தமிழ்பேசும் மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் அவர்களது பாரம்பரியப் பிரதேசங்களான வடக்கு--கிழக்கு மாகாணங்களில் அம்மக்கள் நலனைப் புறக்கணிக்கும் வகையில் இலங்கை அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட அரச குடியேற்றத் திட்டங்கள் அமைகின்றன. பல தலைமுறைகளாக அமைதியான வகையில் தங்கள் பாரம்பரியத் தாயகத்தில் வாழ்ந்து வரும் இம்மக்களின் சமூக, -பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி களை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கங்கள் அம்மக்களின் சமூக, - பொருளாதார கலாச்சார நலன்களைப் புறக்கணிக்கும் வகையில் அரச குடியேற்றங்களைத் தாபித்துக் கொண்டன. இத்தகைய குடியேற்றங்கள் இனமுரண்பாடுகளை மேலும் கூர்மையடையச் செய்வதோடு தமிழ், - சிங்கள மக்களிடையிலான இனவாத உணர்வு மேலும் வலுப்பெற்று நாடு சீரழிவதற்கே வழிவகுத்தது.

இங்குத் தமிழ்பேசும் மக்கள் என்று குறிப்பிடும்பொழுது வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அனைவரையுமே குறிக்கின்றது. முக்கியமாக இப்பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களையும் இது குறித்து நிற்கின்றது. இவர்கள் மத அடிப்படையிலான அடையாளத்தைக் கொண்டிருந்தபொழுதும் தமிழ் பேசும் மக்களென்ற பிரிவுக்கு உட்பட்டவர்களாகவே விளங்குகின்றனர்.

அடையாளமும் பாரம்பரியமும்

தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் பொறுத்துத் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வது அரச குடியேற்றங் களினால் இப்பிரதேசம் அடைந்த பாதிப்புகளை விளங்கிக் கொள்வதற்கு அவசியமானதாகும். தமிழ்பேசும் மக்கள் பல தலைமுறைகளாகப் பெருமளவினராக வாழும் வடக்கு, - கிழக்கு மாகாணங்களை நாம் அவர்களது பாரம்பரியப் பிரதேசமென்று வரையறை செய்துகொள்ளலாம்.

பாரம்பரியப் பிரதேசம் என்பதை நிரூபிப்பதற்காக நீண்ட கால வரலாற்று ஆய்வை மேற்கொள்வது அவசியமற்றதும் அர்த்த மற்றதுமாகும். வரலாற்று ஆரம்ப கால ஆதாரங்களைக் கொண்டு சிங்கள மன்னர்களின் ஆட்சியதிகார எல்லைகளைக் கொண்டு இது சிங்கள மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று நிரூபிக்க முயல்வது அர்த்தமற்ற செயலாகும். அப்படி ஆய்வை மேற்கொண்டால் இன்று உலகில் பல நாடுகளில் வாழும் மக்கள் அந்தப் பிரதேசங்களுக்கு அந்நியமானவர்கள் என்ற முடிவுக்குத் தான் வரவேண்டும். வரலாற்றில் காலத்திற்குக் காலம் வம்சங்கள் எழுச்சியடைவதும் பரந்த இராச்சியங்களை நிறுவுவதும் பின்னர் அவை தளர்வுற்று வீழ்ச்சியடைவதும் நாம் காணும் பொதுவான பண்புகளாகும். ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு சுதேச மக்களை அடையாளங்காண்பதாயின் நாங்கள் ஒரு காலத்தில் போர்த்துக்கீசராகவும் ஒருகாலத்தில் ஒல்லாந்தராகவும் பிரிதொரு காலத்தில் ஆங்கிலேயராகவும் இருந்திருத்தல் வேண்டும்.

இலங்கை வரலாற்றிலே தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற பதம் தமிழ்பேசும் மக்களின் தேசிய இனம் என்ற இருப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கத்திற்கு வந்ததாகும். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்பாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பொருளாதார, சமூக நலன்களை மறுதலித்ததன் காரணமாகவே அவர்களது தாயகம் பற்றிய கோட்பாடும் அரசியலரங்கிலே முக்கியத்துவம் பெறலாயிற்று.

இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் ஒரு பெரும் பிரிவினராகிய இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை வாக்குரிமையைப் பறித்த 1948, 49 ஆண்டுக் குடியுரிமை, பாராளு மன்றச் சட்டங்களைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களிடையே அச்ச உணர்வு வளரத் தொடங்கியது. தொடர்ந்து ஆட்சியுரிமை பெற்ற ஒவ்வொரு சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களினதும் தமிழ்பேசும் மக்கள் பெருத்த பாரபட்ச நடவடிக்கைகளால் இந்த அச்ச உணர்வு மேலும் மேலும் வலுப்பெறல் ஆயிற்று. இவ்வுணர்வுதான் தமிழ்பேசும் மக்களைத் தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் சிந்திக்க வைத்தது.

 

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற கருத்து தமிழ்பேசும் மக்கள் தனியான தேசிய இனமென்ற அரசியல் எண்ணக் கருவுடன் நெருங்கிய வகையிலே தொடர்புகொண்டது. இலங்கையர் தேசியம் என்பதில் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் சிங்களத் தலைவர்களும் பௌத்த தேசியமாக மாற்றிக் கொண்டதைத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களும் பிரதானமாகத் தமிழ் மக்களும் தங்களைத் தனியான தேசிய இனமாக அடையாளங்காணவேண்டியதாயிற்று. இப்பின்னணியில்தான் ‘தாயகம்’ பற்றிய கோட்பாடு சிறப்பிடம் பெற ஆரம்பித்தது.

தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த வடக்கு -கிழக்கு பாரம்பரியப் பிரதேசங்களில் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தாயகம் பற்றிய எண்ணக் கரு மிகவும் வலுப்பெற்ற ஒன்றாக மாற்றம் பெற்றது. இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தங்கள் தாயகம் என்ற கருத்தை வலுப்பெற வைத்தன. இவ்வகையில் நிலத்துடன் பிணைக்கப்பட்ட வகையிலே இனஉணர்வு வலுப்பெறுவதற்குச் சிங்கள அரசாங்கங்களின் தவறான அணுகுமுறை வழிவகுத்தது.

தமிழ் பேசும் மக்களின் விருப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் காரணமாகப் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பிரதேசங்களைத் தமது பிரதேசங்களென்று அடையாளங் கொள்வதற்காகத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகம், பிரதேசத் தாயகம், சட்டப்பூர்வத் தாயகம் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பிரதேசங்கள் வாழிடம் முதலான பதங்களைப் பயன்படுத்தும் எதார்த்த நிலைமை உருவானது. இந்தப் பதங்களை ஆழ்ந்து நோக்கும்பொழுது இவை பல அர்த்தங்கள் கொண்டவையாகக் காணப்படும். இருப்பினும் அடிப்படையில் ஓர் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருப்பதைக் காணலாம். இலங்கையின் சமூக பொருளாதார, கலாசார அரசியல் போக்குகள் வடக்கு-கிழக்கு வாழிடம் தொடர்பிலான ஆழமான புரிதலே மனக்கிளர்ச்சியைத் தமிழ்மக்களிடையே உருவாக்கிற்று.

வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் அபிவிருத்திகள் அப்பிரதேச மக்களின் நலன்களை மேம்படுத்தும் தன்மை கொண்டனவாகவே இருக்க வேண்டும். இந்த விருப்பின் அடிப்படையாகவே மேற்குறித்த பதங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவிலான சிங்கள குடியேற்றத் திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் இப்பிரதேச மக்களின் நலன்களைப் பாரதூரமாகப் பாதிக்கும் தன்மை கொண்டனவாக அமைந்தன. பன்மைச் சமூகங்களைக் கொண்ட நாட்டில் ஓரினத்தவர் பெருமளவு வாழும் பிரதேசங்களில் அவர்கள் நலன்களைப் பாதிக்கும் வகையில் மற்றோர் இனத்தவரை அரசாங்க ஆதரவுக்குக் கொண்டு சென்று குடியேற்றுவது இன மோதலுக்கும் முரண்பாடுகளுக்கும் தொடர்ந்து வழிவகுக்கும் என்பதற்கு இலங்கை இந்தத் தருணம் வரை நல்ல உதாரணமாகவே விளங்குகின்றது.

