அடேல் பாலசிங்கம் “தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு’’ என்பதனை “சுதந்திர வேட்கை’’ எனும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். இந்நூல் 2002இல் வெளிவந்தது.

இந்நூலில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி முன்னெடுத்த “விடுதலைப் புலிகள்’’ அமைப்பை மையப்படுத்திய நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்தது முதல் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது வரையான அறிமுகம் தொடங்கி பிரேமதாசா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணப் போருக்குள் வாழ்க்கை, வன்னியில் அனுபவித்த இன்னல்கள்... எனப் பல்வேறு காலகட்டப் பதிவுகள் உள்ளன.

குறிப்பாகப் பெண் போராளிகள் பற்றிய பதிவுகளில் இருந்து சில பகுதிகளை இங்குத் தொகுத்துள்ளோம். புலிகள் இயக்க அழிவுக்குப் பின்னர் பெண் போராளிகள் பற்றிய பார்வையும் பதிவும் எமக்கு முக்கியம். பெண் போராளிகள் இலங்கை இராணுவத்தால் மிக மோசமான வன்முறைக்கு முகங்கொடுத்த வர்கள். அதைவிட இன்று தினமும் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சொல்லிமாளாது. இந்த நிலையில் அவர்கள் பற்றிய பிம்பம் மறக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களது தியாகங்களும் உழைப்பும் எப்போதும் நினைவு கூரப்பட வேண்டும் என்ற கடப்பாட்டால் இந்தப் பகுதி இங்கு இடம்பெறுகிறது.

-(அழைப்பாசிரியர்)

கோட்டை இராணுவத் தளம் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்களுக்கு அமைதியான பாதுகாப்பான சூழல் பிறந்தது. அரசியல் நடவடிக்கைகளின் மையமாக விளங்கிய யாழ்ப்பாண நகரத்தில் குடியமர நாமும் முடிவெடுத்தோம். இந்த இருப்பிடம் பாலாவின் அரசியல் வேலைகளுக்கு வசதியாக அமைந்தது. அத்தோடு, இங்கிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் அவர் அடிக்கடி சந்தித்துப் பேச முடிந்தது. பெண் போராளிகளும் பல அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்கள் என்னிடம் வந்து இவை பற்றி விவாதிப்பார்கள். அவர்களில் ஒருவர் காயத்திரி. இவர் ஒரு மூத்த பெண் போராளி, ‘சுதந்திரப் பறவைகள்’ என்ற பெண்களுக்கான மாத இதழுக்கு ஆசிரியையாக பணி புரிந்தவர். தனது சஞ்சிகையின் வளர்ச்சிக்காகப் புதிய கருத்துகளைத் தேடிக் காயத்திரி என்னிடம் அடிக்கடி வருவார். அப்பொழுது பெண்களின் இராணுவப் பிரிவுக்குத் தளபதியாகப் பணிபுரிந்தவர் ஜெயந்தி. அரசியல் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ஜெயா. இவர்கள் இருவரும் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள்.

1985இல் தமிழ்நாட்டில், பெண்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப் பாசறையில் முதலாவது அணியாகப் பயின்றவர்கள். அடுத்து மூத்த பெண் போராளி தீபா. தீபாவும் ஜெயாவும் ஆரம்பத்தில் சென்னையில் எமது வீட்டில் வசித்து வந்தவர்கள். ஜெயந்தி, ஜெயா, தீபா ஆகிய மூவரும் எமக்கு நெருக்கமானவர்கள். எமது இருப்பிடத்திற்கு அடிக்கடி வருவார்கள். ஜெயந்தி, என்னையும் பாலாவையும் தனது பயிற்சி முகாம்களுக்கு அழைத்து விருந்து தருவார். அவ்வேளை, ஜெயந்தியின் பொறுப்பில், தென்மராட்சியிலுள்ள கிளாலியிலும் வடமராட்சியிலுள்ள பொலிகண்டியிலும் இரு பெரும் பயிற்சிப் பாசறைகள் அமைந்திருந்தன. இங்கு நாம் அடிக்கடி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாலா என்னோடு இங்கு வரும்பொழுது அன்றைய அரசியல் நிலைமையை விளக்கிப் பெண் போராளிகளுக்கு வகுப்புகளை நடத்துவார்.

