மலேசியத் தோட்டத் தொழிலாளர் தொடர்பான குறிப்பு

ஒரு நகரில் மனிதனின் உடலும் நினைவுகளும் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன? தேகம் பொருளாதார அலைவரிசையில் சிக்கிக் கொண்டு இயந்திரத்தனமான நகர்விற்கு ஆளாகிக்கொண்டிருக்க, மனமும் நினைவுகளும் பால்யக் கால நிலப்பரப்பின் மீதிருக்கும் கடந்துவிட்ட வாழ்வைச் சுமந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தின் நகர், வாழ்வோடு ஒரு தனிமனிதன் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாத ஒரு சமரசம்தான் அவனுக்குள் தேங்கிக்கிடக்கும் தோட்டப்புற வாழ்வின் நினைவுகள். நகர், மனிதன் புதியதாகக் கற்றுக்கொண்டிருக்கும் உடல்மொழியென்பது நகரம் அவனுக்களித்திருக்கும் தற்காலிகப் பாவனை மட்டுமே. மனதின் மையம் முழுவதும் அவனுடைய முந்தைய தலைமுறையின் பதிவுகள் அழுத்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மலேசியாவின் மிக முக்கியமான கேலி சித்திர ஓவியரான காஷிம் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட "Satu Kmapung Satu Pekan" (ஒரு நகரமும் ஒரு கம்பமும்) எனும் கேலி சித்திரக் கதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. கம்பத்தில் வசித்த இரு நண்பர்கள், நகரத்திற்குக் குடிப்பெயர்ந்த பிறகு அங்கு அவர்களுக்கு நகர வாழ்வின் மீது வெறுப்பும், கிண்டலும், கேலிப் பார்வையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காஷிம் மலேசியாவின் மேலாண்மைச் சமூகத்தினர் நகர் வாழ்வின் மீது கொண்டிருக்கக்கூடிய மனநிலையை வெளிப்படுத்தும் விதமாகவே அந்தப் படைப்பை வழங்கியுள்ளார்.

மலேசியா போன்ற பன்முகக் கலாச்சார வாழ்வைப் பிரதிபலிக்கும் நாட்டில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் ஒன்று போலவே தங்களின் கடந்தகால வாழ்வை மீட்டுணருக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைத்து இனங்களிலும் ஒரு சிறு கூட்டம் சிறுப்பான்மை வாழ்வை ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பது இன்றைய நகரத்தின் ஒட்டுமொத்தமானமுகம். தோட்டப்புறங்களிலிருந்து குடிப்பெயர்ந்து பல காரணங்களுக்காக நகரத்தை நோக்கி¥ பயணம்செய்து, அங்கொரு வாழ்வை அமைத்துக்கொண்ட இந்தியர்களின் பிரக்ஞை இன்னமும் தனது கடந்தகால தோட்டப்புற வாழ்வையே மீட்டுணர்ந்த நிலையில் விழித்துக்கொண்டிருக்கிறது.

இலக்கிய படைப்புகளின் மூலம் மீட்டுணர்தல்

மலேசியாவின் முக்கியமான மூத்த நாவலாசிரியர் அ.ரெங்கசாமியின் அனைத்து நாவல்களும் காலனியக் காலகட்டத்தையும் போருக்கு முந்தைய பிந்தைய சமூக அமைப்பையும் ஆராய்ந்து தகவல்களாகவும் புனைவாகவும் தரக்கூடிய விதத்திலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக நினைவுச்சின்னம், லங்காட் நதிக்கரை, இமையத்தியாகம் போன்ற நாவல்கள் கடந்தகால வாழ்வை மீட்டுணர்ந்து ஆவணப்படுத்துவதாகவே எழுதப்பட்டுள்ளன.

