தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பலதையும் பத்தையும் பற்றி ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது அவர் ‘நான் எது வந்தாலும் தேசியத்தின் பக்கந்தான், நாம் தேசியத்தைக் கடைசிவரை விட்டுக்கொடுக்க முடியாது’ எனக் கூறினார். தேசியம் எனப் பேசும் போது நீங்கள் எதை கருதுகின்றீர்கள்? எதை விளங்கிக் கொள்கின்றீர்கள்? என அவரிடம் கேள்வி கேட்டு உரையாட அப்போது சூழ்நிலை அனுமதிக்கவில்லை. ஆயினும் அங்குமிங்குமாகத் தொடர்கின்ற பயணங்களின் தனிமையில் இக்கேள்வியை அசைபோட்ட போது மேலும் சில கேள்விகளும் எண்ணங்களும் தோன்றின. தமிழ் தேசியம் பற்றி ஒரு மறுபார்வையை வேண்டி மேற்படி கேள்விகளையும் எண்ணங்களையும் உங்களிடம் சமர்ப்பிக் கின்றேன்.

முதலாவது தமிழ்தேசியம் என்றால் புரிந்து கொள்ளப்படுவது என்ன? நான் மேற்குறிப்பிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரைப் போல் தேசியம் பேசுகின்றவர்கள் அதற்கேதாவது வரைவிலக்கணம் வைத்திருக்கின்றார்களா? தமிழ் தேசியம் என்பது ஒரு கருத்தியலா? அதாவது இதுதான் தமிழ் தேசியம் என நாம் அனைவரும் இனங்கண்டிடக் கூடிய கருத்துக்களின் தொகுப்பா? அல்லது அது தமிழனாய் தம்மைக் கருதுகின்ற ஒவ்வொருவரிடமும் இருக்கக் கூடிய ஒரு சமூக உள்ளுணர்வா? அல்லது தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கருதுகின்ற அனைவரிடமும் நாடு, மதம் எனும் பேதங்களை மேவி பரந்து கிடக்கின்ற ஒரு உளப்பாங்கு எனத் தமிழ்த் தேசியத்தை நாம் கூறலாமா?

இந்த உணர்வு அல்லது உளப்பாங்கு தமிழர் எனத் தம்மைக் கருதுகின்ற அனைவரிடமும் இன்று காணப்படுகின்றதா? அன்றி இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் இன மக்களிடம் மட்டுமே ஒரு அரசியல் உந்து விசையாக உள்ளதா? இப்படியான கேள்விகளை நான் அடுக்கிக்கொண்டு போவதற்குக் காரணமுண்டு. எமது உரிமைப் போராட்டத்தின் வெற்றிகளும் சரி, பின்னடைவுகளும் சரி, தோல்விகளும் சரி, தமிழ்த்தேசியத்தின் பல்வேறு விளைவுகளாகவேயுள்ளன.

உதாரணமாகத் தமிழ்த் தேசியம் பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை முன்னாள் சிறப்புத் தளபதி கருணாவிற்கு இருந்த புரிதலும் அவர் ஏற்படுத்திய குழப்பங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்றே நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. புலிகளால் துரோகிகள் எனக் கண்டிக்கப்படும் மாற்றியக்கத் தலைவர்கள் கூட செய்யாத ஒரு கைங்கரியத்தை அவர் செய்துள்ளார். இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையே வடக்கு கிழக்கு ஆகிய ஸ்ரீலங்கா அரசின் நிர்வாக மாகாணங்கள் இணைந்த தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயக பூமி எனும் கருத்தாகும். இது இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் கேள்விக்குட் படுத்த முடியாத கருத்தாக, நம்பிக்கையாகக் கடந்த 56 ஆண்டுகளாக நிலைத்து வந்துள்ளது. நான் அறிந்தவரை ஸ்ரீலங்காப் படைகளோடு இன்று முற்றாகச் சங்கமமாகிப் போய்விட்ட ராசீக் குழுவின் தலைவர் கூட தமிழ்பேசும் மக்களுடைய தாயக ஒருமைப்பாடு சிதைக்கப்பட வேண்டுமெனக் குரல் கொடுத்தது கிடையாது. (ஸ்ரீலங்காப் படைகளுடன் இவர் இணைந்து வேலை செய்த போது நடைமுறையில் அவரது செயல், தாயக ஒருமைப்பாட்டை சிதைப்பதற்கே உதவிற்று என ஒருசாரார் கூறலாம். ஆனால் இங்கு வலியுறுத்த முனையும் விடயத்திற்கு ராசீக் கிழக்கைப் பிரி என அறிக்கை மேல் அறிக்கை விடவில்லை என்பது தான் முக்கியம்).

