1.கிறிக்கி:கூத்துத் தொடர்பான கட்டுரைகள், பதிப்பு - கோ.பழனி

தமிழகத்தின் முக்கிய நிகழ்த்துக் கலையான தெருக்கூத்தின் பல்பரிமாணத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் மற்றும் நேர்காணல் களின் தொகுப்பு இந்நூல். தமிழின் இலக்கியங்களிலிருந்து கூத்திற்கான மூலத்தைத் தேடுவது தொடங்கி இன்றைய சூழலில் அதன்நிலை வரை அக்கலை மரபு பற்றியான நெட்டோட்டமான பார்வையை முன்வைக்கின்றன கட்டுரைப் பொருண்மைகள். தெருக்கூத்து மரபு தொடர்பான வரலாற்றுத் தேடலின் தொடக்கப்புள்ளி இந்நூல்.

2. தொல்காப்பியம்: பன்முக வாசிப்பு, பதிப்பு - பா.இளமாறன்

தமிழின் பழமையான இலக்கண நூல் எனும் நிலையில் தமிழ்ச்சமூகம் பற்றிய கண்ணோட்டத்துடன் தொல்காப்பியத்தை அணுகும் பெரும்பான்மையான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பதிப்பு, மொழிபெயர்ப்பு பற்றியத் தரவுகளையும் கொண்டுள்ளதால் தொல்காப்பியத்தைப் பலதளங்களில் வாசிக்க இந்நூல் உதவுகிறது.

3.சிலப்பதிகாரம்: பன்முக வாசிப்பு, பதிப்பு -கா.அய்யப்பன்

வாசிப்பிற்கான பன்முகத் தரவுகளைக் கொண்ட சிலப்பதிகாரம் குறித்த பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ்ப் புலமை மட்டுமேயன்றி தமிழ்ச் சமூகமும் அப்பனுவலை எதிர்கொண்ட விதம் குறித்த உரையாடல் இக்கட்டுரைகள் மூலம் வெளிப்படுகிறது. வரலாற்றுச் செய்திகள் பற்றிய கட்டுரைகள் அதிகம் இடம்பெறும் அதே சூழலில் உரைமரபு, பதிப்பு பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுவது சிறப்பு.

4. திருக்குறள்: பன்முக வாசிப்பு, பதிப்பு - வெ.பிரகாஷ்

திருக்குறள் எனும் பிரதியைத் தமிழ் அறிவுலகம் எதிர்கொண்ட தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். திருக்குறள் குறித்த வைதீக சமயக் கருத்தாடலில் இருந்து மாறுபட்ட புள்ளியில் பயணம் செய்யும் கட்டுரைகள் அதிக அளவில் இடம்பெறுகிறது. திருக்குறளின் சமயம், பொருண்மை, அரசியல் நிலை பற்றிய விவாதங்களுடன் மொழிபெயர்ப்பு, பதிப்பு கட்டுரைகளும் இடம்பெறுவது நூலின் சிறப்பு.

5.சித்திரமாடம்: சுவரோவியங்கள், பதிப்பு –பாரதிபுத்திரன்

தமிழ்க்கலை வரலாறு பற்றிய விவாதம் எவ்வாறு முன்னெடுக் கப்படவேண்டும் என்பதற்கு மாதிரியாக அமைந்த நூல் இது. சுவரோவியங்களின் வரலாற்றுத் தேவையை உணர்த்துவதோடு பாதுகாப்பது பற்றிய வழிமுறைகளையும் கட்டுரைகள் பேசுகின்றன. போர்ச்சுகீசிய, சமண ஓவியங்கள் பற்றிய கட்டுரைகள் ஒவ்வொரு சமயம் தொடர்பான ஓவிய மரபைத் தனித்தனியே விரிவாக ஆராயவேண்டியதன் உடனடித் தேவையை வெளிப்படுத்துகின்றன.

6.ஒளியின்வெளிஅரங்க ஒளியமைப்பு, பதிப்பு - செ.ரவீந்திரன்.