80 வயதை நெருங்கியிருக்கும் அ.ரெங்கசாமியின் நினைவு மிகவும் பசுமையாகத் தோட்டப்புற வாழ்வையும் அதன் வரலாற்றையும் மீள்பதிவு செய்வதாக மீண்டும் மீண்டும் எழுதப்படுவது அந்த வாழ்க்கை இன்றைய நகர் மனிதர்களுக்குள் ஒரு தேக்கமாக நிலைத்துவிட்டதையே சுட்டிக்காட்டுகின்றது. அந்தத் தேக்கங்களுக்கான ஒரு விடுதலைப்புள்ளிதான் இது போன்ற இலக்கியப் படைப்புகள். நகர் மனிதர்களான சு.யுவராஜன், ஏ.தேவராஜன், கோ.புண்ணியவான் போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் தொடர்ந்து தோட்டப்புற வாழ்வையும் அந்த முந்தைய தலைமுறையின் மனநிலைகளையும் சொல்லும் சிறுகதைகளை அதிகமாக எழுதியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து கவிஞர் பா.அ.சிவம் தோட்ட வாழ்க்கை குறித்தான மீந்திருக்கும் நினைவுகளைக் கவிதைகளாகப் படைத்து, சமூகத்தில் சில கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நகர் மனிதர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து தனது சமூகத்தின் கடந்த வாழ்வை மீட்டுணர்வதோடு அதைக் கலைப் படைப்பாக்கி பிற மனிதர்களையும் பாதிக்கவே முயன்று வருகிறார்கள்.

கரிகாலச் சோழன் விருது கிடைத்த எனது நாவலான 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' முழுக்கவும் தோட்டப்புறத்தை விட்டுப் புலம்பெயர்ந்து நகரத்தை எதிர்கொள்ள முடியாமல் சிதைந்துபோகும் ஒரு தொழிலாளி குடும்பத்தின் கதையையே சொல்கின்றது. தொடர்ந்து இது போன்ற படைப்புகளின் மூலம் எழுத்தாளர்கள் மீட்டுக்கொண்டு வர நினைப்பது தோட்டப்புற வாழ்க்கையைத்தான். அவர்கள் இழந்த அந்த வாழ்க்கையிலிருந்து ஒரு உன்னதமான கலையை¥ பிடுங்கி அவர்களால் அதைப் படைப்பாக்க முடிகிறது. கடந்தகால வாழ்வின் மீது படிந்துகிடக்கும் எளிமையான விசயம் என்பதே அதைத் தொடர்ந்து மீள்பதிவு செய்யவும் மீட்டுணரவும் செய்யக்கூடிய வாய்ப்புகள்தான்.

ஒரு சமூகத்தின் பகைமையும் இழப்பும்

மலேசியாவில் முதன் முறையாகக் கெடா மாநிலத்திலுள்ள சுங்கை லாலாங் எனும் பகுதியில்தான் மலிவு வீடு கட்டப்பட்டது. சுங்கை லாலாங் கடாரத்திலுள்ள அதிகமாக வளர்ச்சியடையாத ஒரு வட்டாரமாகும். அந்த மலிவு வீடுகள் கட்டப்பட்ட பகுதியை "பண்டார் பாரு"(புதிய நகரம்) எனச் சொல்வார்கள். கடாரத்திலுள்ள முக்கியமான சில தோட்டப்புறங்களிருந்து பலர் இங்குக் கொண்டு வரப்பட்டுக் குடியேற்றப்பட்டார்கள். நான்கு விதமான தோட்டத்து மக்களுக்கு இந்த மலிவு வீடுகள் வழங்கப்பட்டு தோட்டப்புறங்களைக் காலியாக்கினார்கள். இதனைச் செய்தது இந்தியத தோட்டப்புறங்களை வாங்கிக் குவித்த சீன முதலாளிகள். செண்ட்ரோல், ரூசா, கிம் சேங் அகிய இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியிலிருந்து பல குடும்பங்கள் பண்டார் பாரு மலிவு வீடு பகுதிக்குப் புலம் பெயர்ந்து புதிய சமூகமாக உருவானார்கள்.

