இலங்கையின் அசைவியக்கத்தை வடிவமைத்த அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் அறிவித்தார். அவசரகாலச் சட்டம் அமுலிலிருந்து நீக்கப்படுவது வரவேற்புக் குரியதாகும். ஏனெனில் அதனை நீக்குமாறு பல்வேறு ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள் முற்போக்கு இடதுசாரிகள் என்போர் தத்தம் தளங்களிலும் பொதுத் தளங்களிலும் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.

அதேவேளை இந்தியாவும் அமெரிக்காவும் அவசரகாலச் சட்டத்தை அகற்ற வேண்டுமென அழுத்தங்கொடுத்து வந்திருக்கின்றன. ஆதலால் ஜனாதிபதி இவ்வாறான சூழலில் பாராளுமன்றத்துக்கு வருவது என்று அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக அறிவித்து ஒரு ஜனநாயகத் தோற்றப்பாட்டைக் காட்டியிருக்கின்றார். இலங்கை சுதந்திரமடைந்த காலத்துக்குப் பின் (1948க்குப் பின்) 25.08.2011வரை சுமார் 31 ஆண்டுகள் இடைவிட்டு விட்டு அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்து வந்துள்ளது. பாராளுமன்றத்தில் 444 தடவைகள் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டன. இறுதியாக இச்சட்டம் 2005ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் கொண்டுவரப்பட்டது.

இந்த அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தாது ஆட்சிசெய்த ஒரு அரசாங்கம்தானும் இலங்கையில் இருந்தது கிடையாது. ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரகட்சி தலைமையிலான கூட்டணியும் இச்சட்டத்தின் நிழலிலேயே ஆட்சிஅதிகாரம் புரிந்து வந்துள்ளன. அவசரகாலச் சட்டம் என்பது தனியே மகிந்த சிந்தனை அரசாங்கத்தால் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. ஆளும் வர்க்க அரசாங்கம் ஒவ்வொன்றினாலும் அவ்வப்போது மக்களின் மேல் பிரயோகித்து அடக்குமுறைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சட்டவிதிகளைக் கொண்டதாகவே இது இருந்துவந்துள்ளது.

சிங்கள ஆளும் வர்க்கக் - கட்சியின் அரசாங்கங்கள் இலங்கை யில் வர்க்க அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் உழைக்கும் மக்கள் அவ்வப்போது முன்வைத்த கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முறியடித்து அடக்குவதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இச்சட்டத்தின் கீழேயே கொடிய அடக்குமுறைகளும் இரத்த ஆறுகளும் ஓடியிருக்கின்றன. தெற்கிலே உயிர்ப் பலிகள் பல்லாயிரக்கணக்கில் எடுக்கப்பட்டன. இருண்ட ஆட்சிகளாக நடத்தப்பட்டன. வரலாற்றில் இரண்டு பிரதான சிங்களக் கட்சியின் தலைமைகளிலான அரசாங்கங்களின் அவசரகாலச் சட்டத்தின் கீழான இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

(II)

1977ஆம் ஆண்டுக்குப் பின்பு ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் கட்டிலேறியது. இச்சமயம் பாராளுமன்றத்தில் ஐ.தே.க மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 8 ஆசனங்கள் மட்டுமே பெற்றிருந்தது. எதிர்க்கட்சியாகவும் இருந்து செயற்படுவதற்கான தகுதியைச் சுதந்திரக்கட்சி இழந்திருந்தது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையுடன் இத்தேர்தலில் களமிறங்கி 18 ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்டது. தமிழர் கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