அரச ஆதரவிலான குடியேற்றம்

இலங்கை, சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் எனக் கருதப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெருமளவு சிங்கள மக்களைக் குடியேற்றும் தன்மை கொண்ட அரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நடவடிக்கை-களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. உணவு உற்பத்தியில் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புராதன நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனரமைத்தலும், புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கிச் சிங்கள விவசாயிகளைக் குடியமர்த்துவதும் இத்தகைய காரணங்களில் ஒன்றாகக் காட்டப்பட்டது. அத்துடன் மிகச் செறிவான குடியடர்த்தியுள்ள சிங்களப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தி¢க் குறைவுடைய தீவின் வடமேற்கு, கிழக்குப் பிராந்தி யங்களில் குடிபெயர்வதற்கு ஊக்குவிப்பு அளிக்கப்படுவதற்கும், இத்தகைய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும் கூறப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வகையில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களில் பெருமளவு சிங்கள மக்களே குடியேற்றப்பட்டமை தமிழ், சிங்கள இன முரண்பாடுகளை மேலும் வளர்ப்பதாக அமைந்தது.

தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஏற்படுத்தப் பட்ட அரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களுக்குப் பின்னணியாகக் காட்டப்பட்டனவற்றைப் பின்வருமாறு வகுக்கலாம்.

       -- அபிவிருத்தி

       - நிலமற்றோருக்கு நிலம் வழங்கல்

       - தமிழ் பிரதேசங்களில் தான் பயன்படுத்தப்படாத பெருமளவிலான விவசாய நடவடிக்கை-களுக்கான நிலங்கள் உள்ளன.

       - அரசாங்க வருமானம் - முதலீட்டைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இத்திட்டங்களில் சிங்கள மக்களுக்குப் போதிய நிலம் வழங்கல்.

அபிவிருத்தி எனும்போது உற்பத்தி அதிகரிப்பு, வருமானப் பெருக்கம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகின்றது. இம்மூன்று அம்சங்கள் பொறுத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட அரச குடியேற்றத் திட்டங்கள் அம்மாகாண, மாவட்ட மக்கள் நலன் பொறுத்து எத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தின என்பதை வைத்து அபிவிருத்தியை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அப்படிப் பார்க்கையில் இக்குடியேற்றத் திட்டங்களில் பரம்பரையாக இம்மாகாணங்களில் வாழ்ந்த மக்களைப் பெருமளவில் புறக்கணித்து மொழி, இன, மத, கலாச்சார அடிப்படையில் வேறுபாடு கொண்ட சிங்கள மக்களைக் குடியேற்றியமை உண்மையான அபிவிருத்தியைக் கொண்டுவராது. மாறாக இன மோதல்களையும் அமைதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கவே அவை வழிவகுக்கும். உண்மையான அபிவிருத்தியை அரசாங்கம் விரும்பியிருந்தால் அவ்வவ் மாகாண, மாவட்ட மக்களுக்கு முதலிடம் கொடுத்து அவர்களை இப்பிரதேசங்களில் குடியேற்றி அமைதியான சூழலில் நாட்டை வளப்படுத்தி யிருக்கலாம். இத்தகைய நடவடிக்கையால் தாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தாததோடு, குடித்தொகைப் பண்புகளில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்படாத சூழ்நிலையையும் உருவாக்கியிருக்கும்.

நிலப்பசியைத் தீர்க்கும் நடவடிக்கையாக நிலமற்ற சிங்கள மக்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் நிலம் வழங்குதல் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. அத்துடன் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களிலும் பார்க்கச் சிங்கள மக்-களிடையே நிலமின்மை மோசமடைந்திருந்ததாகவும் எடுத்துக்காட்டப்பட்டது. ஒரு காலத்தில் வறண்ட பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் குடியேற்றத் திட்டங்களுக்குப் பொருத்தமானவர் என்று கருதப்பட்ட மலைநாட்டுத் தமிழ் மக்களையும் சேர்த்துப் பார்த்தால் தமிழ் பேசும் மக்களிடையே நிலமின்மைப் பிரச்சினையானது முக்கியப் பிரச்சினையாகக் காணப்பட்டதனை விளங்கிக் கொள்ளலாம்.

