உடல்வாதை அவள் அனுபவித்திராத ஒன்றல்ல. பல விஷயங் களைத் தாங்கிக்கொண்டிருந்தாள் அவள் வாழ்க்கையில். இருந்தும் முற்றிலும் உருக்குலைந்திருந்த அவள் உடல் செயற்கையாக மூச்சுவிடும் கருவியில் இணைக்கப்பட்டதைப் பார்த்தபோது இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறைவாசம் அவளுக்கு இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. அன்பு சில சமயம் சிலதைச் செய்யச் சொல்கிறது நம்மை. ஓர் இருதலைக்கொள்ளி நிலை அது. அன்பைப் போல் கொடியது வேறில்லை என்று தோன்றியது அப்போது. அவளுக்குப் புரிந்திருக்கும் அது. யாரையும் எதற்கும் குற்றம் சொல்லக்கூடியவள் இல்லை அவள். எந்தக் குறையும் சொல்லாமல் இந்த மருத்துவ சிகிச்சையையும் ஏற்றுக்கொண்டிருந்தாள். அவள் அரைப் பிரக்ஞையில் இருந்த அன்று அவள் பக்கம் குனிந்து அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது அவள் உள்ளாழத்தை வெளிப்படுத்தும் தன் கண்களைத் திறந்து பார்த்தாள். மெல்லக் கண்ணீர் நிரம்பியது கண்களில். அந்தக் கண்ணீர் எனக்காகத்தான் என்று புரிந்து கொண்டேன். எனக்காக எங்கள் ஆழ்ந்த நட்புக்காக “நான் கிளம்பியாகிவிட்டது. கவலைப் படாதே; எழுதிக்கொண்டிரு” என்று சொல்ல நினைக்கிறாள் என்று தோன்றியது. அப்படித்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போது சந்தித்தாலும், அவள் உடல்நிலை எப்படி இருந்தாலும், அவளுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கட்டாயம் கேட்பாள். சக எழுத்தாளர் களைக் கனிவுடனும் நேயத்துடனும் அரவணைத்துக்கொண்டு போகும் யுகத்தைச் சேர்ந்தவள் அவள். அவளை எனக்கு நாற்பத்தைந்து வருடங்களாகத் தெரியும். அவள் என் தோழி சூடாமணி. செப்டெம்பர் மாதம் 13ம் தேதி முதல் சாமத்தில் அவள் மூச்சுப் பிரிந்தது. வரும் ஜனவரி மாதம் பத்தாம் தேதி அவளுக்கு எண்பது வயது ஆகியிருக்கும்.

சூடாமணியின் தாயார் கனகவல்லி ஓர் கலைஞர்; ஓவியம் தீட்டுவார், சிற்பங்கள் செய்வார். நான்கு பெண்களும் ஒரு மகனும் சூடாமணி மூன்றாவதாகப் பிறந்தவள். குழந்தை பெரிய கண்களும் சுருட்டை முடியுமாய் வெகு அழகாய் இருந்தாள். அம்மை குத்த மனம் வரவில்லை. மூன்று நான்கு வயதில் அம்மை நோய் தாக்கியது. அம்மைப்பால் அத்தனையும் எலும்புப்பூட்டுகளில் இறங்கியது. டாக்டர் ரங்காச்சாரி உயிர் பிழைக்க வைத்தார். ஆனால் வயதுக் கேற்றபடி உடல் வளர்ச்சி இல்லாமல் போயிற்று. தன் பெண் வேறு எந்தக் குறையும் இல்லாமல் வளரவேண்டும் என்று தீர்மானித்த கனகவல்லி சூடாமணிக்கு ஓவியம் தீட்டவும் பாடவும் பயிற்சி அளித்தார். வீட்டிலேயே படித்தாள் சூடாமணி. “மகரம்” என்ற பெயரில் எழுதி வந்த எழுத்தாளர் சூடாமணிக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். சூடாமணியின் முதல் கதை ‘காவேரி’ 1957இல் வெளியாகியது. அதே ஆண்டு கலைமகள் பத்திரிகை யின் வெள்ளிவிழா விருதும் கிடைத்தது. இதன் பிறகு சூடாமணியின் மனத்துக்கினியவள் நாவல் கலைமகள் நாராயண சாமி ஐயர் நாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அவள் எழுத்தைத் தன் வெளிப்பாடாகத் தேர்வு செய்தது வீட்டில் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அவளுக்கு அடுத்த சகோதரி ருக்மணி பார்த்தசாரதியும் சில ஆண்டுகளுக்குப் பின் எழுத ஆரம்பித்தாள்.