எம்மைப் போன்றவர்கள் ஒரு காலத்தில் மட்டக்களப்பிற்கெனத் தனி இயக்கம் தொடங்கிய போதும் அதை தமிழ் பேசும் மக்களது தாயக ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு விடுதலை அமைப்பாகவே கருதினோம். பின்னர் விடுதலைப் புலிகள் ஏனைய இயக்கங்களைத் தடைசெய்து தாக்குதல்களில் ஈடுபட்டபோதும் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தைப் பிரி என்று யாரும் கிளம்பவில்லை. ஆனால் இன்று கிழக்குத் தனியாக வேண்டும் என்ற கூச்சலோடு புறப்பட்டுள்ளார் புலிகளின் முன்னாள் தளபதி. தமிழ்த்தேசியத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பிரதிபலிப்புத்தான் கருணா என்ற நபர். இது விளிம்பிற்குத் தள்ளப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை அணி திரட்டி மிக வெற்றிகரமான ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கு தமிழ் தேசிய உணர்வும் அதன் வழிப்பட்ட கருத்தியலும் அடித்தளமாயிருந்தன என்ற உண்மை ஒரு புறம்.

அதேவேளை பிராந்தியம், மதம், வர்க்கம் என தமிழ் பேசும் தாயக மக்களை கூறுபோடக் கூடிய அக முரண்பாடுகளைத் தெளிவுடன் மேவி இல்லாது செய்யக்கூடிய ஆற்றல் மிக்கதொரு கருத்தியலாகத் தமிழ் தேசியத்தை நாம் வளர்த்தெடுக்கத் தவறியதன் விளைவுகளை நாம் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சந்தித்து வந்துள்ளோம் என்ற உண்மையை நாம் மறுபுறம் நோக்க வேண்டும்.

முஸ்லிம்களை அந்நியப்படுத்தி சிங்கள மேலாண்மையாளரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எமது போராட்டம் ஆட்படுவதற்கும் இன்று பிராந்தியப் பிரிவினைப் பேசும் ஒருவர் உருவாகியதற்கும் அடிப்படைக் காரணம் தமிழ்த் தேசியம் பற்றி எம்மிடையே நிலவி வரும் விமர்சனமற்ற அறிவியல் வரட்டுத்தனமே அன்றி வேறில்லை.

வெளியிலிருந்து இன அழிப்பை நோக்கிய ஒரு இராணுவ அச்சுறுத்தல் தோன்றும் போது அக முரண்பாடுகள் தாமாக மறைந்து போய் சாதி, மதம், பிராந்தியம், வர்க்கம் என்பவற்றை மேவிய ஒரு தமிழ் தேசிய ஒருமைப்பாடு இயல்பாகவும் தானாகவும் தோன்றிவிடும் என்ற கருத்தையும் நாம் இங்கு நோக்க வேண்டும்.