இத்தருணத்தில் ஆளுங்கட்சியாகிய ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் தனக்கிருந்த பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு எந்தச் சட்டத்தையும் ஆக்கக் கூடியதாக இருந்தது. தனக்கிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1978ஆம் ஆண்டு இலங்கைக்குரிய புதிய அரசியல் அமைப்பினைக் கொண்டு வந்தது. இந்த அரசியலமைப்பில் இலங்கைப் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டு வரும் எந்தச் சட்டமும் அது அரசியலமைப்புடன் ஒத்துப் போகின்றதோ இல்லையோ. அது செயற்படுத்தப்படும் என்கிற அதிகாரமும் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை 1976களின் ஆரம்பத்தில் வட-கிழக்கில் தமிழ் இளைஞர்களின் தீவிரவாதச் செயற்பாடுகள் படிப்படியாக அரங்கேறத் தொடங்கின. குறிப்பாகத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1972ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் வெளித்தெரிய ஆரம்பித்தன. இவர்களது ‘அரசியல் கொலை’ச் செயற்றிட்டம் முன்னணிக்கு வரத்தொடங்கியது. 1973ஜுலை 27ஆம் திகதி யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதமேந்திய குழு ஒன்று உருவாகியுள்ளது என்பது வெளியுலகுக்கு வெளிப்பட்டது. தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் அரசுக்கு ஆதரவாக இயங்கிவந்த பலரும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இளைஞர்களின் தீவிரவாத நடவடிக்கைகள் எழுச்சிபெறத் தொடங்கின. இந்தக் குழாமில் ஒருவராக இருந்து செயற்பட்டு வந்தவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன்னுத்துரை சிவகுமாரன். பின்னர் இவர் சில காலமாக பொலிசாரால் தேடப்பட்டு வந்தார். இவர் 1974 ஜுன் மாதம் பொலிசாரால் கைது செய்ய முற்பட்டபோது தன்னைத்தானே தற்கொலை செய்துகொண்டார்.

உலகத் தமிழாராட்சி நிறுவனத்தின் நான்காவது தமிழாராட்சி மாநாடு 1974 சன 3--_10ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டார்கள். ஆரம்பத்திலே இந்த மாநாடு யாழ்ப் பாணத்தில் நடைபெறுவற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதையும் மீறி இந்த மாநாடு திட்டமிட்டபடி நடை பெற்றது. ஆனால், அரசாங்கம் படையினரை அனுப்பி மாநாட்டைக் குழப்பத் திட்டமிட்டது. சனவரி 10ஆம் திகதி இறுதிநாள் நிகழ்ச்சி யின்போது நூற்றுக்கணக்கான பொலிசார் பொதுமக்களை நோக்கிக் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பொதுமக்கள் மீது மோசமான தாக்குதல்களையும் மேற்கொண்டனர். இதனால் ஒன்பது தமிழர்கள் கொல்லப் பட்டதுடன் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் காயமடைந்தனர்.

பொலிசாரின் இந்த நடவடிக்கை எந்தவிதமான ஆத்திர மூட்டலும் இல்லாமலே நடைபெற்றதாக அப்பகுதியில் இருந்த அனைவரும் கூறினார்கள். இது பற்றிய விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. தமிழர்களுக்கு எதிரான பாதுகாப்பின்மை அச்சவுணர்வு ஏற்படத் தொடங்கியது. வடகிழக்கில் நிலைமை படுமோசமாக மாறத் தொடங்கியது. இதையடுத்து 1976 மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டையிலுள்ள பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய முன்னணி மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

இம்மாநாட்டில் ஏகமனதாகப் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ‘ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமையுள்ள மதச்சார்பற்ற சோசலிசத் தமிழீழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப் போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்’ என்று தந்தை செல்வா கூறினார். ஐக்கிய இலங்கையில் தமிழர் தன்மானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்குச் சுயாட்சி அரசு ஒன்றை அமைப்பதற்குச் சிங்கள மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குத் தமிழரசுக் கட்சியும் அதன்பின் தமிழர் கூட்டணியும் எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றுவிட்டதையும் எடுத்துக் கூறினார்.

மேலும் தந்தை செல்வா எமது முயற்சிகளுக்கெல்லாம் சிங்களத் தலைவர்கள் தடையாக இருந்துள்ளனர். எமது நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்கள் இணங்குவதாயில்லை. இந்த நிலையில் எமக்கெனத் தனிநாடு கோருவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை எனவும் தெளிவாக எடுத்துரைத்தார். இதன் பின்பு தந்தை செல்வா ‘வட்டுக்கோட்டைப் பிரகடனம்’ என்று இன்று எல்லோராலும் அழைக்கப்படும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

உத்தேச தமிழ் ஈழத்தின் பிரஜாவுரிமை யார் யாருக்கு வழங்கப்படும் என்ற விபரங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டது. அதன்படி பின்வருவோர் தமிழ் ஈழத்தின் பிரஜைகளாக இருப்பார்கள்.

