“Dravidian studies had also been officially recognised in 1873 when the First International Orientalists in Paris devoted a special session to those Studies” - (Prof.Jean Filliozat, Presidentitial Address:III International Tamil Conference, Paris,1970. IATR)

ஐரோப்பிய முறையியலில் திராவிட இயல் ஆய்வு கால்கொண்டதை பேராசிரியர் ஃபிலியோசாவின் மேற்குறித்தக் கூற்று உறுதிப்படுத்துகிறது. சீகன்பால்கு, தமிழ்நூல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை உருவாக்கினார்.

அது 1724இல் வெளிவந்தது. பாரீஸ் நகரத்தில் இயங்கிய இராயல் நூலகமும் 1739இல் புத்தகப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் தமிழ் நூல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்விதம் 18ஆம் நூற்றாண் டில் உருவான திராவிட இயல் ஆய்வின் பகுதியாகவே தமிழும் இடம் பெற்றது. திராவிட இயல் என்பதும் தமிழியல் என்பதும் ஒரே பொருளில் 1950வரை புரிந்து கொள்ளப்பட்டது. இப்போது இன்னும் கூடுதல் துல்லியம் நோக்கி “தமிழியல்” என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். இச்சொல்லைப் பயன் படுத்திய முன்னோடிகளில் ஒருவர் பேரா.எஸ்.சேவியர் நாயகம் அவர்கள்.

1950கள் தொடக்கம், பயன்படுத்தப்பெறும் தமிழியல் என்னும் சொல்லாட்சி என்பது தமிழ்மொழி, தமிழ் நாடு, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பல்வேறு பரிமாணங்கள் குறித்த ஆய்வைக் குறிப்பதாக அமைகிறது. இவ்விதழில் தமிழியல் ஆய்வு தொடர்பான கதையைப் பதிவு செய்ய முயலுவோம். பேரா.தனிநாயகம் அவர்களை ஒரு குறியீட்டுப் புள்ளியாகக் கொண்டு, தமிழியல் ஆய்வுக் கதையைப் புரிந்து கொள்ள பின்கண்டவாறு தொகுத்துக் கொள்வோம்.

மேலே குறித்த காலப் பாகுபாடு என்பது தமிழியல் ஆய்வின் போக்குகள் பற்றிய புள்ளிகளை இனம் காண உதவும். மிக விரிவான தரவுகளோடு விவாதிக்க வேண்டிய இப்பொருண்மை கடந்த முப்பது ஆண்டுகால எனது நேரடி அனுபவப் பகிர்வாகக் கூட அமையலாம். பகிர்வில் தன்முனைப்பைத் தவிர்த்து யதார்த்த நிகழ்வுகளின் தர்க்கப் பாங்கினை மட்டும் பதிவு செய்ய முயலுவோம். வரலாறு - தனிமனித அநுபவம் - தர்க்க ஒழுங்கமைவு என்ற கண்ணோட்டத்தில் தமிழியல் ஆய்வுக் கதையைக் கட்டமைக்கலாம்.

ஐரோப்பியர்கள் உருவாக்கிய கீழைத்தேயவியல் - திராவிட இயல் - தமிழியல் என்பதை 1700-1950 என்ற கால ஒழுங்கில் புரிந்து கொள்ள இயலும். சீகன்பால்கு (1682-1719) முதல் கமில்சுவலெபில் (1927-2009) வரை என்று வரையறை செய்யலாம். இந்த மரபில் தமிழ்மொழி பற்றி உலக அளவில் அறிதல், உலக மொழிக்குடும்பத்தில் திராவிட மொழிக் குடும்பம் இடம்பெறல், திராவிட மொழிகள் குறித்த ஆய்வுகள், திராவிட மொழிகளைப் பேசுவோர் குறித்தப் புரிதல், இம்மொழி பேசுவோர் வாழுமிடம், இவர்களின் வரலாறு, பண்பாடு ஆகிய பலவற்றையும் ஆவணப்படுத்துதல், உரையாடுதல், ஆய்வு செய்தல் எனும் போக்கில் நிகழ்த்தினர். மொழி நூல், மொழிஇயல், இனமரபியல், தொல்லியல், மக்கள் கணக்கெடுப்பு, தொன்மையான இடங்கள் ஆகிய பல்வேறு கோணங்களில் பதிவுகள் உருவாகின. மொழி அமைப்பு - வரலாறு, மக்கள் வாழ்முறை - வரலாறு ஆகியவற்றைப் பல்வேறு வகையில் ஆவணப்படுத்தினர். ஐரோப்பியர்கள் உருவாக்கிய தொல்லியல் துறையின்மூலம் பெற்ற செய்தி களைக் கீழ்க்காணும் வகையில் தொகுப்போம். அவர்கள் உருவாக்கிய ஒவ்வொரு துறை குறித்தும் இவ்வகையில் தொகுக்க முடியும். ஆனால் அவர்களது ஆய்வியல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு எடுத்துக்காட்டாகத் தொல்லியல் துறை தொடர்பானதை மட்டும் இங்குப் பதிவு செய்வோம்.