இந்தச் சமூக உருவாக்கம், பிற்காலத்தில் சுங்கை லாலாங் வட்டாரத்தைக் குண்டர் கும்பல் பிரச்சனைகளின் மையப்பகுதியாக மாற்றியமைத்தது. மூன்று தோட்டப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு மத்தியிலிருந்த பகைமை ஒரே இடத்தில் அவர்கள் சேர்ந்தபோது மிகப்பெரிய கும்பல் சண்டைகளையும் பழிவாங்குதலையும் வளர்த்து விட்டன. வெவ்வேறான தோட்டப்புறங்களைச் சேர்ந்த அந்த மனிதர்களின் முன்னால் பகைமையை அங்கு வைத்துத் தீர்த்துக்கொண்டதன் விளைவாகக் கலவரங்கள் ஆங்காங்கே உருவாகத் தொடங்கின. மலிவு வீடுகளுக்குக் குடிப்பெயர்ந்து வந்தவர்கள் இங்கு உருவாகியிருக்கும் கலவரங்களையும் குண்டர் கும்பல் சண்டையையும் எண்ணி, மீண்டும் தோட்டங்களுக்கே சென்றுவிடலாம் என ஏங்கத் தொடங்கினர். தனித்து வாழ்வதில் இருக்கும் முக்கியத்துவங்களைப் புலம்பல்களாகப் பிரச்சாரம் செய்தனர்.

நாளடைவில் இது போன்ற சூழல் அங்குள்ள மனிதர்களைச் சுயஒடுக்குதலுக்கு ஆளாக்கியது. தம்மைஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டு சக மனிதர்களிடமிருந்து ஒதுங்கி வாழ ஆரம்பித்தனர். இறுதியில் அங்குள்ள அனைத்து மனிதர்களும் தனி தனித் தீவுகளாகினர் என்றே சொல்லலாம். சமீபத்திய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட அவர்களுக்கு அங்கு உருவாகியிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வின் மீது எந்த ஆர்வமும் இல்லை. இந்தப் பிரச்சனையைப் பற்றி மேலும் விவாதிக்கும்போது நமக்குக் கிடைக்கும் முக்கியமான பதில், மலேசியாவிற்கு உழைக்கும் வர்க்கமாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் ஆங்காங்கே தனித்தனிப் பிரிவுகளில் கூலிகளாக அமர்த்தப்பட்டார்கள். தனக்களிக்கப்பட்ட நியாயமற்ற வாழ்வின் மீது உருவான கசப்பும் அவ்வப்போதும் ஒட்டுமொத்தமாகவும் எதிர்கொண்ட சர்வாதிகாரத்தின் மீதான அச்சமும் பதற்றமும் ஒரு கட்டத்திற்கு மேற்பட்டுச் சிந்திக்க முடியாத குரூரமான மனநிலைகளுக்கு அவர்களைப் பலியாக்கியன.

நகர் வாழ்வின் போராட்டம்

நான் வாழும் சுங்கைப்பட்டாணி நகரத்தில் 1980களுக்குப் பிறகு வேலைக்காகக் குடிப்பெயர்ந்து வந்தவர்கள் பெரும்பாலும் ஸ்காபரோ 2, 4, கெமாஸ் போன்ற தோட்டப்புறங்களிலிருந்து வந்தவர்கள். மேலும் புக்கிட் லெம்பு தோட்டங்களிலிருந்து சீன முதலாளிகளின் அடக்குமுறை தாங்காமல் சுங்கைப்பட்டாணி சிறு நகரத்திற்கு வந்து சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் ஆகும். ஏறக்குறைய 1980களில் சுங்கைப்பட்டாணி (கடாரத்தில் உள்ள ஒரு சிறு நகரம்) நகரம் முழுக்கவும் பரவியிருக்கும் தொழிற்சாலைக்குப் பலர் வேலைக்கு வந்து சேர்ந்தனர். ஷார்ப் எனப்படும் தொழிட்நுட்ப உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மட்டும் 1980களில் வேலைக்கு வந்து சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 400ஐயும் தாண்டியிருப்பதாகக் கேட்டறிந்தேன்.

