மனிதன் தான் வசிக்கின்ற இடத்தின் புவியியல் தன்மைக்கு ஏற்றவாறு தொழிலையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டான். இந்த யதார்த்த முறையைச் சென்ற நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழில் மற்றும் அறிவியல் முன்னேற்றம் புறந்தள்ளியது. திட்ட மிடப்பட்டுத் தொழில் நகரங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் நகரங்கள் அப்பகுதி மக்களின் முந்தைய வாழ்க்கை முறையை விழுங்கிக்கொண்டு தன்வயப்படுத்திக்கொண்டன. அவ்வகையில் தான், துணித்தொழிலை மையமாகக் கொண்டு இயங்குகிற திருப்பூர் பகுதியையும் அணுக முடியும். மணல்கடிகை மூலமாக ஆசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் தன் புதினத்தின் கதாபாத்திரங்களான சிவா, அன்பழகன், சண்முகம், திரு, பரந்தாமன் எனும் ஐந்து நண்பர்களால் திருப்பூரில் எவ்வாறு வாழமுடிகிறது, அந்த வாழ்க்கையின் அடிநிலையும் உழல்வுகளும் எத்தகையது என்பதை விவரிப்பதே புதினம்.

பொருளாதாரத்தைத் தவிர்த்து வேறொன்றும் பிரதானமில்லை என்றியங்குகிற மனிதனுடைய தொடக்கம் மற்றும் இறுதிப் புள்ளிகள் ஒரு இடத்திலேயே அமைந்துவிடுகிறது என்பதைப் புதினம் வலியுறுத்துகிறது. திருப்பூர் பகுதியினுடைய மண்வளம், நீர்வளம் உள்ளிட்ட பலவும் நாசமடைந்துவிட்ட நிலையில் மக்களுடைய பொரு ளாதார மேம்பாடு இயற்கை வளம் ஆகியவற்றில் எது முதன்மையானது என்பதில் ஆசிரியர் இரண்டும்கெட்டான் நிலையையே கையாள்கிறார். இரண்டும் தேவை என்ற மனப்போக்கு இருந்தாலும் இயற்கையை எப்படிச் சீர் செய்துவிட முடியும் என்ற கேள்வி முதன்மை பெறுகிறது.

வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தறி முதல் பெரிய துணி நிறுவனங் கள் வரை செய்யப்படுகிற எல்லா மட்ட வேலைகளில் நுணுக்கங்களை ஆசிரியர் விவரித்திருப்பது துணித்தொழில் பற்றியான விரிவான புரிதலைத் தருகிறது. இரவு பகல் என்றில்லாமல் எப்பொழுதும் இயங்குகிற நகரமாகப் பொருள் ஈட்டுகிற ‘டாலர் சிட்டி’யாக மட்டுமே திருப்பூர் புலப்படுகிறது. அதே வேளையில் சிறார் தொழிலாளர்கள், கல்வியின்மை போன்ற சமூக நோய்கள் பரவலாகப் படிந்திருக்கிற பகுதியாகவும் அது இருக்கிறது. வேலை, உணவு, சினிமா, பெண்கள் என இதனுள்ளேயே ஒரு ஆணின் வாழ்க்கை முடங்கிப்போகிற வாய்ப்பைத் தான் திருப்பூர் தருகிறது. பொருளாதார ரீதியாகப் பெண்கள் வளர்ந்த நிலையில் ஆண் பெண் பாகுபாடுகளற்று இயங்கினாலும் பெண்கள் அதிக அளவில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிகிறது. தொழில் வளர்ச்சி பெருகியிருக்கிற இடத்தில் இயல்பான வாழ்க்கையை மனிதன் துறக்க வேண்டியிருக்கும் என்பதைப் புதினம் உறுதிப்படுத்துகிறது.

ஐந்து நண்பர்களுடைய வாழ்க்கையின் போக்குகளையும், சிக்கல்களையும் பிரதானமாகப் புதினம் பேசினாலும் கூடவே, திருப்பூர் பற்றி யான மர்மங்களைப் பெரிதும் கட்டவிழ்க்கிறது. ‘ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையுடன் அகத்திலிருந்து கிளைக்கும் உறவுகளின் உண்மை முகங்களையும் வேரடிச் சிக்கல்களையும் மிகத் தீவிரமாகவும் நுட்பமாகவும் திருப்பூர் பின்னணி யில் உணர்த்தும் புதினம்.’

Pin It