-      தமிழ் ஈழப் பிராந்தியத்தில் வசிக்கும் அனைவரும்

-      இலங்கையில் எப்பகுதியிலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் தமிழ் ஈழத்தின் பிரஜாவுரிமை கோரினால்

-      இலங்கையில் மூதாதையர்கைளைக் கொண்ட உலகின் எப்பகுதியிலும் வசிக்கும் தமிழ் பேசுவோர் தமிழ் ஈழத்தின் பிரஜாவுரிமையைக் கோரினால்

‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என அழைக்கப்படும் இந்தத் தீர்மானம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குச் சர்வதேச அளவில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுப்பதாக இருந்தது. இதற்கு முன்னரும் தமிழ் ஈழத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டிருந்த போதிலும் உத்தியோக பூர்வமான ஒரு தீர்மானத்தின் மூலம் இதற்கான பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டமை இதுவே முதல் தடவை ஆகும்.

இதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக இருந்த ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரின் மரணங்கள் இடம்பெற்றன. இவர் களுடைய வெற்றிடங்களை நிரப்புவதற்காக எம்.சிவசிதம்பரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும், அ. அமிர்தலிங்கம் கூட்டணியின் செயலதிபராகவும் நியமிக்கப்பட்டனர்.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவருடைய தமிழரசுக்கட்சி யினூடாகச் சமஷ்டி மூலமாகத் தமிழ் பிரதேசத்துக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகக் கடந்த 25 வருடகாலமாகக் கடுமையாக உழைத்து வந்தார். தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரங்களையாவது பெறுவதற்காகப் பிரதமர்களாக இருந்த பண்டாரநாயக்கா, டட்லிசேனாநாயக்கா ஆகியோருடன் அவர் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார். சிங்களவர்களின் எதிர்ப்புக் காரணமாக இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன.

சமஷ்டி முறையிலான தீர்வுக்கான யோசனைகள் கூட அரசி யலமைப்புச் சபையில் விவாதிக்கப்படாமலேயே நிராகரிக்கப் பட்டன. தமிழர் கூட்டணியின் ஆறு அம்சக் கோரிக்கையோ சில தமிழ் அமைப்புகளின் 20 அம்சக் கோரிக்கையோ ஒருபோதும் கவனத்தைப் பெறவில்லை. மொழியுரிமை, மதஉரிமை, பிரஜா உரிமை ஆகியவற்றை இழந்து தினசரி நடைபெறும் சிங்களக் குடியேற்றத்தால் தனது பாரம்பரியப் பிரதேசங்களைப் படிப்படியாகத் தமிழ் மக்கள் இழந்துவந்தனர். தொடர்ந்து கல்வித் துறையிலும் அரச உத்தியோகங்களிலும் மற்றும் வளப்பகிர்விலும் பல்வேறு வீழ்ச்சிகளைத் தமிழ் மக்களும் தமிழ்ப் பிரதேசங்களும் முகங் கொடுக்கத் தொடங்கின.

ஏழு வருடகால 1970--1977 இடைவெளியின் பின்னர் 1977 ஜுலை 21இல் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலைக் கூட்டணித் தமிழீழம் என்ற அவர்களுடைய கோரிக்கைக்கு மக்களுடைய ஆணையைப் பெறுவதற்கான ஒரு தேர்தலாகவே இது இருக்கும் என அறிவித்தனர். இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக்கான கோரிக்கை எவ்வாறு உருவானது என்பது பற்றி விரிவாகத் தெளிவுபடுத்தியிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நீங்கள் வழங்கும் ஒவ்வொரு வாக்கும் சிங்கள ஆட்சியிலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைவதற் கான ஒரு ஆணையாக இருக்கும் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். இத்தேர்தலில் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்றுப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் இருந்தது.