இப்பொழுது, யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகள் பற்றிய படிமம் அடிப்படையான மாற்றத்தைக் கண்டிருந்தது. 1990இல் இந்திய அமைதிப்படை வெளியேறியதை அடுத்து, ஆயுதம் தாங்கியபடி கம்பீரமான சீருடை அணிந்து யாழ்ப்பாண வீதி வழியே வலம் வந்த பெண் போராளிகளுக்கும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய இராணுவப் படையெடுப்பின் போது சாதாரண உடையுடன் வன்னிக்குப் பின்வாங்கிய பெண் போராளிகளுக்கும் மத்தியில் அடிப்படை வேறுபாடு இருக்கத் தான் செய்தது. இப்போதைய பெண் போராளிகள் சிறந்த போர்ப் பயிற்சி பெற்றவர்கள்; நிறையக் கள அனுபவம் உடையவர்கள்; தன்னம்பிக்கை நிறைந்தவர்கள், இவ்வாறான புதிய பெண் போராளிகள், அணி அணியாகக் காவல் வலம் வருவதைக் கண்டு வியப்படைந்த பொதுமக்கள், சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளதை உணர்ந்தனர். இது சர்ச்சைக்குரிய விவாதங்களை எழுப்பியது.

பெண் போராளிகளின் இலட்சியப் பற்றையும் அர்ப்பணிப்புகளையும் தமிழ் மக்கள் போற்றிப் பாராட்டத் தவறவில்லை. ஆயினும் அதேவேளை ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பெண்களின் படிமத்திலும் பாரம்பரிய பங்குகளிலும் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திவிடுவது சாத்திய மென்றும் மக்கள் அஞ்சினார்கள். மரபுக்கும் மாற்றத்திற்கும் மத்தியில் காலம் காலமாக நடைபெற்றுவரும் விவாதம் இது. பெண் போராளிகளை மையமாகக் கொண்டு இப்பொழுது இச் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. நீளமாக முடிவளர்த்து, சேலை உடுத்தி அல்லது பாவாடை அணிந்து, தலை குனிந்தபடி பணிவடக்கத்துடன் நடந்து செல்லும் பண்டைய தமிழ் இளம் பெண்ணின் படிமத்தோடு பழகிய யாழ்ப்பாணத்துப் பழமைவாதி களில் சில பிரிவினருக்கு, திருமணமாகாத இளம் பெண் போராளிகள் ஆயுதம் தரித்தபடி, சீருடையுடன் வீதிகளில் வலம் வருவது தமிழ்ப் பாரம்பரிய மரபிற்கும் பண்பாட்டிற்கும் ஆபத்தான அச்சுறுத்தலாகவே தென்பட்டது.

வீடு தோறும் விவாதங்களும் சர்ச்சைகளும் கிளர்ந்தன. இயற்கை செயற்கை என்றும் மரபு மாற்றம் என்றும் சாதாரண பகுத்தறிவு மட்டத்தில் தர்க்கங்கள் சூடுபிடித்தன. ஆயுதம் தரித்த விடுதலைப் போராளிகளாகப் பெண்கள் புதிய பங்கு வகிப்பதை விரும்பாத சிலர், அது இயற்கைக்கு மாறானதென வாதிட்டனர். இயற்கைதான் பெண்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி. ஆண்களைவிடப் பெண்கள் பலவீனமானவர்கள் மட்டுமன்றி, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதே வாழ்க்கையில் பெண்கள் வகிக்கும் முக்கியமான பங்கு என்பது இவர்களது கருத்து. வாழ்வின் நியதியாக இயற்கையால் அருளப்பட்ட இந்தப் பங்கை பெண்கள் மீறினால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்றும் அது சமூகக் கட்டமைப்பையும் ஒழுங்கையும் சீர்குலைத்து விடும் என்றும் இவர்கள் வாதிடுவர். திருமணத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் அச்சாணியாக விளங்குபவள் பெண் என்றும் இந்த உறவுமுறைகளுக்கு மாறாக அவள் சிந்தித்தாலும் செயற்பட்டாலும் அது குடும்பத்தை மையமாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிற்குப் பங்கம் ஏற்படுத்திவிடும் என்பதும் ஒரு சாராரது கருத்து. தமிழ்ப் பெண்களையும் யாழ்ப்பாணச் சமூகத்தையும் பொறுத்தவரை, ‘பெண்விடுதலை’ என்பது அவசியமில்லை என்ற பிற்போக்கான வாதத்தை முன்வைப்பவர் களும் இருக்கிறார்கள். இந்த வாதங்கள் எல்லாமே தவறானவை என்பதும், பொருத்தமற்றவை என்பதும் எனது கருத்து.

