குறிப்பு : அடிகளார் நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவு இதுவாகும். அவர் தமிழியலுக்கு ஆற்றிய தொண்டும் ஈழ மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்ட மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் இதனை மறுவெளியீடு செய்துள்ளோம். இக்குறு நூலை தந்தை செல்வா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது (1980)

பேராசிரியர் சேவியர் தனிநாயகத்தின் இந்த இறுதிச் சொற்பொழிவு மூலம், அவரது கருத்துநிலையைப் புரிந்துகொள்ள முடியும். வாழ்நாள் முழுதும் எப்படி வாழ்ந்தார் என்பதையும் அறிய முடிகிறது. தமிழில் உருவான தொல்பழம் இலக்கணம் மற்றும் இலக்கியங்கள்வழி தமிழக சமூக வரலாற்றை எவ்வாறு கட்டமைக்க முடிகிறது என்பதை இச்சொற்பொழிவால் அறிய இயலுகிறது. தந்தை செல்வா அறக்கட்டளைச் சொற்பொழிவாக இதனை நிகழ்த்தியுள்ளார். ஏப்ரல் 1980 - 27, 28 நாட்களில் இச்சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மாதங்கள் மட்டுமே அடிகள் வாழ்ந்தார். இறுதிப் பொழிவிலும் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை குறித்தும் அதனைத் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசியுள்ளதைக் காணமுடிகிறது.

இவ்வாண்டின் மூதறிஞர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் நினைவுச் சொற்பொழிவுகளை என்னை நிகழ்த்து மாறு அழைத்தமைக்குச் செல்வநாயகம் நினைவுக் குழுவி னர்க்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அடியேன் ஓய்வு பெற்றிருப்பதாலும், என் கண்பார்வை குன்றியிருப்பதாலும், நூற்கூடம் என்னிடம் இப்பொழுது சிறிதாயிருப்பதாலும், ஆராய்ச்சி விரிவுரைகள் நிகழ்த்த வாய்ப்புகள் குறைந்திருந் தாலும், இப்பெருந்தகையின் நினைவிற்கு அடியேனும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற விருப்பினால் இச்சொற்பொழிவு களை நிகழ்த்த உடன்பட்டேன்.

முப்பது ஆண்டுகளாகத் தமிழினத்தின் ஈடேற்றத்துக்காக ஓர் இயக்கத்தை உருவாக்கி அவ்வியக்கத்தின் பயனாக இந்நாட்டி லுள்ள தமிழரின் மொழி, பண்பாடு, அரசியல் உரிமைகள் காப்பாற்றப்படல் வேண்டுமென உழைத்த பெருமகனாரின் நினைவாகத் தமிழ்த்துறைகளைப் பற்றிய இரு சொற்பொழி வுகளை நிகழ்த்த எண்ணியுள்ளேன். அன்னார் தொடக்கிவைத்த இயக்கம் இன்னும்  வலுப்பெற்று இந்நாட்டில் நாம் முழு உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டுமென்று இறைவன் திருவருளை இறைஞ்சி நிற்கின்றேன்.

இன்றைய கூட்டத்திற்கு என் நண்பர் துணைவேந்தர் வித்தியானந்தன் தலைமை தாங்குவது பற்றியும் மகிழ்ச்சி கொள்கின்றேன். அவர்கள் இந்நாட்டில் தமிழர் பண்பாட்டின் சில துறைகள் வளர்ச்சிபெற வேண்டுமென அரும்பணியாற்றி யுள்ளார். மேலும் அவரியற்றிய “தமிழர் சால்பு” எனும் நூல் தமிழர் பண்பாட்டுத் துறையில் எழுதப்பெற்ற சிறந்த முதல் நூல்களில் ஒன்று. இன்னும் இவ் விரிவுரையின் இறுதியில் தமிழ்த்தலைவர் உயர் திருவாளர் அமிர்தலிங்கம் நன்றியுரை வழங்கப்போவதாக அறிகின்றேன். மூதறிஞரின் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துபவர் அவர். அவர் தலைமையில் நம்மியக்கங் கள் அனைத்தும் வெற்றிபெறல் வேண்டுமென்றும் வாழ்த்து கின்றேன்.

மக்களியல் வல்லுநர் (Anthropologists) பண்பாடு எனும் சொல்லைக் கையாளும் பொருள்களைப் பற்றி நாம் குறிக்க வேண்டியதில்லை. அவர்களின் கருத்தின்படி பழைய மக்களின் வாழ்க்கையை விளக்கும் எல்லாத் துறைகளும் பண்பாடு என்னும் சொல்லில் அடங்கும். சென்ற நூற்றாண்டில் மத்தியு ஆர்ணல்ட் (Mathew Arnold) எனும் நூலாசிரியர் தாம் எழுதிய ஒரு நூலில் இக்காலத்திற்கு ஏற்றவாறு பண்பாட்டுத் துறையை விளக்கினார். இந்த நூற்றாண்டு டி.எஸ். எலியட் எனும் ஆங்கிலப் புலவர் “பண்பாட்டின் வரையறை பற்றிய குறிப்புகள்” எனும் நூலில் பண்பாட்டை இன்னும் விரிவாக விளக்கினார். பண்பாடு என்பது இனிமையும், ஒளியும் என்றும், சிந்தனையின் தொழில் என்றும் அழகிலும் மனித உணர்ச்சி யிலும் ஈடுபாடு என்றும் கூறியிள்ளார்.

நம்மிலக்கியத்தில் பண்பாடு என்னும் சொல் இந்நூற்றாண்டில் தான் ஆங்கில மறிந்த தமிழறிஞரால் உண்டாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று நாம் பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும் துறைகளை நம் முன்னோர் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால் குறித்துள்ளனர். இச்சொற் கள் வெவ்வேறு இடங்களில் வேறு சில பண்பாட்டுடன் தொடர்புள்ள பொருள்களைக் குறித்தாலும் பல இடங்களில் பண்பாட்டையே கருதுகிறது. கலித்தொகையில் “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுவது” என்றும் வள்ளுவத்தில் “பண்புடையார் பட்டுண்டு உலகம்” என்றும் வருவதைக் காண்க.

பண்பாடு உடையவரைச் சான்றோரென்றும், ஒழுக்க முடையோரென்றும் ஒளியோரென்றும், மாசற்ற காட்சியுடையோரென்றும் அழைத்தனர். ஆங்கிலத்தில்  Culture எனப்படும் சொல்லிற்குத் தமிழில் பண்பாடு என்று குறிப்பிடுகின்றோம். ஆங்கிலச்சொல் எவ்வாறு இலத்தீன் சொல்லாகிய Cultura Agri நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து பிறந்ததோ அதுபோல தமிழ்ச் சொல்லாகிய பண்பும் நிலத்தைப் பண்படுத் துவதிலிருந்து தோன்றியிருக்கவேண்டும். உழவுத்தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தை யும் மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான் பண்பாடு என்னும் பொருளில் பண்டைத்தமிழ் இலக்கியங் களில் நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட் பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும்.

ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியம் பயன் படுவதுபோல நாடோடி இலக்கியமும் பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும் செந்தமிழ் - கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் காணலாம். மேலும் ஓவியம், சிற்பம் கட்டிடக் கலை முதலிய கலைகளிலும் ஓரினத்தாரின் பண்பாடு தோன்றும்.

தமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின்கலை களும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை, தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொக, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன.

 தமிழர் பண்பாடு கால அடைவில் சிறிது மாறி வந்துள்ளது. ஆனால், அதனுடைய அடிப்படைக் கொள்கைகள் இத்துணை நூற்றாண்டுகளாக மாற்றங்கள் அடையவில்லை. ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில், சிறப்பாக அவர்களுடைய சமய- சமூகக் கொள்கை கள், தமிழ் நாட்டிலும் பரவின. சமணர், புத்தர், ஐரோப்பியர் தமிழ்நாட்டுடன் கொண்ட தொடர்பாலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆயினும் பிறநாட்டுச் சமயங்களும் மக்களும் தமிழ்நாட்டில் புகுந்த காலத்தில் தமிழ் மரபைக் காத்துவரப் பயின்றனர். தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சமணர். தமிழொழுக்கத்தின் களஞ்சியமாகிய வள்ளுவத்தை இயற்றியவர் சமணர் என்று சிலர் கூறுகின்றனர். தொல்காப்பியரும் சமணரென்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் கருத்து. ஆனால் அக்கருத்துக்கு அவர் போதிய சான்றுகள் தரவில்லை. இந்நூலாசிரியரும் வீரமா முனிவர் போன்ற மேனாட்டாரும் தமிழ் மரபையே தழுவி வாழவும் பாடவும் முயன்றனர்.

நம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எக்காலத்தி லும் புலவர்கள் பாடியிருக்கின்றனர். பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் தமிழின் மறுமலர்ச்சிக்குக் காரணமா யிருந்த எழுத்தாளர் பலர் ஆங்கிலத்தை நன்கு அறிந்திருந் தாலும், மேல்நாட்டு இலக்கியங்களையும், வரலாற்றையும் நன்கு பயின்றிருந்தாலும் அவர்கள் தமிழ் பண்பாட்டை இழக்க வில்லை. மாற்றவில்லை. மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை, சுந்தரம்பிள்ளை, வி.ஜி. சூரியநாராயணசாஸ்திரி என்னும் பரிதிமாற்கலைஞர், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் மு. வரதராசன் போன்றவர்கள் தம் ஆங்கிலப் பயிற்சியால் தமிழர் பண்பாட்டை விளக்கினா ரொழிய அதனை மாற்றவில்லை.

நாகரிகம் என்னும் சொல்லும் பண்பாடும் எனும் பொருளில் இக்காலத்தில் கையாளப்பட்டு வருகின்றது. திருக்குறளிலும், நற்றிணையிலும் முதல் முதல் தோன்றுமிச் சொல் நகர வாழ்க்கையின் அமைப்பையும் பயனையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் (Civilization) என்று கூறப்படும் பொருளைத்தான் நாகரிகமும் குறிக்கின்றது.  City, Citizen, Civilization என்ற சொற்கள் இலத்தீன் மொழியின் Civitus, Civis, Civilisation எனும் சொற்களிலிருந்து தோன்றியவை. அதேபோல இந்த இலத்தீன் சொற்கள் எக்காலத்தில் தோன்றினவோ அக்காலத்திலேயே நகர், நகர நம்பியர், நாகரிகம், என்ற சொற்களும் தோன்றின. சங்க இலக்கியத்தில் நகர், நகரைக் குறிப்பதுடன் ஒரு பெரும் இல்லத்தையும் குறிக்கும். நகரில் சீரடைந்த மக்களை நகர நம்பியர் குறிக்கும்.

சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் நகர நம்பியர் வருவதைக் காண்க. நகர் என்ற சொல் திராவிடச் சொல்தான். வடமொழிச் சொல்லன்று. ஆரியர் வட இந்தியாவைக் கைப்பற்றிய காலத்தில் திராவிட மக்கள் பெரும் நகர்களில் வாழ்வதைக் கண்டு வியப்பு அடைந்தனர். திராவிட மக்களிடமிருந்தே நகர்களை அமைக்கவும் ஆரியர் கற்றுக் கொண்டனர்.

இந்நூற்றாண்டில் நாகரிகம் என்னும் சொல்லையும் பண்பாடு என்ற பொருளில் கையாளுவது மரபாயிற்று. ஆனால் நாகரிகம், நகர வாழ்வையும், நகர வாழ்க்கையால் பெறப்படும் நலன்களையும் குறிப்பதுடன் அறிவியல் துறையால், பொரு ளியல் துறையால் மக்கள் அடைந்துவரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் குறிக்கத்தான் பயன்படுத்த வேண்டும்.

சில வேளைகளில் பண்பாடு எது, நாகரிகம் எது என்று பிரித்துக் கூறுவது எளிதாக இராது. ரேணர் (TURNER) என்பவர் The Great Culture Traditions என்ற நூலில் உலகின் பெரிய நாகரிகங்களையும் பண்பாடுகளையும் விளக்கியுள்ளார். ஆர்ணல்ட் ரொயிம்பி (Arnold Toynbee) என்பவர் The Great Civilization எனும் நூலில் பண்பாடும் நாகரிகமும் என்று கூறுவதும் இயல்பாயிற்று. பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இந்து நாகரிகம் “Hindu Civilization” கிறிஸ்தவ நாகரிகம் என்று கூறும்பொழுது பெரும்பாலும் பண்பாட்டையே கருதுகின்றனர். ஆதலால்தான் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் “Culture and civilization “ என்று இணைத்துப் பாடத்திட்டத்தின் தலைப்பை வெளியிடுகின் றனர். ஆனால் இயன்றமட்டும் இவ்விரு துறைகளையும் பிரித்து நோக்குவது பண்பாட்டினை ஆழ்ந்து ஆராய்வதற்கு வழிவகுக்கும்.

தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள் சிலவற்றைச் சுருக்க மாகக் கூற விரும்புகின்றேன். அவற்றை நம்மிலக்கியங்கள் பலவற்றில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப்பான்மை ஒரு கொள்கை ஆதலால்தான் புறநானூற்றில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் வள்ளுவத்தில் “யாதானும் நாடாமால் ஊராமால்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. விருந்தோம்பல் ஒரு சிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு, என் கடன் பணிசெய்து கிடப்பதே. அகத்திணை புறத்திணை மரபு, மானமென்றால் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத்தூய்மை விடாது முயலல் எனும் கொள்கை, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நிகரற்ற மனநிலை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம் என்பன தமிழர் பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகளென்றே கூறலாம்.

இவ்விலட்சியங்களைத் தமிழ் இலக்கியங்களில் பன்முறை தேற்றம் கொடுத்து வற்புறுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துக்காட்டாக புறநானூற்றில் வரும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற செய்யுளும் “இம்மைச் செய்தது மறுமைக்கா மென” என்ற செய்யுளும் குறிப்பிடத்தக்கவை.

நம்மிலக்கியங்களை நன்கு ஆராய்ந்தால் அவை பண் பாட்டுத் துறைகளை நன்கு பயன்படுத்துவதைக் காண்கின் றோம். தொல்காப்பியர் கருப்பொருளில் பண்பாட்டுத் துறைகள் சிலவற்றைக் கூறுகின்றார். அவற்றுள் வழிபாடும் இசையும் இசைக் கருவிகளும் சில. அகத்திணையியலில் 20ஆம் சூத்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப

இவ்வாறே பண்பாட்டின் கொள்கைகளும் இலட்சியங்களும் எல்லாக் காலத்து இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன.

தமிழர் பண்பாடு கால அடைவில் மாற்றங்கள் அடைந் துள்ளதா எனும் வினாவிற்கு மாற்றம் அத்துணை அடைந்த தில்லை. ஆனால் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். வட ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்திலும் சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடையவில்லை.

பிற சமயங்களைப் போதித்த பார்ப்பனரும் சமணரும் புத்தரும் ஐரோப்பியக் கிறிஸ்தவரும் மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு முறையும், இலக் கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம்பெற்றன. வடமொழியிலுள்ள சமய இலக்கியங்கள் பல சங்கரர், இராமானுஜர், மாதவர் போன்ற தென்னாட்டவரின் மூலமாகத் தென்னாட்டுத் தத்துவங்கள் வடமொழியில் இடம்பெற்றன. சுனித்குமார் சட்டர்ஜி, இந்திய பண்பாட்டின் எழுபத்தைந்து விழுக்காடு - திராவிட பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமணரியற்றிய சிலப்பதிகாரத்தையும், புத்தரியற்றிய மணிமேகலையையும் வீரமாமுனிவரியற்றிய தேம்பாவணியை யும், உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தையும் ஆராயுங் காலை இவர்கள் தம் சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினா லும் தமிழர் பண்பாட்டை எங்ஙனம் விளக்கியுள்ளாரென்பதும் புலனாகின்றது.

இவை நிற்க, தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் சிலவற்றை ஒரு சிறிது ஆராய்வோம்.

பண்டைக்காலம் தொடங்கி தமிழ்மக்கள் மேற்றிசை நாடு களோடும் கீழ்த்திசை நாடுகளோடும் இந்தியாவின் வடபாகத் தோடும், வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அக்காலத் தில் தமிழ்நாட்டின் பட்டையும் மிளகையும், முத்தையும் இன்னும் பல பொருட்களையும் உலகம் விரும்பியுள்ளது.

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு, அதனை பண்டமாற்றத் திற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. கீழ்த்திசை நாடுகட்குச் செல்லவேண்டிய மேற்றிசைப் பண்டம், தமிழ்நாட்டில் இறக்கப்பெற்று வேறு மரக்கலங்களில் கீழத்திசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. இவ்வாறே கீழத்திசைப்பண்டமும் தமிழ் நாட்டில் வைத்து மரக்கலங்களில் மேற்றிசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. மேற்றிசை நூல்களே சங்க இலக்கியத்தைப் போல் இவ்வணிகத்துக்குச் சான்று தருகின்றன.

எனவே இத்தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொயிக் (Stoic) வாதிகள் உரோமையப் பேரரசு காலத்தில் எவ்வாறு ஓர் உலக மனப்பான் மையை வளர்த்தார்களோ அவ்வாறே சங்ககாலத்திற்கு முற்பட்ட காலம் தொடங்கி ஓர் உலக மனப்பான்மை தமிழ் நாட்டில் பரவியுள்ளது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, என்றும் யாதானும் நாடாமால் ஊராமால்” என்றும் கூறுவதற்கு இம்மனப்பான்மை ஊக்கமளித்தது.

மேலும் சமணம், புத்தம் போன்ற சமயங்களும் தமிழ் நாட்டில் வரவேற்கப்பட்டதால் இம்மனப்பான்மை விரிவாகியது. பார்ப்பனர், மொழிபெயர் தேயத்தார், யவனர், புலம் பெயர் மக்கள் தமிழ் மக்களோடு இனிதாக வாழ்ந்து வந்தார்கள்.

இம்மனப்பான்மை ஒரு சில காலங்களில் சமயக்காழ்ப்பால் மாசு அடைத்ததாயினும், அது எக்காலத்திலும் தமிழ் மக்களிடம் வளர்ந்தே வந்துள்ளது. பிற மக்களின் நலத்தைக் கருதும் பண்பு, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்னும் தன்மை இச் சிறப்பை மேலும் வளர்த்தது. இம்மனப்பான்மை வட ஆரியர், கிரேக்கர், போன்றோருடைய பண்டைக் கொள்கைகளுடன் முரண்பட்டேயிருந்தது. பிளேட்டோ, அரிஸ்டோட்டல் போன் றோர் கிரேக்கர் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும், பிற மக்களை நாகரிகம் அற்றவர்கள் என்றும் கூறிவந்தனர். வட ஆரியர் இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையேயுள்ள நிலம் தான் புண்ணிய பூமி என்று கருதினர்.

உலக மனப்பான்மையில் இருந்து தோன்றிய வேறொரு இயல்பினைக் கண்ணோட்டமென்று (Tolerance,Ecumenism) அழைக்கலாம். தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயங்க ளெல்லாம், தத்துவங்களெல்லாம் தமிழ்நாட்டில் தடையின்றிப் போதிக்கப்பட்டன. பெரும் விழாக்களில் தத்துவ வாதிகள், சமயவாதிகள் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டுத் தம் கருத்துக் களைப்பற்றி உரை நிகழ்த்தினர். திருவள்ளுவர் தம் கருத்துக் களைப் பல மூல நூல்களிலிருந்து எடுத்திருக்க வேண்டும். சங்க நூல்கள் பல்வேறு கருத்துக்களுடைய புலவர்களின் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுள்ளன. சமணராகிய இளங்கோ அடிகள் தமிழர் தழுவிய பல பழக்கவழக்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் விரித்துக் கூறியுள்ளார்.

