1.0 அறிமுகம்

இலங்கையானது சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் இருந்து தமிழ் மக்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக நடத்தப்பட்டனர். அவர்களது பாரம்பரியப் பிரதேசங்கள், இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுமிடத்து பிரதேச சமத்துவமின்மையை எதிர் நோக்கின. ஜனநாயக அரசியல் வழிமுறை மூலம் தமக்கான உரிமையை வென்றெடுக்க முடியும் என நம்பியிருந்தவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இந்நிலையில், தமிழ் மக்களின் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தினைக் குறைக்கும் வகையில் பாரிய குடியேற்றத் திட்டங்கள் இம்மக்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் ஊக்குவிக்கப்பட்டிருந்தன. அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியான கல்லோயா ஆற்றுத்திட்டம் எனும் நீர்ப்பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டு மாத்தறை, அம்பாந்தோட்டை பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இதன் கீழ் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுள் 38 கிராமங்கள் சிங்கள மக்களுக்கும் 6 கிராமங்கள் மட்டும் தமிழ் பேசும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டன. இதிலும் தமிழ் கிராமங்கள் நீர்வரத்து குறைந்த அல்லது நீரோட்டத்தின் எல்லையில் இருந்த கிராமங்களாகவே இருந்தன. 1960களில் இக்குடியேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றைய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது ஓர் உதாரணம் மட்டுமே.

இவ்வாறாகவே தமிழ் மக்களிற்கு உரித்தான காணிகள், விவசாய நிலங்கள், நீர்ப்பங்குகள் அனைத்தும் சுரண்டும் அல்லது கபளீகரம் செய்யும் கைங்கரியத்தில் காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் செய்யத் தவறவில்லை. இவ்வாறாக இந்நிலை உச்சம் பெறத் தொடங்கிய காலங்களில் தமிழ் மக்கள் பெரும் எடுப்பிலான அகிம்சைப் போராட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அவ்வேளைகளில் எல்லாம் அரச யந்திரம் வன்முறைகள், கைதுகள், விளக்கமறியல்கள் எனத் தனது அதிகார மெத்தனப் போக்கை பயன்படுத்தியது உச்ச கட்டங்களாக 1981, 1983 இனப்படுகொலையையும் நிறைவேற்றியது.

இந்நிலையிலேயே அகிம்சைமூலம் உரிமைகள் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாத நிலைக்கு நிர்க்கதியான தமிழ் மக்கள் புதிதொரு போராட்ட வடிவமான ஆயுதப் போராட்டத்தினை நோக்கிய உந்தலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். 1980களின் ஆரம்பத்தில் நிழ்ந்த அப்போராட்ட வடிவமானது அதன் பின்னரான 3 தசாப்த காலங்களில் வீரியம் மிக்கதாகவே இருந்திருக்கின்றது. இவ் மூன்று தசாப்த போரியல் வரலாற்றில் காவு கொள்ளப்பட்ட மனித உயிர்கள் ஏராளம். அங்கவீனர்கள் அநாதைகள், காணாமற் போனவர்கள், எண்ணிக்கை அதிகமானது. இந்நிலையில் தமிழ் மக்களின் நியாயமான போராட்ட வடிவங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்களது பாரம்பரிய வளம் மிக்க தேசத்தினது இயற்கை வளங்களைச் சுரண்டுவதும் ஒருபடி மேல் போய் வகை தொகையின்றித் சூறையாடுவதும் சூழலியற் கோலங்களை, கட்டமைப்பை மாற்ற முனைவதும் சூழலியற் படுகொலைகளை அரங்கேற்றுவதாகவே அமையும். நீண்ட கால யுத்த நிலைமை வட-கிழக்குப் பகுதியின் இயற்கைச் சூழலைப் பெரிதும் பாதிப்படைய வைத்திருக்கின்றது. போரின் பின்னரான இற்றைக் காலம் வரை சூழலியற் சீர்கேடு இடம்பெற்றே வந்திருக்கிறது. இன்று அபிவிருத்தி என்றும் புணரமைப்பு என்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்னும் கற்பிதங்கள் கூறும் அரசும் அரசியல் கையறு நிலையினை அடைந்த மக்களிற்கும் இடையில் வடகிழக்கு இயற்கைச் சூழல் பெரும் ஆபத்தினையே எதிர் நோக்கியுள்ளது.

2.0 கடந்தகாலப் படிப்பினைகள்

சென்ற நூற்றாண்டில் எல்லைக் கோட்டுப் பிரச்சனைகள், இனமுரண்பாடுகள் காரணமாக உருவான யுத்தங்கள், போரியல் நடவடிக்கைகள், தனியே மனித இனத்தைப் பல்வேறு நிலைகளில் பாதித்ததோடு, அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களின் சூழற் தொகுதி யின் அனைத்துப் பரிமாணங்களிலும் நஞ்சேற்றப்பட்டிருக்கின்றது. சுவாசிக்கும் காற்று, அருந்துகின்ற நீர், மெல்லுகின்ற உணவு என அது வியாபித்திருக்கின்றது. 20உம் 21உம் நூற்றாண்டின் முற்பகுதி வரை உலகில் பாரியளவிலான போரியல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. கொங்கோ போர் எதியோப்பியா யுத்தம், ருவண்டா, சோமாலியா, கம்போடியா, ஈராக், குவைத் யுத்தம், இஸ்ரேல்-லெபனான் யுத்தம் மட்டுமல்லாது இரு உலகமகா யுத்தங்களையும் நாடுகள் நடத்தி முடித்திருக்கின்றன.