எதிரி முட்டாளாக இருக்கும் வரைதான் இந்தக் கருத்து சரிபடும், எம்மிடையே இருக்கின்ற அனைத்து அகமுரண்பாடுகளையும் சிங்கள மேலாண்மையாளர் சரியாகவும் நுணுக்கமாகவும் இனங்கண்டு அதனடிப்படையிலான போரியல் அணுகுமுறையை கைக்கொள்வார்களேயானால் நாம் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவரும். எமது அகமுரண்பாடுகள் போர் தொடங்கியவுடன் தாமாகவே மறைந்துவிடும் என்ற எடுகோளினடிப்படையில் யாரும் செயற்பட முடியாது. சிங்கள மேலாண்மையாளர் எமது அகமுரண்பாடுகளை நுணுகிக் கற்க இன்று முன்நிற்கின்றனர். கருணா புலிகளை விட்டுப் பிரிந்தபோது மட்டக்களப்பினுடைய சாதியமைப்பு, அதன் குடிமுறைகள், அவை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலிருந்து எங்ஙனம் வேறுபடுகின்றன என்பதைப் பற்றி ஒரு ஆய்வரங்கு நடைபெற்றதை நாம் கவனிக்க வேண்டும். (ஆனால் அதில் உரையாற்றிய பேராசிரியர் கணநாத் ஒபயசேகர கூறிய முடிவுரை ஒழுங்கு செய்தவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு விடயம்).

தமிழ்த் தேசியமானது தமிழ்பேசும் சமூகத்தின் அகமுரண்பாடுகளைத் தீர்த்து அதை சரியான அரசியல் பாதையில் அணிதிரட்டிடக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பவாதிகளின் நுனி நாவில் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராக அது இருக்குமாயின் எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறை முகமாகவோ ஏற்படப்போகும் இன அழிப்புப் போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாததாகிவிடும்.

1983 இலே நாம் மாபெரும் இன அழிப்பு முயற்சி ஒன்றை எதிர்கொண்டோம். சிங்கள மேலாண்மையாளரின் படைகள் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை அழிப்பதற்கு முனைப்புடன் நின்ற காலமது. நானும் எனது நண்பர் ஒருவரும் புத்தூர் பகுதியில் ஸ்ரீலங்காப் படையினரின் சுற்றி வளைப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி பற்றைக் காடும் கட்டாந்தரையுமாகக் கிடந்த ஒரு பக்கமாக ஒளித்து ஓடினோம். அங்கு ஒரு குக்கிராமம் பொழுது சற்றுச் சாய்ந்ததும் ஊருக்குள் சென்றோம். தண்ணீர் தாகம் எமக்கு. ஆனால் அங்கிருந்தவர்களுக்கு நாம் அவர்களிடமிருந்து நீர் அருந்துவோமா என்று சந்தேகம். வெளியூரவராகிய எமக்கு இது அதிசயமாகவிருந்தது.

எனவே அவ்வூர் மக்களைப் பற்றி அறியும் ஆவலிலும் அரசியல் கூட்டம் ஒன்றை நடத்தும் நோக்கிலும் நாம் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டோம். பனி நிலவில் கோப்பாய் வெளியிலிருந்து வீசிய காற்றின் சரசரப்பில் அம்மக்கள் கூறிய கதை தேச விடுதலைக் கனவுகளையே நெஞ்சில் நிறைத்திருந்த எம்மைத் திடுக்கிட வைத்தது. அவர்கள் காணியற்ற விவசாயக் கூலிகள். தமிழ்ச் சமூகத்தின் பெருவிழுமியமெனப் போற்றப்படும் கல்வி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இதை மீறி அவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகள் எரிக்கப்பட்டன. இந்த வேளையில் தென்னிலங்கையிலிருந்து அங்கு ஒரு சிங்களப் பௌத்த பிக்கு சென்றார். க.பொ.த சாதாரண தரம் வரை வகுப்புகள் கொண்ட கல்விக் கூடத்தை அவர் அங்கு நிறுவினார். பிக்குவின் செல்வாக்கிற்குப் பயந்த உயர் குடியினர் அதில் கைவைக்கவில்லை. அவ்வூர் மக்கள் பௌத்தத்தைத் தழுவினர். சிங்களம் கற்றனர். அவர்களுக்குத் தமிழ் தேசியம் பற்றித் தெரியாது. நாம் திகைத்தோம்.

