பல நேரங்களில் இலங்கை சம்பந்தப்பட்ட விவாதங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவையாகப் பிரித்துப் பேசப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நமக்கு முழுமையான புரிதல் இருப்பதில்லை. இலங்கை சம்பந்தப்பட நிலைப்பாடுகளில் பல பிரச்சனைகள் வருவதற்கும் இதுவே காரணம். நமக்குத் தேவை தற்கால நிகழ்வுகள் பற்றிய முழுமையான புரிதல் மட்டுமல்ல, கடந்த காலம் பற்றியான புரிதலும் தான். இந்த முழுமையான புரிதல், அந்தத் தளத்தில் தொடர்ந்த செயல்பாடுகளையும், தகவல் சேகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு கவனத்துடனும், உண்மையுடன் இருக்க வேண்டும். உலகத்தில் உள்ள பல விஷயங்களை போன்று இலங்கையைப் பொறுத்தவரையிலும் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களின் முக்கியத்துவம் பிரதானமானது. இலங்கையில் இருந்து போதுமான அளவு தகவல்கள் வெளிவரவில்லை, வெளிவரும் தகவல்களும் மிகுந்த சிரத்தைக்குப் பிறகே கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றை வெளிக் கொணர்ந்தவர்கள் சில நேரம் தங்கள் உயிரையே அதற்கு விலையாகக் கொடுத்திருக்கிறர்கள்.

கொழும்புவில் வசிக்கும் தோழர் கூறும்போது, போர்க் காலத்தில் இருந்ததைவிடத் தற்போதைய நிலைமை ஒரு சில வகைகளில் இன்னும் மோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். மறைமுகமான வன்முறையும், கண்காணிப்பும் பரவிக் கிடக்கும் வேளையில் அதிலிருந்து தப்பிப்பது கடினமானதாக உள்ளது. பல நேரங்களில் போதிய அறிவிப்பும் இருப்பதில்லை. இலங்கையை சிங்கள பௌத்த தேசமாக மாற்றி ஒரு பாசிச ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் ஜனநாயகம் என்ற போர்வைக்குள் இருந்து செய்யப்படுகின்றன. இதை ஊடுருவி உண்மையைப் பார்ப்பது ஒன்றும் கடினமானதாக இல்லை.

இலங்கையுடனான என்னுடைய தொடர்பை எடுத்துக் கூற வேண்டியது அவசியம். இதைச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள என்னுடைய உடன்பணியாற்றுவோர் போல், இலங்கையுடனான என்னுடைய உறவு வெறும் தமிழன் என்ற அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது ஒரு பகுதியாக இருந்தாலும், அது மட்டுமே முழுமையான உறவாக இருந்தது கிடையாது. தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் எனக்கும், இலங்கைத் தமிழருக்கும் இருக்கும் பொதுவான வரலாறும், பொதுவான பாரம்பரியக் கூறுகள் போன்றவையும் என்னை இலங்கைக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தையும் உந்துதலையும் பல வருடத்திற்கு முன்னேயே என்னுள் ஏற்படுத்தியது.

இன்று இலங்கை என்னுடைய இன்னொரு வீடு. நான் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும் இன்னொரு வீடு. அதுமட்டுமின்றி இந்தியனாகப் பிறந்துள்ள நான், அதன் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு என்னுடைய அரசியலை இசைவிணக்கம் செய்ய முற்படும் ஒரு தளம், எங்களுக்குள் பொதுவாக இருக்கும் ஒரு பகுதி வரலாற்றையும் மொழியையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இலங்கையில் உள்ள தமிழர்களின் வரலாற்றையும் வலியையும் போராட்டத்தையும் என்னுடையதாக்கிக் கொள்ள முடியாது. அதேபோல, 'தமிழ் மக்கள்' என்ற பொதுப்படையான, எளிமையான அரசியலையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது போன்ற புரிதல் பல நேரங்களில் குறுகிய சூளுரை அரசியலை முன்னெடுப்பதோடு, யாரைப் பிரதிநிதியாகச் செயல்படுத்துகிறோமோ அவர்களையே குரூரமாக அமைதிப்படுத்தவும் அழிக்கவும் செய்யக்கூடிய தன்மையுடையது.

மேலே கூறியுள்ள விளக்கத்திற்கான காரணம், இலங்கையின் மீது அக்கறை எடுத்துள்ள பெரும்பான்மை இந்தியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால். எப்படி இந்தியப் பெருநிலத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு, நாகாலாந்து ஒரு தொலைதூர உண்மையாக இருக்கிறதோ, அதேபோல விந்திய மலைத் தொடர்களுக்கும் மேலே இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, இலங்கையும் இருக்கிறது. அதனால் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ பங்கெடுக்கவோ செய்வதில்லை. தமிழ்நாட்டில் உள்ள நம்மில் பலருக்குக் காஷ்மீர் ஒரு தொலைதூரப் போராட்டமாக இருப்பது போன்றதுதான் இதுவும். மொத்தத்தில் இந்தியாவில், இலங்கைக்குத் தொடர்புடைய பல குரல்கள், தமிழ்நாட்டில் இருந்து வெளிவருகின்றன. அதனால் இந்த அரசியல் தொடர்பை விளக்க வேண்டியது அவசியமாகிறது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை என்னை இந்த அரசியல் விவாதத்தில் இருத்திக் கொள்வதற்கான விளக்கம்.

இந்தக் கட்டுரை, இன்றைய சூழலில் வட கிழக்கு இலங்கையைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளை எடுத்துக்கூறுவதற்கான முயற்சி.

தென் இலங்கையில் பிரச்சனைகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அப்பகுதியில் வேலையின்மை, வறுமை போன்ற பல வளரும் நாடுகளில் இருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. மிக முக்கியமாக, சாதாரண மக்கள் மத்தியில் "பிறர்" மீதான வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய, ஒரு சர்வாதிகாரியின் பிடியில் இருக்கும் அவர்களின் மதம், மொழி மற்றும் வாழ்வே அவர்களை அடிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமிழ்மக்கள் இத்தனை வருடகாலங்கள் மறைவான வாழ்க்கை வாழ்ந்தது போலவே இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்.