சமணரும், புத்தரும் இசைக்கலை, நடனக்கலை போன்ற கலைகளை வெறுத்தாராயினும் இளங்கோ அடிகள், திருத்தக்கதேவர் போன்றோர் தமிழ்க்கலைகளை நன்கு விரித்துக் கூறியிருக்கின்றனர். திருவள்ளுவர் சமணராக இருந் திருப்பார் என்ற கூற்றுக்கு அவருடைய காமத்துப்பாலும் இல்லறத்தைப் போற்றும் முறையும் முரண்பாடாக இருக்கின் றன. நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணிக்கு உரையெழுதியது போலச் சமணர் எனக் கருதப்படும் இளம்பூரணர் அகத்திணை யியலுக்கு உரையெழுதியுள்ளார்.

இடைக்காலத்தில் வைணவர், சைவர் ஆகிய பார்ப்பன உரையாசிரியர் சமண நூல்களை எத்துணை ஆர்வத்துடன் அவை இலக்கிய நூல்களெனக் கருதி, அவற்றில் மூலங்கட்கு நுட்பமான உரைகளை எழுதியிருக்கின்றனர். பிற்காலத்தில் சமயசமரச கீர்த்தனைகள் என்றும், சமரசக் கொள்கைகள் என்றும் எங்கு உண்மையும் அழகும் உள்ளதோ அங்கிருந்து கருத்துக்களை நூலாசிரியர் எடுத்துத் தந்திருக்கின்றனர்.

பேராசிரியர் சேதுப்பிள்ளை திருக்காவலூர்க் கலம்பகத்தைப் பற்றியும், தேம்பாவணியைப் பற்றியும், சீறாப்புராணத்தைப் பற்றியும் தந்த கருத்துக்களைப் போல வேறு எவரும் எழுதிய தாக நான் அறியேன். திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிறிஸ்துவின் அருள்வேட்டல், புத்தரின் அருள்வேட்டல் போன்ற இலக்கியங்களைப் பாடி இன்புற்று வாழ்ந்தார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயேசுவைப் பற்றிப், புத்தரைப் பற்றிப் பாடியுள்ளார்.

பிற நாடுகளிலிருந்து வந்த சமயக் குரவர் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்து, இக்கண்ணோட்டத்துடன் தமிழர் மரபின்படியே இலக்கியங்களையும், இலக்கணங்களை யும் யாத்தார்கள். வீரமாமுனிவர், கால்டுவெல் ஐயர், போப்பையர் போன்றவர்கள் இம்மனநிலையைக் கடைப் பிடித்து வாழ்ந்தவர்கள்.

தமிழ் பக்தியின் மொழி என்று நான் அடிக்கடி கூறிவரு கின்றேன். ஏனெனில், தமிழிலுள்ள பக்தி இலக்கியங்களைப் போல அழகிலும், ஆழத்திலும், பரப்பிலும் இத்துனை இலக்கியம் வேறெந்த மொழியிலும் இருப்பதாக நான் அறியேன். பரிபாடல் முதலாக, இராமலிங்க சுவாமிகளும் விபுலானந்த அடிகளும் ஈறாக, பக்திப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிறந்தவர்கள். பரிபாடலின்,

யாமிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பால்

அன்பும் அருளும் அறனும் மூன்றும்.

விபுலானந்தருடைய,

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளலடியினைக்கு வாய்த்த மலரெதுவோ

வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

அப்பர் சுவாமிகளின்,

மாசில் வீணையும் எனும் பாக்களைப்பாடி இன்புறாத தமிழ் மக்களில்லை.

இந்தப் பக்தி இலக்கியம் உண்டாகுவதற்கு நம் அகத்திணை இலக்கியம் ஒருவாறு துணையாக இருந்திருத்தல் வேண்டும். இன்று தமிழ் மொழியை ஆராயும்பொழுது பக்தியை உணர்த் தும் சொற்கள் பல அமைவதைக் காண்கிறோம். ஆதலால் சமயப் பொருளற்ற பிற நூல்களிலும் இந்தமொழி ஒலிக்கிறது. எடுத்துக்காட்டாகப் பாரதிதாசன் பாடிய தமிழ் மொழி பற்றிய பாடல்கள் பக்திச் சொற்களை மிகுதியாகக் கொண்டவை. நாயன்மார், ஆழ்வார், சேக்கிழார், கம்பர் போன்றவர்களுடைய பக்திப்பண்பு உலகிலேயே நிகரற்றது.

இப்பக்திப் பண்பினை ஏனைய தமிழ்க் கலைகளிலும் காணலாம். தஞ்சாவூர்ப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், இசைக்கலை, பரதநாட்டியம் போன்றவை பக்தியால் இயற்றப்பெற்றவை. அல்லது பக்தியால் வளர்ச்சி யுற்றவை. இப்பக்தி பிற நாடுகட்கும் பரவியது. இந்தோனிசியா விலிருந்தும் பிறம்பாணான்பானாத்தரான் கோயில்கள், கம்புச்சியாவிலிருந்தும் சில அரண்மனைகள், சிற்பங்கள், தாய்லாந்தில் கொண்டாடப்படும் திருவெம்பாவைத் திருநாள் இத்தமிழ்ப் பக்தியின் பயனென்றே கூற வேண்டும். உலகம் போற்றும் ஆடவல்லாரின் வடிவம் இப்பக்தியின் பயனென் பதை யார் மறுப்பார்? தமிழர் பண்பாடு பிறநாடுகட்குப் பரவுவதற்குப் பல்லவர் சோழர் படைவீரம் மட்டுமல்ல இப்பக்தியும் காரணமாக அமைந்தது.

தமிழர் பண்பாட்டின் பக்தி எங்ஙனம் சிறந்து விளங்கியதோ நீதியும் அவ்வாறு சிறந்து விளங்கியுள்ளது. பாரதியாரின் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் பெற்ற தமிழ்நாடு’ என்னும் கூற்றைச் சிந்திக்கும்பொழுதெல்லாம் அதன் உண்மையை உணர முடிகின்றது. உலகநீதி இலக்கியங் களைச் சிறப்பாக ஆராய்ந்து அரும்பெரும் நூல்களை இயற்றிய அல்பேட் கவைட்சர் என்னும் மகாத்மா திருக்குறளைப் பற்றி எழுதும்பொழுது “திருக்குறளைப்போல் உயர்ந்த கோட்பாடு களைக் கொண்ட ஒரு நூலை இவ்வுலகில் காண்பது அரிது” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறளை அவர் ஜெர்மன் மொழிபெயர்ப்பில் படித்தார். தமிழ் மொழியில் அதனைப் படித்திருந்தால் இன்னும் பன்மடங்கு அதிகமாக அதன் பெருமையை உணர்ந்திருப்பார். திருக்குறளுக்குப் பின் தோன்றிய ஏனைய நூல்களைப்பற்றி நான் குறிப்பிட வேண்டியதில்லை.

