கேரளத்தின் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சமூகம்,அரசியல், பொருளாதாரம்,கல்வி, கலை,இலக்கியம், பண்பாடு முதலிய துறைகளில் ஏற்பட்ட முக்கியமான அசைவுகள் குறித்த பார்வைகளை அறிமுகம் செய்தல் என்ற நோக்கத்துடன் இவ்விதழ்ப் பதிப்பு வெளி வருகின்றது. ஆனால் ’கேரளத்துவம்’ என்ற பெருங்கதையாடலுள் அனேகம் கிளைக்கதையாடல்கள் இருக்க அவை ஒரே சமயம் பல உருவங்களோடும் பல குரல்களோடும் இருப்பது இயல்பு. ஆகவே, ’கேரளம் இன்று’ என்ற தலைப்புக்குள் அடக்கி அளிக்க இயல்கிற கட்டுரை/ஆய்வுப் படைப்புகளைத் தேர்வு செய்தல் மிகமிக சிக்கலாகவே இருந்தது. இருந்தாலும் பிரதிநிதித்துவ இயல்புடையது என்ற புரிதலுடன் தேர்வுசெய்யப்பட்ட பல கட்டுரைகளில் இருந்து இதழ்ப்பதிப்பின் பக்கஎல்லை என்ற வரம்புக்குள் நின்று இங்கு சிலவற்றை மட்டுமே உள்ளடக்க முடிந்துள்ளது. கேரள சமூகத்தை ஒரு வெளிச்சமூகத்திற்கு அறிமுகம் செய்தல் என்பதே நோக்கம்.

’கேரளத்துவம்’/கேரளத் தன்மை எனும் கற்பிதம் நூற்றாண்டு களின் வளர்ச்சி வரலாற்றைக் கொண்டது.பல நூற்றாண்டுகளாக பல்வேறு பண்பாட்டு அசைவுகளை உள்ளிணைத்து கேரளத்துவம் உருப்பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு கூறுகளில் அதற்கு நேர்ந்த வளர்ச்சி மாற்றங்களை வரலாறு பதிவு செய்துள்ளது. போராட்ட இயல்பும் விமர்சனப் பார்வையும் கேரளவாழ்வில் அன்றாட நிகழ்வுகளிள் ஒன்று. கேரளத்துவம் என்றொரு சார்பற்ற இருப்பு உரிமை கோர இயலாதது எனினும் அச்சிந்தனைக்கு வழிநடத்தக்கூடிய சில கூறுகள்/ இடங்கள் இல்லாமலில்லை.அதனால் மட்டுமே ‘கேரள மாதிரி’ எனும் கருத்தாக்கம் உருப்பெற்றுள்ளது. இந்திய அளவில், ஒருவேளை சில தருணங்களில் பிற வளர்ச்சிபெற்ற நாடுகளுக்குக்கூட முன்மாதிரி யாகத் திகழும் சில நிகழ்வுகளைக் கேரளம் பங்களித்துள்ளது. கல்வி, உடல்நலம் போன்ற துறைகளில் கேரளம் கடந்த ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்கள் அதற்குச் சான்று.

வளைகுடா மலையாளிகள் கேரள வாழ்வின் புறச்சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம் கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள். பின் - நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலையாக்கம், சூழலியம்,நவ வரலாற்றியம் போன்ற நவீன சிந்தனைமுறைகளுக்கு கோட்பாட்டு அடித்தளம் இக்காலத்தில்தான் உருவாகி வளர்ந்தது. இவை மலையாளிகளின் கருத்து வெளியீட்டுமுறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கி யுள்ளது. இரசனையின் புது அழகியல் உருவாகி வந்தது. மொழியில் நிகழ்ந்த தேடல்களால் சொற்களின் மறுகரை தேடப்பட்டது.கேரளப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் படைப்பியல்புடன் அணுகும் முனைப்பு ஏற்பட்டது. ஓவியம், சிற்பம், திரைப்படம், நாடகம், இலக்கியம், இசை முதலிய அனைத்துத்துறைகளிலும் சோதனை முயற்சிகள் நிகழ்ந்த வண்ணமிருந்த காலம் இது. தாராளமயமாக்கம், உலகமயமாக்கக் கொள்கைகள் உலகமக்கள் மீது ஏற்றிவைத்த புதுப் பொருளாதாரச் சுமை பற்றி பெரும் விமர்சனங்கள் எழுந்தன. நீர் ஆதாரங்களின் சுரண்டல், சுழலியல், உலக வெப்பமாதலுக்கு எதிரான புதிய சிந்தனைகளுக்கு கேரளம் முகம்கொடுத்தது. சுருக்கமாக, கேரளத்துவத்தின் வரலாற்றுப் பரிமாணங்களைத் தேடும்வேளையில் மேற்குறிப்பிட்ட பொருண்மைகளின் மீதான பார்வைகள் தவிர்க்க இயலாதவை. இதுபோன்ற பார்வைகள் அளிக்க இயல்கின்ற மலையாள சமூகப் பண்பாட்டின் நிலவியல் இங்கு பதிவாக்கம் பெறுகின்றது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் கேரளத்தில் நிகழ்ந்துள்ள கலை இலக்கியம் பண்பாடு அரசியல் பொருளாதாரம் ஆகிய சமூகக் களங்களில் நேர்ந்துள்ள மாற்றங்களைப் பதிவுசெய்ய ’மாற்றுவெளி’ விரும்புகிறது என இவ்விதழுக்கான பொருண்மை குறித்துப் பேராசிரியர் வீ.அரசு எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இவ் வாய்ப்பை எங்களுக்குப் பணித்தமைக்காக அவருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றோம்

இவ்விதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள்; கெ.என்.கணேஷ், கெ.எம்.கிருஷ்ணன், பாலசந்திரன் சுள்ளிக்காடு, பி.பி.ரவீந்திரன்.,சி.கோபன், அஜயகுமார்,கெ.பி.கண்ணன், ஏ.டி.மோகன்ராஜ், கெ.ஏ.ஜெயசீலன் ஆகியோரின் ஒத்துழைப்புக்கும் மொழியாக்கம் மற்றும் வெளியீட்டனுமதிக்குமாக ஒவ்வொருவருக் கும் தனித்தனியாக நன்றியை தெரிவிக்கின்றோம். இவ்விதழில் இடம்பெற்ற கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாளர்கள்: த.விஜயலட்சுமி, வே.இரவி, பிரதீப்குமார், பி., பிரீத்தா.ச, லீமா மெட்டில்டா. அ, காவேரி.ந ஆகியோருக்கு நன்றிகள்.

இவ்விதழுக்காகத் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள் பல. அவை அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன. கேரளப் பொதுக்கல்வி, பெண்ணியம், திரைப்படம், தலித்தியம் என்று பலபொருண்மைகளில் அமைந்த பல கட்டுரைகள் மொழிபெயர்க்கப் பட்டன. ஆனால் அவை அனைத்தும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் அக் கட்டுரைகளை மொழிபெயர்த்தளித்த பணிக்காக டி.எம்.சல்மா மகஜபீன், ஏ.சுஜானா பானு, க.கதிரவன், ஷைனி, கலைவாணி, ஆனந்த் சச்சின் ஆகியோருக்கு நன்றிகள்.

- ந.மனோகரன் & சஜிவ்குமார்.எஸ் ,அழைப்பாசிரியர்கள்