1993களிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல் எனத் தொடர்ந்த கண்மணி குணசேகரன் அவர்களின் நவீன இலக்கிய ஆக்கச் சிந்தனை மரபு ‘நடு நாட்டு சொல்லகராதி’ யையும் உருவாக்கியிருக்கிறது. கண்மணி குணசேகரன் 1999;2002,2009 ஆகிய ஆண்டுகளில் மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். அதனை மட்டும் அறிமுகப்படுத்து வதாக இக்கட்டுரை அமைகிறது.

‘அஞ்சலை’ கண்மணியின் முதல் நாவல். அஞ்சலை எனும் பெண்ணின் பிறப்பு, வளர்ப்பு, வேலை, திருமணம், குழந்தை எனப் பல்வேறு தன்மைகளை வெவ்வேறான சூழலில் விருத்தாச்சல வட்டாரப் புனைவில் செய்திருக்கிறார். விவசாயக் கூலி வேலை செய்யும் அஞ்சலை பற்றியும் அவளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் நேர்த்தியாக, எதார்த்தமாகப் புனையப்பட்டுள்ளது. தன் பிறந்த வீட்டில் இருக்கும்போது செய்யும் விவசாய வேலை, பிடிக்காத திருமணம் நடந்த பின்பு அங்கு முந்திரிக் கொட்டை எடுக்கும் வேலை எனச் சூழலுக்குத் தக மாறும் பெண்ணின் வலியையும், அதே சமயத்தில் திருமணம் ஆன பின்பு காமத்திற்காக ஏங்கும் அஞ்சலையின் தவிப்பினையும் நுணுக்கமாகப் புனைகிறார்.

அஞ்சலையில் வரும் ஆண்கள் அஞ்சலைக்கு அடங்கியவர் களாகவே படைக்கப்படுதலும் அவளின் திருமணமும் திட்டமிட்டுப் புனைந்திருப்பதாகவே படுகிறது. அஞ்சலை நாவலின் முக்கியத் திருப்பம் திருமணம். “சுருள் முடி வைத்துக் கொண்டு முகத்தில் கருப்பாய் அடர்த்தியாய் மீசை வைத்துக்கொண்டு கன்னத்தில் ஒருகையை வைத்துச் சாய்ந்த மாதிரி குந்தியிருந்தான். இன்னங் கொஞ்சம் பார்த்தால் தேவலாம் என்று பார்த்துக்கொண்டு இருக்கும்போதே முன்னால் குந்தியிருந்த சோப்ளாங்கி சாய்ந்து உட்கார்ந்து மறைத்துவிட்டான். அஞ்சலைக்கு வெறுத்து விட்டது. ‘இவன் யாருன்னு தெரியல அவன் மூக்கையும் முழியையும் பாரன். வேதாள மாட்டம் சப்ப மூஞ்சியை வைச்சிக்கிட்டு...!!’” (2005;45) அண்ணனைக் காட்டி சோப்ளாங்கி தம்பிக்கு அஞ்சலையைத் திருமணம் செய்து வைக்கின்றனர். அஞ்சலை அவனுடன் தன்னுடைய அந்தரங் கத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறாள். நாவலில் இத்தன்மையான புனைவே எதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கிறது.

‘கோரை’ கண்மணியின் இரண்டாவது நாவல்; கூலிப் படையாட்சி சமூகத்தை முதன்மைப்படுத்தியது. ஒருபோகப் பயிர் மட்டுமே செய்யக்கூடிய நடுநாட்டு நிலைமை புனையப்பட்டுள்ளது. கூலி வேலை செய்யும் உத்தண்டி சொந்தமாகக் கொஞ்சம் நிலம் வாங்குகிறான். வார இறைப்புக்குத் தண்ணீர் இறைத்துப் பயிர் செய்கிறான். மிளகா நல்லா இருக்கும்னு பன்னி சாணி போடுகிறான். இவன் சாணி வாங்கிய சமயம் பன்றிகள் கோரையைத் தின்றிருந்தன. அப்போது முதல் அவன் நிலம் முழுக்க கோரையாகி விடுகிறது. அதை அழிக்க அவனும் அவன் மனைவி யும் போராடித் தோற்று பன்றியை வைத்தே அழிக்க முற்படுகின்றனர். படையாட்சி, செட்டியார், தலித் ஆகிய மூன்று சமூகத்திற்கும் இருக்கும் இறுக்கமான உறவு இப்புனைவின் மூலம் வெளிப்படுகிறது.