தமிழை முதற்கற்ற மேனாட்டார் அனைவரும் நம் நீதி நூல்களையே முதலில் மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை ஞானத்தைப் போற்றினார்கள். ஒழுக்கமென்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அடிப்படை கொள்கையாக அமைந்து, இன்றும் தமிழர் வாழக்கைக்குப் பெரும் அழகையும் மனநிறைவையும் நல்குகின்றது. தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தனி நாடுகளில் வாழ்ந்து செழித்தோங்குவதற்கும், அரசியல் வாழ்க்கைக்கும், இவ்வொழுக்கமே துணையாக அமைந்தது. எனவேதான், போப்பையர் இத்துணை நீதி நூல்களை இயற்றிய மக்களுக்குக் கடவுளின் சிறப்பான அருள் இருத்தல் வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மக்கள் நலக் கொள்கையை ஆங்கிலத்தில் Humanism என்று அழைப்பர். ரெறன்ஸ் (Terence) என்னும் இலத்தீன் புலவர் “நான் மனிதன். மனிதனுக்கு இயல்பான எதனையும் நான் வெறுப்பதில்லை” எனக் கூறிய கூற்றை மேல்நாட்டார் இம்மக்கள் நலப்பண்பின் குறிக்கோளாகப் போற்றுவர். இப்பண்பு நம் பண்பாட்டில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. மனிதனை என்றும் பேணவேண்டுமென்றும், ஒரு செயலால் வரும் பிற நலன்களைக் கருதாமல் நன்மையை, நன்மைக்காகவே செய்ய வேண்டுமென்றும் உணர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர்.

“இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்

அறவிலை வணிகன் ஆஅய்அல்லன்” (புறம். 134) என்றும்,

‘மேலுலகம் இன்றெனினும் ஈதலே நன்று’ என்றும் வற்புறுத்தியுள்ளனர் நம் புலவர்.

பண்டைக்கால இலக்கியங்களில் இவ்வுலக வாழ்க்கையும், மக்களோடு இன்புற்று ஒழுகுவதும், இல்லறத்தின் இனிய நலன்களைக் காண்பதும், வாழ்க்கையின் நோக்கங்களாகக் கருதப்பட்டன புறநானூற்றில்.

உண்டாலம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இவையவதாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இவரே............

புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினுங் கொள்வர்...

அன்னை மாட்சிய னையராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலும் உண்மையானே. (புறம். 182)

என்ற செய்யுளில் தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளைக் காணலாம். சங்க இலக்கியத்துக்கும், வடமொழியில் இயற்றப்பெற்ற பழைய இலக்கியங்கட்கும் உள்ள பெரும் வேற்றுமை இம் மனித நலக் கொள்கையே. ஆதலால்தான் மேல்நாட்டு அறிஞர் தமிழ் இலக்கியத்தின் ‘Life Affirmation‘ - வாழ்க்கை வலியுறுத்தல் எனும் பண்பைப் போற்றுகின்றனர்.

மக்கள் நல பண்பில் சிரிப்பென்பது மக்களின் சிறந்த ஓர் இயல்பு ஆதனால்தான் புலவர்கள் நட்பைப் பற்றியும், சிரிப்பைப் பற்றியும் எப்பொழுதும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இந்நூற்றாண்டின் ஆங்கிலப் புலவர் ஒருவர் பாடுகின்றார்.

‘‘From quiet homes and first beginning

Our to the undiscovered ends

There’s nothing worth the wear of winning

But laughter and the loe of friends’

திருவள்ளுவர் சிரிப்பைப் பற்றிக் கூறும் இடங்கள் நமக்கு வியப்பைத் தருகின்றன.

“நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்”    (திரு. 999)

ஈராயிரம் ஆண்டுகட்கு முன் எந்நாட்டுப் புலவரும் இவ்வாறு கூறியிருப்பரோ என்பது ஐயம்தான்.

மனிதநலப் பண்பிலிருந்து பிறக்கும் ஓர் இயல்பு பிறரன்பு. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்னும் இலட்சியம் எக்காலத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவோ சான்றோ ருடைய பெரும் இயல்பு என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுலகம் உறுதியாக நிலைத்திருப்பதற்கு இத்தகைய கொள்கையுடைய சான்றோர் இருப்பதே காரணம். இந்நூற்றாண்டில் சாதி வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுமென்றும் மக்களினத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டுமென்றும் விளக்கும் இயக்கங்கள் இக்கொள்கையிலிருந்தே தோன்றின. பிறருக்குப் பணி செய்யும் மனநிலை இப்பண்பின் பயனே.

தமிழ் மக்களுக்கு இயற்கையிலிருந்த ஈடுபாடும், இயற்கையை செய்யுளுக்குப் பின்னணியாக அமைக்கும் முறையும், நமக்குப் பெரும் வியப்பைத் தருகின்றது. சங்க இலக்கியத்தையும், இடைக்கால இலக்கியத்தையும் பயில் கின்றவர்கள் தமிழரின் இயற்கை ஈடுபாட்டை ஆழமாக உணர்வார்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் இத்துணை நுணுக்கமாக இயற்கையைப் புலனெறி வழக்கிற்கு அமைத் ததுபோல வேறெந்த இலக்கியத்திலும் அமைந்ததாகத் தெரிய வில்லை. ஐந்திணைக்குப் பண்டைத்தமிழர் கொடுத்த பெயர்கள் அவர்கள் எத்துணை அளவிற்கு இயற்கையோடு வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்றது.

மலையையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று அழைப்பதற்கு எத்துணைக்காலம் சென்றிருக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை மலைச்சாரலில் பூக்கும் இச்செடியை மலைப்பகுதிகட்குப் பொருத்தமான ஒரு பெய ராகக் கருதினார்கள். இவ்வாறே பிற நிலங்கட்கும் பெய ரிட்டனர். மலர்களையும், மாலைகளையும் அவர்கள் பயன் படுத்திய முறை அவர்களுடைய அழகு ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது. அன்பிற்கும் மலர்களைக் கையுறையாகக் கொடுத்தனர். போரின் வெவ்வேறு பிரிவுகட்கும் வெவ்வேறு அடையாளப் பூக்களைக் கையாண்டனர். நம் பழைய இலக்கியங்களில் முல்லையைப் பற்றியும், காந்தளைப் பற்றியும் கொன்றையைப் பற்றியும் புகழும் செய்யுட்கள் பெருமின்பம் தருகின்றன. முல்லை சார்ந்த கற்பினள் என்றும், முல்லை நாறும் கற்பினள் என்றும் வருமடிகளில் முல்லைமலர் எவ்வாறு கற்பிற்கு அடையாள மலராக அமைந்தது என்பதைக் காட்டுகின்றது. முல்லை வரை அணிசெய்யப் பலமுறைகளைக் கையாண்டனர். புறநானூற்றில் வருமிந்தச் செய்யுள் நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கத் தகுதிவாய்ந்தது.

இளையோர் சூடார், வளையோர் கொய்யார்

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான், பாடினி அணியாள்

ஆண்மை தோன்ற ஆடவர்க்கடங்கத

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.     (புறம். 12)

தமிழின் மறுமலர்ச்சி காலத்திலும் இவ்வியற்கை ஈடுபாடு குறையவில்லை. பாரதியார், பாரதிதாசன், தேசிகவிநாயகம் பிள்ளை போன்றோருடைய இயற்கை ஈடுபாடு அவர்கள் பாடல்களில் தெளிவாகத் தோன்றுகின்றது. வேதநாயகம் பிள்ளை மிக அழகாக இயற்கையையும் இறைவனையும் இணைத்துப் பாடியுள்ளார்.

கதிரவன் கிரணக் கையாற்

கடவுளைத் தொழுவான் புட்கள்

சுதியடும் ஆடிப் பாடி

துதி செயும் தருக்கள் எல்லாம்

பொதி அவர் தூவிப் போற்றும்

பூதம் தம் தொழில் செய்தேத்தும்

அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும்

அகமே நீ வாழ்த்தா தென்னே.

நம் மக்கள் நம் பண்பாட்டிலும் இயற்கை ஈடுபாட்டினை இழந்துவிடுதலாகாது. மலர்களையும், மாலைகளையும் இறை வழிபாட்டிற்கும், வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகட்கும் தொடர்ந்து பயன்படுத்தி வருதல் வேண்டும். நம்மில்லங்களில் மல்லிகை முல்லை மலர்ச் செடிகளை வளர்த்துப் பேணுதல் வேண்டும்.

தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருந்த அரசுகள் வெவ்வேறு அரசுகளாக இயங்கத் தமக்குள் சிலவேளைகளில் போரில் ஈடுபட்டிருந்த போதிலும் தாம் அனைவரும் ஓரினத்தைச் சார்ந்தவரென்றும் தமிழ்மொழி தம்மை இணைப்பதாகவும் கருதி வந்தனர். பெருநில மன்னரும் குறுநில மன்னரும் தம் எல்லைகட்குள் அரசுசெலுத்தி வந்தாலும் தம்மனைவரின் நாட்டையும் தமிழகமென்றும், பொதுமை சுட்டிய மூவருலக மென்றும் அழைத்தனர். தமிழ்மொழியே அன்னாருடைய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுத்தது. தமிழ் நாட்டின் எல்லைக்கப்பால் இருந்த நாடுகளை “மொழிபெயர் தேயம்” என்று அழைத்தனர். புறநானூறும் சிலப்பதிகாரமும் இவ்வாற்றலைப் புலப்படுத்தும் இடங்கள் பலர். கனகவிஜயர் தமிழர் வீரத்தை ஏளனம் செய்த காலை.

“தென்தமிழாற்றல் அறிந்திலராங்கு” என்று கூறிச் சேரர் வடநாட்டின் மீது படையெடுத்தனர். தமிழ் மக்களுக்குத் தம் சொந்த அரசின் பற்றோடு, தமிழ்நாட்டுப்பற்று என்னும் எல்லாத் தமிழ் அரசுகளையும் அடக்கியபற்று இயல்பாக அமைந் திருந்தது. தமிழ்ப்பாணரும், புலவரும் குறுநில மன்னரிடமும் பெருநில மன்னரிடமும் சென்று அன்னாரை வாழ்த்திப் பரிசில் பெற்றனர்.

இளங்கோ அடிகள் மூவேந்தரின் ஒவ்வொரு நாட்டின் சிறப்பையும் பாடியுள்ளார். நாயன்மார், ஆழ்வார் வடமொழி இலக்கியத்திலிருந்து, சமயக்கொள்கைகள் சில வற்றைப் பயின்றாலும் தமிழ்நாட்டுப் பற்றையும் அவர்கள் தெளிவாகத் தம் பாடல்களில் காட்டியுள்ளனர். இவ்விரு வகைப்பற்று நமக்கும் ஒரு பாடமாக அமைகின்றது. ஈழநாட் டில் வடபகுதியும், கிழக்குப் பகுதியும், மலைநாட்டுப் பகுதியும் தம் தனித்தனி இயல்புகளைப் பாராட்டி வந்தாலும் தமிழ் மக்கள் என்ற முறையில் பண்டைக்கால ஒற்றுமை முறையை நாம் தழுவ வேண்டும்.

தமிழ் மக்கள் இத்துனை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச்சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கை களையும் அவர்கள் கடைப்பிடித்தே வந்தனர். இன்றும் கடைப்பிடித்தே வருகின்றனர்.

நம்மிலக்கியத்திலும் கலைகளிலும் தோன்றும் தாய்மொழிப் பற்றினைப் பற்றி நான் விரிவாகக் கூறவேண்டியதில்லை. சேக்கிழாருடைய பெரியபுராணத்தை நான் படிக்கும் பொழு தெல்லாம் அவருடைய உருக்கம் நிறைந்த தமிழ்ப்பற்று என் னுள்ளத்தைக் கவர்கின்றது. தமிழ் என்ற சொல் வருமிடங் களிலெல்லாம் அழகும் அன்பும் நிறைந்த அடைமொழிகளை அமைத்தே கூறுவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய மறுமலர்ச்சி இம்மொழிப்பற்றை இன்னும் விளக்கமாக எடுத்துக்காட்டி யுள்ளது. வேதநாயகம் பிள்ளை, பரிதிமாற்கலைஞன், சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் போன்றவர்கள் இப்பற்றினைத் தம் நூல்களில் தெளிவாகக் காட்டுகின்றனர். பேராசிரியர் சேதுப்பிள்ளையின் நூல்களில் தமிழில் இனிமை பக்கந்தோறும் இனிக்கின்றது. ஆயினும் இம்மொழிப் பற்றினை பாரதியாரும் பாரதிதாசனும் என்றும் மறக்கமுடியாத செய்யுட்களில் பாடியிருக்கின்றனர்.