சிறு சிறு கூட்டமாக நகரத்தின் தொழிற்சாலைகளுக்கும் கடைகளுக்கும் வேலைக்காக வந்து கொண்டிருந்த தமிழர்கள் நகரத்தையட்டிய கம்பங்களிலும் மலிவு வீடு குடியிருப்புகளிலும் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். பொருள் மையமாகவும் தொழில்நுட்பப் பாதிப்புகளினால் நடுத்தர வர்க்கத்தின் மாயையாகவும் மாறிக்கொண்டிருந்த சுங்கைப்பட்டாணி தோட்டங்களிருந்து வந்து சேர்ந்து தமிழர்களுக்கு மெல்ல மெல்ல போராட்டமான வாழ்வை உருவாக்கிக் கொடுத்தது. பொருள்களின் விலையேற்றமும் வேலை வாய்ப்புக்காகப் போராடும் நிலையும் தோட்டங்களில் அடிமைகளாக இருந்த அவர்களுக்குப் பிடிமானமற்றதாகிப் போனது. தொடர்ந்து ஒரு பதற்றமான மனநிலையில் சிறுகச் சிறுக சிதைந்து போகத் தொடங்கினார்கள்.

அவரவர் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்வதிலும் பாதுகாத்துக்கொள்வதிலும் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு தீவிரத்தன்மை உண்டானது. அந்தத் தீவிரத்தன்மை அவர்களைச் சுயநலவாதிகளாக மாற்றியது. இப்படியரு செயற்கையான மனநிலைக்கு ஆளான தமிழர்கள் ஒருவர் மீது ஒருவர் புற்றீசல்கள் போல எண்ணிக்கையற்ற வெறுப்புகளையும் காழ்ப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டு தனிமைப்பட்டுப் போனார்கள். தோட்டப்புறங்களில் சுரண்டப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் சக பாட்டாளிகளின் மீது அன்பும் அக்கறையும் தோழமையும் நிரம்பிய ஒரு நெருக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் நகர் வாழ்க்கைப் போராட்டம் அவர்களைக் குரூரமானவர்களாக மாற்றியமைத்தது.

நகரத்தின் மலிவான பகுதியைச் சார்ந்து தம்மைச் சமரசப்படுத்திக்கொண்டு ஒரு மீதமான வாழ்வை வாழ்ந்து கடந்த அத்தனை அடித்தட்டு மக்களும் திரும்ப¤ திரும்ப¤ தனக்குக் காலனிய ஆதிக்கத்தில் தரப்பட்ட வாழ்வை நோக்கியே ஏங்கித் தவித்தார்கள். உலகத்தின் எல்லாம் நிலப்பரப்பும் அடிமைப்படுத்தப்பட்டவன் அடிமைப்படுத்தியவன் எனும் இரண்டே சமூகத்தைக் கொண்டிருந்தது போலத் தமிழர்களின் புலம் பெயர்ந்த வாழ்வும் நிலமும் அமைந்திருந்தது. பெருநகரத்தின் சிதைவுண்ட வாழ்வைவிட அதிகாரத்தைச் சமாளித்துக்கொண்டு நகர்த்தும் ஒடுக்கப்பட்ட வாழ்வே பரவாயில்லை என்கிற ஒரு வெறுப்புநிலைக்கு நகர் வாழ்வு அவர்களைப் பாதித்திருந்தது.

இன்றும் நகரத்திலுள்ள முதியவர்களைக் கேட்டால், அவர்கள் தன்னுடைய தோட்ட வாழ்க்கை மீட்டுணர்ந்து சிலாகிப்பதை உணரலாம். கடந்தகால நிலப்பரப்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது மிகவும் சாதரணமான வாழ்வாக இருப்பினும் அதில் அடர்த்தியான மனித நெருக்கமும் திருப்தியும் நாட்டுப்புறத்தன்மையும் இருந்தமையால் மனிதர்கள் அதையே நேசிப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான நிலையாகக் கருதுகிறேன்.

Pin It