வட கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள், ஒரு கொடூரமான போர் காலகட்டத்தில் வாழ்ந்த தழும்புகளைத் தாங்கியுள்ளார்கள், ஒரு தலைமுறையே போரைத் தவிர வேறெதுவும் தெரியாமல் வளர்ந்துள்ளார்கள். இந்த அடிப்படையில் தான் போரின் "முடிவை' பற்றியும் அது விட்டுச்சென்றுள்ள ஓடுகளையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் வேலை செய்துவரும் பல இலங்கை நண்பர்களிடம் அப்பகுதியில் இருக்கும் பிரச்சனைகள் அடங்கிய பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தேன். போர்ச் சூழலில் நீண்ட காலம் பணிபுரிந்து வந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மரத்துப்போன வலியுடன் அவர்களுக்கு முதலில் தோன்றிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலை அனுப்பி வைத்தார்கள். இந்த இடத்தில் எச்சரிக்க விரும்புகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் நம்மைக் கையாலாகாதவர்களாக உணர வைக்கும். ஆனால், இந்தக் கட்டுரையிலேயே, நம்முடைய கையாலாகாததனத்திலிருந்து மீண்டு சென்று, நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்ற கேள்விகளை எழுப்ப முற்படுவோம்.

பிரச்சனைகளின் பட்டியல்:

1. "வளர்ச்சித் திட்டங்கள்" என்ற பெயரில் ஏற்கனவே நடந்து வரும் அழிவுகள். சுற்றுலா துறையை வளர்ப்பதற்காக அதிகமான செலவில் ஹோட்டல்கள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. அங்கு நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் குழப்பத்துக்கு உள்ளாக்கிவருகின்றன.

2. கேள்வி கேட்கப்படாமல் தொடரும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கெதிரானத் தடையால் தீவு தேசத்திலிருந்து வெளிவரும் உண்மைச் செய்திகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றன. பத்திரிக்கையாளர்கள் பலர் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகின்றனர்.

3. போர் சமயத்திலும் அதன் பிறகும் கைதிகளாகக் கூட்டிச்செல்லப்பட்ட பலரின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருகின்றன. பல குடும்பங்களுக்குத் தங்களின் உறவினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலைமையில், அவர்களைக் கண்டுபிடிக்கவும் எந்த வழியும் இல்லை. சிறையினுள் கொடுமையும் இன்னும் பல அக்கிரமங்களும் தொடர்ந்து வரும் நிலையில், கைதிகளின் மீது குற்ற வழக்குத் தொடர்வதோ, அவர்களை விடுவிப்பதற்கான அறிகுறிகளோ இல்லை.

4. அரசுடனான "அமைதிப் பேச்சுவார்த்தை" என்று கூறப்படும் முயற்சியில் அரசின் பிடியில் மட்டுமே இருக்கிறது. அரசல்லாத அமைப்புகள் இவற்றைக் கையிலெடுப்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. இந்த முயற்சிகளைத் தடுப்பதற்காக இவ்வமைப்புகள் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிரான சின்னதொரு குரல் எழுப்பியதால் பல அமைப்புகள் கொடுமையான விளைவுகளைச் சந்தித்துள்ளன.

5. மறுகுடியமர்த்தல் தொடர்பான எண்ணற்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. ஜனநாயக ரீதியான, அனைவரும் அணுகும் வண்ணமான, உறுதியான எந்த ஒரு முறையும் செயல்படுத்தப் படவில்லை. நிலம் அளிப்பதற்கு மக்கள் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. தொடர்ந்த வெளியேற்றம் மற்றும் போரினால் ஏற்பட்டுள்ள அழிவினால் பெரும்பாலான மக்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பிப்பது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. எந்த அதிகார அமைப்பை அணுகவேண்டும் என்பது கூட மக்களுக்குத் தெளிவாக இல்லை. தங்களின் பழைய இருப்பிடங்களிலேயே நிலம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், முகாம்களில் தங்களது இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டுப் பரிதவிக்கும் அந்த இடைக்காலத்திற்கு அரசு கணக்குக் காட்டுவதில்லை. இதனால் பல குடும்பங்கள் இருக்க இடமில்லாமல், உணவில்லாமல் எந்த அடிப்படை வசதியுமில்லாமல் இருக்கின்றன. மறுகுடியமர்த்தப்படும் மக்களுக்குத் தங்கள் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்வதற்குத் தேவையான எந்த உதவிகளும் செய்யப்படுவதில்லை. தாங்கள் இழந்த வாழ்வை, சில நேரங்களில் 30 வருடங்களுக்கும் மேலாக, கட்டமைத்துக் கொள்வதற்கான பணமோ, மற்ற அடிப்படைத் தேவைகளோ வழங்கப்படுவதில்லை. ஊழல் மலிந்து கிடக்கிறது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களால் எந்த உதவிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்தப் பணிகளில் பெரும்பான்மை இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்கள் அரசினைக் கேள்வி கேட்கும் உரிமையை இழந்துள்ளனர்.

6. வட கிழக்குப் பகுதிகள் பலவற்றிலும் இராணுவக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் முழுக்க முழுக்க எந்த ஒரு அரசு பாதுகாப்பும் இல்லாமல், வெறும் இராணுவத்தால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அதிபரின் சிறப்புப் படைபிரிவு போன்ற பிற இராணுவப் பிரிவுகள் தங்கு தடையற்ற அதிகாரத்துடன் சில பகுதிகளின் மீது ஆளுமை செலுத்தி வருகின்றன. இங்குப் பல பகுதிகளில் எந்த வேலையையும் செய்ய அதிபரின் சிறப்புப் படையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவசர காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாலும், தீவிரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருவதாலும் இப்பகுதிகளில் தொடர்ந்த இராணுவக் கட்டுப்பாட்டை எந்தத் தடையுமின்றிச் செயல்படுத்த முடிகிறது.

7. இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் குடும்பங்களிலும் வெளிப்படுவதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டின் இறுக்கத்தில் இருப்பதால், பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை பற்றி முறையிடுவதற்குக் கூடச் சட்டத்தை அணுகுவதில்லை.

