இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட மனிதருக்கு மகனாகப் பிறந்த விஜய பாஸ்கரன், நவீன கல்வி முறைக்கு அறிமுகமான இந்திய அறிவுஜீவிகளின் வாழ்க்கைப் போராட்டத்தின் நல்ல எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். 19 ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஐரோப்பியர்களின் எதிரான போரில் தங்களை முன்னிருத்திக் கொண்டார்கள். வங்காளத்தில் ஏற்படுத்தப்பட்ட நாட்டைத் துண்டாடும் செயல் இவர்களை இந்திய விடுதலைப் போராட்ட தீவிரவாதிகள் ஆக்கிற்று. இவர்கள் பெரும்பகுதி இந்துத்துவா பின்புலம், ஆதிக்க சாதிப்பிறப்பு ஆகியவற்றைக் கொண்டவர்கள்.

பத்தொன்பதம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் இந்திய இளைஞர்களுக்கு நவீன கல்வியை உருவாக்கிய நிறுவனங்கள் வழி உருவான அறிவுஜீவிகள் முக்கியமானவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 1929இல் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவில் இடதுசாரி இயக்கம், சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றில் செயல்பட்டவர்கள் உருவான இடமாகும். விஜய பாஸ்கரன் அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவர். 1940களின் இறுதியில் அண்ணாமலைப் பல்க்லைக்கழகம் சென்ற விஜய பாஸ்கரன், 1950களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தொண்டராக உழைக்கத் தொடங்கினார். கடுமையான அடக்குமுறைக் காலத்தில், தலைமறை வாழ்க்கையைக் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டிருந்து காலத்தில் இடதுசாரி கருத்துக்களை வெளிப்படுத்த தமிழை ஆயுதமாக்கிக் கொண்டவர். விஜய பாஸ்கரன் அவர்களைப் புரிந்து கொள்ள இரு அடிப்படைகள் உள்ளன. ஒன்று அவர் நடத்திய சரஸ்வதி இதழ், இரண்டு அவரது சோவியத்நாடு அலுவலகத்தில் பணியாற்றிய அநுபவம். இவரைப் புரிந்துகொள்ளும் வசதிக்காக, மேற்குறித்த இரு புள்ளிகளின் அடிப்படையில் நினைவு கூறும் தேவை நமக்குண்டு.

1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மூன்று இதழ்கள் வெளிவரத்தொடங்கின. ஒன்று விஜய பாஸ்கரன் ‘சரசுவதி’, இரண்டு. தொ.மு.சி. ரகுநாதனின் ‘சாந்தி’ மூன்று விந்தனின் ‘மனிதன்’, தமிழக இடதுசாரி வரலாற்றில் இவைகளுக்குத் தனித்த இடமுண்டு. விஜயபாஸ்கரனின் சமூக அணுகுமுறையை அறிந்து கொள்ள சரசுவதி இதழே முதன்மையான ஆவணமாக நம்மிடையில் உள்ளது. சோவியத் புரட்சிக்குப்பின், உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட மார்க்சியம், நாற்பதுகளின் இறுதியில் சீனப்புரட்சிவழி நிலைபேறு கொண்டது. இவ்வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே உலகம் முழுவதும் இடதுசாரி பார்வையுடைய இளைஞர்கள் செயல்படத் தொடங்கினார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகள், சுயமரியாதைக்காரர்கள், தூசிப்படை (Avangards) மரபினர் எனும் மூன்று தனிமரபினர் செயல்பட்டனர். இடதுசாரிகள் அச்சுஊடகம் வழி தமது நிலைப்பாட்டைப் பதிவு செய்து வந்தனர். சரசுவதி இதழ் இவ்வகையில் செய்த பதிவுகளைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளமுடியும்.

-      பின் காலனிய மரபுகளை உள்வாங்கிப் புதிய மொழியில் எழுதுபவர்களுக்கு இடமளித்தல், அவர்கள் இடதுசாரி கருத்துநிலை சார்பற்றவர்களாக இருந்தபோதிலும் அவர்களின் ஆக்கங்களை வெளியிடுதல்.