தமிழ்ப் பெண்களுக்கான விடுதலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தெளிவான பார்வை இல்லாத காரணத்தினா லேயே இத்தவறான கருத்துகள் எழுகின்றன. ஆயுதப் போராட் டத்தில் பெண்கள் பங்குகொள்வது என்பது, தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் வாழ்நிலை சம்பந்தப்படுத்தப்பட்ட மட்டில், ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் குறிக்கின்றது என்பது உண்மை. எனினும் பெண்களின் மீட்சி என்பது ஆயுதப் போராட்டத்தில் பங்குகொள்வதோடு முடிவடைவதில்லை. மாறாகப் பரந்த குறிக்கோள்களை அடையும் நோக்கத்துடனேயே பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கிறார்கள். இந்தப் பரந்த குறிக்கோள்கள் என்ன என்பது பற்றிய விவாதம், ஆரம்ப காலத்தில், யாழ்ப்பாணச் சமூகத்தில் பெரிதாக எழவில்லை. ஆயுதம் தரித்த பெண்ணின் உருவகம் மட்டுமே முக்கியமாகத் தென்பட்டது. இதனால் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஆயுதம் தரித்த பெண்ணின் வடிவமே பெண் விடுதலையின் குறியீடாகத் தோற்றம் எடுத்தது. இந்தப் படிமம், பரந்துபட்ட பெண் சமூகத்தினரையும் பொது மக்களையும் கவர்ந்து விடவில்லை. அத்தோடு பெண் போராளிகள் தமது நீண்ட கருங்கூந்தலைக் கத்தரித்து விடுவதென மேற்கொண்ட துணிச்சலான தீர்மானம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

தமது நீண்ட முடியை இரட்டையாகப் பின்னி, சுற்றிவளைத்துக் கட்டுவதுதான் பெண்போராளிகளின் பாணியாக இருந்தது. ஆனால், திடீரெனக் குறுக வெட்டிய முடியுடன் பெண் போராளிகள் தென்பட்டபோது, அது சமூகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டனங்களும் கிளம்பின. தமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கையெனப் பெண் போராளிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், பெண் போராளிகள் இது பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விரும்பினால், முடியைக் குறுக வெட்டலாம் என்ற இயக்கத்தின் முடிவு பெண் போராளிகள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. நேரத்தைப் பிடிக்கும் சிகை அலங்கார மரபிலிருந்து விடுபடுவதற்குத் தமக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், உண்மையில் இந்த முடிவு இராணுவத் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டது. போர்ப் பயிற்சியின்போதும், போர் நடவடிக்கைகளின்போதும் நீண்ட பின்னிய முடிகளை வைத்திருப்பது, இளம் பெண்போராளி களுக்கு ஒரு தொல்லை கொடுக்கும் விடயம். எனினும் எல்லாப் போராளிகளுமே முடியைக் குறுக வெட்டவில்லை. அனேகமானோர் இரட்டையாக முடியைப் பின்னி, அவர்களது பாணியில் சுற்றி வளைத்துக் கட்டுவார்கள். என்னைப் பொறுத்தவரையில், முடியை எவ்விதம் வைத்துக்கொள்வது என்பது பற்றி ஒரு தேர்வுச் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்பது ஒரு முற்போக்கான விடயமே.