சூடாமணி அதன் பிறகு மிகவும் அமைதியான முறையில் எழுத்து லகில் தன்னை ஸ்தாபித்துக்கொண்டாள். கூச்சலோ கூக்குரலோ இல்லாமல் எந்தவிதப் பிரகடனங்களும் இல்லாமல் மெல்லத் தனக்காக இலக்கியத் தில் ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்டாள். அவள் எழுத்திலும் முறையீடுகளும் மாரடிப்புகளும் பிரசங்கங்களும் மார்தட்டல்களும் இருக்காது. மானிட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை, அதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் மென்மை உணர்வுகள் உயிர்ப்பதையும் அழிவதையும் அவள் கதைகள் எந்தவித மிகையும் இல்லாமல் தொட்டுச் சென்றன. அவளுடைய கதாபாத்திரங்கள் மிகவும் மென் உணர்வுகள் கொண்டவர்கள். மிகவும் பசியுடன் தன்னைக் கத்தியால் தாக்கிய இளைஞனின் பசியைப் புரிந்துகொண்டு இறுதி மூச்சிலும் அவனிடம் தன் சட்டைப்பையில் பிஸ்கோத்து இருப்பதைச் சொல்லும் ஒரு நபர் அவளுடைய ஒரு கதையில் வருவார். நட்சத்திரங்களைப் பார்க்க ஆசைப்படும் பெண்ணொருத்தியை யாரும் புரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுவார்கள். இறக்கையில் நட்சத்திரங்கள் என்று அவள் கூறுவதை எதிரிலிருந்த நபரின் புடவையில் உள்ள நட்சத்திரப் புட்டாக்களைக் குறிப்பிடுகிறாள் என்று நினைப்பார்கள். உடல்நலம் குன்றி இருந்தாலும் கணவனின் கயமையை ஏற்காமல் குழந்தையுடன் தன் விடிவை நோக்கிப் பயணப்படுவாள் ஒரு பெண். வாழ்க்கையின் புயலை எதிர்கொண்டு அதனுடன் சண்டையிட்டு அதில் வென்றும் தோற்றும் செல்பவர்கள் அவள் கதைகளில் வரும் பெண்கள். சில சமயம் யதார்த்தத்தை மீறி இயங்குபவர்களாகத் தோன்றினாலும் தன் கவிதை தோயும் மொழி யாலும் அதீத மென் உணர்வுகளையும் எளிதாக வெளிக்கொணரும் தேர்ச்சியாலுhம் அப்பெண்களை பூமியில் கால்களை உறுதியாக ஊன்றி நிற்பவர்களாக்கிக் காட்டியது அவளுக்கே கை வந்த கலை.

1964இல் நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம்.ஏ. செய்ய வந்தபோது சூடாமணி எனக்கு அறிமுகமானாள். நானும் சில கதைகளை எழுதியிருந்தேன். அவள் குடும்பத்தினர் என்னையும் ஓர் அங்கத்தின ராகக் கருதும் அளவுக்கு எங்கள் நட்பு இருந்தது. ஆரம்பத்தில் அவள் எனக்கே எனக்கு நான் நினைத்த குழந்தைத் தனத்தையும் அவள் ஏற்றுக்கொண்டாள். பிற்காலத்தில் நான் செய்த விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாள். கூhந குயஉந க்ஷநாiனே வாந ஆயளம புத்தகத்தை அவளுக்குச் சமர்ப்பித்திருந்தேன் உள்ளே அவள் கதைகள் சிலவற்றை விமர்சன நோக்கில் பார்த்திருந்தேன். “புத்தகத்தை எனக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறாள்; உள்ளே கிழிகிழியென்று கிழித்திருக்கிறாள்” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாள். விமர்சனங்களை ஏற்காதவள் இல்லை அவள் ஒரு பிரபல விமர்சகர் அவள். கதைகளை வெகுவாகப் புகழ்ந்து பேசிவந்தார். ஒரு முறை அவர் யாரிடமோ “பாவம் அவர் உடல்நிலை சரியாக இல்லாமல் இருப்பவராம்; அவரைக் கடுமையாக விமர்சிக்க விரும்ப வில்லை” என்று கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட சூடாமணி என்னிடம் “இதை விட அதிகமாக அவர் என்னை அவமதித்திருக்க முடியாது. கடுமையான விமர்ச்சனங்களை என்னால் ஏற்றிருக்க முடியும்; அவர் புகழ்ந்ததை ஏற்கமுடியவில்லை. அவர் விமர்சித்திருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய வலியைவிட அவர் புகழ்ந்தது அதிகமாக வலிக்கிறது” என்றாள்.