-      இடதுசாரி கருத்துநிலை சார்ந்து புதிதாக எழுதுபவர்களை முன்னிறுத்துதல் (ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகிய பிறர் எழுத்துக்களை வெளியிட்டமை).

-      கட்சி நடைமுறைகளைத் தாண்டி, இடதுசாரி கருத்துகளை முன்னெடுத்தல்.

மேற்குறித்த பின்புலத்தில் தமிழ்ச்சூழலில் வெளிவந்த ஒரே இதழ் ‘சரசுவதி’ எனக்கூறமுடியும். சரசுவதி இதழில் க.நா.சு போன்றவர்கள் ஆக்கங்களை வெளியிட்டமை வளமான மரபாகக் கருதலாம். இவர்கள் புதிதுபுதிதாகத் தமிழுக்குக்கொண்டுவரும் வளங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்கிறார். ஈழத்து அறிஞர்கள் பலரும் இவ்விதழில் தான் முதல்முதல் எழுதியிருக்கிறார்கள். இவ்வகையில் நாடுகடந்து செயல்பட்டதன்மை முக்கியமானது. படைப்பிலக்கியத்துறையில், சோசலிசவாதம், சோசலிச எதார்த்த வாதம் என்பவை தொடர்பான உரையாடல்கள் நடந்து கொண்டிருந்த சூழல் அது, இத்தருணத்தில் இடதுசாரி கருத்துநிலை சார்ந்த வளமான மொழியில் அமைந்த சிறுகதைகளை வெளியிட்டார். இவ்விதழில் வெளிவந்த தமது கதைகள் சில அரசியல் பிரச்சாரம் மிக்கவை என சு.ரா. பின்னர் பதிவு செய்தார். அப்படியான கதைகளை எழுத விஜயபாஸ்கரன் தளம் அமைத்துள்ளார். ஜெயகாந்தன் ஆக்கங்களையும் இவ்விதம் மதிப்பிடமுடியும்.

1959இல் ஜீவா ‘தாமரை’ இதழைத் தொடங்கினார். கலைஇலக்கியப் பெருமன்றத்தின் ஏடாகத் தாமரை உருவானது. ஜீவா இவ்வகையான பண்பாட்டுத்தளத்தில் செயல்பட முன்னோடியாக அமைந்தவைகளில் ‘சரசுவதி’க்கும் ‘சாந்தி’க்கும் பங்குண்டு. சரசுவதி இதழுக்கு எதிராக ஜீவா நடந்து கொண்டார் என்பதையும் இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் அவதூறாகப் பார்க்கக் கூடாது.

சோவியத்நாடு அலுவலகம் சென்னையில் உருவாக்கப்பட்டது. அதன் தலைமை அலுவலர் பணியை விஜய பாஸ்கரன் ஏற்றார். 1951இல் ‘மக்கள் பதிப்பகத்தின் புத்தகக் கடையைச் சென்னையில் தொடங்கியபோது, அதற்குப் பொறுப்பாக இருந்தார். அன்றைக்கு இடதுசாரி கண்ணோட்டத்தில் செயல்பட்ட அனைவரும் சோவியத் அலுவலகத்தில் பணிபுரிய விஜய பாஸ்கரன் வழிகண்டார். தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி, ஆர்.கே.கண்ணன், மணி எனப் பலதோழர்கள் இவ்வகையில் பணிபுரிந்தனர். இவர்கள் நவீன, இடதுசாரி தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வுகளுக்கு அளித்த பங்களிப்பு முக்கியமானது. இதற்குக் களம் அமைத்த விஜயபாஸ்கரன் பார்வை விதந்து கூறத்தக்கது. அவரது சரசுவதி இதழ்கள் என்றென்றும் வாசிக்கும் தரத்துடன் நம்முன் உள்ளது. அவர் மறைந்தாலும் ‘சரசுவதி’ மறையாது.

Pin It