பாரதியாரின் ‘செந்தமிழ் நாடென்னும்’ செய்யுள் வரலாற்று உண்மை நிறைந்த அரிய செய்யுள். அவருடைய ‘யாமறிந்த மொழிகளிலே’ என்னும் செய்யுள் தமிழர்கட்கு எழுச்சி தரும் செய்யுள். இவ்விரு செய்யுட்களையும் நம் சிறுவருடைய பாட நூல்களிலே எது காரணம் பற்றி சேர்க்காமலிருக்கிறார்களோ நானறியேன். நம்மொழிப் பற்றையும் நாட்டுப்பற்றையும் குறைப்பதற்காகவே இவ்விருட்டடிப்பு ஒரு சூழ்ச்சி என்று கருதுகின்றேன்.

தமிழ்நாடும் தமிழ் அரசுகளும் இத்துனை நூற்றாண்டுகளாக உலக வரலாற்றில் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக இருந்தது தமிழரின் நீதி தழுவும் ஆட்சிமுறையே, “நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” - என்ற குறிக்கோளும், “மாதவர் நோன்பும், மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனின் இன்றாம்” - என்ற கொள் கையும் ஆட்சிக்கு அடிப்படையாக இருந்த கொள்கைகள்.

தமிழராட்சி முறைகளைக் கூறுவதென்றால் இச்சொற்பொழிவு நீளும். ஆயினும் ஆட்சியமைப்பும் பண்பாட்டின் ஒரு பகுதி யாதலால் அதைக் குறிப்பிட விரும்புகின்றேன். மார்க்கோ போலே என்ற இத்தாலியர் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில் சோழருடைய ஆட்சியையும் தமிழ்நாட்டு வாணிகவளத்தையும் கண்டு “சோழநாடு இந்தியாவின் மிகப் பெருமை வாய்ந்த உன்னத நாடு” என்று குறிப்பிட்டார்.

கவின்கலைகள் பண்பாட்டில் சிறந்த இடம் பெறுகின்றன. தமிழ் மக்கள் எழுப்பிய கோயில்கள், அமைத்த கோபுரங்கள், செதுக்கிய சிலைகள், வளர்த்த இசையும் நாட்டியமும் அவர்க ளுடைய அழகுக் கலையின் ஈடுபாட்டுக்குச் சான்றுகளாக மிளிர்கின்றன. ரொடான் (Rodin) என்னும் பிரான்சிய நாட்டுச் சிற்பி ஆடவல்லாரின் சிலையை வியந்து போற்றியுள்ளார்.

இவ்வாறு நம்மெல்லாக் கலைகளும் உலகின் மதிப்பைப் பெற்றுள்ளன. நம் மக்களின் கலையீடுபாடு குறைந்து வருவ தற்கு நாம் ஒருபோதும் இடமளித்தல் ஆகாது. ஈழ நாட்டில் எத்தனையோ கட்டிடச் செல்வங்களை அந்நியராட்சிக் காலத்தில் நாம் இழந்துள்ளோம். மீண்டும் அழகுச் சின்னங்களை நிறுவுவது ஒரு பெரும் தொண்டாகும். அத்தகைய ஒரு சின்னத்தைத் தந்தை செல்வாவின் நினைவுக்கு நம் தலைநகரில் நிறுவியது போற்றத்தக்கது.

தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இந்திய வரலாறு தெளிவான விளக்கத்தை அடைகின்றது. ஒரு காலத்தில் சிந்துவெளி நாகரிகம் என்று நாம் அழைக்கும் நாகரிகம் இந்தியா எங்கும், இலங்கை எங்கும் பரவியிருந்தது என்பதை ஆராய்ச்சி மேலும் மேலும் காட்டுகின்றது. தமிழர் சமயம், தமிழர் கலைகள், பிற்காலத்தில் காட்டும் இயல்புகள், மொகஞ்சதாரோ - ஹாரப்பா நகர்களின் கலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெளிவாகின்றன. சென்ற சில ஆண்டுகளாக இந்திய பண்பாடும் நாகரிகமும் பெரும்பாலும் திராவிட மக்களுடைய பண்பாட்டையும் நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொண்டவை என்ற கருத்து இன்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

சுனித்குமார் சட்டர்ஜி, தம்மிறுதி நாட் களில் இந்தியாவின் பண்பாட்டில் எழுபத்தைந்து விழுக்காடு திராவிடப் பண்பாடு என்று கூறியுள்ளார். அவ்வாறே பிரான்ஸ் நாட்டு அறிஞர் பேராசிரியர் ஜீன் பீலியோசா இந்தியாவிற்குத் திராவிட மக்களால் கொடுக்கப்பட்ட நன்மைகள் இன்னும் முற்றாக ஆராயப்படவில்லை என்று எழுதியுள்ளார்.

தமிழருடைய பண்பாட்டைக் கிரேக்கர், உரோமர் போன்றோருடைய பண்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க நம் மக்கள் விரும்புகின்றனர். நம் பண்பாட்டினைப் பிறருடைய பண்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அத்துணை எளிதன்று. நம்மிலக்கியங்கள் பலவற்றையும், வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றையும் நாம் இழந்து விட்டோம். தமிழர் பண்பாட்டின் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இன்னும் எவ்வளவோ இட முண்டு. நாகரிகங்களை ஒப்பிடுவது எளிது. பண்பாட்டை ஒப்பிடுவது அத்துணை எளிதன்று. கிரேக்கர் இயற்றிய நாடகங்களைப் போல் நமக்கு நாடகங்கள் கிடைக்கவில்லை.

அவர் சில காலத்தில் நிறுவிய குடியாட்சியைப் போல் நம் தமிழ்நாட்டில் நாம் நிறுவியதாகத் தெரியவில்லை. அவர்க ளுடைய சிந்தனையாளர் பிளேட்டோ, அரிஸ்டோட்டில் எழுதிய உரைநடை நூல்களைப் போல் நமக்கு நூல்கள் கிடைக்கவில்லை. உரோமர் சட்டத்தை வளர்த்தவர்கள் மாபெரும் பேரரசை நிறுவியவர்கள். ஆயினும், நாமும் சோழராட்சியும், திருவள்ளுவர், இராமானுஜர் போன்ற தத்துவஞானிகளையும் எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.

