தொகுதி 1 : சென்னை இலௌகிக சங்கம் (1878-1888)

தத்துவ விவேசினிThe Thinker இதழ்கள் வழிப் பதிவுகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சூழலில் செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கம் என்னும் அமைப்பு குறித்து யாரும் அறியாத சூழல் இதுவரை நிலவிவந்தது. இப்பொழுது அவ் வமைப்புத் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்தும் வகையில் சென்னை இலௌகிக சங்கம் (1878 - 1888) தத்துவவிவேசினி – The Thinker  இதழ்கள் வழிப் பதிவுகள் என்பதாக இம்முதல் தொகுதி அமைகிறது. இத்தொகுதியில் இதுவரை அறியப்படாத நாத்திக இயக்கத்தின் கோட்பாடுகள், இயக்கத்தின் அமைப்பு விதிகள், செயல்பட்ட முறைமைகள் ஆகியவை மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தத்துவ விவேசினி மற்றும் The Thinker ஆகிய இதழ்களிலிருந்து சென்னை இலௌகிகசங்கம் தொடர்பான விவரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத் தொகுதியில் தமிழில் 262 பதிவுகளும் ஆங்கிலத்தில் 161 பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. சென்னை இலௌகிக சங்கம் குறுநூல் வெளியீட்டு அமைப்பு ஒன்றையும் கொண்டிருந்தது. அவ்வமைப்பின் மூலம் பல நூல்கள் வெளியிடப்பட்டன. அவர்களின் முதல் வெளியீடான வருணபேதச் சுருக்கம் (1885). அந்நூல் பின்னர் வருண பேத விளக்கம் என்னும் பெயரில் இரண்டு முறை அச்சிடப்பட்டுள்ளது. வருண பேத விளக்கமே இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுதி 648 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 2 : தத்துவம், கடவுள், நாத்திகம்

சென்னை இலௌகிக சங்கம் என்பது நாத்திக கருத்துப் பிரச்சார சங்கமாகும். இதற்கென அவர்கள் தத்துவ விசாரிணி, தத்துவ விவேசினி,  ஆகிய இதழ்களை நடத்தினர். தத்துவ விவேசினி Philosophic Enquirer, The Thinker இதழில் கடவுள் மறுப்பு எனும் கருத்து சார்ந்து  உருவாகும் நாத்திகக் கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட 242 கட்டுரைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இயற்கை அறிவும் பகுத்தறிவும், ஆஸ்தீக நாஸ்தீக சம்வாதம், கடவுள் இலக்கணம், மெய்யறிவு போன்ற பிற தலைப்புகள் கடவுள் இருப்பைக் குறித்த கேள்வியை முன்வைக் கின்றன. கடவுள் இருப்பைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கும் கோட்பாடு களைச் சங்கா நாஸ்திகம் என்னும் தலைப்பில் இலௌகிக சங்கத்தினர் பயன்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். தங்களைச் சுயசிந்தனை யாளர்கள் என்று அழைத்துக் கொண்டு சுயாக்கியானிகள் என்ற பெயரில் இயங்கிய இவ் லௌகிக சங்கத்தினர் உலகம் தழுவிய நாத்திக உரையாடலைத் தமிழ்ச் சூழலுக்குக் கொண்டுவந்தவராவர். இக்கருத்தினைப் புரிந்து கொள்ளும் வகையில் தொகுதி இரண்டில் அமைந்துள்ள கட்டுரைகள் உள்ளன. இத்தொகுதி 487 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 3: சாதி, பெண்கள், சமயம்

சென்னை இலௌகிக சங்கம் அடிப்படையில் வருணக் கோட்பாட்டை  எதிர்க்கும் அமைப்பாக இருந்தது. மனுநீதியை கடுமையாக விமர்சனம் செய்தனர். இங்குச் செயல்பட்ட மதங்கள் அனைத்தையும் மறுத்தனர். அவை குறித்த விரிவான விமர்சனங் களைச் செய்தனர். மதத்தின் மூலம் ஏற்படும் கொடுமைகளை விரிவாக எழுதினர். தமிழ்ச் சூழலில் புதிதாக உருவான பிரும்ம ஞான சபையைத் தீவிரமாக விமர்சனம் செய்தனர். இந்த வகையில் இத்தொகுதியில் 270 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை இந்து மதம், கிறித்தவ மதம், இசுலாமிய மதம், பிரும்மஞான சபை போன்ற அமைப்புகள் ஆகிய அனைத்திலும் உள்ள மூட நம்பிக்கைகளையும் அறிவுக்குப் புறம்பான கருத்துகளையும் விரிவாக விமர்சனம் செய்திருப்பதைக் காணமுடிகிறது. வெகுமக்கள் மூட நம்பிக்கை சார்ந்து செய்த பல்வேறு சடங்குகளையும் விமர்சனம் செய்துள்ளனர். இத்தொகுதியில் நாத்திக மரபின் செழுமையான செய்திகளைப் பதிவுசெய்திருப்பதாகக் கருதமுடியும். இத்தொகுதி 469 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 4: காலனியம், விஞ்ஞானம்,மூடநம்பிக்கை