தமிழ் அரங்கம் பற்றிய நூல்கள் தமிழில் மிகக்குறைவே. இந் நிலையில், அரங்கத்தின் முக்கியச் செயல்பாடான ஒளியமைப்பு பற்றிய கட்டுரைகள் மற்றும் உரையாடலின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது முக்கியமானது. தமிழ் அரங்கத்தின் ஒவ்வொரு Ôஅங்கம்Õ பற்றியுமான நூல்கள் இன்னும் தேவைப்படுவதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது.

7. பக்தி: அனுபவம் - அரசியல், பதிப்பு - அழகரசன்

பக்தி எனும் கருத்து தமிழ்ச்சமூகத்தில் செயல்பட்ட விதம் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல். வைதீக மயமான பெருஞ் சமயங்களுக்கு மாறுபட்ட பக்தி மரபை - குறிப்பாக வெகுசன பக்திமரபை முன் னிலைப்படுத்தும் கட்டுரைகளே அதிகம் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமய வரலாறு தொடர்பான வேறுபார்வையை முன்வைக்கும் கருத்துக்களின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்நூல்.

8. தமிழகத்தில் பாரதம்: வரலாறு - கதையாடல், பதிப்பு - இரா.சீனிவாசன்

தமிழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல் பாரதம். இலக்கிய நிலை, நிகழ்த்துக்கலை மரபு எனும் இருநிலையிலும் செல்வாக்கு பெற்ற பாரதம் பற்றிய கட்டுரைகளில் தொகுப்பு இந்நூல். தமிழ்ச்சமூக வெகுசன வெளியில் பாரதம் பெறும் இடம் குறித்து அறிய உதவுவதோடு அப்பிரதியின் பன்முகத்தன்மையை அறியப் பேருதவி புரிகிறது இந்நூல்.

தமிழ் இலக்கியத்துறை ஆய்வாளர்களின் தொகுப்பு நூல்கள்

1.குறிஞ்சி: சங்க இலக்கியம்: வரலாறு- மானுடவியல்- தொல்லியல்

தமிழ்ச் சமூகம் பற்றிய வரலாற்றை அதன் தொடக்கம் முதல் அறிந்துகொள்ள சங்க இலக்கியத்தை வரலாறு, மானுடவியல், தொல்லியல் எனும் மூன்று முக்கிய முனைகளிலிருத்து அணுகு கின்றன நூல் கட்டுரைகள். சங்க இலக்கியத்திலுள்ள வரலாற்றுச் செய்திகள் மட்டுமேயன்றி மானுடவியல் மற்றும் தொல்லியல் செய்திகள் வரலாறு எழுதியலுக்கு எவ்வகையில் பயன்படுகின்றன என்பதை நிறுவி நிற்கின்றது இந்நூல்.

2.முல்லை: நூற்றாண்டு காணும் அறிஞர்கள் குறித்தக் கருத்தரங்கக் கட்டுரைகள்

நூற்றாண்டு கண்ட புதுமைப்பித்தன், சி.பா.ஆதித்தனார், புலவர் குழந்தை, குத்தூசி குருசாமி, எமனோ எனும் ஐந்து அறிஞர்கள் பற்றி அமைந்த நாற்பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழியல் வரலாற்றில் மேற்குறித்தவர்களின் இடம் குறித்து ஆராய்ந்து உறுதிப்படுத்துகின்றன கட்டுரைகள். ஒவ்வொரு அறிஞர் பற்றியும் பல்பரிமாணக் கட்டுரைகள் வெளிவர வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது இந்நூல்.

3. மருதம்: இரண்டாயிரத்திற்குப் பின் வெளிவந்த தமிழ்ப்புதினங்கள் குறித்த ஆய்வுகள்

21ஆம் நூற்றாண்டில் வெளிவந்த 42 புதினங்கள் குறித்த 51 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ்ப் புனைவுலகில் அவ்வப் போது வெளிவரும் புது ஆக்கங்களை உடனுக்குடன் ஆய்வு செய்த அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திகின்றன கட்டுரைகள். பெரிதும் பேசப்படாத புதினங்கள் பற்றியச் சிரத்தையுடன் அதிக கட்டுரைகள் இடம்பெறுவது இத்தொகுப்பின் சிறப்பு.