எமது தேச விடுதலைப் போராட்டம் என்பது எங்ஙனம் ஒரு சமூக சாதி ஒடுக்கு முறைகளை உடைத்தெறியும் குறிக்கோளையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பன போன்ற பல விடயங்களையும் விளங்கப்படுத்தி அவர்களைப் போன்று இழப்பதற்கு ஒன்றுமில்லாத உழைக்கும் மக்களே ஒரு விடுதலைப்போரின் இறுதி வெற்றிவரை சமரசத்திற்கு இடங்கொடாது போராடுவர் என்பதையும் நாம் எடுத்துரைத்து அம்மக்களோடு அளவளாவி முடித்தபோது சாமக்கோழி கூவிவிட்டது.

இப்படியாக யாழ்ப்பாணத்தில் பல ஊர்கள் தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்தோடும் அதன் கருத்தியலோடும். படித்த தமிழ் நடுத்தரவர்க்கங்களிடையே அது அன்று ஏற்படுத்திய உணர்வலைகளோடும் எம் தொடர்புற்றிருந்தன. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்று. வன்னியின் சில பகுதிகளிலும் மட்டக்களப்பில் இரு இடங்களிலும் தமிழ் தேசிய வாதிகளுக்கு அன்று தெரிந்திருக்க வில்லை. 1983இல் சிங்கள மேலாண்மையாளர் எம்மண் மீது கட்டவிழ்த்து விட்ட இன அழிப்புப் போர் எம்மிடையே வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களை இயல்பாகத் தமிழ்த்தேசியத்தின் பால் அணிதிரட்டிடவில்லை. மாறாக, தமிழ்த் தேசியம் என்பது அன்று கடுமையான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதை ஒரு குறுகிய படித்த யாழ்.நடுத்தர வர்க்கக் கருத்தியல் என்ற நிலையிலிருந்து மாற்றுவதற்கும், அதை அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கான கோட்பாடாக்குவதற்கும், அவர்களுடைய சமூகச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையிலும் பலர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாகவே எமது தாயகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்த மக்களையெல்லாம் சாதி, மத, பிராந்திய, வர்க்க வேறுபாடுகளுக்கப்பால் சிங்கள மேலாண்மையின் ஒடுக்குமுறைக்கெதிராக அணிதிரட்ட கூடியதாயிற்று.

ஒரு சந்தர்ப்பவாதத் தலைமையின் கையிலிருந்து பறித்தெடுத்து அதன் வீச்செல்லைக்கு, அது காலவரை உட்படாதிருந்த மக்களிடமும் அதைக் கொடுக்க, எடுக்கப்பட்ட கருத்தியல் முயற்சிகள் இல்லாதிருந்திருந்தால் தமிழ்த் தேசியம் இன்று வறண்டு சுருங்கியிருக்கும்.

திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சி பீடமேறிய போது தமிழ்த் தேசியம் வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைத்து விட்டதாக அறிஞர் அண்ணாத்துரையும் அவரது சீடர்களும் அன்று கூறினர். நடந்தது என்ன? அதன் பிறகுதான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாதி, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கெதிரான கிளர்ச்சிகள் வெடித்தன. நக்சலைட்டுகளின் (ஆயுதமேந்திய இடதுசாரிப் புரட்சி அமைப்புகள்) தலைமையில் தமிழகத்தின் பெரும்பாலான வறிய விவசாயக் கிராமங்கள் அணிதிரண்டன. இது தி.மு.க. பேசிய தமிழ்த் தேசியத்தின் தோல்வியின் வெளிப்பாடே. இந்திய மத்திய அரசின் பார்வை எமது போராட்டத்தின் பக்கம் திரும்புவதற்கு முன்னர் இந்த நக்சலைட்டுகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சமரசத் தமிழ் தேசிய வெற்றியை நிராகரித்த பெருஞ்சித்திரனார் போன்றவர்களுமே எம்மை தமிழகத்தில் ஆதரித்தவர்கள் என்பதை நாம் நோக்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ்த் தேசியத்திற்கு அடித்தளமாக இருந்த தமிழக நடுத்தர வர்க்கத்திற்கு இன்று தமிழ் மொழியும், பண்பாடும் தனது சமூக எழுச்சிக்கு தேவையற்றவை யாகிவிட்டன. அது இன்று ஆங்கில மோகத்தில் மிகக் கேவலமாக உழல்கிறது.