காலனியம், விஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் தலைப்பில் அமைந்த இந்தத் தொகுதியில் 477 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ச்சூழலில் காலனியம் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகுதியாகும். காலனியம் உருவாக்கிய கல்வி, அச்சுமரபு ஆகியவைபுதிய புதிய தகவல்களைத் தமிழ்ச் சூழலுக்குக் கொண்டுவந்ததை அறிகிறோம். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில்உருவான அறிவியல் மாற்றங்களைத் தமிழ்ச்சூழலுக்கும் காலனியம் தான் கொண்டுவந்தது. இவ்விதம் உருப்பெற்ற மாற்றங்களை இலௌகிக சங்கத்தினர் எவ்வகையில் தமது இயக்கப்பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை இத்தொகுதியில் காணப்படும் கட்டுரைகள் மூலம் அறியமுடியும். இத் தொகுதியில் உள்ள அறிவியல் செய்திகள் குறித்த கட்டுரைகள் நவீன அறிவியலைத் தமிழுக்குக் கொண்டுவந்ததை காட்டுவதாக அமைகின்றன. சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடநம்பிக்கைகளை அறிவியல் கண்டுபிடிப்புகளே மறுத்தன. இந்த அடிப்படைக் கருதுகோளை இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளின் மூலமாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தொகுதி 648 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 5: Atheism and Theism

Atheism and Theism என்னும் ஆங்கிலத் தலைப்பில்  அமைந்துள்ள இத்தொகுதி The Thinker  என்னும் ஆங்கில இதழில் வந்த நாத்திக மற்றும் ஆத்திக மரபுகளைப் பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் 356 ஆங்கிலக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் உலகம் தழுவிய  அளவில் நாத்திக மரபு எவ்வகையில் உருப்பெற்று வளர்ந்து வந்துள்ளன என்பதை விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். கிறித்தவ மதம் எவ்வகையான மூட நம்பிக்கைகளை பரப்பி அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்பட்டது என்பதை இத்தொகுதி யில் உள்ள கட்டுரைகளின் மூலம் அறிகிறோம். அதைப் போலவே பிரும்ம ஞான சபையினர் பரப்பிய மூடநம்பிக்கைகள் குறித்தும் இத்தொகுதியில் கட்டுரைகள் அமைந்துள்ளன. லண்டன் நகரில் இருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து பல்வேறு கட்டுரைகளை இவ்விதழில் மறுபிரசுரம் செய்துள்ளதைக் காண்கிறோம். Secular Review, Anti Christian போன்ற பல பத்திரிகைகளின் கட்டுரைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள் ளன. இத்தொகுதி 568 பக்கங்களைக் கொண்டது.

தொகுதி 6 : Women - Culture and Poverty

Women - Culture and Poverty என்னும் ஆங்கிலத் தலைப்பில் அமைந்துள்ள ஆறாவது தொகுதியில் 233 ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சென்னை இலௌகிகசங்கத்தினர் ஒடுக்கப் பட்ட பெண்களுக்காகவும் வறுமைக்கெதிராகவும் செயல்பட்டனர். மால்தூசியன் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி வறுமையை ஒழிக்க வேண்டும் எனக் கருத்துப் பிரச்சாரம் செய்தனர். குழந்தை மணத்தை மறுத்தனர். விதவை மணத்தை போற்றினர். மேற்குறித்த செய்திகள் தொடர்பான விரிவான ஆங்கிலக் கட்டுரைகளை இவ்விதழில் காண்கிறோம். இத்தொகுதியிலும் லண்டனில் இருந்து வெளிவந்த ஆங்கில இதழ்களிலிருந்து பல்வேறு கட்டுரைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தொகுதி 512 பக்கங்களைக் கொண்டது.

இவ் ஆறு தொகுதிகளையும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.3000. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூக வரலாற்றை எழுத விரும்புவோர்க்கான ஆவணமாகிய இத்தொகுதிகளை ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தொகுதிகளில் மொத்தம் 2000 கட்டுரைகள் உள்ளன. பக்கங்கள் 3330 ஆகும்.