அத்துடன் தென்னிலங்கைவாழ் சிங்கள மக்களிடையே நிலப்பற்றாக்குறைப் பிரச்சினையை அரசு எடுத்துக்காட்டுவது போல அவ்வளவு மோசமானதாகக் காணப்படவில்லை எனலாம். அம்பாந்தோட்டை மாவட்டத்திலும், தென்னிலங்கையிலும் அபிவிருத்திக்கு ஏற்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப் பட்ட சிங்கள மக்களுள் அனேகர் தென்னிலங்கையில் இருந் தல்லாது வறண்ட பிரதேச விவசாய நடவடிக்கையில் அனுபவம் பெறாத கண்டியைச் சேர்ந்த சிங்களவராகவே காணப்பட்டனர். அந்தந்த மாவட்டத்தில் காணப்பட்ட நிலமில்லாதோருக்கு முதலில் இக்குடியேற்றத் திட்டங்களில் நிலம் வழங்கி அவர்கள் நிலப் பிரச்சினையைத் தீர்த்து விவசாய உற்பத்தியில் ஈடுபடச் செய்தலே பெருமளவு விரும்பத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால், அம்மாவட்ட நிலமற்ற மக்கள், புறக்கணிக்கப்பட்டு அவர்கள் பரம்பரையாக வாழ்ந்த பிரதேசங்களிலும், அதற்கு அண்மையிலும் இன, சமூக அடிப்படையில் வேறுபாடு கொண்ட சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றியமை உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதிலோ, நிலமின்மைப் பிரச்சினையை நீக்குவதிலோ அரசாங்கம் கொண்டிருந்த நோக்கைச் சந்தேகமுற வைத்தது.

இனவிகிதாச்சார மாற்றம்

தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பயன்படுத்தாத பெருமளவிலான நிலங்கள் உள்ளன. இந்தக் கருத்தும் மறுத்துரைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இலங்கையின் ஏனைய பாகங்களில் விவசாய அபிவிருத்திக்கு ஏற்ற நிலங்கள் இன்மையி-னால்தான் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன என்றும் கூறப்படுகின்றது. அரசாங்க சபைக் காலத்திலிருந்தே வடமேற்கு மாகாணத்தில் நீர்ப்பாசன அமைப்புகள் புனரமைக்கப்பட்டும், புதிதாக அமைக்கப்பட்டும் நீர்ப்பாசானத்-திற்குரிய விவசாய நிலங்கள் அதிகரிக்கப்பட்டு வந்தன. இவை முற்றுப்பெற்றதனைத் தொடர்ந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீர்ப்பாசன அடிப்படையிலான குடியேற்றத் திட்டங்களை அமைத்துச் சிங்கள மக்களைக் குடியேற்றுவதிலே பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங் களும் அதிக அக்கறை கொண்டன.

அந்த அக்கறை நியாயமானதாக இருந்தபோதும் தமிழ்பேசும் மக்களைக் கொண்ட பிரதேசங்களில் இன விகிதாச்சார முறையை மாற்றியமைக்கும் தன்மை காணப்பட்டதால் அம்மக்கள் இவற்றைக் கடுமையாக எதிர்க்கலாயினர். அரசாங்கங்கள் இப்பிரதேசத்திலிருந்த மக்களை இங்குக் குடியேற்றியிருந்தால் இந்த இனமுரண்பாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். சிங்களப் பிரதேசங்களில் விவசாய அபிவிருத்திக்கு ஏற்ற நிலங்கள் இன்மையால்தான் தமிழ்ப் பிரதேசங்களில் இத்தகைய குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தென் மாகாணத்திலும், வடமேற்கு மாகாணத்திலும் உலக நிதி நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நீர்ப்பாசன அடிப்பைடையிலான அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டுள்ளோம்.

தமிழ்பேசும் மக்களது பாரம்பரியப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்ட அரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கு ஆதரவாகத் தெரிவிக்கப் பட்ட மற்றோர் கருத்து இப்பாரிய திட்டங்கள் பெரும் அரசாங்க வருமானத்தையும் - முதலீட்டையும் கொண்டு ஆரம்பிக்கப் படுபவை. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இக்குடியேற்றத் திட்டங்களில் குடிய-மர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் என்பதாகும். அத்துடன் இப்பாரிய திட்டங்கள் தேசியத் திட்டங்கள் என்று முலாம் பூசப்படுகின்றன.

பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றியபின் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டுக் கோடிக் கணக்கான பெறுமதியுள்ள மூலதனம் சிங்களப் பிரதேசங்களிலே முதலிடப்பட்டுப் பல வகைகளிலும் அபிவிருத்தியை அப்பகுதிகள் அடைந்தன. ஆனால், தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்த பகுதி நேரடியாக இந்த அபிவிருத்தியில் பங்குபெறாது பின்தங்கியதா கவே காணப்பட்டது. இப்பின்னணியில் இப்பிரதேசங்களும், மக்களும் விவசாய அடிப்படையிலாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டியவையாகும். சுதந்திரத்தின் பின்பாக ஏற்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் கூட இப்பகுதிகளில் வாழும் மக்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். அவ்வகையில் இப்பாரம்பரியப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு, அங்கு வாழ்ந்த மக்களும் தேசியப் பொரு-ளாதார அமைப்பிலே சமத்துவமாக இடம்பெறுமாறு செய்ய வேண்டியது அரசின் கடப்பாடு ஆகும்.