(III)

இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் ஈழத்தை அமைப்ப தற்கான ஆணையைத் தமிழ்மக்கள் கூட்டணிக்கு வழங்கி யுள்ளனர் எனக் கூட்டணித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தார்கள். ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதம் கடப்பதற்குள்ளாகவே தமிழர்களுக்கு எதிரான மற்றொரு இனக்கலவரம் 1977 ஆகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பமானது. இந்தக் கலவரம் சுமார் இரண்டு வாரகாலம் நீடித்தது. இந்தக் கலவரத்தின்போது ஆண்-பெண் சிறுவர்-முதியவர் என்ற வேறுபாடின்றி நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களது வீடுகள் கடைகள் கொள்ளையிடப்பட்டுத் தீமூட்டி எரிக்கப்பட்டன.

இந்த இனக்கலவரம் மத்திய மாகாணத்திலுள்ள பெருந் தோட்டங்களையும் மக்களையும் மிகவும் மோசமாகப் பாதித்தது. இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மலையக மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தனர். வவுனியாவில் உருவாக்கப்பட்ட விவசாயப் பண்ணைகளில் இந்த மக்கள் குடியேற்றப்பட்டனர். தென்பகுதி யில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் பலர் தமது வாழ்விடப் பாதுகாப்பு கருதித் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு - மண்ணுக்கு இடம்பெயர்ந்தனர். போனவர்கள் பலர் மீண்டும் திரும்பவில்லை.

இன்னொரு புறம் பதவியேற்ற அரசாங்கம் 1972ஆம் ஆண்டில் குடியரசு அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான தீர்மான மொன்றைக் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு 1978ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ‘வெஸ்ட்மினிஸ்டர்’ பாணியிலான அரசாங்கத்தை நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட சனாதிபதி தலைமையிலான அரசாங்கமாக மாற்றுவதே இந்த அரசியலமைப்பின் பிரதான அம்சமாக இருந்தது. இதன்படி பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியாக 1978 பிப்ரவரி 4ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை ஒற்றையாட்சியைக் கொண்ட நாடாக இருக்கும் என்பதை இந்த அரசியலமைப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. இந்த அரசியலமைப்பு முதல் தடவையாகத் தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய இனம் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

பௌத்த மதத்தைப் பொறுத்தவரையில் 1972ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்-டதைவிட முக்கியமான இடத்தை 1978 அரசியலமைப்பு கொடுத்துள்ளது. அதாவது ‘இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முக்கிய இடத்தை வழங்கும் இதன்படி பௌத்த சாசனத்¬தைப் பாதுகாப்பதும் பேணுவதும் அரசாங்கத்தின் கடமையாக இருக்கும்.’ இவ்வாறு அரசியலமைப்¬பின் 9ஆவது பிரிவு கூறுகின்றது. இதுபோல் உத்தியோக மொழித் தொடர்பில் அரசியல¬மைப்பின் 18ஆவது பிரிவு ‘சிங்களம் இலங்கையின் உத்தியோக பூர்வமான மொழியாக இருக்கும்’ எனக் கூறுகிறது.

ஆக, பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் 1978 அரசியல மைப்பில் அரசாங்கம் மேலும் உயர்ந்த இடத்தைக் கொடுத்துள் ளது. பல்லினத்தன்மை மிக்க நாடு எனும் பண்பாட்டுக்கு மாறாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் இலங்கையில் முனைப்படைந்துள்ள இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளைப் புரிந்து தீர்வுகளை முன்வைக்கும் மற்றும் சமூகநீதி, சமூகச் சனநாயகம், சமூகச் சமத்துவம் போன்ற உரிய பண்பாடுகளை வாழ்வியல் நெறிகளாக உருவாக்கும் நெறிமுறைகள் எதனையும் உருவாக்காத ஆட்சி முறை வலுப்பெறத் தொடங்கியது. இனவாத அரசியல் பேரினவாத அரசியலாக மேலாதிக்கம் பெற்று அரச வன்முறைகளையும் கட்டவிழ்த்துப் போரியல் வாழ்வு தமிழ்பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்டது.