போர் ஆரம்பித்து விட்டால் இரத்தமும் சதையும் சாம்பலும் ஓலங்களுமே. இத்தன்மை உடனடியான அல்லது குறிப்பிட்ட காலப் பகுதியிலான நிகழ்வோட்டமாக இருந்தாலும் இந்நிலை யில் நிகழ்த்தப்படும் சூழலியற் படுகொலைகள் நீண்ட காலத்திற் குரியவை ஆகின்றன. இவ்வகையில் போரின் பின்னரான ஒவ்வொரு நடவடிக்கைகளும் சூழலியலோடு இணைந்து செல்லுகின்றபோது அதனது தாக்கம் உணரப்படலாம். நடந்து முடிந்த போர்கள் சூழலியல் ரீதியில் நீண்ட குறுகிய காலத்தில் மனித இனம் போரினால் சம்பாதித்திருக்கக்கூடிய அனுபவமாக அல்லது படிப்பினையாகக் கொள்ளலாம்.

கொரில்லா போரினால் (1998--2003) 3 மில்லியனுக்கு அதிகமான மக்கள் நோய்த்தாக்கத்தினாலும் பட்டினிச்சாவை எதிர் நோக்கியவர்களாகவும் உள்ளனர். 2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தரமான குடிநீரைப் பெறுவதற்கு வாய்ப்பற்றவர்களாகக் காணப்படுகின்றனர். தொடர்ச்சியாக அகதிகளால் இறைச்சிக்காகக் காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. யானைகளின் குடித்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. காரணம் யானைகள் தந்ததிற்காக வேட்டையாடப்படுகின்றன. அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் இவ்யுத்த அனர்த்தமானது இடம் பெற்றிருக்கின்றது.

2001இல் ஆரம்பமான ஆப்கான் யுத்தம் காரணமாக மக்களது தனிப்பட்ட சுகாதாரம் பாதிப்புற்றது. கிட்டத்தட்ட 1000 கிராமங் களும் அதனை அண்டிய சூழலும் பாதிப்பிற்குள்ளாகியது. தரமான குடிநீர்த் தொகுதிகள் மாசடைந்தன. ஆப்கானின் பெரிய காடுகள் அழிவுற்றன. தலிபான் போராளிகளால் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டன. வெடிபொருட்கள் பிரயோகத்தின் விளைவு காற்று, மண், நீர், என அனைத்துமே பாதிப்படைந்தன. இது புற்று நோயை ஏற்படுத்துவதில் முதன்மையானது. ராக்கெட் உந்து கணைகளில் இருந்து இவை ஏற்பட்டன. இதனால் தைரோயிட்டு சுரப்பி மக்களில் பலருக்குப் பாதிப்படைந்தது இதன் விளைவு இன்று ஆண், பெண், குழந்தைகள் எனப் பலர் இறந்துள்ளனர்.

ஈராக், -குவைத் யுத்தம் 1990களில் ஆரம்பமாகியது. ஈராக் பலமில்லியன் தொன் மசகு எண்ணெய்த் தொகுதியை பதுக்கி வைத்த கசிவு காரணமாக 25000 வரையான குறிப்பிட்ட காலத்தில் புலம்பெயரும் பறவைகள் அழிவடைந்தன. அகக் குடா பகுதியில் எண்ணெய்க் கசிவால் 50 சதுர கிலோமீற்றருக்கு அதிகமான பரப்பளவில் பரவியவுடன் தரைக்கீழ் நீர்ப்படுக்கைகளில் எண்ணெய் தேங்கியது. இதன் விளைவு நீர் மாசடைந்தது.

வியட்னாம் யுத்த காலத்தில் அமெரிக்கா ஏறத்தாழ 19 மில்லியன் காலன்களைக் கொண்ட இரசாயனவியல் ஆயுதத்தினைத் தென் வியட்நாம் பகுதிக் காடுகளில் பிரயோகித்தது. இதன் விளைவு பெரிய காடுகள் மரஞ்செடி கொடிகள் போன்றவற்றின் இலைகள் உதிர்க்கப்பட்டன. இதனால் தென் வியட்நாம் காடுகள் வேருடன் அழிக்கப்பட்டன. யப்பான், ரஸ்யா போன்ற நாடுகளில் இன்றும் கதிர் வீச்சு தாக்கங்கள் காணப்படுகின்றன.

இவை கடந்த காலங்களில் மனித வர்க்கம் சூழலின் மீது ஏற்படுத்திய படுகொலைகளில் ஒரு சிலதே.

2.1 வாழ்விழந்த வான்பயிர்கள்

வடகிழக்குப் பகுதியின் காலநிலைப் பண்பு, மண்ணியல் பண்புகளிற்கு ஏற்றவாறு வான்பயிர்களான பனை, தென்னை போன்ற தாவரங்களின் வளர்ச்சியானது காணப்படுகின்றது. பருவகால மழை வீழ்ச்சியே இதன் ஜீவாதாரம். குறுகிய மாரி மற்றும் நீண்ட கோடைக்காலத்திற்கேற்ப இவை நிலை பெற்றுள்ளன. பனை வளம் இப்பிரதேசங்களின் இயற்கை மரத் தாவரங்களில் ஒன்று. பொதுவாகக் கரையோர உவர் நிலப் பகுதிகளை ஆக்கிரமித்து வளரும் இத் தாவரம் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வட மராட்சிப் பிரிவு, தென் மராட்சிப் பிரிவு, தீவுப் பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சியின் பூனகரிப்பகுதி, மன்னார், திருகோணமலையின் ஈச்சிலம்பற்றை போன்ற பகுதிகளிலும் அதிகமாகவே காணப்படு கின்றன.