இலங்கையின் ஏனைய பாகங்களில் அரசாங்க, வெளிநாட்டு மூலதன உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு உரிய பங்கு வழங்கப் படுகின்றதா? என்பதனை இங்கு உற்றுநோக்குவது அவசியமாகும். அரச வெளிநாட்டு மூலதனங்களைக் கொண்ட பாரிய கைத்தொழிற்சாலைகள், துரித மகாவலித்திட்டம், ரந்தெனிகல, விக்டோரியா நீர்மின்சாரப் பல்நோக்குத் திட்டங்கள் போன்றவற்றில் தமிழ்பேசும் மக்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமை இங்குக் கவனிக்கத்தக்கது. இதுபோன்ற நிலைமையையே சமூக நலத்திட்டங்களிலும் காண்கின்றோம்.

இப்பின்னணியில் பார்க்கையில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரியப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் தேசியத் திட்டங் களில் உரிய பங்குகள் கோருவது பொருத்தமற்றதென்றே கூற வேண்டும். ஆனால், இம்மக்களின் குடித்தொகை விகிதாச்சாரப் பண்புகளை மாற்றாத வகையில் சிங்கள மக்களுக்கு இடமளிப்பதே பொருத்தமானதாகும். ஆனால், பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த கொள்கை-கள் இவற்றிற்கு முரணாக அமைந்த துடன் தமிழ்பேசும் மக்களது பிரதேசங்களிலே அவர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தன.

நிலம்- மக்கள்

விவசாயத்தை அடிப்பைடையாகக் கொண்ட பொருளா தாரங்களில் நிலம் மிக முக்கியமான உற்பத்திக் காரணியாக விளங்குகின்றது. நிலத்தின் அளவு, தரம், பயன்பாட்டுக்குள்ளான நிலம், நீர்ப்பாசன வசதி, போக்குவரத்து வசதி என்பனவற்றின் அடிப்படையிலேயே விவசாயப் பொரு-ளாதாரத்தின் முன்னேற்றம் பெரிதும் தங்கியுள்ளது. தமிழ்பேசும் மக்களது பாரம்பரியப் பிரதேசங்களில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளா தார அமைப்பு வலுப்பெற்று வந்துள்ளது. இப்பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 சதவீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், நல்வாழ்வுக்கும் நிலம் முக்கியமாகின்றது.

ஆகவே, தமிழ்பேசும் மக்கள் தமக்கே இருக்கக்கூடிய நிலத்தின் அளவை இழப்பது நேரடியாக எதிர்காலப் பொருளாதார வாழ்வை இழப்பதற்குச் சமனாகின்றது. அத்துடன் பாரம்பரியப் பிரதேசங்களில் அவர்கள் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைகின்றது. இதனால்தான் தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வந்துள்ளனர்.

இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் பிரதான அரசியல் கட்சியாக விளங்கிய தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற 1949 இலிருந்தே அது தமிழ்பேசும் மக்கள் தனியான தேசிய இனம் என்பதிலும் சமஷ்டி முறையிலான அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றுபட்ட இலங்கையில் தம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தது. அதனால் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே மொழி, பிரதேசத் தாயகம், பொதுவான வரலாற்றுணர்வு, கலாச்சாரம் என்பனவற்றின் அடிப்படையில் வேறான, தனித்துவமான தமிழ்த் தேசிய இனம் என்பதனை வலியுறுத்திவந்துள்ளது.

அத்துடன் சமஷ்டி முறையிலான அரசியல் அமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்தமையால், தமிழர்கள் பெருமளவு வாழ்ந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பிரதேசத் தாயகம் எனக் கொள்வதிலும் அதிக அக்கறை கொண்டதாகக் காணப்பட்டது. இதனால்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களுக்குக் கடும் எதிர்ப்பினைத் தமிழரசுக் கட்சியினர் ஆரம்பத்திலிருந்தே காட்டியுள்ளனர். மொழியைப் போலவே பிரதேசத் தாயகம் அல்லது பாரம்பரியப் பிரதேசம் என்பது தமிழ்பேசும் மக்களின் தேசிய இன இருப்பிற்கு மிக அத்தியாவசியமானதாக அமைந்தது.