தமிழ்மக்கள் தமக்கான அரசியல் வழிமுறைகள் குறித்துத் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாமலாயிற்று. வாழ்வியல் விழுமியம் சார்ந்த பண்பு மாற்றத்துக்கான ‘அரசியல் வழிமுறைகள்’ முனைப்புப் பெற்றன. ஆயுத வழிமுறையிலான தாக்குதல் தற்காப்புத் தாக்குதல் என்னும் நிலைமைகள் உருவாயின.

இந்நிலையில் அரசாங்கம் 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கச் சட்டத்தின்படி விடுதலைப் புலிகளைத் தடை செய்தது. 1978 செப்டம்பர் 7ஆம் திகதி இரத்மலானை விமான நிலையத்தில் எயார் - சிலோன் விமானம் ஒன்று புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இவ்வாறு நிலைமைகள் வேறு-வகையில் வளர்ந்தன, மோசமாயின. தமிழ் இளைஞர்களின் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்த நிலையில் 1979ஆம் ஆண்டு ஜுலையில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டத்திற்குப் பதிலாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் 1979ஆம் ஆண்டில் 48ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் சட்டைத்தையத்ததாகவுள்ள இந்தச் சட்டம் ஐ.ஆர்.ஏ. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசு கையாளும் சட்டத்தை விடவும் மிகக் கொடூரமானது எனவும் குறிப்பிடுகின்றது.

ஜுலை 20ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் மூன்று வருடத்திற்கு மட்டுமே அமுலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், பின்னர் இது நீடிக்கப்பட்டது. இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருந்து வருகின்றது. இதனால் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் அதிகம் இன்றுவரை இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு¢ச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தமது எதிர்காலத்தைத் தொலைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இச்சட்டத்தைவிட அவசரகாலச்சட்டமும் நடைமுறையில் உள்ளது. 1947ஆம் ஆண்டின் பொதுசனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 76, 155 ஆகிய பிரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவசரகாலச் சட்டம் செயற் படுத்தப்படுகின்றது. இச்சட்டத்தின்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எவரையும் கைது செய்து காலவரையறையின்றி அதாவது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையில் தடுத்துவைக்க ஆணையிடலாம். ஆனால் இலங்கையில் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த தன்மையினால் ஒருவர் தனது வாழ்நாள் முழுக்கவே விசாரணையின்றிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப் படலாம். இந்த எதார்த்த நிலையே இன்றுவரை பலருக்குத் தொடர்கிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் 1982ஆம் ஆண்டும், பின்பு 1988ஆம் ஆண்டும் திருப்பப்பட்டது. இதில் வழங்கப்பட்டுள்ள சரத்துகள் போதாதென்று 2006ஆம் ஆண்டு மகிந்த அரசாங்கம் இன்னுமொரு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தது.

இது முதலாவதாகப் பயங்கரவாத நடவடிக்கை என்றால் என்ன? என்பதை வரையறுத்தது. அது பிரிவினைக்கு ஆதரவாகப் பேசுதல் எழுதுதல் நடவடிக்கைகளைச் செய்தல் அப்படிச் செய்பவர்களுக்கு ஏதேனும் முறைகளில் உதவுதல் போன்ற வற்றையும் குறித்துரைத்தது. ஆக இச்சட்டைத்தின் கீழ் கைதா-கின்றவருக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள் கூடக் குற்றவாளிகளாகக் காணப்-படலாம். புலிகளின் தலைவர் களின் ஆதரவாளர்களும் கைது செய்யப் படுவது மட்டுமன்றி அவர்களின் சொத்துகள் கூட அரசாங்கம் உடமையாக்கப்படலாம் என்று தெரிவிக்கப் படுகின்றது.

அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதச் சட்டமும் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த நரகத் துன்பம்தான் மிஞ்சும். இன்றுவரை நிலைமைகள் மாறிவிட்டதாகக் கூறிக் கொண்டாலும் இச்சட்டங்கள் இன்றும் மீளப் பெறப்படவில்லை. இந்தச் சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் மீட்கப்பட வில்லை. அப்படியானால் நாம் எங்கே நிற்கிறோம்? எங்கே செல்லப் போகின்றோம்?