மேற்குறித்தவாறு பல்துறைகளில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் உலக வரைபடத்தில் இந்தியா என்ற பகுதி, அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியா என்ற வேறுபட்ட பகுதியும் இருப்பது பதிவானது. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் என்னும் வேறுபட்ட அடையாளங் களின் பதிவுகள் உலகில் புதிதாக அறியப்பட்டது. ஐரோப்பியர் களின் இவ்வகைப் பதிவுகள் மூலம் இந்தியா - தென்னிந்தியா எனும் நில மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளைப் புரிந்துணரும் வாய்ப்பு உருவானது.

ஆசியக் கண்டத்தின் பழங்காலப் புதிர்கள் விடுவிக்கப்பட்டன. சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் தென் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் எனும் வேறுபாடுகளின் தனித் தன்மைகள் அறியப்பட்டன. இதில் திராவிட இயல் - தமிழியல் குறித்த தனி அடையாளம் முன்னெழும் சூழல் உருவானது. மேற்குறித்த தன்மைகள் பொதுவான நிலையில் அமைந்தவை. ஆனால் தமிழ்மொழி மற்றும் தமிழ்மொழி பேசும் காலனிய இந்தியாவின் சூழல் குறித்து, மேலும் துல்லியமாக அறியும் தேவை நம்முன் உள்ளது. 1950க்கு முற்பட்ட தமிழியல் ஆய்வை, அதன் பிற்காலப் போக்குகள் குறித்துப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தில் பதிவு செய்ய முயலுவோம்.

மேலே குறித்த 1950க்கு முற்பட்ட தமிழியல் ஆய்வுப் போக் குகள் தொடர்பான விவரணங்கள் வழி கட்டப்பட்ட வரலாறு கள் குறித்து விரிவாக உரையாடல் நிகழ்த்த வாய்ப்புண்டு. ஆனால் இத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டே 1950க்குப் பிற்பட்ட தமிழியல் ஆய்வு மரபுகள் மேலும் மேலும் முன்னெடுக்கப்பட்டன. தமிழியல் எனும் விரிந்த களம் உருவானது. புதிய பல்கலைக்கழகங்கள் மூலம் உருவான புதிய ஆய்வாளர்கள் தமிழ்ச்சமூகத்தில் உருவாயினர்.

காலனிய அதிகாரத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஏகாதிபத்திய நாடுகள் கவனிக்கத் தொடங்கின. ஏகாதிபத்திய அதிகார அமைப்புகள் உருவாகின. அவை விடுதலை பெற்ற காலனிய நாடுகளில் தங்களது இருப்பை நிலைநிறுத்துவது தொடர்பாகவும் செயல்படத் தொடங்கினர். பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் மறைமுகமாகப் பங்கு பெறத் தொடங்கினர்.

யுனெஸ்கோ நிறுவனம் மூலம் ஆய்விற் கான பல்வேறு உதவிகளைச் செய்ய முன்வந்தனர். பூனாவில் உள்ள தக்காணக் கல்லூரியில் மொழியியல் பயிற்சிப் பட்டறை களை அமெரிக்க மற்றும் பிரித்தானிய நாடுகளைச் சேர்ந்த வர்கள் நடத்தினர். இதில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டார மொழி சார்ந்த ஆய்வுகளும் உருவாகின. ஆங்கில மொழி அறியாதவர்களும் ஆய்வில் செயல்பட முடியும் என்ற சூழல் உருவானது.

இத்தன்மை இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் செயல்பட்ட தமிழியல் ஆய்வுத் துறைகளில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது. புதிய வகையான தமிழியல் ஆய்வுகள் உருவாகின. 1950களுக்குப் பின் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் உருப்பெற்ற தமிழியல் ஆய்வின் போக்கை கவனத்தில் கொள்வது அவசியம். இந்நாடுகளில் செயல்பட்ட சில பேராசிரியர்களின் செயல்பாடுகளைக் குறியீ டாகக் கொண்டு பின்வரும் வகையில் பகுத்துக் கொள்வோம்.