தமிழ்பேசும் மக்களின் அரசியல் பொருளாதார சமூகக் குறைபாடுகள் பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களினால் தீர்த்து வைக்கப்படாது மோசமாக்கப்பட்ட நிலையில் தனியான தேசிய இனம் என்பதும் அவர்கள் வாழ்ந்த சட்டரீதியான பிரதேசமும் மேலும் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததாகியது. தொடர்ந்து தமிழரசுக் கட்சி இந்தக் கொள்கையில் வலுவான நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வந்தது. இருப்பினும் அரசியல் வழிமுறைகளில் தொய்வும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளும் கோலோச்சியமையால் அரசியலற்ற போக்கு எதார்த்தம் பெற்றது.

தேசிய இனம்

சுதந்திரத்தின் பின்பான காலத்திலிருந்தே தமிழ்பேசும் மக்கள் தங்களைத் தனியான தேசிய இனமென அடையாளங்காட்டுவதில் அதிக அக்கறை கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இந்நிலைமைக்கு அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த பெரும்பான்மைச் சிங்கள அரசாங்கங்களைப் பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன. இதன் வெளிப்பாடாகவே தமிழ்பேசும் மக்கள் தேசிய இனம், பிரதேசத் தாயகம் முதலான அம்சங்களை வலுவாகப் பற்றிக்கொள்ள வேண்டியவர்களாகின்றனர்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றத் திட்டங்களுக்கு எதிராகத் தமிழ்பேசும் மக்கள் காட்டிய தீவிரமான எதிர்ப்பு அவர்களது தேசிய இருப்பிற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலின் விளைவாக ஏற்படுத்தப்பட்டதாகும். அதாவது நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பெரும்பான்மையினராகத் தெளிவான தேசிய இன அடையாளங்களுடன் வாழ்ந்து வந்த பாரம்பரியப் பிரதேசங்களில் (சிறுபான்மையினராக) அவர்கள் குடித்தொகைப் பண்புகளை மாற்றமுற்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்ட எதிர்ப்பாகவும் காணப்பட்டது. இக்குடியேற்றத் திட்டங்களினால் வடகிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக வாழ்ந்துவந்த தமிழ்பேசும் மக்களின் குடித்தொகைப் பண்புகளிலே பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நடவடிக்கையினால் கிழக்கு மாகாணம் அவர்களது பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்று என்பது அச்சுறுத்தலுக்குள் ளாக்கப்பட்டது.

தமிழ்பேசும் மக்களிடையே நிலவும் அச்சத்திற்கும் அவர்களது பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் வகையில் குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான அரசின் கொள்கை ஓரினச் சார்புடையதாகவே விளங்குகின்றது. தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் அரசின் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சமத்துவமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில்தான் அமைதி சுபீட்சம் எற்பட்டு நாடு முன்னேற்றமடையும். நாட்டில் தேசிய ஐக்கியம், தேசக்கட்டுமானம், தேசிய ஒருங்கிணைப்பு என்பன வலுப்பெற்ற சக்திகளாக மாறி ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை மலர்வதற்கு இதுவரை காணப்பட்ட அரசின் ஓரினச்சார்புத் தன்மை கைவிடப் பட வேண்டும். சகல இனங்களும் அவற்றின் பண்பாட்டம்சங்களும் சமத்துவமான முறையில் ஆதரிக்கப்படல் வேண்டும். இந்நட வடிக்கையினால் தான் இனவாதப் பண்புகளை அரசியலிலிருந்து அகற்றி ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

முடிவாக...

ஆனால், இன்றுவரை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இனவாத மேலாதிக்கப் பண்புடன்தான் இயங்குகின்றன. போருக்குப் பிந்திய காலத்திலும் இனவாதப் பண்பு கைவிடப்படுவதாக இல்லை. வடகிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவும் தனித்துவமான கலாச்சார அம்சங்களைச் சிதைக்கவும் இராணுவ மேலாதிக்கத்தைப் பல்வேறு வடிவங்களிலும் நிலைநிறுத்தவும் மகிந்த அரசு நவீனப் பாணியில் செயலாற்றி வருகின்றது.

Pin It