இப்பகுதிகளில் சில பகுதி மக்களின் வாழ்வாதாரமானது இவ் கற்பகத் தருவினை நம்பியே உள்ளது. இவ்வளத்தின் பெரும்பாலான பகுதிகள் ஒவ்வொன்றும் பயன்பாடுமிக்கவை. பன்ன வேலைகள், கருப்பணி, பனாட்டு, ஒடியல் மா வகைகள் போன்றவை இவற்றில் சில. தீவுப்பகுதி மக்களில் ஒரு தொகுதியினர் இதனைப் பகுதி நேர/முழு நேரத் தொழிலாக மேற்கொள்வர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலங்களில் இவற்றில் பல இலட்சம் கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாகப் பாதுகாப்புப் பதுங்கு குழிகள், காவலரண்கள் அமைப்பதற்காகவும் எறிகணை வீச்சுகள் மூலமாகவும் அழிவடைந்துள்ளன. அத்துடன் வடலிகள் பாதுகாப்பு காரணங்களிற்காக எரியூட்டப்பட்டுள்ளன. ஏறக்குறைய 4 மில்லியன் பனை மரங்கள் அழிவடைந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவித்தாலும், அழிக்கப்பட்டவை அத்தொகைக்கு அதிகமானதாகக் கூட இருக்கலாம். இந்நிலை இவ் வளத்தினை நம்பி ஜீவனோபாயம் செய்த மக்களின் நிலையானது நிர்க்கதியானதுடன் இத்தாவரம் வளர்ச்சி பெறுவதற்கு நீண்ட காலமாகும். எனவே உயிர்ச்சூழலியல் ஒழுங்கில் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இப்பகுதிகளில் காணப்பட்ட தென்னைகள் பெரும்பாலும் அழிவடைந்த நிலையில் உள்ளன. தென்னை பெருந்தோட்டப் பயிர்களில் ஒன்று. பதுங்கு குழி அமைப்பு, எறிகணை வீச்சுகள் மூலம் இவை அழிக்கப்பட்டன. 2004 வரை 12000 தென்னை மரங்கள் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் அழிக்கப்பட்டிருக்கின்றன. மணலாற்று இராணுவ நடவடிக்கை யின் போது முல்லைத்தீவு, அலம்பில், செம்மலைப் பகுதிகளில் தென்னந்தோப்புகள் பாதிப்படைந்துள்ளன.

2.2 அகழப்படும் சுண்ணக்கல்

யாழ்ப்பாணக் குடாநாடு மயோசின் காலச் சுண்ணக்கல் பாறையினால் உருவானது. இப்பாறைகளின் வெடிப்புகள், துளைகள், குகைகள் வாயிலாகப் பெய்கின்ற மழை நீர் கீழ் இறங்கித் தரைக்கீழ் நீராகச் சேமிக்கப்படுகின்றது. இதனாலேயே நிரந்தரமான ஆறுகள் இப்பிரதேசத்தில் இல்லை. போர்க்காலங்கள் போருக்குப் பிந்திய இற்றைக் காலம் வரை உயர் பாதுகாப்பு வலயங்களாகக் பிரகடனப்படுத்திய பகுதிகளில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரிவும் ஒன்று. இப்பகுதியில்தான் சத்தம் சந்தடியில்லாமல் அதிகளவான சுண்ணக்கற்கள் அகழப்பட்டுத் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாகக் கீரிமலை- மாவிட்டபுரம் வீதியின் இருமருங்கும் அகலமாகவும் ஆழமாகவும் அகழப்படுகின்றன. சில இடங்களில் அகழப்படும் குழிகளில் நீர் வெளித் தோன்றியுள்ளது. இதன் காரணமாகக் கோடைக்காலங்களில், நீர்ப்பற்றாக்குறைக் காலங்களில் கடல் நீர் உட்புகும் அபாய நிலை உருவாகியுள்ளது. தரைக்கீழ் நீர் வெப்பம் காரணமாக இலகுவில் துரிதமாக ஆவியாக்கம் இடம்பெறலாம். இது இயல்பான ஒன்றே.

அத்துடன் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்ற வெப்பநிலைக்கு அல்லது வறட்சிக்குச் சுண்ணக்கல் அகழ்வு பிரதான காரணங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது உடைபடாதிருக்கும் 100 கன அடி அளவுள்ள சுண்ணாம்புப் பாறை 10 கன அடி நீரினை உறிஞ்சி வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும். எனவே 1 கியூப் கற்கள் உடைத்து எடுக்கப் படுமாயின் 10 கன அடி நீர் (62.4 கலன்கள்) வெளியேற்றப் படும். இதனால் குடிநீர் விவசாயம் அனைத்திற்குமே குந்தகம் ஏற்படும். குடா நாட்டின் ஆதி மூலம் தரைக்கீழ் நீரே. இவ்வாறான நிலை நீண்ட காலப் போக்கில் நீர்ப்பற்றாக்குறையினை எதிர் நோக்குவதுடன் உவராக்கம் போன்றவை இலகுவில் ஏற்பட வாய்ப்பேற்படுகின்றது. ஏற்கனவே அராலித் தீவுப்பகுதி மக்கள் குடிநீர்த் தட்டுப் பாட்டினை எதிர் நோக்கியுள்ளனர்.

