இந்தி வந்து செந்தமிழ்க்கு வாயின் மண்ணை
இட்டு வைக்க நாங்கள் விட்டு வைக்கவோ?
மந்தைபோல வாழ்விழந்து நொந்து கெட்ட
மானவாழ்வில் ஊறுபட்டு நிற்கவோ?
தந்தையர்கள் ஆண்டுலாவி மாண்பு தந்த
தாயகத்து மண்ணை இன்று விற்கவோ?
பொந்துபட்ட மார்பினோடு குண்டுபட்ட
போர்க்களத்தில் ஆடிவெற்றி சூடுவோம்!
ஏடு கட்டி நாம் வளர்த்த காவியத்தை
இன்று வந்த செல்லரித்துப் போகவோ?
கூடுகட்டி நாம் வளர்த்த கிள்ளை ஒன்று
கொல்லவந்த பூனைவாயில் வீழவோ?
நாடுகட்டி நாம் வளர்த்த செந்தமிழ்க்கு
நச்சு மாந்தர் ஊறுசெய்து வாழவோ?
பாடுபட்டு நம்மை வீழ்த்த வந்த மேனி
பாதி பாதி ஆனதென்று பாடுவோம்!
நீதியோடு வீரவாழ்வு கண்டிருந்த
நெஞ்சமின்று போர்முகத்தில் அஞ்சவோ?
நாதியற்று வீடடைந்து மூலைபார்த்து
நாணி நின்று கட்டில் பார்த்துத் துஞ்சவோ?
ஆதியானை செந்தமிழ்க் குலத்து மக்கள்
அற்பர் கால் பிடித்துநின்ற கெஞ்சவோ?
வீதியெட்டிலும் முழங்கு தானையோடு
வீறுகொண்டு தோளுயர்த்தி ஆடுவோம்!
Pin It