8. மனிதாபிமான பணிகள் கூட ஜப்பான், சீனா மற்றும் இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கட்டுவது, மின் உலைகள் கட்டுவது போன்ற பணிகள் மட்டுமன்றி, சாலைகள், சாலை மீதான பறக்கும் பாலம் அமைப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளன. இது போன்ற பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தருவது, சமமான பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இதுபோன்ற முயற்சிகள் கண்மூடித்தனமாகச் செய்யப்பட்டு வருகின்றன. நமக்குக் கிடைக்கும் செய்தியின்படி, இந்தியாவைச் சேர்ந்த அரசு சாராப் பெண்கள் அமைப்புக்கு இலங்கையில் மனிதாபிமான வேலைகள் செய்வதற்கான பண உதவியை இலங்கை அரசு வழங்கிவருகிறது. இலங்கையில் எண்ணற்ற அரசு சாரா அமைப்புகள் இருந்தபோதும், அவர்கள் காலம் காலமாக வேலை செய்துவரும் பகுதிகளில் 'பாதுகாப்பான வெளியாட்கள்' வந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

9. இறுதியாக ஆனால் முக்கியமாக, போர்க் குற்றத்தை விசாரிக்கவோ அல்லது ஒப்புக் கொள்ளவோ தேவையான சர்வதேச நெருக்கடி ஏற்படாதது. போதுமான அளவு கவனம் இல்லாதபோதும், ஐநா அறிக்கை மற்றும் சேனல் 4 ஆவணப்படம் போன்றவை வரவேற்கத்தக்கன. இந்த ஆதாரங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகள் சந்தேகத்துக்கு இடமில்லாதவண்ணம் இருந்தபோதும் ( இது போன்ற அப்பட்டமான போர்க் குற்றங்களை நிரூபிக்க வேண்டிய நிலைமையின் முட்டாள்தனத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் கூட) இந்த ஆதாரங்களைப் பொய்கள் கொண்டு எதிர்த்துள்ளனர். சர்வதேசத் தலையீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்கள். இதைச் செய்வதற்குத் துணையாக இருப்பது தேசியம் மற்றும் தேசிய இறையாண்மை என்பதன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதங்கள். இவைதான் ஒரு சர்வாதிகாரத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள். இலங்கை சர்வதேசத் தலையீட்டை மறுப்பதற்கு ஆதரவாக இருப்பது, இப்பகுதியின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் அக்கறையின்மையும், இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியா முனைப்புடன் பங்கேற்பதும் தான்.

இந்தக் கட்டுரையில் "மறுகுடியமர்த்தல்" தொடர்பான செய்திகளையும் அதிலும் குறிப்பாக நிலம் பிரித்துக் கொடுத்தல் தொடர்பான பிரச்சனைகளையும் தீர ஆராய்வோம். இந்தப் பிரச்சனைகள் எவ்வளவு நுணுக்கமானவை என்றும், இவற்றைக் கையிலெடுப்பதற்குத் தேவை அதே அளவு நுணுக்கமான வேலைகளும் செய்ய வேண்டியிருக்கின்றன, வெறும் ஆடம்பர முழக்கங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது.

எண்ணிக்கை தொடர்பான கேள்வி

மறுகுடியமர்த்தல் பற்றிப் பேசும்போது எத்தனை மக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

இவை வெறும் அரசு எண்ணிக்கை மட்டுமேயென்பதால், இலங்கையில் உள்ள களச்செயல்பாட்டாளர்கள் இந்தக் கணக்குகளை மிகக் கவனமாகவே பயன்படுத்துகிறார்கள். பவானி பொன்சேகா விளக்குவது போல:

“உள்நாட்டு அகதிகள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரபூர்வ எண்ணிக்கை இருந்தபோதிலும், அரசின் அதிகாரபூர்வ அமைப்புகளில் பதிவு செய்யப்படாதோர் அல்லது இடப்பெயர்வு என்னும் விளக்கத்தில் விடுபட்டோர் எண்ணற்றோர் உள்ளனர். இவர்களுள், ஆதரவளிக்கும் குடும்பங்களுடன் வசிப்போர், இரவு நேர உள்நாட்டு அகதிகள் மற்றும் தங்களின் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பி வந்த பிறகு கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கும் மக்கள் ஆகியோர் அடங்குவர். எனவே, இடப்பெயர்ப்பின் உண்மையான இயல்பை அறிந்து கொள்ள, வெறும் அரசு எண்ணிக்கையை மட்டும் சார்ந்திராமல், சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பிச் செல்லும் மக்களின் வாழ்நிலை, அவர்களால் தங்கள் சொந்த வீட்டிற்கோ, நிலங்களுக்கோ திரும்பிச் செல்ல முடிகிறதா அல்லது மறுகுடியமர முடிகிறதா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு, கள உண்மைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைமையைக் கட்டமைப்பதற்காக மட்டுமே இந்த எண்ணிக்கைகளைப் பயன்படுத்தி வருகிறது.”

இந்த எண்ணிக்கைகளில் குறைபாடு இருந்த பொழுதும், எத்தனை மக்கள் இடம்பெயர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், இவர்களை மறுகுடியமர்த்தல் எவ்வளவு சவாலான விஷயம் என்பதையும் இந்த எண்ணிக்கையின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. 20,238,000 மக்கள் இருக்கின்ற ஒரு நாட்டில், இதிலும் 18 சதவிகிதம் தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உட்பட) 7 சதவிகிதம் இஸ்லாமியர்களும் இருப்பதாகச் சொல்லப்படும் நாட்டில், அகதிகளின் எண்ணிக்கை இவ்வளவு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகவல்களின் மூலம், தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது விளங்குகிறது. மறுகுடியமர்த்தல் இலகுவான வேலையாக இருக்கப்போவதில்லை. இதற்குத் தேவை திறமையான செயல்பாடும், அதைவிட முக்கியமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை முதன்மையாகக் கொண்ட அரசியல் விருப்பமும் தான். இந்த அரசியல் விருப்பம் இலங்கை அரசிடம் சுத்தமாக இல்லை. இலங்கை அரசின் இத்தகைய விருப்பமின்மையை ஆதரிக்கும் வண்ணமும், ஊக்கமளிக்கும் வண்ணமும் அண்டை நாடுகள் செயல்படுகின்றன. இந்தப் பட்டியலில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.

மக்கள் தங்கள் நிலத்தை விட்டு எதற்காக வெளியேறினார்கள்?

இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் அல்லது இஸ்லாமியரின் மறுகுடியமர்த்தல் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன், இவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட காரணத்தை நினைவுறுத்திக் கொள்வது அவசியம். காரணங்கள் பின்வருமாறு:

1. முதல் காரணம் போர். இதன்மூலம் பல காரணங்களுக்காக இந்தப் போர் நடக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்க்கப்பட்டார்கள். அதில் முக்கியமான காரணம், அரசு மற்றும் அரசல்லாத குழுக்களால் இவர்களின் நிலம், வீடுகள் மற்றும் பொது இடங்களான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை ஆக்கிரமிக்கப்பட்டன. அரசல்லாத குழுக்களைப் பொறுத்தவரையில், தன்னார்வ "தானம்" என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது போன்ற ஒரு செயலின் "தன்னார்வம்" வட கிழக்கு இலங்கையில், போரின் தொடக்கத்திலிருந்தே, புரிந்து கொள்வதற்கு இலகுவான கதையாக இருந்ததில்லை. இரு தரப்பு ஆக்கிரமிப்பும் வெவ்வேறு நிலையில் நடப்பதால் இவற்றை ஒப்பிட முடியாது என்ற போதிலும் இரண்டில் ஒன்றை நியாயப்படுத்த முயற்சிப்பது என்பது தவறானதாகவும் மூன்று வருட களஆய்வு உண்மையின் வரலாற்றிற்கு எதிரானதாகவும் இருக்கும்.

2. போரின் உக்கிரம் தாங்கமுடியாமல் மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறுவது என்பது கண்கூடான காரணம். பலர் மரணத்திலிருந்து நூலிழையில் தப்பித்ததாலும், இன்னும் பலர் குடும்ப உறுப்பினர்கள் கணக்கற்றோரை இழந்ததாலும் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேறினார்கள். சில நேரங்களில் வாழ்வாதார இழப்பும் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ முடியாத நிலையும் மக்களை அவர்களின் இடங்களிலிருந்து வெளியேற வைத்திருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் மேலே கூறப்பட்டுள்ள காரணங்களில் கூட்டுப் பாதிப்புகள் காரணமாக இருந்துள்ளன.

3. மக்கள் வெளியேறுவதற்கான மற்றொரு காரணம்; அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு கூறிய சந்தர்ப்பங்கள் மிக முக்கியமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று. அக்டோபர் மாதம் 1990 ஆம் வருடம், வடக்கு மாகாணங்களிலிருந்து இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியது. 24 மணிநேரக் கெடு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அவர்களில் பெரும்பாலானோர் புட்டலம் மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இப்போது தான் வடக்கு இலங்கைக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர். இது ஒரு சமூகத்தைக் குறிவைத்து நடந்த இடப்பெயர்வு என்பதால் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டி இருக்கிறது. போர்ச் சூழலில், இலங்கை இராணுவம் தொடர்ந்து அதிக அளவிலான மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறது என்பது நாம் அறிந்ததுதான்.

4. இயற்கைப் பாதிப்புகள், இலங்கையில் மக்கள் வெளியேறுவதற்கான முக்கியமான காரணமாக இருந்துள்ளன. இந்தப் பாதிப்புகளுள் ஒரு மில்லியன் மக்களை வெளியேற்றிய சுனாமியும் ஒன்று. இந்தத் தீவு தேசம் சுனாமியால் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கான உயிரிழப்புகளையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்துள்ளது. இந்தத் தேசத்தின் 1000 கிமீ கடற்கரை பாதிக்கப்பட்டதோடு, 26 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் முற்றிலும் முடங்கிப் போயின. இலங்கையில் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் வழக்கமான ஒன்று. 2010 திசெம்பர் மாதம் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்திய சிறிது காலத்திலேயே, 2011 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றுள், கிழக்கு மாகாண மாவட்டங்களான அம்பாறை, திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு, வடக்கு மாகாண மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் மட்டுமே 873, 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதைத்தவிர 75,245 பேர் இந்த மாவட்டங்களில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாம்களிலிருந்தும் நல மையங்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்கள்.

5. உயர் பாதுகாப்பு மண்டலங்கள் இடப்பெயர்வுக்கான இன்னொரு முக்கியக் காரணம். எடுத்துக்காட்டாக, 2003 ஆம் வருடம் இந்த இடப்பெயர்வுகளின் விவரம் பின்வருமாறு: யாழ்பாணத்தில் மட்டும் 160 சதுர கிலோமீட்டர் அளவுக்கு, அதாவது மொத்த நிலப்பரப்பில் 18% நிலப்பரப்பில் 18 உயர் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளின் கணக்குப்படி, உயர் பாதுகாப்பு மண்டலங்களுக்குள் 30,000 வீடுகளும் 300 பள்ளிக்கூடங்களும் 25 சாலைகளும் 40 தொழில்மையங்களும் 42,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பயிரிடக்கூடிய நிலங்களும் இருக்கின்றன. இலங்கையின் சட்டப்படியும் சர்வதேச சட்டப்படியும் உயர் பாதுகாப்பு மண்டலங்கள் அமைப்பதற்கோ, அதற்காக குடிமக்களின் நிலங்களை எடுப்பதற்கோ எந்த அடிப்படையும் கிடையாது. போரின் 'முடிவிலாவது' இந்த நிலங்கள் மக்களுக்கு மீண்டும் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு மாறாக இலங்கை அரசு, உயர் பாதுகாப்பு மண்டலங்களை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றியுள்ளது. இதற்கு உரிய எடுத்துக்காட்டு திரிகோணமலை மாவட்டத்தில் இருக்கும், சம்பூர் தான். இந்த நிலத்தை முதலில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததால், 4000 குடும்பங்கள் இப்பகுதிககளுக்குத் திரும்புவது தடுக்கப்பட்டது. இதன்பிறகு, 2008 ஆம் வருடம், அரசுப் பதிவேடுகளில் இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவரங்கள் மாற்றப்பட்டுச் சிலர் திரும்பிச் செல்ல முடிந்தது. ஆனால், இந்த நிலக் கையகப்படுத்தலால் பாதிக்கப்பட்டு நிலமின்றி இன்னும் 6000 மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மகிந்தா ராஜபக்சாவின் அரசு இந்த நிலத்தைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலத்தில், இலங்கை அரசு நிறுவனமான இலங்கை மின் வாரியம் மற்றும் இந்திய அரசிற்கும் இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 500 மெகாவாட் மின் உலை அமைக்கப்பட விருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு நிலம் கையகப்படுத்துவது புதிய விஷயமில்லை. இந்தக் கையகப்படுத்தலின் போது சிங்களவர்கள் இந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதும் வழக்கம். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களின் நிலங்களைத் திட்டமிட்டுக் கையகப்படுத்தியதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக, மகாவேலித் திட்டத்தின் வரைபடங்கள் இருக்கும். பாசிசத்திற்கும், சமமற்ற வளர்ச்சிக்குமான இணக்கத்திற்கும் இதுவே எடுத்துக்காட்டு.