மேற்குறித்த  பேராசிரியர்கள் வெறும் குறியீடுகள் மட்டுமே. நிர்வாக அளவில் இருந்து செயல்பட்டதோடு, தங்களுக்கென மாணவப் பரம்பரையை உருவாக்கியப் பேராசிரியர்களாகவும் இவர்கள் அமைகிறார்கள். 1980ஆம் ஆண்டுகட்கு பிற்பட்ட தமிழியல் மாணவனாக நின்று மேற்குறித்த பதிவைச் செய்ய விரும்புகிறேன். இவர்களது மாணவர்களும் இவர்கள் காலத் தில் இருந்த புலமையாளர்களும் மேற்கொண்ட தமிழியல் ஆய்வுகளைக் கவனத்தில் கொள்வது அவசியம்.  தமிழியல் ஆய்வின் போக்குகளுக்கானப் புரிதலாகவே, மேலே கண்ட பேராசிரியர்கள் குறியீடுகளாக அமைகின்றனர். ஒவ்வொரு குறியீடு பற்றியும் புரிந்து கொள்வதன் மூலம், சமகாலத் தமிழியல் ஆய்வு குறித்தப் புரிதலுக்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

மேலே குறித்த காலச்சூழல் என்பது திராவிடக் கருத்தியல் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலம் ஆகும். ஆனால் மேற்குறித்த பேராசிரியர்கள் எவரும் திராவிட அதிகாரக் கருத்தியல் சார்புடையவர்கள் இல்லை. தேசிய அரசியல் மற்றும் இடதுசாரி அரசியல் சார்பாளர்களாக இருந்தனர். ஈழ தேசிய விடுதலையின் மீது ஈடுபாடு உடையவராக பேரா.தனிநாயகம் இருந்தார். திராவிட அரசியல் அதிகாரம் சார்ந்த பேரா.மு.வரதராசன் (1912-1974) போன்றவர்களைத் தமிழியல் ஆய்வில் பெரும் தாக்கத்தை உருவாக்கியவர்களாகக் கருதமுடியாது. இன்றையத் தமிழியல் ஆய்வுச் சீரழிவுக்கு ஏதோவொரு வகையில் திராவிட அதிகார மரபே காரணமாக அமைந்துள்ளது என்பதைத் தர்க்கபூர்வமாக விவாதிக்க முடியும். அதனைச் செய்ய இன்னும் கொஞ்சம் காலம் பொறுக்க வேண்டும். இப்போது, மேற்குறித்த பேராசிரியர்கள் சார்ந்த குறியீட்டுப் போக்கில், தமிழியல் ஆய்வுப் போக்கை மதிப்பீடு செய்ய முயலுவோம்.

1920களில் உருவான நவீனப் போக்குகளை உள்வாங்கிக் கொண்ட இளைஞராகத் தெ.பொ.மீ. தொடக்கத்தில் இருந்தார். கல்வி உளவியல் குறித்தும் சமண மதம் குறித்தும் 1930களில் அவர் எழுதிய நூல்கள் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டவை. சட்டம் படித்ததோடு தமிழையும் கற்றார். 1940களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார்.

1950களில் மொழியியல் தொடர்பான ஆய்வு களில் சிறப்பாக ஈடுபட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் சிறந்த மொழியியல் ஆய்வுத் துறை உருவாக முன்னோடி யாக இருந்தார். இந்தியாவில் முதன்மையான மொழியியல் ஆய்வுத் துறையாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வுத் துறை உருவாவதில் தெ.பொ.மீ. அவர்களது பங்கு குறிப்பிடத் தக்கது. பேராசிரியர்கள் அ.தாமோதரன், அ.தெட்சிணாமூர்த்தி, கோ.விஜயவேணுகோபால் ஆகிய வாழும் அறிஞர்கள், தெ.பொ.மீ.குறித்து உணர்ச்சி பூர்வமாகப் பதிவுசெய்வதைக் காணமுடிகிறது. நீண்ட மாணவர் பரம்பரைக்குச் சொந்தக்கார ராக அவர் இருக்கிறார்.

பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகி, அப்பல்கலைக்கழகத் துறைகள், நவீன சிந்தனைப் போக்குகளுடன் செயல்படுவ தற்குக் களன்களை உருவாக்கினார். இவ்வகையில் தெ.பொ.மீ. வழிப்பட்ட தமிழியல் ஆய்வு மரபு என்பது வளமானது. இ.அண்ணாமலை, ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு மொழியியல் அறிஞர்கள் பாரம்பரியம் தொடருவதற்குத் தெ.பொ.மீ. இட்ட வித்து முதன்மையானது. இம்மரபு இன்றைய சூழலில் எவ்விதம் செயல்படுகிறது என்பது தொடர்பான புரிதல் தேவைப்படுகிறது. தமிழ்ப் புலமைச்சூழ லில் மொழிசார்ந்த ஆய்வுகளின் வளமான காலமாக 1950-1980 காலச் சூழலைக் கூற இயலும். இதற்கு ஏதோவொரு வகையில் தெ.பொ.மீ. மூலமாக இருக்கிறார். மொழியியலில் நடைபெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வுகளைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யும்போது, அதன் வீரியத்தை உணரமுடியும்.

1950-1980 இடைப்பட்ட காலச்சூழலில் தமிழியல் ஆய்வை உலக வரைபடத்தில் இணைத்தவர் பேரா.தனிநாயகம் அவர்கள். இதழியல் வழி கட்டமைத்த தமிழியல் ஆய்வு, ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் வழி கட்டமைத்த தமிழியல் ஆய்வு, நிறுவனங்கள் வழி கட்டமைத்த ஆய்வு எனப் பல பரிமாணங் களில் அவரது செயல்பாட்டைப் புரிந்து கொள்ள இயலும். 1952-1966 காலச் சூழலில் அவர் கொண்டுவந்த Tamil Culture இதழ்களின் கட்டுரைகள், தமிழியலின் பல்வேறு பொருண்மை களைப் பேசும் வகையில் அமைந்தன. எமனோ, பர்ரோ, ஃபிலியோசா, கமில்சுவலெபில் எனப் பல்வேறு மேலை நாட்டு அறிஞர்கள் தமிழியல் குறித்து Tamil Culture இதழில் எழுதினார்கள். 

தமிழ்ச் செவ்விலக்கிய மரபின் வளம் உலகுக்கு அறிவிக்கப்பட்டது. கிரேக்க, ரோமானிய, அரேபிய மரபுக ளோடும் சமஸ்கிருத மரபுகளோடும் தமிழ்ச்செம்மொழி மரபுக் குள்ள இணையான கூறுகள் உரையாடலுக்கு உட்படுத்தப் பட்டன. திராவிட மொழிக்குடும்பத்தின் தனித்தன்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. தமிழ் அச்சு மரபின் தொன்மை மற்றும் வளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  தமிழ்க்கவிதை, தமிழ் உரைநடை ஆகியவற்றின் தன்மைகள்,  உலகத்தில் உள்ள பிற கவிதை மற்றும் உரைநடைகளோடு இணையான தன்மை யுடையவை என்ற கருத்தை முன்னெடுக்கும் உரையாடல்கள் நிகழ்ந்தன.

உலகத் தமிழ் ஆய்வுமன்றம் (IATR), மலேயப் பல்கலைக் கழக இந்தியவியல் துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (IATR) ஆகிய நிறுவன உருவாக்கத்தில் பேரா. தனிநாயகம் முன்னின்று செயல்பட்டார். அவர் காலத்தில், நான்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்க மாநாடுகள் (1966,1968,1970, 1974) நடைபெற்றன. அதில் முதல் மாநாட்டை கோலாலம் பூரில் நடத்துவதற்கு அவரே முன்னோடியாக இருந்தார். அம்மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளைப் பின்னர் (1968) இருதொகுதிகளாகப் பதிப்பித்துக் கொண்டுவருவதில் அவரது பங்கு முதன்மையானது.  அத்தொகுதிகளில் தரம் வாய்ந்த தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவ்விரு தொகுதிகளில் 146 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதிலிருந்தும் ஆய்வாளர்கள் அக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர். வரலாற்றில் முதல்முறையாகத் தமிழியல் ஆய்வு உலகம் தழுவிய நடைமுறையாக வடிவம் பெற்றது. பல்வேறு புதிய பயில்துறைகள் குறித்தப் புரிதலும் உருவானது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான ஆய்வுகள், மேலைநாடுகளில் தமிழியல் ஆய்வு, சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், திறனாய்வுக் கோட் பாடுகள், தொல்லியல், ஒப்பிட்டு மொழியியல், இசை மற்றும் நடனம், தற்காலத் தமிழ்ச் சமூகம் ஆகிய பல பொருண்மை களில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவை தொகுக்கப்பட் டிருப்பதைக் காண்கிறோம். இவ்விதம் உருவான இந்த ஆய்வு மரபு, பின்னர் பல்வேறு தமிழியல் ஆய்வுகள் உருவாக அடிப் படையாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து 1970இல் பாரிசில் நடந்த மூன்றாவது உலகத்  தமிழ் மாநாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பித்துக் கொண்டு வருவதில் பேரா. தனிநாயகம்  முதன்மையான பங்கு வகித் துள்ளார். அத்தொகுதியில் காணப்படும் கட்டுரைகள், தமிழுக் கும் சமசுகிருதத்திற்குமான உறவுமுறைகள் குறித்த விரிவான பதிவுகளைக் கொண்டுள்ளன.