என்னை என் போக்கில் வளரவிட்டாள் சூடாமணி. அறிவுரைகள் எல்லாம் கிடையாது. இலக்கியம் எங்கள் நட்பின் அடித்தளமாக இருந் தாலும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அவளுக்குத் தெரிந்தி ருந்தது. என் கொள்கைகள், லட்சியங்கள், உறவுகள் பற்றிய என் நோக்கு, என் பிடிவாதங்கள், முரட்டுத்தனங்கள் எதையுமே நான் அவளிடமிருந்து மறைக்கவில்லை. பத்து ஆண்டுகள் எழுத்துலகில் தொடர்ந்து நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டபோது, நான் எழுதியதையும் என் வாழ்க்கை முறையை யும் உறுதியுடன் ஆதரித்தாள். நிரந்தர உறவு ஒன்றை நான் ஏற்றுக் கொள்வேன் என்று யாருமே நானே கூட நம்பாதபோது ஒரு நண்பனுடன் என் வாழ்க்கையை நான் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தபோது அதையும் வரவேற்றாள். மரத்தில் தந்தவேலை செய்த சுவற்றில் மாட்டும் ஒரு சித்திரத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தாள். இன்னும் அதை நான் காலையில் தினமும் பார்க்கிறேன். 1984இல் நான் ஒரு சிறு வீட்டை வாங்கிக் குடிபோனதும் ஆறு கண்ணாடிக் கோப்பைகளையும் புத்தரின் முகம் ஒன்றையும் அன்பளிப்பாகத் தந்தாள். வீடு வாங்கிய கொண்டாட்டத்தின்போது அந்தக் கோப்பைகளில்தான் மது அருந்தினோம் என்று அவளிடம் கூறியதும், “அதற்குத்தானே தந்தேன்” என்றாள். பல கட்டங்களைத் தாண்டி வந்தது எங்கள் நட்பு. என் வாழ்வில் உள்ளவர்களும் உள்ளவைகளும் அவளுக்கும் உரியதாயிற்று. ஸ்பாரோ நிறுவனத்துக்கு நன்கொடை தந்திருக்கிறாள் என் வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு அவள் பெரியம்மாவானாள்.

அவளுக்கு விருதுகள் வந்தன. 1966இல் தமிழ்நாடு அரசு விருது வந்தது. ‘இருவர் கண்டனர்’ நாடகம் ஆனந்த விகடன் பரிசு பெற்றது. 2009இல் கலைஞர் கருணாநிதி விருது வந்தது. அவள் நாடகங்கள் மேடையேறின அதையெல்லாம் அவள் பெரிதுபடுத்தவில்லை. மற்றவர்கள் எழுதுவதை ஆர்வத்துடன் படித்துக்கொண்டும் தன் எழுத்தைத் தொடர்ந்துகொண்டும் இருந்தாள். அவள் சகோதரிகள் ஒவ்வொருவராக மறைந்தது அவளைப் பெரிதும் பாதித்தது. முதலில் எல்லோரையும் விட இளையவளான ருக்மிணி மறைந்ததும் சற்று உடைந்துபோனாள். தன் உடலிலிருந்து ஒரு பகுதி போனது போல் உணர்வதாக என்னிடம் கூறினாள். அவள் மூத்த சகோதரியை ‘கர்லிக்கா’ என்று கூப்பிடுவோம். அவர் இறக்கும் முன்பு “இறப்பதைப் பற்றி பயம் இல்லை; ஆனால் சூடாமணியின் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்று கூறியபடியேதான் போனார். சமீபத்தில் அவருடைய இன்னொரு அக்கா பத்மா இறந்ததும் சூடாமணி மனதுடைந்து போனாள். அவள் எல்லோரையும் விட்டு விலகி தனக்குள் ஒடுங்கிக் கொண்டதைப்போல் உணர்ந்தேன். அவள் தம்பி சிகாகோவில் வாழ்ந்து வருவதால் அவரால் அருகே இருக்க முடியவில்லை. அவள் தோழி பாரதியும் சூடாமணியின் அக்காவின் மகன் அனந்தாவும் அவளை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவளை உற்சாக மூட்டியபடி பேசியபடி இருந்தாள் பாரதி. ஆனால் சூடாமணியாரும் எட்டமுடியாத ஆழத்தில் தன்னைப் புதைத்துக்கொண்டுவிட்டாள்.

உடல் பற்றியும் ஆத்மா பற்றியும் அது அடையும் சாந்தி பற்றியும் சம்பிர தாயமான முறையில் நான் நினைக்காததால் ஒருவர் மறைவுக்குப் பின் கூறும் வழக்கமான சம்பிரதாயச் சொற்களை என்னால் கூறமுடியவில்லை. அவள் அத்தனைக் கதைகளும் தொகுக்கப்பட வேண்டும்; அவள் பெயரில் சிறுகதைகளுக்கான ஒரு விருது அமைக்க வேண்டும்; அவள் குடும்பத் தினரும் நண்பர்களும் இதைச் செய்யவேண்டும். என்னைப் பொறுத்த வரை அவளைப்போல் இன்னொரு தோழி என் வாழ்க்கையில் அமைய முடியாது. இன்னும் நெஞ்சில் ஒரு கனம் அழுத்துகிறது.

Pin It