6. மேலே குறிபிட்டுள்ள அனைத்தும் "இடப்பெயர்வு" பிரச்சனையைப் பற்றிப் பேசுவன. இன்னும் பலர், தங்களின் நாட்டை விட்டு வெளியேறி அவர்களால் வேறு எந்த நாட்டிற்குச் செல்ல இயலுமோ அங்குச் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 73,000 அகதிகள், 122 முகாம்களில் வசித்து வருகிறார்கள். இன்னும் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியில் வசித்து வருகிறார்கள் என்பது அரசு தரும் கணக்கு. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு தங்கள் நாட்டிற்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. உலக நாடுகள் 64இலிருந்து அகதிகளாகப் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,46,000. நம்முடைய பொது அறிவு நமக்குக் கூறுவது போல இது பனிப்பாறையின் நுனி மட்டுமே.

மக்களால் ஏன் அவர்களின் நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாது?

“பிரச்சனையின் நேரடித் தாக்கத்தினால் 300,000 மக்கள் இடம்பெயர்க்கப்பட்டுள்ளார்கள். ஆகஸ்டு 12, 2010 ஆம் ஆண்டின் கணக்குப்படி 196, 909 பேர் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள். ஆயினும், இவர்கள் திரும்பிச்சென்றதன் தன்மை என்ன என்பதற்குச் சம்பந்தப்பட்ட கேள்விகளும் நிலையான தீர்வுகளை ஒட்டிய கேள்விகளும் பதிலளிக்கப்படாமலேயே உள்ளன. அதே அமைப்பின் கணக்குப்படி, 34,370 பேர் வவுனியாவில் உள்ள மேனிக் பார்ம் முகாம்களிலும் 2,239 பேர் யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம்களிலும் - மொத்தத்தில் 36, 609 உள்நாட்டு அகதிகள் முகாம்களில் இன்னும் இருக்கின்றனர். மேலும் 70,949 பேர் ஆதரவு அளிக்கும் குடும்பங்களுடன் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். வடக்கு இலங்கையில் 90% மக்கள் மறுகுடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்று அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கூறும்போதும், "திரும்பிச் செல்லுதல்" மற்றும் "மறுகுடியேறுதல்" ஆகிய சொற்றொடர்களின் குழப்பத்தினால் அப்பகுதிகளில் உள்ள உண்மை நிலவரத்தைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, தங்களின் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பிச் சென்று ஆனால் மீண்டும் இடப்பெயர்விற்கு ஆளாகிக் கைவிடப்பட்ட நிலையிலோ, மிக மோசமான வாழ்நிலைகளிலோ இருக்கிறவர்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள் தொடர்கின்றன.”

இந்த மேற்கோள் நாம் கையில் எடுத்துள்ள பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்கான அடித்தளமாகப் பல வகைகளில் இருக்கிறது.

1. முதலாவதாக, ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் திரும்பத் தரும் நிலையில் இருக்க வேண்டும். தற்போது பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இந்த நிலங்கள், முன்னாள் உயர் பாதுகாப்பு மண்டலங்கள், இந்நாள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம்; இராணுவத்தால் 'பாதுகாப்பு காரணங்களுக்காக' கையகப்படுத்தப்பட்டிருக்கலாம். தற்போதைய ஆட்சியின் கீழ் அந்தக் கையகப்படுத்தலைக் கேள்வி கேட்க முடியாது; கண்ணிவெடிகள் இந்த நிலங்களில் இருப்பதும் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. மக்கள் வசிக்கும் நிலங்களிலிருந்து கண்ணி வெடிகள் களையப்பட்டாலும் விவசாயம் இல்லாதால் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் ஏதும் இல்லை.

2. அடுத்ததாக எழும் கேள்வி, இந்த மக்கள் எங்கு தான் திரும்பச் செல்வது? சில கிராமங்களில் இருந்த மக்களின் விவரங்கள் முகாமில் குறிக்கப்பட்டிருக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் அந்தக் கிராமத்திற்குத் திரும்பச் செல்லலாம். இது போன்ற பாதிப்புகள் இல்லாத நேரத்தில், எந்த முறையான திட்டமோ, பாதிக்கப்பட்ட மக்களுடனான கலந்தாய்வோ இன்றி வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொடர்ந்த இடம்பெயர்தலுக்கு ஆளாக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாக இந்த நிலைமை ஏற்படுகிறது.

3. திரும்பச் செல்வதற்கான இடம் ஒரு குடும்பத்துக்கு இருக்கும் பட்சத்தில், அவர்களின் சொத்துரிமைக்கான சரியான ஆவண ஆதாரம் இருக்க வேண்டும். தொடர்ந்த பிரச்சனைகளால், இது போன்ற ஆதாரங்கள் தொலைந்தோ, அழிந்தோ போயிருக்கும் நிலையில், இம்மக்களிடம் ஆதாரம் எதுவும் இருப்பதில்லை. அசல் ஆவணங்கள் தொலைந்த நிலையில், அதற்கான மாற்று ஆவணங்களைப் பெறுவதற்காக எந்த அதிகாரிகளைச் சந்திப்பது என்று மக்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. இதற்கான அரசுத் துறையைத் தெரிந்து கொண்டாலும், ஆவணங்களைப் பெறுவதற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

 4. ஆவணங்கள் இருக்கும்போது கூட நிறையக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்த எல்லைகள் போர்ச் சூழலினால் மாற்றத்திற்குள்ளாகியுள்ளன. மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவதால், எந்த அரசுத் துறையின் கீழ் அந்த நிலம் வருகிறது என்பதும் குழப்பமாகத் தான் இருக்கிறது. இதனால், அரசுத் துறைகளுக்குள்ளும், மக்கள் மத்தியிலும் நிறையச் சச்சரவுகள் ஏற்படுகின்றன. இந்தச் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான எந்த வழிமுறையும் அரசிடம் இல்லை. இதற்கும் மேல், இரண்டாம் சொத்துடமை என்ற பிரச்சனையும் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் இருக்கும் நிலங்கள் பலபத்தாண்டுகளாக நிலத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதனால் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை எழுகிறது. இது போன்ற அடிப்படைப் பிரச்சனைகளை அரசாங்கம் கையாளத் தொடங்கவில்லை.

