயத்தின் நாவலைக் கொண்டு சான்றுகாட்டிப் பேசினார்.

             முனைவர் ப.கல்பனா பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து மாற்று வெளி ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தமிழ்ச் சூழலில் பெரும் பத்திரிகை, சிறுபத்திரிகை, தரவிறக்கம் செய்யப்பட்ட இதழ்களிலிருந்து வேறுபட்டு, மாற்றுவெளி மறைக்கப்பட்ட உண்மைகளைச் சொல்லு கிறது என்றார். தான் மாற்றுவெளியின் முதல் இதழைப் படித்தபோது இலக்கிய வரலாற்றின் புதிய வெளிச்சத்தைப் பார்த்ததையும், ஒவ்வொரு சிறப்பிதழின் கட்டுரைகளை தனித்தனியே எடுத்துக்காட்டி அவற்றின் நிறைகுறைகளை வரிசைப்படுத்திப் பேசியதும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. குறிப்பாக நாவல் குறித்த சிறப்பிதழ் கலைக்களஞ்சியமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி பல தளங்களில் மாற்றுவெளி இயங்குவதாகத் தன் ஆய்வுரையை முடித்தார்.

             முற்பகல் கூட்டத்தின் இறுதியுரையாக புதுவை காமராசர் கலைக்கல்லூரியிலிருந்து வந்திருந்த முனைவர் தி. அன்புச்செல்வன் உரைநிகழ்த்தினார். இதுவரை வெளிவந்துள்ள மாற்றுவெளியின் பத்து இதழ்களில் வெளிவந்த 74 கட்டுரைகளும் ஆய்வுக்களஞ்சியமாக இருப்பதாகவும் பேரா.வீ.அரசு ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு மாணவர் சமூகத்தை ஒருங்கிணைத்து இதனை மேற்கொண்டமையை பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார். ரோஜா முத்தையா, ஈழச் சிறப்பிதழ், சித்திரக்கதைச் சிறப்பிதழ் தமிழர்களுக்கு முக்கியமான ஆவணமாக இருப்பதை வெளிப்படுத்திப் பேசினார். மேலும் ஆய்வு மாணவர்களில் சிவக்குமாரின் கட்டுரைகள் அதிகம் இருப்பதையும் மாற்றுவெளிக்கு இதுவரை எதிர்வினைகள் இல்லை என்பதையும் முன்வைத்தார். இதுவரை வெளிவந்துள்ள பத்து ஆய்விதழ்களுக்கு அடைவு தயாரிக்கவேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தார்.

             பிற்பகலில் நிகழ்ந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தங்களுக்கேயான எடுத்துரைப்பில், மாற்று வெளி ஆய்விதழ் குறித்த வாசிப்பை நிகழ்த்தினார்கள். மேலே குறிப் பிட்ட மாற்றுவெளி குறித்தானக் கருத்துகள் கீழ்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

மாற்றுவெளி ஆய்விதழ் எந்த நிறுவனச் சார்பு இல்லாமல்-குறிப் பிட்ட பொருண்மை சார்ந்த சிறப்பிதழ்கள் அத்துறை சார்ந்து இயங்கும் அழைப்பாசிரியர்கள் -’மாற்று’ ஆய்வுப்போக்குக்கான தன்மைகள் -ஆவணப்படுத்துதல் - ஆய்வு மாணவர்களை ஒருங் கிணைத்து நடத்தி வரும் இதழாக வெளிவருவது தமிழ் ஆய்வுவெளியில் அவதானிக்கத்தக்க ஒன்றாகும். இதற்கும் மேலாக, இதன் வெளியீட்டாளரின் சந்தைப் படுத்தலே இவ்விதழின் பரவலைச் சாத்தியப் படுத்தியது எனலாம்.

Pin It