இலங்கையில் இனமுரண்பாடு கூர்மையடைந்து வந்தபோது தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை நிராகரித்து ஒடுக்கவும், அடக்கவும் சட்ட ஏற்பாடுகள் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. அதாவது அடக்குமுறை, ஒடுக்குமுறைச் கலாச்சாரத்தினூடாக இலங்கையில் சனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதற்கு இரண்டு வகையான ஒடுக்கு முறைச் சட்டங்கள் அரசாங்கத்துக்குத் துணைபுரிந்து வந்தன. இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாத அரசுகள் இந்தச் சட்டங்களை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திவந்துள்ளன.

இந்த இரு சட்ட முறைகளால் தமிழபேசும் மக்கள் சாதாரண வாழ்வியல் ஓட்டங்களில் கூட எட்ட நின்று ஓடும் நிலைமையே வெளிப்பட்டது. அரசாங்க ஆட்சி அதிகார கலாச்சார அணித் திரட்டலில் சாதாரண மக்கள் பங்குகொள்ள முடியாதவர் களாகவே இருந்தார்கள்.

(IV)

அவசரகாலச் சட்டத்தின்கீழ் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேல் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களின் மீது இன ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாகக் கடந்த 35 ஆண்டு களாக வடகிழக்கு தமிழ் மக்கள் இதே அவசர காலச் சட்டத்தின் கீழ் கொடூர அடக்குமுறைகளுக்கும் இரத்தக் குளிப்புகளுக்கும் ஆளாக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். இதனால் சுமார் 300,000 வரையிலான தமிழ் மக்கள் மாண்டு மடிந்து போனதுடன் பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து அகதிகளாயும் உள்ளனர். பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க ஆட்சிகளின் அதிகாரப் பசிக்கும் இனவெறிக்கும் அவசரகாலச் சட்டம் பாதுகாப்பு வழங்கி வந்திருக்கிறது.

இத்தகைய அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட சூழலில் இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்குமா என்பது இச்சூழலில் எழும் கேள்வி. ஏனெனில் அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற பலதரப்புக் கோரிக்கைகளே இருந்துள்ளன. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எல்லோரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிடிக்குள் அகப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிறைகளில் இருந்து வருகிறார்கள். எனவே, அவசர காலச்சட்டம் அற்றுப் போனாலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் எவ்விதத் தளர்வையும் கொண்டிருக்கவில்லை. இதனைப் பல சட்டத்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புலிகளை அழித்து விட்டதாகக் கூறப்பட்டு இரண்டு வெற்றிவிழாக்களும் நடத்தப்பட்ட பின்பும் அதே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீடிக்கின்றது. அதன் கீழ் இன்றும் சுமார் 15,000பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாகச் சுமார் 15 வருடங்கள் வரை இவ்விரு சட்டங்களின் கீழும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் மட்டுமன்றிச் சிங்கள அரசியல் கைதிகளும் உள்ளனர்.

இரட்டைப் பிசாசுகள் என வர்ணிக்கக் கூடிய வகையில் அமைந்த அவசரகாலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களையும் குறிப்பாகத் தமிழ் மக்களையும் ஒடுக்கி உயிர் பறித்து அகதிகளாக்கி வந்துள்ளன. தமிழ் இளைஞர்களையும் அவரது தீவிரப் போராட்டங்களை ஒடுக்கவெனக் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களே 1988-89 காலகட்டத்தில் 100,000 வரையிலான சிங்கள இளைஞர் யுவதிகள் கொல்லப்படவும் காணாமல் போவதற்கும் காரணமான சட்டங்களாக அமைந்திருந்தன என்பதும் மறுப்பதற்கில்லை. ஆதலால் இச்சட்டங்கள் இழைத்த கொடுமைகளைப் பட்டியலிட்டால் அதன் நீளம் இலங்கையின் நீளத்தையே தாண்டி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

Pin It