பண்பாடு காலக்கிடையில் மாற்றம் அடைவதா என்றும் பலர் வினவக்கூடும். பண்பாட்டைப் பேணிவராதிருத்தல் அதுமாற்றம் அடைதல் கூடும். தமிழ் மக்களோடு அக்காலத்தில் தொடர்பு கொண்டு வணிகம் செய்த எத்தனையோ மக்களின் பண்பாடும் நாகரிகமும் அழிந்துபட்டன. எகிப்தியர், பாபிலோனியர், அசிரியர் போன்றோருடைய பண்பாடு எங்கே? நாகரிகம் எங்கே?

கீழ்த்திசை நாடுகளில் சாம்பர் என்ற இனத்தவர் மாபெரும் மாளிகைகளையும் அரண்மனை களையும் தமிழர் மரபினைத் தழுவி நிறுவினர். ஆனால் கம்புச்சியா இன்று எந்நிலையில் உள்ளது. தமிழரோ ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தம் பண்பாட்டைக் காப்பாற்றி வந்துள்ளனர். அவர்களுடைய நாகரிகம் மேல்நாட்டுச் செல்வாக்கால் மாற்றமடைந்திருந்தாலும் பண்பாடு சிறிய அளவில்தான் மாற்றமடைந்துள்ளது.

இருபத்தைந்து ஆண்டுகட்கு முன், 1956ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் “தமிழர் பண்பாடும்” - அதன் சென்றகால நிலையும் - இக்கால நிலையும் - வருங்கால நிலையும்” என்ற பொருள் பற்றி விரிவுரையன்று நிகழ்த்தி னேன். அந்நாட்கள் தமிழ் மொழியை ஒதுக்கி தனிச்சிங்களமே வேண்டுமென்ற இயக்கம் பரவி வந்த காலம்.

நாட்டில் ஒற்றுமையை விரும்பித் தமிழுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டுமென்று தமிழ் மக்களனைவரும் ஒரே குரலெழுப் பினர். இன்று இருபத்தைந்து ஆண்டுகட்குப்பின் நாம் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளோம். நம் உரிமைகள் அனைத்தையும் இழந்து வாழ்கின்றோம். தந்தை செல்வா, ஈழத் தனிநாட்டை - தமிழ் ஈழத்தை - அக்காலத்தில் கேட்கவில்லை. ஆனால் நமக்கு இத்துணை ஆண்டுகளாக இழைத்து வந்த தீமைகளால் தனிநாட்டு கேட்கத் தூண்டப்பட்டோம்.

நம்மிலக்கியம், நம் கலைகள், நம் வாழ்க்கை வாழ வேண்டு மாயின் வளர வேண்டுமாயின், பண்பாட்டிற்கு ஏற்ற அமைதி யான சூழ்நிலை வேண்டும். நம் அன்றாட வாழ்க்கைக்கும் உரிமைகட்கும் இடையறாது போராடிக் கொண்டிருக்கும் வேளையில் நம் பண்பாட்டைப் பேண உரிய வாய்ப்புகள் கிடையாது.

கலைகள் வளர்வதற்கு அரசின் ஆதரவும் தேவை. தனிப்பட்ட முறையில் மக்கள் எவ்வளவு உழைத்தாலும், இத்தகைய ஆதரவு இல்லாவிடில் மக்கள் தளர்ச்சி கொள்வார்கள். தம் நாடாளு மன்ற உறுப்பினர் எத்தனைமுறை அரசுகாட்டும் பாகுபாட்டைப் பற்றி முறையிட்டிருக்கின்றனர். தமிழ் மாவட்டங்களில் புதைபொருளாராய்ச்சி பற்றி அரசு விரும்புவதில்லை.

நம் கல்விக் கழகங்களில் தமிழர் வரலாறு பற்றிப் பாடநூல்கள் கூறுவதில்லை. எத்தனையோ முறைகளில் நம் பண்பாட்டைக் கைவிட மறைவாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். நம் மக்கள் விழிப்பாயிருந்து நம் சிறுவர்க்கும், இளைஞர்கட்கும் தமிழிலக்கியத்தின் சிறப்பையும், கலைகளின் சிறப்பையும் உணர்த்துதல் வேண்டும். நம் பண்பாட்டின் பழக்கவழக்கங் களைக் குடும்பங்களில் கைவிடாது வளர்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் ஈழவளநாட்டில் விஜயன் வருமுன்னரே வாழ்ந்து வந்தனர். விஜயன் வந்தபொழுதே பெரும் நாகரிக மடைந்த மக்கள் ஈழ நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதை மகாவம்ச நூலே சான்று. தமிழர் பண்பாடு இந்த நாட்டில் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொடங்கி தனிப் பண்பாடாக வளர்ந்துள்ளது.

 தமிழ் மக்கள் இந்நாட்டில் தனிஇனமென்றும், இரு இனங்கள், இரு மொழிகள் கொண்ட நாடு இதுவென்றும் கூறுவதற்கு 1956ஆம் ஆண்டு பல வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாண்டில் அடியேன் எழுதிய கட்டுரைகள் ‘Language and Liberty in Ceylon’’ என்னும் சிறு நூலில் இக்கருத்து வற்புறுத்தப்பட்டுள்ளது. தனிச்சிங்களம் சட்டமாக இருக்குமட்டும் இவ்விரு இனங்களின் ஒற்றுமை வாழ்க்கை கைவிடாது. தமிழ்மொழி இந் நாட்டில் ஆட்சி மொழியாகவும் அரசியல் மொழியாகவும் இருந்தால்தான் தமிழ் மக்கள் ஒருவாறு ஆறுதலடைவர்.

வரலாறு வாழ்க்கையின் ஆசிரியன். ஐரிஷ் மக்கள் நானூறு ஆண்டுகளாகத் தம் பண்பாட்டைக் காப்பாற்றப் போராடி இறுதியில் வெற்றி பெற்றனர். வெல்ஷ் மக்கள் நானூறு ஆண்டுகளாகத் தம்மொழிக்காகவும், பண்பாட்டிற்காகவும் இயக்கங்களை வளர்த்து இன்று ஒருவாறு சில துறைகளில் விடுதலையை அடைந்துள்ளனர். இவ்வாறே பெல்சியத்தில் பிளெமிஸ் மக்களும், பின்லாந்தில் பினிஸ் மக்களும், ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் இன்னும் பல இனத்தாரும் இயக்கங்களை நிறுவிச் செயற்பட்டு வருகின்றனர். நம் தந்தை செல்வா காட்டிய அகிம்சைவழியில் நாம் செயல்பட்டால் வெற்றி காண்போமென்பது திண்ணம். மிக்க நன்றி.

பேராசிரியர் தனிநாயகம் வாழ்க்கைக் குறிப்புகள்

  1. - தந்தை:கென்றி தானிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை
  2. - தாய்: செசில் இரசம்மா பஸ்தியாம்பிள்ளை