மேலும், உலகம் முழுவதுமான தமிழர் பரவல் (Tamil Diaspora) குறித்த விரிவான ஆய்வுகளை இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது மாநாட்டுக் கருத்தரங்கில், ஆரம்ப உரையைப் பேரா. தனிநாயகம் நிகழ்த்தினார். அதில் காணப்படும் பின்வரும் பகுதி, அவர் முன்னின்று நடத்திய உலகத்தமிழ் கருத்தரங்க மாநாடுகளின் தரம் குறித்து அறிய உதவும்.

ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டை அறிவ தற்கு வடமொழி அறிவிருந்தாற்போதும் என்று மேல்நாட்டார் நினைத்தனர். ஆனால் இன்று திராவிட மொழிகளிற் சிறந்த தமிழ்மொழியை அறியாது இந்தியாவின் அடிப்படைப் பண்பாட் டையும் கலைகளையும் உணர முடியாது என்றே, வடமொழியுடன் தென்மொழியையும் பயின்று வருகின்றனர் மேல்நாட்டு அறிஞர். எங்கு மேல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஆழ்ந்த வடமொழிப் பயிற்சியுண்டோ அங்குத் தமிழையும் பயிலத் தொடங்கிவிட்டனர். இம்மாநாடுகளின் பயனை நாம் கணிக்க வேண்டுமாயின், சென்ற மூன்று மாநாடுகளின் தொகை நூல்களைப் (Proceedings) படித்துப் பார்க்க வேண்டும். அந்நூல் களைப் பார்த்தால் தமிழாராய்ச்சி எவ்வளவிற்கு முன்னேறி வருகின்றது என்பதை உணரக் கூடும் (சே.தனிநாயகம், நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு, முதல்தொகுதி,1977 ஆரம்ப உரை)

பேராசிரியரின் மேற்குறித்த தன்விளக்கம், அவர் முன்னின்று நடத்திய தமிழாராய்ச்சி மாநாடுகளின் ஆய்வுத்தரத்தைப் புரிந்து கொள்ள உதவும். இதைப் போலவே மலயாப் பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் அவர் உருவாக்கிய ஆய்வுப் பாரம்பரியம் வலுவானது. பேராசிரியர்கள் எஸ்.அரசரத்தினம், எஸ்.சிங்காரவேலு ஆகிய பல ஆய்வாளர்கள் தனிநாயகம் அவர் களின் வழிகாட்டுதலில் உருவானவர்கள். மலாயப் பல்கலைக் கழகத்தின் தரமான வெளியீடுகளுக்கும் பேராசிரியரே காரணம்.

உலக அளவில் நடைபெற்ற ஆய்வுகளை, ஒழுங்குபடுத்தி, “Tamil Studies Abroad” எனும் பெயரில் பேராசிரியர் உருவாக்கிய ஆக்கம், உலகில் தமிழியல் ஆய்வு குறித்த பதிவாகவும் புரிதலாகவும் அமைந்துள்ளது. மேற்குறித்த உலகளாவிய தொடர்பு மற்றும் அநுபவம் சார்ந்து சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்குவதற்கான அடிப்படை வரைவுகளைச் செய்தார். இதில் பேரா.வ.அய்.சுப்பிரமணியம் பெரிதும் உதவினார். மால்கம் ஆதிசேஷையா அவர்களின் உதவியோடு, யுனெஸ்கோ உதவி மற்றும் அங்கீகாரமும் பெறப்பட்டது. “தமிழியல்” எனும் பெயரில் “Journal of Tamil Studies” எனும் இதழையும் கொண்டு வந்தார். ஆய்வு மரபைக் கட்டமைக்க அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்த ஆவணங்கள், “Journal of Tamil Studies” முதல் இதழின் இரண்டாம் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. அதில் காணப்படும் செய்திகள் மேல்குறித்த விவரணங்களுக்கு அடிப்படைச் சான்றாக அமை கிறது. (பார்க்க: Journal of Tamil Studies;Vol.I.number.I.April.1969.Part II)