2.3 உருவவியல் மாறிய நிலவியல்

வடகிழக்குப் பகுதியானது நில உருவவியல் ரீதியில் பல பிரிவுகளைக் கொண்டது. மணற்குன்றுகள், சதுப்பு நிலங்கள், எச்சக்குன்றுகள், சமதரை, ஆற்றுச்சிறைகள் வெளியரும்பு பாறைகளேஅவை. போர்க்காலங்களில் இ¢ந்நில உருவியல் பெரிதும் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. விமானத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல்களால் பாரிய குழிகள் ஏற்பட்டு இருக்கின்றன. நிலக்கண்ணிகள் புதைக்கின்ற வேளையில் மட்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுகின்றது. மீளப் பெறும் வேளை மீளவும் மாற்றம் பெறுகின்றது. பாதுகாப்புக் குழிகள் காவலரண்கள் அமைப்பு, பாதுகாப்பு அணைகள் ஏற்படுத்தல், கனரக வாகனப் பாவனைகள் போன்றவற்றின் மூலம் உருவவியல் மாற்றம் பெற்றிருக்கின்றது.

பாரிய குழிகள் ஏற்படுகின்ற வேளையில் மண் பெயர்க்கப் படுகின்றது, மாசடைகின்றது. மண்ணரிப்பு இலகுவில் ஏற்பட வாய்ப்புள்ளது. பாரிய அணைகள் இயற்கைக்கு முரண் நிலையான தன்மையை ஏற்படுத்துகின்றது. நீரேந்தும் பிரதேசங்கள் பாதிப்படைகின்றன. ஆறுகள் வறண்டு போகலாம்; விவசாய நீர்ப்பாசன முறைகளில் மாற்றம் ஏற்படும். உயிர்ப்பல்வகைமை பாதிப்படையும் முறைகளில் மாற்றம் ஏற்படும். நீர்ப்பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கிற்கான வாய்ப்புகள் என இயற்கைச் சூழமைவிற்குப் புற நிலையான தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக மன்னார், அடம்பன்பகுதி, வவுனியா, ஓமந்தை, பாலமோட்டைப் பகுதிகள், கிளிநொச்சி முழங்காவில், முறிப்பு, முறிகண்டி எனப் பாரிய மண் அணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீட்கப்படும் எறிகணைகள், கண்ணி வெடிகளை மீளச் செயலிழக்க வைக்கப்படும்போது பாரிய குழிகள் அப் பகுதிகளில் ஏற்படுகின்றன. குறிப்பாக அண்மைக் காலங்களில் நாகர்கோவில் பகுதிகளில் இவ்வாறான குழிகள் ஏற்படுவதாக அறிய முடிகின்றது.

அத்துடன் மண்கட்டமைப்பு மாற்றம், மண் மாசடைவு போன்றன இடம்பெற வாய்ப்பேற்படுகின்றது. குறிப்பாகக் கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் போன்றன இறுதி யுத்த காலத்தில் பிரயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனால் நிச்சயமாக மண்மாசடைவு இரசாயனக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

2.4 அழிக்கப்படும் காடுகள்

இப் பிரதேச இயற்கைக் காடுகள் எனும் போது பெரும்பாலும் உலர் பருவக் காற்றுக் காடுகளே காணப்படுகின்றன. எனினும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்ளில் ஈரப்பருவக்காற்றுக் காடுகளும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தன. இப் பகுதியில் வீரை, பாலை, சமண்டலை, காயா, கொண்டல், மகோகனி, போன்ற பெறுமதி மிக்க மரங்களை அவதானிக்கலாம். இவ்வாறான காட்டுவளமானவை இராணுவப் பாதுகாப்பிற்காக அமைக்கப்படு கின்ற பாதுகாப்பு அரண்கள் மற்றும் பாதுகாப்புக் குழிகள், விறகுத் தேவைகள் மற்றும் பிரதான நெடுஞ்சாலைகளிற் இருமருங்கிலும் உள்ளவை. போக்குவரத்துப் பாதுகாப்பிற்காக அழிக்கப்பட்டிருக் கின்றன.

குறிப்பாக நோக்கின் 1996 காலப் பகுதியில் வவுனியா மன்னார் பகுதியில் இடம் பெற்ற “எடிபல” இராணுவ நடவடிக்கையின் போது வீதிகளின் இரு மருங்கிலும் 50-100 அகலத்தில் காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.

1997--1999 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஜெயசிக்று இராணுவ நடவடிக்கையின்போது ஓமந்தை, மாங்குளம் பிரதேசத்தினை அண்டிய காடுகள் பெரிதும் அழிக்கப்பட்டி ருக்கின்றன. அத்துடன் A9 நெடுஞ்சாலைக்குக் கிழக்காக ஒட்டிசுட்டான்- டொலர்பண்ணை கொன்ற் பண்ணை வீதிகளில் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 2500 ஏக்கர் காடுகள் அழிவுற்றதாக நம்பப்படுகின்றது.