ஆயுதப் போராட்டத்தில் பங்குகொள்வது குறித்துத் தமக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றிப் பெண் போராளிகள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இலட்சியத்தில் உறுதியாக நின்ற அவர்கள், இந்த எதிர்ப்பு அலைகளைத் தன்நம்பிக்கை யோடும் பெருந்தன்மையோடும் முகம்கொடுத்தார்கள். இதேவேளை போராட்டத்தில் பெருந்தொகையான இளம் பெண்கள் இணைந்தார்கள். பெற்றோர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காலப்போக்கில் தணிந்து போனது. பெண்களும் போராட்டத்தில் பங்குகொள்ளும் யதார்த்த புற நிலையைத் தம்மால் மாற்றிவிட முடியாது என உணர்ந்து அவர்கள் நிலைமையை ஏற்றுக்கொண்டார்கள். எனவே, ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்குகொள்வது என்பது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபாகிவிட்டது. பலர் எதிர்பார்த்ததுபோல அன்றி எச்சரித்தது போலத் தமிழ்ப் பண்பாடு சீர்குலையவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பான பெண் போராளிகளின் படையணிகள் வளர்ச்சி பெற்று விரிவாக்கம் கண்டதுடன், விடுதலைப் போரிலும் முக்கியப் பங்காற்றியது. 1991 ஜூலை 10ஆம் திகதி தொடங்கிய ஆனையிறவுச் சமரின்போது இது புலனாகியது. இந்தப் பெரும் சமரில் பெண் போராளிகளைக் கொண்ட பல படைப்பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் துணிவாற்றலுடன் வீரசாதனை படைத்தன. விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படையினருக்கும் மத்தியில் நிகழ்ந்த இந்த உக்கிரமான மோதல்கள் 24 நாட்கள் வரை நீடித்தன. அப்பொழுது விடுதலைப் புலிகளிடம் மரபு வழிப்போருக்கான கனரக ஆயுதங்கள் இருக்கவில்லை. நவீன ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருக்கவில்லை. அத்தோடு, புலிகளுக்கு அனுகூலமற்ற திறந்தவெளி நிலப்பரப்புகளிலேயே சண்டைகள் நிகழ்ந்தன. இந்தக் காரணங்களால் புலிகள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இறுதியில், புலிகளின் படையணிகள் சமர்க்களத்திலிருந்து தந்திரோபாயமாகப் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்தச் சமரில் 123 பெண் போராளிகள் உட்பட 573 புலிவீரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தப் பின்னடைவிலிருந்து விடுதலைப் புலிகள் ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொண்டனர்.

அதாவது, தமது படையணிகளை ஒரு மரபு வழி இராணுவக் கட்டமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தையும் தேவையையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்தப் போர் நடவடிக்கையைத் திட்டமிட்ட வேளையிலும் செயற்படுத்திய வேளையிலும் மக்கள் வழங்கிய பங்களிப்பே ஆனையிறவுச் சமரின் முக்கிய அம்சமாக அமைந்தது. புவியியல் ரீதியாகப் பார்க்கப் போனால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொண்டையை நெரிடுவதுபோல அமைந்திருந்த இப்படைத்தளம் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலூட்டி வந்திருக்கிறது. இப்படைத் தளம் விடுதலைப் புலிகளால் அழிக்கப்படவுள்ளதும் அது சாத்தியமானால், யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் வன்னி மாநிலத்திற்குச் சுதந்திரமாகச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படுமென்பதும் தமிழ் மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், உணவு வகைகள் வழங்குவதிலிருந்து, போக்குவரத்து வாகன வசதிகள் செய்வது வரை, பல்வேறு வழிகளில் யாழ்ப்பாணப் பொது மக்கள் ஆனையிறவுச் சமருக்குப் பங்களிப்புச் செய்தனர். எனக்கிருந்த மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில், காயமடைந்த போராளிகளுக்கு உதவி செய்ய நானும் முன்வந்தேன்.

நாம் வசித்த வீட்டுக்கு அருகாமையில் இரண்டு மருத்துவ நிலைகளை ஜெயந்தியும் ஜெயாவும் நிறுவியிருந்தனர். அங்குக் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் போராளிகளைப் பராமரிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. இது எனக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. முன்னேறிய நாடுகளில் பிரமாண்ட மான வைத்திய வசதிகள் கொண்ட பின்புலத்துடன் மருத்துவ, சத்திரசிகிச்சை நோயாளிகளைப் பராமரிப்பது வேறு; மருத்துவ வசதிகளற்ற, தற்காலிகமான ஒழுங்கு செய்யப்பட்ட நிலைகளில் காயமடைந்தோரைப் பராமரிப்பது வேறு. இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு என்பதைப் பட்டறிந்து கொண்டேன். குடல்-முளை அகற்றும் அறுவைச் சிகிச்சையின் பின்னர் ஏற்படும் துப்பரவான காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது வேறு; கூர்மையான பீரங்கிக் குண்டு சிராய்களால் பிளக்கும் தசைகளுக்கு மருந்து கட்டுவது வேறு. இளம் பெண்களுக்கு உடற்பயிற்சி விபத்தின் போது ஏற்படும் சிறிய முறிவுகள் வேறு. 50 கலிபர் இயந்திரத் துப்பாக்கி ரவை ஊடறுத்து 18 வயது இளம் பெண் ஒருத்தியின் கால் எலும்பு சிதறுவது வேறு.