5. இங்கு நாம் நினைவில் இருத்திக் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், மறுகுடியமர்த்தலுக்கான பயணத்தைத் தொடங்குவதற்கு, முகாமில் உள்ள ஒருவர் தன் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு வெளியேற வேண்டும். ஆவணங்கள் இல்லாத காலகட்டத்தில் அல்லது திறமையற்ற இந்த நிர்வாகம் அவருக்கான நிலத்தை அவருக்கு அளிக்கும் வரையில், அவர் தங்க இடமின்றி அடிப்படை வசதிகள் இன்றித் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் அரசின் எந்த உதவியும் இல்லாமல் ஆதரவளிக்கும் குடும்பங்களுடன் நீண்ட காலம் தங்கி இருக்க நேருவதால் இந்த இடைபட்ட காலகட்டம் மிக பிரதானமான பிரச்சனையாக இருந்து வருகிறது.

6. அப்படியே நிலம் ஒதுக்கப்பட்டாலும், வசிக்கும் நிலத்திற்கு, விளைநிலத்தைவிட முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியது போல, அவர்களின் முக்கியமான தொழிலான விவசாயத்தை மீண்டும் தொடங்குவது கடினமாகிறது. மேலும், உள்நாட்டு அகதிகளின் மறுகுடியமர்த்தலுக்கு எந்த உதவியும் செய்யப்படுவது கிடையாது. அவர்களின் நிலங்களுக்கு, சில நேரங்களில் 25 வருடங்களுக்குப் பிறகு, திரும்புவோருக்கு அவர்கள் வாழ ஏதுவான எந்த உதவியும் செய்யப்படாமல் நிர்க்கதியாக விடப்படுகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான    காலம் வரையிலும் அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கூடச் செய்து தரப்படுவது கிடையாது. மனித உரிமை அமைப்புகளின் மீதான கட்டுப்பாடுகள் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் தடுக்க வழிவகை செய்கின்றன.

7. மேலும், ஏற்கனவே சொந்த நிலம் இல்லாதவர்களுக்கோ மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டதன் பிறகும், நிலத்திற்குரிய ஆவணங்கள் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கோ, இலங்கையின் புதிய சட்டத்தின்படி நிலம் ஒதுக்கப்படமாட்டாது.

8. இங்கு நினைவுகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்வதற்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவர்களே , தங்கள் ஊர்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்கள். உதாரணமாக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பச் செல்லும் இஸ்லாமியர்கள் அனைவரும், 1990இல் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்களில் தாங்கள் இடம்பெயர்ந்த புதிய இடங்களில் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்ள முடியாத ஏழ்மையான நிலையில், முகாம்களில் இருக்கும் இஸ்லாமியர்களே யாழ்ப்பாணத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் மேற்சொல்லப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளும் பன்மடங்காக அதிகரிக்கின்றன.

இந்தச் சூழ்நிலைகளில் தான், வடக்கு இலங்கையில் உள்நாட்டு அகதிகளுக்கு வீடு கட்டித் தரும் பெரியளவிலான ஒரு திட்டத்தை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்திய அரசும், அதன் " ஆலோசனை நிறுவனங்கள்" இரண்டும், இந்துஸ்தான் ப்ரிஃபாப் லிமிடெட் மற்றும் ஆர்பிபி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், வடக்கு இலங்கையில் 50,000 வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளன. முதற்கட்டமாக 1000 வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாமதத்திற்கான காரணம் இத்திட்டத்தில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பதைப் பற்றியதாக இருக்கிறது என்று இன்னும் உறுதிசெய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. இதில் வழக்கம் போல இந்திய அரசு முழு அதிகாரம் கேட்டுத் தனது 'பெரிய அண்ணன்' போக்கைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. இரண்டு அரசாங்கங்களும், நிறுவனங்களும் பணத்திற்காக இத்திட்டத்தைப் பயன்படுத்திச் சண்டையிடுவதால், இதற்கான தீர்வு விரைவில் கிடைக்காது.

இந்திய அரசின் அதிகாரபூர்வச் செய்திக் குறிப்பில், முதற்கட்டத் திட்டத்திற்குத் தேவையான பயனாளிகளின் தகவல் அடங்கிய பட்டியலைக் கூட இலங்கை அரசு தாமதிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான நில உரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே நிலம் வழங்கப்படும் என்பது நாம் அறிந்ததே. இதனால் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். இங்கு ஆளுமைத் துறைகள் அடிப்படையான விஷயங்களைக் கூடச் சரியாகச் செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில், வெளிப்படையான செயல்பாடுகளை எதிர்பார்ப்பதே தவறு. ஊழல் மற்றும் நமக்குப் பரிச்சயமான இன்னும் பல பிரச்சனைகளும் அதிக அளவில் இருக்கும். இதையெல்லாம் மீறி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டாய இழப்பீடு தருவது போன்ற அடிப்படை மனித உரிமைகளைப் பற்றிக் கூட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாத இந்திய அரசு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மட்டும் நடத்துவது சரியா என்ற அரசியல் கேள்வி தொக்கி நிற்கிறது.

வரலாற்றில், நிலம் தொடர்பான கேள்விகள் அரசு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையாக இருந்தது கிடையாது, குடும்பத்திற்குள்ளான பேச்சுவார்த்தையாகவே இருந்திருக்கிறது. பெண்வழிக் குடும்பங்கள் பற்றியும், நிலத்திற்கான உரிமையைப் பெண்களுக்கு வழங்குவது போன்ற விவாதங்கள் இருந்தாலும், இவற்றை நடைமுறைப்படுத்துவது இயலாத ஒன்றாகவே இருந்துள்ளது. ஆண் துணை இல்லாதபோதே பெண்கள் பெயரில் ஆவணங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆண்கள் இல்லாத நிலையையும், நிரூபிக்க வேண்டிய பொறுப்பு பெண்ணினுடையதே. அவளுக்கான சம அதிகாரமும், பாதுகாப்பும் சட்டதிட்டங்களின் ( உள்ளூர் மற்றும் பிற) மூலம் வழங்கப்பட்டுள்ளதா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது.