இன்றும் வடகிழக்குக் காட்டுப்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கையர்கள் மரத்தளபாட உற்பத்திக்காகத் தேக்கு, மகோகனி போன்ற பெறுமதியான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணலாறு தெற்கு மாங்குளத்தை அண்டிய பகுதியில் இவற்றை அவதானிக்கலாம். மீள் வனமாக்கல் செய்யும் 150 வருட காலப் பகுதியிலேயே இவற்றின் பூரண வளர்ச்சி நிலை அடைய முடியும் எனக் கூறப்படுகின்றது.

2.5 கொள்ளை போகும் மணல் வளம்

வட கிழக்குப் பகுதியின் புவிச்சரித காலங்களின் வண்டல் படிவுகள், மணல் படிவுகள் என்பன கரையோரத்தில் காணப் படுகின்றன. இங்குச் சாதாரண மணல் முதல் கனிய மணல் (சிலிக்கா) மற்றும் இல்மனைற், றூட்டைல் எனும் பெறுமதி மிக்க மணல்கள் காணப்படுகின்றன. குறிப்பாகச் சாதாரண மணல் எனும் போது பூநகரி, மன்னார், அரியாலை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, சாட்டி போன்ற இடங்களிலும், கனிய மணல் வட மராட்சிக்குக் கிழக்கில் அம்மன், குடத்தனை, நாகர்கோவில், நிலாவெளி போன்ற இடங்களிலும் இல்மனைற் புல்மோட்டை, நாயாறு, திருக் கோவில் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றது. இங்குப் புனரமைப்பு, புதிய கட்டடங்கள் அமைப்பு என வகை தொகையின்றி மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. கடல் மட்டமளவில் அகழப்படுகின்றது. சில இடங்களில் உவர் நீரின் ஊடுருவல் காணப்படுகின்றது. அத்துடன் கரையோரத் தாவரங்கள் பலவும் நீக்கப்பட்டுள்ளன. கிராமங்களுள் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. கரையோர அரிப்புத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கின்றது. பழமையான கட்டடங்கள், சாலைகள் சேத மடையத் தொடங்கியுள்ளன. மீனவர்களின் ஜீவனோபாயத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக மணற்காடு சார்ந்த வடமராட்சிக் கிழக்கு, சாவகச்சேரிநகர்ப் பிரதேசங்களில் இச் சூழல் முரண் நிலை உருவாகியுள்ளது.

புல்மோட்டைப் பகுதியில் இல்மனைட் 44 மில்லியன் தொன்னளவில் காணப்படுகின்றது. இவ் கடற்கரை மணலில் 70-72கி இல்மனைற்றும், 8-10கி வரை றூட்டைலும் 8கி ஸேர்கோனும், 0.3கி மொனோசைட்டும் காணப்படுகின்றது. புல்மோட்டை இல்மனைற்றில் 52கி வரை டைட்டானியம் ஒக்சைட் உண்டு. இவை உலகில் மிகச் சிறந்த வகையினப் படிவுகளாகக் கருதப்படுகின்றன. இப்படிவுகள் ஜப்பான் நிறுவனங்களில் தாரைவார்க்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் பிரித்தெடுக்கப்படும் கனியங்கள் யப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன. இவ்வகை சுரண்டல் மூலம் எதிர்காலத்தில் இவ்வளம் பற்றாக்குறை ஏற்படும்போது பிரதேச அபிவிருத்தித் தொழிற்பாடுகள் முடக்கப்படும்.

2.6 கபளீகரமாகும் கண்டல்கள்

வட கிழக்குப் பகுதியானது நீண்டதும் பல்லுருவத் தன்மை கொண்டதுமானதும் ஆற்று வடிநிலங்கள் சங்கமிக்கும் முடிவு களைக் கொண்டதாகவும் அமைவு பெற்றுள்ளது. இயல்பாகவே உவர் நீரும் வெள்ள நீரும் கலக்குமிடங்களாகக் காணப்படும். இவ்விடங்களில் காணப்படும் கண்டல் காடுகள் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் நாகர்கோவில்பகுதி, அரியாலைப் பகுதி, தொண்டைமானாற்றுப் பகுதி, மண்டைத் தீவு, புங்குடு தீவு ஆகிய பகுதிகளிலும் முல்லைத்தீவில் கொக்கிளாய், நாயாறு, மன்னார், திருமலையில் மூதூர், மட்டக்களப்பில் கதிரவெளி, வாழைச்சேனை, காரைத் தீவு, அம்பாறை, பொத்துவில் என வியாபித்துள்ளது. மட்கட்டமைப்பைப் பிடிமானமாக வைத்துக் கொள்ளவும் காற்றுக் காலங்களில் அலைகளின் தாக்கத்தில் இருந்து கரையோரத்தைப் பாதுகாக்கவும் உயிர்ப் பல்வகைமையின் உறைவிடமாகவும் இவை விளங்குகின்றன.

போர்க் காலங்கள், போரின் பின்னரான இக்காலம் வரை இவை அழிக்கப்பட்டிருக்கின்றன. போர்க் காலங்களில் நாகர் கோவில், தொண்டைமானாறு, மண்டைத் தீவு, சத்துருக்கொண்டான், பிரதேசக்கண்டல் காடுகள் ஆனவை பாதுகாப்புக் காரணங்களிற் காக வகைதொகையின்றி அழிக்கப்பட்டன. குறிப்பாகக் கரையோரங்களின் அரணாகவிருந்து அழகுக்கு அழகு சேர்த்த கண்டல் காடுகள் அக்கரைப்பற்றிலிருந்து திருக்கோவில் வரையான சுமார் 10கிமீ வரையான வாவியினை அண்டியிருந்த கண்டல்கள் அழிக்கப்பட்டன.

பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், இராணுவப் படைத்தள விஸ்தரிப்பகள் என்பவற்றிற்காகக் கொக்கிளாய் சரணாலயப் பகுதியில் 1500 ஹெக்டேர் வரையிலான கண்டற்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு வாவிகளில் ஒரு காலத்தில் சிலாகித்துப் பேசப்பட்ட மீனினங்கள் கண்டல்களின் அழிவோடு அழிந்ததாகக் கடற்தொழிலாளர்கள் விசனம் தெரிவித்திருந்தார்கள்.

2.7 இழக்கப்படும் ஈர நிலங்கள்

சூழல் தொகுதிகளில் ஈர நிலத் தொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை. வடகிழக்குப் பிரதேசத்தில் இவற்றின் பரம்பல் அதிகமாகக் காணப்படுகின்றது. இவை இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாணக் கடனீரேரிக் கட்டுக்கரைக் குளம், வங்காலைக் கடற்கரைச் சரணாலயம், இரணைமடுக்குளம், கல்லோயா நீர்த்தேக்கம், அல்லை, கந்தளாய் போன்றன முக்கியமானவை. இவை தவிரச் சிறியளவிலான ஏராளமான தொகுதிகள் பிரதேசம் எங்கும் பரந்து கிடக்கின்றன. சூழலியல் ரீதியில் அவற்றின் நன்மையோ ஏராளம். நகரக் கழிவுகளை மெல்லவும் கார்பன் சேர்வைகளைத் தேக்கி வைக்கும் இடமாகவும் நுண்கால நிலை, பிரதேச கால நிலை ஆகியவற்றைச் சீர்ப்படுத்தவும் உதவுகின்றன. இவை அண்மைக் காலங்களில் அபிவிருத்திகள் உல்லாச விடுதிகள், கட்டடங்கள் அமைப்பிற்காக ஆக்கிரமிக்கப்பட்டு மேடுறுத்தி ஈர நிலங்களை இல்லாமற்செய்யும் மெத்தனப் போக்கைக் காணலாம்.

அத்துடன் யாழ்குடா நாட்டின் சிறு குளங்கள் அண்டிய பிரதேசங்களில் அமைக்கப்படுவதும், சூழலியல் நியமங்களிற்குப் புறம்பாக¢ குளங்களைப் பயன்படுத்த முனைவதும், நகர மாநகரக் கழிவுகளானவை முகாமைத்துவமிக்க திண்மக்கழிவகற்றல் இன்றிச் சதுப்பு, கைவிடப்பட்ட குளங்களில் கொட்டப்பட்டுத் தொடர்ந்து வருவதும், ஈர நிலங்களின் அச்சுறுத்தலுக்கான ஆரம்பமே. இன்று புல்லுக்குளம், தாராக் குளம் போன்றவற்றின் நிலையும் இதுவே.

தூர்ந்து போன கால்வாய்கள், குளங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி செய்யும் பொருட்டு புனரமைப்புகள் இடம்பெறவே யில்லை. உப்புப் பாத்திகள் வெறுமனே வறண்டு கிடக்கின்றன. ஆனையிறவு உப்பளத்தின் நிலை மீளியங்க வைக்க முயன்றாலும், நிலக் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கின்றது. “வடகிழக்கு ஈர நிலங்கள் மத்திம அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. பலவற்றின் ஆய்வுகள், தரவுகள் இடம்பெற வில்லை காரணம் போர்’’ என இலங்கையின் ஈரநிலங்களிற்கான அகராதி குறிப்பிடுகின்றது.

2.8 காணாமல் போகும் கரையோரச் சூழல்

பரந்த கண்டமேடை, சிறந்த மீன்பிடித் தளங்கள், நீண்டதும் பல்லுருவத் தன்மை கொண்டதுமான கடற்கரை, ஆற்றுப் பொங்கு முகங்களின் அமைவென வடகிழக்கின் சூழல் அமைவு பெற்றுள்ளது. முருகைகள், பவளப்பாறைகள், கடற்சார் பாலூட்டிகள், மீனினங்கள் என உயிர்ப்பல்வகைமைக் கூறுகள் அதீதம் காணப்படுகின்றன. அத்துடன் சுற்றுலாக் கைத் தொழிலுக்கு ஏற்றவாறான பாசிக்குடா, நிலாவெளி, மன்னார், சாட்டி, வடமராட்சிக் கிழக்கு, கசூரினா கடற்கரை வெளிகள் காணப்படுகின்றன.