மேற்குறித்த பல்வேறு தரவுகளின் மூலம் பேரா.தனிநாயகம் அவர்களின் தமிழியல் ஆய்வு மரபைப் புரிந்துகொள்ள முடியும். இம்மரபுகள் இன்றும் தொடர்கிறதா? என்ற கேள்வியை முன் வைப்பது அவசியம். ஏறக்குறைய பேரா.தனிநாயகம் செயல் பாடுகளை அடியற்றிச் செயல்பட்டவராகப் பேரா.வ.அய். சுப்பிரமணியம் அவர்களைக் கருதமுடியும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பயிற்சியும் அதேபோல், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பயிற்சியும், தமிழியல் ஆய்வில் பல்வேறு பயில்துறைகள் உருப்பெற முன்னின்றவராக வ.அய்.சு. அமைகிறார். கேரளப் பல்கலைக்கழகத்தில், இவர் உருவாக்கிய மொழியியல் ஆய்வுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ. உருவாக்கிய மரபினின்றும் வேறுபட்டது. பண்பாட்டு மானிடவியல் படிப்பாக, மொழி யியல் படிப்பைக் கட்டமைத்தார்.

நாட்டார் வழக்காறு, தொல் பழங்குடிகள் வழக்காறு ஆகியவற்றையும் மொழியியல் புலத்தின்கீழ்க் கொண்டு வந்தார். தொல்பழம் தமிழ் இலக்கியப் பிரதிகளின் மொழி சார்ந்த அமைப்பை மொழியியல் கண்ணோட்டத்தில் உள்வாங்கும் நோக்குடன் தமது மாணவர் களுக்குப் பயிற்சியளித்தார். இதனால் இலக்கியங்களுக்கான குறிப்படைவுகள் (Indicies) உருவாக்கப்பட்டன. இலக்கணம், வழக்காறு, தொல்குடிகள் ஆகியவற்றை மொழியியல் எனும் பண்பாட்டு மானிடவியல் படிப்பாகக் கட்டமைப்பதற்கு அவரது அமெரிக்கப் பல்கலைக்கழகப் பயிற்சி வாய்ப்பளித்தது. அதனை நடைமுறைப்படுத்தி, தமிழியல் ஆய்வுக்கென புதிய ஆய்வாளர்களை உருவாக்கினார். அவரது மாணவர்களே உலகம் முழுவதும்  சென்று தமிழியல் ஆய்வில் ஈடுபடும் வாய்ப்புப் பெற்றனர். இவரது இவ்வகையான அணுகுமுறையே தமிழியலுக்கான முதன்மையான ஆய்வு நிறுவனங்களை பின்னர் உருவாக்குவதற்கான அடிப்படைக் களனாக அமைந்தன. இவர் அளவிற்குத் தமிழியல் ஆய்வுநிறுவனங்களை உருவாக் கிய இன்னொருவரைக் கூற இயலாது.

திருவனந்தபுரத்தில் உலகத் திராவிட மொழிகளின் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். (International School of Dravidians Linguistics) அதன்மூலம் திராவிட மொழியியல் கழகம், திராவிட மொழிகளுக்கான அனைத்துலக ஆய்வு இதழ் (IJDL) ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கிய நிறுவனத்தின் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆய்விதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தப்பெறுகின்றன. இந்நிறுவனத்தின் நீட்சியாகக் குப்பத் தில் திராவிடப் பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்குவதில் இவர் முன்னின்றார்.  தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் உருவாக்கிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அமைந்து, தமிழியல் ஆய்வுப் புலத்தின் பல்வேறு துறைகளை உருவாக்கினார்.

தனது பயிற்சியில் உருவான மாணவர்களை அப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலங்களில் செயல்பட வழிகண்டார். தெளிவான கண்ணோட்டத்துடன் உருவாக்கப் பட்ட இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள், உலகில் மொழிசார்ந்த நிலையில், வேறு மொழிகளுக்கு இல்லை என்று கூறும் அளவில் இருந்தது. இவரது மாணவர் பரம்பரை தமிழியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை  ஏற்படுத்திய வர்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஓய்வுப்பருவத்தை எட்டிவிட்டனர். தமிழியல் ஆய்வும் ஓய்வுப்பருவத்தை எட்டி யிருப்பதன் குறியீடாகக் கூட இதனைக் கருத இயலும்.