அஞ்சலை கோரை இரண்டுமே சாதிரீதியான பெரியதொரு சண்டையைப் பெரிதுபடுத்தாமல் தலித், படையாட்சி, செட்டியார் ஆகிய மூன்று சமூகத்திற்குமான நூலிழை உறவினை மிக எதார்த்தமாக அதே சமயம் வலுவாகப் புனைந்திருக்கிறது. ஊர்ப் பெயர்கள், தொழில் நிகழ்த்து முறைகள் மீண்டும் மீண்டும் வருவனவாகவே படுகிறது. கதை சொல்லிச் செல்லும் முறையில்கூடக் கோரையை விட அஞ்சலையின் கதை நிகழ்வு காலம்; முதல் பாதியின் கால அளவு அடுத்த பாதியில் பலமடங்கு உயர்கிறது. வட்டாரப் புனைவுக்குத் தேவையான எல்லா நேர்த்தியும் க.கு.வின் புனைவில் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

 

‘நெடுஞ்சாலை’ கண்மணியின் மூன்றாவது நாவல். முன் இரண்டு புனைவுகளிலும் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக் கரு. ஆனால் வேறுபடாத களம். க.கு அவர்கள் தாம் பணி செய்யும் நிறுவனம் சார்ந்து நிகழும் கதையைப் புனைவாக்கியிருக்கிறார். விருத்தாசல மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்யும் - அதுவும் நிரந்தரம் இல்லாத பணிசெய்யும் - ஒரு ஒட்டுநர், நடத்துநர், மெக்கானிக் என மூன்று நிலைப் பணியாளர்களின் வாழ்க்கைப் புனைவு நெடுஞ்சாலை. படையாட்சி, தலித், செட்டியார் சமூகம் சார்ந்த உறவு நிலையையே மீண்டும் வேறொரு கோணத்தில் புனைகிறார். விருத்தாசலம் விழுப்புரம் சார்ந்து புனையும் போது விசாலம் அடையும் அவரின் புனைதிறன் அதனை விட்டுக் கதைக்களம் வெளியே வரும்போது சுருங்கி விடுகிறது.

சிறப்புப் பேருந்து ஓட்டிக்கொண்டு சென்னை சென்று (ஓட்டுநரும் நடத்துனரும்) வருவதே கதையின் இறுதிப்பகுதி. சென்னை சென்று திரும்பி வருதலாகிய கதைப் புனைவு பேருந்து சார்ந்து மட்டுமே இருக்கிறது. கிளைக் கதைகளை உடனுக்குடன் உருவாக்குவதைத் தன் எல்லா நாவலிலும் இயல்பாகச் செய்யும் க.கு. இங்கு உருவாக்காதது அவரின் புனைவு விசாலத்தைக் குறைக்கிறது. ஒட்டுமொத்தத்தில் தற்கால நவீனப் புனைவில் கவனிக்கப்பட வேண்டியவராகக் கண்மணி இருக்கிறார்.

கண்மணி குணசேகரன் ஒரு படைப்பாளியாகப் பரவலாக அறியப் பட்டது அவரின் நாவல்களின் மூலமே அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் வெளியீட்டாளர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். படைப்பு ரீதியாக ஒருவர் வெகுவாக அறியப்படுதல் என்பது சாத்திய மில்லாத இன்றைய சூழ்நிலையில் கண்மணி அறியப்படுவது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. கடந்த பல ஆண்டுகளாகப் புனைகதைகளையும் படைப்பாளிகளையும் இனங்கண்டு அப்படைப்பு களைச் செம்மைப்படுத்தி வெளியிடுவதில் தமிழினி பதிப்பகத்தாருக்குத் தனி பங்குண்டு. புனைகதை களுக்குத் தமிழக அரசின் நூலக ஆணை கிடைத்து விடும் என்கிற வியாபாரம் ஒருபுறமிருக்கப் புனைகதை மரபினை வலுபடுத்தியதில் இப்பதிப்பகத்திற்கு இடமுண்டு.

கண்மணியின் மூன்று நாவல்களையும் வெளியிட்டது தமிழினி பதிப்பகமே (அஞ்சலை இரண்டாம் பதிப்பு). எதார்த்தமான வட்டாரப் புனைவில் கவனிக்கப்பட வேண்டிய கண்மணி குணசேகரன் அவர்களின் புனைவு அஞ்சலை, கோரை, நெடுஞ்சாலை என இன்னும் தொடரின் நடுநாட்டு வட்டாரப் புனைவு என்கிற ஒரு தன்மை இன்னும் வலுப்படும்.

Pin It