போர்ச்சூழல் இவ்வாறான கரையோரச் சூழலை சீர்கெட வைத்திருக்கின்றது. போர்க் காலத்தில் கடல் மற்றும் கரையோரங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றனவாய் விளங்கின. இங்கு நடைபெற்ற யுத்தங்கள், தாக்குதல்கள் என்பனவும் கப்பல்கள், கடற் கலங்கள் போன்றவற்றின் தொடர்ச்சியான ஊடுருவல் போன்றன சூழலை மாசுற வைத்திருக்கின்றன. பாதுகாப்பிற்காகக் கரையோரங்களில் பாதுகாப்பு வேலிகள், கண்ணி வெடிகள் எனக் கரையோரச் சூழல் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. தாக்குதல் களின் அதிர்வுகள் மீனினங்களின் இயல்பு வாழ்வைப் பாதித்தி ருக்கலாம். முருகைகளில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

போரின் பின்னரான இன்றைய காலம் வரை இயல்பான நடைமுறைகளோடு வடகிழக்குப் பகுதி மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடிவதில்லை. ஆனால், தென்னிலங்கை மீனவர்கள் அண்மைக் காலங்களில் முல்லைத் தீவு, நாயாறு, கொக்கிளாய், வடமராட்சிக் கிழக்கு, தீவுப் பகுதிகள் என மீனவ வாடிகளோடு பலர் குடும்பங்களாகவே குடியேறியுள்ளனர். தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகள், தனியிழை, தங்கூசி வலைகள் என்பன சிறிய மீன் வகைகளை மிகையாகச் சுரண்டுகின்றனர். சிலிண்டர், டைனமற் பாவனைகள் பவளப்பாறைகளைச் சிதைத்து அழிப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ஊடுருவல் வட கடற்பகுதி மீன் வளத்தைக் கபளீகரம் செய்கிறது. அரசுகள் பாராமுகமாக இருக்கின்றன.

காரணம் இரு நாட்டுத் தழிழர்களிடையே நிரந்தரமான பகைமையை ஏற்படுத்துவதே. அத்துமீறி நுழையும் இம் மீனவர்கள் இழுவைப் படகுகள், வத்தைகள் (படகுகள்) மூலம் ஒற்றை இழுவை மடிகள், இரட்டை இழுவை மடிகள் மூலம் வட பகுதிக் கடல் வளம் வாரி எடுத்துச் செல்லப்படுகிறது. மன்னார் வளைகுடாப் பகுதி, பாக்கு நீரினைப் பகுதியில் இவர்களது பிரசன்னம் அதிகம். பெறுமதி மிக்க கடலட்டை, சங்கு, கணவாய், சிங்கி, நண்டு, மீன் சூறையாடப்படுகின்றது. இவ்வாறான நிலைகள் தொடருமாயின் மன்னார் உயிரினப் பூங்காவின் எதிர்காலம் கடல் பாலைவனமாக மாறும் நிலையுள்ளது.

பாசிக் குடா, நிலாவெளி, புறாத்தீவு எனும் உல்லாசக் கடற்கரைகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. கிழக்குக் கரையோரங்கள் பலவற்றைக் கையகப்படுத்திச் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நிலையில் சூழலியல்சார் சுற்றுலா பேண் நிலை இங்கு உருவாக்கப்படவில்லை. இது கரையோரச் சூழலை நீண்டகாலத்தில் பாதிப்படைய வைக்கின்றது.

2.9 தரிசாகும் விவசாய நிலங்கள்

இப்பிரதேச மக்களின் பிரதான தொழில் விவசாயம். பெரும்பான்மையினர் இத் தொழில் மூலம் பிழைப்பூதியம் செய்வர். விவசாயம் எனும் போது தோட்டச் செய்கை மற்றும் நெற்செய்கை பிரதானமாக இருப்பினும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட தொகையினர் மரப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபடுகின்றனர். இச்சமூகம் தன்னிறைவான விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டது. இம்மக்களே இன்று உணவிற்காக நிவாரணங்களை எதிர்பார்த்தபடி உள்ளனர். தொடர்ந்த போர்ச்சூழல் கண்ணிவெடிகள் உருவாக்கப்பட்ட வலயங்கள், மக்களின் விவசாய உள்ளீட்டிற்கான கையறுநிலை எல்லாம் சேர்ந்து வடகிழக்கு விவசாய நிலங்களைத் தலைகீழாக மாற்றியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தரிசாகும் விவசாய நிலங்கள் பல்லாயிரம் ஏக்கர்கள் கவனிப்பாரின்றிக் காடு வளர்கின்றது. ஒரு காலத்தில் வட கிழக்குப் பிரதேசத்தில் இருந்து விவசாயப் பொருட்கள் தென்னிலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன.

தரிசாகும் நிலங்கள் விவசாயத்திற்குத் தொடர்ச்சியாக உட்படுத்தும் வேளையில் அவற்றின் உற்பத்தி, விளைவுத் திறன் அதிகமானதாக இருப்பதுடன் விவசாய உயிர்ச் சூழலியல் ரீதியில் உயிர்ப்புடனான சூழலாக விளங்கமுடியும். இன்று பல இடங் களில் உயிர்ப்பற்ற மனிதனுக்கும் சூழலுக்கும் இடைத்தொடர்பற்ற நிலையினைக் காணக்கூடியாதாக உள்ளது. அத்துடன் பேண்தகு முகாமைத்துவம் இன்றி விவசாயச் செய்கை இடம்பெறுகின்றது. அதாவது திட்டமிடல்களோ, கொள்கைகளோ எதுவுமின்றிச் சூழலோடு இயைந்த நிலைமைகளைக் காண்பதே கடினம் தான். வகைதொகையின்றி கிருமிநாசினி, உரப்பாவனை விவசாய நிலங்களைச் சீரழிக்கத் தொடங்கியுள்ளது. போருக்கு முன்னான காலப்பகுதியில் பெரும்பாலும் இயற்கைப் பாசனப் பாவனையே இப்பிரதேசத்தில் காணப்பட்டது. யாழ் மாவட்டத்தின் விவசாய நிலங்களை இரசாயனப் பாவனை தரைக் கீழ் நீரில் நைட்ரஜன், பொஸ்பரஸ் என்பன அதிகரிப்பதற்குக் காரணம்.