1970-1990 காலச் சூழலில் தமிழியல் ஆய்வில் பல்வேறு புதிய பரிமாணங்களை உருவாக்கிய பேராசிரியராக வ.அய்.சு. அமை கிறார். அவர் பெரிதும் மதித்துப் போற்றிய பேரா.தனிநாயகம் அவர்களது ஆய்வு மரபை வளமாக முன்னெடுத்தவராக இவரைக் கருதமுடியும். பேரா.ச.வையாபுரிப் பிள்ளையின் நேரடி வாரிசாகவும் பேரா.தனிநாயகம் அவர்களின் உற்ற தோழனாகவும் தன்னைத் தகவமைத்துக்கொண்டவர் வ.அய்.சு. அவரது தனிப்பட்ட கருத்து நிலைபாடுகளை மீறி அவரது ஆய்வுப்பணிகள் நிலைபேறு கொண்டுள்ளதை புரிந்து கொள்ள இயலும்.  இவரால் கட்டியெழுப்பப்பட்ட மரபின் தொடர்ச்சி என்னவாக உள்ளது? என்ற உரையாடலை நிகழ்த்த வேண்டும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் சமூக மொழியியல் பயிற்சி பெற்ற பேரா.முத்துச்சண்முகம் அவர்கள், மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழியல் மரபைப் புதிய பரிமாணத்திற்கு வளர்த்தெடுத்தவராகக் கருதஇயலும். நிகழ்த்துக்கலைகள், புழங்குபொருட்கள், நம்பிக்கை மற்றும் சடங்குகள், வட்டார மொழிகள், நவீனக் கோட்பாடுகள் எனப் பல்வேறு பயில்துறைகளில் தம் மாணவர்களைப் பயிற்று வித்தப் பெருமை இவரைச் சாரும். நவீனத் தமிழியல் மரபில், நிறுவன வலையத்திற்குள் வராத, சிரத்தையான சிற்றிதழ் ஆய்வு மரபை நிறுவன அங்கீகாரம் பெறச் செய்தவர் இவர். இத்தன்மை விதந்து பேசக்கூடிய ஒன்றாகும். நவீனத் தமிழ் இலக்கிய மரபின் வளத்தை ஆய்வுப் புலமாக வளர்த்தெடுத்த இவரது பணி வரலாற்றில் நினைக்கப்படும்.

இக்கண்ணோட்டத்தில் மாணவப் பரம்பரையை உருவாக்கினார். பேராசிரியர்கள் தனிநாயகம், வ.அய்.சு. ஆகியோர் கண்ணோட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட மரபைக் கட்டியதில் இவருக்கான இடம் முக்கியமானது. சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களுக்கு இல்லாத அடையாளத்தை மதுரைப் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வில் உருவாக்கினார். சமூக மொழிஇயல் சார்ந்த பயிற்சிமூலம், தமிழின் நவீன பண்பாட்டு மானிட வியலைக் கட்டமைத்த பேராசிரியர் இவர். தமிழ்க்கல்வி பல்வேறு புதிய துறைகளுக்குள் பயணம் செய்ய வழி திறந்தார். மரபான பண்டிதர்களுக்கு எதிர்நிலையில், தமிழியலை நவீன மயமாக்கிய இவரது செயல், தமிழியல் ஆய்வின் திருப்பு முனையாகக் கருதமுடியும்.