முடிவுரை:

நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையைப் பகுத்துப் பார்த்தது போல மேலே குறிப்பிடப்படுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் சிறு சிறு விஷயங்களாகப் பகுத்துப் பார்க்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை தொடர்பான பிரச்சனைகளில் வேலை செய்வதற்குத் தொடர்ந்த, ஆழ்ந்த புரிதலும் சின்னஞ்சிறு தகவலையும் ஆராய்வதற்கான கவனத்துடனும் செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் கூறியது போலப் பெரிய சூளுரைகளால் நாம் யாரின் பிரதிநிதியாகப் பேசுகிறோமோ அவர்களையே ஒதுக்கிவிட நேரும் என்பது ஒரு காரணம். இரண்டாவதாக, சிறு தகவல்களில் கவனம் செலுத்துவதின் மூலம் மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பணிகளில் குறுகிய காலத்தில் நிறையச் சாதிக்க முடியும், நீண்ட காலத்தில் இலங்கையின் சர்வாதிகார ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வேலைகளுக்கும் பயன்படும்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, "இந்தியக் குடிமகளாக" நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டாய அடையாளத்தைச் சுமந்தவர்களாகவும் இந்த அடையாளத்தை எதிர்ப்பவர்களாகவும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளவர்களாகவும் இலங்கையின் இன்றைய நிலையை அணுகினால், ஒரு சில வழிகள் புலப்படும்.

முதலில் பல பத்தாண்டுகளாக நாம் மேற்கொண்டு வரும் ஆடம்பரச் சூளுரை அரசியலில் இருந்து விலகுவது அவசியமாகிறது. முற்றும் அழிந்து, அதனால் ஏற்படும் குழப்பத்திலிருந்து புரட்சிகரமான மாற்றங்களும் புதிய கற்பனைகளும் உருவாவதற்கான வாய்ப்புகள் நமக்குப் பல நேரங்களில் புலப்பட்டுள்ளன. இன்று இலங்கையில் நிலவுவது அப்படி ஒரு சூழ்நிலை தான். இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சனையை நாம் அணுகி வந்துள்ள விதத்தையும் அதை விளக்க நாம் பயன்படுத்தி வந்துள்ள மொழிநடையையும் நாம் மறுபரிசீலனை செய்ய ஏதுவான நேரம் இது. அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாக இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் இப்போது இலங்கையில் இல்லாத நிலையில், இலங்கையின் வரலாற்றைத் திறந்த மனதுடன் திரும்பிப் பார்க்கவும் இலங்கைப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளின் அரசியலையும் செயல்களையும் பகுத்தறியும் சமயம் வாய்த்துள்ளது.

மிக முக்கியமாக இலங்கையில் இருக்கும் இஸ்லாமியர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், திரிகோணமலைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ்க் கிறித்தவர்கள், மீனவச் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் மற்றும் சிங்களவர்கள் என்ற பன்முகப்பட்ட அடையாளங்களை,உண்மையில் உணர்ந்து கொள்வதற்கான தருணம் இது. இக்குழுக்களுக்கு இடையேயான வரலாற்றுப் பாரம்பரிய அனுபவ வித்தியாசங்களையும், தற்காலத் தேவைகளையும் புரிந்து கொண்டால் மட்டுமே, இது தொடர்பான வேலைகளில் நம்முடைய ஈடுபாடு அர்த்தமுள்ளதாக அமையும். பரந்துபட்ட பேச்சுகளால் ஈடு செய்ய முடியாத இழப்புகள் ஏற்பட்டுத் தற்போது ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் நம்மைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு மேலும் இந்தப் போக்குகளைத் தொடர முடியாது.

இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள களப்பணியாளர்கள் என்ற முறையில் நமக்கு உள்ள பாதுகாப்பையும், பாஸ்போர்டையும் பயன்படுத்திக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் நிலையை நாம் நேரில் சென்று பார்க்கவேண்டியது அவசியமாகிறது. உடன் பணியாற்றுவோர் பலர், தாங்கள் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலத்தை ஒரு முறை கூட நேரில் சென்று பார்க்காதது என்னை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இலங்கை போன்ற போர்ச் சூழலில் இல்லாதவர்களாக நமக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அங்குச் சென்று நேரில் நிலைமையைப் பார்த்தால் மட்டுமே, போர்ச் சூழலும் இழப்பும் போரின் நிதர்சனமான உண்மைகளும் நமக்குப் புரியும். வடக்கு இலங்கையின் ஏ9 நெடுஞ்சாலை வழியே முதன்முறையாக நான் பயணம் செய்தது என் வாழ்க்கை முழுக்கவும் நினைவில் இருக்கும்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் இலங்கை பற்றியான களவேலை செய்பவர்களுக்கு, இலங்கைக்குச் செல்வது ஏறக்குறைய இயலாத காரியமாகவே இருந்துள்ளது. இதற்கு முந்தைய தலைமுறைகளில் களச் செயல்பாட்டாளர்களால், இலங்கை அரசுடனோ, லிஜிஜிணி உடனோ, பிற அமைப்புகளுடனோ பயணம் செய்யும் வாய்ப்பு இருந்தது. நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டியது அவசியம் என்பதால், நமக்குக் கருத்தளவில் ஒப்புதல் இல்லாத அமைப்புகள், வெளிநாட்டு அரசல்லாத அமைப்புகளுடன் அங்கே செல்வது அவசியமாகிறது. இலங்கை அரசுடன் பயணம் செய்யும் வாய்ப்பும் இல்லை, அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது நாம் நன்கு அறிந்ததே. அதேநேரத்தில், அரசுக்கு ஆபத்தற்றதாகப் பார்க்கப்படும் மனிதாபிமான அடிப்படையிலான வேலைகளைச் செய்யும் அரசல்லாத அமைப்புகளுடன் அங்குச் செல்வது அவசியமாகிறது. இது போன்ற வேலைகளுக்கான இடமும் இலங்கையில் குறைக்கப்பட்டு வருகிறது என்பதையும் நான் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள களச்செயல்பாட்டாளர்கள், இலங்கையின் மக்களின் தமிழுடன் ஒத்துபோகக் கூடிய விதமான தமிழைப் பேசக்கூடியவர்களாக நமக்கு இந்தப் பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. உண்மையற்ற, ஆழமற்ற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில் நாமே நேரில் சென்று தகவல் சேகரிப்பது மிக அவசியமாகிறது. பகுத்தறியும் தன்மை அதிகப் பயன்பாட்டில் இருக்க வேண்டியது இலங்கைப் பிரச்சனைகள் போன்றவற்றில் மிக அவசியம். அதுமட்டுமின்றி, எப்போதுமே அதிக உதவி ஆபத்தை விளைவிக்கப் போவதில்லை.