4. நெய்தல்: பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு

பல்வேறு பொருண்மைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கட்டுரைகள் சில புதிய பொருண்மைகளில் வெளிவந்த தோடு அதற்கான அடிப்படைத் தரவுகளையும் கொண்டதாக உள்ளன.

5.பாலை: தமிழ் ஊடகங்கள் - இருபதாம் நூற்றாண்டு.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஊடகங்களின் போக்குகளை அதன் முக்கியத் திருப்பங்களைக் கவனத்தில் கொண்டு ஆராய்கிற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அச்சு, கேட்பு, காட்சி, வாய்மொழி ஆகிய ஊடக வகைமைகள் தமிழியல் கல்வியில் பெறும் இடத்தை அடையாளப்படுத்துகிறது இந்நூல். கட்டுரைகள் ஆரம்பகால வரலாறு, அதன் பயணதிசை, முடிவு பற்றி விரிவாகப் பதிவு செய்திருப்பதோடு அதன் ஊடக அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்துகின்றன.

6.வெட்சி: தமிழகத் தலித் ஆக்கங்கள்

தமிழ்ச் சூழலில் தலித்தியம் என்பது தனித்த மரபாக வளர்ந்துள்ள இக்காலத்தில் “தலித் ஆக்கங்கள்” பற்றிய பொருண்மையில் அமைகின்றன இந்நூல் கட்டுரைகள். 30 ஆளுமைகளின் படைப்புகளை விமர்சனம் செய்திருக்கும் கட்டுரைகள் அவர்களின் படைப்புகளைத் திரட்டி ஆவணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருப்பதை அறியலாம். இவை தலித் ஆக்கங்களின் போக்குகளை, அதன் வளர்நிலையை அறியப் பெரிதும் உதவுகின்றன.

7.கரந்தை: வெகுசன ஆக்கங்கள்

தமிழியல் கல்வியில் பெரிதும் அறியப்பெறாத ஒரு துறை வெகுசன ஆக்கங்கள். தமிழ் அச்சுப் பண்பாட்டில் மிக வளமாகச் செயல்பட்ட இவை குறித்த உரையாடலை முழுமையாக முன்னெடுத்துள்ளன நூல் கட்டுரைகள். குறுகிய காலம் மட்டுமே உலவும் இவ்வகை நூல்களை ஆவணப்படுத்தும் சிறந்த முயற்சி இந்நூல். இதனைக் கொண்டு வெகுசன ஆக்கங்களின் பதிப்பு, அச்சு, படைப்பாளி, விற்பனை, நுகர்வோர், ஓவியம் பற்றி விரிவாக ஆராயலாம். இதற்கான ஒரு கையேடு இந்நூல்.

8.வஞ்சி - இதழ்த் தொகுப்புகள்:

தமிழ்த் தொகுப்பு மரபில் இதழ்த் தொகுப்புகள் பற்றி முதன் முதலில் சிரத்தையாக ஆராய்கின்றன இந்நூல் கட்டுரைகள். தொகுப்பு முறையோடு இதழ், ஆக்கம், அரசியல் நிலைப்பாடு ஆகியன பற்றியும் விமர்சிக்கின்றன கட்டுரைகள். இதழ்த் தொகுப்பிலுள்ள குறைபாடுகளை அதிகம் முன்னிலைப்படுத்து வதோடு இளிவரும் தொகுப்புகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு ஒரு வரைவுச் சட்டகத்தை அளிக்கின்றது இந்நூல்.

இக்குறிப்பை எழுதியவர்: இரா.கமலக்கண்ணன், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வு செய்து வருகிறார்

Pin It