மேற்குலகப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்களும் சமஸ்கிருதமும்கூட இலக்கியத் துறையாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. மாறாகத் தமிழியல் ஆய்வானது மொழி வரலாறு, ஒப்பியல் இலக்கியம், மானுட வியல், வரலாறு, கலை வரலாறு, தொல்லியல் போன்ற பல துறைகளை உள்ளடக்கியதாக உள்ளது. தமிழியலின் இத்தகையப் பல்பரிமாணத் தன்மை தமிழ் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் களத்தின் பரப்பைப் பெரிதாக்குவதோடு ஆய்வில் முடிவுகளை நோக்கி விரைவாக நகரும் நிலையினையும் தவிர்க்கிறது. இவ்வாறு தமிழியல் ஆய்வுக்களம் பரந்து விரிந்திருப்பது சரியான வழிகாட்டுதல் இல்லாத தருணத்தில் ஆய்வாளர்களுக்கு, குறிப்பாக இளம் ஆய்வாளர்களுக்கு ஒருவித குழப்பமான மனநிலையை ஏற்படுத்தவும் வாய்ப்பளித்து விடுகிறது. இந்தச் சூழலோடு மற்றொன்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழியல் ஆய்வுகள் நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையிலான ஆய்வு முறைமைகள் பின்பற்றப்படுகின்றன.

வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப் படும் வெவ்வேறு வகையான ஆய்வு முறைமைகள் உலகின் பிற பகுதிகளிலுள்ள சக ஆய்வாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப் படாத நிலையிலேயே உள்ளன. அல்லது முற்றிலும் தெரியாத நிலையே உள்ளது. இத்தகைய சூழலில் தமிழியல் ஆய்வுகளில் உள்ள பன்முகத்தன்மையை வெளிக்காட்டவும் அதனை ஒரு பன்னாட்டு ஆய்வுக்களத்தில் இணைக்கவும் சில முயற்சிகள் அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலை மனதில் கொண்டுதான் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகமும் (பெர்க்லீ) இணைந்து தமிழியலில் ஆய்வு செய்துவரும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் ஏற்படும் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் அதற்கான தீர்வைத் தேடுவதற்கும் உதவிடும் வகையில் இந்தப் பணிப்பட்டறையை நடத்தின. தமிழியல் ஆய்வுக்களங்களில் உள்ள பல துறைகளையும் (இலக்கியம் முதல் வரலாற்றியல் வரையிலும் அகராதியியல் முதல் கலை வரலாறு வரையிலும்) பிரதிநிதித்துவப்படுத்தும் ஆய்வாளர்கள் அவர்களது பயிற்சி மற்றும் கல்விப் பின்புலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

பணிப்பட்டறை நான்கு அமர்வுகளாக வடிவமைக்கப் பட்டது. தொல்லியல் தொடர்பான முதல் அமர்வில் ரிஷா லீ (கொலம்பியாப் பல்கலைக்கழகம்) தென்னிந்திய பாணியில் தெற்குச் சீனாவில் கட்டப்பட்ட சைவக் கோவிலின் அழகியலை வெளிப்படுத்துவதான அவரது ஆய்வைப்பற்றி விளக்கினார். செல்வக்குமார், யதீஷ் குமார் (புதுவைப் பல்கலைக்கழகம்) இருவரும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் அவர்களது ஆய்வைச் சுட்டிக்காட்டினர்.

எழில்ராமன் (புதுவைப் பல்கலைக்கழகம்), சைமன் சிமிட் (லெய்டன் பல்கலைக்கழகம்), வி.இராஜேஷ் (ஐ.ஐ.டி.சென்னை) முதலானோர் வரலாறு, இலக்கியம் தொடர்பான இரண்டாவது அமர்வில் தங்களது கட்டுரையை வழங்கினர். ராஜேஷ் 19ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றைப்பற்றியும் சைமன் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தாய் தன் புலம்பெயர் மகனுக்கு எழுதிய கடிதங் களைப் பற்றியதுமான தங்களது ஆய்வுகளை எடுத்துக்கூறினர்.

செவ்வியல் இலக்கியங்கள் தொடர்பான மூன்றாவது அமர்வில் அ. சதீஷ், பா. இளமாறன், அ.செந்தில்நாராயணன் (சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய உரைகள் தொடர்பான தங்களது ஆய்வுகள் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர். சு. சுஜா (சென்னைப் பல்கலைக்கழகம்) சங்க இலக்கியங்களுக்கான ‘திணை/துறை’ விளக்கங்கள் தொடர்பான தனது ஆய்வுப் பார்வையை எடுத்துரைத்தார்.

தற்கால இலக்கியம், இனவரைவியல் தொடர்பான நிறைவு அமர்வில் ஜ. சிவகுமார், தே. சிவகணேஷ் (சென்னைப் பல்கலைக் கழகம்) இருவரும் முறையே 20ஆம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு, குறும்பர் இனவரைவியல் குறித்ததான தங்கள் ஆய்வின்வழி கிடைத்த செய்திகளை விளக்கினர். சு. பிரபாவதி (புதுவைப் பல்கலைக்கழகம்) தமிழ்ப் படக்கதை தொடர்பான தனது ஆய்வைப் பற்றி விளக்கினார். இது தமிழியல் ஆய்வில் புது முயற்சி என்றும் கூறினார்.

இப்பணிப்பட்டறை இளம் ஆய்வாளர்களுக்கானது எனினும் பேராசிரியர் சுப்பராயலு, பேராசிரியர் பிரான்சுவா குரோ, பேராசிரியர் டேவிட் பக், முனைவர் ஹெர்மன் டிக்கன், கண்ணன் முதலானவர்களும் பங்குகொண்டு தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் இளம் ஆய்வாளர்களுக்கு அக்கறையுடன் சில கருத்துக்களைத் தந்தனர்.

ஜெனிஃபர் கிளார்

அ. செந்தில்நாராயணன்

Pin It