இப்போது ஊடக செய்திகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. ஊடக உலகின் ஒரு பகுதி கோட்பாடுகளற்று, பொறுப்பற்றுச் செயல்பட்டு வரும் நிலையையும், மறு பகுதி கருத்துச் சுதந்திரமின்றி மொத்தமாக வேட்டையாடப்பட்டு வருவதையும் பார்க்கிறோம். இதனால் நமக்குக் கிடைக்கும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது. நமக்குக் கிடைக்கும் செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அந்தச் செய்திகளைப் படிக்கும் போது இவற்றை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.

உச்சகட்ட சந்தர்ப்பங்களில் நேர்மையான எண்ணம் கொண்ட இந்திய அமைப்புகள் கூட இலங்கை அரசுடன் இணைந்து வேலைகள் செய்ய வேண்டியிருகிறது. இலங்கையில் உள்ள தொண்டு நிறுவனங்களைத் தவிர்த்து இலங்கை அரசு தங்களுடன் இணைந்து வேலைகள் செய்வது எதற்காக என்று அவர்களே, அவர்களைக் கேட்டுக் கொள்வார்கள் என்று நாம் கற்பனை செய்து கொள்வோம். அதனைத் தொடர்ந்து தாங்கள் ஏன் அங்குக் கொண்டு வரப்பட்டுள்ளோம் என்பதன் அரசியலை அவர்கள் அறிந்து கொள்ள நேரிடும். தோழமை நல்குதலிலும் பிறர் பிரச்சனையைத் நமதாக்கிக் கொள்வதிலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். பொதுவான வரலாறு நமது பலம் என்ற போதிலும் அதே வரலாற்றில், வாழிடங்களில், அடையாளங்களில் ( அரசால் புகுத்தப்பட்டவை என்னும் போதிலும்) நமக்குள் இருக்கும் வித்தியாசங்கள், வேறுபட்ட வரலாற்றை எடுத்துக் காட்டுகின்றன.

உறுதியாக, நாம் ஒரு சூளுரையின் பின்னால் நமது உழைப்பைச் செலுத்த வேண்டும் என்று எண்ணினால், அது "இராஜபக்சேவை சர்வாதிகாரியாக அறிவிக்க வேண்டும்" என்ற சூளுரையாகத் தான் இருக்க வேண்டும். குழப்பங்களும், நிலைபுரியாத தன்மையும் நீண்டு கொண்டிருக்கும் வேளைகளில் இதனைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை ஆகிய வாதங்கள் எளிமையானதும், மீள யுத்தியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றன. மேலும், இந்த வாதங்கள் இலங்கையின் இன்றைய நிலைமையை முழுமையாக எடுத்துக் கூறுவதாக இல்லை.

சர்வாதிகாரம் நிலம், சொத்து, மக்களை மட்டும் கைப்பற்றுவது அல்ல, மனதையும் உள்ளத்தையும் கைப்பற்றுவது. சர்வாதிகாரம் மக்களையும் மரங்களையும் மட்டும் கொலை செய்வது அல்ல, நம்பிக்கையையும் கனவுகளையும் எண்ணங்களையும் கொலை செய்வது. நம்மை நாமாக ஆக்கும் விஷயங்களை அத்தனை தடைகளையும் மீறித் தொடர வேண்டியது நமது பொறுப்பு. இலங்கை தற்போது சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிறது என்பதையும் தழும்புகள் பட்ட இந்த நிலத்தில் தன்னுடைய குதிகாலை அழுத்த நினைக்கும் இந்தச் சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உரக்கச் சொல்ல வேண்டும்.

இறுதியாக, நமக்கு நம்பிக்கையற்ற தன்மையும் அயர்ச்சியும் மட்டுமே மீதமிருக்கின்றன. இந்த எண்ணத்தைக் கவனமாகக் கையாள்வது அவசியம். இந்த எண்ணம் நியாயமானது என்பது நமக்குத் தெரியும். இருந்தபோதிலும், அயர்ச்சியைத் தாண்டி நம்மைச் சிந்திக்கக் கூடிய தளத்துக்கு எடுத்துச் செல்லும் சில உண்மைகளை நாம் உணர வேண்டும். போர், அழியாத்தன்மைக்கான குரூர ஆதாரம், குழப்பத்திலும் புதியன பிறப்பதற்கான அடையாளம், கொடுமைகளையும், பிழைத்தலையும் போதுமான அளவு சந்தித்துள்ள புத்துணர்ச்சி.

வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாம் முன்னே செல்வது அவசியம். வேறு எதுக்காக இல்லாவிட்டாலும் நாம் ஒரே இடத்தில் நிற்க முடியாது என்பதற்காகவாவது நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அவதிகள், இழப்புகள், பிழைப்புகள், பொறுப்பு, அன்பு, வெறுப்பு இவற்றுக்கிடையே உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் தாண்டி இருக்கும் நீண்ட வரலாறு நம்முடையது. இந்தப் பரம்பரையைக் கௌரவப்படுத்த வேண்டாம், பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை மரியாதையோடும் அதே நேரத்தில் மரியாதையில்லாமலும் பார்த்தால், பிறர் செல்லாத நீண்ட தொலைவிற்கு நாம் செல்ல முடியும், சிலர் கற்பனை செய்து வைத்த உலகத்தை நாம் பார்க்க முடியும்.

Pin It