மருத்துவப் பிரிவில் பணிபுரியும் பெண் போராளிகளுக்கு இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிறப்பான மருத்துவத் தாதிப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்த அடிப்படையான தாதிப் பயிற்சியோடு, மருத்துவக் கருவிகளும் போதிய மருந்துகளும் இல்லாத சூழ்நிலையில், இந்த இளம் தாதிகள் அங்கு வந்து சேரும் மிகவும் சிக்கலான, ஆபத்தான காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் திறன் அபாரமானது. இயக்கத்தின் மருத்துவ நிலையங்களினால் ஏராளமான படுகாயமடைந்த பெண் போராளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். படுகாயமடைந்தவர்கள், காயத்தின் வேதனை தாங்கமுடியாது புலம்பும் வேளைகளில் சிறுகாயமடைந்தோர் அவர்களைத் தோற்றுவது மனதை உருக்கும். காயமடைந்த பெண் போராளிகளின் தேவைகளையும் வேண்டுகோள்களையும் சமாளிப்பதில் எல்லையற்ற பொறுமையைக் கடைப்பிடித்தார்கள் மருத்துவத் தாதிமார். மருத்துவத் தொழில்நுட்ப அனுபவம் இல்லாத போதும், காயங்களுக்கு மருந்து கட்டுவதில் தாதிமாரின் கரங்கள் நுட்பமாகச் செயற்பட்டன. காயங்களிலிருந்து தொற்று நோய் பரவாமல் தடுப்பதில் வெற்றிகரமாகச் செயற்பட்டனர்.

இளம் பெண்களுக்கு ஏற்பட்ட பெரும் காயங்களைப் பார்த்தாலேயே சிலருக்கு அங்கலாய்ப்பு ஏற்படக்கூடும். ஆனால், இங்கு நிலைமை அப்படியல்ல. போர் அனுபவத்தினாலோ அல்லது கடும் காயங்களின் வேதனையாலோ, பெண் போராளிகள் மனம் தளர்ந்து போகவில்லை. இவர்களுக்குப் பணிபுரிவதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. காயங்களின் வேதனைகளையும் சகித்துக் கொண்டு, கேலியும் பகிடியுமாகச் சிரித்து மகிழும் இவர்களின் மகிழ்ச்சியில் நானும் இணைந்து கொள்வேன். உனது காயத்தை அன்ரி தொட்டால்போதும் அது குணமாகிவிடும் என்று காயமடைந்த பெண் போராளிகள் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அப்படியானதொரு அற்புதச் சக்தி என்னிடம் இருக்க வில்லை. அவர்கள் துரித கதியில் குணமாகி வந்ததற்கு அவர்களது இளமையே காரணம் என்றாலும் எனது பராமரிப்பில் அவர்களுக்கு இருந்த அபார நம்பிக்கை என்னை மகிழ்ச்சியடைய வைத்தது.

சுண்டுக்குளியில் பெண்களுக்கான மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் அமையப் பெற்றிருப்பது, காலக்கெதியில் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்குத் தெரிய வந்தது, இளம் பெண் போராளிகள் களத்தில் போராடிக் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் செய்தி மக்கள் மத்தியில் ஆழமான அனுதாபத்தைத் தோற்றுவித்தது. தமது அக்கறையையும் நன்றியையும் தெரிவிக்க விரும்பிய யாழ்ப்பாண மக்கள், படுக்கைகள், தலையணைகள் சமைத்த உணவுகள், இளநீர்கள் எனப் பல்வேறு பொருட்களை மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். சுண்டுக்குளியில் இயக்கத்தின் தற்காலிக மருத்துவ நிலையங்கள் அமையப் பெற்றுள்ளன என்ற தகவல் சிறீலங்கா ஆயுதப் படையினருக்குத் தெரிய வந்தது. ஒருநாள் மதிய நேரம், சிறீலங்காவின் குண்டுவீச்சு விமானங்கள் எமது மருத்துவ நிலைகள் மீது திடீரென்று தாக்குதலை நிகழ்த்தின. நான் திகைத்துப் போனேன். சிறிது நேரத்திற்கு முன்னர்தான் நான் அங்கிருந்து வீடு திரும்பினேன். காயமடைந்த போராளிகளுக்கு ஏதாவது தேவைகள் இருக்கின்றதா என்பதை அறியவே நான் அங்குச் சென்றேன்.