பொருத்தமான நிலவகைப்பாட்டுக் கொள்கைகள் இன்றி நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றது. தோட்டச் செய்கைக்குப் பொருத்தமான நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றமடைகின்றன. பயனற்ற காணிகளாய்க் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றது. யாழ்ப்பாணச் செம்மண் வலயங்கள் பெரும்பாலும் இன்று குடியிருப்புகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இவை தோட்டச் செய்கைக்கு உகந்த மண்ணாகக் காணப்படும். இப்பகுதிகளின் தோட்டப் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

2.11 இயற்கைச் சூழலை மாற்றும் திட்டங்கள்

வடகிழக்குப் பகுதியில் உள்ளார்ந்த வளங்களை நோக்கியதாக வல்லரசுகளின் படையெடுப்பு குவிமையப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சுயலாபம், பிராந்திய அரசியல் நலன் எனும் கோட்பாட்டு வடிவங்களிற்கு அவ்வளங்கள் சுரண்டத் தயார்படுத்தப்படுகிறது. இதற்கு இலங்கை அரசும் துணை செய்கின்றது. சேது சமுத்திரத்திட்டம், சம்பூர் அனல் மின் நிலையம் என்பவற்றிற்கு அப்பால் இன்று மன்னார் கடற்பகுதியில் எண்ணெய்வள அகழ்வும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. சேதுசமுத்திரத் திட்டம் ஆரம்பமாகிய வேளை வடபகுதி கடல் மற்றும் கரையோரச் சுற்றாடல் தாக்கமதிப்பீடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை. அத்துடன் துறைசார் நிபுணர்களின் நியாயப்பாடுகள் கருத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இன்று பேசப்படும் எண்ணெய் வள அகழ்வாய்வுகள் இடம்பெறப் போகின்றன.

திருகோணமலையில் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு வருகின்ற அனல் மின்நிலையத்திற்காகச் சம்பூர் பிரதேச மக்கள் இன்னும் மீள் குடியமர்த்தப்படவில்லை. சம்பூர் பிரதேசத்திலேயே இந்திய அரசின் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலப் பொருளாக நிலக்கரி, மசகு எண்ணெய் பயன்படுத்தப்படும். இவற்றின் மூலம் வெளிவிடப்படும் கழிவுப் பொருட்கள் அப்பிரதேசத்திலேயே அகற்றப்படும் வேளை, எத்தகையதான சூழல் சீர்கேடுகள் விளையும் என எண்ணிக் பார்க்க முடியாது. ஒரு திட்டமானது நடைமுறைப்படுவதற்கு முன் முயற்சியாக நிபுணர் குழுவினால் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின் அதனைப் பரிசீலிக்கு எடுத்துச் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத திட்டங்களே நடைமுறைச் சாத்தியமானவை. ஆனால், இங்கு அவ்வாறில்லை. எழுந்தமானதாக, சுயலாபங்களிற்காக அனைத்துத் திட்டங்க ளிற்கும் செயல்வடிவம் கொடுக்கப்படுகின்றது.

3.0 முடிவுரை

மேற்குறிப்பிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழலியல் சார் பிரச்சினைகள் நீண்ட காலப் போக்கில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. 30 வருட கால யுத்த சூழ்நிலையில் அனைத்தினையும் இழந்த மக்களிற்கு எதிராக இயற்கைச் சூழல் மீண்டுமொரு தாக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது. பிரதேசங்களிற்குரிய பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், துறைசார்பான நிபுணர்கள் இருந்தும் ஆய்வுகள், பகுப்பாய்வுகள் என்பன பெரிய அளவில் இடம்பெறவில்லை. இத்தகைய நிலையானது மேலும் வளங்களைச் சுரண்டவும் சீரழிக்கவும், சூழலை மாற்றியமைப்போருக்கும் வாய்ப்பளிப்பதாகவே அமைகின்றது. பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக மண்ணோடும் மரபோடும் இயற்கையோடு ஒட்டி உறவாடிய மக்களிற்கும் இயற்கை ஒழுக்கிற்கும் இடைவெளி அகலப்படுத்தப் படுகின்றது.

போரின் பின்னரான அபிவிருத்தி, புனரமைப்பு போன்றவை எத்தகையதான கற்பிதங்களைக் கூறினாலும் பேண்தகு அபிவிருத்தி நிலையில் சூழலியலோடு இணைந்ததாக நட்பார்ந்த நிலையில் அவை முன்னெடுக்கப்பட வேண்டும். அந்நிலையில் தான் அது நீடித்திருக்கக் கூடியதான வாய்ப்பினை அளிக்கின்றது. இல்லையெனில் அரசியல் ரீதியில் எத்தகையதான கையறு நிலையினைத் தமிழ் மக்கள் எதிர் நோக்குகிறார்களோ அவ்வாறே இயற்கையுடனான நட்பார்ந்த நிலையையும் அடைவார்கள்.

Pin It