மேலே குறித்தப் பேராசிரியர்கள், நிறுவனம் சார்ந்து தங்களது கல்விப் பயிற்சியையும் செயல்பாட்டையும் நிகழ்த்தியவர்கள். இதன்மூலம் தமிழியலின் பல்வேறு களன்களை கண்டெடுத்து அடையாளப்படுத்தியவர்கள். இதிலிருந்து வேறுபட்டவராக, கல்விப்புலம் சாராத பேராசிரியராக, நா.வானமாமலை அமைகிறார். குறிப்பிட்ட தத்துவச் சார்போடு, ‘ஆராய்ச்சி’ இதழ் மூலம் தமிழியல் ஆய்வில், பல்கலைக்கழகம் சாராதவர்களை யும் வளர்த்தெடுத்த அணுகுமுறை நா.வா.அவர்களின் அணுகு முறை. மேற்குறித்த பேராசிரியர்களின் பணிகளுக்கு எவ்வகை யிலும் குறைவற்றதாக இவரது செயல்பாடும் அமைந்துள்ளது. தத்துவம், வழக்காறு, தற்கால இலக்கியம் ஆகிய பல்துறை களைச் சார்ந்து ஓர் ஆய்வுவட்டத்தைக் கட்டியமைத்தார். இவரின் தாக்கம் தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ஏற்பட்டது. க.நா.சு., சி.சு.செ., ஆகியோர் செயல்பட்ட தளத்தின் வேறுபுள்ளியில் நா.வா.செயல்பட்டார். தமிழக நாட்டார் வழக்காற்றுத்துறைக்குப் புதிய அடையாளத்தை வழங்கியதில் இவருக்கும் பேரா.தே.லூர்து அவர்களுக்கும் உரிய இடம் விதந்து போற்றத்தக்கது.

தமிழியல் ஆய்வு என்பது, தமிழ்நாடு, இலங்கை, மலேசியா என்ற நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது. தற்போது சிங்கப்பூரும் இணைந்துள்ளது. மலேசியப் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வை பேரா.தனிநாயகம் அவர்களைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். அவர்  அப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கிய மரபு இன்றும் தொடர்கிறதா? என்று உரையாடுவது அவசியம். இலங்கையில் உள்ள, கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழியல் ஆய்வு மரபில், பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் மாணவப் பாரம் பரியமான பேரா.சு.வித்தியானந்தன் பரம்பரை முக்கியமானது. இவரது மாணவர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி மற்றும் நுஃமான் ஆகியோர் உள்ளிட்ட தமிழியல் ஆய்வு இவ்வகையில் தாக்கங்களை உருவாக்கியதாகும்.

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகப் பயிற்சியும் அவர்கள் ஏற்றுக்கொண்ட தத்துவ நிலைபாடும் புதிய தமிழியல் ஆய்வுக்கு வழிகண்டது. ஆனால் இலங்கையில் உருவான இன அழிப்புப்போர், அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது. இலங்கை யில் செயல்படும் அண்மைக்கால தமிழியல் ஆய்வுகள் தொடர்ச்சி அறுபட்டுத் தத்தளிக்கிறது. முறையான பயிற்சி பெற்றவர்களோ குறிப்பிட்ட கருத்து நிலைசார்ந்து செயல்படு பவர்களோ அருகிப்போன சூழல் அங்கு நிலவுகிறது. இனப் போரால் உருவான அவலமாக இதனைக் கருதமுடியும்.

மேலே நாம் உரையாடலுக்கு உட்படுத்திய 1950-1980 அல்லது 1980-1990 காலச் சூழல் சார்ந்த தமிழியல் ஆய்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அநுபவத்தில் 1990க்குப் பிற்பட்ட கடந்த இருபது ஆண்டுகளின் தமிழியல் ஆய்வை எவ் வகையில் மதிப்பிடுவது? மேலே விவரித்த மரபுத் தொடர்ச்சி நடைமுறையில் உள்ளதா? என்ற உரையாடல் அவசியம். இந்த உரையாடலை பேரா.தனிநாயகம் அவர்களின் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தும் தேவை நம்முன் உள்ளது; சமகால நிகழ்வுகள், அரசியல் போக்குகள் ஆகிய பிறவற்றைச் சார்ந்து இதனை வெளிப்படையாகப் பதிவு செய்யும் வாய்ப்பு அரிதாக உள்ளது. தேவைப்படும் சூழலில் விரிவாகவே பதிவு செய்யமுடியும். ஆனால், இக்காலத் தமிழியல் ஆய்வுச் சூழலில் நிலவும் பின்வரும் போக்குகள் கவலை தரும் வகையில் இருப்பதைப் பதிவு செய்வோம். அதுவே பேரா.தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டை நினைவு கூர்வதாக அமையும்.

பின்குறிப்பு : நிறுவனங்கள் சார்ந்த தமிழியல் ஆய்வுச் சூழல் குறித்த பதிவே மேற்கண்டவை. நிறுவனங்கள் சார்ந்தும் நிறுவனத்தை உருவாக்கியும் செயல்படும் பேரா.ஒய்.சுப்பராயலு, பேரா.பா.ரா.சுப்பிரமணியம் போன்றோரின் செயல்பாடுகள் புறனடை.