அதன் உச்ச வெளிப்பாடாக சன்.டி.வி தமிழ் மொழியையும் தமிழ் அடையாளத்தையும் படுகொலை செய்து வருகிறது. இங்கு பழமைவாதிகள் போல ‘ஐயகோ நமது மொழியும் கலாசாரமும் அழிகின்றன’ எனப் புலம்புவதில் பயனில்லை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்பது நன்னூலாரின் கருத்து. ஆனால் தமிழ்த் தேசியம் என்பது இன்று அரசியல் கலாசார சமரச நிலைக்கு வந்துவிட்ட ஒரு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கையிற் சிக்குண்டு தனது போர்க்குணத்தையும் சாதி, மத, பிராந்திய பொருளாதார பேதங்களை மேவிய கருத்தியல் வீச்சையும் இழந்து பரிதவிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

உரிமைகளைப் பெறுவதை விட தாம் தற்போது அனுபவிக்கின்ற சலுகைகளைப் பாதுகாப்பதில் தீவிர அக்கறையுள்ள ஒரு வர்க்கத்தின் கையில் தமிழ் தேசியக் கருத்தியல் இன்று சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடுதான் கருணா என்ற மனிதன். சிங்கள மேலாண்மை மற்றும் மேலைத்தேய ஏகாதிபத்தியச் சுரண்டல் என்பவற்றுக்கெதிராக தனது அடையாளத்தையும், தனது மொழி, கலாசார சுயமரியாதையையும் பேணுவதில் எந்த அக்கறையுமின்றிக் கிடக்கும் ஒரு படித்த நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தின் தயவில் தமிழ் தேசியக் கருத்தியல் தங்கியிருக்க நேரிடுமாயின் ஒடுக்கு முறையை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்போது எமது மக்களை அணிதிரட்டக்கூடிய வலுவை இன்று தமிழ்த் தேசியம் இழந்து வருகிறது.

மேல்நிலையாக்கமடைந்துவரும் நமது நடுத்தர வர்க்கங்கள் தமது குழந்தைகளுக்கு வைக்கும் கோமாளித்தனமான அர்த்தமற்ற பெயர்களும் சன் டி.வி கலாசாரமும் தமிழ்த் தேசியத்தின் எதிர்கால நெருக்கடியை எதிர்வு கூறி நிற்கின்றன. இப்படியாகத் தமிழ்த் தேசியக் கருத்தியல் வலுவிழந்து வரும் சூழலில் சாதி, மதம், பிராந்தியம் போன்ற பிரிவுகள் தலைதூக்குகின்றன. (அண்மையில் புலிகளைச் சார்ந்த ஒருவர் வெளியிட்ட நூலொன்றில் அவருடைய சாதி பேசப்படுமளவிற்கு நிலைமை போயுள்ளது)

தமிழ்தேசியத்தை கடுமையாக மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. அதை நாம் செய்யாவிடின் வரலாறு எம்மைக் கவிழ்த்து விடும். 

(டி.சிவராம் அமரராவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் இக்கட்டுரை எழுதப்பட்டது. பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கணக்கிலெடுத்து வாசிக்கும் பொழுது தமிழ்த் தேசியம் குறித்து இன்னும் ஆழமான புரிதல் ஏற்படும். கருணா குழுவிற்குப் பின்னர் உருவான கே.பி குழுவினரையும் இணைத்து இதனுடன் புரிந்துகொள்ளலாம். -ஆ-ர்)

Pin It