மருத்துவ நிலையத்திலிருந்து நான் வீடு திரும்பி ஐந்து நிமிடங்கள் இருக்கும் ஒரு பிரமாண்டமான வெடிச்சத்தம் அதிர்ந்தது. அதன் அதிர்வு அலையால் நான் தரையில் வீசப்பட்டேன். எமது வீடு மீதுதான் குண்டு வீச்சு நடைபெறுவதாக எண்ணினேன். உடனே எழுந்து பதுங்கு குழியை நோக்கி ஓடினேன். வீட்டுக் கதவைத் தாண்டியபோது, பயங்கர ஓசையுடன் இரண்டாவது குண்டும் வெடித்தது. அதன் அதிர்வு அப்பகுதியையே நடுங்கச் செய்தது. குண்டுச் சிதறல்களும் அவ்விடமெல்லாம் பறந்தன. நான் பதுங்கு குழிக்குள் ஒளிந்தேன். சிறிது நேரம் கழித்து எமது மெய்ப்பாது காவலரான போராளிகள் என்னிடம் ஓடிவந்தார்கள். குண்டுவீச்சு விமானங்கள் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். எமது வீட்டுக்கு மிகவும் சமீபமாக விமானத் தாக்குதல் நிகழ்ந்ததால் நாம் எல்லோருமே பதட்டமடைந்து போனோம்.

குண்டுகள் எங்கே வீசப்பட்டிருக்கலாம் என்று நாம் அங்கலாய்த்தபோதுதான் எமது மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வந்தது. உடனடியாக நான் அங்கு ஓடிச்சென்றேன் அதிர்ஷ்ட வசமாக, மருத்துவ நிலையத்திலிருந்த பெண்போராளிகள் எவருக்குமே உயிர்ச் சேதமோ அன்றிக் காயமோ ஏற்படவில்லை. ஜெட் விமானங்கள் ஆகாயத்தில் சுற்றியதை அறிந்ததுமே காயமடைந்த போராளிகளும் தாதியரும் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பிப் பிழைத்தனர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக வீதியால் அவ்வழியே சென்ற ஒரு அப்பாவிப் பெண் தலைசிதறி உயிர் நீத்தார். ஆனையிறவுச் சமரை அடுத்து நாம் வசித்த சுண்டுக்குளிப் பகுதி அடிக்கடி விமானக் குண்டு வீச்சுக்கு இலக்காகியது. எமது வீட்டிற்கும் குறிவைக்கப்படலாம் என அச்சுறுத்தல் எழுந்த காரணத்தினால் நாம் சுண்டுக்குளியிலிருந்து இடம் மாறி, கொக்குவில் பகுதியில் ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் குடியமர்ந்தோம். யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு வரை நாம் அந்த வீட்டிலேயே வசித்து வந்தோம்.

பெண் போராளிகள்

இது இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் மத்தியில் பல முனைகளில் மோதல்கள் நிகழ்ந்தன. இந்த மோதல்களில் பெண் போராளிகளின் பங்களிப்பு விடுதலைப் போரின் இணைபிரியாத அம்சமாக வடிவெடுத்தது. ஆனையிறவுச் சமரில் பெண் போராளிகளே முக்கியப் பங்கு வகித்ததைத் தொடர்ந்து ‘மின்னல் இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரால் மணலாற்றில் நிகழ்ந்த தற்காப்புச் சமரிலும், பெண் போராளிகள் பங்கு கொண்டனர். பலாலிப் பெருந்தளத்தின் எல்லையோரக் காவல் நிலைகளில் நிலை கொண்டிருந்த பெண் புலிகளின் போர் அணிகள், சிறீலங்கா இராணுவத்தின் மினி முகாம்கள் மீது துணிகரத் தாக்குதல்களை நடத்திச் சாதனைகள் படைத்தன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளின் பங்களிப்பு ஆழமாகிச் சென்றபோது, அவர்களது வீர தீரச் செயல்கள் பற்றிய கதைகள் எனது காதுக்கு எட்டியது. இந்த இளம் பெண்கள் எதிர்கொண்ட திகைப்பூட்டும் சம்பவங்களை யும், அபூர்வமான அனுபவங்களையும் எழுத்தில் வடிக்க வேண்டுமென எனக்கு ஒரு ஆசை பிறந்தது. காலமும், காலத்தின் விரிப்பில் கட்டவிழும் நிகழ்வுகளும், துரித கெதியில் ஓடிக் கொண்டிருந்தன. வரலாற்று நிகழ்வுகளை உடனடியாகப் பதியா விட்டால் ஞாபகத்தில் பசுமையிலிருந்து அவை மங்கலாகிவிட லாம். அத்தோடு புதிதாகக் கட்டவிழும் நிகழ்வுகளால் பழைய வரலாற்றுச் சம்பவங்களின் உண்மைகளும் திரிவுபடலாம். ஆகையால்தான் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு நூல் வெளியிட முடிவு செய்தேன்.

