‘கன்னி’ முழு கற்பனை அல்ல; முழு நிகழ்வு அல்ல. அது நிகழ்வுகளின் கற்பனை. சில நிகழ்வுகளின் தொடர்ச்சியான கற்பனையின் வெளிப்பாட்டுப் புனைவு. தெக்கத்தி வாசனையின் படைப்பு. திருநெல்வேலி வட்டார மக்களில் ஒரு குழுவின் (கிறிஸ்தவம்) வாழ்வு முறையில் உருப்பெற்ற புனைவியல், கற்பனையியல், கவிதையியல் உரு.

துறவு வாழ்வுக்குத் தள்ளப்படும் இயல்பான பெண்ணின் மன உணர்வுகள், காம உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலும் ஒரு ஆணின் மன உணர்வுகளின் வெளிப்பாடு இந்நாவல். தமிழ்மொழி மீது (தமிழ் என்றால் பெண் தானே!) மிகுந்த காதல் கொண்ட பிரான்சிஸ் சந்தனப் பாண்டி, பாண்டியின் மீது இயல்பாகவே காதல் கொண்ட அக்காள் (பாண்டியின் பெரியம்மாள் மகள்) அமலோற்பவம். இவர்கள் இருவரின் இடையே நடக்கின்ற மனப்போராட்டங்களின் பின்னல்கள் நாவலின் வளர்ச்சி. சாரா (பாண்டியின் அத்தை சாயல் பெற்றவள்!) என்ற பெண்ணின் எழில்மிகு காம வெளிப்பாடு நாவலின் முடிவு. (கிறித்தவ முறைப்படி) கன்னியாக உருமாறுபவளின் காம உணர்வுக்கு ஆளாகும் பாண்டி, மனநிலை திரிந்து வானத்தில் விடைதேடும் இள மனநிலையின் தேடல், பிரான்சிஸ் கிருபாவின் கன்னி.

நாவலின் இயல்பான தன்மையிலிருந்து சிறிது வேறுபட்டு கவிதையின், இலக்கியங்களின் இடையீட்டுடன் படைப்பாளியின் கற்பனை வாக்கியங்களும் (பல இடங்களில்) நாவலை நிறைவு செய்கின்றன. நாவலின் தொடக்கத்தில் உள்ள பின்னிணைப்பு -2 நாவலின் உட்கிடக்கையோடு தொடர்கிறது. கதையோட்டத்துடன் தொடர்புடைய ஷெல்லியின் கவிதை (பின்னிணைப்பு - 1), விருப்பமில்லாமல் கன்னியாஸ்திரி ஆக்கப்படும் பெண்ணின் மன வெளிப்பாடு. பின் கதைத்தொடர்ச்சியின் முன் சித்தாந்தங்கள் ஷெல்லியின் கவிதை.

எழுத்து நடையில் அமைந்துள்ள பேச்சு (கிழவரின் பேச்சு), நிகழ்வுகளுக்கு நடுவே இருக்கின்ற கற்பனை வாக்கியம், நீண்ட காதல் ஏக்கங்கள், மனநிலை திரிந்த மனிதனின் கற்பனையின் நீண்ட தொடர்ச்சி ஆகியன நாவலின் வாசிப்புத் தொடர்ச்சியைக் குலைக்கிறது. நாவலின் இறுதி இரு அத்தியாயங்களுக்கு முன் தரப்பட்டுள்ள ஷெல்லி கவிதை புதிய முயற்சி. தேவதேவனின் கவிதை வரிகள் காதல் சில்வண்டுகள், நாவலின் அமைப்பு, அத்தியாயத்திற்கு ஒவ்வொரு விதமாக உள்ளது.

கன்னி, காதல் (காமம்) வலியின் இன்பம்.

Pin It