பெண்களின் படைப்பிரிவுக்கு அன்று தளபதியாகப் பணிபுரிந்த ஜெயந்தி, எனது எழுத்து முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்புத் தர முன்வந்தார். அத்தோடு பல்வேறு சமர்களில் களமாடி வீரசாதனை படைத்த பெண் போராளிகள் சகலரையும் எனக்கு அறிமுகம் செய்து வைக்கவும் இணங்கினார். முக்கியப் பெண் தளபதிகள் எனது வீட்டுக்கு வருகை தந்து போராட்ட வரலாறு பற்றி என்னுடன் கலந்துரையாடினர். பல சமயங்களில் நான் பெண் போராளிகளிடமிருந்து செவ்வி எடுக்கும்போது, அவர்களது சொந்தப் போர் அனுபவங்களை அவர்களது வாயால் கேட்கும் போது மெய்சிலிர்க்கும். மாவீரர் ஆகிவிட்ட தமது தோழிகளின் வீரம் செறிந்த வரலாறுகளை விபரிக்கும்போதெல்லாம் தாழ்ந்த குரலில் தன்னடக்கமாகவும் மரியாதையுடனும் கதைப்பார்கள். சிலர் தமது சொந்தப் போர்ச்சாதனைகளைக் கூறும்போது உணர்ச்சிவசப்படுவார்கள். சில சிக்கலான நிகழ்வுகளைச் சிலர் நடித்துக் காட்டியும் விளக்குவார்கள். ஆழமான அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைச் சொற்களில் வடிக்க முடியாது திண்டாடுபவர் களும் உண்டு. போர்க்கள வெற்றிகள் பற்றிச் சொல்லும்போது எல்லோருமே நெஞ்சை நிமிர்த்தியபடி பெருமிதத்துடன் பேசுவார்கள். களமாடிக் கொண்டிருக்கும் தமது சக போராளி களுக்கு அவசியமாகத் தேவைப்படும் ரவைகள் வெடிபொருட் களைக் காவியபடி, இருபுறத்திலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபடி இருந்தபோதும், துணிந்து சாவுக்குப் பயப்படாது களமுனைக்குச் சென்ற சம்பவங்களைச் சில பெண் போராளிகள் விபரித்தார்கள்.

தாம் பசி கிடந்தபடி, போர்முனையில் நின்ற தமது சக போராளிகளுக்கு நேரம் தவறாது, சிரமமாக உணவுப் பொட்டலங் களை எடுத்துச் செல்லும் தன்னலமற்ற சேவை பற்றியும் சில பெண் போராளிகள் எடுத்துச் சொன்னார்கள். களமுனைகளில் காயமுற் றோருக்கு அவசரச் சிகிச்சை அளித்து, உயிராபத்தையும் பொருட் படுத்தாது அவர்களைச் சுமந்து செல்லும் பெண் மருத்துவப் போராளிகளின் துணிச்சலான சாதனைகள் பற்றியும் சிலர் விபரித்தார்கள். சிங்கள ஆயுதப் படைகளின் திடீர் சுற்றிவளைப்பு களை உடைத்துச் சென்ற வியப்பூட்டும் சம்பவங்கள் பற்றியும் சொன்னார்கள். சில பெண் போராளிகள் தமது மரணம் பற்றி முன்னுணர்ந்து சொன்னதையும், பின்னர் அது அவ்வாறே நிகழ்ந்ததாகவும் எனக்குச் சிலர் விசித்திரமான சம்பவங்களைக் கூறினார்கள். இப்படியான பல வியப்பூட்டும் சம்பவங்களை, வீரம் செறிந்த தனிமனித வரலாறுகளை, அலாதியான அர்ப்பணிப்பு களை இப்பெண் போராளிகளிடமிருந்து கேட்டபோது நான் மலைத்துப் போனேன். அவர்கள் மத்தியில் பிரசன்னமாக இருப்பதே எனக்குப் பெருமிதமாக இருந்தது. அவர்கள் கூறிய சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களது ஒட்டுமொத்தமான போரனுபவங்களையும் தொகுத்துப் பார்த்த போதுதான் அவர்களது இலட்சியப் பற்றுறுதியையும், அர்ப்பணிப் பின் ஆழத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்ட காரணத்தினாலேயே பெண் போராளிகள் பற்றி விடயம் தெரியாது கண்டன விமர்சனங்களை எழுதுபவர்கள் மீது எனக்குக் கடும் சினம் ஏற்படுவதுண்டு.

விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் என்ற எனது ஆங்கில நூல் 1993 ஜனவரி முதல் திகதி யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகியது. பின்னர் விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகம் இந்நூலினை லண்டனிலும் பாரிசிலும் வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் மகளிர் கட்டமைப்பின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி பற்றிய வரலாற்றுப் பதிவாகவே இந்நூல் அமைகிறது. தமிழீழ விடுதலைப் போரில் பெண் போராளிகள் பங்கு கொண்ட சமர்களையும் அவர்களது சாதனைகளையும் இந்நூல் விபரிக்கின்றது. 1986 ஒக்ரோபரில், மன்னாரில் நிகழ்ந்த சமரில் முதற் தடவையாகப் போராட்டக் களத்திற்கு அறிமுகமாகியதில் இருந்து 1992 நவம்பர் 23இல் பலாலி இராணுவத் தளம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பங்குகொண்டதுவரை, விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது ஆறாண்டு கால ஆயுதப் போராட்ட வரலாற்றை இந்நூல் சித்தரித்துக் காட்டுகின்றது. காட்டுப்புறக் கெரில்லாப் போர் முறையிலிருந்து, மரபு வழிப் போர் வரை பல்வகையான போர் அனுபவங்கள் ஊடாக மகளிர் படையணியில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் இந்த வரலாற்று விவரணத்தில் விபரிக்க முயன்றுள்ளேன். பிரமாண்டமான இராணுவ இயந்திரமான இந்தியப் படைகளை, காட்டுப்புற, நகர்ப்புறக் கெரில்லாப் போர் வடிவில் முகம்கொடுத்து, புலிகளின் மகளிர் படையானது ஒரு வலுப்பெற்ற போராட்டச் சக்தியாக உருவெடுத்ததையும் இந்நூலில் விபரிக்கின்றேன். இந்நூலில், ஒரு பகுதி பெண் போராளிகளுக்கு வழங்கப்படும் போர்ப் பயிற்சி பற்றி விபரித்துக் கூறுகிறது. எந்தவித, ஆபத்தான போர்ச் சூழலையும் எதிர்கொண்டு நிற்க வல்ல, ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய போராளிகளாக மாற்றும், மிகத் திறமான கடுமையான பயிற்சி பெண் போராளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பதை இப்பகுதியில் நான் எடுத்துக் கூறுகின்றேன்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, தமிழீழப் பெண் சமூகம் போராட்டத்தில் பங்குபற்றி வந்துள்ளது புலனாகும். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நடைபெற்ற அகிம்சை வழிப் போராட்டங்களில் பெண்கள் தீவிரமாகப் பங்குகொண்டனர். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களது பங்களிப்பின் ஒரு விரிவாக்கமாகவே ஆயுதப் புரட்சிப் போரிலும் பெண்கள் பங்கு கொள்கிறார்கள் என நான் எனது நூலில் வாதிடுகிறேன். ஆயுதப் போரில் பெண்களை ஈடுகொள்ளச் செய்த, அக, புறச் சூழல்களை இந்நூலில் எடுத்து விளக்கும் போது, இவை ‘அரச ஒடுக்குமுறை யின் வரலாற்றுச் செல்நெறிகளால் உருவகித்தவை’ எனச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தேசிய இனக் கட்டமைப்பில் ஒரு இணைபிரியாத அங்கமாக இருப்பதாலும், அரச ஒடுக்குமுறைக்கு நேரடியாகப் பலியாகி வருவதாலும், மக்களின் போராட்டம் என்ற ரீதியில் தமிழ்ப் பெண்கள் தாமாகவே முன்வந்து ஆயுத எதிர்ப்புப் போரில் பங்குகொள்கிறார்கள் என்றும் இந்நூலில் நான் வாதிடுகிறேன்.

நூல் பற்றிய குறிப்பு:

சுதந்திர வேட்கை. அடேல் பாலசிங்கம், இலண்டன் - 2002. மொழியாக்கம் : தாசீசியஸ் மற்றும் அண்டன் பாலசிங்கம்

Pin It